Advertisement

                                 துளி – 11

தேவி சென்னை தொடும்முன்னே இங்கே நடந்த அனைத்து விஷயங்களுமே அவள் வீடு போய் சேர்ந்திருந்தது. பிருந்தா தன் அக்காவிடம் பேசியிருந்தார்.  பிருந்தா மட்டுமில்லை, கல்பனா, புண்ணியகோடி என அனைவருமே பேசியிருந்தனர்.

அவர்களுக்கெல்லாம் தேவி மன கலக்கத்தோடு இப்படி தனியே கிளம்பி சென்றது அத்தனை வருத்தமாய் இருந்தது. நல்லது நடக்கவேண்டும் என்று அவர்கள் நினைத்து செய்த ஒன்று இப்படி மாறிப்போகும் என்று யாரும் நினைக்கவில்லை.

வீட்டிற்கு அனுப்பிவிட்டால் போதுமேன்றில்லாமல் தேவி அங்கே செல்லுமுன்னே மஞ்சுவோடு பேசுவது தான் சரியென பட, மருத்துவமனையில் இருந்து கோதாவரி வந்த சில நேரத்திலேயே கல்பனா மகனையும் மருமகளையும் அழைத்து மஞ்சுவிடம் பேச சொன்னார்.

சரவணனும் இதெல்லாம் பார்த்துகொண்டு தான் இருந்தான். அசோக் குமார் கோதாவரியோடு இருந்தார். அவருக்குமே என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்ன சொல்ல முடியும்?? யார் தான் என்ன சொல்ல முடியும். இப்போதிருக்கும் நிலையில் அனைவருக்குமே கோதாவரியின் உடல்நலமே பிரதானமாய் பட அனைவருமே வாய் மூடி இருக்கும் நிலை.

சரவணனுக்கு மனம் இறுகி போயிருந்தது. தேவி எப்படியும் கிளம்புவாள் என்று தெரியும், ஆனால் தான் வரும்வரைக்குமாவது காத்திருப்பாள் என்று எண்ணம். இப்போது அதுவும் இல்லையென்றாகிவிட, அவன் காதல் மனமோ,

 ‘எப்படி இவளால் என்னை பார்க்க கூட செய்யாமல், என்னிடம் ஒருவார்த்தை கூட சொல்லாமல்… நான் இல்லாமல்…’ கிளம்பி போக முடிந்தது என்ற கேள்விகளிலேயே உழல, அதை தாண்டி அவனால் வேறு சிந்திக்க முடியவில்லை.    

கல்பனா தான் முதலில் மஞ்சுவிடம் பேசினார். அதன் பின்னே பிருந்தா பேச,  மஞ்சுவிற்கோ கேட்டதுமே அதிர்ச்சி தான். இந்த நான்கு நாட்களில் இத்தனை நிகழ்வுகளா. இதற்கு தினமும் அவர் மகளோடு பேசியபடி தானே இருந்தார். ஒருவார்த்தை கூட இதை பற்றி ஏன் குரலில் கூட எந்த மாற்றமும் தெரியவில்லையே என்று யோசித்தார்.

 

என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க, “அக்கா நாங்களும் எப்படியும் அடுத்து சென்னை வருவோம், வரும்போது நேர்ல வந்து பேசுறேன்.. எங்களை தப்பா மட்டும் நினைக்காதக்கா…” என,

“ஹே பிருந்தா.. அது.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நா.. நான் வேற யோசிச்சேன்,.. தேவி பத்தி,.” என்று மஞ்சு சொல்ல,

“அக்கா ப்ளீஸ்.. அவ வந்ததுமே எதுவும் கேட்காதீங்க.. எனக்கு தெரியும் நீயும் மாமாவும் அப்படியில்லைன்னு.. ஆனாலும் அப்பா அம்மா இல்லையா.. இந்த விஷயம் யாருக்குனாலுமே அதிர்ச்சியா தான் இருக்கும்.. பட் இருந்தாலும் சொல்றேன்.. கொஞ்சம் தேவி ரிலாக்ஸ் ஆகட்டும்… ” என்று பிருந்தா சொல்ல,   

அவர் சொன்னதற்கெல்லாம் சரி சரி என்று சொல்லி அலைபேசியை வைத்தவர், அப்படியே சாய்ந்து அமர்ந்துவிட்டார். மஞ்சுவிற்கு இதெல்லாம் நினைத்துகூட பார்த்திராத சம்பவங்கள் தான்.

