Advertisement

துளி – 5

சின்கொரியம் கடற்கரை… கோவாவின் எண்ணற்ற கடற்கரைகளில் இதுவும் ஒன்று. கோவாவின் தலைநகர் பானாஜியில் இருந்து பதிமூன்று கிலோமீட்டர் தொலைவில் வடக்கே அமைந்திருக்கும், அழகான, தூய்மையான, அமைதியான கடற்கரை.   

எப்போதும் அத்தனை கூட்டம் இருக்காது.. ஆகையாலோ என்னவோ அத்தனை தூய்மையாய் இருந்தது. அதுவும் அந்த அதிகாலை நேரத்தில் கடல் அலைகளின் சப்தத்தை தவிர வேறு எதுவுமே கேட்கவில்லை.சூரியன் மெல்ல மெல்ல உலகை ஆழ மேலெழும்பி வந்துகொண்டு இருக்க, மனதிற்கு அத்தனை இதமாய் இருந்தது.

இயற்கை எப்போதுமே அழகு தான். நாம் அதை போற்றுவதை பொருத்து இருக்கிறது. என்ன செய்துவிடும் என்று நாம் நம் இஷ்டத்திற்கு  இயற்கை வளங்களை சுரண்டினால், பின் அதுவும் தன் வேலையை காட்டிவிடும்.

பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் அந்நேரத்திலேயே சரவணவன் தேவியை அங்கே அழைத்துக்கொண்டு வந்திருந்தான். வந்தது என்றால் அவர்கள் இருவர் மட்டுமில்லை. கூடவே இன்னும் ஐவர். இருவரையும் சேர்த்து ஏழு பேர்.  ராகுலோடு சேர்த்து, பிருந்தாவின் மற்ற உடன்பிறப்பின் மக்களும் வந்திருந்தனர்.

முதலில் யாரும் இந்த பார்ட்டிக்கு வருவதாய் இல்லை. அவரவர் வாழ்வில் எத்தனையோ இருக்கும். அனைவரையும் அழைத்து யாரும் போகவில்லையெனில் பிருந்தா வருத்தபடுவார் என்றே மஞ்சு தேவியை அனுப்பியது.  

ஆனால் தேவி இந்த பார்ட்டிக்கு வருகிறாள் என்றதுமே தேவியின் மற்ற சித்தி, மாமாவின் பிள்ளைகளும் கிளம்பி வந்திருக்க, முதல் நாள் இவர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு நுழையும் போதே அவர்களும் வந்திருந்தனர்.

வீட்டினுள் நுழையும் போதே..

“தேவிக்கா….”

“சித்தி…”

“அத்தை..”

“டேய் ராகுல்……” என்று பலவிதமான குரல்கள் கேட்க,

“ஹே எப்போ வந்தீங்க…..??!!!!” என்று ஆனந்த அதிர்ச்சியோடு தேவி ஓடி சென்று அவர்களை கட்டிகொண்டாள்.

ராகுலுக்கு அவர்களை எல்லாம் காணவும் அவ்வளவு ஆனந்தம். முதன்முறையாய் அனைவரும் ஒருசேர வந்திருக்க, அந்த சிறுவனுக்கு மகிழ்ச்சி இல்லாமல் போகுமா என்ன??  

சரவணனை ஒட்டி நின்றிருந்தவனும் அந்த கோஷ்டியில் இணைந்து கொள்ள, அனைவரும் ஒரே கும்பலாய் இன்று இறுக கட்டிக்கொண்டு “ஹே….!!!!!!!” என்று குதிக்க, பிருந்தா இவர்களை போல் கட்டிகொண்டு குதிக்கவில்லை என்றாலும், தன் முகத்தில் மகிழ்வை காட்டியே நின்றார்.

அன்று காலை வரைக்குமே யாரும் வரவில்லையே என்ற கவலை அவர்க்கு இருந்தது. இப்போது அது சுத்தமாய் இல்லை. என்னதான் தன் உடன்பிறப்புகள் வரவில்லை என்றாலும் அவர்களது பிள்ளைகளை அனுப்பி இருப்பது மகிழ்ச்சியே.

பதினைத்து, பதினேழில் இரண்டு பெண் பிள்ளைகளும், பதிலும், இருபதிலும் இரு பையன்களும் இருக்க, தேவிக்கோ, அங்கே சரவணன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதே மறந்துவிட்டது. அனைவரையும் பார்த்தபடி இருந்த கல்பனாவிற்கும் முகத்தில் புன்னகையே.   

