Advertisement

                                துளி – 13

அன்று அதிசயமாய் சரவணன் வீட்டில் இருந்தான். அதிசயம் தான். பல நாட்கள் ஆனது அவன் இப்படி இருந்து. அதுவும் அவன் பேச்சு சத்தம் வீட்டில் கேட்பதே இல்லை  என்று சொல்லலாம்..

காலையில் கிளம்பி போனால் இரவு வருகிறான். எதோ பெயருக்கு இங்கே இருக்கிறேன் என்பது போல இருப்பான் அவ்வளவே. ஆனால் இன்று வீட்டில் இருந்தவன்  அசோக் குமாரோடு எதோ ஒரு கேஸ் விசயமாய், செய்தி தாளை பார்த்து பேசிக்கொண்டு இருந்தான்.

முன்னெல்லாம் வீட்டில் இருக்கும் நேரம் இப்படி தந்தையோடு எதாவது கலந்து பேசி, இல்லை எதாவது கேலி கிண்டல் என்று பொழுது போக்குவான். கோதாவரி இதில் கலந்துகொள்ள மாட்டார்.

அப்பாவும் பிள்ளையும் பேசுவது கிரிக்கெட், அரசியல், நாட்டு நடப்பு என்று இப்படி இருக்க,

“ம்ம்ச் எப்போ பார் இதேதான் பேச்சா…” என்று சலிப்பார்.

“நீயும் வா கோதா.. உன்னை யார் பேசவேணா சொன்னா…”

“அம்மா.. நீங்களும் வாங்க.. உங்க பங்கு கருத்துகளையும் எடுத்து விடுங்க..”

“போடா.. இப்படி நானும் உட்கார்ந்து கதையடிச்சா ஒருவேலை ஒழுங்கா நடக்காது… வெட்டி பேச்சு…” என்று நகர்ந்து போய்விடுவார்.       

ஆனால் இன்றோ மகனது குரல் அந்த காலை நேரத்தில் வீட்டில் ஒலிக்கவும், கோதாவரிக்கு ஏனோ ஓர் நிம்மதி உணர்வு. ஓர் அன்னையாய் அவரும் மகனது பார்வைக்கு பேச்சிற்க்கு ஏங்க தொடங்கியிருந்தார். இத்தனை வருடம் மகன் தனியாய் விடுதியில் இருக்கும் போதெல்லாம் தெரியவில்லை. ஆனால் இப்போது ஒரே வீட்டில் ஒன்றாய் இருந்தாலும் அந்நியமாய் இருப்பது அவருக்கு மனதை எதோ செய்தது. 

“ஏங்க… இவன் இப்படியே இருந்திடுவானா..” என்று பல நாள் தன் கணவரிடம் வருந்த தொடங்கியிருந்தார்.

“அவனுக்கு வேலை நிறைய கோதா.. நீயும் பார்க்கிறல.. டிவி பேப்பர் எல்லாம் எவ்வளோ நடக்குது…” என்று மனைவிக்கு சமாதானம் சொல்ல,

“இல்லைங்க.. நா.. நான்.. அப்படி பண்ணது தப்புதான்.. ஆனா அதுக்காக என்கிட்டே சண்டை கூட போடட்டும்.. ஆனா இப்படி வீட்ல இருக்கிறதே தெரியாம இருந்தா எப்படி..” என வருந்த,

அசோக் குமாருக்கு யாருக்கு சார்ந்து பேசுவது என்பது தெரியவில்லை. காலம் ஒரு சிறந்த மருந்து என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள். இத்தனை வருடமாய் இறுக்கமாய் இருந்த கோதாவரி மனமே இலக தொடங்கியிருந்ததே..

இயல்பாய் அவர் மனதில் தோன்றும் உணர்வுகளை கணவரிடம் பகிர தொடங்கியிருந்தாரே. தான் செய்தது தவறு என்று ஒத்துக்கொள்ள கூட செய்தாரே.

