Advertisement

                              துளி – 7   

மாலை தான் பார்ட்டி என்றாலும், அனைத்தும் செய்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்றாலும், நாம் விருந்தாளிகளே என்றாலும், எதாவது ஒரு சில உதவி, அல்லது எதையாவது தாமே இழுத்து போட்டு செய்தால் அதிலிருக்கும் உணர்வே தனி தானே.

விருந்தாளிகள் தானே என்று வெறுமெனே இராமல் எதோ நம் வீட்டு விசேசம் போல என்று அக்கறையாய் அனைத்தும் பார்த்து பார்த்து செய்தால் அதிலிருக்கும் மகிழ்ச்சியும் தனி தானே. அப்படிதான் செய்தனர், சரவணன், தேவி மற்றும் அந்த இளைய பட்டாளமும்.

“கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே….” என்று பிருந்தா சொல்ல,

“நோ அத்தை வீ ஆர் என்ஜாயிங் திஸ்….” என்று சரவணன் சொல்லிவிட,

“சித்தி… இது எங்க பார்ட்டி… சோ நாங்க செய்வோம்…” என்று தேவி சொல்ல, மற்றவர்களும் அதற்கு சரியாய் கோரஸ் பாட, ராகுல் கூட ஓடியாடி வேலை செய்தது தான் அனைவர்க்கும் ஆச்சரியம்.

அந்த குண்டு உடம்பை வைத்து அவன் அங்கே இங்கே என்று எதையாவது செய்து, ஓடுவது பார்க்கவே அழகாக இருந்தது. பொதுவாய் அவனுக்கு இப்படியெல்லாம் பழக்கமே இல்லை. அது மிக நன்றாகவும் தெரிந்தது. வேலை செய்கிறேன் என்று சரியாய் அனைத்தையும் சொதப்பி தான் வைத்தான்.

ஆனால் செய்யும் ஆர்வம் இருந்தது. ஆக சரவணன் பொறுமையாய் அவனுக்கு ஒவ்வொன்றாய் சொல்ல,  வேலைக்கு நடுவே கண்டிப்பாய் எதையாவது வாயில் வேறு அடைத்துக்கொண்டு  சரவணன் சொல்வதை செய்துகொண்டு இருந்தான். 

இத்தனை வருடம் இவர்கள் யாரும் வந்ததும் இல்லையா. ஆக அவனை பொருத்தமட்டில் கடந்த வருடம் வரை இந்த பார்ட்டி எல்லாம் சும்மா வந்து வேடிக்கை பார்த்து செல்வது அவ்வளவே.

ஆனால் இந்த வருடம் நிஜமாகவே சந்தோசமாய் அனைவரோடும் பங்கேற்க,அதனை பார்த்த பிருந்தா தான் “கொஞ்சம் குண்டா இருக்கோம்னு மனசிலேயே ஒரு ஒதுக்கம்.. இவ்வளோ ஆக்டிவா இருந்து நானே பார்த்ததில்லை.. இப்போ பார் ஓடுறதை…” என்று வேலைக்கு நடுவே தேவியிடம் சொல்ல, அது சரவணன் காதுகளிலும் விழுந்தது.

ராகுலுக்காகவாவது இங்கே அடிக்கடி வரவேண்டும் என்று இருவருக்குமே  தோன்றியது.

அடுத்து கல்பனா.. பொதுவாகவே ஒரு அதிகார தோரணை இருக்கும். அத்தனை எளிதில் வாய் திறந்து பிறரிடம் பேசிட மாட்டார். ஆனால் அதெல்லாம் எத்தனை நாளைக்கு..??

