Advertisement

துளி  – 19

அந்த அரங்கமே நிரம்பியிருக்க, அத்தனை கூட்டத்திற்கும் சிறிதும் சம்பந்தமே இல்லாது, அமைதியில் லயித்திருந்தது நாட்டிய போட்டி நடந்த அவ்வரங்கம்.

நகரத்தின் பல முக்கிய பிரமுகர்களும், தொழிலதிபர்களும், பல சினிமா நட்சத்திரங்களும், இன்னும் பல முக்கிய பதவியில் இருப்பவர்களும், பிற மாவட்ட மாதர் சங்க நிர்வாகிகளும், குழுவினர்களும்  வந்து சிறப்பிக்க, தலைமை விருந்தினராக சென்னை மாவட்ட ஆட்சியர் வந்திருந்தார்.

அவரருகே தனக்கான மிடுக்கு சிறிதும் குறையாதவாறு சரவணன் அமர்ந்திருக்க, அனைவருமே ஒருவித மோன நிலையில் இருப்பதாக தான் அந்த அமைதி பறைசாற்றியது.

காரணம் தேவியின் நாட்டியம்..

அவள் காட்டிய பாவனையும், அபிநயமும், அழகாய் வெளிபடுத்திய உணர்ச்சிகளும், ஒவ்வொன்றும் அனைவரின் மனதையும் நிறைக்க, பேரமைதி. கிட்டத்தட்ட அந்த பத்து நிமிடமும், தன் நடனம் மூலம் அனைவரையும் தன்வசப்படுத்தி இருந்தாள் தேவி.

சரவணனின் மனமோ ஒவ்வொரு நொடியும் “வாவ் வாவ்….” என்று சொல்லிக்கொண்டு இருந்தது.

அவளது நடனம் முடிந்து, மீண்டும் வணக்கம் வைத்து தேவி நிமிர, ஒரு சில விநாடிகளே தேவியின் பார்வை சரவணனை தொட்டு மீள, அவனோ இன்னும் திக்குமுக்காடித்தான் போனான். ஆனால் தேவியோ மேடைக்கு பின் பக்கம் சென்றுவிட்டாள்.

நடன போட்டிகள் அனைத்தும் முடிந்திருக்க, இன்னும் சிறிது நேரத்தில் பரிசுகள் அறிவிக்கப்படும் என்று ஒருக்கிணைப்பாளர் மேடையேறி சொல்ல. அதன் பிறகே சிறு சலசலப்பு.

மேடையில் இருக்கைகள் போடப்பட்டு, மாவட்ட ஆட்சியரை மேடைக்கு அழைக்க, சரவணன் மரியாதை நிமித்தமாய் எழுந்து நிற்க, அடுத்து அவனையும் மேடைக்கு அழைத்தனர்.

அதன் மேலும் ஒருசிலரை மேடைக்கு அழைக்க, மாதர் சங்க தலைவியோ நன்றியுரை பேசிக்கொண்டு இருந்தார். 

ஏனோ சரவணனுக்கு மனம் ஒருவித பரபரப்பாக இருந்தது. இன்னதென்று தெரியாத புரியாத ஒரு உணர்வு. அது கூட்டத்தை பார்த்ததால் அல்ல, மாறாக அவள் ஒருத்தியால் வந்த பரபரப்பு. படபடப்பு.

தேவிக்கும் அப்படிதான். மேடைக்கு பின்னே அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைகளில் இருந்தாலும், அங்கே மைக்கில் பேசுவது எல்லாம் கேட்டுகொண்டு தான் இருந்தது.

பரிசு பெறுகிறோம் இல்லை என்பதை எல்லாம் தாண்டி, ஏனோ இத்தனை கூடத்திற்கும் இடையில் சரவணனை சந்தித்ததினால் வந்தது.

“மிஸ்.. நம்ம தான் வின் பண்ணுவோம்…” என்ற அவள் மாணவிகளுக்கும்.

