Advertisement

துளி – 17

“தேவியா….”

“ம்ம்..”

“அவ.. அவளை எப்போ.. இல்ல அவகிட்ட பேசினயா…??”

“ம்ம் எஸ் மாம்.. நேத்து ஈவ்னிங் பார்த்தேன்.. தென் இன்னிக்கு மார்னிங் பேசும் போது உங்களை தான் கேட்டா.. என்னை கூட கேட்கலை எப்படி இருக்கன்னு…” என்று முழு விபரமும் சொல்லாது சொல்ல, கோதாவரிக்கோ ஒன்றுமே புரியவில்லை.

எங்கே பார்த்தான், முதலில் ஏன் பார்த்தான்.. காலையில் பேசினாள் என்றால், அப்படி காலையில் பேசுமளவு என்ன அவசியம் என்றெல்லாம் புத்தி யோசிக்க, மேற்கொண்டு மகன் என்ன சொல்வான் என்பது போல் பார்க்க,

அவனோ தட்டில் இருக்கும் உணவை ரசித்து உண்டு கொண்டு இருந்தான்.

அசோக் குமாரும் மகனின் செயலையே பின்பற்ற, கோதாவரி நொடியில் தவித்துவிட்டார்..

“ச.. சரவணா…” என,

“ம்ம் என்னம்மா….” என்றான்.

“என்.. என்ன கேட்டா…?? எதுக்கு அவளை பார்த்த…??” என்றவருக்கு பேச்சு சீராகவே வரவில்லை..

“பார்த்து ரொம்பநாள் ஆச்சு இல்லையா.. அதான் பார்த்தேன்… தென் பேசியும் ரொம்ப நாள் ஆச்சு இல்லையா அதான் பேசினேன்…” என, கோதாவரிக்கு இன்னும் டென்சன் கூடியது.

இத்தனை நாள் இந்த பேச்சே இல்லை. வீட்டில் யாரும் இதைப்பற்றி, தேவி பற்றி யாரும் பேசியதில்லை. அன்று நடந்ததற்கு பிறகு, அதுவும் இப்போது கொஞ்ச நாளாய் அனைத்தும் பழையபடி சீராய் போவது போல் இருந்தது.

ஆனால் இன்று சரவணன் திடீரென்று மீண்டும் தேவி பேச்சு ஆரம்பிக்கவும் அதை எப்படி எடுத்துகொள்ள என்று புரியவில்லை கோதாவரிக்கு. அவரை பொருத்தவரைக்கும் தனக்கு பிடிக்கவில்லை என்றதும் மகன் சற்றே மனம் மாறிவிட்டான் என்று நினைத்தார்.

ஆனால் இப்போது மீண்டும் தேவி பற்றி பேச்சு வரவும் அதை இலகுவாய் எடுக்கமுடியவில்லை..

“என்.. என்னங்க…” என்று தயக்கமாய் அசோக் குமார் முகம் பார்க்க,

“என்னமா…” என்றார் அவரும் வெகு நிதானமாய்..

ஆனால் கோதாவரி பேசும் முன்பு, “அம்மா டென்சன் எல்லாம் வேண்டாம்.. தென் அகைன் மயங்கி விழுந்திட போறீங்க.. ஒண்ணும்மில்லஒரு சின்ன பொண்ணு மிஸ்ஸிங் கேஸ்.. தேவி ஸ்டூடன்ட் அவ.. அதான் பார்க்க வேண்டியது பேச வேண்டியது இருந்தது.. அப்போதான் உங்களை பத்தி கேட்டா.. கேட்டதை உங்கட்ட சொல்லிடனுமா இல்லையா… அவ்வளோதான் வேற ஒண்ணுமில்லை…” என்றவன் இதற்குமேல் இதில் ஒன்றுமில்லை என்பது போல் எழுந்து சென்றுவிட்டான்.

ஆனால் கோதாவரிக்கு தான் இன்னும் குழப்பமாய் போனது.

