Advertisement

அத்தியாயம் 3
முகிலினங்கள் சுற்றி
அலைவது போல
உந்தன் வாசனையை
தேடுகிறேன் அன்பே!!!
“எதுக்கு இப்படி ஏங்கி ஏங்கி அழுதுட்டு இருக்கா?”, என்று நினைத்து பதட்டமாக அவளை பார்த்தான் சூர்யா.
மங்களம் “சூர்யா எதாவது சொன்னானா மா?”, என்று கேப்பது அவன் காதில் விழுந்தது.
“ஐயோ கல்யாணம் முடிஞ்சு, முதல் தடவை நைட் என்கூட தங்கிருக்கா. அடுத்த நாள் எங்க அம்மாவுக்கு என்ன என்னவோ எதிர்பார்ப்பு இருக்கும். அந்த மனநிலைல இருக்குறவங்க கிட்ட போய், இவ இப்படி அழுது வச்சான்னா, என்னை பத்தி எங்க அம்மா என்ன நினைக்கும். நைட் அவ மேல பாஞ்சிட்டேனு நினைக்க மாட்டாங்க. ரேப் பண்ணிட்ட மாதிரி அழுது ஊரை கூட்டுறாளே. அப்படி எதுவும் செய்யலையே? ஒரு வேளை எனக்கே தெரியாம, எதுவும் நான் அவளை செஞ்சுட்டேனா?”, என்று நினைத்து தன்னையே ஒரு முறை பார்த்து கொண்டான்.
தலையில் அடித்து கொண்டவன், “அப்படி எல்லாம் நடந்துருக்காது. இவ வேற எதுக்கோ அழுறா”, என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு அவர்கள் பேச்சை கவனித்தான்.
குளித்து முடித்து வந்த சண்முகம், “என்ன சூர்யா தம்பி ஒரே இடத்துல அசையாம அதிர்ச்சியா பாத்துட்டு நிக்குது?”, என்று நினைத்து கொண்டே அவனுக்கு பின்னே வந்து நின்றார். அதை கூட கவனிக்காமல், அவன் மங்களம் தோளில் சாய்ந்திருந்த மதியையே பார்த்து கொண்டிருந்தான்.
“மங்களம் கையால காபி குடிக்கணும். அப்ப தான், அந்த நாளே விடிஞ்ச மாதிரி இருக்கும்”, என்று நினைத்து கொண்டே அங்கு வந்த சுப்ரமணியம் “என்ன இது மாமனும், மருமகனும் அசைய மறந்து வேடிக்கை பாக்குறாங்க. மங்களம் எதாவது வித்தை காட்டுறாளா? நம்மளும் பாப்போம்”, என்று நினைத்து கொண்டு சண்முகம் பின்னால் போய் நின்றார்.
எல்லாருமே அவள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து திகைத்தார்கள். “எதுக்கு மதி அழுறா?”, என்று  வாய் வரை வந்த கேள்வியை  மூவரும் உள்ளுக்குள்ளே அடக்கி விட்டார்கள். அதுக்கு காரணம் அங்கே மங்களம் அவள் தலையை வருடி கொடுத்து, அதே கேள்வியை பாசமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
அது தான் மங்களமே கேட்கிறாளே என்று நினைத்து கொண்டு வேடிக்கை பார்த்தார்கள்.
“சொல்லு மதி மா. இப்படி அழுதுட்டே இருந்தா நான் என்னனு நினைக்கிறது? சொன்னா தான டா தெரியும்? அம்மா நினைவு வந்துருச்சா மா?”, என்று கேட்டு கொண்டிருந்தாள் மங்களம்.
“நான் அம்மாவை பார்த்தது கூட எனக்கு நினைவு இல்லையே அத்தை. அப்புறம் எப்படி அவங்க நினைவு வரும்?”, என்று அழுது கொண்டே சொன்னாள் மதி.