மஞ்சு பொதுவாகவே கொஞ்சம் ஜாலியான பெண்மணி. இப்போதென்றில்லை சிறுவயதில் இருந்தே அப்படிதான். அவர் இருக்குமிடம் கலகலப்பாய் இருக்கும். தானும் மகிழ்ந்து தன்னை சுற்றியிருப்பவரையும் மகிழ்வாய் வைக்கும் பாங்கு. ஆனால் எத்தனைக்கு எத்தனை மனம் இலகுவானவரோ அத்தனைக்கு அத்தனை மனம் திடமானவரும் கூட. அவரது இந்த குணமே தான் தியாகுவை காதலிக்க வைத்தது.

பிறந்ததில் இருந்தும் சரி, காதல், திருமணம் அதன் பிறகான இதோ இந்த இருபத்தி ஐந்து வருட திருமண வாழ்விலும் சரி, மஞ்சு எதற்குமே கலங்கி தவித்ததில்லை. அப்படியான சூழல் இதுவரை உருவானதில்லை. ஆனால் இன்று பெற்ற மகள் அல்லவா..

அதுவும் ஒரே பெண்..

இதுநாள் வரைக்கும் வாழ்வில் அவளுக்கு மகிழ்வை மட்டுமே கொடுத்து, அவளது வெற்றிகளை கண்டு பெருமைகொண்ட அன்னை இப்போது கலங்கி தான் போனார்.

இனி என்ன செய்ய???

“ கல்பனா அத்தை நம்மை அங்க வர சொல்லும் போதே நம்ம என்னன்னு பிருந்தாகிட்ட கேட்டு இருக்கணுமோ… இல்லை தேவி நான் கிளம்பி வர்றேன்னு சொல்லும் போதே நம்ம என்னன்னு கேட்டு இருக்கணும்… ம்ம்ச்.. இப்போ அவளை நான் எப்படி ஹேண்டில் பண்றது…” என்று யோசிக்க, தன்னால் மட்டும் இது தனியே முடியாது என்று நினைக்க,      அடுத்து தன் கணவர் தியாகுவிற்கு அழைத்து உடனே வீடு வர சொல்ல, அவரும் அடுத்து சில நேரத்தில் வந்தார்.

“என்ன மஞ்சு.. என்ன இவ்வளோ டென்சன்ல இருக்க…??? ஈவ்னிங் கிளம்பணுமே..” என்று சொல்ல,

“இல்ல… தேவி வர்றா…” என்று சொன்னவருக்கு மனதில் பாரம் குடியேறியது..

எப்படி அனைத்தும் சரியாக போகிறது..??யார் சரி செய்வார்.. முதலில் தேவி.. அவள்.. அவளை எப்படி நான் சரி செய்வேன் என்று ஒரு அன்னையாய் மனம் துடிக்க,

“தியாகு…” என்றழைத்து அவர் தோள்களில் சாய, அவருக்குமே ஆச்சர்யம்.

“ஹே.. என்னாச்சு…??” என்று கேட்க, சொல்லித்தானே ஆக வேண்டும். ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டார். ஒன்றுவிடாமல்.

அனைத்தையும் அமைதியாய் கேட்டிருந்த தியாகுவிற்குமே அதிர்ச்சி தான். அடுத்து சில நேரம் அவரால் பேச கூட முடியவில்லை.. அவரது எண்ணமெல்லாம் தேவி எப்படி இதெல்லாம் தங்குகிறாள் என்று.

இதுவரைக்கும் தேவி எதற்கும் அழுததில்லை. அழ நேர்ந்ததில்லை. அப்படிதான் இருந்தது அவர்கள் மூவருக்குமான வாழ்வு. சந்தோசம், சிரிப்பு, இயல்பான புரிந்துணர்வு, என்று அழகான சின்ன குடும்பம்.

இப்போது இருவருக்குமே மனதில் ஒரே எண்ணம் தான் அது தேவியை எப்படி என்ன சொல்லி சமாதானம் செய்வது என்பது மட்டுமே.

