Advertisement

அகிலம் – 2
மலையோரம் மழைவாசத்துடன் ஓடும் நதியில் ஆனந்தமாய் நீராடியபடி அவள்..
வானமகன் மேகமாய் குடைப்பிடிக்க லேசாய் நனையத் துவங்கியது பூமி.. மிகமிஞ்சிய மகிழ்ச்சியில் பூரித்த முகத்துடன் அவள்..
மழையும் பூமியும் சாரலாய் காதல் கொண்டிருக்க நதியானது பொறாமையுடன் சுழலுருவாக்கியது அவள் தன்மேல் கொண்ட காதலறியாமல்..
சுழலும் சுகமென சுகமாய் அதில் அவள் சிக்கிக்கொள்ள.. கொஞ்சம் கொஞ்சமாய் அவளைத் தன்னுள் இழுத்துக்கொண்டது சுழல் நதி..
நேரம் கடக்கக் கடக்க காதல் மறைந்து மூச்சு முட்டும் உணர்வு அவளுக்கு..
தத்தளிக்கத் துவங்கியவள் கைகளையும் கால்களையும் வீசியபடி.. அந்நொடி எதிர்நீச்சல் போடுவதையே மறைந்துவிட்டாள் அவள்..
கண்கள் இரண்டும் சொருகி சுழலோடு சுழலாய் அவள் ஐக்கியமாக அவளது இடையைப் பிடித்துக்கொண்டன வன்மையான கைகள்..!!
இடை சேர்ந்த கைகளின் அழுத்தத்தில் பெண்ணவள் கொஞ்சம் நிமிர்ந்திட குறும்புப் புன்னகையுடன் தெரிந்த ஆதி.. விதுவிதிர்த்து அவனைத் தன்னிடமிருந்து பிரித்துக் கொஞ்சம் தள்ளிவிட.. பட்டென்றொரு சத்தம்..!!
பயத்தில் பெண்ணவளின் விழிகள் திறந்துகொள்ள.. கண்டதனைத்தும் கனவென புரிந்தது ஆருவிற்கு..!! கூடவே ஆதியென நினைத்து தண்ணீர் சொம்பை தட்டிவிட்டதை நினைத்து அந்நேரத்திலும் கொஞ்சம் சிரிப்பாய்..!!
கைகள் தானாக முகத்தை அழுந்தத் துடைத்துக்கொள்ள..
மணி அதிகாலை ஐந்தைத் தொட்டதன் அறிகுறியாக ஒருமுறை கூவி நிற்க அதற்குமேல் உறங்க மனமில்லாது எழுந்திருந்தாள் அவள்..
ஆதி உட்பட கனவில் வந்த அந்தச் சுழல் நதி மழை என அனைத்தும் அவளை ஒரு உலுக்கு உலுக்கியிருந்தது அவளை..
ஆதியை நினைத்தவுடன் ஆதி எப்படி என் கனவில் என்ற கேள்வி மனதில் உதயமாக நேற்றைய இரவின் நிகழ்வுகள் பின்னிசையாய்..
வெள்ளைத் தாமரையாய் நிலவுமகள் மலர்ந்திருக்க தாய் பரிமாற ஊஞ்சலில் அமர்ந்தவாறு இரவு உணவைத் துவங்கியிருந்தனர் தந்தையும் மகளும்..
சப்பாதியை குருமாவில் ரொம்ப நேரமாகத் தோய்த்துக்கொண்டிருந்த ஆரு, “ப்பா.. பொள்ளாச்சி ரோட்டில் இருக்கும் பார்ம்ஹவுஸ் ஒன்றை ரெநோவேட் பண்றாங்க அதுக்கு நான் தான் டிசைன் செய்துகொடுத்தேன் என்று சொன்னேன் அல்லவா..??”, தந்தையிடம் கேள்வியாய்த் துவங்கினாள் அவள்..
“ஆமா ஆரு.. ரொம்ப பழைய வீடுன்னு சொன்னியே.. அந்த வீடுதானே..??”
“யெஸ் அதேதான்.. நாளையில் இருந்து வர்க் ஸ்டார்ட் பண்றாங்க போல்.. அதுக்கு முன்னாடி பூமி பூஜையாம்.. எங்கள் கம்பனி சார்பாக என்னையும் மித்ரனையும் போகச் சொன்னார் எம்டி..”
“அதுக்கு நீ என்ன சொன்ன ஆரு..??”, இடைப்புகுந்து கேள்வி எழுப்பினார் அல்லி..
