Advertisement

துளி – 21

தேவிக்கு விமானம் ஏறும் பொழுதே மனம் ஒருநிலையில் இல்லை… இப்படியே கிளம்பி வீட்டிற்கு சென்றுவிடலாமா என்றுகூட தோன்றியது.. ஆனால் முடியாதே..

அழைத்திருப்பது கோதாவரி அல்லவா..

ஆம் கோதாவரி தான் அழைத்தார்.. வந்த விஷயத்தை கையோடு முடித்தே ஊர் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவர்க்கு…

‘நான் எவ்வளோ சொல்லியும் தேவி வர மாட்டேன் சொல்லிட்டா…’ என,

‘என் பையனும் அப்படிதான் சொல்லிட்டான்…’ என்று கோதாவரி சொல்ல,

“அப்போ மாத்தி மாத்தி கூப்பிடுங்க வந்து தானே ஆகணும்…” என்று கல்பனா சொல்ல, இது சரியான யோசனையாகவே பட்டது அனைவருக்கும்.

சரவணனிடம் “ஒன் டைம் எங்களுக்காக இங்க வர முடியுமா…” என்று தியாகுவும் மஞ்சுவும் கேட்க, முதலில் ரொம்பவே தயங்கியவன்,

“தே.. தேவி…???” என்று கேட்க,

“நாங்க எவ்வளோ சொல்லியும் அவ முடியாது சொல்லிட்டா…” என,

‘அதானே எப்பவுமே பிடிவாதம்…’ என்று எண்ணியவன், தானும் இதே பிடிவாதம் தான் பிடிக்கிறோம் என்பதை உணரவில்லை.

“வர முடியுமா…??” என்று மீண்டும் மஞ்சு கேட்க,

“ஹா… யா வர்றேன் ஆன்ட்டி… நைட் டிக்கெட் இருக்கா பார்க்கிறேன்.. இல்லை எப்படி முடியுதோ அப்படி வர்றேன்… ” என்று சொல்ல, அவர்களும் சரி என்று அலைபேசியை வைத்துவிட,

அடுத்து கோதாவரி தேவிக்கு அழைத்தார்…. புது எண்ணாக இருக்கவும், சிறிதே யோசனையோடு தேவி “ஹலோ…” சொல்ல,

“ஹலோ தேவி… நான் கோதாவரி பேசுறேன்…” என்றதும், தேவிக்கு பலத்த அதிர்ச்சி.. சட்டென்று பதில் சொல்ல வராமல் அப்படியே சிலையென அமர்ந்திருந்தவள்,

“தேவி… ஹலோ… தேவி…” என்று மீண்டும் மீண்டும் கோதாவரி அழைக்க,

“ஹா… சொ… சொல்லுங்க ஆன்ட்டி…” என்றவளுக்கு இன்னும் தெளிவு வரவில்லை போல..

“நான் ஒன்னு சொல்வேன்.. மறுக்காம செய்யணும்,..” என்று சொல்ல,

‘ஐயோ.. இன்னும் என்ன சொல்ல போறாங்க… ஒரேதா சனுவ விட்டு விலக சொல்லிடுவாங்களோ…’ என்று அஞ்சியவள்,

“ம்ம் சொல்.. சொல்லுங்க ஆன்ட்டி…” என்று மிடறு விழுங்கினாள்.

“அது ஒன்னுமில்லம்மா.. கொஞ்சம் கோவா வரைக்கும் வர முடியுமா…” என்றழைக்க,

“என்.. என்ன ????” என்று தேவி அதிர்ந்து தான் கேட்டால்..

