Advertisement

துளி – 2

‘சரவணன்….. மாமாவா… யாருடா அது… ஒருவேளை அந்த மோகினி தான் குரல் மாத்தி பேசுறாளோ…’ எண்ணியபடி திரும்ப, சரவணன் கண் முன்னே நிற்பவனோ, ஒரு பன்னிரண்டு வயது சிறுவன். வாயில் வைத்து அடைக்க முடியாமல், ஒரு சிக்கன் பர்கரை திணித்தபடி நின்றிருந்தான்.

‘யாரு டா இந்த பப்ளிமாஸ்…’ என்பதுபோல் பார்க்க,

“மாமா.. என்னை தெரியலையா.. இட்ஸ் மீ ராகுல்.. உங்க மாமா புண்ணியகோடி பெத்த ஒரே பையன்…” என்று தன்னை தானே அறிமுகம் செய்துகொண்ட விதமே சரவணனுக்கு சிரிப்பை கொடுக்க, வெகு சிரமப்பட்டே அதை அடக்கினான். 

‘ஆமால்ல… மாமாக்கு கல்யாணமாகி பத்து வருஷம் கழிச்சு தான் குழந்தைன்னு தெரியும்.. ஆனா இப்படி ஒரு பப்ளிமாஸ்ன்னு தெரியாம போச்சே..’ என்று ராகுலை பார்த்து சிரித்தபடி நெருங்கியவனின் பார்வை கண்டு,

“சரவணன் மாமா என்னை தெரியலையா…???” என்று நிஜமாகவே பாவமாய் கேட்டு முழித்தான் ராகுல்.

“ஹே ரசகுல்லா.. உன்னை மறப்பேனா..?? பார்த்து நாளாச்சுல்ல அதான்…” என்று அதை இதை கூறி சமாளித்து, அவன் முதுகில் தட்ட,

“மாமா இன்னும் நீங்க இங்க பேரை மறக்கலையா…???” என்று ராகுல் வினவ, என்னவோ சரவணனுக்கு ராகுலின் தோற்றம் பெரியதாய் இருந்தாலும், பேச்சிலும், பாவனையிலும் இன்னும் குழந்தை தனம் இருப்பது பிடித்தது.

பதில் கூறாமல் சிரிக்க, ராகுல் ஒருவழியாய் அவன் கையில் வைத்திருந்ததை உண்டு முடித்து, போகலாமா என கேட்க, மீண்டும் ஒருமுறை எங்காவது அவள் இருக்கிறாளா என்று தன் கண்களால் தேடிவிட்டே நகர்ந்தான் சரவணன்.

“மாமா.. நீங்களும் தேவிக்காவும் ஒரே பிளைட்தான்.. ஆனா தேவிக்கா வந்து ஒன் ஹவர் ஆச்சு.. நீங்க ஏன் இவ்வளோ லேட்..??” என்று காரில் ஏறியதில் இருந்து மூன்றாவது முறையாக இந்த கேள்வியை கேட்டுவிட்டான் ராகுல்.

முதலில் எதோ யோசனையில் இருந்தவன் பின், “யாருடா அது தேவிகா…??” என்று வினவ,

“ஐயோ மாமா… தேவிகா இல்லை.. தேவிக்கா.. தேவி அக்கா.. என்னோட பெரியம்மா பொண்ணு…” என்று தலையிலடித்தபடி ராகுல் சொல்ல,

“ஓ…” என்று சரவணன் சொல்ல, மீண்டும் ஏன் தாமதம் என்ற கேள்விக்கு வந்தான் சிறியவன்.

‘டேய் குண்டா….’ என்று பல்லை கடித்த சரவணன், “அது… என்னோட பிரண்ட் ஒருத்தனை பார்த்தேன்டா ரசகுல்லா. அதான் பேசிட்டே இருந்ததுல நேரம் போனது தெரியலை. ஆமா நீயாவா என்னை பிக் பண்ண வந்த..??” என்று பேச்சை மாற்ற,

“எஸ் எஸ்.. நீங்க வர லேட் ஆகவும் டிரைவர் கூட என்னை அப்பா போக சொன்னார்…” என்றவன் காரில் ஏறியதில் இருந்து இரண்டாவது சிப்ஸ் பொட்டலத்தை காலி செய்திருந்தான்.

அவனையே பார்த்தபடி இருந்த சரவணனின் மனமோ தேவியை நினைத்தது.

