Advertisement

அகிலம் – 8
கதிரோனைக் கண்டு மலரும் தாமரையாய் ஆதியைக் கண்டதும் அவனை இறுக்கமாக அணைத்திருந்தாள் ஆதியின் சின்ட்ரெல்லா..
தாய் மடி சேர்ந்த கன்றாய் அவனை ஒன்றினாள் அவள்..
அவள் அணைப்பில் முதலில் திகைத்த ஆதி பிறகு அவளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டது இறுக்கமாக..
அந்த அணைப்பில் உனக்கு என்றும் நானென்ற செய்தி..
நிமிடங்கள் கனமான மௌனத்துடன் கரைய குலுங்கத்துவங்கினாள் ஆரண்யா..
“என் சின்ட்ரெல்லா அழுகிறாளா..?? ஏனாம்..?? அதுவும் நான் அவளுடன் இருக்கும்பொழுது..??”, ஆதியின் மனது கேள்வி எழுப்ப ஆருவின் முதுகைத் தானாக தடவிக்கொடுத்தது ஆதியின் கைகள் காரணம் அறியாமலே..
சத்தமில்லாமல் துவங்கிய அழுகை கதறாலாக உருமாறி கேவலாக முடியும்வரை தன்னுடன் அவளைச் சேர்த்துப் பிடித்திருந்தான் ஆதிரன்..
மெல்ல மெல்ல அவனைவிட்டு பிரிந்தவள் அவன் கண்ணுக்குள் எதையோத் தேடத் துவங்கினாள் எதை எதிர்பார்த்து..
“என்னடாமா..?? என்னாச்சு..?? ஏன் இந்த அழுகை..??”
அவனிடம் அவள் எதிர்பார்த்த கேள்விதான் அது.. ஆனால் பதில் சொல்லும் முன்னால் கண்ணீர் வந்துதொலைத்தது அவளுக்கு..
“கஷ்டமா இருந்தா சொல்லவேண்டாம்..”
மறுப்பாய் ஒரு தலையசைப்பு ஆருவிடம்..
“நான் ஒருத்தனை கொலை செய்ய முயற்சித்தேன்..”, சில நொடி அமைதிக்குப் பிறகு சட்டென விழுந்தன வார்த்தைகள்..
“என்..ன.. சொ..ல்ற ஆரு..?? கொலை..யா..?? என்ன பண்ணான் அவன்..??”, திணறலுடன் துவங்கியவன் ஆத்திரத்துடன் முடித்தான்..
“ஒன்னும் பண்ணல அவன்.. ஏதாவது பண்ணிருவானோன்னு பயத்துல அவனை நான் குத்துவிளக்கால் அடிச்சுட்டேன்..”, கைகள் நடுங்க..
“ஒன்னும் பண்ணாதவனை எதுக்கு ஆரு அடிச்ச..??”, புரியாமல்..
“அன்னைக்குப் பார்த்தப்போ அவன் ஒன்னும் பண்ணல.. ஆனால்.. அப்போ.. அப்போ..”, என்று துவங்கியவள் தனது பத்து வயதை நோக்கிச் சென்றிருந்தாள்..
ஆரண்யா பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவை என்றாலும் அவளது சொந்த ஊர் தர்மபுரியை அடுத்த சிந்தியாபுரம் என்ற சிற்றூர்..
கோவையா? சிந்தியாபுரமா? என்ற கேள்வி எழுந்தால் யோசிக்காமல் சிந்தியாபுரம் என்று பதில்வரும் அவளிடம்..
அவ்வளவு பிடித்தம் அவ்வூரின் மீது..
மூன்று நாள் லீவ் கிடைத்தால் போதும்.. தந்தையிடம் நச்சிப்பிடுங்கியாவது சொந்த ஊருக்கு சென்றுவிடுவாள்..
தனது வீட்டைத் தாண்டிப் போவோரிடம் வம்பு செய்ய தோட்டத்தைச் சுற்றிவர என அவளது பொழுதுகள் அங்கே இனிமையாக..
அப்பொழுது ஆருவிற்கு வயது பத்து.. ஐந்தாம் வகுப்பு ஆனுவல் லீவில் சிந்தியாபுரம் சென்றிருந்தாள்..
“அம்மா.. நான் சரண்யா அக்கா வீட்டிற்கு போயிட்டு வரேன்..”, அல்லியின் முந்தியைப் பிடித்து திருகியபடியே கேட்டாள் ஆரு..
“வந்த அன்னைக்கே அங்கே என்ன வேலை உனக்கு..??”, கோபமாக..