“ஏய் பசங்களா… உங்க அக்கா வர்றான்னதும் தான் இங்க வர வழி தெரிஞ்சதா….” என்று வினவ,

“பாட்டி….” என்று ஓடி வந்து அவர் காலில் அனைவரும் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, “நல்லாருங்க…நல்லாருங்க… தேவி வரேன்னு சொன்னதும் தான் வர வழி தெரிஞ்சதா உங்களுக்கு… ஏன் உங்க அப்பா அம்மா எல்லாம் வரலை…” என்று பெரிய மனுசியாய் விசாரிக்க,

“அவங்களுக்கு லீவ் கிடைக்கலை பாட்டி…” என்று அனைவரும் ஒரேபோல சொல்ல,

“அதான… ஒருவீட்ல நாள் பேர் இருந்தா நாலு பெரும் வேலைக்கு போறது.. பரீட்சை லீவ்ல கூட பசங்களை ஏதாவது கிளாஸ்ல சேர்த்து விடுறது.. அறிவு வளர்த்துக்கனும் இல்லைன்னு சொல்லலை.. அதே நேரம் அன்பும் வளரனும்.. அடிக்கடி இல்லைன்னாலும் வருசத்துக்கு ஒருதடவையாவது இப்படி சித்தி, பெரியப்பா, மாமா அத்தைன்னு எல்லார் வீட்டுக்கு போய்ட்டு வரணும்.. அப்போதான் உறவு பலப்படும்…” என்று பெரிய மனுசியாய் தன் கருத்தை சொல்ல, அவர் சொல்வதும் சரி என்றே பட்டது.

உண்மையும் அது தானே. இப்போது யாருக்கு தான் யார் வீட்டுக்கு தான் போக நேரம் இருக்கிறது.. அதுவும் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை.இதில் உறவுகளை தேடி ஊருக்கு போகவெல்லாமா நேரம் இருக்கிறது.. இயந்திர கதியில் ஓடும் வாழ்வில், மனிதர்களும் இயந்திரங்களாய் மாறிக்கொண்டு தானே இருக்கிறோம்.

இதெல்லாம் உணர்ந்து தான் கல்பனா அப்படி சொன்னது.

“இனியென்ன பாட்டி ஒவ்வொரு வருசமும் நாங்க வருவோம்…” என்று பிள்ளைகள் சொல்ல,

“சரி சரி போங்க.. போய் எல்லாம் குளிச்சிட்டு வாங்க…” என்று அவர்களை அனுப்ப,

“பார்த்து எத்தனை நாள் ஆச்சு….” என்று அவர்களோடு பேசியபடி தேவியும் மாடி படியேற, போதாத குறைக்கு ராகுலும் அவர்களோடு செல்ல, சரவணன் ஒன்றுமே செய்யாமல் வெறுமெனே அவர்கள் போவதை பார்த்து நின்றிருந்தான். திடீரென்று அவனுமே தனித்து விடப்பட்டது போல் ஓர் உணர்வு.

பிருந்தாவிற்கு இனி வேலை சரியாய் இருக்கும். பிள்ளைகள் இத்தனை வந்திருக்க, அவர்களுக்கு பிடித்ததை எல்லாமே செய்யவேண்டுமே..

“பிருந்தா பசங்களுக்கு பிடிச்சதா பண்ண சொல்லு…” என்று கல்பனாவும் சொல்ல,

“சரிங்கத்தை..” என்று சொல்லி அவரும் நகர்ந்து விட, சரவணன் வந்ததில் இருந்து ஆடாமல் அசையாமல் நிற்பதை பார்த்த கல்பனா,

“என்ன சரவணா.. அப்படியே நிக்கிற.. போ.. நீயும் அவங்க கூட போய் சேர்ந்துக்க.. ரொம்ப நாள் ஆச்சு இப்படி வீடு கலகலப்பா இருந்து.. நீயும் ஒருத்தனா போயிட்ட இந்த ராகுலும் ஒருத்தனா போயிட்டான்.. இந்த பசங்க எல்லாம் வந்தது எப்படி சந்தோசமா இருக்கு.. எல்லாம் இந்த தேவி பொண்ணு வந்ததுனால.. ” என்று சரவணன் முதுகில் தட்ட,

“ஹா என்ன பாட்டி….” என்றான் என்னவோ அத்தனை நேரம் கனவில் மூழ்கி இருந்தவன் போல.