நாட்கள் ஆக ஆக வயது கூட கூட, அவருக்குமே வீட்டில் ஆட்கள் நிறைய இருந்தால் நன்றாய் இருக்கும் என்று தோன்ற ஆரம்பித்தது. வயது போன பின்னே தான் மனிதர்களை தேட ஆரம்பித்தது மனது. அதுவும் இம்முறை அவரை விட இத்தனை வயதில் சிறியவர்கள் வரவும், வீட்டில் ஒரு மகிழ்ச்சி அலை பரவ,

அனைத்திற்குமே பாட்டி பாட்டி என்று இவரிடம் தயங்காமல் வந்து நிற்கும் பிள்ளைகளை பார்த்து வயது குறைந்தது போல் இருந்தது அவருக்கு. புத்துணர்ச்சியாய் உணர்ந்தார். பதிலுக்கு பதில் அவர் கூட பரிகாசம் பேச, புண்ணியகோடிக்கு கூட ஆச்சர்யம் தான்.

“அம்மா…. என்கிட்டே கோதாகிட்ட எல்லாம் இப்படி நீங்க பேசினதே இல்லையே…” என்று ஆச்சர்யமாய் கேட்க,

“அட போடா… கோதாவரி, நான் சின்ன வயசில எப்படி இருந்தேனோ அதுபோலவே தான் இப்பவும்.நீ எப்போ பார் பிஸினஸ்.. பிருந்தாக்கு இங்க இருக்க எல்லாத்தையும் கவனிச்சு முடிக்கவே நேரம் சரியா இருக்கும்.. சொல்ல போனா அவளையே நான் தான் அதட்டி உருட்டி சாப்பிடு கொஞ்சம் ரெஸ்ட் எடு சொல்வேன்…

இந்த ராகுல் பையன் ஸ்கூல் விட்டு வந்தா அடுத்து என்ன செய்றான்னே தெரியலை.. வீடே இப்போதான் கலகலன்னு இருக்கு.. எப்பவும் இப்படி இருந்தா சந்தோசமா இருக்கும்.. சொந்தம் பந்தம் அடிக்கடி வந்து போனாதான் அதோட அருமை எல்லாருக்கும் புரியும்…..” என்று சொல்ல,

மனதிற்குள் அவரும் மிக மிக தனிமையை உணர்ந்திருக்கிறாரோ என்று இருந்தது.

என்னதான் காசு பணம், வசதி நினைத்ததை சாதிக்க கூட வல்லமை என்று அனைத்தும் இருந்தாலும், அவை அனைத்தையும் தாண்டி மனிதர்களை சம்பாதிக்க வேண்டும் என்று சும்மாவா சொன்னார்கள்.

 

“பாட்டி.. டோன்ட் வொர்ரி.. நாங்க அடிக்கடி வர்றோம் இங்க.. அப்புறம் நீங்களே சொல்வீங்க யப்பா இதுங்க தொல்லை தாங்கலைன்னு..” என்று தேவி சிரித்தபடி தலை சரித்து சொல்ல, கல்பனாவும் சிரித்துகொண்டார்.  

அனைவரிடத்திலும், புன்னகையோடு பேசி சிரித்து, அவரவர் தேவைக்கு ஏற்ப பதில் சொல்லி என்று தேவி அனைவரின் மனதிலும் இடம் பிடித்ததை சரவணன் கவனித்துகொண்டு தான் இருந்தான்.

சொல்லபோனால் பிருந்தாவுமே அப்படிதானே.. இல்லையெனில் கல்பனாவிடம் நல்ல மருமகள் என்று பெயர் எடுத்திருக்க முடியுமா என்ன??

பர்ட்டிக்கென்று, தோட்டத்தை ஏற்கனவே ஆட்கள் வந்து அலங்கரித்து முடித்திருந்தார்கள். ஆனாலும் இன்னும் இருக்கைகள் சரியாய் போடபடாமல் இருக்க, அதையெல்லாம் சரவணன் சரித்து பார்த்துகொண்டிருக்க,

பிருந்தா வந்து “சரவணா இந்த ஜூஸ்.. குடிச்சிட்டு வேலையை கவனிங்க…” என்று அவன் கையில் திணித்துவிட்டு செல்ல,       

அருகே இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தவன், தேவியை தான் தேடினான். என்னதான் வேலை என்றாலும் தன் காரியத்தில் கண்ணாய் தான் இருந்தான்.

