Advertisement

அத்தியாயம் 5
எதை எழுத சொன்னாலும்
உன் பெயரையே எழுதுகிறது
என் விரல் என்னும் எழுதுகோல்!!!
“இங்க கிளைமேட் செமையா இருக்கு. உனக்கு பிடிச்சிருக்கா?”, என்று பேச்சை ஆரம்பித்தான் சூர்யா.
அவனை பார்க்காமல், எங்கோ பார்த்த படி நின்றிருந்தவள் “ம்ம்”, என்றாள்.
அப்போது தான் அவளை திரும்பி பார்த்த சூர்யா “கலை”, என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான்.
“ஹ்ம்ம்”, என்ற படி அவன் முகம் பார்த்தாள் கலைமதி.
“என்ன அமைதியா இருக்க?”
“ஒன்னும் இல்லையே”
“எதுனாலும் மனசு விட்டு பேசலாம்ல? இனி கடைசி வரைக்கும் நாம ஒண்ணா தான் இருக்க போறோம். என்கிட்டே தயங்கலாமா?”
“நானா தயங்குறேன்? வாய தொறந்தா வார்த்தை வர மாட்டிக்கு. என்ன செய்ய?”, என்று நினைத்து கொண்டு  அமைதியாய் நின்றாள்.
அவள் அமைதியை கண்டு ஒரு பெருமூச்சு வந்தது சூர்யாவுக்கு.
“கண்டிப்பா அவளா வாயை திறக்க மாட்டா”, என்று நினைத்து கொண்டு “காலைல கேட்டதுக்கு நீ பதிலே சொல்லலை?”, என்று ஆரம்பித்தான்.
அந்த கேள்வியில் தடுமாறினாள் கலைமதி.
பகல் முழுவதும் காவ்யா சொன்ன படியே பேச மனப்பாடம் செய்திருந்தவள், அவன் கேட்க வில்லை என்றவுடன் அதை பற்றி யோசிக்காமல் விட்டுவிட்டாள். இப்போது மறுபடியும் அவன் கேட்டால் அவளும் தான் என்ன செய்வாள்?
“என்ன கலை அமைதியா இருக்க? காலைல என்னை பிடிக்குமான்னு கேட்டேன் தான? இப்பவும் அமைதியா இருக்க? உனக்கு என்னை பிடிக்கலையா?”
“ஐயோ அத்தான் அப்படி எல்லாம் இல்லை”, என்று அவசரமாக பதில் சொன்னாள் கலை.
“அப்ப பிடிச்சிருக்கா?”, என்று உல்லாசமாக கேட்டான் சூர்யா.
அமைதியாக தலை குனிந்து கொண்டாள். “அப்ப உனக்கு பிடிக்கலைல என்னை?”
“ஐயோ அத்தான் நிஜமாவே பிடிச்சிருக்கு போதுமா?”
“ஹா ஹா சரி ஏன் பிடிக்கும்?”
“இதுக்கு என்ன பதில் சொல்ல?”, என்று தெரியாமல் விழித்தாள்.
அவன் பதிலுக்காக காத்திருப்பதை பார்த்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன கலை?”
“இல்லை அது வந்து…”
“என்ன மா? எதுனாலும் சொல்லு”
“நீங்க அந்த பொண்ணை விரும்புனீங்களா?”
“எந்த பொண்ணு?”
“அதான், ஓடி போச்சுல்ல அந்த பொண்ணு”
அவன் முகத்தில் இறுக்கம் வந்தது. அன்றைய அவமானம் இப்போது வந்தது போல் துடித்து கண்களை இறுக மூடினான்.
அதை பார்த்தவளுக்கு தன் தவறு உரைத்தது.
“சந்தோசமா இருந்தவனை மூட் அவுட் பண்ணிட்டேன்”, என்று நினைத்து கொண்டு “சாரி அத்தான். கஷ்ட பட வச்சிட்டேன்னா? உங்களை காய படுத்தணும்னு கேக்கலை. உங்க மனசுல அந்த பொண்ணு மேல விருப்பம் இருந்துச்சுன்னா, மறக்க கஷ்ட படுவீங்களேன்னு தான் கேட்டேன்”, என்றாள்.
கண்களை திறந்து அவளை பார்த்தவன் “ஆமா அவளை விரும்புனேன்னு சொன்னா என்ன செய்வ?”, என்று கேட்டான்.
இப்போது அவள் முகம் கூம்பி போனது. அதை பார்த்தவனுக்கு வேதனையின் சுவடுகள் மறைந்து போனது. மனதில் உல்லாசம் மறுபடியும் வந்து ஒட்டி கொண்டது.
“கலை”
“ம்ம்”
“அம்மா, கல்யாணத்துக்கு சம்மதமான்னு கேட்டாங்க. நான் சரின்னு சொன்னேன். மத்த படி வேற எதுவுமே யோசிக்கலை. கல்யாணம் அப்படிங்குற எந்த உற்சாகமும் என் மனசுல இல்லை. ஏன்னா, அந்த பொண்ணு வேற ஒரு பையனை விரும்புவது எனக்கு முன்னாடியே தெரியும்”
“அத்தான்?”
