Advertisement

துளி – 18

நாட்கள் வாரங்களாக, வாரங்கள் ஒரு மாதத்தை தொட்டுக்கொண்டு இருந்தது. யார் வாழ்விலும் எவ்வித மாற்றமும் இல்லை. மாற்றத்தை வரவேற்கும் எண்ணம் எல்லாம் யாருக்கும் இல்லை என்பது போலவே வெளித்தோற்றம் இருந்தாலும், ஏதேனும் நடக்காதா என்ற நினைப்பை மனதிற்குள்ளே போட்டு, அன்றாட வேலையில் தங்களை பபுகுத்திக்கொண்டு இருந்தனர்.

சரவணனும் சரி, தேவியும் சரி இருவருமே தங்களின் வேலைகளில் மூழ்கிவிட, அவர்களை பார்த்திருந்த பெற்றவர்கள் தான் என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசையும் நிலை.

மஞ்சுவும், தியாகுவும் தங்களின் மகள் ஏதாவது வாய் திறப்பாளா என்று எதிர்பார்த்தால் அவளோ ஒன்றுமே சொல்லாமல் என்றும் போல இருந்தாள்..

அங்கே கோதாவரி கூட இப்போதெல்லாம் மகன் ஏதாவது தேவி பத்தி பேசுகிறானா என்று பார்த்தால் எதுவும் இல்லை.. அசோக் குமாரிடம் கூட சொல்லி பார்த்தார்.. ஆனால் அவரும் தான் என்ன செய்வார்…

ஆனால் இவர்கள் அனைவரும் நினைப்பது போல் சரவணனும் தேவியும் பேசாமல் எல்லாம் இல்லை. அதற்காக பழையபடி எல்லாம் சரியானதா என்றால் அதுவும் இல்லை.

இருவருக்குமே மனதில் பேசவேண்டும் என்ற எண்ணமும், தங்கள் உறவை மீண்டும் உயிர்பிக்கவேண்டும் என்ற ஆசையும் இருந்தாலும்  தேவிக்கு இன்னும் கோதாவரி முன்னிட்டு ஓர் தயக்கம்.. சரவணனுக்கோ என்ன இருந்தாலும் நான் அத்தனை சொல்லியும் கேளாமல் போனாளே என்றே எண்ணம் இன்னும் இருந்தது.

அவனை பொறுத்தவரை, எதுவாக இருந்தாலும் தேவி தனக்கு துணை இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம், அவளுக்கோ தன்னை முன்னிட்டு எதுவும் பிரச்சனை பெரிதாகிட கூடாதே என்ற கவலை.

ஆக இருவருக்குமே இருவர் செய்வதும் செய்ததும் சரி என்ற எண்ணம் மனதில் திண்ணமாய் பதிந்துவிட்டது.

அவள் செய்தது தவறென்று உணரட்டும் என்று அவனும், நான் செய்தது சரி என்று அவன் புரிந்துகொல்லட்டும் என்று அவளும் நினைத்திருக்க, இன்னுமே இருவரும் இலகு நிலைக்கு வரவில்லை.

இப்படியாக நாட்கள் செல்ல, தேவிக்கு அன்று தன் நடன பள்ளியில் இருந்தாள்.

“மேம் உங்களை பார்க்க, மாதர் சங்கம் செக்ரட்ரி வந்திருக்காங்க… அனுப்பவா…” என்று ரிசப்சனிஸ்ட் தேவிக்கு அழைத்து கேட்க,

நெற்றியை சுருக்கி லேசாய் ஒரு சிந்தனை செல்ல, தேவியின் உதடுகளோ “ம்ம் எஸ் வர சொல்லுங்க…” என்ற வார்த்தைகளை உதிர்த்தது.

தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் தான் தேவி இருந்தாள். அப்போது தான் அவளது வகுப்புகள் முடிய, வந்து அமர்ந்தவள், பார்க்கவேண்டிய அலுவலை கவனித்துகொண்டு இருக்க, வரவேற்பு பெண் இப்படி அழைத்து சொல்லவும், மனம் லேசாய் யோசனைக்கு சென்றது.

