Advertisement

துளி – 8

அசோக் குமார் அனைவரிடமும் சகஜமாகவே பேச, அவரிடம் யாருக்கும் எந்த தயக்கமும் இல்லை. தேவியிடம் கூட இலகுவாய் பேச, அவளுக்கு மனதில் சற்றே நிம்மதி. உண்டு முடித்து அனைவரும் சற்றே ஓய்வாய் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, சரவணன் சகஜமாய் தேவியோடு பேசி சிரிப்பதை எல்லாம் கோதாவரி கவனித்துகொண்டு தான் இருந்தார்.

தேவி வேறு யாராக இருந்திருந்தாலும் அவருக்கு பிரச்சனை இல்லை. சொல்ல போனால் பிடித்து கூட இருக்கும். ஆனால் அவருக்கு பிடிக்காத மஞ்சுவின் மகள் அல்லவா. அது தான் பிரச்சனையாய் போயிற்று.

சரியாய் அசோக் குமார் அந்நேரம் பார்த்து, “எப்போ இருந்து கிளாசிகள் தெரியும்மா..??” என்று கேட்க,

“நாலு வயசுல இருந்து கத்துக்கிறேன் அங்கிள்…” என்று தேவியும் ஒரு புன்சிரிப்புடனே பதில் சொல்ல,

“ஓ.. சூப்பர்… காம்பெட்டீசன் எல்லாம் அட்டென் பண்ணிருக்கியா..??” என,

“எஸ் அங்கிள்.. பாரின்ல கூட ஷோஸ் பண்ணிருக்கோம்..” என்று தேவி சொல்லும் போதே,

“டாட் தேவி ஓன் டான்ஸ் ஸ்கூல் வச்சிருக்கா…” என்று சரவணன் பெருமையாய் சொல்ல, அதை கேட்டு ஆச்சர்யம் அடைந்த அசோக் குமார் தேவியை பாராட்ட,   

கோதாவரிக்கு பொறுமை கரைந்துகொண்டே போனது.. ‘இந்த மஞ்சுவோட பொண்ணு அவளுக்கு இவ்வளோ முக்கியத்துவம் கொடுக்கனுமா’  என்று நினைக்க, அந்த நேரம் அவர் மனதில் என்ன தோன்றியதோ, “ஊர் ஊருக்கு போய் ஆடுவியோ…” என்று கேட்டுவிட, நொடியில் அங்கே நிசப்தம்.

அனைவரும் என்ன பேச்சு இது என்பது போல் அவரை திடுக்கிட்டு பார்க்க, கல்பனா, அசோக் குமார், சரவணன் மூவரும் ஒருசேர முறைக்க, தேவிக்கு மழுக்கென்று கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. இதழ்களை அழுந்த கடித்து தன் உணர்வுகளை அடக்கினாள்.

அவள் உயிராய் மதிக்கும் நடனம், அதையே தன் படிப்பாய், தன் தொழிலாய் என்று தன் வாழ்வோடு நடனத்தை இணைத்து கொண்டவளுக்கு இந்த வார்த்தை வெகுவாய் மனதை தாக்கியது. ஒன்றும் சொல்லாமல், வேகமாய் தலையை குனிந்துகொள்ள,

சரவணனோ, அவள் படும் வேதனை பொறுக்காது, “மாம் என்ன இது…???” என்று அனைவரின் முன்னும் சற்று கடினமாகவே கேட்டு விட,

அவ்வளவு தான் கோதாவரிக்கு தன் மானம் போய்விட்டது போன்றதொரு உணர்வு. இத்தனை பேரின் முன்னிலும் தன் மகன் அதுவும் யாரோ ஒருத்திக்காய் கேள்வி கேட்டுவிட்டான் என்று தோன்ற, சினம் தலைக்கேறியது.