சற்ற தள்ளி, வேலையாட்கள் இருவரின் உதவியோடு, அந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை குலத்தையும், நீரூற்றையும் அலங்கரித்து கொண்டிருந்தாள்தேவி..

“மோகினி…” என்று அழைக்க வாய் வர, சட்டென்று சுதாரித்து, “தேவி..” என்று அழைத்தவன், அவள் திரும்பியதும் இங்கே வா என்பது போல் சைகை செய்ய,   அவளோ வேலை இருக்கிறது என்று சைகை செய்ய, நீ வந்தே தான் ஆகவேண்டும் என்று முகத்தை தூக்கினான். 

“ஹப்பா… பிடிவாதம்…” என்று எண்ணினாலும் அவளுக்கு  சந்தோசமாகவே இருந்தது. 

அருகில் இருந்தவர்களிடம் அடுத்து என்ன செய்ய வேண்டும், எப்படி செய்யவேண்டும் என்று விளக்கிவிட்டு இவனை நோக்கி வந்தாள்.  

வேலைக்காரர்கள் தானே என்ற அலட்சியம் சிறிதும் இல்லாமல், சகமனிதர்கள் போல பாவித்து பேசி, என்று அழகாய் அவர்களோடு தானும் பங்கெடுத்து வேலை செய்து என்று அவள் ஒவ்வொரு செய்கையும், ‘என் வாழ்க்கைக்கு நீ வேண்டும் பெண்ணே…’ என்ற எண்ணத்தை வெகு ஆழமாய் அவன் மனதில் இறக்கியது.

பழக இலகுவானவள், தலைகனமோ திமிரோ சிறிதும் இல்லை. எனக்கும் உன்னை பிடித்துவிட்டது இனி இதில் ஒளிவு மறைவு எதுவுமில்லை என்று அவள் அவனின் அன்பை ஏற்றுகொண்ட விதம், மிக மிக பாந்தாமாய் பொருந்தி போன தங்கள் உணர்வுகள் என்று சரவணன் அவளையே பார்த்தபடி ஒருவித மோன நிலையில் லயித்திருக்க,

“ஹேய் என்ன கூப்பிட்டிட்டு இப்படி பிரீஸ் ஆகி இருக்க…” என்று அவன் தோளைதொட்டு உலுக்க,

“ஹா நத்திங்.. மை மோகினி.. இந்தா ஜூஸ் குடி…” என்று நீட்ட, அவளோ முறைத்தாள்.

“ஓய் இதென்ன முறைக்கிற… இந்த குடி…” என்று மீண்டும் அவளிடம் நீட்ட,

“இவ்வளோ நேரம் நீ குடிச்சிட்டு இப்போ குடுக்கிறியா…. நோ நோ நான் குடிக்கமாட்டேன்பா…” என்று வேண்டுமென்றே பிகு செய்ய,

“ஓஹோ..!!!  நடன தாரகை நான் குடிச்சிட்டு குடுத்தா குடிக்க மாட்டீங்களோ…” என்று இழுத்தவன், “பாக்குறேன் பாக்குறேன் இது எத்தனை நாளைக்கு…” என்று பொய்யாய் அவளை மிரட்ட,

“பாரு பாரு…” என்று அவளும் அவனோடு சரிக்கு சரி பேச, அதே நேரம் கல்பனா அங்கே வந்தார்.

“என்ன பேராண்டி… இப்போவே இப்படி பேசி தீர்த்துட்டா, கொஞ்சம் கல்யாணத்துக்கு அப்புறமும் பேச மிச்சம் வை..”

“பாட்டி….” என்று இருவரும் விழிகளை விரிக்க, மாட்டிகொண்ட உணர்வு.