“மா.. ப்ளீஸ்மா.. இங்கு எனக்கு விளையாட யாரு இருக்கா.. சரண்யா அக்கா வீட்டுக்குப் போனா அவங்க பக்கத்துக்கு வீட்டுப் பசங்க எல்லாம் விளையாட வருவாங்க.. ஜாலியா இருக்கும்..”
“நீ அங்க போய் விளையாடற..?? அதை நாங்க நம்பனும்..??”, கேலிபோல் சற்றே நக்கலாக விழுந்தது அல்லியின் வார்த்தைகள்..
இவர்கள் வீட்டில் ப்ளேக் அண்ட் வயிட் டிவி என்பதால் அங்கே கலர் டிவி பார்க்கச் செல்கிறாள்.. பிள்ளையின் எண்ணம் தாய்க்கா தெரியாது..??
“நிஜமா இன்னைக்கு நான் விளையாடத்தான் போறேன்.. ப்ராமிஸ்..”, முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு பெர்மிஷன் கேட்டவில்லை தடுக்கவில்லை அல்லி..
அல்லி போகச்சொன்னதும் அவருக்கு ஒரு பறக்கும் முத்தத்தை பரிசளித்துவிட்டு சரண்யாவின் வீட்டிற்கு பறந்திருந்தாள் ஆரண்யா.. அந்த சந்தோசம் நெடுநேரம் நிலைக்கப்போவதில்லை என்று தெரியாமல்..
“ஹே ஆரு.. எப்போ வந்த..??”, ஆரண்யாவைக் கண்டவுடன் ஆரவாரமாக வரவேற்பு சரண்யாவிடம்..
“இப்போத்தான் சிஸ்.. வந்தவுடனே உங்களைப் பார்க்க வந்துட்டேன்..”, பக்கெட் பாக்கெட்டாக ஐஸ் மழையை கொட்டி கண்சிமிட்டலுடன்..
“இந்த பொய் சொல்றவேலைதானேவேணாங்கறது..”, செல்லமாக மிரட்டிய சரண்யா, “உன் பேவ்ரட் கார்ட்டன்க்கு டைம் ஆயிருக்கும்.. அதைப்பார்க்கத் தானே வந்த..??”, என்று சரியாக பாயின்ட்டைப் பிடித்திருந்தாள்..
அசடுவடிந்துதான் போனது ஆருவின் முகம்..
அதைக்கண்டு உரக்கச் சிரித்த சரண்யா ஆருவை அழைத்துக்கொண்டு டிவி ரூமிற்கு சென்றாள்..
அங்கே மூன்று இளைஞர்கள் கார்ட்ஸ் விளையாடியபடி அமர்ந்திருக்க அமர்ந்திருக்க சங்கோஜமாகிப்போனது ஆருவிற்கு..
“ஹேய் வாண்டு.. இது யாரு புது வாண்டு..??”, அங்கிருந்த ஒருவன் கேட்க அவனைப் பார்த்து முறைத்து வைத்தாள் சரண்யா..
அதைக்கண்டு அனைவரும் சிரிக்க, “புது வாண்டெல்லாம் இல்லை மச்சான்.. பழைய வாண்டுதான்.. ஆரண்யா.. எங்க சின்ன மாமா பொண்ணு..”, என்று சரண்யாவின் தமையன் சத்யன் உரைக்க ஓஹோ என்ற சிரிப்பலை அங்கே..
அவர்கள் கிண்டல் செய்ததில் அப்படியே ஓடிப்போகலாம் போல் இருந்தது ஆருவிற்கு..
“எருமை மாடு அண்ணாஸ்.. கம்முன்னு இருக்க மாட்டீங்க எல்லாரும்..”, அதட்டல் போட்டபடியே டிவியை ஆன் செய்த சரண்யா ஆருவை சோபாவில் அமரச்செய்தாள்..
ஏனோ அங்கு இருக்கவே பிடிக்கவில்லை ஆருவிற்கு..
“அக்கா.. நா..ன்.. வீட்டுக்குப் போறேன்க்கா..”
“இதுக பேசறதைப் பார்த்து பயந்துட்டியா..??”, சீரியஸாக..
ஆம் என்பது போலவும் இல்லை என்பது போலவும் தலையை உருட்டிவைத்தாள் ஆரு..
அதில் சிரித்த சரண்யா, “அதுங்க எல்லாம் சும்மா உன்னைக் கிண்டல் பண்றாக.. நீ வா நாம இரண்டு பேரும் கார்ட்டூன் பார்க்கலாம்..”
