Advertisement

   துளி 12

சூழ்நிலை கோதாவரியை நிறைய மாற்றியிருந்தது. கோவாவில் இருந்து வந்த மறுநாளே சரவணன் எங்கு போனானோ, வீட்டிற்கே வரவில்லை. விடாமல் அழைத்து பார்க்க, முதலில் அழைப்பை ஏற்க்காதவன், இறுதியாய் ஏற்று,

“என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுங்க….”என்று சொல்லி வைத்துவிட்டான்.

அசோக் குமாரும், “கோதா போதும்… அவனை போட்டு ரொம்ப படுத்தாத..”
என்று லேசாய் கடிய
,

“என்ன சொல்றீங்க நீங்க, இன்னும் மூணு நாள்ல அவன்…” என்று வேகமாய் ஆரம்பிக்க,

“போதும் நிறுத்து கோதா. அவன் ஜாயின் பண்றது அவனுக்கும் தெரியும் தான. வருவான்.. ப்ரீயா விடு..”என்று முதல் முறையாய் ஒரு சலிப்போடு சொல்ல, கோதாவரிக்கு சட்டென்று என்னவோ போல் ஆனது. இதுநாள் வரை இப்படி எல்லாம் அவர் பேசியதில்லை. 

“என்… என்ன சொன்னீங்க…”

“என்ன சொல்லிட்டேன்.. உண்மைதான் சொன்னேன். அப்படி என்ன உனக்கு ஈகோ கோதா. இயல்பா இருக்க பாரேன். கட்டின புருஷன், பெத்த பையன், எங்கக்கிட்ட எல்லாம் நீ தோரணை காட்டி என்ன சாதிக்க போற. நீ சொல்றதே தான் எப்பவும் நடக்கனும்னு இல்லை. நம்ம வாழ்கைய முக்காவாசி கடந்தாச்சு..

இனி அவன் சந்தோசம் தான் நமக்கு எல்லாமே. நாம குறைஞ்சிட மாட்டோம். அங்க நடந்தது எல்லாமே சரின்னு நான் சொல்ல மாட்டேன். அவசரம் தான் எல்லாமே. ஆனா நடந்ததை மாத்த முடியாதே. உனக்கு பிடிக்கலை, நீ மறுத்த சரி, ஆனா அந்த பொண்ண நீ அப்படி பேசினது தப்பு. ரொம்ப தப்பு. பார்த்தல்ல கடைசியில எவ்வளோ அழகா பேசிட்டு போனான்னு..

நீ நினைக்கிற சரவணன், அவன் காதலை ஏத்துக்கலைன்னு கோவமா இருக்கான்னு. ஆனா அதில்ல.. நீ அந்த பொண்ண பேசினது தான் எல்லாருக்கும் கோவம். முதல்ல அந்த பொண்ண பேச உனக்கு என்ன உரிமை இருக்கு.

இதுனால் வரைக்கும் என்னை ஒண்ணுமே நீ சொல்ல விட்டதில்லை, ஆனா அவன் எனக்கும் மகன் தான். அவன் மேல எனக்கும் அக்கறை இருக்கு. முதல்ல நீ உன் மனசை திறந்து யோசி. என்னிக்கோ எப்பவோ நடந்ததை எல்லாம் மனசில போட்டு நீயா அழுக்கு சேர்த்து வைக்காத…” என, அதிர்ந்து போய் தான் அமர்ந்திருந்தார் கோதாவரி.

திருமணமான இத்தனை ஆண்டுகளில் அசோக்குமார் இப்படி பேசியதில்லை. கோதாவரி பேசவிட்டதில்லை. எப்போதுமே தான் செய்வது சரியாய் இருக்குமென்ற எண்ணம். அப்படியே மாற்று கருத்து வந்தாலும் எப்படியாகினும் கோதாவரிக்கு தான் செய்வது சொல்வது எல்லாம் சரி என்று பிறரை ஒத்துக்கொள்ள வைத்துவிடுவார்.