கோதாவரி தினமும் காலையில் சரவணன் அறைக்கு செல்வார், வெற்று அறையே அவருக்கு காட்சி அளிக்கும். இன்றோ அவன் வீட்டில் இருக்கிறான் என்று தெரிய, அவரையும் அறியாது ஒரு வேகம்,

“டியூட்டி போகலையாடா…”என்று இலகுவாக சாதரணமாக மகனிடம் கேட்க, அவர் முகமோஇன்று நீ வீட்டில் தானே இருக்கிறாய் என்ற ஆவல் வெளிப்படுத்தியது.

சரவணன் ஒன்றும் சொல்லாமல் தலை நிமிர்ந்து பார்க்க,

“என்னடா வீட்ல தானே இருக்க.. லீவா இன்னிக்கு.. நீயே போட்டியா.. இல்லை போதும் சாமி நீ வீட்டுக்கு போன்னு அனுப்பினாங்களா..” என்று கேலி போல் பேசி லேசாய் சிரிக்க, அவனுக்கு இன்னும் பலத்த ஆச்சர்யம்.

‘அம்மாவா இது…’ என்பது போல் தன் அப்பாவை பார்க்க, அவரோ மெல்ல புன்னகை செய்தார்.

“அம்மா இனிக்கு ஒரு நாள் இருந்துட்டு நாளைக்கு போறேன்மா… ப்ளீஸ்…” என்று எத்தனையோ முறை ஹாஸ்டல் செல்ல அடம் பிடித்திருக்கிறான்.

“அதெல்லாம் முடியாது.. நாளைக்கு போறதை இன்னிக்கு போ.. இங்க என்ன செய்ய போற…” என்று கண்டிப்பாய் மறுத்துவிடுவார்.

“இருக்கட்டுமே…” என்று கணவர் சொன்னால்,

“இப்படி ஒருவிசயத்தில அவன் சொல்றதுக்கு கொஞ்சம் நம்ம இறங்கினா அடுத்து ஒண்ணொண்ணா சொல்வான்…” என்று சொல்லி அவர் வாயும் அடைத்துவிடுவார்.  

ஆனால் இன்று, இன்றாவது மகன் வீட்டில் இருக்க மாட்டானா என்று ஆவலாய் ஏக்கமாய் கேட்க,   அந்த குரல் அவனுக்கு புரியாதா என்ன..??

பேசிக்கொண்டிருந்தவன், பாதியில் பேச்சை விட்டு, அப்படியே கோதாவரியை காண, அவருக்கு தான் தன் மகனை நேருக்கு நேர் காண முடியவில்லை. உள்ளம்  குறு குறுத்தது.

ஆனால் அவனோ “இன்னிக்கு லீவ்மா”என்று சாதாரணமாய் சொல்ல, சட்டென்று அந்த அன்னையின்  முகத்தில் ஓர் நிம்மதி படர்ந்தது.

சொல்லபோனால் சரவணன் இப்படி இருப்பது  அவனுக்கே பிடிப்பதில்லை. ஏன் ஓடவேண்டும்.. எதற்கு ஓடவேண்டும் என்று இருந்தது. அதான் வீட்டில் இருந்தான். அப்பா அம்மாவோடு முகம் திருப்பி என்ன ஆக போகிறது என்று தோன்றியது.

நடந்தது எல்லாம் நடந்துவிட்டது.. அதற்காக இருக்கும் நிமிடங்களை எல்லாம் நாம் குறை சொல்லிக்கொண்டே இருக்க முடியுமா.. அம்மாவிற்கு முடியாமல் போனது… தேவி கிளம்பி போனாள். அவரவர் பக்கம் அவரவர்க்கு.. ஆனால் அதையே பிடித்துகொண்டு என்ன செய்ய.    அவனது இயல்பான குணமே இறுதியில் வென்றது.. ஆக சற்று இலகுவானான்.

