Advertisement

  துளி – 20

“என்னால சத்தியமா வர முடியாதும்மா… நீங்க வேணா போங்க….”

எத்தனை சொல்லியும் தேவி கோவா வர சம்மதிக்கவே இல்லை. கல்பனாவோடு பேசிய பிறகு மஞ்சு நிறைய யோசித்தார். முதலில் அவருக்கும் அங்கே போகும் எண்ணம் இல்லை.

சிறிது நேரத்திலேயே பிருந்தா அழைத்தார்…

“என்ன பிருந்தா அத்தை வர சொல்றாங்க…” என,

“ஆமாக்கா.. என்கிட்டே இப்போதான் சொன்னாங்க… அண்ணி அசோக் அண்ணா எல்லாம் வர்றாங்க போல.. அத்தைக்கு எழுபத்தி அஞ்சாவது பிறந்தநாள் வருது.. சோ நீங்க எல்லாம் வந்தா சந்தோசப் பாடுவாங்க…” என,

“ஓ.. ஆனா… அவங்க வரும் போது நாங்க எப்படி…?? முன்ன போலன்னா கூட பரவாயில்ல.. ஆனா இப்போ…” என்று மஞ்சு தயங்க,

“நானும் அதான் கா யோசிச்சேன்… ஆனா அத்தை அண்ணிகிட்ட பேசியிருப்பாங்க போல.. ஹ்ம்ம் எதோ பேசணும்னு தான் வர சொல்றாங்க…” என்க..

“ம்ம் சரி.. உங்க மாமா வரவும் பேசிட்டு சொல்றேன்.. ஆனா தேவி தான் என்ன சொல்வா தெரியலை… சரவணன் எப்படி வர்றது மாதிரி ஐடியா இருக்கா…???”

“இல்லைக்கா தெரியலை.. அண்ணிகிட்ட மட்டும் தான் பேசினாங்க… எப்படியும் சரவணனையும் கூட்டிட்டு தான் வருவாங்க…”

“ஓ… சரி பிருந்தா.. நான் நாளைக்கு சொல்றேன்…” என்றவர் அடுத்து தன் கணவர் வர காத்திருந்தார்.

தியாகும் வரவும் சொல்ல, அவருக்கும் லேசாய் தயக்கம் இருந்தது தான்.

“என்னங்க போகனுமா…” என

“ஹ்ம்ம் நானும் அதான் யோசிக்கிறேன்.. முதல்லயும் இப்படி தான் கூப்பிட்டாங்க.. அப்போவே லேட் பண்ணாம போயிருந்தா கூட இவ்வளோ பிரச்சனை வந்திருக்காதுன்னு தோணுது… இப்பவும் கூப்பிடுறாங்க… பெரியவங்க வேற…” என,

“ஆனா தேவி…” என்று மஞ்சு தயங்க,

“பேசி பார்ப்போம்…” என்ற தியாகு மகள் வரவும் அவர் தான் முதலில் ஆரம்பித்தார்.

“தேவிம்மா… நெக்ஸ்ட் வீக் கல்பனா பாட்டிக்கு எழுபத்தி அஞ்சாவது பிறந்தாநாள்…” என்று சொல்ல,

“அட.. சூப்பர்ப்பா… உங்களுக்கு எப்படி தெரியும்… சித்தி எதுவும் கால் பண்ணாங்களா…” என்று தன் அம்மா முகம் பார்க்க, அவரோ,

“பாட்டியே போன் பண்ணாங்க தேவி… நெக்ஸ்ட் உன் சித்தி பண்ணா…” என்று சொல்ல,

“ஓ…” என்றவளுக்கு என்னவோ விஷயம் என்று புரிந்தது..

“நம்மளை இன்வைட் பண்ணிருக்காங்க…”

“ம்ம் சரிம்மா நீங்க அப்பா போய்ட்டு வாங்க…”

“நீயும் கட்டாயம் வரணும்… பாட்டி ஆசை படுறாங்க டா…” என்று மஞ்சு சொன்னதற்கு தான் தேவி அப்படி ஒரேடியாய் மறுத்தது.