தான் வர முடியாது என்று சொன்னதன் முக்கிய காரணமே கோதாவரி தான்.. ஆனால் அவரே அழைக்கும் போது என்ன சொல்வது என்று புரியவில்லை. பதில் சொல்லாமல் அப்படியே லைனில் இருக்க,

“இப்போ இப்படி கூப்பிடுறது தப்புதான்.. ஆனா என்ன செய்றது.. பாட்டி ரொம்ப வருத்தப்படுறாங்க.. போன முறை என்னால தானே நீ கிளம்பி போன.. சோ இப்போ நான் கூப்பிட்டா தான் சரியா இருக்கும் சொல்றாங்க… வர முடியுமா…” என்று கேட்டவரின் குரலிலேயே சம்மதம் என்று சொல்லு என்ற செய்தி இருக்க,

“அது.. அது வந்து ஆன்ட்டி….” என்று தேவி தயங்க,

“அதுசரி நான் பெத்த பிள்ளையே என் பேச்சு கேட்கலை.. வரவே முடியாது சொல்லிட்டான்.. நீயாவது வருவியான்னு கூப்பிடத்தான் போன் பண்ணேன்…” என,

‘என்ன சனு வரலையா…’ என்று யோசித்தவள், இரண்டொரு நொடியில்,

“டிக்கெட் இருக்கா பார்க்கிறேன் ஆன்ட்டி…” என்றுவிட, அவரும் பாதி கிணறு தாண்டிய மகிழ்வில் தான் அலைபேசியை துண்டித்தார்.

“ரெண்டு பேருமே டிக்கெட் பார்க்கிறாங்களா… நீங்க வேணா பாருங்க, போன தடவ மாதிரி ரெண்டு பெரும் ஒண்ணா தான் வருவாங்க…” என்று கல்பனா சொல்ல,

“பாட்டி அப்போ நான் டிரைவர் கூட போய் பிக்கப் பண்ணிட்டு வரவா…” என்று ராகுல் சொல்ல,

“ஹா ஹா.. அவங்க கிளம்பட்டும் டா முதல்ல… நீயே போ…” என்று கல்பனா சொல்ல, அதன் பிறகே அனைவரும் அங்கே கொஞ்சம் நிம்மதியாய் இருக்க முடிந்தது.

இவர்கள் இப்படி பேசி சிறிது நேரத்திலேயே சரவணன் அசோக் குமாருக்கு  அழைத்தான்,

“என்ன பிரச்சனை டாட்… தேவியோட பேரன்ட்ஸ் என்னை வர சொல்றாங்க.. எதுவும் பிராப்ளமா…??” என்று வினவ,

“அது.. அதெல்லாம் ஒண்ணுமில்ல டா… உங்க பாட்டி தான் ரொம்ப வருதப்பட்டாங்க.. தேவி வேற வரலை.. சோ அதுவும் கஷ்டம்… எங்க பொண்ணுன்னால தானே பிரச்சனை ஆச்சுன்னு சங்கடப்பட்டு தேவியோட அப்பா அம்மா உன்னை கூப்பிட்டாங்க…” என்று அழகாய் பூசி மொழுக, சரவணனுக்கு இன்னும் கூட இதெல்லாம் நம்பும் படி இல்லை.

“நிஜமா…?? வேற எதுவும்.. எதை பத்தியும் பேசலையே…???”

“டேய்… உனக்கு வர்ற இஷ்டம் இருந்தா வா.. இல்லை அங்கவே இரு.. என்னை போட்டு கேள்வி கேட்காத…” என்று கடிய,

“சரி சரி.. வர்றேன்…” என்று சரவணன் கோவா கிளம்ப தயாரானான்.. 

‘இந்த சனுக்கு ஏன் இவ்வளோ பிடிவாதம்.. எப்பவும் அவன் செய்றது மட்டும் தான் சரி… ஆன்ட்டி கூப்பிட்ட கிளம்பி போக வேண்டியது தானே.. அவ்வளோ பெரிய போலீஸ் ஆகிட்டானா…’ என்று சரவணனுக்கு அர்ச்சனைகள் செய்தபடியே, அடுத்த பிளைட்டில் டிக்கெட் இருக்கிறதா என்று பார்க்க, அவள் அதிர்ஷ்டம் நிறைய இடங்கள் காலியாகவே இருந்தன… 

கையில் கிடைத்த உடைகளை எடுத்து பெட்டியில் அடுக்கி வைத்துவிட்டு, தேவி மஞ்சுவிற்கு அழைத்தாள்..

