Advertisement

                                துளி – 9

ஆயிற்று ஆறு மாதங்கள்….

காலம் யாருக்கும் காத்திருக்கவில்லை… என்னை விட்டு போகாதே, உன்னை நான் விடவே மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லி, அவளது கரங்களை விடாமல் பிடித்து, தன்னுள்ளே மூழ்கடிப்பது போல் அவளை இறுக இறுக அணைத்து நின்றவனுக்காகவும் காத்திருக்கவில்லை.

கண்ணீரோடு, என்னைவிட இப்போது நீ உன் அம்மா அருகில் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி தீரா காதலோடும் தெவிட்டா முத்தங்களோடும் அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரன் சுவையை அவன் இதழ்களில் உணர்த்திவிட்டு போனவளுக்காகவும் காத்திருக்கவில்லை.     

என்னதான் பகல் பொழுதெல்லாம் இருவரும் வேலை வேலை வேலை என்று தங்கள் பணிகளில் மூழ்கடித்துக்கொண்டாலும், இரவு நேரத்தில், அது தரும் தனிமையில், தவித்து தான் போயினர்.

யாரென்றே தெரியாத ஒருவரை, இதுவரை பார்த்து பழகியிராத ஒருவரை, பார்த்த நொடியில் மனம் சலனம் கண்டு பின் அன்பு கொண்டு, மனதின் ஆழம் வரை நேசம் விதைத்து, நான்கைந்து நாட்களே உடன் இருந்த ஒருவரை, மனம் இத்தனை தேடுமா, நாடுமா, நினைத்து நினைத்து வாடுமா என்று கேட்டால், காதலின் அகராதியில் அனைத்தும் சாத்தியமே.

ஆள் அரவமற்ற நடுநிசி. மௌனமே பெரும் சப்தமாய் வியாபித்து இருந்தது.  இரவு நேர ரோந்து பணியில் சரவணன் இருக்க, அவன் மனமோ சுற்றி இருக்கும் அமைதிக்கு சிறிதும் பொருத்தமில்லாமல் தேவியின் நினைவுகளில் ஆர்ப்பரித்துகொண்டு இருந்தது.   

“நான் அவ்வளோ சொல்லியும் ஏன் மோகினி போன… நான் பார்த்துக்கிறேன் சொன்னேனே… என்னை நீ நம்பலையா..” என்று அவளிடம் கேட்பதற்கு பதிலாய் தன்னிடமே கேட்டுக்கொண்டானோ என்னவோ..

முகம் இறுக அமர்ந்திருந்தான்.  

அவன் முகத்தை பார்த்தே “நீங்க போங்க சார்… நாங்க பார்த்துக்குறோம்…” என்று சொன்ன உதவியாளரின் பேச்செல்லாம் அவன் காதுகளில் விழவே இல்லை போல, எதோ சிந்தனையில் அப்படியே தன் பேட்ரோல் இருக்கையில் கழுத்தை சாய்த்து அமர்ந்திருந்தான்.        

ஒருவழியாய் இரவு வீடு இரண்டு மணியளவில் வீடு வந்தவன், குளித்து உடைமாற்றி நேராய் போய் கட்டிலில் விழுந்தான். கண்களின் மீது இரு கைகளையும் மடக்கி வைத்து சில நேரம் படுத்திருந்தவன், பின் என்ன நினைத்தானோ, தன் அலைபேசியை எடுத்து அதிலிருந்த புகைப்படங்களை எல்லாம் ஒவ்வொன்றாய் பார்த்திருந்தான்.

இது தினமும் நடக்கும் ஒன்று தான்.

அவன் வேலைக்கு சேர்ந்த நேரமோ என்னவோ அடுத்தடுத்து சென்னையில் ஏராளமான நிகழ்வுகள் நடக்க, வேலை அவனே நினைத்தாலும் தன்னை விட்டு விலகாதவாறு  பார்த்துக்கொண்டது.  காலை எப்போது போகிறான் இரவு எப்போது வருகிறான் என்று கணிக்க முடியவில்லை. சொல்லபோனால் அவன் வீட்டில் இருக்கிறானா இல்லையா என்பதே தெரியாதது போல் வைத்துகொண்டான்.