எப்படி முடியும் அவளால்… கோவாவில் இருந்து அவள் திரும்பி வந்தது சாதாரண சூழலா.. பிறருக்கு வேண்டுமானால் சாதாரனமாய் தோன்றலாம்.. ஆனால் தேவிக்கு… ஹப்பாடி சத்தியமாய் முடியவே முடியாது என்றே தோன்றியது..

அதுவும் எப்படியும் அங்கே கோதாவரி, அசோக் குமார், சரவணன் என அனைவரும் வருவர்.. மீண்டும் அனைவரும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். அனைவருக்குமே நெருப்பில் நிற்பது போல் ஒரு உறுத்தல் இருக்கும்.

யாராவது ஒரு வார்த்தை விட்டால் கூட அது இன்னும் பெரும் பிளவை உண்டு செய்யும் என்றெல்லாம் தோன்ற, அதை விடவும், சரவணன்… அவனை அங்கே அதுவும் அவர்கள் காதல் கொண்ட இடத்தில் சந்திப்பது முடியாது என்றே தொன்றியாது.

பார்த்த முதல் முறையே அவளால் அவனிடம் இருந்து விலக முடியவில்லை, அதுவும் இத்தனை நடந்த பிறகு, இப்போது மீண்டும் சந்திக்க நேர்ந்தால் சத்தியமாய் தன்னால் இது முடியாது என்றே தோன்றியது…

“ப்ளீஸ் ம்மா.. பாட்டி சொன்னதுக்காக நீங்க போங்க… ப்ளீஸ்…” என்றவள் தன்னறைக்கு சென்றுவிட்டாள்.

“என்னங்க…” என்று கவலையாய் மஞ்சு தியாகு முகம் பார்க்க,

“ஹ்ம்ம் விடு.. இன்னும் நாள் இருக்கு… பேசிக்கலாம்.. அப்படி அவ வர இஷ்டம் இல்லைன்னா நம்ம போகலாம்… காலையில் போய்ட்டு நைட் பிளைட்க்கு திரும்பிடலாம்…” என்றவருக்கு அரைகுறை மனதோடு தலையசைத்தார் மஞ்சு.

இங்கே இப்படி என்றால், அங்கே சரவணன் வீட்டிலோ, இதற்கும் மேல்..

தேவியாவது முடியாது என்ற பதிலை சொன்னால்.. சரவணன் வாயே திறக்கவில்லை. முதலில் அவனுக்கு விஷயம் இன்னதென்று தெரியாது. அசோக் குமார் சொன்னது போல் கோதாவரியை சாமாதானம் செய்ய கிளம்பியவன், பிறகு என்ன தோன்றியதோ,

கோதாவரி சில நேரம் தனியே இருக்கட்டும் என்று இருந்துவிட்டான்.. அதன் பின் மதியமே வீடு வர, கோதாவரி மட்டும் வீட்டில் இருக்க, அவர் சோபாவில் அமர்ந்திருக்க, சரவணனுக்கு என்ன தோன்றியதோ, நேராய் சென்று அவரின் கால்களுக்கு அடியில் அமர,

“டேய் என்ன பண்ற…” என்று கோதா எழ முயற்சிக்க,

“உட்காருங்கம்மா…” என்றவனின் குரலில் ஒன்றும் சொல்லாமல் அப்படியே அமர்ந்தார்.

“சாரி ம்மா நான் உங்களை அப்படி பேசியிருக்க கூடாது…” என,

“ம்ம்…” என்றுமட்டும் தான் கோதாவரி சொன்னார்.. வேறென்ன சொல்ல என்று தெரியவில்லை.. வேறாதாவது பேசி அது மகனை இன்னும் பாதிக்குமோ என்று நினைக்க தோன்றியது..

“என்னம்மா… கோவமா…??” என,

“இ.. இல்லடா… கோவமெல்லாம் இல்லை… விடு.. நடந்தது எல்லாம் நடந்திடுச்சு… தப்பு என் மேல தான்… ஆனா நிஜமா எதுவுமே நான் மனசில வச்சு பண்ணல.. உன் அம்மா அவ்வளோ ஒன்னும் கிரிமினல் எல்லாம் இல்லை டா…”  என்று சொல்லும் போதே லேசாய் புன்னகை எட்டிப்பார்க்க, அவனுக்குமே சட்டென்று ஒரு இலகு தன்மை வந்துவிட,