‘மாதர் சங்கம் இங்க ஏன் வர்றாங்க…’ என்று யோசித்து முடிக்கும் நொடி, மாதர் சங்க செக்ரட்ரி, இவளறைக்கு வர,

“ஹலோ மேம்…” என்று எழுந்து நின்றாள்..

“ஹலோ மா..” என்றவருக்கு எப்படியும் வயது ஒரு ஐம்பதை தொட்டிருக்கும்.

“சாரி முன்னமே இன்பார்ம் பண்ணாம வந்ததிற்கு…” என,

“நோ.. நோ.. இதிலென்ன இருக்கு.. சொல்லுங்க மேம் நான் என்ன செய்யணும்..” என,

தேவி முகத்தை பார்த்து லேசாய் புன்னகை பூத்த அப்பெண்மணி, “நெக்ஸ்ட் மன்த் எங்க மாதர் சங்கம் சார்பா ஒரு டான்ஸ் கம்பெட்டீசன் கண்டக்ட் பண்றோம்.. உங்களுக்கே தெரியும்.. எங்க சங்கம் என்னென்ன நல்ல விசயங்கள் எல்லாம் பண்ணிட்டு இருக்குன்னு…

சோ ஒரு ப்ரோக்ராம் கண்டக்ட் பண்ணி வர பண்ட்ட, அனாதை ஆஸ்ரமங்கள்ள இருக்க கண் தெரியாத பிள்ளைகளுக்கு கண் மாற்று அறுவை சிகிச்சைக்கு கொடுக்கணும்னு முடிவு பண்ணிருக்கோம்…

சிட்டில இருக்க நிறைய விஐபிஸ், இண்டஸ்ட்ரியிலிட்ஸ், செலிபிரட்டீஸ் எல்லாம் இன்வைட் பண்ணிருகோம்…” என்று தான் வந்த காரியத்தின் முன்னுரையை சொல்ல,

தேவியோ “சூப்பெர்ப்… ரொம்ப நல்ல காரியம் மேம்… நல்ல படியா எல்லாமே அமைய என் வாழ்த்துக்கள்… ” என்று தன் வாழ்த்தை தெரிவித்து, இதில் நான் என்ன செய்யமுடியும் என்பது போல் அவர் முகம் பார்த்தாள்.

“சென்னைல இருக்க மோஸ்ட் ஆப் தி டான்ஸ் ஸ்கூல்ஸ் பார்ட்டிசிபேட் பண்றாங்க.. சோ உங்க ஸ்கூலும் பார்ட்டிசிபேட் பண்ணா நாங்க ரொம்ப சந்தோசம் படுவோம்… இது உங்களுக்குமே ஒரு நல்ல வாய்ப்பு தானே.. உங்க ஸ்கூல் நேமும் இன்னும் பெமௌஸ் ஆகும்…  பார்ஸ்ட் அண்ட் செக்கன்ட் ப்ரைஸ் அன்னௌன்ஸ்மென்ட் கூட இருக்கு..” என்று தன்மையாய் மிக கண்மாய் பேசி முடித்தார்.

“ம்ம்…” என்று அவர் சொன்னதை புன்னகையோடு கேட்டவள், அவர் சொல்லி முடிக்கவும், மீண்டும் ஓர் யோசனைக்கு செல்ல

“டேட் என்னிக்கு மேம்…” என்றாள்..

“நெக்ஸ்ட் மன்த் டேட் த்ரீ…” என

“ஓ.. ஸ்டில் டூ வீக்ஸ் தான் டைம் இருக்கு….” என்றாள் தயக்கமாய்.

“எஸ் கொஞ்சம் பாஸ்ட் ப்ரிபரேசன் தான் இந்த ப்ரோக்ராம்.. அதுனால தான் நாங்களே ஒவ்வொருத்தரா பிரிஞ்சு பெர்சனலா போய் எல்லாரையும் பார்த்து பேசிட்டு இருக்கோம்…” என்றார்.