“என்.. என்னங்க… என்ன சொல்லிட்டு போறான்… பார்த்தேன் பேசினேன் சொல்றான்.. ஆனா ஒண்ணுமில்ல சொல்றான்…” என,

“நடந்ததை சொல்றான் மா…” அவ்வளோதான் என்றார் அவர்.

“ந… ம்ம்ச்… நான் என்ன சொல்றேன் நீங்க என்ன சொல்றீங்க…?? அவன் ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டு போறான்…” என்று கோதாவரி பல்லை கடிக்க,

அசோக் குமாரோ மகன் தன் மனைவியின் எண்ணங்களை தூண்டி விட்டான் என்று நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.

“ஏதாவது இருந்தா தான அவனே சொல்வான்ல கோதா…” என,

“அப்.. அப்போ… இன்னும் அவன் மஞ்சுவோட பொண்ண லவ் பண்ணிட்டு தான் இருக்கானா… ” என,

“ஷ்ஷ்ஷ்… எத்தனை டைம் சொல்றது.. தேவி மஞ்சுவோட பொண்ணுதான் இல்லைன்னு இல்லை.. ஆனா அவ ஒரு தனி மனுசி மா.. அப்படி பாரேன்… அவ உன்னை கேட்டிருக்கா, அதை உன்கிட்ட சொல்றான்.. இதில மேற்கொண்டு இவ்வளோ பேச என்னயிருக்கு… ” என்று சலிக்க,

“அதில்லைங்க…” என்று கோதாவரி என்ன சொல்ல வந்தாரோ,

“அம்மா…” என்று காக்கி உடையில் வந்து நின்ற மகனை பார்த்து கப்பென்று வாய் மூடிக்கொண்டார்.

“தேவி… என்னைவிட சின்னவ.. ஆனா அவளே என்னை பத்தி அவ்வளோ ஈசியா அவ பேரன்ட்ஸ் கிட்ட பேச முடியுது.. அவ மனசில என்னை பத்தி என்ன நினைக்கிறான்னு சகஜமா பேச முடியுது.. ஒருவார்த்தை அவ உங்களை கேட்டான்னு தான் சொன்னேன்.. ஆனா அதுக்கே இங்க இவ்வளோ பேச்சு… ம்ம்ச்..” என்றவன் விடுவிடுவென சென்றுவிட்டான்.

ஒன்றும் செய்ய முடியாமல், ஒன்றும் சொல்ல முடியாமல் சரவணன் போவதையே பார்த்தவர், பின் கணவரிடம் திரும்பி,

“என்.. என்னங்க இப்படி பேசிட்டு போறான்..” என,

“வேறென்ன சொல்வான்.. அவனுக்கு உன்கிட்ட அந்த பொண்ணு கேட்டதை சொல்லணும் தோணிருக்கு சொன்னான்.. ஆனா நீ இவ்வளோ கேள்வி அடுத்து கேட்பன்னு தெரிஞ்சா சொல்லியே இருக்க மாட்டான்…” என,

“ம்ம்ச்.. நானென்ன தப்பா கேட்டேன்… என்ன எதுன்னு கேட்க கூட கூடாது.. அப்.. அப்போ என்கிட்டே ஏன் சொல்லணும்.. இதோ பேசிட்டு இருக்கும் போதே பாதில போயிட்டான்.. இத்தனை நாள் இந்த பேச்சில்ல ஆனா இப்போ வரவும் தான் என்னன்னு கேட்டேன் அது தப்பா….” என்று சற்றே குரலை  உயர்த்தினார் கோதாவரி..

அவரையே ஒரு பார்வை பார்த்த அசோக் குமார், “ஹ்ம்ம் சரி அவனை விடு.. நீ சொல்லு நீ என்ன முடிவு பண்ணிருக்க?? ” என்று கேட்க,

“என்ன முடிவு?? எதை பத்தி…??” என்று புருவம் சுருக்கினார் கோதாவரி..

“சரவணன் பத்தி.. தேவி பத்தி…”

“ஓ…” என்றவர், மேலே எதுவும் சொல்லாமல், தன் தட்டில் இருந்ததை வாயில் தள்ள,

“கோதா நான் உன்கிட்ட தான் கேட்கிறேன்…” என்று அசோக் குமார் அழுத்தமாகவே கேட்டார்.