“அதானே எங்கம்மா கிரிமினலா இருந்திருந்தா நான் எப்படி போலீஸ் ஆகியிருக்க முடியும்..” என்று சரவணனும் அதற்கு ஏற்றார் போல் பேச,

“ஹ்ம்ம் இப்படி பேசி பேசி தான் அந்த தேவி பொண்ண லவ் பண்ண வச்சியா….??” என்ற கேள்வியில் சரவணன்,

“மாம்…” என்று அதிர்ந்து கோதாவரி முகம் நோக்க,

“என்ன டா சொல்லு… இப்படி தான் அந்த பொண்ணுக்கிட்டயும்  பேசினியா..” என,

“ம்ம்” என்று தலையசைத்தவன் முகத்தில் அசடு வழிந்தது..

சரவணன் முகத்தையே ஒரு நொடி ஆழ்ந்து நோக்கிய கோதாவரி, “பாட்டி கிட்ட பேசினேன் டா…” என

“ஓ.. என்ன சொன்னாங்க…??ஹவ் இஸ் ஷி…?? நான் பேசியே நாள் ஆச்சு…” என்று கேட்க,

“நல்லாருக்காங்க.. எனக்கு தான் கொஞ்சம் மனசு சரியில்ல.. அதான் பேசினேன்…” என்று கோதாவரி சொல்லும் போதே சரவணனுக்கு புரிந்தது என்ன பேசியிருப்பார்கள் என்று.

“எதுவும் சொன்னாங்களா பாட்டி…” என்று கேட்கும் போதே அவன் குரல் உள்ளே போய் விட,

“இல்லைடா நம்மை ஊருக்கு வர சொன்னாங்க.. அடுத்த வாரம், அவங்களோட எழுபத்தி அஞ்சாவது பிறந்தநாள் வருது…” என்று சொல்ல,

“ம்ம்…” என்றவன் ஒன்றும் சொல்லாமல் எழ,

“என்ன சரவணா போகலாமா…” என்று கேட்ட கோதாவரியின் முகத்தில் அத்தனை ஆவல்..

மகன் சரி என்று சொல்ல வேண்டுமே என்ற எண்ணம் வெகுவாக தலைதூக்க, இவன் என்ன சொல்வானோ என்ற எண்ணமும் தோன்ற, சரவணன் முகம் பார்க்க, அவனோ ஒன்றுமே சொல்ல வில்லை.

கோதாவரியை ஒரு பார்வை பார்த்தவன் ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டான்.மனம் சட்டென்று ஆறு மாதங்கள் முன்பு சென்றுவிட்டது. கிளம்பும் போது அத்தனை மகிழ்ச்சியாய் எல்லாம் அவன் கிளம்பவில்லை, ஆனால் விமானம் ஏறியதுமே அவன் மனநிலை அப்படியே தலைகீழாய் மாறிவிட்டது..

மனமோ தேவியிடம் சென்றுவிட, அடுத்து வந்த நான்கு நாட்களும் மகிழ்ச்சி வானில் சிறகடித்து தான் பறந்தான்.ஆனால் அடுத்தடுத்து நிகழ்ந்தவை எல்லாம் அத்தனை களிப்பை கொடுக்கவில்லை.. அந்த நினைவுகளும், வலிகளும் அப்படியே இருக்க, மீண்டும் கோவா பயணம் என்றதும் அவன் மனம் தாளவில்லை.

என்னதான் திடமான ஆண் மகன் என்றாலும் அவனும் மனிதன் தானே..

சரவணன் ஒன்றுமே சொல்லாமல் செல்வதை பார்த்த கோதாவரி, அப்படியே அமர்ந்திருந்தார்.. தன்னால் நடந்தது தானே அனைத்தும், ஆக தான் தான் சரி செய்ய வேண்டும் என்று தோன்ற, எப்படியாவது சரவணனை கோவா அழைத்து சென்றுவிட வேண்டும் என்று தோன்றியது.

கோதாவரிக்கு மஞ்சுவோடும், தேவியோடு பேச வேண்டும் என்றுதான் சில நாட்களாய் தோன்றுகிறது… ஆனலும் எதுவோ ஒரு தயக்கம்.. இத்தனை வருடம் இலகுவாய் பழகவில்லை.. இன்று மட்டும் போய் திடீரென்று போய் நின்றால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.