“ம்ம்.. ஓகே மேம்.. ப்ரோக்ராம் ரூல்ஸ் எதுவும் இருக்கா.. ஐ மீன் காம்பெட்டீசன் ரௌண்ட்ஸ் இப்படி.. தீம் இப்படி..??” என கேட்க,

“டூ ரவுண்ட்ஸ் மேம்.. ஒன்னு க்ரூப் பெர்பார்மன்ஸ்.. இன்னொன்னு சிங்கிள் பெர்பார்மன்ஸ்… தீம் அவங்கவங்க பிக்ஸ் பண்ணிக்கிறது தான்.. ஏன்னா டேஸ் கம்மியா இருக்கு.. நாங்க ஒரு தீம் கொடுத்து அதை சரியா பண்ண முடியலைனா கஷ்டம். சோ தீம் உங்களோட விருப்பம்…” என்றார். 

“தட்ஸ் நைஸ்…” என்றவள், “ஒரு டென் மினிட்ஸ் வெய்ட் பண்ண முடியுமா மேம்… நான் என் ஸ்டாப்ஸ் கிட்ட அன்ட் ஸ்டூடண்ட்ஸ் கிட்ட பேசிட்டு இப்போவே என் முடிவை சொல்லிடவா…” என

“ஓ.. ரொம்ப சந்தோசம்…. நானுமே கூட வந்து பேசுறனே…” என்று அவரும் தேவியோடு எழ,  இருவருமே சேர்ந்து சென்றனர்.

“டூ வீக்ஸ்ல எப்படி தேவி…” என்று நடன ஆசிரியர்கள் யோசிக்க,

“ஏன் நம்ம செய்ய முடியாதா…??” என்று தேவி கேட்க,

“சிறப்பா செய்யணுமே.. சென்னைல இருக்க எல்லா பெஸ்ட் டான்ஸ் ஸ்கூலும் வரும்… அதான்.” என்றார்கள், ஆனால் நடனம் பயிலும் மாணவமனிகளோ போட்டி நடனம் என்றதும் ஆரவாரம் செய்தார்கள்..

“ஹே…!!! சூப்பர்… நம்மக்கு தான் கப்….” என்று இப்போதே ஆரவாரமும், கை தட்டலும், சந்தோஷ ஒலிகளும் எழ அதுவே தேவிக்கு சம்மதம் என்ற முடிவை சொல்ல வைத்தது.

“ரொம்ப தேங்க்ஸ் தேவி மேம்… உங்க ஸ்கூல் நேம் ஆட் பண்ணிக்கிறோம்…” தான் கையோடு கொண்டு வந்திருந்த ஒரு பார்மை பூர்த்தி செய்து அவளிடம் கையெழுத்தும் வாங்கி சென்றார்.

இன்னும் இரண்டு வாரங்களே இருக்கிறது.. பரிசு பெறுகிறோமோ இல்லையோ.. ஆனால் சிறப்பாய் செய்யவேண்டும்..  

இதுபோல பல போட்டிகள் அவள் பள்ளி பங்கேற்றிருக்கிறது தான். பரிசுகளும் பெற்றிருக்கிறது தான். ஆனால் ஒரு நல்ல விஷயத்துக்காய் செய்வது என்பது முற்றிலும் வேறல்லவா..

இது போட்டிக்காக மட்டும் என்றில்லாமல், அந்த போட்டி எதற்காக என்பதையும் சொல்லி, அதையும் மனதில் நிறுத்தி, எப்படி நம் நடனம் இருக்க வேண்டும் என்று அனவைரிடமும் கலந்து பேசினாள்.

குழு நடனம் மற்ற இரு நடன ஆசிரியைகளும், நான்கு மாணவிகளும் ஆடுவதாய் முடிவெடுக்க, தனி நபர் நடனம், யார் ஆடுவது என்று பேச்சு வர, அனைவரும் தேவியையே சொல்லினர்.