“சூப்பர் பெர்பார்மன்ஸ் தேவி…” என்ற சக ஆசிரியைகளுக்கும் ஒரு புன்னகையே பதிலாய் கொடுத்தாளே தவறி வேறெதுவும் பேசவில்லை.

ஒருவழியாய் மேடையில் அனைவரும் பேசி முடித்து, பரிசுகள் அறிவுக்கும் நேரம் வர, சரவணனின் மனமோ ‘தேவி வின் பண்ணனும்…’ என்று வேண்டிக்கொண்டே இருந்தது.

தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்க பெரும்பாடு பட்டான். சொல்லபோனால் தேவிக்கு கூட இத்தனை டென்சன் இருந்திருக்காது பரிசு வருமா வராதா என்று.

“போட்டியில் பரிசு பெறுவது முக்கியம் என்றாலும், பங்குபெற்றவர்கள் அனைவருமே முக்கியமானவர்கள் தான்.. இப்போட்டியானது ஒரு நல்ல செயலுக்காக நாம் நடத்தியது என்றாலும், பங்குபெற்றவர்களுக்கும் அவர்களை ஊக்குவித்து, பரிசுகள் வழங்கினால் தான் இன்னும் சிறப்பாய் இருக்கும்.

ஏற்கனவே சொல்லியிருந்தது போல், முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நடன பள்ளிகளுக்கு கோப்பையும், மற்ற பள்ளிகளுக்கு பங்குபெற்றதர்கான சான்றிதள்களும் வழங்கப்படும்…” என்று கூறி,

“இரண்டாம் பரிசு பெரும் நாட்டியப்பள்ளி…” என்று சொல்லி ஒரு சின்ன இடைவெளி விட்டு,

‘சிவா தாண்டவம்….’ என்ற நட்டியபள்ளியின் பெயரை அறிவிக்க, அரங்கம் நிறைந்த பலத்த கரகோஷம் ஒலித்தது.

தங்கள் பள்ளியின் பெயரை கேட்டதுமே, வேகமாய் மேடைக்கு வந்த அந்தப்பள்ளியின் மாணவிகளும், குருவும் மாவட்ட ஆட்சியருக்கும் வணக்கும் தெரிவித்து, தங்கள் பரிசை பெற்று செல்ல,

அடுத்து அங்கிருந்த அனைவருக்குமே முதல் பரிசு யாருக்கு என்ற கேள்வி மனதில் போட்டு பலமாய் அடித்துகொண்டது..

‘பிங்கர்ஸ் கிராஸ்…’ என்பார்களே அதுபோல தான் சரவணன் அமர்ந்திருந்தான்.

தேவியோ மனதில் லேசாய் ஒரு படபடப்பு இருந்தாலும் வெளிக்காட்டாமல் இருக்க, அங்கே மேடையிலோ,

“முதல் பரிசு பெரும் பள்ளி…” என்றவர், முன் போலவே சிறிது இடைவெளி விட்டு,

“நடனாலயா…” என, சரவணனுக்கு அப்போது தான் மூச்சு விடவே முடிந்தது. எழுந்து நின்று கை தட்ட வேண்டும் போல இருந்தது.

இதேது சாதாரணா ஆளாய் இருந்திருந்தால் கீழே நின்று விசிலே அடித்திருப்பான்.  

“ஹே…..!!!!!!!!!!!!!” என்று தேவியை அவள் மாணவிகள் இறுக கட்டிக்கொள்ள, அவளும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும், வேகமாய் மேடைக்கு செல்லவேண்டும் என்று சொல்லி, அனைவரையும் அழைத்து சென்றாள்.

“கங்கிராஜூலேசன்” என்று பாராட்டிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கான கோப்பையை வழங்க, தன் குழு மாணவிகளை வாங்க சொன்னவள், அவர்களை ஒட்டி நின்றாள் தேவி.

பார்வையோ சரவணனை காண, அவனோ நேராகவே அவளை பார்த்து தான் நின்றான்.