பதிலுக்கு என்ன சொல்ல விளைந்தரோ, கல்பனா, “கோதா.. என் ரூமுக்கு வா.. உன்கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு….” என்று சற்று வாஞ்சையாய் அழைக்க, அவரும் வந்து பார்த்துகொள்கிறேன் என்பது போல் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து செல்ல,

அவர் செல்லவும், தேவி வேகமாய் தன்னறைக்கு சென்றுவிட்டாள். ஓடினாள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனோ காலையில் இருந்தே மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துகொண்டிருக்க, கோதாவரி வேறு இப்படி பேசி விட, கல்பனாவும் தங்கள் விஷயம் பேச தான் உள்ளே மகளை அழைத்துக்கொண்டு போகிறார் என்பது வேறு, என்னாகுமோ ஏதாகுமோ என்ற பதற்றத்தை கொடுக்க, அவளுக்கோ மனம் தவியாய் தவித்தது.

வேகமாய் தன்னறைக்கு ஓடி வந்தவள் அப்படியே பொத்தென்று கட்டிலில் விழ. பின்னோடே சரவணன் வந்தான்.

“தேவி.. தேவி… லுக் அட் மீ…” என்று அழைக்க, அவளோ திரும்பவே இல்லை.

“ஹேய்…. மோகினி ப்ளீஸ் இங்க பாரு…” என்று சொல்லி அவளை தன் பக்கம் இழுக்க,

“ம்ம்ச் இப்போ ஏன் இங்க வந்த, ஆன்ட்டி கோவமா இருக்காங்க போல.. போய் அவங்க கூட பேசு..” என்று லேசாய் தள்ளினாள்.

“மாம் அப்படி பேசினது தப்பு.. அவங்களுக்கு பதிலா நான் சாரி கேட்கிறேன்….” என்று உணர்ந்து சொல்ல, அவளோ நான் உன்னிடம் இதை கேட்டேனா என்பது போல் பார்த்தாள்.

அவள் முகமே மொத்தமாய் சிவந்திருக்க, “என்னாச்சு……???” என்று அவன் வேகமாய் இன்னும் அருகே வந்து அவள் முகம் பற்ற,  அவளோ ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை ஆட்டி கீழே போ என்று சொல்ல,

அவனோ, “நீயும் வா…” என, தேவி இவனை என்ன செய்தால் தகும் என்பது போல் பார்த்தாள்.

“சொன்னா கேளு சனு.. நீ போ.. நான் கொஞ்ச நேரத்தில வந்திடுறேன்..எனக்கு ஒண்ணுமில்லை….” என்று அவனை பிடித்து இழுக்க முடியாமல் இழுத்து கதவருகே சென்று வெளியே போக சொல்ல,

“ஹ்ம்ம் இரு இரு… இதுக்கெல்லாம் பின்னாடி உன்னை என்ன பண்றேன் பார்…” என்று சாதாரணம் போலவே சொன்னவன், “டோன்ட் வொர்ரி… எது நடந்தாலும் நான் இருக்கேன்…” என்று அழுத்தமாகவே அவள் இதழ்களுக்கு ஆறுதலையும் தைரியத்தையும் கொடுத்துவிட்டு செல்ல, பின் தேவிக்குமே மனதில் கொஞ்சம் தெம்பு வந்தது.  

எத்தனை வயதானாலும் அம்மா மகள் என்பது இல்லை என்றாகுமா?? அதுபோல தான் கல்பனா, கோதாவரி இருவருக்கும்.

பொதுவான சில விஷயங்கள், வீட்டு நடப்புகள் அது இதென்று பேசி முடித்து, சிறிது நேரத்தில் பிருந்தா கொணர்ந்த பழச்சாறையும் குடித்து முடித்து,  கல்பனா கோதாவரி முகம் பார்க்க, காலையில் இருந்த காட்டம் இப்போதில்லை என்று நன்றாகவே தெரிந்தது.