“எல்லாம் எனக்கு தெரியும்.. எனக்கு தெரியும்னு உங்களுக்கும் தெரியும்.. அப்புறமென்ன… ” என்று சிரிக்க,

“ஹ்ம்ம் மாம் நாளைக்கு வர்றாங்க, எனக்கு நெக்ஸ்ட் வீக் டியூட்டி ஜாயின் பண்ணனும்…” என்று சரவணன் மனதில் இருப்பதை மறைக்காமல் சொல்ல,

“வரட்டும் நான் பேசிக்கிறேன்…” என்றார்.

“இல்ல பாட்டி… நானே பேசுறேன்… அது தான் சரி….”

“வேணாம் சரவணா… உன் அம்மாவை பத்தி எனக்கு தெரியாதா…” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, கல்பனாவை பார்க்க, யாரோ வந்திருப்பதாய் வேலையாள் வந்து சொல்ல,

“நீங்க ஒன்னும் நினைக்கவேண்டாம்…” என்று இருவருக்கும் பொதுவாய் சொல்லி சென்றார்.   

சரவணன் மனதில் எல்லாம் நல்லதே நடக்கவேண்டும் என்ற வேண்டுதலோடு, நடக்கும் என்ற உறுதியும் பிறந்தது. தேவிக்கும் அப்படியே.. இருவரும் அடுத்தடுத்து வேலையை கவனிக்க நேரம் போனது தெரியவில்லை.  

சரியாய் மாலை ஏழு மணிக்கு பார்ட்டி தொடங்க, வந்திருந்த அனைவருமே தங்களுக்கு புதியவர்கள் என்பதால், சரவணன் தேவி இருவருக்குமே ஒன்றாய் நடக்க, அமர, பேச என்று எதிலும் தயக்கமில்லை.

தெரிந்தவர்கள் வந்திருந்தால் தானே தங்களை பற்றி யார் என்ன நினைப்பர், என்ன பேசுவர் என்ற தயக்கம் இருக்கும். இங்கோ யாரையும் தெரியாது, புண்ணியகோடி குடும்பத்தை தவிர, அவர்களுக்கும் தங்கள் விஷயம் தெரியும் என்பதால் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கமும் போனது.

இருவரும் ஒன்றாகவே வளைய வர, புண்ணியகோடி தன் நெருங்கிய நண்பர்களுக்கு முறையாய் இவர்களை அறிமுகம் செய்துவைத்தார்.

பேச்சு, சிரிப்பு, மெல்லிசை பாட்டு கச்சேரி, மேற்கத்திய நடனம், பல விதமான உணவு வகைகள், மற்றும் கோவாவின் பிரசித்தி பெற்ற முந்திரி பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் ‘பென்னி…’ என்னும் மதுவகையோடு அந்த பார்ட்டியும் அழகாய் ஆரம்பித்தது.

“ஹே இது இங்க ரொம்ப பேமஸ்…” என்றபடி கையில் ஒரு சிறு குவளையில் பென்னியை நிறைத்தபடி வந்தமர்ந்த சரவணனை தேவி முறைக்க,

“இது முந்திரில தான் தயாரிக்கிறாங்க…” என்று சொன்னாலும், உனக்கு பிடிக்காவிட்டால் நான் குடிக்கவில்லை என்ற ரீதியில் சரவணன் பார்க்க,

“மனுஷன், புத்தி மனசு, ரெண்டையும் தடுமாற வைக்கிற, தடம்புரல வைக்கிற எதுவுமே நல்லதில்லை…” என்று தேவி இலகு போலவே சொன்னாலும், கண்களில் ஒரு எச்சரிக்கை தெரிய,

“ஹ்ம்ம் அப்படியா மோகினி…” என்றபடியே, தன் கையில் இருந்த குவளையை மேஜை மீது வைத்தவன்,

“அப்படி பார்த்தா காதல் கூட மனுஷன் மனச, புத்திய தடுமாற செய்யும்.. எதுவும் செய்யலாம்னு தடம்புரல வைக்கும்… அப்போ அதுவும் நல்லதில்லையா…” என்று தலையை சரித்து அவளது அழகை பருகியபடி கேட்டவனின் பாவனையில் சிரிப்பு தான் வந்தது.