பொதுவாய் இம்மாதிரி விசயங்களில் தேவி தன்னை முன் நிறுத்திக்கொள்ள மாட்டாள். பிறரை முன்னே விட்டு, அவர்களில்ன் திறமையை வெளிக்கொணர விரும்புவாள். ஆனால் இன்றோ அனைவரும் பிடிவாதமாய் அவளையே ஆட சொல்ல, அவளும் வேறு வழியில்லாமல் சரி என்று சொல்ல மீண்டும் அங்கே கரகோஷம்.

அதன் பிறகான நாட்கள் இன்னும் வேகமாய் செல்வது போல் இருந்தது தேவிக்கு.. வழக்கமான நடன வகுப்புகள் தாண்டி போட்டிகேன்று வேறு தனியாய் வகுப்பு வைத்து அனைவரையும் தயார் செய்யவேண்டியதாய் இருந்தது. இது போதாது என்று தான் ஆடும் நடனத்திற்கு வேறு தன்னை தயார் செய்துகொண்டிருந்தாள்.

வெறும் ஒரு பாட்டிற்க்கு நடனம் ஆடுவது என்றில்லாமல் ஏதாவது ஒரு கரு இருக்கவேண்டும் என்று யோசிக்க, அவள் கண்கள் வேகமாய் பளீரிட்டது.

இந்த நடன போட்டியே பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை கொணரத்தானே, அப்போது இதையே கருவாக சொன்னால் எப்படி என்று யோசித்தாள்.

ஒவ்வொன்றாக சிந்தித்து என்னென்ன எப்படி செய்வது என்று முடிவெடுத்து அதன்படி நடனம் பயிற்சி மேற்கொள்ள, இதோ இரண்டு நாளில் போட்டி என்ற நிலையில் வந்து நின்றது.

அன்றும் தேவி நடன பள்ளியில் தான் இருந்தாள். அனைவரும் கிளம்பியிருந்தனர். குழு நடனத்திற்கு இப்போது தான் ஒத்திகை பார்த்து முடிவானது.

“கேர்ல்ஸ்… டுமாரோ நல்ல ரெஸ்ட் எடுங்க…. டே ஆப்டர் டுமாரோ வாங்க.. போதும்.. ஒன்ஸ் ரிகர்சல் பார்த்திட்டு தென் ஸ்ட்ரைட்டா ஸ்டேஜ் தான்…” என்று பேசி அனைவரையும் அனுப்பிவைத்தவள், நேரம் பார்க்க அதுவோ ஏழு என்று கட்டியது.

சிறிது நேரம் தன்னை அசுவாசபடுத்தியவள், “பாக்கியம் அக்கா.. அந்த ட்ரையல் ட்ரெஸ் எடுத்திட்டு வாங்க.. தென் டான்ஸ்க்குனு புது செட் வாங்கினோம்ல அதும் எடுத்திட்டு வாங்க” என்றவள், அவள் கேட்டது கைக்கு வரவும்,

தன்னுடை மாற்றி, பரத நாட்டிய உடை அணிந்து, முகத்திற்கு வேறு எந்த ஒப்பனையும் செய்யாமல், மூக்கில் புல்லாக்கு மற்றும், சற்றே பெரிய அளவில் இருந்த பேசரி போட்டு, நெற்றியில் பட்டையாய் முத்து நெற்றி சுட்டி அணிந்து கண்களுக்கு மட்டும் மை தீட்டி, கண்ணாடி பார்த்தாள்.

இது எப்போதுமே அவள் வழக்கம்.

எதாவது போட்டி இல்லை நிகழ்ச்சி என்று பங்கேற்கிறாள் என்றாள், இப்படி ஒரு முறை ட்ரையல் செய்து பார்ப்பாள்.. ஏதாவது மாற்றவேண்டும் என்றால் மாற்றிவிடலாமே.. பொதுவாக நடனம் ஆடும் போது சட்டென்று கீழே விழுவது புல்லாக்கு தான். ஆகையால் அதை எப்போதுமே போட்டு ஒருமுறை ஆடிப்பார்ப்பாள்.