“என்ன சொல்ல சொல்றீங்க…?? இல்லை நான் என்ன சொல்லணும்… இங்க பாருங்க எனக்கு மஞ்சு அவ்வளோ பிடிக்காது தான்.. நான் இல்லைன்னு சொல்லலை.. ஆனா இந்த காலத்து பசங்க இருக்காங்களே அவங்களை என்ன சொல்ல,

நான் கோவால நடந்திட்டது தப்பு தான். அந்த நேரத்து கோவம் அப்படி பேசிட்டேன்… அந்த பொண்ணும் எனக்கு முடியலைன்னு கிளம்பி போயிடுச்சு.. ஆனா அடுத்து இவங்க ரெண்டு பேரும் என்ன பண்ணிருக்கணும்??

ஒன்னு இவனாவது எனக்கிட்ட அடுத்து அடுத்து என்னன்னு பேசிருக்கணும்.. இல்லை தேவியாவது அவ வீட்ல சொல்லி ஏதாவது ஸ்டெப் எடுத்திருக்கணும்.. ரெண்டுமே இல்லாம கிணத்துல போட்ட கல்லு மாதிரி அவங்க அவங்க வேலை பார்த்திட்டு இருந்தா எப்படி..?? இல்லை இவங்க இன்னும் லவ் பண்றாங்களாஇல்லையான்னே தெரியாம நான் என்ன முடிவு எடுக்க…” என்று கோதாவரி இத்தனை நாள் தன் மனதில் இருந்ததை எல்லாம் பேசி முடிக்க,  அசோக் குமார் ஆச்சர்யமாய் பார்த்தார்.

இந்த வகையில் அவர் யோசிக்கவே இல்லை. ஆனால் கோதாவரி இப்படி சிந்தித்திருப்பது மனதிற்கு ஒரு நிம்மதி கொடுத்தது. எதோ ஒரு வகையில் கோதாவரி சரவணன் தேவி உறவை ஏற்றுகொண்டதாகவே பட்டது.

ஒன்றும் சொல்லாமல் அப்படியே பார்க்க,

“என்ன அப்படி பார்க்கிறீங்க.. எனக்கு பையன் சந்தோசம் தான் முக்கியம் அப்படி இப்படின்னு எல்லாம் நான் வசனம் பேச மாட்டேன்.. எனக்கு அப்போ கோவால வச்சு எல்லாம் சொல்லும் போது சுத்தமா பிடிக்கல… எனக்கு இப்பவும் மஞ்சுகிட்ட சகஜமா பேச வருமான்னு தெரியாது..

ஆனா யோசிக்கும் போது அந்த பொண்ணு தேவி அதுமேல என்ன தப்பிருக்கு.. பிடிச்சிருக்கு பழகியிருக்காங்க. நான் எந்த மாதிரி பொண்ணு இவனுக்கு கொண்டு வரணும் நினைச்சேனோ அது போல தானே அவளும் இருக்கா… ஆனா இவங்க ரெண்டு பேரும் இதை பத்தி பேசாம நான் ஒன்னும் சொல்ல போறதில்ல..

இதோ இப்ப கூட பேசினேன் பார்த்தேன் சொன்னான்.. அடுத்து என்னடான்னு கேட்கிறதுக்கு முன்னாடி ஒண்ணுமில்லன்னு எழுந்து போயாச்சு.. நான் என்ன நினைக்க…” என்றவர் உண்ண தொடங்கிவிட்டார்.

அசோக் குமாருக்கு இதுவே கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. ஓரளவு தன் மனைவி மாறியது தெரியும். ஆனால் இவ்விசயத்தில் இப்படி ஒன்றை யோசித்திருப்பார் என்று நினைக்கவில்லை.

ஆனால் அவர் ஒன்று அறியவில்லை, அவர் மட்டுமென்றில்லை யாருமே அறியாத ஒன்று. அது கோதாவரி ஒரு வாரம் முன்பு தேவியை சந்தித்தது.