“அட்லீஸ்ட் கோவால எங்க ஸ்டே பண்றன்னாது கேட்டு இருக்கணும். மிஸ் பண்ணிட்டேன்…” என்று தோன்ற,

“நோ நோ… எனக்கு இப்படி ஒரு பீல் குடுத்தது அவ தான்.. எக்காரணம் கொண்டு மிஸ் பண்ண மாட்டேன்.. எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு….” என்று நினைக்கும் பொழுதே,

‘எப்படி.. உனக்கு தான் அவ பேர் கூட தெரியாதே…??’ என்று அவனது அறிவு எட்டிப்பார்க்க, மனம் லேசாய் சுனங்கித்தான் போனது அவனுக்கு.

‘என்னடா சரவணா செய்ய போற…???’ என்று யோசிக்க,

“மாமா நீங்க பிளைட்ல தேவிக்காவ பார்க்கலையா???” என்று மீண்டும் தேவி புராணம் படிக்க ஆரம்பித்தான் ராகுல்.

‘இருக்கிறதுல்ல இது வேறயா… ஏ தேவி… யாரு டி நீ?? வந்ததுல இருந்து உன் பேரை சொல்லியே என் உயிரை வாங்குறான்…’ என்று மானசீமாய் அவளை திட்டியவன்,

“இல்லையே ராகுல்.. உனக்கு இப்படி ஒரு அக்கா இருக்கிறதே இப்போ நீ சொல்லி தான் தெரியும்…” என,

“ஓ… அக்காவும் இப்போதான் பர்ஸ்ட் டைம் எங்க பார்ட்டிக்கு வர்றாங்க… வீட்ல போய் இன்ட்ரோ தர்றேன்…” என்று தலையை ஆட்டியபடி சொல்ல,

‘ஹ்ம்ம் நான் யார பார்க்கணும்னு நினைக்கிறேன்.. இவன் யாரையோ இன்ட்ரோ தர்றேன்னு சொல்றானே.. எல்லாம் என் நேரம்…’ என்று நினைத்தபடி சிரித்துவைத்தான் சரவணன்.

அக்கால கல் கட்டிடம், வெளிநாட்டவர் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் கட்டிய பங்களா போல.. அதை இக்காலத்திற்கு ஏற்றவகையில் புதுப்பித்திருந்தார்கள்.

போதாத குறைக்கு பார்ட்டிக்கென்று அலங்கரம் இப்போதே ஆரம்பித்திருந்தது. கார் விட்டு இறங்கியதுமே சரவணனுக்கு லேசாய் பழைய நினைவுகள் எட்டி பார்த்தது.

இரண்டொரு முறை இங்கு வந்திருக்கிறான். சிறு வயதில். ஒரு முறை அவன் தாத்தா இறந்த பொழுது வந்தான். அதுவே அவனுக்கு இறுதியாய் நினைவில் இருந்தது.  ராகுல் எதோ பேசிக்கொண்டே வர, உள்ளே நுழைந்தவனை,

“ஹே…. சரவணா… வெல்கம் வெல்கம் யங் மென்…” என்று  சிரித்தபடியே வேகமாய் வந்து கட்டிக்கொண்டார் புண்ணியகோடி.

“மாமா…” என்று சொல்வதற்குள் மூச்சு முட்டி போனது சரவணனுக்கு. முட்டாதா பின்னே சும்மாவா புண்ணியகோடி ராகுலை விட மூன்று மடங்கு இருந்தார்.  பல வருடம் கழித்துவரும் தன் தங்கை மகனை கண்டதும் மகிழ்ச்சியில் இறுக்கி அணைக்க, ஐயோ என்று சரவணன் முழிக்க,

“போதும் போதும்.. வந்ததுமே இப்படி பண்ணா, பயந்து ஓடிர போறான்…” என்று சிரித்தபடி,

“வா சரவணா.. முதல்ல என்னோட வாழ்த்துக்கள்.. ஆசை பட்டது போலவே போலீஸ் ஆகிட்ட…” என்று இயல்பாய் பேசிய பிருந்தாவை கண்டு லேசான அதிர்ச்சி தான். காரணம் அவர் தோற்றம்.. அப்பாவிற்கும் மகனுக்கும் நேர்மார். 