“அப்ப இந்த சூர்யா நாய் தான் ஏதோ செஞ்சிருக்கான். அவனுக்கு இருக்கு. இதோ அவன் கிட்ட போய் கேக்க போறேன்”, என்று நகர பார்த்த மங்களத்தை தடுத்த கலைமதி “அவங்களை எதுவும் சொல்லாதீங்க அத்தை. அத்தான் என்னை எதுவுமே சொல்லலை”, என்றாள்.
“அப்புறம் எதுக்கு நீ ஏங்கி ஏங்கி அழுதுட்டு இருக்க?”
“நைட் தூங்கிட்டு இருந்தேன் அத்தை. நான் ஏ. சி ல தூங்குனது இல்லை. குளிரா இருந்தது. என்னோட போர்வை துவைக்காம இருந்துச்சா? அழுக்கை எப்படி எடுத்து மூடன்னு நினைச்சு படுத்திருந்தேன்”
“ஏன் மா? அவன் கிட்ட கேட்டிருக்கலாம்ல?”
“எனக்கு கூச்சமா இருந்துச்சு அத்தை”
“சரி தான். சரி இன்னைக்கு புதுசா ரெண்டு எடுத்து தரேன். ஆனா இதுக்கு எதுக்கு அழுத? அதுவும் நைட் குளிர் அடிச்சதுக்கு, இப்ப எதுக்கு ஏங்கி ஏங்கி அழுதுட்டு இருக்க?”
“அது வந்து அத்தை, காலைல கண்ணு முழிச்சு பாத்தேனா, என் மேலே போர்வை மூடியிருந்தது. அத்தான் தான மூடிருக்காங்க?”
“ஆமா, அவனா தான் இருக்கும். வேற நாங்களா மூடிருக்க ரூம் குள்ள வர முடியும்? என் பையன் அதிசயமா பொறுப்பான வேலையை தான செஞ்சிருக்கான்? அதுக்கு ஏன் மா அழுத?”
“என் மேல இது வரைக்கும், யாருமே அக்கறையா இருந்தது இல்லை அத்தை. என்னை நானே தான் பாத்துக்குவேன். எனக்கு என்ன ஆனாலும், யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். வயிறு வலிக்குனு கூட நான் சொன்னது இல்லை. அப்பா கூட இப்படி குளிருதுன்னு  எனக்கு முடி விட்டது இல்லை அத்தை. முதல் தடவையா அத்தான் அப்படி செஞ்சிருக்காங்கன்னு நினைச்சு, எனக்கு சந்தோஷத்துல அழுகையா வந்துருச்சு. அத்தான் ரொம்ப நல்லவங்க அப்படி தான அத்தை? நேத்து நான் பையை தூக்க கஷ்ட படுவேன்னு, அவங்களே தூக்கிட்டு வந்தாங்க. ஹாஸ்டல், காலேஜ்ல சேரும் போது கூட எல்லா பிள்ளைகளுக்கும் அம்மா, அப்பா வந்தாங்க. எனக்கு அப்பவும் யாருமே வரலை தெரியுமா? சந்தோஷமான குடும்ப சூழ்நிலையை நான் உணர்ந்ததே இல்லை அத்தை. நேத்து தான் அப்படி உணர்ந்தேன். இப்ப இந்த வீட்ல, உங்களை எல்லாம் பாக்குறதுல எனக்கு தயக்கம் இருக்கு தான். ஆனா பிடிச்சிருக்கு.   நீங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்கன்னு தோணுது அத்தை. மாமா நல்ல பாசமா பேசினாங்க. இப்ப நீங்க உங்க பொண்ணு மாதிரி எனக்கு ஆறுதல் சொல்றீங்க. நைட் வேற பாசமா பேசினீங்களா? எல்லாத்தையும் நினைச்சு அழுகை வந்துடுச்சு அத்தை. அதான் அழுதுட்டேன் சாரி”
“இதுக்கா அழுத? என்ன பொண்ணு மா நீ? நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சு பயந்துட்டேன். பாசத்துக்காக ஏங்கி தவிச்சிருக்க மதி மா நீ. அதனால தான் அவன் சின்னதா செஞ்ச விஷயம் உனக்கு பெருசா தெரிஞ்சிருக்கு. சூர்யாக்கு ஏத்த பொண்ணு தான் நீ. நீ அவனை பாராட்டிட்டே இரு. அவன் உனக்கு அடிமை ஆகிருவான். சரி அம்மா இல்லாம ரொம்ப கஷ்ட பட்டுருப்பல்ல? வள்ளி தான் உனக்கு சித்தி. அவ குணம் எங்க எல்லாருக்குமே தெரியும். ஆனா சண்முகம் அண்ணன் நல்லவர் தான? அவர் கூட உன்னை பாத்துக்காம விட்டுட்டாரா?”