ஆம் இருவரும் சந்தித்தனர். சொல்லி வைத்தெல்லாம் இல்லை. எதேற்சையாய்.. ஒரு திருமண வரவேற்ப்பில் சந்திக்க வேண்டியதாய் போனது. கோதாவரியின் தோழியின் தங்கை மகளுக்கு திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது.

அந்தப்பெண் வேறு யாருமில்லை தேவியுடன் கல்லூரி பயின்றவள். காட்டாயம் வந்தே ஆகவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்க, மஞ்சு தான்

“போய்ட்டு வா தேவி.. உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்…” என்று அனுப்பி வைத்தார்.

கோதாவரி முதலில் தேவியை காணவில்லை. தேவியும் தான். வந்திருந்த ஒரு சில தோழிகளுடன் அவளுக்கு நலம் விசாரிக்கவே நேரம் சரியாய் இருந்தது.

தேவி அமர்ந்த இடத்திற்கு சற்று தள்ளி அமர்ந்திருந்த கோதாவரி மற்றும் அவர் நட்பு வட்டம், அவர்களது பேச்சில் முழு மூச்சில் லயித்திருக்க,

“கோதா உன் பையன்னுக்கு பொண்ணு பார்க்கிறது என்னாச்சு…” என்று ஒரு பெண்மணி கேட்க, சட்டேன்று கோதாவரிக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை.

அவரது மனம் தன்னைப்போல் தேவியை நினைக்க, பதில் வரவில்லை.

“என்ன கோதா…அமைதியா இருக்க… அதுவும் இப்போ சரவணன் வேலைக்கு வேற சேர்ந்திட்டான்.. எப்படி பட்ட உத்தியோகம்… நீ நான்னு போட்டி போட்டு வருவாங்களே பொண்ணு கொடுக்க…”

“அ.. ஆமா.. ஆனா எங்களுக்கு தான் எதுவும் மனசுக்கு திருப்தியா இல்லை…”

“ஓ.. கோதா.. இங்க கூட நிறைய நம்ம சைட் பொண்ணுங்க வந்திருக்காங்க.. பாரேன்.. இப்படி கல்யாண வீட்டுக்கு வர்றது எல்லாம் இப்படி பார்க்க தானே.. உனக்கு யாரையாவது பிடிச்சா சொல்லு, தெரிஞ்ச குடும்பம்னா பேசலாம்..” என்று இன்னொரு பெண்மணி சொல்ல,

“ஹா.. இங்.. இங்கயா..” என்றவருக்கு கோவா நியாபகமும், தேவி கண்ணீரோடு போனது எல்லாம் நினைவில் வந்தாலும், அப்படி இங்கே யார் யார் வந்திருக்க போகிறார்கள் என்பது போல் விழியை சுழல விட, அப்படியே ஓரிடத்தில் அவரது கண்கள் நிலைத்து நின்று லேசாய் விரிந்தது.

தேவி தான்..

ஆரஞ்சு பச்சை நிற டிசைனர் சல்வாரில் தலையில் ஒருபக்கம் மட்டும் நீல கிளிப் சைட் வாக்கில் போட்டு, இன்னொரு பக்கம் மொத்த கூந்தலையும் எடுத்து விட்டு, காதுகளில் பெரிய ஜிமிக்கி போட்டு நெற்றியில் சிறு கல் போட்டு வைத்து அழகாய் மேடையை நோக்கி அமர்ந்திருந்தாள்.

கோதாவரியின் கண்கள் தேவியிலையே நிலைக்க,

“என்ன கோதா.. அந்த பொண்ணவே பார்க்கிற… அவ்வளோ பிடிச்சிருக்கா…” என்று ஒருவர் கேட்க,

“அட தேவியா…. ரொம்ப நல்ல பொண்ணு… உன் பையனுக்கு பொருத்தமா இருப்பா… சொந்தமா டான்ஸ் ஸ்கூல் வச்சிருக்கா.. நல்ல பொண்ணு… என் பேத்தி அந்த பொண்ணு கிட்ட தான் டான்ஸ் பழகுறா… நான் வேணா பேசவா கோதா…” என்று இன்னொருவர் கேட்க,

கோதாவரிக்கோ மனம் அடித்துக்கொண்டது.. சுற்றி இருப்பர்வர்கள் கேட்டதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அதற்கும் மேலாய் தேவி தன்னை பார்த்துவிட்டால் எப்படி நடந்துகொள்வது, என்றும் தெரியவில்லை.