“சரியா போச்சு… அப்போ இத்தனை நேரம் நான் பேசினது எல்லாம் வேஸ்ட்டா.. போ டா நீயும் போய் அவங்க கூட பேசி பழகு.. என்ஜாய் பண்ணு…” என்று சொல்ல,

முகத்தை உர்ரென்று தூக்கி வைத்துகொண்டவன், “எனக்கு அவங்களை எல்லாம் யாருன்னு கூட தெரியாது….” என,

கல்பனாவோ ‘இதென்ன சின்னபுள்ளை தனமா…’ என்பது போல் பார்த்து, “தேவி கூடதான் உனக்கு யாருன்னு தெரியாது… அதுக்காக அவகூட பேசாம இருந்தியா என்ன?? முன்ன பின்ன சுத்தி சுத்தி பேசுறா.. என்ன டா படவா.. உன் கள்ளத்தனம் எல்லாம் தெரியாது நினைச்சியா… போ போ டா..” என்று மீண்டும் சொல்ல,

சரவணனுக்கு தானாய் போவதா என்ற ஒரு எண்ணம் முளைக்க, இந்த தேவி வேறு அப்படியே விட்டு போனது ஒருமாதிரி இருந்தது.

உடனே ‘நான் ஏன் போகணும்.. போ டி.. நீ போனா நானும் வரணுமா…’ என்று வீம்பும் பிறந்தது.

வீட்டிலிருந்து கிளம்பியது முதல் கோவில் சென்று பாலாஜி சன்னதியில்  இறைவன் முன் கண்கள் மூடி நின்று பிரார்த்தனை செய்து, பிரகாரத்தை சுற்றி வந்து என்று அனைத்திலுமே தேவி அவன் அருகில் தான் இருந்தாள். இருப்பது போல் இவனும் வைத்துகொண்டான்.

“ஓவரா பண்ணாத… சித்தி பாட்டி எல்லாம் என்ன நினைப்பாங்க….” என்று அவள் முணுமுணுத்ததற்கு கூட,

“அவங்களுக்கு இப்போ வர தெரியாதுன்னு நினைச்சியா என்ன??” என்று புருவம் உயர்த்தினான்.  

“அவங்களுக்கு தெரிஞ்சதோ தெரியலையோ.. பட் நம்ம சரியா இருக்கணும்…” என்று அவனோடு வாதிட்டவளை அவன் தனியே விடவேயில்லை. 

ஆனால் இப்படி அவள் சொந்தம் வரவும் தன்னை திரும்பி கூட பாராது அவள் செல்ல, ‘போ போ.. அவங்க எல்லாம் உன் சொந்தம்னா பின்ன நான் யாராம்…?? ’ என்று மனம் சுனங்க.. கல்பனா சொன்னதற்கு தலையை தலையை உருட்டிவிட்டு மேலே தன்னறைக்கு சென்றுவிட்டான்.

தேவிக்கோ தன் சித்தி மாமா பிள்ளைகளோடு குசலம் விசாரிக்கவே நேரம் சரியாய் இருந்தது. நிஜம் தான் இவர்களை எல்லாம் பார்த்து பேசி பல வருடங்கள் ஆகியது.

என்னதான் வாட்ஸ் அப்பிலும், பேஸ் புக்கிலும் ஹாய் ஹலோ சொல்லி, புகைப்படங்களை பகிர்ந்து அவ்வபோது அலைபேசியில் பேசிக்கொண்டாலும், நேரில் பார்த்து பேசி சிரிப்பது போல் வருமா. அதுவும் அவர்களுக்கு எல்லாம் தேவியின் மீது மிகுந்த ஒட்டுதல் இருக்கும் போது, நேரம் போனதே தெரியவில்லை.

“தேவிக்கா  செம அழகா ஆயிட்ட… பேசாம ஹீரோயின் சான்ஸ் கிடைச்சா போ…” என்று ஒருத்தி சொல்ல,

“பாரு பாரு பொறமை பாரு… அழகுன்னு வாய் தான் சொல்லுது..” என்று இன்னொருவன் வார, இப்படியே பேச்சு நீண்டது.