“ம்மா.. என்ன நடக்குது அங்க… திடீர்னு ஆன்ட்டி போன் பண்ணி கூப்பிடுறாங்க…” என்று கேட்க,

“எதுவும் நடக்கல… நீதானே வாயே திறக்க கூடாது சொல்லி அனுப்பின.. நான் எதுவும் பேசலை.. பாட்டி தான் நீயும் வரலை, சரவணனும் வரலைன்னு ரொம்ப பீல் பண்ணாங்க.. அதான் கோதாவரி, என்னால தானே லாஸ்ட் டைம் தேவி கிளம்பி போகும்படி ஆச்சு சோ நானே கூப்பிடுறேன்னு உன்னை கூப்பிட்டாங்க… ” என்று மஞ்சுவும் அழகாய் தேவியை சமாளிக்க,

“ம்ம்.. அவ்வளோதானா… வேறெதுவும் இல்லையே…??” என்று தேவி சந்தேகமாய் கேட்க,

“ம்ம்ச் நீ உங்கப்பா கிட்ட பேசு…” என்று மஞ்சு தியாகுவிடம் அலைபேசியை கொடுத்துவிட்டார்.

“அப்பா.. என்ன நடக்குது அங்க…???” என்று மீண்டும் அதே கேள்வியே கேட்க,

“என்ன தேவிம்மா.. எத்தனை தடவை எத்தனை பேர் சொல்றது… உனக்கு வர இஷ்டம் இருந்தா வா… இல்லை விடு…” என்று அவரும் சொல்ல,

“ஹ்ம்ம் வர்றேன்… ஈவ்னிங் பிளைட் இருக்கு…” என்று சொல்லி வைத்துவிட்டாள்.

இருவருமே கிளம்பிவிட்டார்களே தவிர, இருவருக்குமே தன் இணையும் வரும் என்று தெரியவில்லை. வர மாட்டார்கள் என்றே நம்பினர்.. அந்த நம்பிக்கையே இருவரையும் கோவா கிளம்ப வைக்க, இதோ தேவி விமானத்தில் ஏறி அமர போக, அவள் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் யாரோ அமர்ந்திருந்தனர்.

முகம் தெரியவில்லை.. அன்றைய ஆங்கில மேகஸின் ஒன்றும் முகத்தை மறைக்க, அவள் அமர வேண்டிய இருக்கையிலோ மற்றொரு மேகஸின்..

“எக்ஸ்கியூஸ் மீ.. வில் யூ ப்ளீஸ் டேக் திஸ்…” என்று தேவி கொஞ்சம் தன்மையாகவே கேட்க,

“ஓ சாரி…” என்று சொல்லியபடி முகத்தை மறைத்த புத்தகத்தை விளக்கினான் சரவணன்.

இருவருக்குமே.. அதிர்ச்சி.. ஆச்சர்யம்.. ஆனந்தம்… பின்னே அப்படியே வால்பிடியாய் கொஞ்சம் கோவம்..

“ஹே.. நீ…!!!!” என்று இருவருமே அதிர்ந்து விளிக்க, தேவியோ அமரும் எண்ணத்தையே மறந்திருந்தாள்..

இருவரது பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்திருக்க, சரவணன் அமர்ந்த நிலையில் அப்படியே இருக்க, தேவி நின்ற நிலையில் அப்படியே இருக்க, விமான பணிப்பெண் தான் வந்து

“மேம் ப்ளீஸ் டேக் யூவர் சீட்…” என்று சொல்லி செல்ல..

“ஹ.. சா.. சாரி..” என்று சொல்லியபடி தேவி அமர, சரவணன் அப்போதும் தன் பார்வையை அவள் மீதிருந்து விளக்கவில்லை.

கோவா கிளம்பும் வரை, மனம் எப்படியோ தான் இருந்தது அவனுக்கு. ஆனால் கிளம்பி விமானம் ஏறி அமர்ந்த பிறகோ, மனம் முதல் முறை தேவியை கண்டதை எல்லாம் நினைவில் கொண்டு, படுத்த, என்ன முயன்றும் அவனால் அதில் இருந்து வெளி வர முடியவில்லை.