“அப்.. அப்படியா.. அப்போ சரி ப்ரேக்பாஸ்ட்டுக்கு, பால் பணியாரம் செய்யவா.. உனக்கு பிடிக்குமே…”என்று வேகமாய் கேட்க, அப்பா மகன் இருவருக்குமே அடுத்த ஆச்சரியம் தான்.

போதாத குறைக்கு இப்போது வந்து கோதாவரியும் சகஜமாய் பேச, அவனுக்குமே உள்ளே ஓர் மாற்றம்.

“ச்சே அம்மாவை நம்ம ரொம்ப படுத்திட்டோமோ… ரொம்ப என்னை மிஸ் பண்ணிருக்காங்க..” என்று தோன்ற, தலை தானாக சரி என்று அடியது.

எப்போதுமே இது உனக்கு பிடிக்கும் நீ சாப்பிடு என்றுதான் சொல்வரே தவிர, செய்யவா என்றெல்லாம் கேட்டதேயில்லை. அம்மாவின் முகத்தை ஒரு ஆச்சர்யம் கலந்து பார்த்தபடி இருந்தான். 

“ம்ம்.. மதியத்துக்கும் என்ன வேணும் சொல்லு.. செஞ்சு தாரேன்…”என்றபடி கோதாவரி எழுந்து செல்ல,

“என்னப்பா…” என்று ஆச்சர்யமாய் கை காட்டினான் மகன்.

அவரோ “மாற்றம் ஒன்றே மாறாதது…”என்று சிரித்தபடி சொல்ல, அந்த நொடி சரவணன் மனதில் ‘எல்லாம் சரியாகும்..’என்ற எண்ணம் தோன்ற, இத்தனை நாள் இருந்த இறுக்கம் மறைய கண்டான்.

குளித்து முடித்து, அவன் அறையில் ஏதோ வேலையாய் இருக்க, பின்னே யாரோ வந்து நிற்பது போல் தோன்ற, வேறு யார் எல்லாம் கோதாவரி தான்.

“என்.. என்னம்மா…??” என்று கேட்க, ஏனோ தனியாய் அவரை எதிர்கொள்ள ஒருமாதிரி இருந்தது. இந்த ஆறுமாத காலமும் சாதாரண பேச்சு வார்த்தை கூட இல்லை. அப்படியே பேச நேர்ந்தாலும் ஒன்று அல்ல இரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லி சென்றுவிடுவான்.

எல்லா நேரமும் அப்படியே இருக்காதே.. இன்று அவரே அவனை தேடி வரவும், கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது.

அவரோ பதிலே சொல்லாமல் அவனையே பார்த்திருக்க, மீண்டும்

“என்னமா எதுவும் வேணுமா…” என,

“இல்லடா…” என்றவர் வாஞ்சையாய் அவன் தலை தடவ, எதோ ஓர் உணர்வு அவன் மனதை போட்டு பிசைந்தது.

“சாரிடா.. நான்…” என்று தொடங்க,

“ப்ளீஸ் மா… யாரும் யாருகிட்டவும் சாரி கேட்க வேணாம்.. அதை அதை அதோட இயல்புல விடுறது தான் நல்லது… நீங்களும் இனி மனசை போட்டு அலட்டிக்காதீங்க…” என்று இத்தனை நாள் பேசாததை எல்லாம் பேச, அங்கே ஓர் சுமுகமான சூழல் உருவாகியது.

தேவியோ தான் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறந்தாள். கடந்த மாதத்தை விட இந்த மாதம் இன்னும் அதிகமான மாணவர்கள் சேர்ந்திருந்தனர்.

தேவியின் “நடனாலையா…” அடையாரில் இருந்தது. வெறும் கான்க்ரீட் கட்டிடங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரியுமிடத்தில், நடனாலையா தேவலோகமாய் தான் காட்சி தரும் பார்ப்பவர்க்கு.

தேவியை பொறுத்தவரை நடனம் இறைவனுக்கு சமர்ப்பணம். ஆகையால் அது இயற்கையோடு இணைந்திருத்தல் வேண்டும் என்று விரும்பினாள். நடனப்பள்ளி தொடங்குவதாய் முடிவு செய்யவுமே அவள் சொன்ன ஒரே விஷயம், இயற்கையான சூழல் இருக்க வேண்டும் என்பது தான்.