“தேவி… தேவிய எப்படி தியாகு சமாதானம் செய்ய…” என்று கலக்கமாய் பார்க்க,

“ஹ்ம்ம்.. அது தான் எனக்கும் தெரியலை மஞ்சு.. என்ன சொல்ல முடியும்.. இதெல்லாம் வேணாம்னு சொல்ல முடியுமா இல்லை எல்லாமே சரியா போகும்னு சொல்ல முடியுமா…” என்று தியாகுவும் கலங்க,

மஞ்சுவோ, “எனக்கு தெரிஞ்சு நான் யாரையும் ஹர்ட் பண்ணதில்லை தியாகு அது உங்களுக்கே தெரியுமே.. கோதாவரி பேசுறதுக்கு சும்மா பதிலுக்கு பதில் சொல்வேனே தவிர, நான் மனசில எதுவும் வச்சது இல்லை..

ஆனா பாருங்களேன் என்னவோ என்னை அறியாம நான் கோதாவரிய ஹர்ட் பண்ணிட்டேன் போல.. பட் அதுக்கு அவ தேவியை பேசிருக்க வேணாமே.. அவ என்ன செய்வா…??” என்று புலம்ப,

“மஞ்சுமா… ப்ளீஸ் நீயும் இப்படி பீல் பண்ண தென் தேவி எப்படி நார்மல் ஆவா.. ஒருத்தர் மனசில என்ன நினைக்கிறாங்கன்னு யார்னாலையும் கண்டுபிடிக்க முடியாது.. அது அவங்களாவே சொல்ற வரைக்கும். அதுவுமே கூட சில நேரம் உண்மையா பொய்யான்னு அவங்களுக்கு தான் தெரியும்..

நீ இப்போ கோதாவரி பத்தி எல்லாம் நினைக்காத.. தேவி பத்தி மட்டும் நினை.. அவ தான் நம்மக்கு முக்கியம்.. அவ நார்மல் ஆகணும்.. தேவி வந்தா எதுவும் கேட்க கூடாது. சொல்ல போனா இதெல்லாம் நமக்கு தெரியும்னு காட்டிக்கவே கூடாது.. ஷி மே பீல் கில்ட்டி.. எப்பவும் போல இருக்கணும்.. அவளா ஷேர் பண்ணுவா.. பண்ணினா சரி.. இல்லை அவளை எப்பவும் போல விடனும்…” என்று சொல்ல, மஞ்சுவிற்கும் அதுவே சரியென பட்டது.

தங்கள் மகளின் வரவுக்காய் இருவரும் காத்திருக்க, அவள் வருமுன்னே மீண்டும் கோவாவில் இருந்து அழைப்பு வந்தது.

வேறு யாருமில்லை சரவணன் தான்..

அவனுக்கு மனம் இருப்புக்கொள்ளவில்லை. அவன் ஆரம்பித்து வைத்தது தானே எல்லாம்.. ஆகையால் அவனே பேசிட நினைத்தான். அவன் பேசியதற்கு அவன் மன்னிப்பு கேட்க நினைத்தான்.

தேவியிடம் இனி எதுவும் பேச முடியாது. என்ன சொன்னாலும் அவள் முடிவில் உறுதியாய் இருப்பாள் என்று நன்கு தெரியும். ஆனாலும் அப்படியே இருக்க முடியவில்லை. இவையனைத்தும் தேவியின் பெற்றோருக்கு சொல்லியாகிவிட்டது என்று அறிந்ததுமே, தானும் அவர்களோடு பேசுவது தான் முறை என்று எண்ணினான்.

“அத்தை மஞ்சு ஆன்ட்டி நம்பர் கொடுங்க…” என்று பிருந்தாவிடம் வர,

அவரோ விழிகள் விரித்து, “ஏன்… ஏன் சரவணா…??” என்று கேட்க,

“ஹ்ம்ம் நான் பேசனும் அத்தை…” என்றான் உறுதியாய்.. தீர்க்கமாய்.

“வேணாம் சரவணா.. அண்ணிக்கு தெரிஞ்சா இன்னும் டென்சன் ஆவாங்க… இன்னும் பிரச்சனை தான் ஆகும்…”

“இல்லத்தை அம்மாகிட்ட சொல்லவேணாம்.. நான் வேற எதுவுமே பேச போறதில்லை.. சாரி கேட்க தான் நம்பர் கேட்கிறேன்.. ப்ளீஸ்.. புருஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன்..” என்று சொல்ல, அவன் முகமே எத்தனை வருந்துகிறான் என்று காட்டிகொடுக்க, வேறு வழியில்லாமல் பிருந்த தன் அக்காவின் எண்ணை கொடுத்தார்.