‘அவ தான் வரலைல்ல… வர மாட்டா.. எப்படி வருவா…’ என்று தனக்கு தானே சொல்லியபடி தான் கையில் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கினான்..

அவளுக்கோ, மனம் இரண்டு விதமாய் தவித்தது.. சரவணன் வந்தால் நன்றாய் இருக்கும் என்றும், வேண்டாம் வர வேண்டாம்.. என்றும் இரண்டுவிதமாய் தவிக்க, இப்போதோ நேரில் கண்டதும் அடுத்து என்ன என்று தெரியவில்லை.

முதன் முதலில் யாரென்றே தெரியாத பொழுது, அவ்வளவு பேச முடிந்தது.. சட்டேன்று காதல் கொள்ள முடிந்தது.. ஆனால் இப்போது, இயல்பாய் பார்த்து ஒரு புன்னகை சிந்த கூட முடியவில்லை..

ஏனோ மனதில் ஓர் பாரம்… எத்தனை நேரம் அமைதியாய் இருக்க முடியும்…??? அருகில் இருப்பது என்ன யாரோவா??? இல்லையே…

எனக்கு எல்லாம் நீயே என்று சொல்லும் உறவு… சொன்ன உறவு…   

பார்வையை வேறெங்கோ வைத்து “நீ வரலை சொன்னாங்க…” என்று இருவருமே ஒருசேர சொல்ல, அடுத்த நொடி இருவரின் கண்களும் சந்தித்துக்கொள்ள,

“யார் சொன்னா…???!!” என்ற கேள்வியும் ஆச்சரியமாய் ஒன்று போலவே வர, சட்டேன்று இருவர் இதழ்களிலும் புன்னகை..      

“நீ வரவே முடியாதுன்னு சொன்னியாம்..” என்று தேவி இழுக்க,

“நீயும் தான் முடியவே முடியாதுன்னு சொன்னியாம்…” என்று சரவணனும் அதே போலவே பேசிக்கொள்ள,

“யார் சொன்னா…??” என்று லேசாய் தேவி புருவம் உயர்த்தி கேட்க,

“உனக்கு யார் சொன்னா..??”என்று சரவணனும் அது போலவே கேட்க,

“உன் அம்மா….” என்று இருவருமே மீண்டும் ஒன்று போலவே பதில் சொல்ல, மீண்டும் ஓர் ஆச்சர்ய புன்னகை..

“வாட் அம்மாவா????!!!!!” என்று சரவணனுக்கு தான் பெருத்த அதிர்ச்சி…

 மஞ்சு பேசியதில் கூட அத்தனை அதிர்வு இல்லை.. ஆனால் கோதாவரி தேவிக்கு அழைத்து பேசியிருப்பது.. நிஜமாகவே நம்ப முடியவில்லை..

எப்படி எப்படி… எப்படி இது என்றே தோன்றியது…???

“எஸ் சனு… ஆன்ட்டி தான் கூப்பிட்டு பேசினாங்க…. பாட்டி ரொம்ப பீல் பண்ணாங்களாம்… சோ என்னால தானே நீ அப்போ போன… இப்போ நானே கூப்பிடுறேன் சொன்னாங்க…”

“ஹே என்ன சொல்ற… நிஜமா மாம் இப்படியே பேசினாங்களா…??” என,

“எஸ்…” என்று தேவி உறுதியாய் சொல்ல,

“உன் அம்மாவும் இப்படி தான் பேசினாங்க… ஆனா கொஞ்சம் வேற போல… லாஸ்ட் டைம் தேவினால கொஞ்சம் பிராப்ளம்.. சோ இந்த டைம் எங்களுக்காக வான்னு…” என்று சொல்ல,

“ஓ…” என்று தேவி சொல்ல,லேசாய் அவள் முகம் மாறியது..

