Advertisement

வீட்டுக்குள்ளே போன பின்னரும், அதே போல வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் மதி. 
“உக்காரு மா. அண்ணா நீங்களும் உக்காருங்க”, என்று அங்கு இருந்த சோபாவில் அமர சொன்னாள் மங்களம்.
அப்பாவும், பொண்ணும் அமர்ந்த பின்னர் அவர்கள் எதிரே சுப்ரமணியம் அமர்ந்து அவர்களுடன் பேச துடங்கினார்.
அமைதியாக இருந்தவளை காலேஜ், படிப்பு பற்றி பேசி சகஜ நிலைக்கு கொண்டு வந்தார். 
சூர்யா அவனுடைய அறைக்குள் சென்று விட்டான்.
உள்ளே காபி போட சென்ற மங்களத்தை பார்த்து “இப்ப காபி வேண்டாம் மா”, என்று சொல்லி விட்டார் சண்முகம். 
“சரி நீங்க பேசிட்டு இருங்க”, என்று சொல்லி விட்டு சூர்யாவின் அறைக்குள் சென்றாள் மங்களம்.
அவன் கட்டிலில் எதையோ யோசித்து கொண்டு அமர்ந்திருந்தான். அவன் அருகில் சென்ற மங்களம், “என்னை மன்னிச்சிரு பா. அண்ணன் எதாவது நினைச்சுக்க கூடாதுன்னு தான், உன்னை காலேஜ்க்கு போக சொன்னேன். அதனால தான் மதியை கூப்பிட உன்னை கூட்டிட்டு போனார். கோபமா இருப்பேன்னு தெரியும். அதான் இந்த தடவை மட்டும் அம்மாவை மன்னிச்சிரு”, என்று சொன்னாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை மா. கோபம் எல்லாம் இல்லை. சரி நான் குளிச்சிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு பாத்ரூம் நோக்கி சென்றான். 
அவன் புன்னகை சிந்தவில்லை தான். ஆனால் கோபத்தில் கத்துவான் என்று அவள் எதிர்பார்க்க, அவனுடைய அமைதி மங்களத்துக்கு திகைப்பையும், நிம்மதியையும் தந்தது. 
அதன் பின் வெளியே வந்து அவளும் கலைமதியுடன் பேச ஆரம்பித்தாள். 
அப்போது தான் அவளுடைய களைப்பு மங்களத்துக்கு கண்ணில் பட்டது. “சரி அவன் குளித்த பின்பு இவளை அனுப்பலாம். அதுவும் அவனோட ரூமுக்கே அனுப்பலாம். கேட்டா, அண்ணன் இருக்காங்கன்னு சொல்லிக்கலாம். என்ன தான் செய்றான்னு பாப்போம்”, என்று பிளான் செய்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
சூர்யாவும் குளித்து விட்டு, வெளியே வந்ததும் சுப்ரமணியம் அருகே அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தான்.
“இது தான் சரியான நேரம்”, என்று நினைத்து, “இது தான் இனி உன்னோட ரூம் மா. நீ போய் குளிச்சிட்டு வா”, என்று சொன்னாள் மங்களம்.
தயக்கத்துடன் எழுந்தாள் கலைமதி. அப்போது தான் அவளுடைய பேக் எல்லாம் காரில் இருப்பது நினைவு வந்தது. என்ன செய்ய என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தாள்.
அவள் யோசிப்பதை உணர்ந்த மங்களம் “தம்பி, மதி பொருள் எல்லாம் காரில் தான இருக்கு? கொஞ்சம் எடுத்து கொடுப்பா”, என்று சொல்லி விட்டு பயந்து போய் கிச்சனுக்குள் சென்று விட்டாள்.
அம்மாவை ஒரு பார்வை பார்த்து விட்டு எழுந்து போனான் சூர்யா. “அவனே எப்படி ரெண்டையும் தூக்கிட்டு வருவான்”, என்று நினைத்து அவன் பின்னே சென்றாள் மதி.
கார் டிக்கியை திறந்து கொண்டிருந்தவனின் அருகில் போய் நின்றவள், “உங்க பர்ஸை நீங்க வாங்கவே இல்லை”, என்று திக்கி திணறி எங்கோ பார்த்து கொண்டு சொன்னாள்.
அவள் பேசியதில் அவளை திரும்பி பார்த்தான். 
பயந்து போய் பேசியவளை பார்த்து தனக்குள் சிரித்து கொண்டவன், “இப்ப தான் தரணும்னு தோணுச்சா? நான் கூட நீயே அதை வச்சிக்க போறேன்னு நினைச்சேன்”, என்று சிரித்து கொண்டே அதை வாங்கி கொண்டான்.
அவன் பேசியதில் திகைத்தவள், அவன் புன்னகையை பார்த்து திகைப்பின் எல்லைக்கே சென்றாள்.
பேச மறந்து அவள் நிற்பதை பார்த்தவன், மறுபடியும் சிரித்து விட்டு, உள்ளே இருந்து பேக் எல்லாம் எடுத்து வெளியே வைத்து விட்டு அதை பூட்டினான். 