நம்பர் என்னவோ வாங்கிவிட்டான் தான். ஆனால் சட்டென்று அழைப்பு விடுக்க இயலவில்லை. என்ன பேசுவது?? முதலில் எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனை. கண்கள் மூடி சிறிது நேரம் யோசித்தவனுக்கு, அவன் எடுத்த பயிற்சிகள் எல்லாம் உதவிக்கரம் நீட்ட, மனதில் ஓர் தெளிவு பிறந்தது.

புதிய எண்ணில் இருந்து அழைப்பு வரவும், மஞ்சு யார் என்பது போல் யோசிக்க, தியாகு நான் பேசுகிறேன் என்று அழைப்பை ஏற்றார்.

அவர்  “ஹலோ…” என்றதிலேயே, பேசுவது தேவியின் அப்பா என்று புரிந்துவிட,

“ஹலோ அங்கிள் நான் சரவணன்…” என்று அவன் சொன்ன தொனியே, அத்தனை மரியாதையாகவும், அத்தனை ஆளுமையாகவும் இருந்தது.

“சொ.. சொல்லுப்பா…” என்ற தியாகுவிற்கு ஆச்சர்யம்.. அதிர்ச்சி  எல்லாம்..

“அங்கிள் ப்ரீயா இருக்கீங்களா.. பேசலாமா.. ஆன்ட்டி கிட்ட இருந்தா ஸ்பீக்கர்ல போடுங்களேன்.. அவங்க கிட்டயும் தான் பேசணும்..” என, தியாகு தயக்கமாய் மனைவி முகம் பார்த்தவர் பின் அலைபேசியில் ஸ்பீக்கர் ஆன் செய்ய,

“ஹாய் ஆன்ட்டி… நான் சரவணன் பேசுறேன்…” என்று மீண்டும் தன்னை அறிமுகம் செய்துகொள்ள, இப்போது மஞ்சு ஆச்சர்யமாய் தியாகு முகம் பார்த்தார்.

“ம்ம் சொல்லுப்பா… எப்படி இருக்க… முதல் முறை பேசுறோம் இல்லையா… அம்மாக்கு உடம்பு சரியில்ல சொன்னாங்க.. இப்போ எப்படி இருக்காங்க…” என்று மற்றதை விடுத்தது, மஞ்சு அவனையும் அவன் அம்மாவையும் விசாரிக்க, நொடியில் அவரை பற்றிய மதிப்பு அவனுக்கு மனதில் கூடிவிட்டது.

இது தான் மஞ்சு.. தியாகுவுமே இப்படிதான்..

நடந்தவைகளை யாராலும் மாற்ற முடியாது ஆனால் இனி நடப்பவைகளை சரி செய்ய முடியும்.. அதற்கான முதல்படி தான் மஞ்சு தன்மையாக சரவணனிடம் பேசியது.

இதேது மற்ற பெற்றோர்களாய் இருந்தால், இந்நேரம் பிளைட் ஏறி வந்து சண்டை பிடித்திருப்பர், எங்கள் மகளோடு பழகியது மட்டுமில்லாது அவளை அழ வைத்து வேற அனுப்பியது என்று யாரால் தான் பொறுத்துக்கொள்ள முடியும்.

சரவணனுக்கு இப்போது நன்றாகவே புரிந்தது, தேவியின் குடும்பம் எப்படி அவள் வளர்ப்பு எப்படி என்று. இப்படியான ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவளை தான் அவன் அம்மா,

‘உன் அம்மா சொல்லி அனுப்பினாளா.. இங்க வந்து இப்படியெல்லாம் நடந்துக்க சொல்லி…’ என்று கீழ்த்தரமாய் பேசியது.

நினைத்து பார்க்கவே நெஞ்சம் கூச, கண்களை இறுக மூடினான். அவ்வார்த்தைகள் அவனுக்கு அத்தனை வலி கொடுத்தது. கேட்டவளுக்கு எத்தனை வலித்திருக்கும்.