இதேது கோவா என்றால், அங்கே கல்பனா, புண்ணியகோடி, பிருந்தா என அனைவரும் இருப்பர்.. ஏனோ மனம் அங்கே போனால் அனைத்தும் சரியாகிவிடும் என்று நிரம்பவே நம்பியது.

அசோக் குமார் வரவும் அவரிடமும் இதையே கூற,

“ம்ம்…” என்று யோசித்தவர்,

“சரவணன் என்ன சொன்னான்…” என்று தான் கேட்டார்..

“அவன் என்ன சொல்வான்.. முடியாதுன்னு தான் சொன்னான்…” என,

“சரி… பார்த்துப்போம்…” என்று அவர் சொல்ல,

“என்ன பார்க்க.. இப்படியே இதை எத்தனை நாளைக்கு விட முடியும்… அந்த தேவி பொண்ண அன்னிக்கு ரிசப்சன் வீட்ல பார்த்தேன்.. எனக்கே சங்கடமா போச்சு… இவ்வளோ நடந்தும், அவ்வளோ பாந்தமா வந்து பேசினா… அதை சொல்ல தான் காலைல சரவணன் கிட்ட ஆரம்பிச்சேன், ஆனா அவன் என்னை பேசவே விடல…” என்று சொல்ல,

“என்ன தேவிய பார்த்து பேசினியா…” என்று அசோக் குமார் லேசாய் ஆச்சர்யமாய் கேட்க,

“ம்ம்… பிளான் பண்ணி எல்லாம் பார்க்கல… எதார்ச்சையா தான் மீட் பண்ண வேண்டியதா இருந்தது…” என்று கோதாவரி சொல்லும் போதே, இதை இத்தனை நாள் சொல்லாததற்கு  மன்னிக்கவும் என்ற பாவனையும் இருந்தது..

அசோக் குமார் அதனை கண்டுகொண்டாலும், “என்ன பேசின..” என்று கேட்க,

“பொதுவா பேசினோம்.. அங்க வச்சு என்ன பேச முடியும்…?? அதான் அம்மா அங்க வர சொல்றாங்க… மஞ்சு வீட்லையும் கூப்பிட்டு இருப்பாங்க போல… இவன் வரமாட்டேன் சொல்றான்…” என்றார் ஆதங்கமாய்..

கோதாவரிக்கு எப்படியாவது அனைத்தும் சரியாகிவிட வேண்டும் என்ற எண்ணம்..

“சரி… இதை எல்லாம் என்கிட்டே சொல்ற.. அவன்கிட்ட சொல்ல வேண்டியது தானே…”

“நான் இதை பத்தி பேசினா அவன் எங்க பேச விடுறான்…”

“அவன் கஷ்டம் அவனுக்கு.. சரி விடு பார்த்துக்கலாம்… நமக்கு டிக்கெட் போடுறேன்.. சரவணன் கிட்ட நான் பேசுறேன்…” என்றவர் மகனிடம் பேசி பார்க்க, அவனோ திடமாய் மறுத்தான்.

“ப்ளீஸ் டாட்… நான் அங்க வந்து.. அகைன் ஏதாவது ஒரு பிராப்ளம் ஆச்சுன்னா… வேண்டவே வேணாம்… நீங்க போங்க….” என,

“தேவி பேமிலியும் தான் வர்றாங்க…” என,

“தேவி வர்றாளா??” என்று கேட்டவன் பார்வையில், அவள் கண்டிப்பாய்  வர மாட்டாள் என்ற செய்தி தெரிந்தது.

“அது எனக்கு தெரியாது… ஆனா தேவி அப்பா அம்மா வர்றாங்க… பாட்டி உங்க விஷயம் பேச தான் கூப்பிட்டு இருக்காங்க… உங்கம்மாவே இதை பேச கிளம்பும் போது… நீ ஏன் டா சம்மதிக்க மாட்ற..??”

“பிரஸ்ட் டைம் பாட்டி இந்த பேச்சு ஆரம்பிக்கும் போதே என்ன நடந்தது பார்த்தீங்கள்ள டாட்.. நல்ல வேலை அப்போ தேவியோட பேரன்ட்ஸ் இல்லை.. இப்போ அவங்களும் வர்றாங்க… இனப் டாட்… பேசணும் நினைக்கிறவங்க இங்கவே பேசலாம் தானே..