“கோதா, நம்ம சரவணனுக்கு பொண்ணு பார்க்கிறது என்னாச்சு…” என்று சாதாரணம் போலவே கல்பனா கேட்க,

“அதுக்கென்னம்மா நீ நான்னு போட்டி போட்டு வர்றாங்க.. ஆனா இவனுக்கு பிடிக்கணுமே… யார் போட்டோ காட்டினாலும் கண்ல கூட பார்க்கிறது இல்லை. இதோ அடுத்த வாரம் ஜாயின் பண்ண சொல்லி ஆர்டர் வந்திடுச்சு.. இனி ஊருக்கு போய் தான் மறுபடி பேசணும்..” என்று சொல்ல,

“ஓ… ஏன் கண்ல கூட பார்க்கலை.. ஏன் கோதா கேட்கிறேன்னு தப்பா நினைக்காத… சரவணன் எதுவும் பொண்ணை.. அதான் இந்த கால பசங்க எல்லாம் பண்றாங்களே… லவ் அது இதுன்னு….” என்று மகளின் முகம் மாறுகிறதா இல்லையா என்று கவனித்துக்கொண்டே லேசாய் சொல்ல வந்ததை சொல்லாமல் இழுத்து முடிக்க,

“ச்சே ச்சே.. அதெல்லாம் இல்லைம்மா.. அவன் என் பையன்.. அப்படி பண்ண மாட்டான்.. அப்படியே பண்ணா என்ன?? நம்ம ஸ்டேட்டஸ்க்கு ஏத்தது போல நல்ல மனுசங்களா இருந்தா பேசி முடிக்க வேண்டியது தான்.. பசங்க சந்தோசம் தானே நமக்கு…” என்று பெருந்தன்மையாய் சொல்வது போல் கோதாவரி பேசியது அதிசயமே.

“ஓ…!!!!” என்று நெற்றியை சுருக்கியவர்…

“எனக்கு தெரிஞ்ச ஒரு குடும்பம் இருக்கு.. நல்ல பழக்கம்… அந்த பொண்ணுக்கும் இப்போ கல்யாண வயசு தான்.. நான் வேணா பேசவா…???”

தயக்கமாகவே கல்பனா கேட்க, தன் அம்மா என்ன லேசுபாசாகவா பார்த்திட போகிறார், நிச்சயம் அனைத்தும் தன் எதிர்பார்ப்பிற்கு ஒத்திருக்கும் என்று தோன்ற, “இதென்னம்மா இதுக்கெல்லாம்… என்கிட்டே கேட்கலாமா.. அவன் யாரு உங்க பேரன்… இருங்க நான் அவரையும் கூப்பிடுறேன்…” என்று சொல்லி, மகிழ்வுடனே, தன் கணவரையும் உள்ளே அழைக்க,

சரியாய் அதே நேரம் மேல தேவியை சமாதானம் செய்யச் சென்ற சரவணன் கீழே  வர, கோதாவரி முகம் பார்த்தவன், ‘என்ன மாம் முகம் சந்தோசமா இருக்கு.. பாட்டி பேசினாங்களா இல்லையா…???’ என்று யோசனையில் பார்க்க, அவனையும் பார்த்தவர்,

“சரவணா நீயும் வா டா.. பாட்டி உன் கல்யாண விசயம் தான் பேசுறாங்க…” என்று சந்தோசமாகவே அழைக்க, அவனுக்கோ என்ன நடக்கிறது என்று புரியவில்லை என்றாலும், பாட்டி இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றுமட்டும் புரிந்தது.

தன் தந்தையோடு சேர்ந்து அவனும் உள்ளே செல்ல, ‘நீ ஏன் டா இங்க வந்த…’ என்பது போல் கல்பனா பார்த்துவைக்க,

“நான் தான்மா வர சொன்னேன்.. அப்புறம் என்கிட்டே ஒண்ணும் சொல்றதில்லைன்னு சண்டை போடுவான்…” என்று மகனை பார்த்து சிரித்தபடி,

“சொல்லுங்கம்மா யாரு அந்த பொண்ணு.. இங்கே பார்ட்டிக்கு வந்தாங்களா..?? என்று ஆவலாய் விசாரிங்க,

“அட பொறு பொறு.. என்ன அவசரம்.. ஆமா பார்ட்டிக்கு தான் வந்தாங்க… அந்த பொண்ணு வந்தா.. பார்த்ததுமே எங்க எல்லாருக்கும் அவ்வளோ பிடிச்சு இருந்தது.. நானும் உன் அண்ணனும் கூட பேசினோம்.. ஆனா எதுவுமே உங்களை கேட்காம செய்ய கூடாது இல்லையா…” என்றவர் தன் மகள் மருமகன் இருவரது முகத்தையும் சேர்ந்தே பார்த்து சொல்ல, அசோக் குமாருக்கு லேசாய் விஷயம் புரிந்தது போல.