வீட்டிலும் அனைத்துமே சரியாய், பொறுப்பாய் நடப்பதால் அசோக் குமாரும்  கோதாவரியை ஒன்றும் சொன்னதில்லை. அவரை பொருத்தமட்டில் வீட்டில் அமைதியான சூழல் நிலவ வேண்டும் அவ்வளவே. இருப்பது மூன்று பேர், அதிலும் சரவணன் விடுதி வாசம். ஆகையால் சொல்லும் படியாய் இதுவரி எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.   

ஆனால் இன்று மகனது வாழ்வு என்று வரவும் அவரால் மௌனம் காக்க முடியவில்லை. ஆனால் கோதாவரிக்கு தான் இதெல்லாம் தாங்க முடியவில்லை. இத்தனை வருடம் தன்னை ஒரு வார்த்தை கூட சொல்லாத என் கணவர் என்னை சொல்லிவிட்டார் என்ற எண்ணமே தலை தூக்க,

“ஏங்க நான் தான்தப்பா..?? என்னவோ நடந்தது சின்ன விஷயம் போல பேசிட்டு இருக்கீங்க.. அப்போ என்னை பத்தி யாருக்கும் கவலை இல்லையா.. அவனுக்கு என்ன தெரியும்.. இந்த வயசுல இதெல்லாம்…” என்று சொல்ல,

“போதும் கோதா… என்ன வயசு.. ஏன் நீ அவனுக்கு பொண்ணு பார்க்கல.. அப்போ மட்டும் அவன் பெரிய மனுஷன்.. லவ் பண்ண உடனே ஒன்னும் தெரியாதவனா… இங்க பார் கோதா இப்பவும் நான் சரோ லவ்வுக்கு சப்போர்ட் பண்ணி பேசலை.. ஆனா அங்க நீ நடந்துகிட்ட விதம் தப்பு.. அந்த பொண்ண அப்படி பேசினது…” என்று சற்றே வேகமாய் பேச,

“அப்போ உங்களுக்கு கூட நான் பெரிசில்லை.. எனக்கு உடம்பு முடியாம போனது… டென்சன் ஆனது, மயங்கி கீழ விழுந்தது எல்லாம் எதுவுமே பெரிசில்லை… அந்த மஞ்சுவோட பொண்ண பேசினது தான் பெரிசு…”என்று தன் பக்கத்துக்கு நியாயம் சேர்க்க முயல,

“டென்சனா.. நீயா..??? திடீர்னு இந்த பேச்சு வரவும், அதுவும் உனக்கு பிடிக்காத மஞ்சுவோட பொண்ணுன்னு சொல்லவும் கொஞ்சம் டென்சன் ஆகிருப்ப தான். ஆனா அதுனால தான் நீ மயங்கி கீழ விழுந்தன்னு சொல்றது இருக்கே..”என்று பேசியவர் பாதி பேச்சோடு நிறுத்தி கோதாவரி முகம் பார்க்க,

“என்னங்க…” என்று அதிர்ந்து எழுந்துவிட்டார்.

“உன்னை எனக்கு தெரியாதா.. முப்பது வருசமா உன்கூட வாழறேன்.. இதுகூடவா என்னால புரிஞ்சுக்க முடியாது…”என்று அழுத்தம் திருத்தமாய் பேசி தான் திறமையான வக்கீல் என்பதை நிரூபிக்க, கோதாவரி தான் வாயடைத்து போனார்.

தன்குட்டு வெளிப்பட்டு விட்டது.மனம் அடித்துகொண்டது.. அன்றை போல் இல்லாது இப்போது நிஜமாகவே கோதாவரிக்கு கை கால் எல்லாம் பதறியது.

கணவருக்கு தெரிந்து இருக்கிறது ஆனாலும் ஒன்றும் சொல்லாது ஒன்றும் காட்டாது இத்தனை நாள் இருந்ததே பெரிது என்று தோன்ற,முகமெலாம் வியர்த்துவிட்டது.