இயல்பான பேச்சும், உள்ளார்ந்த சிரிப்புமாய் வரவேற்றவரை பார்த்து அவனும் சிரிக்க, “என்ன சரவணா என்னை அடையாளம் தெரியுதா…” என பிருந்தா கேட்க,

“அத்தை அன்னிக்கு பார்த்தது போலவே இன்னிக்கும் இருக்கீங்களே… தெரியாம போகுமா…” என்று அவனும் பதிலுக்கு சொல்ல,

‘பார்த்தீங்களா…’ என்பதுபோல தன் கணவரை பிருந்தா பார்த்து இல்லாத காலரை தூக்கி விட,

“சரி சரி.. நானும் என் பையனும் வயித்துக்கு வஞ்சகம் செய்யாத ஆட்கள்.. உடனே என்னை கேலியா பார்த்திடனுமா..” என்று சமாளித்தார் புண்ணியகோடி.

“ம்மா.. தேவிக்கா எங்க?? மாமாக்கு இன்ட்ரோ குடுக்கணும்…”

“அவ பாட்டி கூட பேசிட்டு இருக்கா. சரவணா முதல்ல போய் கொஞ்சம் பிரெஷ் ஆகிட்டு வந்திடேன்.. யு ஆர் லுக்கிங் டல்.. தென் பாட்டியை பார்க்க போகலாம்…” என்று பிருந்தா சொல்ல,

“ராகுல் மேல லெப்ட் சைட் ரூமுக்கு கூட்டிட்டு போ…” என்று புண்ணியகோடியும் சொல்ல,

“சரி…” என்று சொல்லி இருவரும் மேலே செல்ல,

“நல்லவேளை உங்க தங்கச்சியும், என் அக்காவும் வரலை… இல்லாட்டி இந்த டைமும் கண்டிப்பா எதாவது சண்டை தான் வரும்…” என்று பிருந்தா சொல்லவும்,

“ம்ம்ச்.. என்ன செய்ய… நம்ம ஒண்ணு நினைக்கிறோம்.. நடந்தா இனிமேலாவது நல்லது.. கோதாவரி கொஞ்சம் விட்டுக்கொடுத்து போகணும். ஆனா அரம்பத்தில இருந்தே அப்படியே இருந்திட்டா..” என்று பொதுவாய் புண்ணியகோடி பேசினாலும் அவருக்குமே தன் தங்கையின் போங்கு வருத்தத்தை கொடுத்தது.

புண்ணியகோடிக்கு உடன் பிறந்தது கோதாவரி மட்டுமே. ஆனால் பிருந்தாவிற்கு உடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா, ஒரு தம்பி, ஒரு தங்கை. வருடா வருடம் இந்த பார்ட்டிக்கு அனைவருக்குமே அழைப்பு விடுப்பார்கள். பொதுவாக அனைவரின் விடுமுறை நாளை கணக்கில் வைத்தே புண்ணியகோடி இதை ஏற்பாடு செய்வார்.

வீட்டிற்கு வரும் விருந்தினரை எல்லாம் ஒருபோலவே முக்கியத்துவம் கொடுத்து, நல்லபடியாய் கவனித்து அனுப்ப வேண்டும் என்று எது செய்தாலும், தான் இந்த வீட்டில் பிறந்தவள், எனக்கே முதல் உரிமை, எனக்கே எதிலும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று என் நேரமும் போர்க்கொடி தூக்கும் கோதாவரி  ஏதாவது சண்டை இழுத்து வைக்காமல் போக மாட்டார்.

அதுவும் பிருந்தாவின் அக்கா, மஞ்சு, அவரை கண்டால் எப்படித்தான் இருக்குமோ கோதாவரிக்கு. மஞ்சுவும் முதலில் தங்கைக்காக என்று வாய் மூடி இருந்தவர், பின் ரொம்பவும் போகவும் பதிலுக்கு பதில் என்று கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

பிருந்தா வீட்டினர் எல்லாம் இக்கால ரகம். சௌஜன்யமாய் சகஜமாய்  இருப்பார்கள். அதுவே முதலில் கோதாவரிக்கு பிடிக்காது. “ச்சே இதென்ன எப்போ பார் இப்படி பேசி சிரிச்சுக்கிட்டு.. அதுவும் இத்தனை சத்தமா…” என்று முகம் சுளிப்பார் அதுவும் அவர்கள் முன்னிலேயே.

இதில் பிருந்தாவிற்கு தான் பெரும் சங்கடம். யார் பக்கமும் பேச முடியாது பேசாமலும் இருக்க முடியாது. இந்த பார்ட்டி முடிவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.