அவன் அலைபேசியில் இருந்தபுகைப்படங்கள் முழுவதுமே தேவியோடு எடுத்தவை தான். எத்தனை எத்தனை.. ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.. இருவருக்குமே முகத்தில் இருக்கும் சிரிப்பும், கண்ணில் தெரியும் காதலும், இப்போது பார்த்தாலும் அவனுக்கு நெஞ்சடைத்து ஓர் ஏக்க பெருமூச்சு வந்தது.

“அவ்வளோ லவ் தெரியுது உன் கண்ல… கொஞ்சம் எனக்காக வெய்ட் பண்ணிருக்க கூடாதா… ஏன் மோகினி போன.. எப்படி முடிஞ்சது…” என்று வழக்கம் போல் அவள் புகைப்படத்தை வருடியபடி என்றும் கேட்கும் கேள்வியை அன்றும் கேட்க,

புகைப்படம் பதில் சொல்லுமா என்ன…?? 

அதே போல் தான் தேவிக்கும். அதே சென்னை மாநகரில் மற்றுமொரு மூளையில் தன் வீட்டில் தன்னறையில், வழக்கம் போல் உறக்கத்தை துறந்து கண்களை விட்டதில் பாய்ச்சி படுத்திருந்தாள். முன்பிருந்த உற்சாகம் சிறிதும் இல்லை. யாரோடும் முன்போல பேசுவதுமில்லை.

பெரும்பாலும் தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொண்டாள்.

தேவியும் சரவணன் போலவே தன்னிடம் இருந்த புகைப்படங்களை இந்த ஆறு மாதத்தில் லட்சம் முறைக்கும் மேல் பார்த்திருப்பாள். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவில்லை.

“வொய் திஸ் ஹேப்பன்…????” என்று கோடி முறைக்கும் மேலாக தன்னிடமே கேள்வி கேட்டிருப்பாள். ஆனால் பதிலே இல்லை.

அன்று கோவாவில், கோதாவரி ரெத்த அழுத்தம் கூடி மயக்கமடைய, சரவணன் தான் வேகமாய் சென்று தாங்கிப்பிடித்தான்.  புண்ணியகோடி வேகமாய் மருத்தவரை அழைக்க, அடுத்த சில மணி துளிகளில் அவரும் வந்துவிட, பரிசோதித்து பார்த்தவர்,

“நத்திங் வொர்ரி… ஓவர் டென்சன்.. சின்ன விசயத்துக்கும் ரொம்ப ரியாக்ட் பண்ணுவாங்களோ…?? பட் அவங்களை டென்சன் இல்லாம பார்த்துகோங்க… எதுவா இருந்தாலும் இப்போ அவங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகணும்.. அதுதான் முக்கியம்…” என்று மருந்து மாத்திரைகளையும் கொடுத்து சென்றார்.

அசோக் குமாரும், கல்பனாவும் உறக்கத்தில் இருந்த கோதாவரியின் இரு பக்கமும் அருகே அமர்ந்திருக்க, சரவணனோ அதே அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தான். பிருந்தாவிற்கும் புண்ணியகோடிக்கும் மிகவும் சங்கடமாய் போனது.

யாருக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்ல.

ஒருவேளை இந்த விஷயத்தை இத்தனை அவசரமாய் பேசியிருக்க கூடாதோ, கொஞ்ச நாள் போகட்டும் என்று இருந்திருக்க வேண்டுமோ என்றெல்லாம் தோன்றியது. சொல்லபோனால் அனைத்துமே அவசரமாய் நடந்ததோ என்னவோ..??

சரவணனும், தேவியும் தான் வாழ்வின் நிதர்சனம் தெரியாதவர்கள்.. அத்தனை அனுபவம் இல்லை.. காதலும் சேர்ந்து கண்ணை மறைத்து விட்டது. ஆனால் பெரியவர்கள் தானே நல்லது கேட்டது எடுத்து சொல்லி, சற்று பொறுத்து போக சொல்லியிருக்க வேண்டும்.

அதை விட்டு அனைவரும் சிறுவர்கள் போல் ஆரவாரம் செய்து இதோ கடைசியில் இப்படி ஆகிவிட்டது.         

