கவியோ ஆதியை ஏமாற்றிவிட்டு, “நான் உன்கிட்ட ஒன்னு கேட்கனும்..??”, கொஞ்சம் தயக்கமாக..
“கேளு கவி..”
“நான் யாரையாவது கொலை செஞ்சுட்டேன்னா என்னண்ணா பண்ணுவ..??”
“சொத்தெல்லாம் நானே ஆட்டய போட்டிடுவேன்..”, கொஞ்சம் கேலியாய்..
“நான் சீரியஸா கேட்கறேன் ஆதிண்ணா..”
“கவி..??”, அதிர்ந்துதான் போனான் ஆதி..
“சொல்லுண்ணா என்ன செய்வ..??”, பொறுமையாக மிகவும் நிதானமாகக் கேட்டாள் கவிநயா..
ஏதோ பிரச்சனை என்று மட்டும் நன்றாகப் புரிந்தது ஆதிக்கு..
தன்னிடம் அது என்னவென்று சொல்ல அவளுக்கு இப்பொழுது விருப்பமில்லையென்றும் சேர்ந்தே புரிந்தது..
“நீ என்ன பண்ணாலும்.. அது கொலையே என்றாலும் உனக்குத் துணையாய் நான் இருப்பேன்..”, என்றவனின் மனதில் பயம் சூழ்ந்திருந்தபொழுதும், “என்னாச்சுடா..?? ஏதாவது பிரச்சனையா..?? எதுவா இருந்தாலும் சொல்லும்மா..”, என்பதற்குள் போனைக் கட் செய்திருந்தாள் அவனின் தங்கை..
போனின் பீப்பொலி கேட்டதும் ஆதிக்கு தனது சின்ட்ரெல்லா உட்பட அனைத்தும் மறந்துபோனது..
ஆதி கவிக்கு முயற்சிக்க அவளது போன் சுவிட்ச்சாப்பில்..
ஏதோ நடக்கபோகிறதென்று உள்மனம் அடித்துச்சொல்ல கவியின் கல்லூரி செல்ல எழுந்திருந்தான் தமையன்..
ஆதி இருக்கையைவிட்டு எழுந்த அடுத்த நொடி, “ஆதி.. நானும் வருகிறேன்..”, என்றபடி ஆருவும் அவனுடன் எழ..
கவி ஆதியிடம் என்ன பேசினான் என்று தெரியாதபொழுதும் அவன் உதிர்த்த கொலையென்ற வார்த்தையும் அவனது முகத்தில் தென்பட்ட பதற்றமும் அலைபுருதலும் அவளை அவனுடன் புறப்படவைத்தது..
தானிருக்கும் நிலையில் தன்னுடன் அவள் இருந்தால் யானைப்பலமென்றே தோன்றியது அவனுக்கு..
போகலாம் என்பதாய் அவசர தலையசைப்பு அவனிடத்தில்..
நூறு தொண்ணூறென்று ஹை ஸ்பீடில் ஆதி காரை இயக்கியப்பொழுதும் கவியின் கல்லூரியை அடைய ஒரு மணி நேரம் எடுத்திருந்தது..
கவியின் கல்லூரியைப் பொறுத்தவரை ப்ரின்சிபால் ஆபீஸிலிருந்து பர்மிஷன் லெட்டர் வாங்கினால் மட்டுமே கிளாஸ் டைமில் மாணவர்களைப் பார்க்க அனுமதிப்பார்கள் என்பதால் ஆதியும் ஆருவும் ப்ரின்சிபால் ஆபிஸிற்கு விரைந்தனர்..
அன்று ஏனோ ஆபிஸில் பெருங்கூட்டம்.. மாணவ மாணவிகளின் கூட்டம்..
இருவராலும் உள்ளே காலெடுத்து வைக்கக்கூட முடியாகூட்டம்..
ஆதியைக் கண்டதும் நித்யா அவனிடம் விரைந்து, “அண்ணா.. நல்லவேளை சரியான நேரத்திற்கு வந்துவிட்டீர்கள்..”, என்றாள் ஆசுவாசமாக..
“என்ன நித்யா ஆச்சு..?? கவி எங்கே..??”
“அண்ணா.. அது வந்து..”, எப்படிச் சொல்லவெனத் தயங்கி நின்றாள் அவள்..
“சொல்லுங்க நித்யா.. என்னாச்சு..??”, இது ஆரு..
“ப்ரின்சிப்பல் ரூம் போய் பேசிக்கலாம்..”, என்றவள் இருவரையும் எப்படியோ உள்ளே அழைத்துச் சென்றிருந்தாள்..
கைகளை டேபிளில் அழுந்தவைத்தபடி பிரின்சிபால் தனது இருக்கையில் அமர்ந்திருக்க அவரின் வலதுபக்கம் உடல் முழுதும் இரத்தக்கறைகளுடன் ஒரு ப்ரொபசர்.. அந்தப் ப்ரொபசரின் எதிரில் அவரை முறைத்தபடி காளியின் ஸ்வரூபமாக கவிநயா..
“இப்போ என் கம்பளைன்ட்டை நீங்க எடுதுக்கப்போறீங்கள்ளா இல்லையா..??”, உச்சஸ்தானத்தில் அவளது குரல் ஒலிக்க உள்ளே நுழைந்தனர் ஆதியும் ஆருவும்..
தன் எதிரில் நின்றிருந்த ப்ரொபசரைக்காட்டி, “அண்ணா.. இந்தப் பெரிய மனுஷன் தப்புப் பன்னினார்.. இவரைப்பற்றி நான் ப்ரிசிப்பலிடம் கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தேன்.. பட் இந்தப் ப்ரிசிப்பல் என் கம்ப்ளைன்ட் லெட்டரை வாங்காமல் எனக்கு அட்வைஸ் செய்கிறார்..”, என்றாள்..