இம்முறை பெரியவர்கள் வராமல் தங்கள் பிள்ளைகளை அனுப்பியது கூட நல்லதோ என்றே தோன்றியது. சரவணனும் தேவியும் வருகிறார்கள் என்றதுமே புண்ணியகோடிக்கும், பிருந்தாவிற்கும் மனதில் ஒரு எண்ணம் தோன்ற,

புண்ணியகோடியின் அம்மா, கல்பனாவோ “நீங்களா எதுவும் செஞ்சு வைக்காதீங்க… உங்களுக்கு இதெல்லாம் தேவையே இல்லாதது…” என்று ஒரேதாய் சொல்லிவிட்டார்.

ஆனால் ஆசை யாரை விட்டது.???

சரவணனுக்கு மனமோ ஒருநிலையில் இல்லை. அவளது பெயரை மட்டுமேனும் கூட கேட்டு இருக்கலாம் என்று மனம் செல்லாய் அறிக்க, என்னவோ தனியே இருக்கவேண்டும் போலவும் தோன்றியது,

ராகுலோ அவனை விட்டு நகர்வேனா என்றிருந்தான். வந்த முதல் நாளே முகத்தில் அடித்தது போல் பேசவும் முடியாது. அதுவும் ராகுலின் முகத்தை பார்த்தால் யாருக்குமே அப்படி பேசும் எண்ணமும் வராது.

“ராகுல் நான் ஒரு பாத் போட்டு வந்திடுறேன்…” என்றுவிட்டு ஷவரின் அடியில் தலைக் கொடுத்தவன் வெகு நேரம் அப்படியே நின்றிருந்தான்.

தலை மீது விழுந்து தன்னுடல் முழுவதும் படரும் நீர் போல, அவளின் வாசம் தனக்குள்ளே இன்னும் ஆழ பரவுவது போல் இருந்தது. ஆம் அவள் உபயோகித்திருந்த வாசனை திரவியத்தின் வாசத்தை இன்னும் கூட அவன் நாசி உணர்ந்தது. ஒருமுறை ஆழ மூச்செடுத்து விட்டான்.

‘யூ ஆர் கில்லிங் மீ மோகினி…’ என்று கூறிக்கொண்டவன், அதற்குமேல் இப்படி உள்ளேயே நிற்பது சரியில்லை என புரிந்து வேகமாய் வெளி சென்று உடைமாற்றி தயாராக,

“மாமா சீக்கிரம் சீக்கிரம்….” என்று ராகுல் படுத்த, ஒருவழியாய் கிளம்பி சென்றான் தன் பாட்டியை காண.

கல்பனாவின் அறைக்குள் நுழையும் போது சரியாய் பிருந்தாவும் வந்துவிட, புன்னகை முகமாகவே உள்ளே நுழைந்தான் “பாட்டி….” என்ற அழைப்போடு..

சந்தன நிற மென் பட்டுடுத்தி, ஹிந்தி நாடகங்களில் வரும் பாட்டி போலவே கையில் ஒரு துளசி மாலையை உருட்டியபடி தன் மூக்கு கண்ணாடி வழி இவனை ஒரு பார்வை பார்த்த கல்பனா,

“வாடாப்பா… வீட்டுக்கு வந்து இவ்வளோ நேரமாச்சு இப்போதான் தான் என்னை பார்க்க நேரம் கிடைச்சதோ….” என்று இடக்காய் கேள்வி கேட்டாலும், இத்தனை வருடம் கழித்து வந்திருக்கும் தன் பேரன் முகத்தை வருட மறக்கவில்லை.

“நான் தான் கொஞ்சம் பிரெஷ் ஆகிட்டு வர சொன்னேன் அத்தை. நீங்க பூஜை பண்ற நேரம் வேற அதான்…” என்று பிருந்தா பொறுப்பை தன்னதாக்கி கொள்ள,

சரவணனோ ‘ஆகா இப்போ தெரியுது மாம் ஏன் அப்படி இருக்காங்கன்னு… கூல் பண்ணுடா சரவணா…’ என்று சொல்லிக்கொண்டவன்,

“பாட்டி…. இவ்வளோ அழகா இருக்கீங்க….” என்று இறுக கட்டிக்கொள்ள, அங்கே இருந்த அனைவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை..

“ஏய் ச்சி.. ச்சி.. விடுடா.. படவா… விடு.. வந்துட்டான்.. இத்தனை வருஷம் கழிச்சு வெறும் கையை வீசிட்டு வர்றான்.. தள்ளிபோ… என்ன புஸ் புஸ்னு சென்ட் அடிச்சியோ.. நாறுது…” என்று சொல்லியபடி பேரன் முதுகில் இரண்டு போட்டாலும், கல்பனாவின் முகத்திலும் சந்தோசமே.