இம்முறை புல்லாக்கோடு சேர்த்து நெற்றி சுட்டியும், பேசரியும் இடம் பெற்றுக்கொள்ள, தான் ஆடப்போகும் நடனத்திற்கு எவ்வித கண் அலங்காரம் பொருத்தமாய் இருக்கும் என்று யோசித்து, சற்றே அடர்த்தியாய் கண்களுக்கு மேலும் கீழும் மையிட்டு முடித்தாள்.

தோற்றம் திருப்தியாய் இருக்க, எதிரே இருந்த கண்ணாடி சுவரில் தன்னை ஒருமுறை சரிபார்த்து கொண்டவள்,

“எல்லாம் ஓகே வா க்கா…” என்று பாக்கியத்தை பார்த்து கேட்க,

“நீ எது செஞ்சாலும் சரிதான் மா.. அழகா இருக்கு…” என்று சொல்ல,

“சரி நீங்க போங்க… நான் ஒன்ஸ் ஆடி பார்த்துக்கிறேன்…” என, அவரும் சென்றுவிட்டார்.

கண் தெரியாத ஒரு இளம்பெண்ணுக்கு பார்வை கிடைத்தபின் அவளது உணர்வுகளும், பாவனைகளும் எப்படி இருக்கும்..?? இதுவே அவள் ஆடப்போகும் நடந்த்தின் கரு.. பட்டு என்றெல்லாம் எதையும் தேர்ந்தெடுக்கவில்லை.

பலவகையான இசை கருவிகளின் ஒலியை ஒன்று சேர்த்திருந்தாள்.. கிட்டத்தட்ட பத்து நிமிட நடனம்… மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்து, இசையை அந்த அறை நிறப்ப செய்தவள், தன் நடனத்தை தொடங்க,

அதே நேரம் ‘நடனாலாயா’வில் சரவணன் உள்ளே நுழைந்தான்.

பாக்கியம் தான் முன்னே அமர்ந்திருந்தார்.

“வா.. வாங்க சார்…” என்று திகைத்து பார்க்க,

“ம்ம்..” என்று தளயசைத்தவன், “உங்க மேம் இருக்காங்களா…??” என,

“இ.. இருக்காங்க சார்.. ரிகர்சல் பார்க்கிறாங்க…” என்றபடி உள்ளே போக விழைய,

“இருக்கட்டும்.. டிஸ்டர்ப் பண்ணவேணாம்..” என்று அவரை நிறுத்திய சரவணன்,

“நானே போய் பார்த்துக்கிறேன்..” என்று உள்ளே போக விழைய,

“ஏன்.. ஏன் சார் மறுபடியும் எதுவும் பிரச்சனையா…??” என்றார் பாக்கியம்.

அவர் கேட்ட தொனியும், அவர் முகத்தில் தோன்றிய பாவனையும் சரவணனுக்கு சிரிப்பை கொடுக்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. இது வேற விஷயம்… நானே பார்த்துக்கிறேன்…” என்றவன் குரலில் நான் தனியே அவளோடு பேசவேண்டும் என்ற பொருளும் இருக்க, பாக்கியம் அப்படியே பின் தங்கினார்.

சத்தம் வந்த அறையை நோக்கி சென்றவன், தான் வந்த சத்தம் தெரியாமல் நின்றிருந்தான். தேவி தான் ஆடிக்கொண்டு இருந்தாள். முதலில் சாதாரணமாய் பார்த்திருந்தவன், பின் அவளது நடனத்தில் லயித்து, அப்படியே நின்றுவிட்டான்..

கண்களில் விழுந்து இதயம் நுழைந்து, உயிரின் ஆழம் வரை செல்லும், காதல் என்று சொல்வது போல், கலையும் அப்படியே என்று உணர்ந்தான் சரவணன்.

தேவியின் நடனத்தை நேரில் காண்பது இப்போது இரண்டாவது முறை. முதல் முறை கோவாவில், அவனுக்கே அவனுக்கென்று ஆடியது. அப்போது பார்த்த உணர்வு வேறு.. இப்போ அவள் ஆடும் உணர்வும் சரி, அவன் காணும் உணர்வும் சரி வேறாய் இருந்தது.