“ஹே கோதா…” என்று அருகில் இருப்பவர், கோதாவரி தோள் தொட,

“ஹா.. என்ன..” என்று திரும்பியவர், அனைவரையும் என்னவென்பது போல் பார்க்க,

“உனக்கு அந்த பொண்ணு பிடிச்சிருந்தா சொல்லு கோதாவரி.. நான் வேணா பேசுறேன்…” என்று மீண்டும் அந்த பெண்மணி சொல்ல,

“இல்.. இல்ல.. எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு தான் அந்த பொண்ணை பார்த்தேன். அதுவுமில்லாம சரவணன் இப்போதைக்கு கல்யாணம் வேணாம் சொல்லிட்டான்.. இப்போதானே ஜாயின் பண்ணிருக்கான் அதுனால கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொல்லிட்டான்..” என்று அதோடு அந்த பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தார்.

அதன் பிறகு பேச்சு வெவ்வேறு திசைக்கு தாவ, கோதாவரிக்கோ அவர் மனம் தேவியிலேயே நின்றது.

தன்னை விட வயதில் அத்தனை சிறியவள் ஆனால் அவளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவித்தார்.. குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுத்தது..

தேவி பெரிய மனுசி போல் அன்று அழகாய் உங்கள் மகன் உங்களுக்கு தான் முதலில் என்று சொல்லி சென்றது இப்போது மனதில் வந்து கண்களில் அந்த காட்சிகள் வந்து போனது.

அங்கே இருந்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று தோன்ற, ஆனால் யாரும் விடுவதாய் இல்லை. சாப்பிட்டு தான் போகணும் என்று இருக்கவைத்து விட்டனர்.

கைகளில் உணவு தட்டை வைத்து நின்றிருந்தவருக்கு உண்ணும் மனநிலையும் இல்லை, அங்க இருக்கவும் முடியவில்லை. வேண்டா வெறுப்பாய் பெயருக்கு என்று கொரித்து கொண்டு இருந்தார்.

அந்நேரம் பார்த்து தேவி தன் தோழிகளோடு அந்தபக்கம் வர, அவள் இன்னமும் கூட கோதாவரியை காணவில்லை.

“ஹே… பன்னீர் டிக்கா அந்த சைட் இருக்க..” என்று ஒருத்தி சொல்ல,

“எனக்கு வேணாம்.. இதுவே ஜாஸ்தி…” என்று தேவி சொல்ல,

“உனக்கு வேணாட்டி என்ன.. என்கூட வா…” என்று அவளை ஒருகையில் இழுத்து செல்ல,

“ஹே வெய்ட் வெய்ட் நானே வரேன்….” என்று சொல்லிக்கொண்டே சென்றவள், கோதாவரியை கவனிக்காமல் அவர் மீது மோதிவிட்டாள்.

“ஐயோ சாரி…” என்று வேகமாய் திரும்பியவள் அங்கே கோதாவரியை கண்டு அப்படியே திகைத்து நின்றுவிட, கோதாவரி கையில் வைத்திருந்த தட்டு கீழே விழுந்திருக்க, அவர் அருகில் இருந்த பெண்மணியோ

“என்னம்மா பார்த்து வர கூடாதா…” என்று லேசாய் கடிய,

“ஸா.. சாரி ஆன்ட்டி. நான்.. நான் நிஜமாவே கவனிக்கலை…” என்று தேவியின் வாய் சொன்னாலும், கண்களோ கோதாவரி முகத்தில் தான் நிலைத்தது.