‘இந்த அம்மாவ ஒன்னும் பண்ண கூடாது.. எதுவும் கூடாதுன்னு தானே சொல்லி அனுப்பினேன்….’ என்று அவள் நினைக்க, சரவணன் பார்வையோ தேவி முகத்திலேயே நின்றது..

“என்ன ???” என்று அவள் கேட்க,

“இல்ல பிரஸ்ட் டைம் நான் அந்தப்பக்கம் உட்கார்ந்து இருந்தேனா சோ இந்த ஆங்கிள்ள உன்னை பார்க்கல…” என்று பழைய சரவணனாய் மாறி சொல்ல,

தேவியின் கண்களோ இன்னும் விரிந்து “ஆரம்பிச்சுட்டியா…” என்று தலை சரித்து கேட்க,

“என்ன ஆரம்பிக்க,… என்ன முடிக்க…??? ஆரம்பிச்ச வேகத்துல எல்லாம் சட்டுன்னு தான் இவ்வளோ குழப்பம் பிரச்சனை….” என,

“ஹே.. சனு…” என்று அவளும் லேசாய் வருத்தம் கொள்ள,

“ம்ம்ச்….” என்று மட்டும் சொல்லி கண்களை மூடிக்கொண்டான்..

தேவிக்கு மேற்கொண்டு என்ன சொல்லவென்று தெரியவில்லை..தற்சமயம் கொஞ்சம் அமைதியாய் இருப்பதே நல்லது என்று தோன்றியது,.. இத்தனை காலம் பொறுத்தாகிவிட்டது.. இனியும் கொஞ்சம் பொறுத்தால் நல்லது தான் நடக்கும்..

வாழ்வு முழுவதும் இருக்கிறது… இந்த இடைப்பட்ட காலத்தில் இழந்ததை எல்லாம் வரும் காலத்தில் சேர்த்து வைத்து காதலிப்போம் என்று அவள் எண்ணியிருக்க. லேசாய் திரும்பி சரவணனை காண, அவனும் அப்போது அவளை தான் பார்த்துகொண்டு இருந்தான்.

வெகுநாளைக்கு பிறகான அருகாமை… அதுவும் முதல் சந்திப்பு போலவே விமான பயணம்.. அருகருகே இருக்கை… தங்களை சுத்தி என்ன குழப்பம் இருந்தாலும், அதெல்லாம் இப்போது சற்றே தூர நிறுத்தி, இந்த தருணத்தை ரசித்திடவே இருவரின் காதல் நெஞ்சமும் நினைக்க,

சரவணன் தேவியை தான் பார்க்க, அவளும் பார்க்க, மீண்டும் “என்ன சனு..” என்றாள்..

“நீ என்னை ஏமாத்திட்ட….” என்றான் சரவணன் பார்வையை விளக்காமல், மாற்றாமல்.

“என்.. என்ன..??? நான் என்ன ஏமாத்தினேன்…” என்று கேட்டவளுக்கு இதயம் வேகமாய் அடித்தது… எவ்வளவு பெரிய வார்த்தை இது…

‘ஏமாத்திட்ட’ எத்தனை பெரிய வார்த்தை இது… என்பது போல் பார்க்க..

அவனோ அசராமல் “நீ வருவ தெரியாது.. ஆனா வந்தாலும் இப்படி வந்திருக்க கூடாது…” என்று அவளை கட்டியே அவளிடம் சொல்ல,

“என்ன சொல்ற…” என்று தேவி லேசாய் புரியாத பாவம் காட்ட,

“எங்க போச்சு…. உன்னோட அந்த சாயம் போன ஜீன்ஸ்… கிரீன் கலர் ஐ லைனர்.. மெரூன் கலர் டார்க் லிப்ஸ்டிக்… ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்.. ஸ்டைலா கலட்டி வச்சிருந்த ஓவர் கோட்…  தொடில்லாத உன் காது… எங்க போச்சு இதெல்லாம்….” என்று கேட்க,