இந்த காட்சி அழகாய் புகைப்படமாய் எடுக்கப்பட, அந்த புகைப்படமோ மறுநாள் செய்தித் தாளில் இடம்பெற்றது.

சரவணன் அப்போது தான் தன் தினசரி வொர்க்கவுட்டை முடித்து வந்து அமர, அவனுக்கு பருக அருகம்புல் ஜூஸ் குடுத்த கோதாவரி,

“இவ்வளோ வேற்கிற அளவிற்கா எக்ஸர்சைஸ் பண்ண…” என்று மகனை கடிந்தபடி சொன்னவர் அங்கேயே அமர்ந்து பேப்பரை படிக்கத் தொடங்கினார்.

ஒவ்வொரு பக்கமாய் புரட்டியவர், ஒரு பக்கத்தில் அப்படியே பார்வை நிலைக்க, அவரது வாயோ “ச.. சரவணா…” என்று அழைத்திருந்தது.

“என்ன மாம்…” என்று நிமிர்ந்தவன், அவரது முகத்தில் தெரிந்த கலவையான உணர்வுகள் கண்டு புருவம் சுருக்க,

“இ… இது…” என்று அவனை நிமிர்ந்து பார்த்தவர்,

“இது மஞ்சுவோட பொண்ணு தானே…” என்றார் எப்பொழுதும் போல்.. அவருக்கு சட்டென்று தேவி பெயர் வாயில் வரவில்லை.

ஆனால் சரவணனோ இறுகிய முகத்துடன் தன் அம்மாவை எதிர்கொள்ள, கோதாவரியோ அதெல்லாம் கவனிக்காமல்,

“என்ன டா நான் கேட்கிறேன் பதிலே சொல்லாமா இருக்க.. இது… இவ.. மஞ்சுவோட பொண்ணு… தா…” என்று சொல்லி முடிக்குமுன்னே,

“போதும்மா….” என்று சரவணன் கத்தியே விட்டான்.

கோதாவரி அதிர்ந்து மகன் முகம் பார்க்க,

“எப்போ பாரு மஞ்சுவோட பொண்ணு, மஞ்சுவோட பொண்ணுன்னு… எஸ் மஞ்சு ஆன்ட்டி பொண்ணு தான் தேவி…. அதை யாராலும் மறுக்கவும், மாத்தவோ முடியாதே.. ஆனா அவளுக்குன்னு ஒரு பேர் இருக்கு. ஒரு அடையாளம் இருக்கு.. ஷி இஸ் தேவி… அது ஏன் உங்களுக்கு மனசில பதியல..” என்று அடக்கப்பட்ட கோவத்துடன், அடிக்குரலில் சீர,

கோதாவரி முற்றிலும் ஆடிப்போனார். இத்தனை வருடங்களில் சரவணன் கோபத்தை முதன்முதலில் காண்கிறார். சட்டென்று என்ன பதில் சொல்வது என்று கூட தெரியாமல், எதுவுமே தோன்றாமல் அப்படியே அமர்ந்த நிலையிலேயே சரவணனை காண, அவனோ பேசிக்கொண்டே போனான்..

“என்னம்மா அப்படி பார்க்கிறீங்க?? நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்… இல்லை கேட்கிறேன் நான் என்ன தப்பு பண்ணேன்.. அவளை பார்த்ததுமே பிடிச்சது.. அவளுக்கும் தான்… பழகினோம்..

யார் கிட்டயும் மறைக்கணும்னு கூட நாங்க நினைக்கல… ஏன் மா என் லைப் எனக்கு முக்கியம் இல்லையா??? ஆனா நீங்களும் சரி அவளும் சரி என்னை புரிஞ்சுக்கவே இல்லை… நீங்க ஒருபக்கம் மஞ்சுவோட பொண்ணுன்னு உங்க பிடிவாதத்தில நிற்க, அவ இன்னொரு பக்கம் உனக்கு உன் அம்மாதான் முக்கியம் அப்படின்னு சொல்ல, ஏன் என்னை யாருமே யோசிக்கலை..