“நடனாலையா…” தொடங்குவதற்கு ஒரு வீட்டை தான் வாங்கினர். அதனை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துகொண்டனர். அந்த வீட்டை சுற்றி சாதாரணமாகவே தோட்டம் இருக்க, அதுவே முக்கிய காரணமாய் மாறியது தேவிக்கு அந்த வீட்டை வாங்க.

ஆக சுத்தி இருக்கும் தோட்டத்தையும் தன் விருப்பத்திற்கு ஏற்ப, நடனம் பயிலவும் தோதாய் மாற்றி அமைத்தாள். சுற்றி மரங்களும் செடிகளும், புல் தரையும், அங்கங்கே சிறு சிறு செயற்கை குளங்களும் அதில் நீந்தும் வாத்துக்களும், என்று பார்க்கவே ரம்யமாய் இருக்கும்.

வெயில் ரொம்பவும் அடிக்காத வரை, வெளியே புல் தரையில் தான் நடனம் சொல்லி கொடுப்பாள். தேவியையும் சேர்த்து ஐவர் இருந்தனர் நடனம் சொல்லி கொடுக்க. ஆண்களுக்கு தனி பிரிவு, பெண்களுக்கு தனி.ஆண்கள் யாரும் அத்தனை வருவதில்லை என்பதால், ஒருவர் மட்டுமே ஆண்கள் பிரிவில் சொல்லிக்கொடுக்க இருந்தார். மற்றவர்கள் எல்லாம் பெண்கள்.

ஐந்து வயது குழந்தைகள் முதல் வருவதால், அவரவர் வயதுக்கு தக்க நேரம் ஒதுக்கி கொடுத்திருப்பாள் தேவி. ஐந்தில் இருந்து பத்து வயது வரை எந்த பகுபாடும் இல்லை ஆண் பெண் என்று. அவர்களுக்கு தேவியே தான் நடனம் பயிற்றுவிப்பாள்.

பொதுவாகவே, மாலை ஆறு மணியோடு தினசரி நடன வகுப்புகள் முடிந்துவிடும். அதற்குமேல் ஆறில் இருந்து எட்டு மணிவரை, தனி வகுப்புகள்.போட்டி நடனத்தில் பங்குபெற என்று பயில வருபவர்கள், இல்லை பள்ளி கல்லூரி விழாக்களுக்கு என்று பயில வருபவர்கள் என்று அது அவர்களுக்கான நேரம்.

அன்றும் அப்படித்தான், ஒரு கல்லூரி விழாவிற்காக என்று மூன்று மாணவிகள் வந்து நடனம் பழக, எளிமையான, அடிபடையான நடன அசைவுகளை மட்டும் முதலில் சொல்லி கொடுத்தவள், அவர்களையும் ஒரு முறை ஆட சொல்லி பார்த்துவிட்டு, திருத்தங்கள் சொல்லி மீண்டும் ஆட வைத்தாள்.

“ஓகே  கேர்ள்ஸ்.. குட்.. பட் இன்னும் கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்ணா கண்டிப்பா நல்லா பெர்பார்ம் பண்ணலாம்.. நாளைக்கு வரும் போது இன்னும் நல்லா ப்ராக்டிஸ் பண்ணிட்டு வாங்க…” என்று சொல்ல,

“தேங்க்ஸ் மேம்…” என்று சொல்லி அவர்களும் கிளம்பினர்.

ஒருவழியாய் அன்றைய அனைத்து வகுப்புகளும் முடிந்து, தனக்கென்று ஒதுக்கப்பட்ட தனியறைக்கு வந்தவள், கண்கள் மூடி சற்றே ஓய்வாய் இருக்கையில் அமர்ந்தாள்.