சொல்லப்போனால் அவளை ஏன் காண வந்தோம் என்பது கூட மறந்து நின்றிருந்தான்… ஏனோ அன்றைய விடியலில் இருந்து சரவணனுக்கு தேவியை காண வேண்டும் போல் இருக்க, மனம் ஒருநிலையில் இல்லை.

அவளது புகைப்படத்தை எடுத்து பார்த்தான். ஆனால் ‘இதெல்லாம் எனக்கு போதாது…’ என்று அவன் மனம் சண்டித்தனம் செய்ய, இத்தனை நாள் இல்லாமல் ஏனோ இன்று போட்டு அதிகமாய் படுத்த, சரி அவளிடம் பேசுவோம் என்று அழைத்து பார்த்தான்.

ஆனால் அழைப்பு போனதே தவிர அவள் எடுக்கவில்லை.

“சரியான ஸ்டோன் ஹார்ட் இவளுக்கு.. எத்தனை டைம் கூப்பிடுறேன்… எடுக்கிறாளா….??” என்று கடிந்தவன், பின் தன் வேலையை கவனிக்க, அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது,

மாதர் சங்கம் நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு பந்தோபஸ்திற்கு கேட்டிருந்தனர். என்ன ஏதென்று விபரம் கேட்டறிந்தவன், யார் யார் எல்லாம் முக்கிய பிரமுகர்கள் வருகிறார்கள், எந்தெந்த நடன பள்ளியெல்லாம் பங்கேற்கிறது என்று விபரம் கேட்க, அவ்விபரம் இப்போது அவன் டேபிளில் இருக்க, அதை எடுத்து பார்த்தவன் கண்கள் லேசாய் விரிய,

“கால் அட்டென்ட் பண்ண மாட்டல.. இரு நேராவே வர்றேன்.. வந்து பார்த்துக்கிறேன்…”என்று அவளை காண கிளம்பியவனின் மனமோ,

‘என்ன நடந்தாலும் என்னை தான் உன்கிட்ட வர வைக்கிற மோகினி…’ என்று அவளை செல்லமாய் கடியவும் மறக்கவில்லை.

அவளிடம் பேசி அனைத்தையும் சரி செய்யவேண்டும் என்ற நோக்கில் எல்லாம் அவன் செல்லவில்லை. பார்க்கவேண்டும் என்று தோன்றியது, அவ்வளவு தான்.. ஆனால் இப்போதோ அவன் மெய் மறந்து நிற்க, தேவி தான் தன் நடனம் முடித்து இரண்டொரு நொடி நின்று  தன்னை சமன் செய்துகொண்டவள், வெளிவர திரும்ப,அப்படியே திடுக்கிட்டு, அதிர்ந்து தான் நின்றாள்.

“சனு…” என்று வாய் முணுமுணுக்க, இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொள்ள,

அவளது அலங்காரமோ இன்னும் அவனை மயக்கத்தான் செய்தது எனலாம். நடனம் பார்க்கும் போது அதெல்லாம் அப்போது அத்தனை மனதில் பதியவில்லை. இப்போதோ மையிட்ட விழிகள் அதிர்ந்து அவனை காண, உதட்டின் மேலே லேசாய் வேர்த்திருக்க, புல்லாக்கும், பேசரியும் போட்டு, நடன உடையில் நிற்பவள், அவனுக்கு முற்றிலும் புதிதாய் தெரிந்தாள்..

அவன் பாசையில் சொல்லவேண்டும் என்றால் மோகினியாய் தெரிந்தாள்.

தேவி அப்படியே நிற்க, சரவணன் தான் ஒவ்வொரு அடியாய் அவளை நோக்கி வர, அவளருகே வந்தவன்,   

“நிஜமா நீ மோகினி தான்…” என,

“நான்… நீ… நீ … இங்க.. என்ன…???” என்று வார்த்தைகளை தேடினாள் தேவி.

அதன்பிறகே சரவணனுக்கு தான் ஏன் வந்தோம் என்று நினைவில் வர, சட்டென்று தன் முகத்தை மாற்றிகொண்டவன், அவளை விட்டு ஓரடி தள்ளி நின்றவன்,

“ஒரு இன்வெஸ்டிகேசன்…” என்றான் மிடுக்காய்.