அவரும் காலையில் இருந்து மகனை கவனித்துகொண்டு தானே இருந்தார். அவ்வளவு ஏன் இதோ இப்போது கூட, அவன் மேலே தேவியை பார்த்துவிட்டு தானே வந்தான். அதெல்லாம் அவருக்கு புரியாமலா போகும். கல்பனா இப்படி சொல்லவும், அவர் தன் மகனை நோக்க, அவனோ எதோ தீவிர யோசனையில் அமர்ந்திருப்பது போல் இருந்தது.

ஆனால் இதெல்லாம் உணரும் நிலையில் இல்லை கோதாவரி.

“யாரும்மா.. இங்க வர சொன்னா வருவாங்களா.. இல்லையில்லை நம்ம போய் பார்க்கிறது தான் முறை… எங்களுக்கு இந்த ஜாதகம் ஜோசியம் இதெல்லாம் நம்பிக்கை இல்லை.. என்னங்க…” என்று தன் கருத்திற்கு தன் கணவரையும் துணைக்கு அழைத்தவர்,

பின் சரவணன் முகம் நோக்கி, “என்ன டா.. பேசுவோமா.. பாட்டி இவ்வளோ சொல்றாங்க.. நீயும் பார்த்திருப்ப தானே… சொல்லு உனக்கு ஓகேவா..” என்று கேட்க, அவன் பதில் சொல்லும் முன்னே,

“பொண்ணு இங்க தான் இருக்கா…” என்று கல்பனா சொல்ல,

“இங்கயா…???!!!” என்பது போல் குழப்பமாக தன் நெற்றியை சுருக்கினார் கோதாவரி.

அப்படி யாரும் கல்யாண வயதில் இங்கே வீட்டில் இல்லையே என்று சிந்தனையில் மனம் ஓடும் போதே, தேவியின் உருவம் கண் முன்னாடி வந்து நிற்க, ‘அந்த மஞ்சுவின் பெண்ணா…’ என்ற எண்ணமும் சேர்த்தே எழ,

“நீங்க யாரைம்மா சொல்றீங்க…” என்று கேட்டவரின் குரலில் இத்தனை நேரம் இருந்த உற்சாகம் சிறிதும் இல்லை.

அவரது குரலே நான் கண்டுகொண்டேன் என்று சொல்லாமல் சொல்ல, சரவணன் வேகமாய் தன் அம்மாவின் முகம் நோக்க, கல்பனா அப்போதும் நிதானமாய், “நம்ம தேவி தான் கோதா… நல்ல பொண்ணு.. பொறுப்பா இருக்கா.. அவ்வளோ பாந்தம்.. அனுசரிச்சு போறா…” என்று சொல்ல,

“போதும்மா…” என்று கோதாவரி பட்டென்று சொல்லிவிட்டார்.

இது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தானே. ஆனாலும் சரவணனுக்கு மனம் வலித்தது.

கல்பனா தன்னால் முடிந்த அளவு  பொறுமையாகவே எடுத்து சொல்ல, திண்ணமாகவே மறுத்த கோதாவரி  “இல்லம்மா இது சரி வராது….” என்று திட்டவட்டமாய் இறுதியாக சொல்லவும்,

“எனக்கு பிடிச்சிருக்கும்மா.. ரொம்ப பிடிச்சிருக்கு..” என்று சரவணன் உறுதியாய் சொல்லவும் சரியாய் இருந்தது.