இதோ இதே ஊர்ல தானே அவங்க வீடு இருக்கு.. அதுக்கு ஏன் கோவா போகணும்… ஒன் டைம் நடந்த பிராப்ளம்கே இதோ இப்போ வர தேவி என்கிட்ட சரியாய் பேசுறது இல்லை… நீங்க கிளம்புங்க…” என்று ஒரேதாய் சொல்லிவிட,

வேறு வழியே இல்லாமல், அடுத்த மூன்று நாட்களில் கோதாவரி அசோக் குமார் கோவா கிளம்ப, அங்கு தேவி வீட்டிலோ,

“மாம் நீங்க போறது சித்திக்காக, பாட்டிக்காக.. அதை மட்டும் மனசில வைங்க… எந்த ரீசன்காகவும் என் விஷயமா பேசாதீங்க..” என்று தேவி சொல்ல,

“அப்போ எப்போதான் பேசுறது…” என்று கேட்ட மஞ்சுவிற்கு சத்தியாமா கோவம் தான் வந்தது..

என்னதான் இந்த பிள்ளைகள் நினைத்துகொண்டு இருக்கிறார்கள் என்று தோன்றியது… காதல் என்றதும் சம்மதிக்கவேண்டும், இல்லையா எங்களுக்குள் பிரச்சனை என்றதும் நாங்கள் கண்டுகொள்ள கூடாது… இதென்ன விளையாட்டா என்று தோன்றியது…

“அப்படி எல்லாம் இருக்க முடியாது… உனக்கு வேணா உன் லைப் விளையாட்டா இருக்கலாம்.. ஆனா எனக்கு என் பொண்ணு வாழ்க்கை முக்கியம்…. உனக்கு வர இஷ்டம் இல்லை சொல்லிட்ட.. அதோட விடு…” என்று பேச்சை முடிக்க,

“அப்பா…!!!!” என்று தேவி தியாகு முகம் நோக்க,

“எதுக்கும் ஒரு லிமிட்ஸ் இருக்கு டா… பேரன்ட்ஸ் நாங்க எல்லாம் தெரிஞ்சும் எத்தனை நாள் அமைதியா இருக்க…” என்று கேட்க,

“ஆனா.. ச.. சனு… நான் வந்தது சரின்னு ஒத்துக்கவே இல்லை. அவன் அம்மாக்காக தானே வந்தேன்.. அது புரியலை அவனுக்கு… அப்படி இருக்கும் போது என்ன பேசி என்ன செய்ய…” என்று தன் பக்க நியாயத்தை சொல்ல,

“ஹ்ம்ம் உனக்கு உன் கருத்து.. சரவணனுக்கும் அப்படிதான்,, அதுபோல பெத்தவங்களுக்கு எங்களுக்குன்னு ஒரு கருத்து இருக்கும்ல… இத்தனை நாள் உங்க பேச்சுக்கு மரியாதை கொடுத்து சும்மா இருந்தோம்.. இப்போ எங்க பேச்சுக்கு மரியாதை கொடுங்க…” என்றவர் மனைவி முகம் பார்க்க,

மஞ்சுவோ “இனி நான் நீ சொல்வதை கேட்கவே மாட்டேன்…” என்பது போல் தேவியை பார்த்தார்..

கல்பனாவின் பிறந்தநாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்க, கோதாவரி அசோக் குமார் இரண்டு நாட்களுக்கு முன்பே சென்றுவிட, மஞ்சு தியாகு இருவரும் முதல் நாள் இரவே சென்றனர்.

கல்பனாவிற்கு தான் அழைத்ததை மதித்து அனைவரும் வந்தது பெரும் சந்தோசமாய் இருந்தாலும், சிறியவர்கள் வராது போனதில் கவலையே..

மஞ்சு வந்ததும், “தேவி எப்படி இருக்கா…??” என,

“நல்லா இருக்கா அத்தை….” என்று சொல்லும் போதே மஞ்சுவின் பார்வை கோதாவரியை தொட்டு மீள, கோதாவரியோ வெகுவாய் அந்த நிமிடம் தவித்து விட்டார்.