சிறிது தயங்கியபடி ஆருவும் டிவியைப் பார்க்கத் துவங்க சத்யனும் அவனது நண்பர்களும் அடிக்கடி இவர்கள் இருவரையும் வம்பிழுத்தபடி இருக்க அவர்களின் பேச்சில் தன்னையும் இணைத்துக்கொன்டிருந்தாள் ஆரு..
தொடர்ந்து வந்த நாட்களில் ஆரு இவர்களுடன் ப்ரெண்டாகிப்போனாள் என்றே சொல்ல வேண்டும்..
பகல் வேளைகள் எல்லாம் தாத்தா வீட்டில் இனிமையாக கழிய அந்தி வேளையில் சரண்யாவின் வீட்டிற்கு வந்துவிடுவாள்..
சரண்யா சத்யன் அவன் நண்பர்கள் என அவளுக்கு அவர்களுடன் நேரம் செலவிடுவது அவ்வளவு பிடித்திருந்தது..
அவளிடம் உனது பெஸ்ட் லீவ் எதுவென்று யாராவதுஅப்பொழுது கேட்டிருந்தாள் திஸ் இஸ் மை பெஸ்ட் லீவ் என்றிருப்பாள்..
அவ்வளவு என்ஜாய் செய்தாள் அந்த நாட்களை..
அன்றும் அப்படித்தான்..
மணி நான்கைத் தொட்டிருக்க சரண்யாவின் வீட்டிற்கு நுழைந்தாள் ஆரு..
“எப்படி ஆரு உன் ஜெர்ரியைப் பார்க்க கரெக்ட்டா வந்திடற..??”, இது சத்யன்..
“அது.. எனக்கு ஜெர்ரி மேல அவ்ளோ லவ்வு மாமா..”,என்று கண்ணடித்த ஆருசரண்யாவை எங்கும் காணாது, “அக்கா எங்க மாமா..??”, என்று கேட்டாள் சத்யனிடம்..
“அவ ஏதோ புக் வாங்கனும்னு பிரெண்ட் வீட்டுக்குப் போயிருக்கா வாண்டு.. நீ போய் டிவி போட்டு பாரு.. இப்போ வந்திடுவா..”, என்றவன் தனது நண்பர்களுடன் கதையளக்கத் துவங்கியிருந்தான்..
வழக்கம்போல் அங்கே போடப்பட்டிருந்த ஒரு சோபாவில் அமர்ந்து இவள் டிவி பார்த்துக்கொண்டிருந்தாள் ஆரு..
குழந்தைகளுக்கு பொதுவாகவே ஒரு பழக்கம் உண்டு..
டிவி பார்க்கும் பொழுது டிவிக்குள் சென்றுவிடுவது..
ஆருவும் அந்நிலையில் தான் இருந்தாள் அப்பொழுது..
மெதுவாக அவள் உடலில் எதுவோ நெளிவதுபோல் தோன்ற பூச்சியென நினைத்து முதலில் கையைவைத்துத் தட்டிவிட்டுககொண்டிருந்தாள்..
சிறிது நேரத்திற்கெல்லாம் நெளிவதுபோன்ற உணர்வு மறைந்து யாரோ உடலை வருடுவதுபோன்ற எண்ணம்..
ஓரக்கண்ணால் பார்க்க சத்யன் ஆருவின் உடலில் கைகளால் தடவ முயற்சிசெய்துகொண்டிருந்தான்..
அடுத்த நிமிடம் வியர்வையில் குளித்திருந்தாள் ஆரு பயத்தில்..
கண்களில் நீர் வரவா? வேண்டாம்மா? என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்க சத்யனின் கைகளை அவசரமாக தள்ளிவிட்டவள் அங்கிருந்த யாரையும் நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லாது அவசரமாக ஓடத் துவங்கியிருந்தாள்..
அவளைத் தொடர்ந்து அம்மூவரின் சிரிப்புச் சத்தம்..
அழுதுகொண்டே வீட்டை அடைந்தவளுக்கு உடல் நடுக்கம் மட்டும் நிற்கவேயில்லை..
தான் ஏதோ தவறு செய்துவிட்டதுபோல் உணர்வு..
இந்தத் தலைமுறையில் உள்ள குழந்தைகள் போல் அவளுக்கு யாரும் பேட்டச், குட் டச் என்பதுபற்றி சொல்லித்தரவில்லை என்றபொழுதும் சத்யனின் தொடுகை பேட் டச் என்று புரிந்திருந்தது ஆருவிற்கு..
ஆனால் அது அவனுடைய தவறென்று எண்ணாமல் தன்னுடைய தவறென்று எண்ணினாள் அவள்..