‘நான் தான் பேசுகிறேனே…’ என்பது போல் கல்பனா பார்க்க,

‘என்னடா இது…’ என்று அசோக் குமார் பார்க்க, சரவணனோ யாரையும் பார்க்காமல் நேராய் தன் அம்மாவை மட்டும் பார்த்து,

“மாம்.. எஸ் ஐம் இன் லவ்.. வித் ஹெர்.. நான் தான் ப்ரொபோஸ் பண்ணேன்.. அப்போ எனக்கு அவ யாருன்னு தெரியாது.. இங்க தான் தெரியும் உங்களுக்கும் மஞ்சு ஆன்ட்டிக்கும் பிடிக்காதுன்னு.. பட் அது உங்க ப்ராப்ளம்ஸ்.. அதை ப்ளீஸ் எங்க லைப்ல இழுக்க வேண்டாமே…” என்று தன் முழு உயரத்திற்கும் எழுந்து நின்று, நிமிர்வாகவே குரலில் இது தான் என்னுடைய முடிவு என்று சொல்லாமல் சொன்னான்.

ஆனால் கோதாவரியோ பதிலுக்கு ஒன்றும் பேசாமல் மகனை கண்கள் இடுக்கி பார்த்தவர், சில நேர அமைதிக்கு பிறகு, “இது கண்டிப்பா நடக்காது.. நான் சம்மதிக்கவே மாட்டேன்…” என்று அழுத்தமாய் சொல்ல,

“என் முடிவுலையும் எந்த மாற்றமும் இல்லைம்மா…” என்று அவனும் நான் உங்களை பிள்ளை உங்களை போலத்தானே இருப்பேன் என்று சளைக்காமல் சொல்ல, கோதாவரிக்கு கோவம் தலைக்கேறியது.

“என்னங்க பார்த்திட்டு சும்மா இருக்கீங்க… ??” என்று தன் கணவன் புறம் திரும்ப,

அவரோ, “என்ன பண்ண சொல்லற கோதா.. நம்ம பையன் லைப்.. வளர்ந்திட்டான்.. பொறுப்பான உத்தியோகம் போக போறான்.. அவன் விருப்பப்படி அமைஞ்சா நல்லது தானே.. வீனா ஏன் எதை எதையோ நினைச்சு உன்னை நீயே குழப்பிக்கிற..” என்று அவரும் இது சரியே என்பது போல் ஆதரித்து பேச, சரவணனுக்கு சற்றே நிம்மதி. அந்த மட்டும் தந்தையாவது என்னை புரிந்துகொண்டாரே என்று.

ஆனால் கோதாவரிக்கோ மனம் குமுற தொடங்கியது. இருந்திருந்து அந்த மஞ்சுவிடமா நான் பெண் கேட்பது என்று தோன்ற, தன் மகன், அவன் வாழ்வு அதெல்லாம் கண்ணுக்கே தெரியவில்லை.

இதற்கும், கோதாவரிக்கும் மஞ்சுவிற்கும் ஒன்றும் அப்படி ஒன்றும் ஜென்ம பகை எல்லாம் அல்ல. ஒரு சாதாரண விஷயம். சொல்ல போனால் உப்பு பெறாத விஷயம்.

பொதுவாய் ஒரு திருமண வீடென்றால், மாப்பிள்ளை, பெண் வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவர் மாறி மாறி கேலி கிண்டல் செய்வது வழக்கம் தானே. பிருந்தா புண்ணியகோடி திருமணத்திலும் அப்படிதான் ஆனது.

அதுவும் கல்பனா தன் ஒரே மகனுக்கு தங்கள் சொந்த ஊரில் கிராமத்தில் தான் திருமணம் வைக்க வேண்டும் என்று சொல்லிவிட, அனைத்துமே அவர்களது கிராம முறை படியே நடந்தது. ஆனால் பிருந்தா குடும்பமோ அனைவருமே பட்டினத்து பழக்கம். அவர்களுக்கு அங்கே நடப்பது அனைத்துமே புதியதாய் இருந்தது.

கிராமத்தில் திருமணம் என்றதும், கோதாவரி சும்மா இருக்காமல், அந்த ஊர் வழக்கம் போல் பின் கொசுவம் வைத்து பட்டு சேலை கட்டி நகை நட்டு என்று அனைத்தும் பூட்டி வர, அதனை பார்த்த மணப்பெண் அறையில் இருந்த மஞ்சுவோ, பக்கென்று சிரித்துவிட்டார்.