“இப்போவாது உன் அம்மாக்கு உன்னை எங்க கண்ல காட்டணும்னு எண்ணம் வந்ததே…”

“ஹா ஹா.. அப்படி சொல்லுங்க பாட்டி.. இப்போவும் போகவே கூடாதுன்னு அவ்வளோ சண்டை… நான் தான் இனிமேலும் என்னால என் பாட்டியை பார்க்காம இருக்கவே முடியாதுன்னு சொல்லி வந்துட்டேன்…” என்று சரவணன் சொல்லிய விதத்திலேயே,

நான் சொல்வதெல்லாம் பொய், பொயை தவிர வேறெதுவும் இல்லை என்று அப்பட்டமாய் தெரிந்தது..

அவன் பேசியது கேட்டு இன்னும் புன்னகை பொங்க, அவன் காதை திருகியவர், “பொய்க்காரா… உன்னை எப்படிடா போலீஸா செலக்ட் பண்ணாங்க…” என்று கேட்டு மீண்டும் சிரித்தவர்,

“ஆமா ஏன் லேட்.. நீயும் தேவியும் ஒரே பிளைட் தானே… அவ அப்போவே வந்திட்டா நீ ஏன் லேட்…” என,

‘அடியே தேவி.. உன்னை யார் முன்னாடி வர சொன்னது…’ என்று இதுவரை பார்த்திராத அந்த தேவியின் மீது கோவம் வந்தது.

இன்னும் நான்கைந்து வசைகளை தேவிக்கு சமர்ப்பணம் செய்து முடிப்பதற்க்குள், “மாமா அவங்க பிரண்ட பார்த்தாங்களாம்… அதான் லேட்டாம்…” என்று ராகுல் சொல்லிவிட,

“அதானே… அந்த தேவி பொண்ணு எவ்வளோ அழகா வந்ததுமே கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கினா தெரியுமா.. நீயும் இருக்கியே கட்டி புடிக்கிற.. என்ன பழக்கமோ..” என்று சொன்னவர் அவன் விழாமலேயே,

“எப்பவும் இப்படியே சிரிச்சிட்டு இரு சரவணா…” என்று தன் ஆசிர்வாதத்தை வழங்க,

“தேங்க்ஸ் பாட்டி…” என்று மீண்டும் அவன் கட்டிக்கொள்ள போக,

“போதும் போதும்… ரொம்பத்தான் பாசமிருக்க போல நடிக்காத… பார்த்தியா இந்த பட்டு புடவை… தேவி வாங்கிட்டு வந்தா.. நல்லா இருக்குல்ல..” என்று தன் கையில் இருந்த பிஸ்தா நிற மென்பட்டை காட்ட, சேலை என்னவோ அழகாய் தான் இருந்தது, ஆனால் சரவணனுக்கு தான் அது ரசிக்கவில்லை.

மனமோ, தேவியை அர்ச்சித்தது..

“என்கூடவே ப்ளைட்ல வந்து… எனக்கு முன்னாடியே வீட்டுக்கும் வந்து இப்படி எல்லாரும் அவளையே பேசுறது போல பண்ணிட்டா… இருக்கட்டும் ஊருக்கு போறதுக்குள்ள அவளை ஒருவழி பண்றேன்…” என்று பல்லை கடித்து அமர்ந்திருக்க,

“பிருந்தா, தேவி எங்க… எதோ கால் வந்ததுன்னு பேச போனா…??” என்று கல்பனா மருமகளிடம் விசாரிக்க,

“இதோ கூட்டிட்டு வர்றேன் அத்தை..” என்று பிருந்தா கிளம்பவும்,

“தேவியாம் தேவி… பேர் வச்சு இருக்காங்க பார்.. தேவின்னு.. ரெண்டு எழுத்துல.. கஞ்சத்தனம்..” என்று முனங்கியவன்,

“ஒருவேளை முன்பாதி பின்பாதி எதாவது இருக்குமோ, தேவிஸ்ரீ இல்லை ஸ்ரீதேவி இப்படி…” என்று யோசிக்க,

ரொம்பவும் யோசிக்காதே… முன்பாதி பின்பாதி எல்லாம் இல்லாமல் நானே முழுவதுமாய், நானே உன்முன்னே வருக்கிறேன் என்று சொல்வது போல் அடுத்த நொடி பிருந்தாவோடு சேர்ந்து தேவி அங்கே வந்தாள்.                       

 

 

Advertisement