“அப்பாவை எதுவும் சொல்லாதீங்க அத்தை. அப்பா என்னை கண்டுக்காம இருந்ததுக்கு எதாவது காரணம் இருக்கும். ஒரு வேளை அவர் என் மேல அன்பு காட்டினா, சித்தி என்னை எதாவது சொல்லுவாங்களோன்னு அப்பா நினைச்சிருக்கலாம்”
“எல்லாருக்கும் சப்போர்ட் பண்ற. எங்க வீட்டுக்கு, அழகான தேவதையே மருமகளா வந்திருக்கா. ரொம்ப சந்தோசமா இருக்கு”, என்ற படியே அவளை அணைத்து கொண்டாள் மங்களம்.
வந்த கண்ணீரை அடக்கி கொண்டு, தன்னுடைய அறைக்கு போக திரும்பினான் சூர்யா. அவனுக்கு பின்னே, அப்பாவும், மாமாவும் கண்களில் நீர் பெருகி நின்றிருப்பதை பார்த்தவன் திகைத்து விட்டு எதுவும் சொல்லாமல் தன்னுடைய அறைக்கு சென்று விட்டான். சண்முகம் தான் அழுது கொண்டே இருந்தார்.
“அழாத மாப்பிள்ளை. மதி உனக்கு மகளா பிறந்ததுக்கு நீ ரொம்ப குடுத்து வச்சிருக்க”, என்ற படியே சண்முகத்தை அழைத்து கொண்டு போனார் சுப்ரமணியம்.
அறைக்கு வந்த சூர்யாவுக்கு அவள் முகமே கண்ணில் வந்தது.  “ஒரு நிமிசத்துல கதி கலங்க வச்சிட்டா”, என்று நினைத்தவனுக்கு இரவு நடந்தது நினைவு வந்தது.
“தண்ணீர் குடிக்கலாம்”, என்று எழுத்து விடி விளக்கை போட்டவன், அங்கு இருந்த செம்பில் இருந்த நீரை எடுத்து பருகினான்.
அப்போது தான் அவன் கண்ணில் கலைமதி விழுந்தாள்.
“எத்தனை வருஷம் தனியா தூங்கிருக்கேன்? ஆனா இன்னைக்கு மதி என் கூட படுத்திருக்கா. இனி காலம் முழுக்க, இவ என் பக்கத்தில் தான் படுத்திருப்பா. ஒரு தாலி கட்டினதுனால உருவான சொந்தம் எவ்வளவு பெருசு? முன்னோர்களோட பாரம்பரியம் உயர்ந்தது தான். கடைசி வரைக்கும் கூட வரதுனால தான் பொண்டாட்டியை துனைவின்னு சொல்றாங்களோ”, என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான்.
அவள் குளிரில் கால்களை குறுக்குவது புரிந்தது.
“குளிருது போல”, என்று நினைத்து, ஏ. சி யை சிறிது குறைந்தவன், தன்னுடை போர்வையை எடுத்து அவளுக்கு மூடி விட்டான்.
ஏனோ மனது  அமைதியாக இருந்தது அவனுக்கு. சிறு குழந்தை போல் தூங்கும் அவளை சிறிது நேரம் பார்த்து கொண்டே படுத்தவன், விடி விளக்கை அணைக்க கூட மறந்து அப்படியே தூங்கி விட்டான்.