“நான் உங்ககிட்ட கேட்டுட்டு சொல்றதா சொன்னேன்மா..”, என்றவளை ஒரு மெச்சுதலாகப் பார்த்த அல்லி, “பூஜைக்குத்தானே போயிட்டு வா..”, தந்தைக்கு முன்னால் சம்மதம் சொன்னவரை வியப்பாகப் பார்த்திருந்தாள் அவள்..
இப்படி எல்லாம் உடனே தாய் சம்மதம் சொல்லிக் கண்டதில்லை அவள்.. வெளியே போகும் முன்னால் ஆயிரம் கேள்விகள் எழும் அவரிடமிருந்து..
“என்னவொரு அதிசயம்..?? பொண்ணு கேட்டவுடனே கேள்வி எதுவும் கேட்காம சரின்னு சொல்லிட்டா என் அல்லி..”, பெண் நினைத்ததை வெளியே வழிமொழிந்தார் தந்தை..
என் அல்லி என்பதில் சிறு வெட்கம் பிறந்தபோழுதும் அதை மறைத்து, “ஆரு முன்னாடியே போன இடம் தானே.. அதுவும் இல்லாமல் மித்ரன் துணைக்கு வாரான்.. அப்புறம் என்ன பயம்..??”
“மேல் இடமே சரின்னு சொல்லிருச்சு.. நீ போயிட்டு வா ராஜாத்தி..”, என்றார் தரணி..
தந்தையிடமும் தாயிடமும் போகிறேன் என்று சொன்ன போதிலும் ஆருவிற்கு அங்கு செல்வதில் யோசனையே..
காரணம்.. சாட்சாத் நமது  ஆதியே..
ஏனோ அவனைப் பார்க்கும்பொழுது அவளுக்கொரு தயக்கம் தானாய் வந்து ஒட்டிக்கொள்வதுபோல்..
மித்ரனை மட்டும் போகச்சொல்லாம் என்று நினைத்து போனைக் கையில் எடுக்க ஆருவின் போனிற்கு ஆதியின் அழைப்பு..
ஆதியின் பெயர் டிஸ்ப்ளேயில் மின்னி மறைய புதுவிதப் படபடப்புடன் போனை அட்டென்ட் செய்து ஹலோ என்றிருந்தாள் அவள்..
ஒரு நொடி அவளது ஹலோவில் லயித்த ஆதி, “நான் ஆதிரன் பேசுகிறேன் ஆரண்யா..”, என்றான் குரலை செருமிக்கொண்டு..
“சொல்லுங்க சார்..”, தயக்கமாகவே வெளிவந்தது ஆருவின் குரல்..
“லேட் டைம்ல டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னோ..??”, அவள் தயக்கம் புரிந்து கேள்வி பிறந்தது ஆதியிடமிருந்து..
“அதெல்லாம் இல்லை சார்.. சொல்லுங்க..”
“நாளைக்கு ரெனோவேஷன் ஸ்டார்ட் பண்றோம் ஆரண்யா..”
“தெரியும் சார்..”
“மார்னிங் செவன் டூ எயிட் பூஜை வெச்சிருக்கோம்.. கண்டிப்பா வந்திடுங்க..”, ஒரு வித அழுத்தத்துடன் ஒலித்தது ஆதியின் குரல்..
“சார்.. அதுவந்து நான் எதுக்கு..??”, தயக்கமாக இவள் கேட்டு வைத்திட..
“பொதுவாக ஆர்க்கிடெக்ட்டை இந்த மாதிரி பூஜைக்கு இன்வைட் பண்ண மாட்டாங்கதான்.. பட் என்னைப் பொறுத்தவரை சிவில் எஞ்சினியர்ஸ் எவ்ளோ முக்கியமோ அவ்வளவு முக்கியம் நீங்க..”, நீங்க என்பதில் அழுத்தத்தைக் கூட்டிச் சொன்னவன், “ஐ மீன் ஆர்க்கிடெக்ட்ஸ்.. சோ கண்டிப்பா நீங்க பூஜையில் கலந்துகொள்ள வேண்டும்..”
ஆதியின் நீங்க என்ற அழுத்தம் ஆருவிற்கு சின்ட்ரெல்லா என்று கேட்டதோ என்னவோ.. வருவதாய் வாக்களித்திருந்தாள் அவள்..!!
ஆதியின் (கதிரவன்) உதயத்திற்காய் உலகமே காத்திருக்க தனது சின்ட்ரெல்லாவின் உதயத்திற்காகக் காத்திருந்தான் ஆதி..