அவன் குரலே அவன் மனதில் எத்தனை காதல் என்பதை சொல்ல, தேவிக்கு உள்ளே ஓர் இதம் பரவியது…

“எப்பவும் அப்படியே இருக்க முடியுமா…??” என்று கேட்டவளின் இதழ்களில் ஓர் மந்தகாச புன்னகை…

“அப்படி ஒரு போஸ்ல தானே நான் விழுந்தேன்…” என,

“ஹ்ம்ம் பட் அது நான் இல்லை… இப்படி இருக்க தேவி தான் நான்…”

“ஹ்ம்ம் நீ தேவி இல்லை மோகினி….” என்று காதல் மொழி பேச தொடங்கினான்.

“மறுபடியும் ஆரம்பிச்சுட்ட….”

“முடிக்கவே மனசில்ல… இது ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை.. அப்படியே போகணும் போல இருக்கு… எதுவும் வேணாம்.. எல்லாம் வேணாம்.. இப்படியே போகணும்.. அது போதும்….” என்று சரவணன் சொல்ல,

அவன் என்ன சொல்கிறான் என்பது புரிந்தாலும், தேவிக்கு லேசாய் ஒரு கேலி எட்டி பார்க்க,

“ஹ்ம்ம் நீ பைலட்டா இருந்து.. உன்னோட ஒரே பேசஞ்சரா நான் இருந்தா அப்படி போகலாம்.. ஆனா கொஞ்சம் உன் கண்ணை திறந்து பார்.. நம்மளை சுத்தி இத்தனை பேசஞ்சர்ஸ் இருக்காங்க… அப்படியே போனா அவங்க எல்லாம் எங்க போறதாம்…” என்று கிண்டல் செய்ய,

அவனும் சிரித்துக்கொண்டான்..

சட்டென்று மனதில் ஒரு எண்ணம், எல்லாம் சரியானது போல் ஒரு நிம்மதி.. அதுவே இன்னும் இதமாய் இருக்க, சரவணன் தேவியின் கையை பிடித்துகொண்டான். அவளும் அவன் கைகளை இறுக்கிக்கொள்ள, இருவருக்குமே அந்த நேரம் மனதில் இருப்பது அவர்கள் காதல் மட்டுமே..

“ம்ம் மோகினி…. அன்னிக்கு பங்க்சன் முடிஞ்சதுமே இருந்து உன்கிட்ட பேசிட்டு போகணும் நினைச்சேன்.. ஆனா முடியல…”

“ஹ்ம்ம் அடுத்து போன் பண்ணிருக்கலாம்.. இல்ல… ஸ்கூல் வந்திருக்கலாம்…..”

“வந்திருக்கலாம்… ஆனா வேலை கொஞ்சம்….” என்று இழுக்க,

“மனசில்ல சொல்லு…” என்று தேவி சொல்ல,

“ஹா நீயும் தான் பேசலை…” என்று இவனும் ஆரம்பிக்க,

“ஆமாமா பேச போன் பண்ணா அப்படியே நீயும் நல்லபடியா பேசிட்ட.. என்னை திட்டிட்டே தான் இருந்த…” என்று அவளும் சற்றே குரலில் காட்டம் காட்ட,

“ம்ம் திட்டினேன்.. ஆனா எதுமே மனசில இருந்து இல்லை.. அன்னிக்கு உன் டான்ஸ் செமையா இருந்தது.. ஆர்கனைசர் கிட்ட சிடி கேட்டிருக்கேன்…” என,

“என்கிட்டே கேட்டா நானே கொடுத்திட்டு போறேன்…” என்று தேவி சொல்ல,

“உன்கிட்ட லைவ் தான் கேட்பேன்.. ரிகார்டட் இல்லை…” என்று சொல்ல..

அவன் கைகளை இன்னும் இறுக பற்றி, அவன் தோள்களில் சாய்ந்து, “லைவ் தானே.. உனக்கு இல்லாததா..??? ஹ்ம்ம் சனு.. இப்போ இந்த செக்கன்ட் எவ்வளோ நிம்மதியா இருக்கு தெரியுமா…?? ஆன்ட்டி மட்டும் ஓகே சொல்லிட்டா போதும்… எல்லாமே சரியாகிடும்…” என்று கண்களை மூடி சொல்ல, அடுத்து அவனிடம் இருந்து பதிலே இல்லை.