இப்படியெல்லாம் நேரில் கண்டதில்லை என்பதால், படத்தில் மட்டுமே பார்த்திருப்பதால், எதோ ஒரு வகை உந்துதலில் அந்த சிரிப்பு வந்துவிட்டது. அதுவும் தங்கள் வயதை ஒத்தவள் இப்படி வரவும் அதனை கண்டு சிரித்து விட்டார்   

போதாத குறைக்கு, தன் தங்கைகளிடமும் சொல்லி சிரிக்க, முதலில் கோதாவரிக்கு புரியவில்லை..

“என்ன எதுக்கு சிரிக்கிறீங்க…” என்றபடி சாதாரணமாக கேட்க, 

மஞ்சுவும் வெகு சாதாரணமாய், “இல்லை.. இந்த கெட்டப் எல்லாம் நாங்க பிலிம்ல தான் பார்த்திருக்கோம்.. இது இப்படி கட்ட உங்களுக்கு கூச்சமா இல்லையா…”  என்று சொல்லி மீண்டும் சிரிக்க, அவ்வளவு தான் கோதாவரிக்கு அத்தனை பேரின் முன்னிலும் அவமானமாய் போனது.

தான் அவமானப்படுத்த பட்டதாகவே நினைத்தார். இது ஒரு சிறு விஷயம். சாதாரண விசயமும் கூட.

அதற்கு அப்போதே அவரால் இலகுவாய் பதில் சொல்லியிருக்க முடியும். ஆனால் அப்படிச்செய்யமல் அதையே மனதில் போட்டு, மஞ்சு யாரோடும் சாதாரணமாய் சிரித்து பேசினால் கூட அது தன்னையே தான் கிண்டல் செய்து பேசுவதாய் எண்ணி, அப்போது ஆரம்பித்த பனி யுத்தம் இன்னும் முடியவில்லை.

என்றோ எப்போதோ நடந்தது.. அதையே மனதில் கொண்டு இத்தனை வருடங்களாய் அதையே பிடித்து தொங்கி, அடுத்து அடுத்து வரும் சந்தர்பத்திலும் அதனையே காரணமாக்கி, மஞ்சுவே சாதரணமாய் பழகினாலும், அதெல்லாம் கண்டுகொள்ளாமல் நீ அன்று பார்த்து என்னை இப்படி சொன்னாயே என்பதை மட்டும் மனதில் நிறுத்தி, இதோ இத்தனை ஆண்டுகளில் மனதிற்குள் வன்மம் வளர்த்தது மட்டும் தான் மிச்சம்.

நம்மில் பலரும் இன்று இப்படித்தானே இருக்கிறோம். எப்போதோ நடந்த ஒரு சில விசயங்களை மனதிலே வைத்து, சொல்லப்போனால் அதன் தாக்கம் கூட குறைந்து மறைந்து போனாலும், நாம் இறங்கி போவதா என்ற ஒரு எண்ணத்திலேயே உழன்று, மனமே தாம் செய்யும் தவறுகளை உணர்த்தினாலும்,

‘இல்லை இப்படியே கெத்தா மெய்ன்டைன் பண்ணிட்டு போயிடுவோம்…’ என்று ஒரு வெத்து கௌரவம், வீம்பு பார்த்து எத்தனையோ உறவுகளை இழந்தும் இருக்கிறோமே.. அப்படித்தான் ஆனது இன்றும்..

ஆனால் என்ன ஆனாலும் தேவியை நான் இழக்க தயாரில்லை என்பது போல் சரவணன் பேச, அனைவரும் அவனுக்கு சார்ந்தே இருக்க, அதுவும் அந்த மஞ்சுவின் பெண்ணுக்கு தன் குடும்பமே இப்படி வக்காலத்து வாங்குவது ஏற்கவே முடியவில்லை. 