சரி தேவி விடுங்க, நாங்க பழகினதே நாலு நாள் தான்.. ஆனா உங்களுக்கு கூடவா என்னை பத்தி தெரியலை.. அப்படி என்ன உங்களை மதிக்காம நடந்திடுவேன்னு நீங்க அப்படி பண்ணீங்கம்மா… ஓ உங்களுக்கு தெளிவா சொன்னாதானே புரியும்…

சொல்றேன் நல்லா கேளுங்க… நீங்க கோவல பண்ணது முக்காவாசி நடிப்புன்னு எனக்கு நல்லாவே தெரியும்… என்னக்கு உண்மையான மயக்கத்துக்கும், நடிக்கிறதுக்கும் கூடவா வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது… மத்தவங்களை விடுங்க.. எனக்கு தெரியாத உங்களை…” என்று சொல்லி நிறுத்தியவன் இன்னும் கூட உக்கிரம் தாங்காமால் அப்படியே கோதாவரியை பார்க்க,

“சரவணா….!!!!” அதிர்ந்து கத்தியே விட்டார்.

சரியாய் அப்போது தான் அசோக் குமாரும் தான் காலை நேர நடை பயிற்சி முடிந்து வீட்டினுள் நுழைய, கோதாவரியின் அதிர்ந்த குரலே கேட்க, என்னவோ ஏதோவென்று வேகமாய் உள்ளே வர, அங்கே மனைவியும் மகனும் எதிரும் புதிருமாய் நிற்க,

“ஹே.. என்னாச்சு…” என்றபடி வேகமாய் இருவருக்கும் அருகே வந்தார்.

சரவணன் ஒன்றும் சொல்லாமல், ஒரு அடிபட்ட வலியுடன் கூடிய பார்வையை தன் தந்தை மீது வீச, கோதாவரியோ ஒன்றுமே ஒன்றுமே சொல்லாமல், செய்தித்தாளை தன் கணவர் புறம் நீட்ட, கண்களோ மகனிலேயே நிலைத்து நின்றது.

செய்தித்தாளை வாங்கி பார்த்தவர், “ஓ….!!!” என்று மட்டும் சொல்லி இருவரையும் பார்த்து,

“இப்போ என்ன பிரச்சனை…” என்று கேட்க,

கண்கள் கலங்க, வந்த விசும்பலை அடக்கி, அசோக் குமாரை ஏறிட்டு பார்த்த கோதாவரி,

“நான் கொஞ்சம்.. கொஞ்சம் என்ன ரொம்பவே பிடிவாதக்காரி தான்… ஈகோ பார்ப்பேன் தான்… ஆ.. ஆனா என் மகனுக்கு இப்போ வர நல்ல அம்மாவா தான் இருந்திருக்கேன்.. இனியும் அப்படிதான்…

என்.. எனக்கு அந்த நேர கோவம்… அப்படி பண்ணேன்.. ஆனா என்னிக்குமே அவன் வாழ்கைய கெடுக்கனும்னு நான் நினைச்சதில்ல… சொல்லிடுங்க…” என்றவர், கண்களை துடைத்துக்கொண்டு விருட்டென்று சென்றுவிட்டார்.

தன் கணவர் தன்னை கடிந்துகொண்ட போது கூட வாராத அழுகை மகன் பேசவும் வந்துவிட்டது.

இத்தனை வருடத்தில் கோதாவரி இப்படி கண் கலங்கி, மனம் வருந்தி பேசி பார்த்திராத அசோக் குமார்,

“என்ன சரவணா…???!!!” என்றார் ஒருவித அலுப்பாய்..

கோதாவரி அழுததும் சரவணன் மனம் லேசாய் ஓர் அமைதி நிலைக்கு வந்திருக்க, ‘கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ…’ என்று தோன்றினாலும், அவனாலும் எத்தனை நாள் தான் தன்னுணர்வுகளை அடக்கி கொள்ள முடியும்.