பூமி பூஜையின் முதல்படியாக கணபதி ஹோமம் துவங்கியிருக்க விஸ்வநாதனும் மீனாட்சியும் ஹோமகுண்டலத்திற்கு முன்னமர்ந்து ஐயர் சொல்வதை செய்துகொண்டிருந்தனர்..
பெற்றோர்களின் பின் கவியுடன் ஆதி வெறுமனே நின்றிருக்க அவன் மனது பூஜையில் லயிக்காமல் தன்னவளின் வருகைக்காக எதிர்பார்த்திருந்தது..
நொடிக்கொருதரம் வாட்சைத் திருப்பிப் பார்த்துக் கொன்டிருந்தவனின் கையில் அடிவைத்து, “என்னண்ணா அண்ணிக்கு வெயிட்டிங் போல..”, கண்ணடித்தபடியே வினவினாள் கவி..
கொஞ்சமேக் கொஞ்சம் ஜெர்க்கானவன், “உனக்கு வேற வேலையே இல்லையா..?? எப்போப் பார்த்தாலும் அண்ணி அண்ணின்னு..”, எரிச்சலாய் கேட்க நினைத்த போதிலும் மென்மையாகவே ஒலித்தது அவனது குரல்..
கவி எப்பொழுதும் அண்ணி அண்ணி என்று கூவுவதும் ஆதி அவளிடம் எரிந்து விழுவதும் என்றும் நடக்கும் விஷயம் என்றாலும் அவனின் குரலில் தெரிந்து மென்மையில் இவன் யாரிடமோ சிக்கிவிட்டானோ என்று சந்தேகம் எழுந்தது தங்கைக்கு..
அதை ஊர்ஜிதப்படுத்திகொள்ள எண்ணி, “நான் பார்த்து பொண்ணு ஓகேன்னு சொன்னாத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்ண்ணா நீ..”, கொஞ்சம் மிரட்டலாக..
“நீ ஒகே சொல்லிருவ அவ ஓகே சொல்லனுமே..”, ஆதியின் மனது நேரங்காலம் தெரியாமல் வியாக்கியானம் பேச அதை அடக்கி, “அதுக்கென்ன கவிக்குட்டி.. நீ பார்த்து ஓகே சொன்னாத்தான் கல்யாணம்..”, பாட்டில் பாட்டிலாய் கரும்புச்சாறை அவள் மேல் ஊற்றினான் (அதாங்க ஐஸ் பிடிக்கறது) அவன்..
சட்டென்று ஆதி சரண்டரானதில் கன்பார்ம் செய்திருந்தவள் சீரியாஸாக, “யாருன்னா அந்தப் பொண்ணு..??”, கேட்டே விட்டிருந்தாள்..
ஆதி பதில் சொல்ல வாயத்திறந்த நேரம் தோட்டத்திற்குள் நுழைந்தது ஆருவின் கார்..
ஆதியின் மனதிற்குள் ஒருவித பரபரப்புத் தொற்றிக்கொண்டது..
அவசரமாக அவன் தலையை சரிசெய்ய கவிக்கு இவன் செயல்கள் கோபத்தை மூட்ட, “நான் கேட்டுட்டேஇருக்கேன்.. நீ பதில் பேசாம மேக்கப் பண்ணிட்டு இருக்க..”, என்று கடுப்பாக மொழிந்து, “யாருன்னா அந்தப் பொண்ணு..??”, என்று மீண்டும் கேள்வி எழுப்பினாள்..
ஆரு தன் காரில் இருந்து இறங்கிவிட்டதன் அறிகுறியாய் அவள் தலை மட்டும் ஆதிக்குத் தெரிய, “அந்த காரில் இருந்து இறங்குகிறாள் பார்..”, என்றிருந்தான் ஆதி தன்னைத்தானே உணராமல்..
ஆதியைப் போல் கவிக்கும் ஆருவின் தலை மட்டுமே தரிசனம் தந்தது..
“ஆரு அக்காதானே இது..”, கூவியே இருந்தாள் தங்கை..!!
ஆதியின் அந்தம் ஆருவென அறிந்த கவிக்கு அத்தனை மகிழ்ச்சி..!!
ஆருவை ஆர்க்கிடெக்ட்டாகத் தெரியும் கவிக்கு..
வீட்டு ரெனோவேஷன் சம்மந்தமாக ஒருமுறை தந்தையோடு லெமன் வுட் சென்றபொழுது பார்த்திருக்கிறாள் ஆருவை..