கல்பனா கூட மனதில் இப்போது இதை தான் நினைத்தார். வயது கூட கூட அறிவு மங்கிவிட்டதோ என்று எண்ணியபடி மெல்ல மகளின் தலையை வருடியபடி அமர்ந்திருந்தார்.

சரவணனுக்கோ தான் என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை. இதெல்லாம் இப்படியெல்லாம் நடக்கும் என்று அவன் நினைத்து பார்க்கவில்லை. முதலில் தனக்கு காதல் வரும் என்று கூட அவன் நினைக்கவில்லையே.

அம்மா கோவப்படுவார், திட்டுவார், கத்துவார் என்று தெரியும். உடனே எல்லாம் சம்மதம் கிடைக்காது என்றும் தெரியும். ஆனால் இப்படி மயங்கி சரிவார் என்று தெரியாது. யோசிக்கவில்லை. மனம் மிகவும் சங்கடமாய் இருந்தது. என்ன இருந்தாலும் கோதாவரி அவன் அம்மா அல்லவா… 

ஆனால் அவர் இதற்கு சம்மதிக்க மாட்டேன் என்றதுகூட அவனுக்கு பெரிதாய் தெரியவில்லை. தன்னால் தான் இது என்ற ஒரு குற்றவுணர்வு இருந்தாலும் கடைசியாய் தேவியை அவர் பேசியது தான் அவனால் எந்நிலையிலும் ஏற்றுகொள்ள முடியவில்லை.

ஒரே நாளில் தன் பலமெல்லாம் இழந்தது போல் சோர்ந்து போய் உறங்கும் தன் அன்னையை வேதனை நிரம்பிய ஒரு பார்வை பார்த்தவன்,

“என்ன இருந்தாலும் ஒரு பொண்ண நீங்க அப்படி பேசிருக்க கூடாது மாம்.. அவளை நான் தான் துரத்தினேன்..” என்று மானசீகமாய் சொல்லிகொண்டான்.

ஆனால் இதிலெல்லாம் அதிகம் பாதிப்படைந்தது தேவி தான். அனைத்தும் தன்னால் தான் என்ற எண்ணமே அவளை போட்டு தாக்கியது. அவளும் அதே அறையில் தான் இருந்தாள். கோதாவரியை மட்டுமே பார்த்திருந்தாள். மனம் அத்தனை வலியை உணர்ந்தது. குற்ற உணர்வு வேறு..        

‘எல்லாமே என்னால தான்.. நான் யோசிச்சிருக்கனும்… கொஞ்சம் நிதானமா இருந்திருக்கணும்.. சனு.. சனு மட்டுமே மனசில நினைச்சு, இவங்க யாரையும் நினைக்காம… ஓ காட்… என்னால தான் இதெல்லாம்.. ஆன்ட்டிக்கு மட்டும் எதாவது ஒண்ணுன்னா.. நோ நோ.. ஐ கான்ட்…. சனுக்கு என்னை விட அவன் மாம் தான் முக்கியம்….’ என்று இதையே மந்திரம் போல் உருப்போட்டவள், அப்படியே சுவரில் சாய்ந்து தோய்ந்து நின்றிருந்தாள்.

யாரால்தான் பிள்ளைகள் காதல் என்று சொன்னதுமே ஏற்றுகொள்ள முடியும்.. முதலில் இதில் இத்தனை அவசரம் ஏன்??? அதுவுமில்லாமல் கோதாவரி மனதில் இத்தனை ஆண்டுகளாய் ஒரு கசப்பான எண்ணத்தை அல்லவா வளர்த்திருக்கிறார். அப்படியிருக்கையில் உடனே எதுவும் மாறுமா??

இல்லவே இல்லை. அவகாசம் என்பது அனைவருக்குமே வேண்டும்.    

முதலில் கோதாவரி நலமாக வேண்டும். அவர் மனம் சற்றே நிம்மதியடைய வேண்டும். அதன் பின் தான் எதுவுமே எல்லாமே.