‘ஐயோ இது.. இதெல்லாம் அம்மா அண்ணா பிருந்தா… ச.. சரவணன் எல்லாருக்கும் தெரிஞ்சா… ஒருவேளை தெரிஞ்சிருக்குமோ.. அதன் என் பையன் வீட்டுக்கு வரலையா…’ என்று உள்ளம் பதற, இதற்குமேல் தான் என்ன சொன்னாலும் அது எடுபடாது என்று நன்றாகவே தெரிந்தது.  கலங்கி போய் தன் கணவர் முகம் பார்க்க,

“டோன்ட் வொர்ரி கோதா.. இதை நான் வெளிய சொல்லவுமில்ல, சொல்ல போறதுமில்லை.. எனக்கு என் மனைவியோட மரியாதை ரொம்ப முக்கியம். தென் இதைச் சொன்னா, சரவணன் நிரந்தரமா இங்க வர மாட்டான். சோ எல்லாம் மனசில வச்சு யோசி.. உன்னை நான் உடனே சரி சொல்லுனு சொல்லல.. ஆனா கொஞ்சம் உன்னை மாத்திக்க பார்ன்னு சொல்றேன்..”மெல்ல அவர் முதுகில் தட்டிவிட்டு செல்ல, பொத்தென்று அமர்ந்துவிட்டார் கோதாவரி.

ஆம் கோதாவரிக்கு அன்று நிஜமாகவே உடல்நலம் எல்லாம் கெடவில்லை. கொஞ்சம் படபடப்பு ஏற்பட்டது உண்மை தான். எங்கே குடும்பம் மொத்தமும் பேசி இந்த திருமணத்தை நடத்திடுவறோ என்று எண்ணினார்.

அதுவுமில்லாமல் மஞ்சுவும் அன்று வருவதாய் இருக்க, ஒருவேளை அவர் சம்மதித்து விட்டால், அவ்வளவு தான் என்று தோன்ற, அந்த நேரத்தில் இந்த யோசனையில் கால்கள் தள்ளாடியது உண்மை தான்.

ஆனால் சரவணன் வந்து தாங்கி பிடிக்கவும், சட்டென்று புத்தியில் ஓர் யோசனை, அனைவரின் கவனமும் தன் மீதிருக்க வேண்டுமென்றால் கொஞ்சம் நடித்து தான் ஆக வேண்டும் என்று தோன்றியது. அப்படியே கண்களை மூடி மயங்கியது போல் மயங்கிவிட்டார்.

அடுத்து நடந்தது எல்லாம் அனைவர்க்கும் தெரியுமே.. அவர் எண்ணியது போலவே தேவியும் வந்து தான் கிளம்புவதாய் சொல்ல, மனம் சற்றே சமன் பட்டது. ஆனால் அவர் நினைக்காத ஒன்று சரவணன். கோதாவரி கண் விழித்ததும் தன் அம்மாவிடம் தான் வந்தான்.

‘அப்பாடி என் மகன் என்னை தான் நினைக்கிறான்.. அந்த மஞ்சுவோட பொண்ணு போயிட்டா எல்லாம் சரியாகும்…’ என்று நிம்மதி பெருமூச்சு விட்ட அடுத்த நொடி, சரவணன் இவரிடம் பேசிவிட்டு தேவியை காண செல்ல, மனம் மீண்டும் சஞ்சல பட்டது.

நேரம் கடக்க கடக்க, எங்கே சரவணன் தேவியை சமாதானம் செய்துவிடுவானோ, அவளும் சரியென்று இருந்துவிடுவாளோ, மஞ்சு வந்துவிட்டால் அவளும் மகளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கமாட்டாள் என்றெல்லாம் தோன்ற, லேசாய் ஓர் பதற்றம் தோற்ற,

அந்நேரம் பார்த்து இருமல் வேறு வர, கல்பனா தான் “கோதா என்னம்மா செய்யுது.. மூச்சு விட முடியலையா…” என்று ஒரு அன்னையாய் பதற, அதை அப்படியே கெட்டியாய் பிடித்துகொண்டார் கோதாவரி.