“அதான் ஏற்கனவே உனக்கு தலைக்கு எறியிருக்கே.. பின்ன என்ன…” என்று அவளும் அவனை போலவே பாவனை செய்து கேட்க இருவரும் சிரித்து தான் கொண்டனர்.  

நேரம் போனதே தெரியவில்லை. ஒருவழியாய் அனைத்தும் முடிய நள்ளிரவு நெருங்கிவிட்டது. உறங்க வரும் போது இரவு ஒரு மணி.

என்னதான் சரவணன் சாதாரணமாய் இருப்பது போல் இருந்தாலும் அவன் மனதில் அவன் அம்மா வருவது வண்டாய் குடைந்துகொண்டு இருந்தது. கோதாவரியிடம் சாதாரணமாய் ஒரு விஷயம் பேசவேண்டும் என்றாலே அதற்கு நூறு முறை யோசித்து தான் பேசவேண்டும்.

அதுவும் காதல் விசயமோ, இன்னும் ஆயிரம் முறைக்கு யோசிக்கவேண்டும்… மனதில் இந்த சிந்தனையே வியாபித்து இருக்க, என்னதான் உடல் அலுப்பு இருந்தாலும் உறக்கம் மட்டும் வரவில்லை.

அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டு இருந்தான். என்னதான் பாட்டி பேசுகிறேன் என்று சொன்னாலும் தான் பேசினால் தான் அது முறையாய் இருக்கும் என்ற எண்ணம் வலுவாய் இருந்தது.

பொழுது விடிந்தால் வந்துவிடுவார்கள், என்று தோன்ற, அதே நேரம் ‘நான் என்ன தப்பு பண்ணேன்.. எதுக்கு நான் இவ்வளோ டென்சன் ஆகணும்… வரட்டும் பார்த்துப்போம்…’ என்று தோன்ற  அதன் பின்னே தான் அவனுக்கு சற்று  நிம்மதியாய் இருந்தது.

கட்டிலில் விழுந்தவனுக்கு தேவியிடம் பேசவேண்டும் போல் தோன்ற, நேரத்தை எல்லாம் காணாது அழைத்தான்.

முதல் ரிங்கிலேயே எடுத்து “சனு…” என்று தேவி சொல்ல,

“ஹேய்.. என்ன நீயும் தூங்கலையா…” என்று கேட்க,

“நோ ப்பா.. பீலிங் டையர்ட்.. சோ பாத் பண்ணிட்டு வந்து இப்போதான் படுத்தேன்…” என,

“அதுசரி மோகினி எல்லாம் இப்படி நடுராத்திரில தான் குளிக்கும்..” என்று கிண்டல் செய்தான்.

“ஓய் என்ன எப்போ பார் மோகினி மோகினி சொல்லிட்டு..”

“ஹா ஹா நிஜம்தானே.. ஆள் மாறாட்ட மோகினி…”

“போதும் போதும்.. நான் ஒன்னும் ஆள் மாறாட்டம் செய்யலை…” என்றவளுக்கு அவன் சொல்லியதில் சிரிப்பு வர, அதோடு சேர்த்து இத்தனை நேரம் இவன் தூங்காமல் என்ன செய்கிறான் என்றும் தோன்ற,

“சனு தூங்கலையா…” என்று வினவ..

“ம்ம்.. இல்ல… என்னவோ தூக்கமில்ல.. உன்கிட்ட பேசணும் போல இருந்தது…” என்றவனது குரலே, எனக்கு நீ அத்தனை முக்கியம் என்று சொல்லாமல் சொல்ல, தேவி கண்கள் மூடி அவன் குரலை ரசித்துக்கொண்டு இருந்தாள்.

இரண்டு பக்கமுமே மௌனம்..