ராகுல் தான் திடீரென்று நினைவு வந்தவனாக  “தேவிக்கா மாமா எங்க…??” என்று வினவ,

அனைவரும் “மாமாவா…???!!!!!” என்ற கேள்வியோடு, ‘யாரது…??’ என்று கேட்காமல் மொத்தமாய் தேவியை பார்க்க,

“ஹேய் என்னங்கடா.. என்னை ஏன் பார்க்கறீங்க…” என்று கேட்கும் போதே அவளுக்கு லேசாய் இதழ்கள் துடிக்க. அவளது மாற்றம் அந்த இளசுகளுக்கு என்ன உணர்த்தியதோ மொத்தமாய் சேர்ந்து தேவியை தூக்கி சுத்தி,

“ஹே…!!!! எங்க தேவிக்காக்கு மாமா வந்தாச்சு.. எங்க அக்கா வசமா சிக்கிட்டா… மாமா…. நீங்க எங்க இருக்கீங்க……” என்று கத்திகொண்டே சுத்த,

“ஏய் ஏய்.. ஸ்டாப் ஸ்டாப்… இட்….” என்று அவர்களிடம் கெஞ்சி, விழுந்துவிடுவோமோ என்று அஞ்சி, “ப்ளீஸ் ப்ளீஸ்…” என்று ஒருவழியாய் கீழே இறங்க, “அக்கா சொல்லு சொல்லு.. மாமா பத்தி சொல்லு….”  என்று போட்டு அவளைப்  படுத்த,

“ஹய்யோ…!!!! மெல்ல… வெளிய யாருக்கும் கேட்க போகுது….” என்று எல்லாரையும் அடக்கியவளுக்கு மூச்சிரைத்தது.. நெஞ்சில் கை வைத்து “ஹப்பா…” என்று தன்னை ஆசுவாச படுத்தியவள், 

“நீங்க நினைக்கிற போல எல்லாம் இல்லை… ராகுல் மாமான்னு சொன்னது அவன் அத்தை மகன்.. Mr. சரவணனை… அவ்வளோதான்..” என்று  சாதாரணம் போல சொல் முயன்றாலும், அவனை முதல் முறை பார்த்ததெல்லாம் நினைவில் வர, தானாய் அகமும் முகமும் மலர்ந்தது.

“ஹேய் அக்கா… நாங்க நம்ப மாட்டோம்…. ராகுல் சொல்லு சொல்லு.. நீ சொல்லு.. அக்காவ பார்த்தாலே என்னவோ ஸ்பெஷலா தெரியலை..” என்று ராகுலை பிடித்து உலுக்க,

ராகுலோ இவர்களை எல்லாம் கண்ட குசியில், அதுவும் தனக்கே எல்லாம் தெரியும் என்பது போல் தன்னிடம் வேறு  அனைவரும் கேட்கவும், தனக்கு தெரிந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்தான்.

“சோ.. என்னவோ இருக்கு… ப்ளைட்லயே பார்த்திருக்கீங்க… ஆனா இல்லை சொல்றீங்க…” என்று தேவியை மீண்டும் விடாமல் கேள்வி கேட்க,

அதில் ஒருவனோ, “போலீஸ் மாப்பிளை… டான்சர் பொண்ணு பக்கா பேர்…” என்று புதிதாய் ஒன்றை அவிழ்த்து விட, அவர்கள் கிண்டல் செய்ய செய்ய, தேவிக்கு முகம் சூடேறி சிவப்பதை தடுக்கவே முடியவில்லை. இல்லை இல்லை என்று மறுத்தாலும், மனமோ ஆமாம் ஆமாம் என்று சொல்லி கூத்தாடியது…

சும்மாவா சொன்னார்கள் காதல் போதை என்று…

சரவணனுக்கு ஏனோ ஒரு மாதிரி இருக்க, தனக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு வந்தவன், இங்கும் அங்கும் உலாத்திக்கொண்டிருக்க, இரண்டு அறை தள்ளி, அவர்கள் போட்ட சத்தம் காதை கிழிந்தது. ஏற்கனவே தேவி இவனை பார்க்காமல் கூட போனாள் என்று உள்ளே பொறமை தீ எரிந்துகொண்டு இருக்க, போதாத குறைக்கு இப்படி சத்தம் வேறு போட இன்னும் எரிச்சல் கூடியது.