ஆனால் இதெல்லாம் அசோக் குமார் கண்டுகொண்டிருப்பார் என்று அறியாமல் போனது அவரது துரதிஷ்டம்.

இனி என்ன செய்ய?? ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இதற்காக எல்லாம் மஞ்சுவின் மகளை ஏற்பதா?? என்று சிந்தனை ஓட, மனம் முன் நடந்தவைகளை எல்லாம் அசைபோட்டது.

கோதாவரிக்கு பிறந்ததில் இருந்தே தான் வசதியான வீட்டினல் என்ற எண்ணம்.. தன்னை யாரும் பேச்சுக்கு கூட இறக்கி பேசிவிட கூடாது என்று எப்போதும்இருப்பார். முதலில் கல்பனாவே அப்படிதான் இருந்தார். பின் காலப்போக்கில் மாறிபோனார்.

கோதாவரிக்கு தோழிகள் என்று யாருமில்லை. அப்படி இருந்திருந்தால் கூட இலகுவான இயல்பான கேலி கிண்டல்களை புரிந்துகொள்ளும் தன்மை இருந்திருக்குமோ என்னவோ, ஆனால் அதெல்லாம் அவர்க்கு பெரிதாகவே தெரியவில்லை. யாரோடும் எட்டி நின்றே பழக, நாளடைவில் யாரும் இவரிடம் பேசுவதையும் குறைத்துக்கொள்ள கோதாவரிக்கு தான் என்ன இழக்கிறோம் என்றே தெரியவில்லை.

பின் திருமணமும் ஆகிவிட, இங்கே பிக்கள் பிடுங்கல் எதுவுமில்லை. மாமியார் மாமனார் கிராமத்தில் இருக்க, இவரோ தன் கணவரோடு தனியே இங்கே வாசம். ஆகையால் தான் வைத்தது தான் அனைத்துமே.

பிறந்தவீட்டிலும் தன் கருத்துக்கு மறுப்பில்லை. இப்படியே தன்னை பழக்கியவருக்கு, அன்று மஞ்சு அத்தனை பேரின் முன்னிலும் சாதரணமாய் கேலியாய் பேசியது சட்டென்று பொறுக்கமுடியாமல் போனது.. ஆனால் இப்போது நினைத்தால் தான் தான் வீம்பாக அனைத்தையும் பெரிது பண்ணது போல் தோன்றியது.

அது தானே உண்மையும் கூட.

அதன் பிறகு கூட மஞ்சு இயல்பாக பேசியது, தான் முகத்தை திருப்பிக்கொண்டு வந்ததது, அதன்பின் நடந்த அனைத்தும் நினைவில் வந்து இப்போது தன்னை நினைத்தே கோதாவரிக்கு மிக மிக கேவலமாய் இருந்தது. இத்தனை வயதாகியும் தான் ஒரு பக்குவத்திற்கு வரவில்லையே என்று தோன்றியது. இப்படியான யோசனையே அவருக்கு தலைவலி கொடுக்க,

“ச்சே.. நான் ஏன் இப்படி யோசிக்கணும்.. நான் என்ன தப்பு பண்ணேன்.. எனக்கு பிடிக்கல.. அதுக்கு என்ன செய்யணுமோ செஞ்சேன்.. இது தப்பா..” என்ற எண்ணம் தோன்ற, தன் கணவரின் பார்வையும் பேச்சும் அப்படியே நினைவில் வந்து தொலைத்து.

தன்னை கீழாய் நினைத்து விடுவாரோ என்று அஞ்சினார். வெகு நேரம் அப்படியே அமர்ந்திருக்க, எந்த தெளிவும் மனதில் வராமல் போக,

“இனி எதையும் யோசிக்க கூடாது…” என்ற முடிவில் வந்து பின் தன் தினசரி வேலைகளை கவனிக்க போனார்.

ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அசோக் குமார் தன் மனைவியிடம் பேச தவறவில்லை. கணவனாய் அல்லாமல் ஒரு தோழனாய் பேசினார். முதலில் அதுவே அவருக்கு சிரமமாய் இருந்தது. ஆனாலும் இதை அப்படியே விட முடியாதே.

மெல்ல மெல்ல கோதாவரி மனதிலும் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டன.

தான் அப்படி அந்த பெண்ணை பேசியிருக்க கூடாது தான் என்று தோன்றினாலும் அதற்காக தேவியிடமோ மஞ்சுவிடமோ எல்லாம் கோதாவரியால் மன்னிப்பு கேட்க முடியாது. வேண்டுமானால் அவர் மகனிடம் தன் வருத்தத்தை தெரிவிக்கலாம் என்று நினைத்தார்.

ஆனாலும் இதற்குமேல் என்னிடம் எதையும் எதிர்பார்க்க கூடாது என்ற தோரணையும் ஒட்டிக்கொண்டு தான் இருந்தது.  

ஆனால் அதெல்லாம் கவனிக்க தான் சரவணனிற்கு நேரமில்லாமல் போனது. அவன் வேலையில் சேர்ந்ததில் இருந்து வேறெதிலும் நாட்டமில்லை அவன் மனதில். இதோ இத்தனை நாளில் எத்தனையோ முறை கோதாவரி பேச முயற்சி செய்ய,

“ப்ளீஸ் மாம்.. வேண்டாம்…”என்று நிறுத்தியிருக்கிறான்.

அவனை பொறுத்தவரை கோவம் அவன் அம்மா மீதும் இருந்தது தேவி மீதும் இருந்தது. இருவருக்குமே பொறுமை இல்லை என்று தோன்றியது. அவர் ஒன்று சொன்னால், இவளும் கிளம்பிவிட்டாள். என்னை யாருமே நினைக்கவில்லை என்று நினைத்தான்.

வேலையில் சேர்ந்த பிறகு இரண்டு முறை அவளுக்கு அழைத்தான். எடுக்கவில்லை. பின் அவளே அழைத்தாள்.

“நம்மனால பேமிலில எந்த பிரச்சனையும் வேண்டாம் சனு.. ப்ளீஸ் உன் அம்மா தான் முக்கியம்…” என்றாள்.

“அப்போ அப்போ உனக்கு நான் முக்கியமில்லையா…” என்றவனின் குரலில் காதலும் கோவமும் சேர்த்தே ஒலித்தது.

“ப்ளீஸ் சனு வேணாம்.. இப்போ இதை பத்தி நம்ம பேசவே வேண்டாம்..”

“அப்போ எப்போ இதை பத்தி பேச.. வேணாம்னா என்ன அர்த்தம்.. இப்போ வேணாமா.. இல்லை எப்பவுமே வேணாமா..”என்றவன் குரலில் எனக்கு ஒரு பதில் சொல் என்ற தோரணை இருந்தது.

தேவி பதில் சொல்லாமல் இருக்க,

“பேசு தேவி.. ஏன் அமைதியா இருக்க.. வேணாம் வேணாம் சொன்னா என்ன அர்த்தம்.. இப்போதைக்கு வேணாமா.. இல்லை எப்பவுமே வேணாமா…??” என்று மீண்டும் கேட்க, 

கண்களை மூடி ஆழ மூச்சை எடுத்துவிட்டவள், “சனு.. பெய்ன் எனக்கும் தான்.. இப்பவும் சரி இனி எப்பவும் சரி, ஆன்ட்டி சரி சொன்னதான்..”என,

“ஓ.. அப்போ நீ எனக்காக என்னை லவ் பண்ணல… என் அம்மாக்காக பண்ணியா..” என்று மல்லுக்கு நின்றான்.

அவன் பேச பேச தேவிக்குமே உள்ளம் நொந்தது.. இவனை என்ன சொல்லி சமாதானம் செய்ய, நாம் பழகியதோ சில நாள் தான், ஆனால் கோதாவரி அவனை பெற்றவர் அல்லவா அவருக்கு ஒன்றானால் என்ன செய்ய என்று மனம் அவரை வைத்தே சிந்திக்க,

“ப்ளீஸ் சனு….” கெஞ்சினாள்.