பிரச்சனை என்னவென்று தெரியாதபோதும் தன் தங்கை மீதிருந்த நம்பிக்கையில் பிரின்சிபாலிடம் திரும்பிய ஆதி, “ஏன் சார் கம்ப்ளைன்ட் எடுதுக்கமாட்டேங்கறீங்க..??”, என்றான் கேள்வியாய்..
அவனது குரலில், “அப்படி இல்லை சார்..”, என்ற பிரின்சிபால், “உங்க தங்கை அவர் மேல் ஹராஸ்மென்ட் கம்ளைன்ட் கொடுத்திருக்காங்க..”, என்றார் தயக்கமாக..
ஆருவும் ஆதியும் ஒரேபோல் கவியைப் பார்க்க அவளது கண்களில் ஒருநொடி சிறுவலி தோன்றி மறைந்து இயல்பானது..
அப்பொழுது தான் புரிந்தது ஆதிக்கு..
நான் யாரையாவது கொலை செஞ்சுட்டேன்னா என்னண்ணா பண்ணுவ என்பதன் முழு அர்த்தம்..
தாமதிக்கவில்லை அவன்..
வெளுத்திருந்தான் எதிரில் நின்றிருந்தவனை..
கைகள் தளர அவனை அடித்த ஆதிக்கு ஆத்திரம் மட்டும் தீர்ந்தபாடில்லை..
அடிவாங்கியன் சுயநினைவில்லாமல் கீழே விழுந்தபோதிலும் அடிகள் பல விழுந்தது அவனுக்கு கவியின் தமையனிடமிருந்து..
ஆதியின் அடியில் அவன் இறந்துவிடுவானோ என்ற பயம் ஆருவிற்கு..
விரைந்து தடுத்திருந்தாள் அவனை இனி அடிக்காதே என்பதாய்..
“எனக்கு ஆத்திரம் தீரமாட்டேங்குது ஆரு..”, ஓய்ந்து போன குரலில் சொன்னான் அவன்..
“புரியுது ஆதி.. காம் டவுன்..”, என்று அவனது முதுகை லேசாகத் தட்டிக்கொடுத்தவள் மயக்க நிலையில் வீழ்ந்து கிடந்தவனைக் காட்டி, “பாருங்க.. அவன் சுயநினைவில்லாமல் கிடக்கிறான்.. சுயநினைவில்லாமல் கிடக்கும் செத்த பாம்பிவன்.. செத்த பாம்பை அடிக்க வேண்டுமா..?? யோசிங்க ஆதி..”, முடிவை அவனிடமே விட்டபடி..
அவளின் வார்த்தைகள் மூளையை அடைந்த போதிலும் மனது அதைக் கேட்க மறுத்தது..
“அவன் என் தங்கையிடம்..”, என்றவனின் கண்களைக் காணவே அச்சமாக..
கால்களை இரண்டடி பின் எடுத்தே வைத்திருந்தாள் ஆரு..
“அண்ணா.. அவனை எதுவும் செய்யாதே.. விட்டுவிடு.. அண்ணி சொல்வது சரிதான்.. அவன் செத்த பாம்பு.. அவனை அடிப்பதில் பிரயோஜனம் இல்லை..”, சஞ்சல மிகுதியில் தன்னை அறியாமலே அண்ணி என்றிருந்தாள் கவி..
“அப்போ நீயும் இவனை விட்டுவிடலாம் என்கிறாயா..??”
“இல்லை அண்ணா.. விட்டுவிடக்கூடாது.. அதுவும் இவனை போன்றவர்களைக் கண்டிப்பாக விட்டுவிடவே கூடாது”, என்றவள் மீண்டும் ப்ரின்சிபாலிடம் திரும்பி, “இப்போ நீங்க இவர் மேல் ஆக்க்ஷன் எடுக்கவில்லை என்றால் நாங்கள் போலிஸ் ஸ்டேஷன் போறோம் சார்..”, தமையனின் மேலிருந்த நம்பிக்கையில் திடமாகவும் தெளிவாகவும் ஒலித்தது கவியில் குரல்..
ப்ரின்சிபாலுக்கு என்ன முடிவு செய்வதென்றே தெரியவில்லை..
அதேநேரம் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நிர்வாகத்திடம் ஆக்க்ஷன் எடுக்குமாறு வலியுறுத்தி கோஷம் எழுப்ப கல்லூரி கரெஸ்பாண்டென்ட்டை அழைத்திருந்தார் ப்ரின்சி..
பிரச்சனை பெரிதாவது உணர்ந்து கவியிடம் பேசி சமாதானப்படுத்த பதுங்கும் புலியாய் பாய்ந்து வந்திருந்திருந்தார் கரெஸ்பாண்டேன்ட்..
அவருக்கு அவரின் பிஸ்னஸ் பாதிக்கப்படக்கூடாதென்ற கவலை..
ஹராஸ்மென்ட் என்று போட்டு அவரை நீங்கள் பணிநீக்கம் செய்யவில்லை என்றால் போலீசுக்குப் போவேன் என்று நிலையாய் நின்றான் ஆதி..
அவன் சொன்னதைச் செய்தால் கல்லூரியின் பெயர் கெட்டுவிடுமென்று அவனை சமாதனப்படுத்த முயன்றார் கரெஸ்..
அவரின் பேச்சுக்கள் எல்லாம் நீரில் பட்ட புஸ்வானமாக மாறிப்போக அர்ஜுனனைப் போல் தனது கடைசி அஸ்திரத்தைப் பயன்படுத்தினார்..
உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு செய்தி ஆதியின் பெற்றோரைச் சென்றடைந்தது..