வழக்கத்திற்கு மாறாய் இன்று வேலை ஜாஸ்தி. ஒரு நடன ஆசிரியர் வராமல் போக, அவர் வகுப்பையும் சேர்த்து இவளே எடுத்தாள். சற்றே உடல் அசதியாய் உணர்வது போல் இருந்தது.

இல்லை ஒருவேளை மனம் அசதியாய் இருப்பதால் உடல் அசதியாய் தோன்றுகிறதோ என்றும் தோன்ற, ஒரு வெற்று பெருமூச்சு மட்டுமே அவளிடம்.

வெறுமெனே அப்படியே அமர்ந்திருக்க, நேரம் ஓடியது. ஏசி அறையிலும் புழுக்கமாய் இருப்பது போல் தோன்ற, ஜென்னலை திறந்தவள் அந்த இருளில் தெரியும் மர நிழல்களை வெறித்து பார்த்து நின்றிருந்தாள்.

“தேவிம்மா நேரமாச்சு…” என்று அங்கேயே வேலை செய்யும் பாக்கியம் வந்து சொல்ல,

“இதோக்கா கிளம்பிட்டேன்…”  என்று மெல்ல சிரித்தாள்.

பாக்கியமும் அவர் கணவர் முருகனும் தான் அங்கேயே இருப்பர். இந்த வீடு வாங்கும் போதே அவர்கள் அங்கே வேலைக்கு இருந்தனர். அடுத்தும் அப்படியே இருந்துகொள்ள சொல்லிவிட்டாள் தேவி. முருகன் வாட்ச் மென், பாக்கியம் சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்வார்.

“எல்லா ரூம்ஸ்லயும் லைட் ஏசி எல்லாம் ஆப்ல இருக்கான்னு பார்த்துக்கோங்க கா.. நான் பார்த்திட்டேன் இருந்தாலும் நீங்களும் ஒன்ஸ் பார்த்திடுங்க…” என்று தினமும் சொல்லி செல்லும் வாக்கியத்தை சொல்லியபடி, தேவி காரில் ஏறி அமர, வேகமாய் மற்றொரு ஆடி கார் வந்த சர்ரென்று நின்றது.

‘யார்…’என்பது போல் தன் காரில் ஏறிய தேவி மீண்டும் இறங்க,

பாக்கியமோ “இப்போ யாரு அதுவும் இவ்வளோ வேகமா…” என்று வாய்விட்டே கேட்டுவிட்டார்.

தேவி இறங்கவும், அந்த காரில் இருந்து ஒரு தம்பதி இறங்கவும் சரியாய் இருந்தது. அவர்களை கண்டவள்

என்ன இந்த நேரத்தில் வந்திருக்கிறார்கள் என்று தோன்றினாலும்,  அவர்களை பார்த்து சிநேகமாய் புன்னகைத்தாள். தேவியின் மாணவி ஸ்ருதியின் அப்பா அம்மா தான் இவர்கள்.

“Mr & Mrs கோபால்…” என்று  அவர்களை வரவேற்க, அவர்களோ அதெல்லாம் கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை போல,

“மேம்.. மேம் ஸ்ருதி எங்க….??” என்ற கேள்வியே அவர்கள் உச்ச பட்ச பதட்டத்திலும், கவலையிலும் இருப்பது புரிந்தது.

“என்.. என்னாச்சு….” என்றவள், ஸ்ருதியின் அம்மாவோ நிற்க முடியாமல் இருப்பதை பார்த்து,

“உள்ள வாங்க.. ப்ளீஸ்…” என்றழைக்க,

“நோ மேம்.. எங்களுக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை.. ஸ்.. ஸ்ருதி காணோம்.. வீட்டுக்கே வரலை…” என்று கணவன் மனைவி இருவரும் பதற்றமாய் சொல்ல, தேவிக்கு பலத்த அதிர்ச்சியாய் போனது.

ஸ்ருதி பதினான்கு வயது பெண். அழகாய் இருப்பாள். அவர்களின் வசதி அவளை கண்டதுமே தெரிந்துவிடும். ஆனால் அன்பானவள் பண்பானவளும் கூட. நடனம் மீது மிகுந்த பற்றுள்ளவலும் கூட.