“என்ன பார்த்து வந்தீங்க…” என்று இன்னொரு பெண் தொடங்கும் முன்பே,

“அந்த பொண்ணு பார்த்து தான் வந்தா.. நான் தான் அவ வர்றது தெரியாம திரும்பினேன்…” என்று கோதாவரி பட்டென்று சொல்ல, தேவிக்கோ ஆச்சர்யம், அதிர்ச்சி எல்லாம்.

தேவியை இழுத்து செல்ல முயன்ற அவளது தோழியும், “சாரி ஆன்ட்டி.. என்னோட மிஸ்டேக் தான்…” என,

“இல்லம்மா.. இதில என்ன இருக்கு… சில நேரங்கள்ல இப்படி தவர்றது சகஜம்…” என்று தேவியை பார்த்தே சொன்னவர், வேறொரு தட்டு எடுத்து அதில் தனக்கு வேண்டிய உணவுகளை நிரப்பிக்கொண்டார்.

அவருக்கே உள்ளூர ஆச்சர்யம் தான். தானா இப்படி தேவியை பார்த்து இவ்வளவு நிதானமாய் பேசினோம் என்று. ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

ஆனால் தேவிக்கு தான் பலத்த அதிர்ச்சி.. இடித்தது கோதாவரி மேல் என்று தெரிந்ததும், மனம் திக்கென்று ஆனது.

‘போச்சு.. எல்லார் முன்னாடியும் திட்ட போறாங்க…’ என்று அவர் பேச்சை கேட்க சற்றே மனதை தயார் படுத்தி நிற்க, அவரோ தான் தான் கவனிக்கவில்லை என்று சொன்னதும், இதெல்லாம் நிஜமா என்று அப்படியே உறைந்துவிட்டாள்.

“என்னடி அவங்களே ஒன்னும் சொல்லல.. நீ ஏன் இப்படி நிற்கிற… வா போவோம்..” அவளை போட்டு மறுபடியும் இழுத்தபின்னே தான் சுயநினைவு வந்தவள், பின் என்ன நினைத்தாளோ, 

“நீ போ நான் அவங்க கிட்ட பேசிட்டு வரேன்…” என,

“தெரிஞ்சவங்களா….”

“ம்ம் ஆமா… கொஞ்சம்… நீ போ நான் பேசிட்டு வரேன்…” என்று சொல்லி தேவி கோதாவரி அருகில் சென்றாள்.

தேவி தன்னை நோக்கி வருவது தெரிந்தாலும், கோதாவரி அப்படியே தான் நின்றிருந்தார். அவர் நினைத்தால் அவளை அப்போதே எடுத்தெறிந்து பேசியிருக்கலாம். அத்தனை பேரின் முன்னும் திட்டியிருக்கலாம்.. ஆனால் செய்யவில்லை. முடியவில்லை.

இப்போதும் கூட அவள் வருவது தெரிந்து நகர்ந்து போகலாம். ஆனால் போக முடியவில்லை. அப்படியே தான் நிற்க,

“ஆன்ட்டி…” என்றாள் மெல்ல..

ஒன்றும் சொல்லாமல் தேவியை பார்க்க, அவளோ “எப்.. எப்படி இருக்கீங்க ஆன்ட்டி…” என,

“ம்ம்.. நல்லாருக்கேன் மா… நீ…??” என்றார் பதிலுக்கு.

நீ என்று சொல்லும் போதே அவருக்கு மனம் திடுக்கிட்டது. அவளை அப்படி நோகடித்துவிட்டு இன்று நீ எப்படி இருக்கிறாய் என்ற அர்த்தத்தில் கேட்டால் அவள் என்ன சொல்வாள். முதல் முறை பார்த்த பொழுது அத்தனை அலட்சியம் காட்டியவருக்கு இப்போது சிறிதும் அப்படி செய்ய முடியவில்லை.

“நா..நான்.. ஐம் பைன் ஆன்ட்டி.. சாரி உங்களை கவனிக்கலை.. இல்லாட்டி அப்போவே வந்து பேசிருப்பேன்… சாரி அகைன் ஆன்ட்டி.. தட்டு கீழ விழுந்திட்டு…” என்று வருந்தி சொல்ல,

“இதிலென்ன மா இருக்கு. பரவாயில்லை நான் ஒன்னும் நினைக்கலை.. நீ சாப்பிடு.. தட்டில இருக்கிறது அப்படியே இருக்கு…” என்று சொல்ல, அவரை இன்னும் ஆச்சர்யமாய் பார்த்தவள் சரி என்று தலையை ஆட்டினாள்.

கோதாவரிக்கு அப்போது தோன்றியது மகன் எப்படி இவளில் விழுந்தான் என்று. கல்பனா எப்போதும் தேவி பற்றி பேசும்போது ‘அவ்வளோ பாந்தம் தேவி…’ என்பதும் நினைவில் வர, எல்லாம் சேர்ந்து கோதாவரிக்கே எங்கே தேவியை பிடித்து விடுமோ என்று கூட தோன்றியது.

முதல் முறையாய் அவருக்கு பிடிக்காத மஞ்சுவின் பெண் என்பதையும் தாண்டி தேவி, தேவியாகவே அவர் கண்களுக்கு தெரிய, ஆனால் இன்னும் மனம் அவளை மருமகளாய் ஏற்றுகொள்ள எல்லாம் பக்குவம் வரவில்லை.

அன்று நடந்த இந்த நிகழ்வுகளின் தாக்கம் தான் இப்போது கோதாவரி அசோக் குமாரிடம் பேசியது.

தாங்கள் சந்தித்தோம் என்று தேவியும் யாரிடமும் சொல்லவில்லை, கோதாவரியும் யாரிடமும் சொல்லவில்லை.. சொல்வதற்கான அவசியமும் ஏற்படவில்லை.

பார்த்தோம் அவ்வளவு தான் என்று இருந்தனர். பொதுவிடம் என்பதால் கோதாவரி எதையும் வெளிக்காட்டவில்லை என்று தேவி எண்ணியிருந்தாள். 

ஆனால் அவள் அறியவில்லை கோதாவரி மனதில் தன் மீதான எண்ணம் மாறியிருக்கிறது என்று. அறிந்திருந்தால் சரவணனோடு சற்று நன்றாய் பேசியிருப்பாளோ என்னவோ.

ஒருவேளை தன்னை பார்த்ததை எதுவும் சொல்லிருப்பரோ என்று தெரிந்துகொள்ளவே அவள் சரவணனிடம்

‘ஆன்ட்டி எப்படி இருக்காங்க…’ என்று ஆரம்பித்தது.

அதை சரியாய் அவன் தவறாய் புரிந்துகொண்டு அவளை பேசிவிட, தேவிக்கும் இப்போது மனதில் ஒரு எண்ணம்..

“நான் என்ன தப்பா பண்ணிட்டேன்.. ரொம்ப ஓவரா போறான்.. அவன் அம்மாக்காக தானே…” என்று அவளும் இருகிக்கொண்டாள்.  

சரவணனோ தேவியோ ஒன்றும் சொல்லாமல் தான் எதுவும் முடிவெடுக்க போவதில்லை என்று கோதாவரி சொல்லிவிட,

இது அவர்கள் இருவரும் பேசி முதலில் ஒரு முடிவுக்கு வந்த பின் தான் வேறெதுவும் என்று தியாகுவும் மஞ்சுவிடம் சொல்லிவிட,

‘எப்பவுமே அம்மா பத்தி தான் நினைக்கிறா.. அப்போ நான் யார் அவளுக்கு… நான் முக்கியமில்லையா… இனி நானா எதுவும் செய்ய போறதில்ல…’ என்று சரவணன் பிடிவாதம் பிடிக்க,

‘நான் என்ன சொல்ல வந்தேன்னு கூட கேட்காம இப்படி பேசுறான்.. இவன் அம்மாக்காக பார்த்தா என்னை திட்றான்.. அப்படியே இருக்கட்டும்…’ என்று தேவியும் தன் எண்ணத்தில் உறுதியாய் இருக்க,

அனைவருமே தங்கள் முடிவில் இருந்து மாறும் நிலை வருமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.  

 

 

 

 

 

 

 

Advertisement