இப்போது அதை யோசித்து பார்த்தவன் “நான் செஞ்ச ஒரு சின்ன விஷயத்துக்கு இப்படி அழுறான்னா, அவ மனசு எந்த நிலைமைல இருக்கும்? தெரியாம கூட அவளை கஷ்ட படுற மாதிரி பேசிற கூடாது”, என்று நினைத்து கொண்டு அமர்ந்திருந்தான்.
“காபி குடிக்கிறியா மதி?”, என்று கேட்டாள் மங்களம்.
“அப்புறம் குடிக்கிறேன் அத்தை”, என்று சிரித்தாள் மதி.
“அப்ப, இந்தா. உன் புருஷன் எந்திச்சிருப்பான். அவன் கிட்ட போய் கொடுத்துட்டு வா”, என்று அவள் கையில் டம்ளரை திணித்தாள் மங்களம்.
“நான் எப்படி காபி கொடுக்க?”, என்று நினைத்து கொண்டே மறுக்க முடியாமல் “கடவுளே! அவன் எந்திரிச்சுருக்க கூடாது. அப்படி தூங்கிட்டு இருந்தா, அத்தை கிட்ட தூங்குறாங்கன்னு சொல்லிறலாம். எனக்கு அத்தான் கிட்ட பேசவே திக்கு திக்குன்னு இருக்கு”, என்று நினைத்து கொண்டே உள்ளே சென்றாள்.
அங்கே உள்ளே வரும் அவளையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான் சூர்யா.
“ஐயோ முழிச்சு தான் இருக்கான்”, என்று நினைத்து கொண்டு அவன் அருகில் சென்றாள்.
தைரியத்தை வரவழைத்து கொண்டு, “அத்தை கொடுத்து விட்டாங்க”, என்று சொல்லி அவன் முகம் பார்க்காமல் கொடுத்தாள்.
அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தவன், ஒரு சிரிப்புடன் அதை வாங்கி கொண்டான்.
உடனே வெளியே போக திரும்பியவளை “கலை”, என்று அழைத்தான் சூர்யா.
“ம்ம்”, என்ற படியே திரும்பினாள் மதி.
“காலேஜ்க்கு நேரம் ஆகலையா?”
“ஏழு தான ஆகுது? எட்டு மணிக்கு வீட்ல இருந்து கிளம்பினா சரியா இருக்கும்”, என்று சொன்னவள் அடுத்து “எப்படி கேக்க?”, என்று அவனை பார்த்தாள்.
அவள் பார்வையை உணர்ந்து “எதாவது கேட்கணுமா?”, என்று அவளிடம் கேட்டவன் “இவ மனசுல நினைக்கிற பாஷையை முதலில் படிக்கணும்”, என்று நினைத்து கொண்டான்.
“ஹ்ம்ம். அது.. அது வந்து, இங்க இருந்து எப்படி பஸ் ஸ்டாண்ட் போக? அங்க போனா தான் காலேஜ்க்கு போக முடியும்?”, என்று திக்கி திணறி கேட்டாள்.
“இங்க இருந்து உங்க காலேஜ்க்கே அடிக்கடி பஸ் இருக்கு. ஆனா பஸ் ஸ்டாண்ட் தான் கொஞ்சம் தூரம்”
“நடந்தா, எவ்வளவு தூரம் ஆகும்?”
“கால் மணி நேரம் ஆகும். அப்புறம் அது கவலை படாத. நான் கொண்டு போய் விடுறேன்”
“நீங்களா? நீங்க வேலைக்கு போகணுமே?”
“எனக்கு பத்து மணிக்கு போனா போதும். இங்க கிட்ட தான்”
“ஓ சரி”, என்ற படியே வெளியே போக திரும்பினாள் கலைமதி.
மறுபடியும் “கலை”, என்று அழைத்தான் சூர்யா.
இப்பவும் “ம்ம்”, என்ற படியே தான் திரும்பினாள்.
அவள் தயக்கத்தை பார்த்து சிரிப்பு வந்தாலும், அதை அடக்கி கொண்டு “உன் அத்தானை, போர்வை மூடி விட்டதுக்கு பாராட்டணும்னு நினைச்சா என்கிட்டயே நேரடியா பாராட்டிரு என்ன? அம்மா கிட்ட சொல்லி தான் பாராட்டணும்னு இல்லை”, என்று சொல்லி கொண்டே எழுந்து குளியல் அறைக்குள் சென்று விட்டான்.