தேவிக்கு கோதாவரி தன்னை பேசியது எல்லாம் மனதிலே இல்லை. அவளை பொறுத்தவரை, அவர் சரவணனின் அம்மா.. அவனை பெற்றவர்.. அந்த நினைப்பே அவளுக்கு கோதாவரி மீது அன்பையும் மதிப்பையும் கொண்டு வந்தது. தன் அம்மா இந்த நிலையில் இருந்தால் எப்படி உணர்வாளோ அதே உணர்வு தான் இப்போதும்..

கண்களில் வழியும் நீர் கூட வற்றி விட்டது அவளுக்கு. ஒன்றும் செய்யாமல் செய்யத் தோன்றாமல் அப்படியே நின்றிருந்தாலும், தேவியின் மனம் நிறைய சிந்தித்தது. நிறைய விசயங்களை தனக்குள்ளே யோசித்து பார்த்தது. முடிவாய்  ஓர் முடிவிற்கும் வந்துவிட்டது.     

அத்தனை நேரம் பல்லி போல் சுவரில் ஒட்டி நின்றிருந்தவள், கண்களை துடைத்து, மூச்சை ஆழ இழுத்து விட்டு, சற்று தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு, இயல்பாய் நிற்க, அப்போது தான் சரவணன் அவளை  கவனித்தான்.

இத்தனை நேரம் அவள் இருந்ததற்கும், இப்போதைக்கும் வெகுவாய் மாற்றம் தெரிய, என்னவென்பது போல் அவன் கண்ணசைவில் கேட்க, அவனை கண்டதுமே கதற துடங்கிய மனதை அடக்கி, இதழில் முடியாமல் ஒரு சிரிப்பை லேசாய் கொணர்ந்து, ஒன்றுமில்லை என்பது போல் தலையாட்டினாள்.

ஆனால் அவள் பாவனையே என்னவோ என்று அவனுக்கு உணர்த்த, ‘இவ வேற என்ன நினைக்கிறா…’ என்று தோன்ற, தேவியை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைக்க, 

அங்கே மருந்தின் வீரியம் குறையத் தொடங்கி, கோதாவரி லேசாய் கண் விழிக்க, கல்பனா மெல்ல “கோதா…” என்றழைக்க, அனைவரும் சட்டென்று திரும்பி கோதாவரியை காண, தேவியோ  வேகமாய் சரவணனை தாண்டி அவரிடம் விரைந்தாள்.

என்ன செய்கிறாள் இவள்… என்ன செய்ய போகிறாள் இவள் என்பது போல் அனைவரும் பார்க்க, அவளோ கோதாவரி அருகே சென்று அமர்ந்தவள், மெல்ல அவர் கையை எடுத்து தன் கைகளுக்குள் புதைத்து,

“ஆன்ட்டி….” என்றழைக்க, அவள் குரலே அத்தனை மென்மையில் குழைந்தது.

அப்போது தான் மெல்ல மெல்ல சுய நினைவிற்கு வந்தவருக்கு முதலில் தேவி யார் என்றே சட்டென்று மனதில் வரவில்லை, பின் கண்களை இறுக மூடி யோசித்து, சுதரித்தவர் விழிகள் விரிய அவளை பார்க்க, அந்த பார்வையே,

“இனிநீயென்னசொல்ல போகிறாய்… அனைத்துமே உன்னால் தான்…” என்று குற்றம் சாட்டியது.

அவரின் பார்வையே தேவிக்கு இன்னும் மனக் கலக்கத்தை அதிகரிக்க, கண்களோ இப்போதோ அப்போதோ நான் கொட்டிவிடுவேன் என்பது போல் நீரை தேக்க, அதனை அடக்கி, தன் கரங்களுக்குள் இருந்த அவர் கைகளில் அழுத்தம் கொடுத்து.. மிக மிக மென்மையாகவே என்றாலும் திடமான குரலிலேயே,

“சாரி ஆன்ட்டி… நோ நீங்க டென்சன் ஆக வேண்டாம் ப்ளீஸ்… உங்களுக்கு பிடிக்காத எதுவுமே நடக்காது. சரியா.. உங்களை தாண்டி இங்க எதுவுமே நடக்காது.. அன்ட் சனு.. சாரி சரவணன் உங்க மகன்.. அது தான் எப்பவுமே.. அதில எந்த மாற்றமும் இல்லை.. ம்ம்..