ஆனால் சரவணனோ காதல் தந்த வேகத்திலும் அதே வேகத்தில் வலியை கொடுக்கவும் அவனுக்கு வேறெதிலும் கண்ணும் கருத்தும் பதியவில்லை. பகல்ளெல்லாம் வேலை வேலை என்று இருந்தாலும் அவனுக்கென்று கிடைக்கும் நேரத்தில் எல்லாம் தேவியின் நினைவு ஹாய் சொல்லி வந்து ஒட்டிக்கொள்கிறது.

“நானும் இப்படி தான் டி ப்ளீஸ் ப்ளீஸ்னு சொன்னேன்.. நீ கேட்டியா. அப்படி என்ன பிடிவாதம்.. ஒரு நிமிஷம் என்னை நினைச்சு பார்த்தியா.. ஒருபக்கம் அம்மா இன்னொரு பக்கம் நீ.. யாராவது ஒருத்தர் எனக்கு சப்போர்ட்டா பேசலை.. அம்மாவை விடு,

நீ அந்த நேரத்தில என் கூட இருந்திருக்கணும்.. எதுவும் சரியாகும் எல்லாம் சரியாகும்னு எனக்கு நீதான் தைரியம் சொல்லிருக்கணும்.. ஆனா பெரிய இவ மாதிரி கிளம்பி போறேன் போறேன் சொன்ன… கவலை படாதன்னு எனக்கு நீதான் ஆறுதல் சொல்லிருக்கணும்.. ஆனா போயிட்ட…” என்று கத்தினான்.

உண்மை தானே. அவனை யாருமே நினைக்கவில்லையே.. கோதாவரியோ தேவியை எப்படி அகற்றுவது என்று நினைக்க, தேவியோ அவர் உடல் நலன் கெடக்கூடாது என்று நினைத்தாள்.

இருவருமே சரவணனை நினைக்கவில்லை.

அவன் மனதில் தோன்றும் எண்ணங்கள் வேதனைகள் எல்லாம் எப்படி இருக்கும் என்று யாரும் யோசிக்கவில்லையே. அவரவர்க்கு அவரவர் பக்கத்து நியாயம்.

சரவணன் இப்படி சொன்ன பிறகு தான் தேவிக்கு ஐயோ என்றானது. இதை எப்படி விட்டோம் என்று இருந்தது. ஆம் உண்மை தான். அந்நேரத்தில் அவள் கோதாவரி பத்தி மட்டுமே சிந்திக்க, வேறெதுவும் அவள் நினைக்கவில்லை.  

ஆனால் இப்போதோ அவனை தவிர வேறெந்த சிந்தனையும் இல்லையே.. அவன் கேட்ட கேள்விக்கு என்ன சொல்ல முடியும்.. நீ வேண்டாம் என சொல்லிட முடியுமா..  

என்ன சொல்வது என்ன சொல்வது.. இவனுக்கு என்ன சொல்வது…மனம் பாடாய் அடித்துகொண்டது. முடியாது என்று சொல்ல முடியுமா அவளால். அமைதியாய் அப்படியே இருந்தாள். அவனும் அப்படியே இருந்தவன்

“மோகினி…” என்றழைக்க,

“ப்ளீஸ் சனு.. ட்ரை டூ…”என்று என்ன சொல்ல வந்திருப்பாளோ, அவள் கண்ணீர் குரல் அவனை என்னவோ செய்ய,

“போதும்… நீ அழாத.. எனக்காக நீ அழாத.. உன்னோட ஒரு துளி போதும் எனக்கு…” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டான்.

அவன் கோவம் அவளுக்கு இன்னும் வலியை கொடுத்தது.

“சாரி சனு..”என்று குறுஞ்செய்தி வர, சரவணன் அவளுக்கு பதில் சொல்லாமல் அலைபேசியை மெத்தை மீது தூக்கி வீசினான்.   