“ஹலோ… ஹலோ..சரவணன்..” என்று தியாகு மற்றும் மஞ்சு இருவரது குரலும் மாற்றி மாற்றி ஒலிக்க, தன்னிலை உணர்ந்தவன்,

“ஹா.. சா.. சாரி… அம்.. அம்மா நல்ல இருக்காங்க… அன்ட் நான்… நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்க தான் கூப்பிட்டேன்…” என்று வார்த்தைகளை தேடி கோர்த்து பேச,

இம்முறை தேவியின் பெற்றோர் மனதில் சரவணன் மீதான மதிப்பு கூடிவிட்டது.

வீட்டில் பெரியவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் பார்த்துகொள்ளட்டும், நமக்கேன் வம்பு என்று ஒதுங்கியில்லாமல், தைரியமாய் பேச முன்வந்ததாகட்டும், மன்னிப்பு கேட்டதாகாட்டும் இதுவே சரவணன் குணத்தை உணர்த்திவிட, தங்கள் மகள் சரியான ஒருவனை தான் துணையாய் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்று தோன்றியது.

அதன் பின் இருவருக்குமே பேச்சு இயல்பாய் வர, அவர்களது இயல்பு கண்டு சரவணன் தான் வெட்கிப் போனான்.. அவர்கள் இடத்தில் கோதாவரி மட்டும் இருந்திருந்தால் அவ்வளவே இந்நேரம் பேசியே கொன்று இருப்பார்.

மீண்டும் உணர்ந்து “சாரி அங்கிள்… ஆன்ட்டி ஐம் ரியல்லி சாரி… நான்.. நான் தேவிகிட்ட ப்ரப்போஸ் பண்ணேன்… நீ.. நீங்க ப்ளீஸ் அவளை தப்பா நினைக்க வேணாம்..” என்று தேவிக்கு சார்ந்து பேச,

தியாகு, “இல்லப்பா.. ஷி இஸ் அவர் லைப்.. அவளை நாங்க பேசி என்ன ஆக போகுது.. இதுவரைக்கும் அப்படியான சூழ்நிலையும் வந்ததில்லை.. இனியும் வராது.. நீ.. நீ எதுவும் மனசில வச்சுக்க வேணாம்.. எல்லாம் நல்லதே நடக்கும்.. போஸ்டிங் வந்திடுச்சாமே.. ஆல் தி பெஸ்ட்…” என்று தியாகு வாழ்த்த,

மஞ்சுவும் தன் பங்கிற்கு வாழ்த்த சரவணன் தான் திக்குமுக்காடி போனான்.

“தேங்க்ஸ் அங்கிள்.. தேங்க்ஸ் ஆன்ட்டி..” என்றவன் மேலும் சில நேரம் பேசிவிட்டு வைக்க, அடுத்து தான் அவனால் மூச்சு விடவே முடிந்தது.

சரவணனுக்கு இப்போது ஒரு விஷயம் நன்றாகவே புரிந்தது, தேவி இதுவரை வாழ்வில் எதற்கும் கலங்கியதில்லை என.

‘ச்சே… எப்படி வளர்ந்தவளை நான்.. ம்ம்ச்.. என்னால தான்..’ என்று சோப்பாவை குத்தியவன்,

“பட் போயிட்டா.. நான் அவ்வளோ சொல்லி… கேட்காம போயிட்டா.. எப்படி.. என்னை பார்க்க கூட தோணல.. போயிட்டா..” என்று வாய் விட்டே புலம்பினான்..

அன்று இரவே, தேவி இல்லம் சென்றுவிட, மஞ்சு தியாகு இருவருமே எப்போதும் போலவே அவளை வரவேற்க, அவர்களுக்கு விஷயம் தெரிந்திருக்கும் என்று தேவிக்கும் தெரியும். இருந்தாலும் தன்னை ஒருவார்த்தை கூட கேளாமல், ஏன் இப்படி என்று கடியாமல் எப்போதும் போல் பேசும் அப்பா அம்மாவை கண்டதும் மனதிற்கு மிகவும் குற்ற உணர்வாய் போனது..