பேசவேண்டும் என்று நினைத்தாலும் என்ன பேசுவது என்று தெரியவில்லை.. நிறைய இருக்கிறது ஆனால் வார்த்தை கொண்டு உருவம் வடிக்க முடியவில்லை. சில நொடிகள் மௌனத்தில் நகர்ந்தாலும், இருவருமே ஒரே நேரத்தில்

“சனு… ”

“தேவி…” என்று சொல்ல,

“அட…” என்று மனதில் மகிழ்வு தோன்றினாலும்..

“சொல்லு..” என்று மீண்டும் ஒன்றுபோலவே சொல்ல, அடுத்து இருவருமே சிரித்து கொண்டனர். 

ஆனால் அடுத்து சரவணனே தொடங்கினான்,

“தேவி.. மாம் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க தெரியாது… சோ…”

“சோ… நத்திங் வொர்ரி சனு.. ஆன்ட்டி எப்படி ரியாக்ட் பண்ணாலும் ஷி இஸ் யூவர் மாம்.. நான் எப்பவும் எதுவும் நினைக்கமாட்டேன்…” என்று ஆழ்ந்த குரலில் சொல்ல, அவனுக்கு அதுவே பெரும் தைரியம் கொடுத்தது.  

“தேவி ஐ லவ் யூ… அன்ட் ஐ டோன்ட் வான்ட் டு மிஸ் யூ…” என்றவனின் குரலில் அவளுக்கு இதயம் படுவேகமாய் தான் துடித்தது.

முதல் முறையாய் உணர்வு பூர்வமாய் சொல்லியிருக்கிறான். அதுவும் அவன் குரலே அவளுக்கு அவனை தெளிவாய் உணர்த்த, ஏனோ கண்கள் கூட கலங்குவது போல் இருந்தது.

“ச… சனு…” என,

“எஸ்….” என்றான்..

“பர்ஸ்ட் டைம் சொல்லிருக்க…”

“எஸ்… பட் நீயும் சொல்லுனு சொல்ல மாட்டேன்… உனக்கு தோணும் போது சொல்லு…”

“ஹா.. அதெப்படி நான் நினைச்சது உனக்கு தெரியும்…” என்று வியந்தாள்.

“ஹா ஹா லவ் மா லவ்.. நான் சொல்றதெல்லாம் நீயும் சொல்லனும்னு இல்லை..” என்று சிரித்தான்.

“ஹப்பா பயங்கரமான லவ் தான்…”

“ஆமா ஆமா.. பயங்கரமான லவ் தான்… இந்த மோகினி நார்மல் லவ் எல்லாம் போதாதே.. அதான் பயங்கரமான லவ்….” என்று திகில் படத்தில் பேசுவது போல பேச,

“அடடா.. இதென்ன போலீஸ்கார் குள்ள இவ்வளோ திறமையா…” என்று கிண்டல் பேச,

அத்தனை நேரம் சரவணனுக்கு மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரம் இருந்த இடம் தெரியவில்லை.  மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு வைக்க, அவனுக்கு நிம்மதியாய் உறக்கம் வந்தது.

ஆனால் தேவிக்கு அப்படியில்லை..

எதோ ஒரு பரபரப்பு… ஒருவேகத்தில் முடிவெடுத்து இதோ காதலிக்கவும் தொடங்கியாவிட்டது. சரவணனை பிடித்திருக்கிறது.. ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனாலும் எதோ ஒன்று மனதில் ஒரு ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. அவனோடு கழிக்கும் பொழுதுகளில் இல்லாத ஓர் உணர்வு அவனை விட்டு தள்ளி நிற்கையில் வந்து ஒட்டிக் கொள்கிறது. பெண்களுக்கே தோன்றும் இயல்பான ஓர் உணர்வா.. தெரியவில்லை.

“என்ன இருந்தாலும் சரி.. என்ன நடந்தாலும் சரி.. சனு இஸ் மை லவ்…” என்று சொல்லிக்கொண்டு கண்களை மூடினாள்..