“யூ கான்ட் டூ திஸ் டூ மீ தேவி…”என்று கத்த வேண்டும் போல் இருந்தது. அடக்கி கொண்டான். அனைத்தையும்.. அவள்மீது தோன்றும் அனைத்து உணர்வுகளையும் தன்னுள்ள அடக்கிக் கொண்டான்   

தேவிக்கும் கஷ்டமாய் தான் இருந்தது. அவளது யோசனை எல்லாம் சரவணனாக மட்டுமே இருந்தது. ஒவ்வொன்றும் அவனிடம் சொல்ல வேண்டும் பகிர வேண்டும் போல இருந்தது. ஆனால் அதெல்லாம் அவனிடம் பகிர்ந்தால், அடுத்த நொடியே இங்கு வந்து நிற்பான்.

மீண்டும் முதலில் இருந்து அனைத்தும் ஆரம்பம் ஆகும். இதுவரை எல்லாமே அவசரமாய் போனது, இந்த அவகாசமும், நிதானமும் தேவை தான் என்று மனதிற்கு பட்டது. அது தனக்குமே என்றாலும் சரி இல்லை சரவணனுக்கு என்றாலும் சரி. இப்போது கொஞ்சம் விலகி இருப்பதே நல்லது என்று தோன்றியது.

அனைவருக்குமே சற்று அவகாசம் தேவை. அது தேவியாக இருந்தாலும் சரி சரவணனாக இருந்தாலும் சரி.. இல்லை கோதாவரியாகவே இருந்தாலும் சரி.  

ஒருவாரம் அமைதியாய் வீட்டிலேயே இருந்தாள். ஆனால் அதுவே அவளுக்கு சிரமமாய் இருந்தது.

“தேவி இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்க போற…” என்று மஞ்சு கேட்க,

“ஏன் மா…”என்றாள் ஒன்றும் புரியாமல்.

“அதுசரி.. டான்ஸ் ஸ்கூல்ல இருந்து போன் மேல போன்… லீவ் டைம் அட்மிசன் நிறைய வருதுன்னு…”

“ஓ.. ஆமால்ல மா.. நான்… நான் மறந்தே போனேன்…” என்றவள்

“ஈவினிங் போறேன் மா…” என,

“ஏன் இப்போ என்ன…” என்று மஞ்சு கேட்க,  ஒன்றும் சொல்லாமல் தேவி மௌனமாய் மஞ்சு முகம் பார்க்க,

“நமக்கு பெர்சனல் இஸ்யுஸ் ஆயிரம் இருக்கும் தேவிம்மா… ஆனா அதெல்லாம் நம்ம கடமையை பாதிக்க கூடாது. அதுவுமில்லாம அது உன் கனவு.. உன்னோட பல நாள் உழைப்பு.. உன்னை நம்பி அங்க வேலை செய்றவங்க, படிக்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்ல போற..” என்று நிதர்சனத்தை மஞ்சு எடுத்து சொல்ல, தேவிக்கு அவர் சொல்வது சரியெனப்பட்டது.

“சாரி மாம்…” என,

“நோ டியர்.. இதில சாரி சொல்ல எல்லாம் ஒன்னுமே இல்லை. சொல்ல போனா உன்னோடது எல்லாம் பிரச்சனையே இல்லை.. மூவ் ஆன்.. பிரெஷா பீல் பண்ணு…” என்று மகளுக்கு உற்சாகமூட்டினார். 

தேவியும் அதன்பின் தன் வேலையில் தன்னை புகுத்திக்கொண்டாள். இது விடுமுறை நேரம் அல்லவா, நடனப்பள்ளியில் நிறைய புதிய  மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள். ஆக அவளுக்கு நேரம் அதில் சரியாய் இருந்தது.

இதோ கண் மூடி திறப்பதற்குள் ஆறு மாதம் கடந்துவிட்டது..

 

 

Advertisement