அவள் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து அல்லி, “எதுக்குடி அழுகற..??”, பதற்றமாகவே..
அழுகை கூடியது ஆருவிற்கு..
“கேக்கறேன்ல சொல்லித்தொலை..”, கொஞ்சம் கடுமையாக அல்லி கேட்க நடந்ததைச் சொல்ல நா எழவில்லை அவளுக்கு..
தாய் தன்னை அடித்துவிடுவாளோ என்ற பயம் மட்டும் பிரதானமாக..
“விழுந்துட்டேன் ம்மா..”, பொய்யுரைத்தது குழந்தை..
“இதுக்குத்தான் தங்குதங்குன்னு ஓடக்கூடாது..”, என்று அவளை மேலும் திட்டிய அல்லி, “எங்கியாச்சு அடி பட்டிருக்கா..??”, என்று கேட்டார்..
“அதெல்லாம் இல்லை.. வலிக்குது..”, என்றாள்..
வலி உடலில் அல்ல மனதில் என்று தெரியவில்லை அல்லிக்கு..
“படுத்துத்தூங்கு.. சரியாபோயிடும்..”, என்று ஆருவிற்கு திருநீர் பூசிவிட்டவர் அவள் அருகே படுத்து அவள் தூங்கும் வரை தட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தார்..
அடுத்தநாள் காலை அனைவருக்கும் அழகாய் விடிய ஆருவிற்கு அது ஏனோ நல்ல நாளாகவே தோன்றவில்லை..
“நீங்க இன்னைக்கு ஊருக்குப் போறீங்களாமே..?? அம்மா சொன்னாங்க..??”, என்றபடி சரண்யாவுடன் வந்திருந்த சத்யனைக் கண்டு..
கோழிக்குஞ்சாய் தாயின் அருகே ஒன்டிப்போனாள் ஆரு பயத்துடன்..
அவள் செயல்கள் எல்லாம் விசித்திரமாக இருக்க, “என்ன ஆச்சு ஆரு..?? ஏன் ஒரு மாதிரி இருக்க..??”, என்று கேட்டாள் சரண்யா..
“நேத்து உங்க வீட்ல இருந்து வரும்பொழுது எங்கையோ விழுந்துட்டா போல.. நடுங்கிட்டே இருக்கா..”, பதில் வந்தது அல்லியிடமிருந்து..
சத்யனிடம் பெருமூச்சு இப்பொழுது..
“இதுக்குத்தான் வாண்டு மெதுவா நடக்கனும்னு சொல்றது..”, கேலி செய்த சத்யனை வெறுப்பாய் பார்த்தது ஆருவின் கண்கள்..
அவள் பார்வையில் கொஞ்சம் அடங்கிய சத்யன் வேலை இருப்பதாக பொதுவாகச் சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான் தப்பித்தேன் இவள் யாரிடமும் சொல்லவில்லையென்ற நிம்மதியுடன்..
ஆருவின் நிம்மதியை முழுமையாக பறித்துக்கொண்டு..
ஊருக்குள் வருவது முற்றிலும் குறைந்து தனக்குள்ளேயே உழன்று போனாள் ஆரு அச்சம்பவத்திற்கு பிறகு..
ப்ரீ டிப்ரெஷன் ஸ்டேட் என்றே சொல்லலாம் அதை..
யாருடனும் பெரிதாக பேசாது முன்போல் அங்கும் இங்கும் சுற்றாது என ஆருவின் செயல்கள் முழுவதும் மாறியிருந்தது..
அதை அவள் பெற்றோர்கள் குழந்தை மெச்சுவர்டாக மாறிவிட்டாள் என்றே நினைத்துக்கொண்டனர் அவள் நிலை அறியாது (புரியாது)..
வருடங்கள் கடக்கக் கடக்கத்தான் தன் மீது தவறில்லை என்று புரிந்தது ஆருவிற்கு..
சத்யனின் மீது கோபத்தையும் வன்மத்தையும் அவளே அறியாமல் வளர்த்துக்கொண்டாள் ஆரு..
அவனுக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும் என்ற எண்ணமும் அவளுள் திடமாக மனதிற்குள்..
ஆனால் அதற்கான முயற்சி எதுவும் எடுக்கவில்லை அவள்..
சந்தர்ப்பம் தானாக அமையும் என்ற குருட்டு நம்பிக்கை அவளுள்..
அவள் எண்ணப்படி தானாகவே சந்தர்ப்பம் அமைந்தது ஆருவிற்கு..
அதை அவள் பயன்படுதியும்கொண்டாள் இன்று..
-அகிலமாவாயோ நீ..??

Advertisement