“ஆமா, ஒரு நாள் அவளையும், அந்த பையனையும் சேர்த்து பார்த்தேன். ஆனா சந்தேக படலை. அவளுக்கு அண்ணன் கிடையாது. ஒரு வேளை நண்பனா கூட இருக்கலாம்ன்னு நினைச்சேன். அதை அப்படியே விட்டுட்டேன்.  மறுபடியும் ஒரு நாள் பாத்தேன். அப்ப அவங்க ரெண்டு பேரும் கை கோர்த்து நெருக்கமா நடந்து போனாங்க. அப்ப மனசுக்குள்ள ஏதோ வித்தியாசமா பட்டது. அப்ப கூட அவ இன்னொரு பையன் கூட போறா அப்படின்னு பொறாமை எனக்கு வரவே இல்லை. கல்யாணம்ன்னு  சொன்னப்பறம் இவ ஏன் அப்படி பண்றா அப்படிங்குற வெறுப்பு தான் வந்தது. நேரடியா கேட்கலாம்னு நினைச்சு, அம்மா கிட்ட போன் நம்பர் வாங்கி கால் பண்ணேன்”
….
“அவ கிட்ட காதல் பேசவோ, சந்தோசமா சிரிச்சு பேசவோ இல்லை. உண்மை என்னனு தெரிஞ்சிக்க மட்டும் தான். அவ கிட்ட நேரடியா கேட்கவும் செஞ்சேன். ஆனா அவ நண்பன்னு மட்டும் தான் சொன்னா. தலைல அடிச்சு சாததியமா சொல்றேன் அவன் பிரண்ட் தான்னு அவ சொன்னா. அப்புறம் நான் என்ன செய்யன்னு விட்டுட்டேன். ஆனா அவ ஓடி போன அன்னைக்கு தான் புரிஞ்சது. அவன் தான் அவளோட லவ்வர்ன்னு. நான் கேட்டப்பவே சொல்லிருந்தா நான் அன்னைக்கு அசிங்க பட்டிருக்க மாட்டேன்ல கலை? அவ வீட்டுக்கு பயந்து என்னை பலிகடாவா ஆக்கிட்டா போல? நான் சந்தேகம் வந்ததும் அவங்க வீட்ல சொல்லி விசாரிக்க சொல்லிருக்கணும். தேவை இல்லாத பிரச்சனையை எதுக்கு ஆரம்பிப்பானேன்னு நினைச்சு அமைதியா இருந்தது என் தப்பு. துரோகி நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டா”
….
“அவ கூட என் கல்யாணம் நடக்கலைன்னு எல்லாம் நான் வருத்த படலை. ஆனா சந்தேகம் வந்தும் ஏமாந்துருக்கேனேன்னு எனக்கு என்னையே நினைச்சு எரிச்சல் தான் வந்துச்சு. அந்த கோபத்தில் இருந்தவனை உன்னை கல்யாணம் பண்ண சொன்னப்ப, கூட கொஞ்சம் தான் அந்த எரிச்சல் வந்தது”
….
“உன்னை பத்தி யோசிக்கவோ, கல்யாணத்தை பத்தி கனவு காணவோ எதுவுமே தோணலை. என்னை ஒருத்தி அவமான படுத்திட்டா, ஏமாத்திட்டா அப்படின்னு மட்டும் தான் சிந்தனை இருந்தது.  இப்ப சொல்லு நான் அவளை விரும்பிருப்பேனா?”
“இல்லை”
“ஆமா அவளை பத்தி ஒரு நிமிஷம் கூட நான் யோசிச்சது இல்லை. அம்மா அப்பாவை பாத்த தான? ரொம்ப நல்லவங்க. எனக்கு அவங்கன்னா உயிரு. அவங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கணும்னு நினைச்சேன். அதனால தான் அவளை அவங்க பொண்ணுன்னு சொன்ன உடனே சரின்னு சொன்னேன்”
….
“அதுக்கப்புறமும் அம்மா உன்னை சொன்னப்ப வேண்டாம்னு சொன்னேன் தான். ஆனா அப்பவும் அவங்களுக்காக தான் ஒத்துக்கிட்டேன். குடும்பத்துக்கு ஒரு அவமானம் வர போகுதுன்னு அவங்க கலங்குனதை பாத்துட்டு சும்மா இருக்க முடியலை. சரின்னு சொல்லிட்டேன். ஆனா அப்ப உன் முகத்தை கூட நான் பாக்கலை. உன்னை பாத்ததும் கிடையாது. அதான் கோபமா எழுந்து போய்ட்டேன். அப்புறம் நிதானமா யோசிச்சு பாத்தப்ப தான் இப்ப என்ன தப்பு நடந்துருக்கு? எல்லாமே சரியா தான நடந்துருக்குன்னு தோணுச்சு”
….