சட்டென்று அவள் முகம் கண் முன்னே வந்து போக, ‘ஐயோ என்ன ஆனது அவளுக்கு…’ என்று தோன்ற,

“வாட் ஹேப்பன்…” என்றாள் உள்ளே போன குரலில் தேவி.

“எங்க போனான்னே தெரியலை மேம்.. வீட்டுக்கே வரலை… நாங்களும் அவ போற இடம் பிரன்ட்ஸ் வீடு எல்லாம் தேடிட்டோம்…” என்று ஸ்ருதியின் அம்மா தேவியின் கைகளை பிடித்துகொண்டு அழவே தொடங்கிவிட்டார்.

தேவிக்கு அதிர்ச்சியாய் இருந்தது. இன்னொரு புறம் பயமாகவும் இருந்தது. காலம் கெட்டு கிடக்கிறது.

‘கடவுளே அந்த பொண்ணுக்கு என்னச்சோ… ஐயோ ஒன்னுமே ஆகிருக்க கூடாது…’ என்று இறைவனிடம் நொடி பொழுதில் தன் வேண்டுதலை வைக்க,

ஸ்ருதியின் அப்பாவோ, “மேம் டோன்ட் மிஸ்டேக்கன் அஸ்.. வேற வழியில்லாம தான் இங்க வந்திருக்கோம்.. ப்ளீஸ் உள்ளே ஒன்ஸ் செக் பண்ணலாமா..” என்று கெஞ்சாத குறையாய் கேட்க, தேவியினால் மறுக்கவும் முடியுமோ.

“சாயங்காலம் அஞ்சு மணிக்கே சுருதி பொண்ணு அது ஸ்கூட்டில கிளம்பி போயிடுச்சு தேவிம்மா…” என்று பாக்கியம் சொல்ல, அதற்குள் அங்கே முருகனும் வந்து அதையே சொல்ல,

தேவி “இல்ல.. எதுக்கும் ஒன்ஸ் பார்த்திடலாம்….” என்று முன்னே செல்ல, முருகனும், கோபாலும் வெளியே தோட்ட பகுதியில் தேட, பெண்களோ உள்ளே சென்று தேட தொடங்கினர்.

உள்ளே சென்று தேடியவர்களுக்கும் சரி, வெளியே தேடியவர்களுக்கும் சரி அவர்களின் தேடலுக்கான பதில் கிட்டவில்லை. வெளிறிய முகத்துடன் அனைவரும் மீண்டும் வாசல் வந்து நிற்க, ஸ்ருதியின் அம்மாவோ அழவே தொடங்கிவிட்டார்.

“ரிலாக்ஸ் Mrs. கோபால்.. ஸ்ருதி கிடைச்சிடுவா…” என்று அவரது கைகளை பற்றியபடி ஆறுதல் சொன்னவள்,

“போலிஸ்… போலிஸ் போகலாமா…” என கேட்க, ஸ்ருதியின் அப்பாவோ,

“போலிஸா…” என்று அதிர்ந்தார்..

காரணம் வெளியே தெரிந்தால் ஸ்டேட்டஸ் பிரச்சனை ஆகுமே..

“என்ன சார்… நேரமாச்சு… உங்களுக்கு இன்ப்ளுயன்ஸ் இருந்தா பாருங்களேன்..” என,

“எஸ்.. எஸ்…. கமிசனர் எனக்கு தெரியும்.. தேங்க்ஸ் மேம்.. எங்களுக்கு அதெல்லாம் நியாபகமே வரலை..”என்று சொன்னவர் அடுத்து கமிசனருக்கு அழைத்து பேச, யாரது கெட்ட நேரமோ கமிசனர் ஊரில் இல்லை.