அவ்வளவு தான் தேவிக்கு அடுத்த பதற்றம் தொற்றிக்கொண்டது..

“என்.. என்னாச்சு.. அகைன் ஏதாவது ப்ராப்ளமா..??” என்று பதற்றமாய் கேட்க,

“நோ நோ…” என்று மெதுவாய் சொல்லி அவள் பதற்றம் ரசித்தவன்,

“இங்கேயே பேசுவோமா… இல்லை உன் ரூம் போகலாமா…” என,

“ஓ.. நீ.. நீ போ.. நான் ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு வர்றேன்…” என்றாள்.

“எனக்கு அதுக்கெல்லாம் டைம் இல்லை.. அதுவுமில்லாம இதுவே எனக்கு கம்பர்ட்டா தான் இருக்கு…” என்று சொல்ல,

“என்ன…???!!” என்று அவள் கேட்க,

“உன்னை கேள்வி கேட்க வந்தது நான்.. ஆனா நீதான் அதை செய்ற…” என,

“ம்ம்ச்… ரூம் போலாம்…” என்றவள், முன்னே நடக்க, அவனோ வெகு நிதானமாய் அவள் பின்னே நடந்து வந்தான்.

வேகமாய் சென்று தன்னிருக்கையில் அமர, சரவணனோ அவளையே பார்த்தபடி எதிர் இருக்கையில் அமர்ந்தான். யாருமே இல்லை.. பாக்கியம் முன்னே இருந்தார். அழைத்தால் தவிர வரம்மாட்டார்..

ஏனோ நெஞ்சம் படபடவென்று அடிக்க, இமைகளும் அதற்கு போட்டியாய் படபடக்க, என்ன என்று பார்ப்பது போல் பார்த்தாள்.

“கிரீன் கலர் ஐ லைனர் போடலையா..???” என,

“வாட்…” என்று சலித்தவள், பின் முதல் நாள் நினைவு என்று புரிந்து, உள்ளம் லேசாய் ஜில்லென்று உணர்ந்தாலும், “இது கேட்கத்தான் வந்தியா…” என,

“ஹ்ம்ம் நோ…” என்றான்.

“தென்…??”

“மாதர் சங்கம் என்கிட்டே தான் செக்யூரிட்டி கேட்டிருக்காங்க…”

“ஓ.. குட்…”

“விஐபிஸ் நிறைய வர்றாங்க.. சோ எந்த பிராப்ளமும் இருக்க கூடாதே.. அதான் யார் யார் பார்ட்டிசிபேட் பண்றாங்களோ, அவங்க கிட்ட கொஞ்சம் சின்ன டீடைல் கலக்சன்.. ஆல்ரடி புல் டீடைல்ஸ் தெரியும் தான்.. பட் இது அபிசியல்…”

“ஓஹோ… சோ… ஏசிபி சார் எல்லாரையும் நேரில் பார்த்து டீடைல்ஸ் கலக்ட் பண்றாரோ..” என்றவளின் குரலில் கேலி எட்டிப்பார்க்க,

“ஆமா அதான் எனக்கு வேலை… கால் பண்ணேன்.. நீ எடுக்கல…” என்று குற்றம் சாட்டினான்.

“ஹ்ம்ம்.. ரியல்லி சாரி.. நான் போன் பார்க்கல…” என,

“பார்த்திருந்தா மட்டும் அப்படியே…” என்று எதுவோ சொல்ல வந்தவன், மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் பேச்சை நிறுத்தினான்.

“ஏன் சனு ஸ்டாப் பண்ணிட்ட..என்ன சொல்ல வந்த…”

“நத்திங்…” என்றவனின் பார்வை சுற்றிலும் ஓட, நிறைய பரிசுகள் அங்கே அடுக்கியிருப்பது கண்டான்.

