Advertisement

அத்தியாயம் 8
பல மொழிகள் கற்றாலும்
நான் விரும்பிய மொழி
உன் விழி மொழியே!!!
மதியின் உதடுகளில் தொலைந்திருந்த சூர்யா அவளை விட்டு விலகி அவள் முகம் பார்த்தான். கண்களை மூடி அமர்ந்திருந்தாள் மதி. அப்படியே அவளை எடுத்துக் கொள்ள சொல்லி அவன் மனதும், உடலும் ஏங்கியது.
அவள் படிப்பை கருத்தில் எடுத்து கொண்டு, தன்னை சமாளித்து கொண்டான். அதன் பின் அவள் மனதும் வளர வேண்டும். “இனி சிறு பிள்ளை தனமாக இப்படி   சாக  போறேன் அப்படிங்குற முடிவை அவள் எடுக்க கூடாது. அதுக்கு கொஞ்சம் அதிர்ச்சி அவளுக்கு கொடுக்கணும்”,  என்று நினைத்தவன் “என்னை விட்டுட்டு போகணும், சாகணும்னு முடிவு பண்ணிட்டல்ல? இனி நீ ஹாஸ்டல் போ, எங்க வேணா போ. ஆனா என்கிட்ட மட்டும் பேசாதே”, என்றான் கோபமாக.
ஆசையாக அவன் கொடுத்த முத்தத்தை  அனுபவித்து கொண்டிருந்தவளின் தலையில் இடியை  இறக்கி வைத்தான். “இப்படி திட்றவன், எதுக்கு இப்படி முத்தம் கொடுத்தான்?”, என்று நினைத்து  குழப்பத்துடன்  அவனை பார்த்தாள் மதி.
ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவளை முறைத்து விட்டு, வெளியே சென்று விட்டான் அவன். அவனுடைய கோபத்தில் திகைத்து போய் அமர்ந்திருந்தாள்.
அவன் கோப பட்டது கூட அவளுக்கு பெரியதாக தெரியவில்லை. அவனே சொன்னது போல் அவளை அவன் விரும்பும் போது, அவனிடமே சாக போகிறேன், ஹாஸ்டலுக்கு போகிறேன் என்று சொன்னால் யாருக்கு தான் கோபம் வராது?
அதை உணர்ந்து கொண்ட மதியும், அவன் கோபம் நியாயமே என்று நினைத்தாள். ஆனால் முத்தம்? அது எதற்காக தந்தான்? எவ்வளவு யோசித்தும் விடை தான் கிடைக்க வில்லை.
அறையை விட்டு வெளியே வந்த சூர்யாவோ அங்கு அமர்ந்திருந்த மதி வீட்டினர் யாரையும் கண்டு கொள்ளாமல் நேராக  மங்களம்  அருகில் சென்று “கடைக்கு போய்ட்டு வரேன்  மா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
“அத்தை அத்தை”, என்று தன் பின்னாடியே சுற்றி திரிந்தவன் இன்று காட்டிய வெறுப்பு வள்ளிக்கு எரிச்சலை தந்தது. “எல்லாமே மதியால் தான்”, என்று நினைத்த வள்ளிக்கு மதி மேல் மேலும் வன்மம் வளர்ந்தது. “சூர்யா என்னை வெறுக்க  அவ தான் காரணம்”, என்று நினைத்து மனதுக்குள்ளே அவளை  திட்டினாள்.
நேராக நகை கடைக்கு சென்ற சூர்யா, மங்களம்  வாங்க சொன்ன அனைத்தையும் வாங்கினான். கடைசியாக கல்யாண மோதிரமும் ஒரு ஜோடி வாங்கினான்.
அனைத்தையும் வாங்கி கொண்டு திரும்பி வந்தவனுக்கும் “எதுக்கு அவ அழுதுட்டு இருக்கும் போது முத்தம் கொடுத்தேன்?”, என்ற கேள்வியே ஓடி  கொண்டிருந்தது. “அவ அழ கூடாதுன்னு கொடுத்தேனா? ஆனா அவ அப்படி அழுதுட்டு இருக்கும் போது ஏன் கொடுத்தேன்?”