                                    &&&&&

“இல்லம்மா இது சரி வராது….” என்று நான்காவது முறையாய் தனக்கிருக்கும், கோபத்தையும், எரிச்சலையும் அடைக்கியே கல்பனாவிடம் பேசிக்கொண்டு இருந்தார் கோதாவரி. அருகே அசோக் குமாரும் இருக்க, கல்பனா தன் மகளிடம் ஓரளவிற்கு மேல் எதையும் பேச முடியாமல் போனது.

அன்று அதிகாலை தான் இருவரும் வந்திருந்தனர். சரவணன் தான் விமான நிலையம் போய் அழைத்து வந்திருந்தான்.

“நானும் கூட வரட்டுமா…” என்று தேவி கேட்க,

“வேணாம்… நீ ரிலாக்ஸா இரு மோகினி..” என்றவன் ஒருமுறை இறுக அவளை அணைத்து விடுவித்தே தன் பெற்றோரை அழைக்க சென்றான். அவனுக்கும் ஆசை தன் தேவியை அழைத்து போகவேண்டும் என்று. ஆரம்பமே எதாவது சிக்கலாய் போனால் என்ன செய்ய என்றுதான் வேண்டாம் என்றான்.

தானே அப்பா அம்மாவிடம் இதை பற்றி பேசுகிறேன் என்று சரவணன் சொன்னதற்கு கல்பனா வேண்டவே வேண்டாம் என்றார். காதல் கத்திரிக்காய் என்று ஆரம்பித்தால் உன் அம்மா சுத்தமாய் சம்மதிக்கவே மாட்டாள், ஆகையால் நானே இதை சொல்வது போல் பேசுகிறேன் என்று சொல்ல, ஏனோ இதை சரவணனுக்கு ஏற்க முடியவில்லை.

“பாட்டி ப்ளீஸ்… இதை நான் சொல்றது தானே சரி…” என்று அவன் வாதிட, கல்பனாவோ வேண்டவே வேண்டாம் என்றார்.

“சொன்னா கேளு டா சரவணா… நானே இதை வரன் சொல்ற போல சொல்றேன்… அதுக்கு பின்ன எதுனாலும் பேசுவோம்…” என்று சொல்ல,

புண்ணியகோடியும் அதையே சொல்ல, தேவியும் ‘சரி…’ என்று தலையாட்ட, சரவணன் அரை மனதாகவே இதற்கு சம்மதித்தான்.

விமான நிலையத்திலிருந்து வந்து, பின் சிறிது நேரம் ஓய்வெடுத்து, குளித்து முடித்து கோதாவரியும், அசோக் குமாரும் காலை உணவிற்கு கீழே வர, கல்பனா  அருகே தேவி இருப்பதை பார்த்து லேசாய் புருவத்தை சுருக்கி யோசித்த கோதாவரி பின் எதையும் வெளிக்காட்டிகொள்ளவில்லை.

பிருந்தா தான், “என் அக்கா பொண்ணு…” என்று அவளை அறிமுகம் செய்ய, அசோக் குமார் ஒரு புன்னகை சிந்தினாலும், கோதாவரி ஒரு தலையசைப்போடு நிறுத்திகொண்டார்.

தேவிக்கு ஏற்கனவே உள்ளே ஓர் நடுக்கம் ஓடிக்கொண்டு தான் இருந்தது. அதை வெளிக்காட்டாமல் சாதாரணமாய் இருப்பது போல் இருக்க, டைனிங் டேபிளில் அனைவரும் இரண்டு பக்கமும் வரிசையாய் அமர்ந்திருக்க பிருந்தா தான் பரிமாறினார்.          

கோதாவரி ஏற்கனவே தேவியை புகைப்படத்தில் கண்டிருக்கிறார் தானே. ஆனாலும் ஓர் ஆராய்ச்சி பார்வையை அவள் மீது வீசியபடி தான் இருந்தார். தேவியோ தலை குனிந்தவள் நிமிரவே இல்லை.