“பின்ன என்ன டாட்…” என்றவன் முழுவதும் சொல்ல,

‘ஓ மகனுக்கும் உண்மை தெரிந்து இத்தனை நாள் வாய் திறக்காமல் இருந்ததே பெரிது…’ என்று நினைத்தவர்,

“கொஞ்சம் பொறுமையா பேசிருக்கலாமே டா… நான் கோவால இருந்து வந்த அன்னிக்கே இதை பத்தி பேசினேன்..” என,

“ஹ்ம்ம் உங்களுக்கும் தெரியும்னு எனக்கும் தெரியும் ப்பா.. மாம் பண்ணது தெரிஞ்சுதான் அன்னிக்கு போகாதன்னு தேவிகிட்ட அவ்வளோ கெஞ்சினேன்.. ஆனா அவ கேட்கவே இல்லை.. இப்போ வரைக்குமே மாம் முடிவுன்னு தான் சொல்றா..

எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனா பாருங்க என்னென்னே நடக்குதுன்னு.. அம்மா மனசு மாறவே மாறாதாப்பா..” என

“யார் சொன்னா உன் அம்மா மனசு மாறலைன்னு… நிறைய மாறியிருக்கா.. ஆனா அதெல்லாம் தான் உனக்கு கவனிக்க நேரமில்லை…” என்றார்..

“அப்பா….!!!!!”

“எஸ் உன் அம்மா எப்பவோ உன் விசயத்துல ஒரு முடிவுக்கு வந்திட்டா.. அதை நீ பொறுமையா என்னன்னு கேட்டு இருந்தாலே சொல்லிருப்பா.. சில விஷயங்கள் நமக்கு வேணும்னா நம்மதான் விடாம முட்டனும்.. கோதாவும் அதை தான் எதிர்பார்த்தா..

ஆனா நீயோ தேவியோ அமைதியா இருந்தீங்க… அதான் அவளும் அமைதியா இருந்தா.. ஏன் நீ கேட்டு இருக்கலாமே என்னம்மா டிசைட் பண்ணீங்கன்னு,.. நீ பண்ணல… அடுத்து இதை பத்தி பேசவே விடல…. அப்போ உனக்கென்ன ஈகோ சொல்லு.. நீ ஏன் கேட்கலை…”

“இல்… இல்லப்பா… அது… நான்…” என்று சரவணன் வார்த்தைகளை தேட,

“ஹ்ம்ம் உனக்கே தெரியலை இல்லையா.. ஏன்னா அப்போ உனக்கு தேவி மேலயும் கோவம்.. உன் அம்மா மேலவும் கோவம்.. ஆனா ரெண்டு பேர் கிட்டயும் காட்ட முடியலை.. சோ இப்போ வாய்ப்பு கிடைக்கவும் எல்லாத்தையும் கொட்டிட்ட.. தப்பில்ல..

ஆனா நீ சொல்ற மாதிரி தேவி அப்போ கிளம்பி  போய் இருக்கலைன்னா, அதுவும் உன் பேச்சை கேட்டு பிடிவாதமா அங்கேயே இருந்திருந்தா இன்னும் உங்கம்மாவோட பிடிவாதம் கூடி தான் இருக்கும்.. இந்தளவுக்கு கோதா மாறியிருக்க மாட்டா.. அவ மனசு இந்த அளவு மாறினதுக்கு காரணம் நீ இல்ல தேவி…” என்றவர்,

‘என்ன சொல்கிறார் இவர்…’ என்பது போல் அதிர்ந்து நின்ற சரவணனை பார்த்து,

“கொஞ்ச நேரம் கழிச்சு போய் உங்கம்மாவ சமாதனம் பண்ணு.. தென் வேலைக்கு போ…” என்றவர் நீ இதை செய்து தான் ஆகவேண்டும் என்று சொல்லாமல் சொல்லி சென்றார்.