அடுத்து சரவணன் ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு, ஏமாற்றமே மிஞ்ச,

“என்ன சனு…” என்று அவன் முகத்தை அவன், தோள்களில் சாய்ந்தபடியே நிமிர்ந்து பார்க்க, அவனோ அவளை ஒருமாதிரி பார்த்துகொண்டிருந்தான்.. இன்னதென்று புரியாத ஒரு பார்வை..

“என்ன சனு…” என்று மீண்டும் குழப்பமாய் கேட்க,

“சோ.. என் அம்மா சொன்னாதான் எதுவும் இல்லையா….??” என்று கேட்டவனின் குரலில் துளியும் கொஞ்ச நேரம் முன்னிருந்த இலக்கம் இல்லை…

“சனு….!!!!” என்று அவள் எதோ சொல்ல வர,

“போதும்…. கொஞ்ச நேரத்தில நான் என்னவோ நினைச்சிட்டேன்… ஆனா நீ அப்போ இருந்த போலவே தான் இப்போவும்… என் அம்மா சொல்லி தான் என்னை லவ் பண்ணியா..??

அம்மா இப்பவும் முடியாதுன்னு சொன்னா அப்படியே திரும்பவும் போயிடுவ… அப்போ எனக்காகன்னு எதுவுமே இல்லை அப்படிதான… எனக்காக என்னை லவ் பண்ணலை… அப்படித்தான…” என்று கேட்டவனின் கண்களில் அத்தனை சீற்றம்..

தேவி தான் சொன்னதை இப்படி ஒரு கோணத்தில் இவன் எடுத்துகொள்வான் என்று சிறிதும் நினைக்கவில்லை.. நான் என்ன சொன்னேன்.. இவன் என்ன சொல்கிறான்.. அதுவும் இப்படி பேசுகிறான் என்று அதிர்ந்து பார்க்க,

“என்ன அப்படி பார்க்கிற… அம்மா சரி சொன்னா என்கிட்டே பழகுவ… முடியாது சொன்னா போயிடுவா.. அப்போ நான் யாரு…?? எனக்குன்னு என்ன இடம் இருக்கு….?? சொல்லு…. அப்போ எனக்குன்னு எதுவுமே இல்லை அப்படித்தான…” என்று தேவியின் கரங்களில் அழுத்தம் கொடுத்து பிடிக்க,

“போதும் சனு…” என்றாள் அடிக்குரலில்..

“என்ன பேசிட்டே போற நீ… உனக்கு எப்படி இத்தனை நாள் வலிச்சதோ அதே போல தான் எனக்கும்… நீ இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி எப்படி ஹேப்பியா பீல் பண்ணியோ அதே போல தான் நானும்..

நான் உன்கிட்ட அன்னிக்கு பேசிட்டு இருக்கேன் இதேபோல தான் அன்னிக்கும் பேசி போனை கட் பண்ண.. லுக் உனக்கு ஒன்னு தெரியுமா, ஆன்ட்டி நானும் அன்னிக்கு ஒரு பங்க்சன்ல மீட் பண்ணோம்.. பேசினோம்..

அதை சொல்லத்தான் அன்னிக்கு பேச்சை ஆரம்பிச்சேன் ஆனா நீ பேசவே விடலை.. இப்போவும் இப்படி சொல்ற.. நீ என்ன நினைக்கிற சனு??? எனக்கு சத்தியமா புரியலை நீ என்ன நினைக்கிறன்னு… அப்போ இத்தனை நாள் ஆகி கூட உனக்கு நான் பண்ணது தப்பில்லைன்னு ஏத்துக்க முடியலை இல்லையா..” என்று கேட்டவள் அவனை விட்டு தள்ளி விலகி, தன் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement