Advertisement

துளி – 16

தேவிக்கு சுத்தமாய் உறக்கம் வரவில்லை. எப்படி வரும்… எப்படி மனம் ஒருநிலைப்பட்டு உறங்க முடியும். அவள் சாதாரணமாய் நன்றாக உறங்கியே பல நாட்கள் ஆனது. இதில் தன்னிடம் பயிலும் மாணவி காணவில்லை என்று தெரிந்ததும் எப்படி உறக்கம் சிறிதேனும் வரும்.

சுத்தமாய் முடியவில்லை..

வீட்டிற்கு வந்தபின், அப்பா அம்மா கேட்கும் கேள்விக்கு கடமைக்கே என்று பதில் சொல்லி, அவர்களின் கட்டாயத்திற்காக உண்டு, அறைக்கு வந்து விழுந்தவளுக்கு மனமும் உடலும் அத்தனை அலுப்பை உணர்ந்தது.

கண்களை மூடினாலோ ஓர் பயம் வந்து தன்னை சூழ்வதை உணர்ந்தாள்.

“கடவுளே அவ சின்ன பொண்ணு.. எதுவும் ஆகிருக்க கூடாது…சீக்கிரம் கிடைச்சிடனும்..” என்று உருப்போட்டு, அவ்வபோது ஸ்ருதியின் அன்னைக்கு வேறு அழைத்து எதுவும் விவரம் தெரிந்ததா என்றும் கேட்டு, சுத்தம் அத்தனை பாடாய் இருந்தது.

வெகுநேரம் வரை டிவி முன் அமர்ந்திருந்தாள். இருக்கும் அத்தனை செய்தி சேனல்களையும் மாற்றி மாற்றி பார்த்தபடி இருந்தாள். எதாவது எதாவது தகவல் தெரிகிறதா என்று மாற்றி மாற்றி பார்த்ததில் ஒரு பிரயோசனமும் இல்லை.

“தேவி… இவ்வளோ டென்சன் ஆகுறது நல்லதுக்கில்லை… அந்த பொண்ணு கிடைச்சிடுவா… கொஞ்சம் ரிலாக்ஸா இரு…” என்று மஞ்சு சொல்ல,

“இல்ல மாம்.. ஐ கான்ட்.. நல்ல பொண்ணு அவ… மிஸ் மிஸ்னு அப்படி பேசுவா.. சொல்லி குடுக்கிறதா அப்படியே அழகா ஆடுவா…” என்று கண்கள் கலங்கி சொல்லும் மகளுக்கு என்ன சொல்ல என்று அப்போதும் அந்த தாய்க்கு தெரியவில்லை.

இப்போதெல்லாம் தேவி மிகவும் எமோசனல் ஆகுவது போல் தோன்றியது. சட்டென்று கோவம் வருகிறது, இல்லை ஏதாவது என்றால் கண்ணில் நீர் வருகின்றது. அப்படியும் இல்லையா உம்மென்று இருக்கிறாள். நடனாலய செல்வது தன் கடமை என்பதால் செல்கிறாள் இல்லையேல் அதையும் விட்டிருப்பாள்.

முற்றிலும் தேவி தன் இயல்பை தொலைத்து நிற்க, மஞ்சுவின் மனமோ வேதனையுற்றது.

“எதையும் நினைக்காத தேவிம்மா… கொஞ்சம் தூங்கு…” என்று மஞ்சு மகளை படுக்க சொல்லி வெளியே வந்தவர்,

தியாகுவிடம், “இந்த ப்ராப்ளம் எல்லாம் முடியவும் நம்மளே சரவணன் கிட்ட பேசி பார்ப்போமா…” என்று கேட்க,

“என்ன பேச சொல்ற மஞ்சு…??” என்றார் அவர்.

“என்ன தியாகு இப்படி சொல்றீங்க…??”

“ஹ்ம்ம்… இது அவங்களே பேசி சரி செய்ய வேண்டியது மஞ்சு.. லீவ் இட்… இப்போதைக்கு இதை எல்லாம் இப்படியே விடு… முதல்ல இந்த ப்ராப்ளம் முடியட்டும்…”

“பட் தேவி….”

“போக போக சரியாகிடுவா.. இன்னிக்கு ஸ்ருதி மிஸ்ஸிங், சரவணனை பார்த்தது எல்லாம் சேர்ந்து அவளை கொஞ்சம் டவுன் பண்ணுது அவ்வளோதான்…”

“என்னவோ அவ முன்ன போல இல்ல…” என்று மேற்கொண்டு மஞ்சுவும் தியாகுவும் பேசுவது தேவியின் காதுகளில் விழுந்தாலும் புத்தியில் எட்டவில்லை.

அப்படியே நேரம் போக, கடிகாரத்தை பார்த்தாள், நேரம் நள்ளிரவு ஒன்றை காட்ட, மனம் மீண்டும் ‘இன்னும் ஸ்ருதி கிடைக்கலையா…’ என்று பல்லவியை தொடங்க,

‘சனுக்கு கூப்பிடலாமா…’ என்று கூட தோன்றியது அவளுக்கு.

தோன்றிய அடுத்த நொடி, ‘இல்லை வேண்டாம்… பிசியா இருந்தா நம்ம டிஸ்டர்ப் பண்ணினது போல ஆகிடும்.. இல்லை இதுவே ஒரு ப்ரெஷர் போல இருக்கும்…’ என்று தனக்கு தானே கூறியவள், கையில் எடுத்த அலைபேசியை அப்படியே கட்டில் மீது வைத்துவிட்டு, வெளியே பால்கனியில் சென்று நின்றாள்.

தேவிக்கு எப்போதுமே இப்படி இரவு நேரத்தில் பால்கனியில் நிற்பது பிடிக்கும். தனி வீடு, ஆகையால் இவள் நிற்பது வெளியே யாருக்கும் தெரியாது. கருப்பு கம்பளி போர்த்தி அதில் தெரியும் சிறு சிறு ஓட்டைகளாய் நட்சத்திரங்களும் மின்ன மின்ன, ஒருவித அமைதியோடு ஜில்லென்று வீசும் மிதமான காற்றும் இதெல்லாம் அவள் விரும்பி ரசிக்கும் விசயங்கள்.

அன்றொரு நாள் கோவாவில் கூட இப்படியான ஓர் இரவில் தான் இதே போல் அங்கே பால்கனியில் நின்று தானே சரவணன் மீதான தன் காதலை உணர்ந்தாள்.

ஆனால் இன்றோ மனம் வேறெதிலும் லயிக்கவில்லை.

எத்தனை நேரம் அப்படியே நிற்க முடியும், மனம் ஒரு நிலையில் இல்லை. அதுவும் இந்த காலத்தில் என்னென்ன நடக்கிறது என்று அவளும் செய்தி தாள், செய்திகளில் எல்லாம் பார்க்கிறாள், படிக்கிறாள் தானே.

ஆகையால் அதனிலையே மனம் போட்டு உருள, கண்கள் எறிந்தாலும் உறங்க முடியவில்லை..

அப்படியே நிற்கவும் முடியாமல் மீண்டும் கட்டிலில் வந்து விழ, தன் சிந்தனையில் உழன்று கொண்டு இருந்தாள். கடிகாரம் முள் சுற்றுவது போல் நேரமும் சுற்றி சுழன்று ஓட, தன்னையும் அறியாமல் தேவி கண்கள் மூடினாள்.

எத்தனை நேரம் அப்படி உறங்கினாளோ காதருகே அலைபேசியில் குறுந்தகவல் வந்ததற்கான ஒலி கேட்க, அந்த சிறு ஒலி கூட அந்த நேரத்தில் அத்தனை சப்தமாய் கேட்க. வேகமாய் கண் விழித்தவள், அதனினும் வேகமாய் அலைபேசியை எடுத்து பார்க்க,

“ஸ்ருதி இஸ் சேப்…” என்ற குறுந்தகவளை படிக்கும்போது மனம் அத்தனை நிம்மதியாய் இருந்தது.

கண்களை இறுக மூடி ஒரு நொடி அந்த நிம்மதியை அனுபவித்து ஆழ மூச்செடுத்து விட்டவள், அடுத்து என்ன என்றெல்லாம் சிந்திக்கவில்லை, சரவணனுக்கு அழைத்தாள்.

அவனை போல நேரம் காலம் எல்லாம் பார்த்து தயங்கவில்லை. தோணியது அழைத்துவிட்டாள்.

அப்போது தான் தேவிக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு கண்களை மூடியவன் அடுத்த நொடி அழைப்பு வரவும் என்னவென்று பார்க்க, அவனது அலைபேசி திரையில் அழகாய் அவனும் தேவியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் பளீரிட, சரவணன் பார்வை அதிலேயே நிலைக்க, அழைப்பை ஏற்கும் எண்ணம் எல்லாம் இல்லை.

அந்த புகைப்படத்தை காணும் போதே அது எடுத்த தருணமும் கண் முன்னே வர இதழில் வந்து தானாய் ஒரு புன்னகை ஒட்டிக்கொண்டது.

“ஸ்.. உரசாம நில்லு சனு….” என்று தேவி முணுமுணுக்க,

“ஹே.. ப்ரேம்குள்ள வரவேனாமா..” என்று அவளை இடித்தபடியே தான் நின்றான்..

“மாமா… ரெண்டுபேருக்கும் சைட்ல அவ்வளோ இடமிருக்கு…” என்று ராகுல் கிண்டல் அடித்தபடி தான் அந்த புகைப்படத்தை எடுத்தான்.

இப்போதும் கூட தேவியிடம் அவ்வளவு நெருக்கமாய் நிற்கவேண்டும், அவள் கைகளை பிடித்துகொண்டு வம்பளக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றினாலும், அப்போது அந்த நிமிடம் அழைப்பது தேவி என்று தெரிந்தாலும், ஏனோ அந்த புகைபடத்தில் தன் மனதையும் கண்களையும் பதியவிட்டவன், இரண்டாவது முறை அழைப்பு வரும் போது தான் எடுத்தான்.

“ம்ம் ஹலோ…”

“ச.. சனு.. ரியல்லி.. ஸ்ருதி கிடைசிட்டாளா… எப்போ..?? எப்படி..??இஸ் ஷி ஓகே…?” என்று அடுத்தடுத்து கேள்விகளை தொடுக்க,

“எஸ் கிடைச்சிட்டா.. அன்ட் ஸி இஸ் ஓகே…” என்று மட்டும் நிதானமாய் பதிலளித்தான்.

ஆனால் சரவணனது அந்த பதில் மட்டும் அவளுக்கு முழு திருப்பதியை கொடுக்கவில்லை போல, மீண்டும் மீண்டும் கேள்விகள் கேட்டு துளைத்தெடுக்க,

“ஷ்.. கொஞ்சம் அமைதியா இருக்கியா…” என்றவன், அனைத்து விபரத்தையும் தெளிவாய் சொல்லி முடிக்க,

“ஓ… இதுக்கெல்லாம் கடத்துவாங்களா…??” என்று ஆச்சர்யமாய் கேட்டாள்.

“ஏன் நீ நியூஸ் பார்க்கிறது இல்லை… ஒரு நாலு வயசு பொண்ணு காதுல இருந்த சின்ன தொடுக்காக அந்த பொண்ண கடத்துனாங்க.. அப்படியிருக்கும்போது இதெல்லாம் என்ன பெருசா…” என,

“ம்ம் உனக்கு சரி..இதெல்லாம் பார்த்து பழகியிருக்கும்.. ஆனா கேட்டதும் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா.. தேங்க் காட்…” என்று கடவுளுக்கும் நன்றி சொன்னவள்,

“தேங்க்ஸ் சனு… தேங்க்ஸ் எ லாட்…” என்று உணர்ந்து சொல்ல, சரவணனுக்கு ஏனோ அந்த நேரத்தில் சட்டென்று ஒரு கோவம்.

செய்வது எல்லாம் செய்துவிட்டு இப்போது ஒன்றுமே நடக்காதது போல் சனு சனு என்று எத்தனை சாதாரணமாய் பேசுகிறாள் என்று.

“உன் தேங்க்ஸ் நீயே வச்சுக்கோ.. இப்போ ஏன் கால் பண்ண…??” என்று எரிந்து விழுந்தான்.

பட்டென்று சரவணன் இப்படி எடுத்தெறிந்து பேசவும், இதுவரை அவளிடம் யாரும் அப்படி பேசியிறாததும் சேர்ந்து தேவிக்கு என்னவோ போல் ஆனது.

“சனு….” என்று அதிர்ந்து விளிக்க,

“என்ன..?? என்ன டி சனு…?? எப்படி எப்படி மோகினி இவ்வளோ நார்மலா உன்னால பேச முடியுது..?? எப்படி எப்படி இவ்வளோ கேசுவலா இருக்க முடியுது..??” என்று பொரிந்து தள்ளினான்.

பதிலே பேசாமல் தேவி அமைதியாய் இருக்க,

“என்ன, பேச்சு வரலியோ… அதெப்படி வரும்.. நீங்க எல்லாம் அப்படியே நல்லவங்க… அடுத்தவங்க நலன் தான் முக்கியம்.. ” என்று மேலும் காந்தினான்.

“சனு ப்ளீஸ்….” என்றவளின் குரல் மேலும் இறங்கியது.. இறைஞ்சியது..

ஆனால் சரவனனுக்கோ கோவம் அப்படி தலைக்கேறியது. அலைச்சல், அலுப்பு, தூக்கமின்மை போதாதா குறைக்கு இத்தனை நாள் கழித்து தேவியை கண்டது, என்று எல்லாம் சேர்ந்து அவனை போட்டு படுத்த என்ன பேசுகிறோம் என்றெல்லாம் அவனுக்கு புத்தியில் எட்டவில்லை.

“என்ன ப்ளீஸ்.. இல்ல என்ன ப்ளீஸ்னு கேட்கிறேன்.. சரி சொல்லு எதுக்கு இப்போ கால் பண்ண…”

“அது.. அது வந்து ஸ்ருதி பத்தி…”

“ஓ… ஸ்ருதி பத்தி கால் பண்ணி பேசவெல்லாம் மேடம்க்கு டைம் இருக்கும்.. ஆனா ஒரு தடவ, என்னை பத்தி, நான் எப்படி இருக்கேன் என்ன செய்றேன்னு கேட்க்க கூட நேரமில்லல.. நேரமில்ல இல்ல தோணல.. சோ அவ்வளோதான் இல்லையா….”

“ம்ம்ச்.. என்ன சனு இப்படியெல்லாம் பேசுற நீ.. உன் மெசேஜ் பார்த்தேன்.. அதான் கால் பண்ணேன்… இது தப்பா.. ஏன் நான் பண்ண கூடாதா சொல்லு.. இனிக்கு புல்லா எவ்வளோ டென்சன்.. அதான் பண்ணேன்.. ப்ளீஸ் பா…” என்று அவனை சாந்தப்படுத்தும் படுத்தும் விதமாகவே தேவி பேச அது இன்னும் அவனுக்கு வேகத்தை கிளப்பியது.

“என்ன என்ன டென்சன்…?? எனக்கு தான் டி டென்சன்… உன்னை பார்த்ததில இருந்து.. இப்போ வரைக்கும்.. இனியும்… டென்சன் இருக்கு…ஆனா நீ எவ்வளோ சாதாரணமா பேசுற இல்ல… கொஞ்சம் கூட உனக்கு என் நினைப்பே வரலியா… எனக்கு இருக்க பீல் எதுவுமே உனக்கு வரலையா… இல்லை என்னோட பீல் எதுவும் புரியலையா…” என்று கோவத்தில் ஆரம்பிதவனின் குரல் ஆதங்கத்தில் முடிந்தது.

தேவி ஒன்றும் சொல்லாமல், காதில் அலைபேசியை வைத்தபடி அப்படியே அமர்ந்திருந்தாள். அவளுக்கா அவன் உணர்வுகள் புரியாது.. அவளுக்கா அவனை போன்ற உணர்வுகள் தோன்றாது.. அவனுக்கு மட்டுமா அவளை கண்டத்தில் இருந்து டென்சன். அவளுக்கும் தானே.

சொல்ல போனால் அவனை விட ஜாஸ்தி.. அதுவும் இப்போது இன்னும் அதிகமானது. ஆனாலும் அவன் பேசுகிறான் என்று பதிலுக்கு பதில் தானும் பேசினால் அது இன்னும் பிசகாகும் என்று அறிந்து

“ம்ம்ம்…” என்றுமட்டும் சொன்னாள்.

“ம்ம் சரி வேறென்ன….” என,

“என்.. என்ன…??” என்று தேவி கேட்க,

“வேறெதுவும் இருக்கா…?? எதுவும் கேட்கணுமா இல்லை பேசணுமா…??” என்று கறாராய் சரவணன் கேட்க, அவனது இந்த பரிணாமம் முற்றிலும் தேவிக்கு புதிது.

‘ஓவரா பண்றான்….’ என்று தோன்றினாலும், மேலும் சண்டை வேண்டாம் என்று நினைத்து,

“நத்திங்…” என்று சொல்ல,

“ஓ.. நத்திங்… ஹ்ம்ம் வெரி குட்.. இப்படியே இரு.. ம்ம்  வீட்டுக்கு நாட்டுக்கு எல்லாம் ரொம்ப நல்லது..” என்று அதற்கும் அவன் கடிய,

அவளுக்கோ ‘இதென்னடா…’ என்று ஆனது.

 கேட்கவும் பேசவும் சொல்லவும் பகிரவும் ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அதெல்லாம் பேசும் சூழல் இப்போதில்லை. அதற்கான நேரமும் இதில்லை என்று உணர, ஆனாலும் அவன் கேட்கிறானே என்று  என்ன சொல்ல இல்லை என்ன கேட்க என்று யோசிக்க, கடைசியில்

“ஆ… ஆன்ட்டி எப்படி இருக்காங்க…” என,

“ரொம்ப நல்லா இருக்காங்க… அன்ட் என் அம்மா பத்தி இவ்வளோ அக்கறையா விசாரிச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. வேறென்ன…??” என்று அடுத்த கேள்விக்கு தாவினான்.

“வே.. வேறென்ன…?? ஒ.. ஒண்ணுமில்லையே…”

“ஓ.. ரொம்ப நல்லது…” என்றவன் சட்டென்று அழைப்பை துண்டித்துவிட்டான்.

அவன் துண்டித்தது கூட தெரியாமல், தேவி “சனு… ஹலோ…” என்று அழைத்து பார்க்க, பதிலே இல்லாமல் போக, அதன் பின்னே தான் அவளுக்கு புரிந்தது அவன் துண்டித்துவிட்டான் என்று.

மனம் வலித்தது.. சில விஷயங்கள் நாம் செய்யும் போது அதன் தாக்கம் தெரியாது. ஆனால்  அதையே பிறர் நம்மக்கு செய்யும் போது, அதுவும் நம் மனதிற்கு மிகவும் பிடித்தவர்கள் செய்யும் போது அதன் வலி பன்மடங்காகும்.

அப்படித்தான் ஆனது தேவிக்கும்..

இத்தனை நாள் மனம் அவனை காணாது பேசாது இருந்தபோது மனம் ஒருவித வலியை ஏற்றுகொண்ட போதும், இன்று அவனை பார்த்து பேசி, பயணித்து என்று செய்யவும் மனம் அடித்துகொண்டது.

ஆனால் அங்கே சரவணனுக்கோ இன்னும் கோவம் அடங்கவில்லை. அலைபேசியை மெத்தையில் தூக்கி எறிந்தவன்,

“பேசுறா பேச்சு.. ஹ்ம்ம் ஆன்ட்டி எப்படி இருக்காங்களாம்… இடியட்.. என்னை லவ் பண்ணாலா… இல்லை எங்கம்மாவையா…” என்று பொரிந்தவன், அவள் நினைவு தாங்காமல் நேராய் சென்று ஷவரின் அடியில் நின்றான். அப்படியே கண்கள் மூடி நின்றவன், குளியலையும் போட்டு வெளி வர வீட்டின் பூஜையறையில் ஒலிக்கும் சுப்ரபாதம் கேட்டது. அதை தொடர்ந்து சாம்பிராணி வாசமும் வர,  

ஆழ மூச்செடுத்து விட்டு அதை நுகர்ந்தவன், அப்படியே அந்த இசையின் ஓசையில் லயித்து நிற்க, கண்கள் சொறுகுவது போல் இருந்தது.

சுத்தமாய் தூங்கவே இல்லை. வழக்கமாய் இது அவன் உடற்பயிற்சி செய்யும் நேரம். ஆனால் எதற்குமே மனம் இசைந்துகொடுக்க வில்லை  வெறுமெனே அப்படியே கட்டிலில் விழுந்து கிடந்தான். ஏனோ மனதில் இருந்த பாரம் குறைந்தது போல் இருந்தது.

ஒருவேளை அது பேசியாதால் கூட இருக்கலாம்.. ஆனால் இப்படியே இதை விடுவதா என்று தோன்றியது.

இத்தனை நாள் சும்மா இருக்கும் போது தோன்றாததெல்லாம் கொஞ்ச நேரம் அவளோடு பேசியபின்னே இன்னும் நிறைய நிறைய என்று ஆசை கொண்டது.

‘வாட் எவர் இட் இஸ்.. ஷி இஸ் யூவர்ஸ்…’ என்று மனம் சொல்ல,

“ம்ம்ம்” என்று தானாய் சிரித்தவன், “உன்னை விட மாட்டேன் மோகினி…” என்று கூறிக்கொண்டான்.

அங்கே தேவிக்கோ, இருப்புக்கொள்ளவில்லை. சரவணனை நேரில் பார்த்து ஒருமுறை தங்களை பற்றி பேசவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அப்படி ஒரு எண்ணம் தோன்றிய அடுத்த நொடியே அவன் கோவமாய் பேசுவது எல்லாம் மனதில் வந்து, அவ்வெண்ணம் வந்த வேகத்தில் ஓடி பின்னே போனது.

அவனை பார்த்ததும், பேசியதுமே மனதிற்கு பெருத்த நிம்மதியும் மகிழ்வையும் தர, கூடவே அவன் அவளை திட்டியதும் நினைவில் வந்து தொலைத்தது.   

“ச்சே நான் என்ன சொல்ல வந்தேன்னு கூட கேட்கலை…” என்று புலம்பியவள், மீண்டும் அழைத்து பேசுவோமா என்று தோன்ற,

“ம்ம்ஹும் வேணாம்.. அதுக்கும் திட்டுவான்.. ஓவரா போறான்… அவன் அம்மாக்காக தானே வந்தேன்… இப்படி பேசுறான்.. நான் அப்போ அங்கயிருந்தா இன்னும் சனுக்கு தானே டென்சன்.. இதெல்லாம் ஏன் புரியலை.. இருக்கட்டும் அப்படியே வீராப்பா இருக்காட்டும்.. எனக்கென்ன…” என்று கொணட்டிக்கொண்டவளை மஞ்சு வந்து அழைக்க எழுந்து சென்றாள்.

அவரிடம் ஸ்ருதி கிடைத்துவிட்டதை சொல்ல, தியாகுவும் அடுத்து வந்துவிட, அவரிடமும் சரவணனின் வீர தீர பிரதாபங்களை மீண்டும் பேசி முடிக்க, நாவு தான் வரண்டது.

சரவணனை பற்றி பேசும்போது அளவுக்கு அதிகமாய் உற்சாகமாய் பேசும் தன் மகளை இமைக்காது பார்த்திருந்தார் மஞ்சு. வெகுநாட்கள் ஆனது இப்படி தேவி உற்சாகமாய் பேசி.

கண்களும் முகமும் அவளது மனதின் நிலையை அழகாய் பிரதிபலிக்க, அவள் பேச்சோ நிற்பதாய் தெரியவில்லை.

“ம்ம் தேவி.. ஸ்ருதி வீட்டுக்கு போய் ஒன்ஸ் பார்த்திட்டு வந்திடேன்…” என்று மஞ்சு பேச்சை மாற்ற எண்ணி சொல்ல,

“எஸ் மாம்.. நானும் அதான் நினைச்சேன்.. மார்னிங் ஸ்கூல் வரலை சொல்லிட்டேன்… ஆப்ட்நூன் தான் போகணும்… சோ கொஞ்ச நேரத்தில ரெடியாகி ஸ்ருதி வீட்டுக்கு போகணும்…” என்றவள்,

“சனு பாருங்கப்பா சொன்னது போலவே ஒன் டே முடியுறதுக்குள்ள கண்டுபிடிச்சிட்டான்…” என்று மீண்டும் சரவணனில் சென்று நின்றாள்.

பெற்றோர்களிடம் தங்கள் காதலை பற்றியும், காதலன் பற்றியும், சுதந்திரமாய், வெளிப்படையாய் பேசும் பாக்கியம் அரிதில் யாருக்கும் கிடைத்துவிடாது. ஆனால் அது எளிதாகவே தேவிக்கு கிடைத்தது.

ஆனால் சரவணனோடு பேச மட்டும் தான் அத்தனை எளிதாய்  வாய்புகள் கிடைக்கவில்லை. கோவாவில் இருந்த நான்கு நாட்கள் தவிர, அடுத்து அவர்கள் பேசிக்கொண்ட நேரம் எல்லாம் முட்டல் மோதல் தான்.

தியாகுவும் மகள் பேசியதற்கு தக்க பதில் சொன்னவர், தன் மனைவியின் முகம் பார்க்க, மஞ்சுவின் பார்வையோ ஆயிரம் அர்த்தங்களை வெளிக்காட்டியது.

மஞ்சு தன்னோடு தனியே பேச நினைக்கிறார் என்று புரிந்துகொண்ட தியாகு,

“ஓகே தேவிம்மா.. உன் பேஸ் சோ டல்.. கொஞ்ச நேரம் தூங்கு.. தென் ஸ்ருதி வீட்டுக்கு போ….” என்று மகளை அனுப்பி வைக்க, அவளும் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டாள்.

தேவி சென்றதும், “ என்ன மஞ்சு..??” என,

“நா… நான் கோதாவரி கிட்டவே நேரா பேசட்டுமா….” என்றார் மஞ்சு..

“வேணாம் மஞ்சு. கொஞ்ச நாள் போகட்டும்… ஒரு சூழ்நிலை ரெண்டு பெரும் பார்த்துக்க வேண்டியது பேசிக்கவேண்டியதா போச்சு.. ஆனா மேற்கொண்டு இவங்க ரெண்டு பெரும் என்ன டிசைட் பண்றாங்க தெரியாதே…” என்று தியாகு சொல்ல,

“ஹ்ம்ம் என்னவோ போங்க… இன்னும் ஒன் மன்த் தான் அதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது… தென் நானே கல்பனா அத்தை கிட்டயோ இல்ல கோதாவரி கிட்டயோ பேசிடுவேன்…” என்றுவிட்டு எழுந்து போனார்.

ஆனால் அங்கே சரவணனோ காலை உணவு வேளையில், “அம்மா உங்களை ஒருத்தர் நலம் விசாரிச்சாங்க…” என்றான் ஆம்ப்லெட்டை வாயில் திணித்தபடி..

“ என்னையா…?? யாரு டா?? அதுவும் உங்கிட்ட…” என்று ஆச்சர்யமாய் கோதாவரி கேட்க,

“எல்லாம் நமக்கு தெரிஞ்சவங்க தான்.. நீங்க நல்லாருக்கீங்கலான்னு கேட்டாங்க.. அதுவும் என்னை பத்தி கூட கேட்காம..” என்று பீடிகை போட, அசோக் குமாருக்கு புரிந்துவிட்டது மகன் யாரை பற்றி பேசுகிறான் என்று.

அவன் இத்தனை நாள் அமைதியாய் இருந்ததே பெரிது என்று நினைத்திருந்தார். சிறிது நேரம் முன்பு தான் முதல் நாள் நடந்தது எல்லாம் சொல்லியிருந்தான். அப்போதே நினைத்தார் இனி சரவணன் சும்மா இருக்கமாட்டான் என்று.

இதோ ஆரம்பித்துவிட்டான் என்று தோன்ற, மகனை ஒரு பார்வை பார்த்தவர் ஒன்றும் சொல்லவில்லை.

“அப்படியா?? எனக்கென்ன டா நான் நல்லா தானே இருக்கேன்.. ஆமா யார் கேட்டா…??” என்று கோதாவரி சிரித்த முகமாகவே கேட்க,

“எஸ் மாம் இப்போ நல்லா தான் இருக்கீங்க.. ஆனா அப்போ.. ரொம்ப நாள் முன்னாடி உடம்பு சரியில்லல அதை கேட்டாங்க..” என்று சரவணன் சாதாரணமாய் சொல்ல,

கோதாவரிக்கு திக்கென்று ஆனது.. முகம் சட்டென்று இருண்டுவிட, கண்களோ தன் கணவரை காண, அசோக் குமாரோ ‘நான் எதுவுமே சொல்லவில்லை…’ என்பது போல் தலையசைத்தார்..

அதன் பின்னே பிடித்திருந்த மூச்சை விட்டவர் “யா.. யார் சரோ ??” என்று திக்கியே கேட்க, அவனோ மிக மிக இயல்பாய்

“தேவி…” என்றான்..         

 

 

 

 

 

 

 

Advertisement