ரிலாக்ஸ்டா இருங்க ஆன்ட்டி.. ஏன் இவ்வளோ டென்சன்.. நா.. நான் இதோ கிளம்ப போறேன்.. ஆனா நீங்க முக்கியம்.. இங்க இருக்க எல்லாருக்குமே நீங்க முக்கியம்.. எந்த உறவுமே அம்மாங்கிற உறவுக்கு அப்புறம் தான். அது யாரா இருந்தாலும்.. அது சரவணனுக்கும் தெரியும்.

அவர் உங்க மகன்… உங்க வளர்ப்பு… உங்களை மீறி எதுவும் பண்ண மாட்டார்.. நீங்க இப்படி சட்டுன்னு டென்சன் ஆகி படுத்துட்டீங்க.. பாருங்க அங்கிள் பேஸ் எல்லாம் எப்படி ஆச்சுன்னு.. நீங்க தானே இவங்க எல்லாருக்கும் பக்கபலமே… சோ நீங்க தான் இங்க எல்லாருக்கும் முக்கியம். என்னால எந்த பிரச்சனையும் வராது ஆன்ட்டி…” என்று ஒரு குழந்தைக்கு சொல்வது போல் சொல்லி, மீண்டுமொரு முறை அவரது கைளை அழுந்த பற்றி, விடுவித்தவள்,  கோதாவரி பதிலை எல்லாம் எதிர்பார்க்கவில்லை. வேகமாய் எழுந்து திரும்பியவளுக்கு, நேராய் கைகளை இறுக கட்டி, ஓர் ஆராய்ச்சி பார்வையை அவள் மீது வீசி நின்றிருந்தான் சரவணன்.

அவனை கண்டதுமே, இதுநேரம் வரை கட்டுபடுத்தி வைத்திருந்த அழுகை, ஒரு கேவலாய் வெளிவர, புரங்கையால் கண்களை துடைத்தபடி, முயன்றே அவன் முகம் பாராமல்,

“எனக்கு டிக்கெட் போடுங்க சித்தப்பா…” என்று சொல்லிவிட்டு அடுத்து யாரையும் ஏறெடுத்தும் பாராது ஓடி விட்டாள்.

அவளை பின்னோடு சென்று சமதானப்படுத்த கிளம்பியது இருவர். சரவணனும் பிருந்தாவுமே. இருவருமே ஒரே நேரத்தில் கிளம்ப, அடுத்து இருவருக்குமே தயக்கம். யார் போவது என்று. தயங்கி ஒருவர் முகம் பார்த்து நிற்க,

“அத்தை நீங்க போய் பேசுங்க…” என்று பிருந்தாவை அனுப்பியவன், நேராய் தன் அம்மாவிடம் வந்தான்.

“மாம்… இப்போ எப்படி இருக்கு…??” என்று கேட்டவனின் முகத்தில் நிஜமாகவே வேதனை தெரிந்தது. அது அந்த அன்னையின் கண்களுக்கும் தெரிந்ததோ என்னவோ,

“பரவாயில்லை…” என்பது போல் வாயசைக்க, அவர் முகத்தை தடவியவன்,

“ரிலாக்ஸ்டா இருங்கம்மா… ப்ளீஸ்… உங்களை நீங்களே ஸ்ட்ரெஸ் பண்ணிக்க வேண்டாம்..” என்றுவிட்டு வேகமாய் வெளியே சென்று விட்டான்.மகன் போவதையே தான் பார்த்திருந்தார் கோதாவரி.. அதன் பின் யாரிடமும் எதுவும் பேசவில்லை.  

பிருந்தாவோ கைகளை பிசைந்தபடி தேவியின் அறை வாசலில் நின்றிருந்தார். கதவு உள் பக்கம் பூட்டியிருந்தது.

“என்ன அத்தை…”

“டோர் ஒப்பன் பண்ணல…” என்று சொன்னவருக்கு கண்களில் நீர்.. என்ன இருந்தாலும் தேவி அவர் அக்கா மகள் அல்லவா..   