அவனுக்குமே விடையை கண்டு பிடிக்க முடிய  வில்லை. “என் பொண்டாட்டி, நான் எப்ப வேணும்னாலும் முத்தம் கொடுப்பேன்”, என்று நினைத்து சிரித்து  கொண்டான்.
“ஆனாலும் வீராப்பா ஹாஸ்டல் போ சொல்லிட்டேன். அப்படி செஞ்சிருவாளோ? அப்படியே ஹாஸ்டல் போனாலும் போகட்டும். எப்படியும் ஒரு வருசம் அவளை பிரிஞ்சு இருக்க தான் செய்யணும். இப்பவே தினமும் பல முத்தம் கொடுக்க தோணுது. அது எல்லை மீறுச்சுன்னா, பின்ன கலை  காலேஜ்க்கு  வயித்தை தள்ளிட்டு தான் போவா”, என்று நினைத்து சிரித்தான்.
அவன் வீட்டுக்கு வரும் போது, அனைவரும் ஹாலில் தான் அமர்ந்திருந்தார்கள். தன் அம்மாவை தேடியவன்  மங்களம்  அவளுடைய அறையில் துணி மடித்து  கொண்டிருப்பதை பார்த்து விட்டு அங்கே சென்றான்.
“இந்தாங்க மா, நீங்க சொன்னது எல்லாம் வாங்கிட்டேன். சரியா இருக்கா, அழகா இருக்கான்னு பாத்துக்கோங்க. நல்லா இல்லைனா நாளைக்கு மாத்திக்கலாம்”, என்று கையில் கொடுத்தான்.
“நல்லா இருக்கு டா, உன் நியாயம். வாங்குனது மதிக்கு. என்கிட்ட வந்து காட்டுற? அவளுக்கு புடிச்சிருக்கான்னு கேளு டா”, என்று சிரித்தாள் மங்களம்.
“நாம அன்பா எதை கொடுத்தாலும் கலைக்கு புடிக்கும் மா. நீங்க பாருங்க. அப்புறம் நானே அவ கிட்ட காலைல கொடுத்துக்குறேன். அது வரைக்கும் உங்க கிட்டயே இருக்கட்டும்”, என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.
அந்த பையை ஹாலுக்கு எடுத்து வந்த மங்களம் “மதிக்காக அவ புருசன் வாங்கிட்டு வந்திருக்குற நகை பாருங்க”, என்று அனைவரிடமும் காண்பித்தாள்.
அதை பார்த்து வள்ளிக்கு  வயிறு மேலும் எரிந்தது. “இந்த அனாதைக்கு  இவ்வளவு நகையா?”, என்று பொறுமினாள்.
அறைக்கு சென்ற சூர்யா  கண்ணில் பட்டது, கட்டிலில் அமர்ந்திருந்த கலைமதி தான்.
கதவை அடைத்து விட்டு திரும்பினான். அவன் வரவை உணர்ந்து வேகமாக அவன் அருகே வந்தவள் அவன் முகத்தையே பார்த்தாள். அவனோ, “எதுக்கு என் மூஞ்ச  பாத்துட்டு இருக்க? நாளைக்கு ரிசப்ஷன். நாளான்னைக்கு லீவ் போட்டிருக்க? அதுக்கு அடுத்த நாள் ஹாஸ்டல் போகணும்ல? மறுபடியும் மூட்டையை கட்டு”, என்று சொல்லி விட்டு பாத்ரூமில் புகுந்து கொண்டான்.
“நான் கோபத்துல தான சொன்னேன். இவன் என்னை போக சொல்றான்? நான் எப்படி என் அத்தானை விட்டுட்டு போவேன்?”, என்று நினைத்தாள் மதி.
“நான் போக மாட்டேன்னு  என்கிட்ட உரிமையா சொல்றாளா பாரு”, என்று நினைத்தான் சூர்யா.
அன்று இரவு சாப்பிட அழைத்தாள் மங்களம். “எனக்கு பசிக்கல அத்தை”, என்று சொல்லி விட்டாள் மதி.
“அவளை விடுங்க மா. எனக்கு சாப்பாடு தாங்க”, என்று சொல்லி விட்டு வெளியே போய் விட்டான் சூர்யா.