தன் கணவராவது துணை வருவார் என்று நினைத்தால், அசோக் குமார் எதுவாக இருந்தாலும் ஊருக்கு போய் பேசிக்கொள்வோம் என்று சொல்ல, கோதாவரிக்கோ இதை இன்றோடு இப்போதே பேசி முடிக்க வேண்டும் என்று மனதில் ஒரு வெறி எழுந்தது.

“எங்க போனாலும் சரி….. இதுக்கு நான் சம்மதிக்கவே போறதில்லை… என் வீட்டுக்கு மருமகளா வர்றவ நான் பார்க்கிற பொண்ணா தான் இருக்கணும். அப்படியே நான் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நீ சொன்ன, அது யாரா இருந்தாலும் நான் சம்மதிப்பேன், ஆனா நிச்சயமா இந்த பொண்ணுக்கு நான் சரி சொல்லமாட்டேன்…” என்று தீர்மானமாய் சொல்லிவிட்டார்.

சரவணனோ, “சரிம்மா நானும் சொல்லிடுறேன்.. என்னிக்கு இருந்தாலும் தேவி தான் எனக்கு… நானும் தேவிக்கு மட்டும் தான்…” என்று முடிவாய் சொல்ல,

கோதாவரிக்கோ, தன் மகன் தன் பேச்சை கேட்மல் பேசுவது எரிச்சலை தர, அதற்குமே அங்கே நிற்க அவருக்கு துளி இஷ்டம் இல்லை. ஒன்றும் சொல்லாமல் அறையை விட்டு வெளியே வந்தார்.

அப்போதுதான் தேவியும் அங்கே வந்து கொண்டிருக்க, ‘அனைத்தும் இவளால் தானே…’ என்று தோன்ற, நேருக்கு நேராய் முறைத்து நின்றார்.

பின்னோடு அனைவரும் எழுந்து வர, வெளியே சென்றிருந்த புண்ணியகோடியும் அப்போது தான் அங்கே வந்திருக்க, பிருந்தா தன் கணவரிடம் நின்றிருக்க, கோதாவரிக்கோ யாருமே கண்ணில் தெரியவில்லை. தேவியை தவிர.

தேவிக்கோ இதற்குமேல் என்னால் கால் எட்டு கூட எடுத்து வைக்க முடியாது, என்பது போல் அப்படியே சமைந்து நின்றாள்.

அத்தனை பேரின் முன்னிலும், “இதுக்கு தான் இங்க வந்தியா…???!!! வந்து நாலு நாள் ஆகல.. அப்படி என்ன பண்ண என் பையனை… என்னையே எதிர்த்து பேசுற அளவுக்கு வந்திட்டான்.. நீ தான் வேணுமாம்.. என்கிட்டயே சொல்றான்.. என்ன சொல்லி உன் அம்மா அனுப்பினா?? இப்படியெல்லாம் நடந்துக்க சொல்லி அனுப்பினாளா..???  ” என்று பட்டென்று கேட்டுவிட,

அனைவரும் அதிர்ந்து நிற்க, சரவணன் “அம்மா…..!!!!” என்று கோபத்தில் கத்த, அவனுக்கு குறையாத கோவத்தில் புண்ணியகோடி “கோதா….!!!!” என்று கத்தியிருந்தார்.

பிருந்தாவிற்கோ கண்களில் நீர் துளிர்த்தது..பேச்சு கேட்பது அவரது ரத்தம் அல்லவா..

கண்ணீர் நிரம்பிய கண்களோடு தன் மாமியாரை பார்க்க, அவரோ தன் மகள் பேசிய பேச்சில் பேச்சற்று நின்றிருந்தார்.

யாருக்கு ஏற்றுக்கொண்டு பேசமுடியும்..??

மகளுக்கா ?? மருமகளுக்கா??

இப்படியெல்லாம் நடந்துவிட கூடாது என்றுதான், தானே இதை பேசி முடிப்பதாய் சரவணனிடம் சொன்னார். ஆனால் நினைத்தது வேறு நடந்தது வேறு. ஒன்றும் செய்யவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தன் மகனை காண, புண்ணியகோடியோ இனியும் பொறுக்க முடியாது என்பது போல் நின்றிருந்தார்.           