கோதாவரிக்கு மனம் ஆறவே இல்லை.. ஆக மகன் தான் நடித்த விஷயம் தெரிந்தும் இத்தனை நாள் அமைதியாய் தான் இருந்திருக்கிறான், அதுவும் சமீப காலமாய் அவன் தன்னோடு சகஜமாகவும் இருப்பது எல்லாம் நினைவில் வந்தது.

‘எப்படி எப்படி அவனால முடிஞ்சது… எப்படி இத்தனை நாள் அமைதியா இருந்தான்.. அவர் கூட என்கிட்டே கேட்டாரே…. ஆனா இவன்…’ என்று யோசிக்கும் போதே, மனம் மேலும் குற்ற உணர்வில் துடித்தது.

தன்னை விட வயதில் சிறியவர்கள் எல்லாம் எத்தனை பெரிய மனதாய் நடந்துகொள்கிறார்கள்..

ஆனால் நான் எத்தனை கீழாய் நடந்திருக்கிறேன் இது மட்டும் அம்மா அண்ணா பிருந்தா என அனைவர்க்கும் தெரிந்தால் அடுத்து என்ன என்று தோன்ற, உடல் குலுங்க அழுகை தான் வந்தது.

கோதாவரி மனம் மாறியது நிஜம் தான், ஆனாலும் சரவணனுக்கு உண்மை தெரிந்திருக்கிறது என்பதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதுவும் அவன் உடனே கேட்டிருந்தால் கூட அப்போதிருந்த மனநிலைக்கு

‘ஆமா டா நான் அப்படி தன் செஞ்சேன்.. இப்போ என்ன அதுக்கு…’ என்று ஒரேதாய் அடித்தே பேசியிருப்பார்.

ஆனால் இப்போது….???

ஒன்றுமே செய்ய முடியவில்லை… மனம் மிகவும் பாரமாய் உணர, யாரிடமாவது மனதில் உள்ளதெல்லாம் கொட்டிவிட வேண்டும் போல் இருந்தது.

பிள்ளைகள் என்ன தவறு செய்தாலும், அந்த நேரத்தில் கண்டித்தாலும் பின் அடுத்து ஆதரிப்பது அம்மா தானே, கோதாவரிக்கு இப்போதே கல்பனாவிடம் பேசவேண்டும் போல் இருக்க,

அதே வேகத்தில் தன் அன்னைக்கு அழைத்தும் விட்டார்.

“ஹலோ கோதா….”

“ம்மா….” என்றவருக்கு இன்னும் குரல் உடைந்தது…

“ஹ… ஹலோ கோதா… என்.. என்னாச்சு…” என்று கல்பனா பதற,

“அம்மா… நான்…” என்ற கோதாவரிக்கு பேச்சே வரவில்லை, அழுகையில் உடல் குலுங்க,தன்னை நிதானம் செய்துகொள்ள வெகு நேரம் பிடித்தது.

கல்பனாவிற்கு என்ன தோன்றியதோ, எதுவாகினும் கோதாவரியே பேசட்டும் என்றெண்ணி, அமைதியாய் பொறுத்திருக்க, சில நொடிகள் கழித்து,

“அம்மா….” என்று மீண்டும் கோதாவரி அழைக்க,

“ம்ம் சொல்லு கோதா… என்னாச்சு…” என,

சட்டென்று கோதாவரிக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனாலும் தன் மனதில் இருக்கும் பாரம் இறக்கியே ஆகவேண்டும் என்று தோன்ற. மூச்சு விடாமல் அனைத்தையும் சொல்லிவிட்டார்.

அனைத்தையும்….

எல்லாவற்றையும் கேட்ட கல்பனாவிற்கோ அடுத்து பேச்சே வரவில்லை.. காதில் அலைபேசியை வைத்தபடி அப்படியே   அமர்ந்திருக்க, கோதாவரியோ,

“அம்மா…. லைன்ல இருக்கீங்களா…” என்று இருமுறை கேட்க,

“ம்ம்…” என்று மட்டும் தான் கல்பனவால் சொல்ல முடிந்தது.