ஆ என்று வாயை பிளந்து கொண்டு நின்றாள் மதி. “அத்தை கிட்ட பேசினதை, இவன் எப்ப கேட்டான்? நான் ஒரு லூசு. சே என்ன நினைச்சிருப்பான்? அழுமூஞ்சின்னு முடிவு பண்ணிருப்பான். அவன் இருக்கான்னு தெரியாமலே அவனை பத்தி பேசியிருக்கேன்”, என்று நினைத்து கொண்டு தலையில் அடித்து கொண்டு வெளியே போனாள்.
பின் நேரம் வேகமாக சுழன்றது. ஏற்கனவே குளித்து முடித்து சுடிதார் அணிந்திருந்ததால், தலை மட்டும் வாரி முடித்து விட்டு, முகத்தில் பவுடரை பூசி விட்டு தன்னுடைய காலேஜ் பேகை எடுத்து வைத்து கொண்டிருந்தாள் மதி. 
அப்போது தலையில் ஈரம் சொட்ட சொட்ட, உடம்பிலும் ஈரம் வழியே, இடுப்பில் துண்டோடு உள்ளே வந்தான் சூர்யா.
அந்த தோற்றத்தில் அவனை எதிர்பார்க்காததால், அதிர்ச்சியாக அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவனும் அவள் இருப்பாள் என்று மறந்து போய் வந்து விட்டான்.
அவள் அதிர்ச்சியை பார்த்தவன், “குண்டு போட்டா கூட இப்படி முழிக்க மாட்டா போல”, என்று நினைத்து கொண்டு அங்கு இருந்த பீரோவை திறந்து அவனுடைய உடையை எடுத்தான்.
விட்டால் போதும், என்று நினைத்து வெளியே ஓடியே போனாள் மதி.
“திடிர்னு உள்ள வந்தாலும் வந்துருவா. அப்புறம் இன்னும் பேய் முழிப்பா”, என்று நினைத்து கொண்டு கதவை பூட்டி விட்டு ஒரு டீ ஷர்ட்டையும், லுங்கியையும் மாற்றி விட்டு வெளியே வந்தான். 
“எங்க போய்ட்டா? எங்கயாவது பதுங்கி இருக்காளா?”, என்ற படியே அவன் கண்கள் அவளை தேடியது.
சமையல் அறையில் “உன் மாமாவும், அப்பாவும் சாப்பிட்டுட்டு வெளிய போய்ட்டாங்க. உனக்கு மதிய சாப்பாடு அடைச்சிட்டேன். இந்தா மதி, ரெண்டு தோசையை சாப்பிடு”, என்று தட்டை கலைமதி கையில் கொடுத்தாள் மங்களம். 
“அத்தானும் குளிச்சிட்டாங்க அத்தை. அவங்க சாப்பிடலையா?” 
“அவன் அப்பறமா தான் சாப்பிடுவான். நீ டேபிள்ள உக்காந்து சாப்பிடு. அடுத்த தோசை சுட்டு எடுத்துட்டு வரேன்”
“எனக்கு இதே போதும் அத்தை”
“என்ன போதும்? இது மெல்லிசா தான் இருக்கு. இன்னும் ஒண்ணாவது சாப்டுட்டு போ”
சிரித்து கொண்டே வெளியே வந்தவள் எதிரே வந்த, சூர்யாவை பார்த்து தலையை குனிந்து  கொண்டாள்.
“என்னை பாத்ததும்  தலை உள்ள போயிருச்சு? இவளை மாத்துறது கொஞ்சம் கஷ்டம் தான்”, என்று நினைத்து கொண்டு டிவியை போட்டு நியூஸ் சேனலை வைத்தான். 
சாப்பிட்டு முடித்தவள், மங்களம் சொல்ல சொல்ல கேட்காமல், அவள் தட்டையும் கிடந்த கொஞ்ச பாத்திரத்தையும், விளக்கி வைத்தாள்.