“இந்த ரசகுல்லா கொஞ்ச நேரம் முன்னாடி வர மாமா மாமான்னு இருந்தான்.. இப்போ அவனும் ஓடிட்டான்..” என்று முனங்கியவனுக்கு, போய் திட்டி விடுவோமா என்று கூட தோன்றியது.

“பிள்ளைகளா இது… பிசாசுங்க…. இவ்வளோ சத்தம் போடுதுங்க…” என்றபடி வேகமாய் அவ்வறை நோக்கி போக, அவன் போன வேகமோ ஒன்றில் இரண்டு பார்க்கும் தோரணையில் தான் இருந்தது.

சரியாய் அப்போது தான் ராகுல் தேவி சரவணன் பத்தி சொல்லிக்கொண்டு இருக்க, பேச்சு சுவாரசியத்தில் இவன் வந்து நின்றதை எல்லாம் யாரும் கவனிக்கவே இல்லை.

அடுத்து அனைவரும் தேவியை போட்டு படுத்திக்கொண்டு இருக்க, அவளது முகத்தில் தெரிந்த ஜொலிப்பும், கண்களில் தெரிந்த காதலும், அதை மறைக்க அவள் போராடுகையில், துடிக்கும் இதழ்களும் என்று மொத்தத்தில் தேவி காட்டிய பாவனையில் சரவணன் தன் கோவத்தை விடுத்து தன்னை மறந்து நின்றிருந்தான்.

எதேர்ச்சையாய் பின்னே திரும்பிய ராகுல், சரவணன் கையை கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்து நிற்பதை பார்த்தவன், “சரவணன் மாமா….” என்று சத்தமிட்டு அழைக்க, அவ்வளவு தான் அங்கே கப் சிப்.

வேண்டுமென்றே சரவணன் முகத்தை உர்ரென்று வைத்துகொண்டு, புருவத்தை வேறு லேசாய் தூக்கியபடி “என்ன நடக்குது இங்க… அவ்வளோ சவுண்ட்… நிம்மதியா ஒரு சாங் கேட்க முடியலை…” என்று அனைவரையும் ஒரு பார்வை பார்த்தபடி சொன்னவன்,

தேவியை பார்த்து,“அண்ட் யூ… இவங்க எல்லாரும் தான் சின்ன பசங்க… நீ… இவ்வளோ பெருசா வளர்ந்திருக்க… கொஞ்சம் கூட எப்படி பிகேவ் பண்ணனும் தெரியலை…” என்று பல்லை கடித்தபடி கேட்க,

அனைவருக்குமே சரவணன் கோவமாய் பேசுவது தோன்ற, தேவி மட்டும் இதழில் ஒரு புன்னகையை தவழ விட்டவள்,

“பிகேவ்… ஹ்ம்ம் எனக்கு தெரியலையே… எப்படி பிகேவ் பண்ணனும் போலீஸ்கார்…” என்று கண்களில் அபிநயம் காட்டி கேட்க, “மோகினி……” என்று கூறிக்கொண்டவன், வந்த சிரிப்பை அடக்கி லேசாய் அவள் தலையில் குட்ட,

அடுத்தது என்ன, அங்கே ஆரவராம் தான்.

“ஹே மாம்ஸ்……” என்று அனைவரும் அடுத்து அவனை தூக்கி சுத்த, ஹப்பா அந்த இடமே மகிழ்ச்சி அலை பரவி விரிந்தது.

“போதும் போதும்…” என்று சரவணனும் அவர்களிடம் தப்பி இறங்குவதற்குள் அவனுக்கு நிஜமாகவே போதும் போதும் என்று தான் ஆனது.

இத்தனை நேரம் இருந்த இறுக்கம் எங்கே போனது என்றே தெரியவில்லை சரவணனுக்கு. தேவியோடு தனியே நேரம் கழிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவனுக்கு, அவள் விட்டு போனதில் பொறாமை கொண்டு, எரிச்சலுற்றவனுக்கு,  இந்த கூட்டத்தில், மிக நன்றாகவே பொருந்தி போக முடிய, அவனுமே ஆவலாய் அவர்களோடு பழகினான்.