இப்படியான விஷயங்கள் அங்கே நடப்பது புண்ணியகோடிக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. பொதுவாகவே அவருக்கு யாரையும் இப்படி கடிந்து பேசுவது பிடிக்காது. இருபக்க உறவுகளுமே முக்கியம் என்று இருப்பவர். தனக்கு எப்படி உடன்பிறந்தவள் முக்கியமோ அதுபோலவே தான் பிருந்தாவிற்கும் முக்கியம் என்று ஆரம்ப காலத்தில் இருந்தே அனைவரையும் அனுசரித்து போவார்.  கோதாவரி காலையில் இருந்து நடந்துகொள்வது அவருக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.

“போதும் கோதா ரொம்ப பேசிட்ட.. என்ன பழக்கம் இது??? உன்னை விட வயசுல சின்ன பொண்ணுகிட்ட இப்படிதான் பேசுவியா?? உன் வயசென்ன நீ பேசுற பேச்சென்ன?? அர்த்தம் புரிஞ்சு தான் பேசுறியா…” என்று கடிய,

அசோக் குமார் இனியும் கோதாவரி அங்கே இருந்தால் நிச்சயம் இன்னும் பிரச்சனை பெரிதாகும் என்று எண்ணி, “கோதா உள்ள போ.. நீ பேசினது போதும்..” என்று கட்டளை போல் சொல்ல,

கல்பனாவோ, கலங்கி போய் அலங்க மலங்க விழித்து நிற்கும் தேவியின் அருகில் சென்றவர், “சாரி மா.. என் பொண்ணு பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்.. தப்பு என்மேல தான்.. நான் ஆரம்பத்துல இருந்தே சொல்லி வளர்த்திருக்கணும்…” என்று சொல்ல,      

அவ்வளவு தான்…. கோதாவரிக்கு இப்போதும் தான் அவமான படுத்த பட்டதாய் உணர்ந்தார். இதுநாள் வரை என்னை ஒருவார்த்தை சொல்லிடாத, அம்மா, அண்ணா, கணவன், மகன் என்று அனைத்து உறவுகளும் இன்று தனக்கு எதிராய் நிற்பது போல் தோன்றியது.

அன்று மஞ்சு என்னை அவமான படுத்தினாள், இன்று அவள் மகளினால் தன் குடும்பத்தாரே தன்னை அவமான படுத்துகிறார்கள் என்று தோன்ற. இதை எதையும் அவரால் ஏற்றுகொள்ள முடியவில்லை. தன்னை விட வயதில் இத்தனை சிறியவள், இந்த மூன்றே நாளில் தன்னக்கு எதிராய் அனைவரையும் திருப்பிவிட்டால் என்று அவர் மனம் நினைத்தது..

இல்லை… இல்லை நிச்சயமாய் இல்லை… இது நான் என் பிறந்த வீடு… என் அம்மா அண்ணன் என்று என் உறவுகள் இருக்கும் வீடு.. இங்கே என் விருப்பம் தான் முதலில். அதன் பிறகே எதுவென்றாலும்.. என்று மனதில் தோன்றவும் அனைவரையும் சுற்றி ஒரு பார்வை பார்க்க, அவர் யாரெல்லாம் என் உறவு என்று நினைத்தாரோ அவர்கள் எல்லாம் இப்போது தேவியின் அருகில் நின்று அவளை சமாதானம் செய்துகொண்டு இருக்க,

அதிலும் முக்கியமாய் தன் மகன், அவரை கடந்து தேவியை நோக்கி ஓர் எட்டு வைப்பது கண்ணில் பட     

மெல்ல மெல்ல ரத்த அழுத்தம் ஏற, உடம்பெல்லாம் வியர்த்து வழிய, அப்படியே லேசாய் மயங்கி விழப் போனார், மனதில் எதோ ஓர் உணர்வு தோன்ற லேசாய் திரும்பிய சரவணன், அதிர்ந்து போய் 

“மாம்….” என்று விளித்து தாங்கி பிடித்தான்.

 

 

 

 

 

 

 

Advertisement