“பெரிய இவனாட்டம்  என்னை லவ் பண்றேன்னு சொன்னான். நான் சாப்பிடாம இருந்தா அவனுக்கு கவலையே இல்லையா? அவன் பேசாம சாப்பிட போறான்”, என்று நினைத்து கண்ணீர் விட்டு கொண்டு அமர்ந்திருந்தாள் மதி.
வெளியே போன சூர்யாவோ யாரையும் கண்டு கொள்ளாமல் டிவி முன்பு போய் அமர்ந்து கொண்டு சாப்பிட அமர்ந்தான்.
பின் கையை கழுவி விட்டு அவளுக்கு தட்டில் இரண்டு தோசையை எடுத்து கொண்டு போனான்.
அதை பார்த்து வள்ளியை தவிர அனைத்து பெரியவர்களுக்கும் நிம்மதியாக இருந்தது. “இந்த நாய்க்கு இவன் போய் கையில் கொடுக்கணுமோ?”, என்று வயிறு எரிந்தாள் வள்ளி.
உள்ளே தலை குனிந்து அழுது கொண்டிருந்தவளோ, எதிரே ஏதோ நிழல் தெரிந்ததால் நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் தான் கையில் தட்டுடன் நின்றிருந்தான். கண்களில் ஒரு வித ஒளியுடன் அவனை பார்த்தாள் கலைமதி.
“ஐ  எனக்காக சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கான்”, என்று நினைத்து அவள் உள்ளம் துள்ளியது.
அதை பார்த்தவனுக்கு அவளை  அப்படியே நெஞ்சோடு அனைத்து கொள்ள தோன்றியது. “அப்படி பாசம் காட்டுனா அவ சரியாக மாட்டா”, என்று நினைத்தவன் அந்த தட்டை அவளுடைய கையில் கொடுக்காமல் அங்கு இருந்த சேரில் வைத்தான்.
அதில் அவள் முகம் கூம்பி போனது. “கலை உனக்கு தான் தோசை கொண்டு வந்தேன் சாப்பிடு”, என்று கொஞ்சம் கடினமான குரலில் தான் கூறினான்.
தனக்காக எடுத்து வந்தது ஆறுதல் அளித்தாலும் அவன் குரலில் இருந்த கடுமையை கண்டு “எனக்கு பசிக்கல”, என்று சொன்னாள்.
“நீ அப்ப பேசுனது எல்லாமே ஒரு கோபத்துல பேசுனதுன்னு தான் நினைச்சிருக்கேன். இப்ப நீ சாப்பிடலைன்னா, நீ என்னை விட்டு பிரிஞ்சு போறன்னு உண்மையாவே நினைக்கிறன்னு நான் நினைச்சிப்பேன். என்னை கொஞ்சமாவது உனக்கு பிடிச்சிருந்தா ஒழுங்கா சாப்பிடு”, என்றான்.
அடுத்த நொடி கட கடவென்று சாப்பிட ஆரம்பித்தாள் மதி. அதை பார்த்தவனுக்கு நிறைவாக இருந்தது.
சாப்பிட்டு முடித்தவள் அங்கு இருந்த வாஷ் பேசனில் தட்டை கழுவினாள். “இதை கிச்சன்ல போய் வைக்கணும்”, என்று நினைத்தவளுக்கு வெளியே போய் யாருடைய முகத்தையும் பார்க்க பிடிக்க வில்லை. இப்போது அவளுக்காக அவன் உணவு வேறு எடுத்து வந்ததை பார்த்து பெரியவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து தர்மசங்கடத்தையும் கொடுத்தது.
அவளையே பார்த்து கொண்டிருந்தவன், “தட்டை காலைல போய் வச்சிக்கலாம்”, என்று சொன்னான்.
ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் அதே சேரில் அதை வைத்து விட்டு நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
கண்களில் வர துடிக்கும் காதலையும், கனிவையும் மறைத்து விட்டு “நீ ரெண்டு நாள் ஹாஸ்டல் போற வரைக்கும் கீழேயே படுத்துக்கோ கலை. என் பக்கத்துல படுக்க வேண்டாம். இல்ல நீ கட்டில்ல வேணும்னாலும் படு. நான் கீழே படுத்துக்குறேன்”, என்றான்.
வந்த அழுகையை மறைத்து கொண்டு “நானே கீழே படுத்துக்குறேன்”, என்று வீம்பாக சொல்லி விட்டு அவளுடைய போர்வையையும், தலையணையும் எடுத்தாள்.