பேசிவிட்டு சோர்ந்த முகத்துடன் அழைப்பை துண்டித்தவர், “கமிசனர் ஊரில் இல்லை.. ஏ. சி. பி பார்க்க சொல்லிருக்கார்.. அவரும் சொல்லிடுறாராம்…” என,

‘ஏ.சி.பி…’ என்றதுமே தேவி மனதில் ஒரு நடுக்கம்..

‘ச.. சனுவா இருக்குமோ…’ என்று தோன்ற, அதற்குமேல் எல்லாம் அவள் எண்ணத்தை யாரும் பயணிக்க விடவில்லை.

“சரி நாங்க கமிசனர் ஆபிஸ் போறோம்…” என்று அவர்கள் கிளம்ப, அந்த பெண் ஸ்ருதியின் அம்மாவோ,

“மேம் நீங்களும் வந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்.. ஏன்னா.. ஸ்.. ஸ்ருதி இங்க வந்திட்டு தான்…” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே,

“நா.. நானும் வரேன்…” என்றுவிட்டாள் தேவி.

அவளுக்கு இப்போது வேறெதுவும் நினைக்கவெல்லாம் நேரமில்லை. அவள் எண்ணங்கள் எல்லாம் ஸ்ருதியே சூழ்ந்திருந்தாள். நல்ல பெண்..

‘கடவுளே எதுவும் ஆகிட கூடாது.. தப்பானவங்க கைல போயிடக்கூடாது…’ என்று வேண்டியபடி அவள் காரை எடுக்க, முன்னே ஸ்ருதியின் அப்பா அம்மா அவர்கள் காரில் சென்றனர்.

போகும் போதே தேவி அவள் அப்பாவிற்கு அழைத்து விசயத்தை சொல்லிவிட்டாள். அவரும் நேராய் கமிசனர் ஆபிஸ் வருவதாய் சொல்லிவிட தேவிக்கு மனம் சற்றே தெம்பானது..

கமிசனர் அலுவலகம் அந்த நேரத்திலும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. இவர்கள் அங்கே சென்று சேர்வதற்கு முன்னேயே கமிசனர் சரவணனுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல, அவன் தான் பார்த்துகொள்வதாய் சொல்லிவிட்டான்.

அவனை பொருத்தமட்டில் கமிசனருக்கு தெரிந்தவரின் காணமல் போய்விட்டாள், வெளியே தெரியாமல் விசாரிக்க வேண்டும். ஆனாலும் கடமையை சரியாய் செய்ய எண்ணினான். இவர்கள் எல்லாம் அங்கே போகுமுன்னே, ஒரு குழு அமைத்துவிட்டான்.

நேரம் வேறு கடந்துகொண்டே இருந்தது. எப்படியும் நாளை விடிவதற்குள் அப்பெண்ணை தேடி கண்டுபிடிக்கவேண்டும் என்று அவனுக்கு சொல்லியிருக்க, அவன் மனதிலுமே அதே எண்ணம் தான்.

ஆனால் ஸ்ருதி அப்பா அம்மாவோடு தேவியையும் பார்க்க, மனம் ஒரு நொடி அப்படியே ஸ்தம்பித்தது.

கிட்டத்தட்ட அரை வருடங்கள்… பார்க்காமல் பேசாமல்… கண்கள் லேசாய் விரிந்து, மூச்சுவிடவும் மறந்து எதிரே இருந்தவளை பார்த்தபடி நின்றிருந்தான்.

லேசாய் கசங்கிய தலை, முகத்தில் எவ்வித ஒப்பனையும் இல்லை. அவள் மூக்கில் இருந்த சிறு கருப்பு கல் மூக்குத்தியும், அவள் கண்களின் கீழே இருக்கும் சிவப்பு மச்சமும் அவனை இப்போதும் ஈர்த்தது.

அவனையும் அறியாது அவன் வாய் “மோகினி…” என்று உச்சரிக்க, அவனது அழைப்பு தேவிக்கு கேட்டதுவோ என்னவோ, சட்டென்று தலை நிமிர்ந்து பார்த்தாள். 

 

 

 

 

 

 

Advertisement