“இதெல்லாம் நீ வாங்கினதா…??” என

“ம்ம் ஆமா… டான்ஸ் ஆடி வாங்கினது.. கடைல வாங்கினது இல்லை…” என்று அவள் சொன்ன விதத்தில் அவனுக்குமே லேசாய் சிரிப்பு எட்டிப்பார்க்க, அதை மறைத்தவன்,

“ஓ குட்.. நல்ல டேலேன்ட் தான் போல… ஆமா டான்ஸ் ஸ்கூல் எப்போ ஸ்டார்ட் பண்ண…” என,

‘இதுக்கு தான் நீ வந்தியா…’ என்பது போல் பார்த்து, “த்ரீ இயர்ஸ்…” என்றாள்.

“த்ரீ இயர்ஸ்.. பட் நல்ல இம்ப்ரூவ்மென்ட்… எப்படி.. அவ்வளோ சீக்கிரம்..” என்று ஆச்சர்யம் காட்ட,

“ஹ்ம்ம்… ஒருசிலர் முதல் அட்டெம்ப்ட்லயே ஐ ஏ எஸ் ஆகுறது இல்லையா அதுபோல தான்..” என்றாள்.

அவள் தன்னை தான் சொல்கிறாள் என்று புரிந்தாலும், அதெல்லாம் சட்டை செய்யாமல்,

“ஓகே டூ குட்.. நல்லா பெர்பார்ம் பண்ணு..” என்று கிளம்ப எத்தனிக்க,

“அவ்வளோதனா…” என்றாள் அவள் அறியாமல்..

“ம்ம் வேறென்ன…” என,

தான் கேட்டது சுதாரித்து, “இல்ல இன்வெஸ்டிகேசன் சொன்ன…” என்று புருவம் உயர்த்த, அவள் கண்கள் காட்டிய பாவனையும், பேசும் போது, அவள் புல்லாக்கு ஆடிய ஆட்டமும், அவனை இம்சை தான் செய்தது.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தோற்றம்.. ஒவ்வொரு பாவம்..

“இன்வெஸ்டிகேசன்…” என்று சொன்னவன், மெல்ல அவளருகே வர, தேவியோ தன்னிருக்கயிலேயே அப்படியே அமர்ந்திருந்தாள், எழ நினைத்தாலும் முடியவில்லை.

கண்கள் இமைக்காது அவனையே பார்க்க, அவனோ கிட்ட வந்து, மெல்ல அவள் புல்லாக்கை தொட்டு பார்த்து, மெல்ல அவள் இதழ் வருடியவன், அவளை இறுக அணைத்து,

“மனசை கொல்ற மோகினி..” என்று சொல்லிவிட்டு மீண்டும் சென்றுவிட்டான்.                       

அவன் அருகாமை மனதை மயக்க தொடங்கினாலும்,சத்தியமாய் தேவிக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான்..ஏன் வந்தான் ஏன் போனான்.. ஒன்றுமே தெரியாமல் விழித்திருக்க,, போன வேகத்தில் திரும்பி வந்தவன்,

அவள் அப்படியே அமர்ந்திருப்பது கண்டு, மெல்ல சிரித்தவன், அவளது புல்லாக்கை எடுக்க, அது லேசாய் வலி கொடுக்க,

அதில்  முகத்தை சுளித்து என்னவென்று பார்க்க, அவள் கண் முன்னே சரவணன் புல்லாக்கை கையில் வைத்து நிற்க,

“ஹே.. என்ன பண்ண…??” என்று லேசாய் அதிர்ந்து கேட்டாள்.

“நத்திங்… இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…” என்று சொன்னவன்,

“நல்லா பெர்பார்ம் பண்ணு…” என்று சொல்லி சென்றுவிட்டான்.

அவன் போவதையே பார்த்தவளுக்கு, ‘இந்த புல்லாக்கு எடுக்கவா வந்தான்…’ என்று தோன்ற,

“அட அல்பமே…” என்று சொன்னவளுக்கும் சிரிப்பு வந்தது.

காதல் சில அல்பத் தனங்களையும் செய்ய வைக்கும்…             

 

 

 

 

Advertisement