தினமும் அவன் முகம் பார்த்து தூங்கும் அந்த நொடியை ரசிப்பவளுக்கு இன்று அது நடக்காது என்று நினைத்து அழுகை வந்தது.
ஆனாலும் போர்வையை எடுத்து கொண்டாள். அப்போது “கலை”, என்று அழைத்தன சூர்யா.
மேலே படுக்க சொல்வான் என்று நினைத்து ஆனந்தமாக அவனை பார்த்தாள் கலைமதி.
“நீ தான் என்னை விரும்பலையே? அப்புறம் எதுக்கு நான் மூடி படுத்த போர்வையை எடுக்குற? அங்க அம்மா புது போர்வை வச்சாங்களே? அதை எடுத்துக்கோ”, என்று சொன்னான்.
உற்சாகம் வடிந்தது போல அவனை முறைத்து பார்த்தாள். அவள் முறைப்பை பார்த்து ஆச்சர்யத்துடன் அவளை பார்த்தான் சூர்யா. “இந்த பிள்ளை பூச்சிக்கு கோபம் வருதா? அதிசயம் தான்”, என்று நினைத்து கொண்டான்.
அந்த போர்வையை கட்டிலிலே போட்டு விட்டு வெறும் தரையில் தலையணையை போட்டாள் மதி.
மறுபடியும் “கலை”, என்று அழைத்தான் சூர்யா. இப்போதும் மேலே கட்டிலுக்கு அழைப்பான், என்று நினைத்து அவனை ஏறெடுத்து பார்த்தாள்.
“இல்லை ஹாஸ்டல் போக மறுபடியும் உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சிரேன்”, என்று சொன்னான்.
கண்ணில் ஒரு வலியோடு அவனை பார்த்தாள்.  “ஹாஸ்டல் போக மாட்டேன்னு ஒரு வார்த்தை தைரியமா சொல்லு டி”, என்று நினைத்து கொண்டு அவளையே பார்த்தான்.
அவளோ கண்ணில் வழிந்த நீரோடு  எழுந்து அவளுடைய பேகை எடுத்து வைத்தாள். அதை பார்த்து எரிச்சல் தான் வந்தது சூர்யாவுக்கு.
பையை எடுத்து வைத்தவளுக்கோ அவனை விட்டு பிரிய வேண்டும் என்று நினைத்து பார்த்தாலே இதயத்தை வாள் கொண்டு அறுபது போல இருந்தது.
தினமும் காதலாக பார்க்கும் அவன் கண்கள் அவளுக்கு  வேண்டும். அவன் ஆசையாக தரும் இதழ் முத்தம் வேண்டும். அந்த முத்தத்தை கொடுத்து விட்டு அவளை விட்டு விலக முடியாமல் தவிக்கும் அவன் தவிப்பை அவள் காண வேண்டும். அவனுடைய நெஞ்சத்தில் முகம் புதைத்து தூங்கும் அழகான தருணங்கள் வேண்டும். மொட்டை மாடியில் அவன் கை  வளைவில் அமர்ந்து கதை பேசும் ஆனந்த நொடிகள் அவளுக்கு வேண்டும்.
“இது எல்லாம் ஹாஸ்டல் போனா எப்படி கிடைக்கும்? இந்த ரூம்ல கிடைக்கும் அவனுடைய வாசனை ஹாஸ்டல் ரூம்ல கிடைக்குமா? வாழ்க்கைல காவ்யா அப்பறம் என்னையும் மனுசியா நினைச்சு என்னோட உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்த என்னோட அத்தானை விட்டுட்டு என்னால எப்படி போக முடியும்? எனக்கே எனக்குன்னு கிடைச்சிருக்க என்னோட அத்தான் கூட தான் நான் இருக்கணும். என்னால அவர் இல்லாம இருக்க முடியாது. யாரோ ஏதோ சொன்னாங்கன்னு எனக்கு கடவுள் கொடுத்துருக்குற வாழ்க்கையை இழக்கணுமா? கண்டிப்பா முடியாது”, என்று நினைத்து கொண்டே கையில் இருந்த பையை கீழே வைத்து விட்டு அவனை நோக்கி நடந்தாள்.

Advertisement