அவன் டிவி பார்ப்பதை உறுதி செய்து விட்டு அறைக்குள் போய், தன்னுடைய பேகை எடுத்து கொண்டு வந்தாள். 
“இப்ப எப்படி அவன் கிட்ட போகலாமான்னு கேக்க”, என்று முழித்தவள் அப்படியே அங்கே இங்கே அலைந்து கொண்டிருந்தாள்.
அவள் செய்கையை உணர்ந்தவன், “எப்படி சுத்திட்டு இருக்கா பாரு. கிளம்பலாமான்னு கேக்க இவ்வளவு தயக்கமா?”, என்று நினைத்து கொண்டு அவனே “கலை கிளம்பலாமா?”, என்று அழைத்தான்.
“ஆன் போலாம் அத்தான். வரேன் அத்தை. மாமா, அப்பா கிட்ட சொல்லிருங்க”, என்று சொல்லி விட்டு அவன் அருகே சென்றாள். 
தன்னுடைய காரை வெளியே எடுத்தவன் “உக்காரு”, என்றான்.
முந்தைய நாள் போல பின்னே அமர போனவளை, “முன்னாடி ஏறு கலை”, என்றான்.
“முன்னாடியா?”, என்று அதிர்ச்சியானவள் பின் வேறு வழி இல்லாமல் அவன் அருகே ஏறி அமர்ந்தாள்.
அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு காரை எடுத்தான். அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள் மதி.
சிறிது தூரம் சென்றதும் “இது தான் பஸ் ஸ்டாண்ட்”, என்றான் சூர்யா.
அவனை பார்த்து திரும்பியவள், உடனேயே பஸ் ஸ்டாண்டை பார்வை இட ஆரம்பித்தாள்.
“இங்க இறங்கி, உங்க காலேஜ் பேர் சொன்னாலே, போதும். காலேஜ்  முன்னாடியே நிப்பாட்டிருவாங்க. எல்லா பஸ்சும் அந்த வழி தான் போகும்”
“ஹ்ம்ம் சரி. இறங்கிக்கவா?”
“நான் தினமும் உன்னை காலேஜ்ல விட்டுறேன். என்னைக்காவது, நான் சீக்கிரம் கிளம்புனா தான், நீ தனியா வர வேண்டி இருக்கும். அப்ப அப்பா உன்னை இங்க விடுவாரு. நீ இங்க இருந்து போய்க்கோ. இன்னைக்கு நான் உன்னை காலேஜ்லே விட்டுறேன்”
“எதுக்கு உங்களுக்கு சிரமம்? நீங்களும் கிளம்பணும்ல? இங்கயே விட்டுருங்க. நானே போய்க்கிறேன்”
“அதெல்லாம் சிரமம் இல்லை. சிரமம்னா நானே சொல்லிருவேன். அப்புறம் நீ காலேஜ் முடிஞ்சு, அங்க பஸ் ஏறுனா, நம்ம வீட்டுக்கு சைட்ல ஒரு ரோடு இருக்கும். அங்க தான் நிக்கும். இன்னைக்கு சாயங்காலமும், நேத்து வந்த நேரத்துக்கு நானே கூப்பிட வறேன். நாலைல இருந்து நீயே வந்திரு கலை”
“ம்ம்”, என்று சொன்னவள் அவனை தயக்கமாக பார்த்தாள்.
“என்ன கலை ஏதாவது சொல்லணுமா?”
“ஹ்ம்.. அது வந்து…..”
“தயங்காம என்ன வேணா சொல்லுன்னு சொல்லிருக்கேன்ல? சொல்லு”
“எல்லாரும் என்னை மதின்னு கூப்பிடுவாங்க. கிளாஸ்ல கலைமதின்னு சொல்லுவாங்க. ஆனா நீங்க…”
“எதுக்கு கலைன்னு சொல்றேன்னு  கேக்குறியா?”
“ம்ம்…”
“அப்படி நான் கூப்பிடுறது  பிடிச்சிருக்கா, பிடிக்கலையா?”

Advertisement