இத்தனை வருடமாய் தான் தான் பெரியவள் என்பது போல் காட்டி ஒவ்வொரு முறையும் மஞ்சுவை எடக்காய் பேசியிருக்கிறார். ஆனால் இன்றோ, தான் அன்று தேவியை பேசியது நினைவில் வர, அது தெரிந்தும் மஞ்சு இன்றுவரை கோதாவரியை ஒன்றும் சொல்லாது இருப்பதும் என்று அனைத்தும் சேர்த்து கோதாவரிக்கு மிகவும் சங்கடமாய் போனது.

பிருந்தாவிற்கு கூட மனதில் ஓர் சங்கடம் தான். இந்த கோதாவரி மீண்டும் ஏதாவது மஞ்சுவிடம் பேசிவிட்டால், என்ன செய்வது என்று.. தயக்கமாய் இருவர் முகமும் பார்த்தபடி நிற்க, சற்று தள்ளி புண்ணியகோடி, அசோக்குமார், தியாகு மூவரும் சாதாரணம் போலவே நலம் விசாரித்து பேசிக்கொண்டனர்.

ஆண்கள் இயல்பில் இப்படி பேசிவிடுகிறார்கள்.. ஆனால் பெண்கள் அப்படி செய்ய முடிவதில்லையே. மஞ்சுவிற்குமே மனதில் தயக்கம் தான். ஆனாலும் மகளின் வாழ்வு கண் முன்னே நிற்க, கோதாவரியிடம் சென்று, “எப்படி இருக்கீங்க…??” என, அவர் கேட்ட கேள்வியில், கோதாவரி ரொம்பவே தடுமாறிவிட்டார்.

“அ.. நா… நான் நல்லாத்தான் இருக்கேன்… நீ… நீ எப்படி மஞ்சு இருக்க..” என,

“ம்ம் நானும் நல்ல இருக்கேன்…” என்று மஞ்சு சொல்ல, அடுத்து இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை.. என்ன பேசுவது என்ற தயக்கம்.. இத்தனை வருடங்களில் இயல்பாய் ஒருமுறை கூட பேசியதில்லை.. இப்போது நினைத்தாலும் முடியவில்லை.  

கோதாவரி அமைதியாய் அமர்ந்திருக்க, கல்பனா மஞ்சுவிடம்,

“நல்ல பொண்ணு மஞ்சு, தேவி… அவ இங்க இருக்கும் போது அவ்வளோ சந்தோசமா இருந்தது..ம்ம்ம் சரி அதெல்லாம் விடு… அவளுக்கு மாப்பிள்ளை எதுவும் பார்க்கிறயா..?? வரன் வருதா…???” என்று கேட்க, அவரின் இக்கேள்வி அங்கிருந்த அனைவருக்குமே அதிர்ச்சி தான்..

கோதாவரியோ “என்ன அம்மா திடீர்னு இப்படி மாத்தி பேசுறாங்க.. சரவணனுக்கு பேசி முடிப்பாங்க பார்த்தா இப்படி கேட்கிறாங்க…??” என்பது போல் பார்க்க,

மஞ்சுவோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறித்தான் போனார். வரன்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது.. ஆனால் வரும் வரன்களிடம் என் மகள் ஒருவனை காதலிக்கிறாள்.. அதில் கொஞ்சம் பிரச்சனை.. என்று சொல்ல முடியுமா என்ன..??

“அ.. அத்தை.. நீ.. நீங்க என்ன கேட்கிறீங்க…??” என்று பிருந்தா தயங்கி கேட்க, மஞ்சுவும் அதுபோலவே கல்பனா முகம் பார்க்க,

“அதில்லம்மா… என்னென்னவோ நடந்து போச்சு.. ஆனா அதுக்காக அப்படியே விட முடியுமா.. நம்ம பசங்களுக்கு நம்மைத்தானே நல்ல வாழ்கை அமைச்சு கொடுக்க முடியும்… இந்த சரவணனும் தேவியும் பேசிக்கிறது கூட இல்லை போல…” என,