இடை இடையே அனைவரும் தேவியை சீண்ட, அவர்களோடு சேர்ந்து இவனும் அவளை வம்பிழுக்க, அவளது முறைப்பையும், சிரிப்பையும் ஒருங்கே கண்டவனுக்கு  ஹப்பா அத்தனை புத்துணர்ச்சியாய் இருந்தது.

தேவிக்குமே ஆச்சரியம் தான். புதிதாய் அனைவரையும் காண்கிறான், முதல் முறை வேறு, எப்படி பழகுவானோ என்று. ஆனால் ராகுலிடம் எப்படி இருக்கிறானோ அதுபோலவே மற்றவர்களோடும் இருக்க, தேவிக்கு இன்னும் இன்னும் அவனை பிடித்தது.

“அக்கா… எங்களுக்காக ஒரு டான்ஸ் ப்ளீஸ்.. ரொம்ப நாள் ஆச்சு… ப்ளீஸ்..” என்று அனைவரும் கெஞ்ச, தேவிக்கோ சரவணன் முன் ஆடுவதா என்று ஏகத்துக்கும் கூச்சமாய் போனது.

நான்கு வயதில் இருந்து பரதம் பழகியவள், எத்தனை மேடைகளை பார்த்திருக்கிறாள். எத்தனை பேர் முன் ஆடியிருக்கிறாள். அத்தனை ஏன் வெளிநாட்டில் கூட எத்தனையோ நடன நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறாள். அதுவும் இப்போது அவள் நடன பள்ளியே வைத்திருக்கிறாளே.அவளிடம் தான் பயில்வோர் எத்தனை பேர். அப்போதெல்லாம் சிறிதும் வராத தயக்கம் கூச்சம் இப்போது வந்தது.

“நோ நோ… என்னால முடியாது.. நோ நோ….” என்று தலையை உலுக்க,

“அக்கா ப்ளீஸ்… மாம்ஸ் சொல்லுங்க….” என்று அவனையும் கூட்டு சேர்க்க, அவனுக்கு நன்றாகே தெரிந்தது ஏன் அவள் முடியாது என்கிறாள் என்று.

‘ஆடேன்…’ என்பது போல் பார்க்க,

அவளோ “ஐ கான்ட்….” என்று லேசாய் வெக்கத்தை மறைத்து இதழசைத்தாள்.

“நிறைய வேலை இருக்கு டியர்ஸ்… கீழ சித்தி தனியா எல்லாம் பார்த்துட்டு இருப்பாங்க.. வாங்க எல்லாம் போய் ஹெல்ப் பண்ணலாம்…” என்று அனைவரையும் கிளப்ப, அவர்களோ சட்டமாய் அமர்ந்திருந்தனர். நீ ஆடினால் மட்டுமே அடுத்து எதுவும் என்று.

“மோகினி ஆடேன்….” என்று அவள் காதருகே கிசுகிசுக்க,

“சும்மா இரு சனு.. அவங்க தான் படுத்தறாங்கன்னா நீயுமா…” என,

“ஏன் நான் படுத்த கூடாதா…?” என்று மெல்ல அவள் கரம் பற்ற,

“ஹேய் என்ன இது… எல்லாம் இருக்காங்க….” என்று விழிகளை தேவி உருட்ட..

“எஸ் எஸ்.. எல்லாம் இருக்காங்க.. இல்லை என் முன்னாடி நீ தனியா ஆடனும்.. எது வசதி…” என்று புருவம் உயர்த்தி கேட்டான் அந்த காவல் காரன்.

‘தனியாகவா.. இவன் முன்னா.. ஐயோ முடியவே முடியாது…’ என்று தோன்ற, மனமோ இன்னும் சிணுங்கியது.

“அக்கா ப்ளீஸ்…..” என்று அனைவரும் கெஞ்ச,       

“இதென்ன பிடிவாதம்…. திஸ் இஸ் டூ பேட்…” என்று சிணுங்கிய படி எழுந்தாலும், ஆடுவதற்கு தயாராகவே எழுந்தாள் என்பது மிக நன்றாகவே புரிந்தது. 