சரவணனும் இறங்கி வர, “மாம்ஸ் வாங்க வாங்க இங்க வாங்க…” என்று ராகுல் அழைக்க,

அசோக் குமார் அருகே காலியாய் இருந்த இருக்கைக்கு செல்வதா இல்லை, ராகுலுக்கும், தேவிக்கும் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்வதா என்று யோசித்தவன், எதுவென்றாலும் சரி வரட்டும் பார்ப்போம் என்று  நேராய் தேவியின் அருகே அமர்ந்தான்.

தேவிக்கே அதிர்ச்சி தான்.வாயில் வைத்த உணவு தொண்டையில் இறங்காமல் சண்டித்தனம் செய்ய, ஒருநிமிடம் தேவியின் பார்வை சரவணனில் ஆரம்பித்து கோதாவரியை தொட்டு மீள, அவரோ தன் மகனை தான் பார்த்தார்.

ஆனால் சரவணனோ எதையும் கண்டுகொள்ளாமல், பிருந்தாவிடம், “அத்தை நீங்களும் வந்து உட்காருங்க.. எல்லாரும் எடுத்து போட்டுக்கலாம்…” என,

பிருந்தா மறுக்க, பின் கல்பனா தான் “நீயும் போ சாப்பிடு…” என்று சொல்ல பிருந்தாவும் வந்து அமர, அவரவர் தங்களுக்கு என்ன வேண்டுமோ அதை போட்டுகொள்ள,                      

சரவணன் தேவியின் தட்டை பார்த்தவன், “என்ன இது அப்போ இருந்து அப்படியே இருக்கு.. சாப்பிடு… நைட்டும் நீ சரியா சாப்பிடலை…” என்று இந்த பேச்செல்லாம் எங்களுக்குள் சாதாரணம் என்பது போல் சொல்ல,

‘ஐயோ …!!!!’ என்று அவள் விழிகள் விரிந்தாள், ‘என்ன இது…????’ என்பது போல் அவனை பெற்றவர் பார்க்க, சுற்றி இருந்த அனைவருக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் தங்கள் தட்டுகளில் தலையை கொடுக்க, கோதாவரிக்கு அப்போதே டென்சன் ஆரம்பித்தது.

“இந்த மஞ்சு அவ வராம ஏன் அவ பொண்ண மட்டும் அனுப்பிருக்கா..” என்று எண்ணியவர், பிருந்தாவிடம் நேரடியாகவே, “உன் கூட பிறந்தவங்க யாரும் வரலியா…??” என்று கேட்க, அவர் யாரை கேட்கிறார் என்று அங்கிருப்பவர்களுக்கு புரியாதா என்ன.

“அக்கா மாமா நாளைக்கு வர்றாங்க அண்ணி.. தம்பி, தங்கச்சிக்கு எல்லாம் டிக்கெட்ஸ் ப்ராப்ளம்.. அதான் பிள்ளைங்க மட்டும் வந்திருக்காங்க…” என்று அவர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

“ஓ…!!!! பார்ட்டி தான் முடிஞ்சிடுச்சே… அப்புறம்  என்ன..??”

பார்ட்டி முடிந்துவிட்டதே பின்னே ஏன் உன் அக்கா வருகிறாள் என்று கேட்காமல் கேட்க, பிருந்தாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. என்ன சொல்ல என்பது போல் தன் மாமியார் முகம் பார்க்க, “நான் தான் வர சொன்னேன்…” என்று கல்பனா மகளுக்கு பதில் சொல்ல,

“ஏன்…???!!!” என்பது போல அவரும் தன் அன்னையை காண,

“சாப்பிடு கோதா.. சாப்பிட்டு ரூம்க்கு வா… நிறைய பேசலாம்..” என்றுவிட, அதற்குமேல் கோதாவரி எந்த கேள்வியும் கேட்கவில்லை.

 

Advertisement