“கல்யாணம் அன்னைக்கு என் கல்யாணம் நிக்காம நடந்துட்டே. வேற ஒரு பையனை லவ் பண்ற பொண்ணு கிட்டே இருந்து நான் தப்பிக்க தான செஞ்சிருக்கேன். அது மட்டும் இல்லாம, அவ என் மனசுல எந்த சலனத்தையும்  உண்டாக்கலை. அப்படி இருக்கும் போது எதுக்கு கவலை படணும்னு யோசிச்சப்ப தான் உன் ஞாபகம் வந்தது. இதில் உன்னை பலிகடாவா ஆக்கிட்டாங்களோன்னு நினைச்சேன். உன் மேல எதுக்கு கோப படணும்னு நினைச்சேன். நீயும் வேற யாரையும் விரும்பியிருந்தால் என்ன செய்யன்னு பயம் வந்துச்சு. அப்புறம் உன் பிரண்ட் கிட்ட கேட்ட அப்புறம் தான் நிம்மதியாச்சு”
…..
“இப்ப உன் கவலை எல்லாம் போயிருச்சா?”
“நான் ஒன்னும் கவலை படலையே”, என்று சொன்ன கலையின் குரலில் இருந்த துள்ளல் அவளை காட்டி கொடுத்தது.
சிரித்த சூர்யா, “இந்த கேள்வியை கேக்க சொன்னது காவ்யா தான?”, என்று கேட்டான்.
“ஆன்.. உங்களுக்கு எப்படி தெரியும்?”
“இதுக்கு என்ன ஜோசியமா பாக்கணும்? நீ இப்படி எல்லாம் கேக்க மாட்டியேன்னு நினைச்சேன்”
“அவ என் மேல உள்ள அக்கரைல தான் கேக்க சொன்னா”
“புரியுது கலை. நாளைக்கு அவ கிட்ட சொல்லு. என் அத்தான் மனசுல யாருமே இல்லை. கூடிய சீக்கிரம் நான் தான் அவர் மனசுல இருப்பேன்னு”, என்று சொல்லி சிரித்தான் சூர்யா.
அழகாய் வெட்க பட்டு தலை குனிந்தாள் மதி. “இப்ப சொல்லு உனக்கு என்னை பிடிச்சிருக்கா?”
“பிடிச்சிருக்கு”
“கொஞ்சமா? நிறையவா?”
“நிறைய”, என்று சொல்லி விட்டு முகத்தை திருப்பி கொண்டாள் கலைமதி.
அவள் வெட்கத்தை ரசித்தவன், “ஹ்ம்ம் இன்னும் ஒரு வருஷம் படிப்பை முடிக்கணுமே. அது வரை தேவை இல்லாததை யோசிக்க வேண்டாம்”, என்று சொல்லி பெருமூச்சு விட்டான்.
அவன் சொல்வது புரியாமல் பே என்று முழித்தாள் மதி. அவளை பார்த்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டு “தூங்க போகலாமா?”, என்று கேட்டான்.
“ஹ்ம்ம்”, என்ற படியே அவனுடன் நடந்தாள்.
கீழே போனதும் அவளிடம் ஒரு புது போர்வையை நீட்டினான்.
அதை தயக்கத்துடன் வாங்கியவள் “இதை நீங்க வச்சுக்குறீங்களா? நான் உங்களோடதையே வச்சிக்கிறேன்”, என்றாள்.
“அது அழுக்கு மா. இது புதுசு”
“பரவால்ல. அது தான் வேணும்”
“எதுக்கு?”
அவனுடைய வாசனை பட்ட போர்வையை மூடினால் முகம் தெரியாத அம்மாவின் மடி மீது படுப்பதை போல சுகமாக இருக்கிறது என்று சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தாள்.
“என்ன நினைச்சானோ, சரி அதையே வச்சிக்கோ”, என்ற படியே புது போர்வையை வாங்கினான். வாங்கும் போது, அவன் விரல் அவளுடைய விரலில் பட்டு இருவரையும் சிலிர்க்க வைத்தது.
அந்த சின்ன தீண்டல் இருவருக்குமே உயிர் வரை சென்று இன்பத்தை கொடுத்தது.
“அவளை கட்டிக்கோ”, என்று மனது கூச்சலிட்டது சூர்யாவுக்கு. அதை அடக்கியவன் “நைட்டி உனக்கு அழகா இருக்கு”, என்று சொல்லி அவளை வெட்க பட வைத்தான்.
சிறு சிரிப்புடன் கட்டிலில் அவனுக்கு முதுகு காட்டி படுத்தவளுக்கு ஆனந்தமாக இருந்தது.
அவனும் நிம்மதியாக கண்களை மூடினான். காலையில் ஏதோ பாத்திரம் விழும் சத்தத்தில் கண் விழித்தான் சூர்யா.
எழுந்து கிட்சன் சென்று பார்த்தான். மதி தான் உருட்டி கொண்டிருந்தாள்.

Advertisement