அவர்கள் முகம் பார்க்க கூச, “மாம்… கொ.. கொஞ்சம் பிரெஷ் ஆகிட்டு வர்றேன்..” என்றவள் வேகமாய் தன்னறைக்கு புகுந்துகொள்ள, மஞ்சுவோ கவலையோடு தியாகு முகம் பார்த்தார்.

“நோ… நீ நார்மலா இருந்தா தான் தேவி நார்மலா இருப்பா.. ஒன்ன நல்லா நியாபகம் வச்சுக்கோ மஞ்சு… அவ மேல எந்த தப்பும் இல்லை.. சரியா.. கொஞ்சம் ப்ரீயா விடு.. அவளே வந்து எல்லாம் சொல்வா.. இல்லை அதுவரை வெய்ட் பண்ணுவோம்…” என்றவர் வெளியே சென்றுவிட்டார்.   

அதன் பின் இரண்டு நாட்கள் அமைதியாய் இருந்தாள். அவளுக்கு நன்கு உணர் முடிந்தது, இங்கே அனைத்தும் தெரியும் என்று. இயல்பிற்கும் மீறி மஞ்சு ஒருவித கரிசனத்தோடு பேச தேவிக்கோ கண்கள் கலங்கியது. ஒருவித அழுத்தம் மனதில் குடியேற, அதை தாள முடியவில்லை.     

மூன்றாவது நாள் அவளே தன் பெற்றோரிடம் வந்து, “மாம் டாட்.. எனக்கு தெரியும் உங்க ரெண்டு பேருக்கும் எல்லாம் தெரியும்னு…” என்று பேச்சை ஆரம்பிக்க,

தலை குனிந்து கைகள் கோர்த்திருந்தவளின் கைகளை பற்றிய தியாகு  “எல்லாமே சரியாகும்… உன்கூட எப்பவும் நாங்க இருக்கோம்….” என்று மட்டும் சொல்ல, மஞ்சுவும் மகளை இறுக அணைத்து அதையே சொல்ல, தேவிக்கு அழுகையை அடக்க முடியவில்லை.. தன் அம்மாவை கட்டிக்கொண்டு அழுது கதறி விட்டாள்.

மஞ்சு அவளை சாமதானம் செய்ய விழைய, தியாகு “விடு அழட்டும்.. மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்…” என்று சொல்ல, தேவி அழுது அழுது, மஞ்சுவின் மடியிலேயே உறங்கியும்விட்டாள்.

“தியாகு, நாலு நாள்ல இவ்வளோ அபெக்சனா…” என்று ஆச்சர்யமாய் மஞ்சு கேட்க,

“நாலு நாளோ, நாற்பது வருசமோ, லவ் இஸ் எ லவ்.. அவ நம்மை பார்த்து வளர்ந்தவ.. அதான் மனசில சட்டுன்னு இவ்வளோ ஆழமா சரவணனை பதிச்சிட்டா..” என்க,

“ஆனா…” என்று மஞ்சு எதுவோ சொல் வர

“மஞ்சுமா.. தேவிக்கு இதுவர பாஸிட்டிவ் தாட்ஸ் மட்டும் தான் நம்ம கொடுத்திருக்கோம்.. இப்போ அவளே எதிர்பார்க்காம ஒரு நிகழ்வு.. பட் இதுவும் ஒரு அனுபவம்னு எடுத்துக்கணும்.. சொல்ல போனா இதெல்லாம் ஒரு விசயமே இல்ல.. அப்படின்னு நம்ம தான் அவளை பீல் பண்ண வைக்கணும்.

தேவி தப்பானவன லவ் பண்ணல.. சரவணன் இஸ் ரைட் சாய்ஸ்.. நீ நான் மாப்பிள்ளை பார்த்திருந்தா கூட இப்படி பார்த்திருப்போமா தெரியாது.. பட் எல்லாத்துக்குமே ஒரு டைம் வேணுமே.. அதுவரை காத்திருப்போம்… ” என்று சொல்ல மஞ்சு ஆமோதிப்பாய் தலையசைத்தார். அதன் பிறகு இதை பற்றின பேச்சு அங்கே இல்லை. தேவியும் அடுத்து எதுவும் பேசவில்லை.