முதல் சந்திப்பிலேயே ஏனோ கவிக்கு மிகவும் பிடித்திருந்தது ஆருவை.. ஆதியின் ஆருவாக இவள் இருந்தால் என்னவென்று நினைக்கும் அளவிற்கு அப்படியொரு பிடித்தம் ஏற்பட்டிருந்தது அவள் மீது..
ஆருவிடம் பேசும் ஆர்வத்தில் கவி இரண்டு எட்டி எடுத்து வைக்க, “அவக்கிட்ட நான் இதுவரைக்கும் எதுவும் சொல்லல.. நீ ஏதும் உளறிக்கொட்டிடாதே..”, எச்சரிக்கை பறந்தது ஆதியிடமிருந்து..
எங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல் ஆதியைப் பார்த்துவைத்த கவி ஆருவிடம் ஓடினாள்..
கவி ஆருவிடம் ஏதாவது உளறிவிட்டால் என்ன செய்வதென்ற பதட்டம் இருந்த போதிலும் தன்னவளின் வருகைக்காகக் காத்திருந்தான் ஆதி..
அவனை அதிகம் காத்திருக்க வைக்காமல் தங்கையுடன் வந்தவளைக் கண்டு ஆதியின் இமைகள் இரண்டும் முத்தமிடாமல் சத்தியாக்கிரகம் செய்தது..
பாரதியின் சுட்டும் விழி கண்ணம்மாவை நேரில் பார்ப்பது போன்று பிரம்மை அவனுள்ளத்தில்..
பாரதியின் கண்ணமா அல்ல இவள் ஆதியின் சின்ட்ரெல்லா ஆளுக்கு முன் ஆஜரானது ஆதியின் மனது..
கருநீலப் பட்டுடுத்தி கண்கள் இரண்டிலும் மையிட்டு கருமேக நிறத்துக் கருங்கூந்தலை ஒதுக்கிக்கொண்டு மேகம்போல் நடந்துவந்தவளைக் காண்கையில் முத்தமிடுமா இமைகள்..??
பெண்ணவள் அருகே நெருங்க நெருங்க ஆதியின் இதழ்கள் கட்டளையிடாமலே சின்ட்ரெல்லா என்று முணுமுணுத்தது..
ஹோம குண்டலப் புகை ஆதியை மறைத்திருக்க ஆருவின் கண்களுக்கு முதலில் புலப்பட்டது விச்சுவும் மீனாட்சியுமே..
ஆருவைக் கண்டதும் விச்சு அவளை வரவேற்று மீனாட்சியிடம் ஆர்க்கிடெக்ட் என்று அறிமுகப்படுத்தி வைக்க மீனாட்சி, “ரொம்ப அழகா இருக்கம்மா நீ..”, என்றிருந்தார் அவர்..
தன்னனிடம் மீனாட்சி வாம்மா என்பார் என்று நினைத்திருக்க அவரின் காம்ப்ளிமென்ட் ஆருவிற்கு சிறு வெட்கத்தை ஏற்படுத்தியிருந்தது..
கன்னங்களில் ரோஜாப்பூ பூக்க தாங்க்ஸ் ஆன்ட்டி என்றவள் கவியின் அருகில் நின்றுகொண்டாள் ஆதியைத் தேடி அலைப்பாயும் கண்களுடன்..
“வாங்க மிஸ் ஆரண்யா..”, கவியின் அருகேக் கேட்ட ஆதியின் குரல் ஆருவை அவன் பக்கம் திரும்ப வைத்தது..
அவனைப் பார்த்து லேசாகத் தலையசைத்தவளுக்கு தனியாக எந்த விசேஷத்திற்கும் சென்றதில்லை என்பதால் அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை..
“மித்ரன் வரவில்லையா..??”, பேச்சை வளர்க்கக் கேட்டான் ஆதி..
“இன்னும் ஒரு ஹாப் அன் ஹார்லவந்திடுவேன்னு சொன்னான் சார்..”, என்று ஆதிக்கு பதில் சொன்னவள் கவியிடம் பேசத்துவங்கினாள் ஆதியை கொஞ்சமேனும் தவிர்க்கும் நோக்கில்..
அதுவரை ஆதியையும் ஆருவையும் பார்த்துக்கொண்டிருந்த கவிக்கு மனதிற்குள் அப்படியொரு சிரிப்பு.. இருவரின் கண்ணாமூச்சி ஆட்டத்தைப் பார்த்து..
கண்ணாமூச்சி ஆட்டங்களின் தொடக்கம் அறியாமல் இருக்கும் அனைவருக்கும் அந்நாள் நன்னாளாகவே கடந்து சென்றது..
-அகிலமாவாயோ நீ..??

Advertisement