“அம்மா நீங்க… நீங்க என்னை தப்பா நினைக்க மாட்டீங்க தானே.. நான் நான் எதோ அந்த நேர கோவத்துல அப்படி செஞ்சிட்டே…” என்று மீண்டும் ஆரம்பிக்க,

“ம்ம்ம் இதில என்ன நினைக்கன்னே தெரியாலை… நீ இப்படி செய்வன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை….” என்று லேசாய் கல்பனா கடிய, கோதாவரி அமைதியாய் இருந்தார்.

“கோதாவரி…..”

“சொல்லுங்கம்மா….”

“என்ன முடிவு பண்ணிருக்க…”

“எ.. எதை பத்திம்மா…???”

“நான் என்ன கேட்கிறேன் தெரியலையா…”

“ம்ம்….”

“அப்போ இன்னும் உன் மனசு மாறலை… உன் நடிப்ப உண்மைன்னு நம்பி ஒரு சின்ன பொண்ணு தன்னோட மனசை காயப்படுத்திட்டு இருக்கா… அதுவில்லாம உன் பையன் அவனை கொஞ்சம் நினைச்சியா…

மஞ்சு, தியாகு நினைச்சிருந்தா எங்க மகளை எப்படி நீங்க அப்படி பேசலாம்னு வந்து சண்டை போட்டிருக்கலாம்.. ஆனா யாருமே எதுமே பண்ணல… காரணம் உனக்கு நிஜமாவே உடம்பு சரியில்லைன்னு நினைச்சாங்க.. ஆனா அதுவே பொய்.. மத்தவங்களுக்கு விடு, உனக்கு உண்மை என்னன்னு தெரியும் தானே.. ஆனா இப்போ கூட நீ தேவிய உன் மருமகளா ஏத்துக்க மாட்ட.. இதெல்லாம் புண்ணியகோடிக்கு தெரிஞ்சா அவன் எவ்வளோ வருத்தபடுவான் தெரியுமா.. அப்புறம் பிருந்தா… அவளுக்கு நான் என்ன பதில் சொல்றது..” என்று ஒருவழி படுத்திவிட்டார்.

கோதாவரி எதற்குமே வாய் திறக்கவில்லை..

“ஹ்ம்ம் உன்னால இப்போ பேச முடியாதுன்னு எனக்கு தெரியும்.. அடுத்த வாரம் என் எழுபத்தி அஞ்சாவது பிறந்தநாள் வருது தானே,  நீ குடும்பத்தோட கோவா வா… மஞ்சு வீட்லையும் கூப்பிடுறேன்… பேசிக்கலாம்..” என.

கோதாவரிக்கு சரி என்பதை தவிர வேறு சொல்ல முடியவில்லை.

ஆனால் கல்பனா மஞ்சுவிற்கு அழைத்து பேச, அவரோ சட்டென்று வருகிறோம் என்றும் சொல்லவில்லை, முடியாது என்றும் சொல்லவில்லை,

“அவர்கிட்டயும், தேவி கிட்டயும் கேட்டிட்டு சொல்றேன் அத்தை…” என,

“தியாகு கிட்ட நானே பேசுறேன் மஞ்சு… தேவி நான் கூப்பிட்டா கண்டிப்பா மறுக்கமாட்டா…” என்றார்..

“ஹ்ம்ம் அவர் வரவும் நானே பேசிட்டு சொல்றேனே அத்தை…” என,

“சரிம்மா.. தேவி வந்தா நான் கேட்டேன்னு சொல்லு..” என்று போனை வைத்தவர், பின் பிருந்தாவையும், புண்ணியகோடியையும் அழைத்து விஷயத்தை சொல்ல இப்போதாவது நல்லது நடந்தாள் சரி என்று அனைவரும் நினைத்தனர்.

 

 

 

 

 

 

 

 

Advertisement