தேவி கோவாவில் இருந்து கிளம்பியது, அனைவருக்குமே வருத்தமே, அவள் அங்கிருந்த நான்கு நாட்களில் வீட்டில் எத்தனை மகிழ்வு இருந்ததோ, இப்போது அத்தனையும் அவளே கொண்டு சென்றுவிட்டது போல் ஓர் உணர்வு.

“தேவிக்கா அடுத்து வரவே மாட்டாங்களா…” என்று ராகுல் நூறு முறை கேட்டிருப்பான்.

“வயசு பொண்ணு இப்படி கண்ணீரோட போறது எப்படியோ இருக்கு…” என்று கல்பனா வருந்த, பிருந்தாவிற்கு எதுவுமே வெளிக்காட்ட முடியாத சூழல்.

புண்ணியகோடியோ சரவணனுக்கு ஆறுதல் சொல்லும் விதமாய் அவன் தோள் தொட, அவனோ தன் மாமாவின் கரங்களை இறுக பற்றிக் கொண்டான்.

அசோக் குமார் “எல்லாம் சரியாகும்…” என்று மகனிடம் சொல்ல, ஒரு வெற்று புன்னகை புரிந்தவன், நேராய் கோதாவரியிடம் வந்து “இப்போ எப்படி மாம் இருக்கு….” என்று கேட்க,

தன் மகன் மனதை அந்த அன்னையால் அப்போதும் புரிந்துகொள்ள முடியவில்லை.

அடுத்து இவர்கள் கிளம்ப நான்கு நாட்கள் ஆக, கோதாவரி மௌனமாகவே அனைத்தையும் பார்த்தபடி இருக்க, எந்த குறையும் சொல்ல முடியாதபடி சரவணனே அவரை கவனித்துகொண்டான்.ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தான். அத்தனை ஏன் தேவி பற்றி அடுத்து ஓர் வார்த்தை கூட பேசவில்லை. எதாவது பேசுவானோ என்று கோதாவரி அவன் முகம் பார்த்தால்,

“ரெஸ்ட் எடுங்க மாம்…” என்று சொல்லி சென்றுவிடுவான்.

அடுத்து அவர்களும் சென்னை வந்து சேர்ந்திருக்க, கூடவே பிருந்தாவும் புண்ணியகோடியும் வந்தனர். வந்தவர்கள் கோதாவரி வீட்டில் சிறிது நேரம் இருந்துவிட்டு,

“கோதா ரிலாக்ஸ்டா இரு.. நாங்க கொஞ்சம் வெளிய போய்ட்டு வர்றோம்…” என்று புண்ணியகோடி சொல்ல, அனைவர்க்கும் புரிந்தது அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்று.

கோதாவரி ஒன்றும் சொல்லவில்லை.. மௌனமாய் தலையசைத்தார். அசோக் குமார் தான் வெளியே வந்து தானும் வருவதாய் சொல்ல,

“நீங்க எதுக்குண்ணா…” என்று பிருந்தா தயங்க,

“இல்லம்மா..மத்ததுன்னா கூட பரவாயில்ல பட் கோதாவரி தேவியை பேசினது தப்பு.. அதுக்காகவாது மன்னிப்பு கேட்கணும்…” என,

“டாட் நான் ஆல்ரெடி கேட்டேன்.. நீங்க போகவேணாம் சொல்லல.. பட் அவங்களை கொஞ்சம் ப்ரீயா விடுங்களேன்.. உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.. ப்ளீஸ்..” என்று சொல்ல, மகன் சொல்வதில் இருக்கும் நியாயம் புரிந்து சரி என்று அசோக் குமார் சொல்ல, பிருந்தாவும் புண்ணியகோடியும் மட்டும் கிளம்பினர்.

தேவியோ இவர்களை கண்டதும் ஒரு சிறு அதிர்ச்சி..

“வாங்க சித்தப்பா.. வாங்க சித்தி…” என்றதோடு நிறுத்திக்கொள்ள, அவள் முன்னே வேறு எதுவும் யாரும் பேசவில்லை. பொதுவான பேச்சுக்கள் மட்டுமே.

மாலை வரை இருந்துவிட்டு, மீண்டும் கோதாவரியை போய் பார்த்துவிட்டு பிருந்தாவும் புண்ணியகோடியும் அன்று இரவே கோவா சென்றுவிட்டனர்..

அப்படியே நாட்களும் உருண்டோடியது..

 

 

Advertisement