“ம்ம்ம் சாரி அத்தை.. எல்லாமே என்னால தான்…” என,

“இல்ல சரவணா.. நாங்களும் கொஞ்சம் நிதானமா இருந்திருக்கணும்…” என்று அவனுக்கு பதில் சொல்லிக்கொண்டே,

“தேவி கதவை திற…” என்று மீண்டும் தட்ட, உள்ளிருந்தே அவள் குரல் கொடுத்தாள்.

“ப்ளீஸ் சித்தி… எனக்கு டிக்கெட் மட்டும் போடுங்க..” என்று.

சரவணன் முகம் அப்படியே இறுகி விட்டது. தலையை கோதியவன், “அத்தை நீங்க போங்க… நான் பார்த்துக்கிறேன்…” என,

“இல்ல சரவணா…” என்று பிருந்தா தயங்க,

“ப்ளீஸ் அத்தை… நீங்களாவது என்னை புரிஞ்சுக்கோங்க…” என்றான்.

அதற்குமேல் பிருந்தாவால் அங்கே நிற்க முடியுமா என்ன. திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றார்.      

“தேவி… ஓப்பன் தி டோர்….” என்று கதவை போட்டு உடைக்காத குறையாய் தட்ட, நொடி பொழுதே உள்ளிருப்பவள் அதிர்ந்து நின்றாலும், பின் தான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்க போவதில்லை என்பது போல் தன் வேலையை கவனிக்க, கதவோ விடாமல் தட்டப்பட்டது.

“தேவி ஓப்பன் தி டோர்…” என்றவனின் குரலே நீ திறந்து தான் ஆகவேண்டும் என்று கட்டளை விதிக்க, தேவியோ அவனுக்கு சளைக்காத பிடிவாதத்தில் உள்ளே தன் பொருட்கள் அனைத்தையும் எடுத்துவைத்து கொண்டு இருந்தாள்.

மேலும் இரண்டொரு முறை கதவு தட்டப்பட, தேவிக்கு அதை திறக்கும் எண்ணமே இல்லை. நிச்சயம் அவனை கண்டால் அவள் மனம் தடுமாறும். போதும் ஒருமுறை தடுமாறி இழுத்து வைத்தது அனைத்தும் என்ற முடிவிற்கு வந்துவிட்டாள்.

அடுத்து அமைதியாய் இருக்க, ஒருவேளை சரவணன் போய் விட்டானோ என்று தோன்ற, கதவருகே சென்று அவன் நிற்கும் நிழல் தெரிகிறதா என்று பார்க்க,

“அங்க யாரை பார்க்கிற…??” என்று குரலில் தூக்கி வாரி போட்டது.

பால்கனி வழியாக சரவணன் உள்ளே வந்திருந்தான்.

“நீ… நீ சனு.. நீ எப்படி..” என்று திக்க..

“நான் இதுக்கெல்லாம் ட்ரைனிங் எடுத்தவன் மா…” என்றவனின் பார்வையில் அவள் அனைத்தும் பேக் செய்து கிளம்ப தயார் நிலையில் இருப்பது பட,

“என்ன தேவி இதெல்லாம்….” என்று கேட்டவனின் குரலில் அத்தனை வேதனை.

“ப்ளீஸ்… நீ ஏன் இங்க வந்த… போ.. போ… ஆன்ட்டிகிட்ட போ..”

“ஐ வான்ட் டு டாக் டூ யு….”

“நோ.. இனி பேச ஒண்ணும் இல்லை.. நீ போ சொல்றேன்ல.. ப்ளீஸ்….” என்றவளுக்கு கதறல் பெருங்குரலாய் வெளிவந்தது..

காதல் எத்தனை களிப்பை தருமோ அத்தனை கண்ணீரையும் தரும்.

“சோ போக போற…??” என்றவனின் பார்வையை சந்திக்க அவளால் முடியவில்லை.

பதில் சொல்லாமல் அப்படியே நிற்க,

“ப்ளீஸ்… கொஞ்சம் என்மேல நம்பிக்கை வை… எல்லாம் சரி பண்றேன்.. மாம்.. அவங்களுக்கு கொஞ்சம் டைம் வேணுமே…” என்று பொறுமையாகவே சரவணன் எடுத்து சொல்ல,

தேவியோ தான் இங்கிருந்து கிளம்புவதிலேயே முடிவாய் இருந்தாள்.   

 

 

Advertisement