தோளில் தவழ்ந்த துப்பட்டாவை எடுத்து இடுப்பில் கட்டியவள், விரித்து விட்டிருந்த கூந்தலை மொத்தமாய் சுருட்டி மேலேற்றி ஒரு கொண்டை போட்டு, முறையாய் இறை வணக்கம் வைத்தது, பின்

“சாங் ப்ளீஸ்….” என,

அவள் செய்யும் ஒவ்வொன்றையும் இமைக்க முடியாமல் பார்த்திருந்தான் சரவணன். அவள் ஆடுவதற்கு முன்னே அவன் மனம் ஆடியது. மெல்ல அனைத்து இளசுகளும் தங்களுக்குள் பேசி என்ன பாட்டு போடுவது என்று முடிவெடுக்க.

“கள்வரே கள்வரே….” என்ற பாடல் அந்த அறையை நிறைத்தது.. இது சத்தியாமாய் தேவி எதிர்பாராத பாடல்.. ஆனால் சரவணனோ,

‘டேய் எங்கடா இருந்தீங்க இத்தனை நாள்….’ என்று எண்ணிக்கொண்டு, “செம…” என்று கை தட்டினான்.

அவனை ஒரு பார்வை பார்த்தவள், முறைக்க முயன்றும் தோற்று, பின் தன் சகோக்களை பார்த்து, “இதெல்லாம் ஓவர்….” என்று இதழை சுருக்கி சொன்னாலும், அவளுள்ளும் ஒரு காதல் அலை பரவச் செய்து, ஆட செய்தது.  

கள்வரே கள்வரே

கள்வரே கள்வரே

கண்புகும் கள்வரே….

கைகொண்டு பாரீரோ

கண்கொண்டு சேரீரோ

கலைசொல்லி தாரீரோ….

உம்மை எண்ணி உம்மை எண்ணி

ஊமைக்கண்கள் தூங்காது…

பாடலுக்கு ஏற்ப, அபிநயம் பிடித்து, அழகாய் தேவி ஆட ஆட, சரவணனுக்கு தான் என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை. சத்தியமாய் அவனுக்கு மூச்சடைத்து. தேவியின் பார்வையோ அவனிடமே இருக்க, அவனையே தான் பார்த்தபடி ஆடினாள்.

பாடலின் இசைக்கேற்ப, தன்னை தானே சுழன்று கொண்டு நகர்ந்து வந்தவளை நோக்கி, சரவணின் கால்கள் நகர  அவளும் சுற்றி வர, இருவரும் ஒருவரில் ஒருவர் மோதி நிற்க சரியாய் இருந்தது..

தலைவா என் தலைவா

அகமறிவீரோ அருள் புரிவீரோ….   

என்று பின்னணி இசை ஒலிக்க, சரவணன் தேவி விழாமல் தாங்கி பிடித்திருக்க, மோதிய வேகத்தில் தேவியின் கொண்டை முடி அவிழ்ந்து விழ, அது அவன் முகத்தில் மோதி இன்னும் மோட்ச நிலை கொடுக்க,அவனும் அறியாது, தேவியை தாங்கியிருந்த கைகள் அவளை மேலே தூக்க, அடுத்த நொடி அங்கே கரகோஷமும், விசில் சத்தமும் காதை கிழித்து.

அதன் பின்னே என்னவென்று சுயம் உணர தேவியோ எங்கே விழுந்துவிடுவேனோ என்ற பயத்திலேயே அவன் தோள்களை பற்ற, இன்னும் சத்தம் அங்கே கூடியது..

தேவிக்கோ வெக்கம் ஒருபக்கம், கூச்சம் ஒருபக்கம்.. நானா இப்படி என்ற கேள்வியும் ஆச்சரியமும் ஒருப்பக்கம், போதாத குறைக்கு சரவணின் பார்வை ஒருப்பக்கம் என்று அவளை போட்டு மொத்தமாய் தாக்க,

“என்ன இது….” என்று அவளுக்கே கேட்காத குரலில் பேசினாள்.

“ஹ்ம்ம்… உன்னோட பெர்பார்மன்ஸ்க்கு என்னோட பைனல் டச்…” என்று சொல்லி கண்ணடிக்க,

இதோ இப்போதும் கூட அந்த உணர்வு இருவருக்குமே உணர முடிய, இன்னும் இறுக்கமாய் சரவணன் தேவியின் கரத்தினை பற்றிகொண்டான். வெண்ணிற நுரைகளோடு கடல் அலைகள் அவர்கள் கால் நினைக்க, அவ்விருவர் மனதில் காதல் அலை.. 

 

Advertisement