மஞ்சுவோ “இல்லத்தை அது…” என்று எதோ சொல்ல வர,

“பழசை எல்லாம் விடு மஞ்சு… கசப்பானதை எல்லாம் நினைக்கவே கூடாதும்மா.. நல்ல வரன் பார்த்து முடிச்ச பின்ன நம்ம பிள்ளைங்க சந்தோசமா தான் இருப்பாங்க… ஆரம்பத்துல எல்லாம் அப்படி கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்.. ஆனா இதெல்லாம் ஊர் உலகத்துல நடக்காததா..” என்று கல்பனா சொல்ல, பெண்கள் பக்கம் பேச்சு கொஞ்சம் சீரியசாய் செல்லவும் ஆண்களும் என்னவென்று காண,

“இப்.. இப்போதைக்கு கல்யாணம் பத்தின பேச்சே வேணாம் சொல்லிட்டா அத்தை…” என்று மஞ்சு சொல்ல,

“சின்ன பிள்ளைங்கம்மா.. அப்படிதான் சொல்வாங்க.. ஆனா நம்ம பொறுமையா எடுத்து சொன்னா கேட்டுப்பாங்க.. லேட் பண்ணாத.. நல்ல வரன் வந்தா முடிச்சிடு…” என்று கல்பனா பேசி முடிக்கவில்லை, 

“ம்மா… நான் உங்ககிட்ட போன்ல என்ன சொன்னேன்… நீங்க என்ன மாத்தி பேசிட்டு இருக்கீங்க… சரவணன் தேவி அப்பபோ பேசிக்கிறாங்க.. நான் என் பையனுக்கு தேவிய பேசணும்னு வந்தா, நீங்க என்ன வேற வரன் வருதான்னு கேட்டிட்டு இருக்கீங்க….” என்று கோதாவரி படபடவென்று இதுநாள் வரை தன் மனதில் இருந்ததை பட்டென்று சொல்லிவிட்டார்.

கல்பனாவிற்கு இப்போது தான் மனம் நிம்மதியானது.. தான் இத்தனை நேரம் மாற்றி பேசியது வீண் போகவில்லை என்று தோன்றியது. கோதாவரி வாயில் இருந்தே விஷயத்தை வர வைக்க எண்ணினார். அதுவும் சரியாய் வந்துவிட, கல்பனா மட்டுமில்லை, இதை கேட்டுகொண்டிருந்த அனைவர்க்கும் மகிழ்ச்சியே.

ஆனாலும் ஒன்றும் வெளிக்காட்டாமல்,

“என்.. என்ன கோதா சொல்ற… நீ தான் அன்னிக்கு முடியாது சொன்ன…” என்று கல்பனா கேட்க,

“அம்மா… அன்னிக்கு சொன்னேன்… ஆனா இப்போ சொல்றேன்…” என்று ஆரம்பித்தவர், “விடுங்க நான் நேராவே கேட்கிறேன்…

“மஞ்சு என் பையனுக்கு உன் பொண்ண கொடுக்க சம்மதமா…” என்று கேட்டுவிட, மஞ்சுவோ திகைத்தே விட்டார். சத்தியமாய் கோதாவரியிடம் இருந்து இப்படி ஒன்றை அவர் எதிர்பார்க்கவில்லை.

மஞ்சுவின் கண்கள் தியாகுவை தொட்டு மீள, அவரும் சம்மதமாய் தலையசைக்க, பின் மஞ்சுவும் சம்மதம் என்பது போல் தலையசைக்க,

“ஹ்ம்ம்.. உன் பொண்ணு உன் வீட்ல இருக்கிறதை விட, எங்க வீட்ல ரொம்பவே சந்தோசமா இருப்பா.. என் பையன் இதுக்கு முன்ன இருந்ததை விட இனிமே இன்னும் ரொம்ப சந்தோசமா இருப்பான்..” என்ற கோதாவரி,

“என்னம்மா.. நான் சொல்றது சரிதானே…” என,

“நீங்க சொல்றது எல்லாம் சரிதான்.. ஆனா சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் என்ன சொல்வாங்களோ தெரியாதே…” என்று கேட்க,

அப்போது தான் அனைவரும் தேவி சரவணன் இருவரும் இதுவரைக்கு வாய் திறக்காமல் இருப்பது நினைவு வந்தது…     

 

 

 

 

 

 

 

Advertisement