அவள் ஒரு பையை எடுக்க போகும் போது, “அதை வை”, என்று சொன்னவன் இரண்டையும் எடுத்து கொண்டு வீட்டுக்குள் நடந்தான். 
அவன் பின்னே நடந்தாள் கலைமதி. நேராக அவனுடைய அறைக்கே சென்றான் சூர்யா. 
அதை பார்த்து கொண்டிருந்த மங்களத்துக்கு சந்தோசமாக இருந்தது. “அப்பாடி அவளை பொண்டாட்டியா அவன் மனசு ஏத்துக்கிட்டு”, என்று நினைத்து கொண்டு உள்ளே போகாமல் தயக்கத்துடன் நின்றிருந்த மதி அருகில் போய் “உள்ளே போ மா”, என்று அனுப்பி வைத்தாள்.
கால்கள் பின்ன உள்ளே நடந்தாள் மதி. நெஞ்சம் எல்லாம் பட படவென்று அடித்தது. 
மெதுவாக அடி எடுத்து வைத்து உள்ளே சென்றவள், அவனை பார்த்தாள்.
அவன் அவனுடைய பீரோவில் அவள் உடை எல்லாம் வைக்க இடம் ஒதுக்கிக் கொண்டிருந்தான்.
அவள் வந்ததை உணர்ந்து, “இங்க உன் டிரெஸ் வச்சிக்கோ. அப்புறம் டவல் எல்லாம் அங்க இருக்கு”, என்று கை காட்டியவன் வெளியே  சென்று விட்டான்.
அவன் போன பின்பு தான் நிம்மதியாக மூச்சு விட்டாள் கலைமதி. 
குளிப்பதற்கு டிரெஸ் எடுக்கும் போது “இங்க எப்படி நைட்டி போடுறது?”, என்று நினைத்து கொண்டு ஒரு சுடிதாரையே எடுத்து கொண்டு குளிக்க சென்றாள். 
வெளியே வந்த மதி கண்ணில் கிச்சனில் இருந்த மங்களம் பட்டாள்.
நேராக அங்கு சென்றவள், “நான் எதாவது செய்யணுமா அத்தை?”, என்று கேட்டாள்.
“தோசை தான் ஊத்துறேன் மதி. நீ சாப்பிடுவ தான?”, என்று கேட்டாள் மங்களம்.
“நான் எதுனாலும் சாப்பிட்டுக்குவேன் அத்தை”
“அப்ப சரி. தக்காளி சட்னி மட்டும் வச்சா போதும். மதியம் வச்ச சாம்பார் இருக்கு. நீ வெங்காயம் மட்டும் உரிச்சி கொடு மா. அதோ அங்க இருக்கு பாரு”
“ஹ்ம்ம் சரி அத்தை”, என்று சொல்லி ஒரு தட்டில் வெங்காயத்தை அள்ளியவள் “இவ்வளவு போதுமா அத்தை?”, என்று கேட்டாள்.
“இன்னும் கொஞ்சம் எடுத்துக்கோ மா. உன் புருசனுக்கு நிறைய சட்னி இருந்தா தான் உள்ளே போகும்”, என்று இயல்பாய் சொன்னாள்.
அவள் சொன்ன புருஷன் என்ற வார்த்தையில் என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வை அடைந்தாள் கலைமதி.
இரவு சாப்பாட்டை முடித்து விட்டு தன்னுடைய அறைக்கு சூர்யா சென்ற பின்னர், “நான் மேல உள்ள ரூம்ல படுத்துக்குறேன்”, என்று சொன்னார் சண்முகம்.
“அப்ப நானும் அங்க வரேன் சண்முகம். மங்களம் போர்வை மட்டும் எடுத்து கொடு மா”, என்று சொன்னார் சுப்ரமணியம்.
“இதோ எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி எல்லாம் எடுத்து வந்து கொடுத்தாள் மங்களம்.
இருவரும் மாடி ரூம்க்கு சென்று விட்டார்கள். 
“நாம எங்க படுக்கன்னு தெரியலையே”, என்று நினைத்து கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தாள் கலைமதி.
அவள் தயக்கத்தை உணர்ந்து அவள் அருகில் சென்ற மங்களம் அவள் கையை பிடித்து கொண்டு, “மதி, ஏன் மா அமைதியாவே இருக்க? இங்க வந்தது உனக்கு பிடிக்கலையா?”, என்று கேட்டாள்.
“ஐயோ அப்படி எல்லாம் இல்லை அத்தை. புது இடம் அதனால கொஞ்சம் சங்கோஜமா இருக்கு. அதான்”
“இது உன்னோட வீடு டா. எங்க குடும்பம் அவமான பட இருந்த நேரத்தில் அதை துடைக்க வந்தவ நீ. இனி நீயும் இந்த குடும்பத்தில் ஒருத்தி. உள்ள இருக்குறது உன்னோட புருஷன். அவளுக்கு நிச்சயம் பண்ண பொண்ணு ஓடி போனது, அவன் மனசுல ஒரு பெரிய வலியை கொடுத்திருக்கு. அந்த வலிக்கு நீ தான் டா மருந்தா இருக்கணும். சூர்யா இருக்கானே, அவன் ரொம்ப நல்லவன். என்ன கொஞ்சம் கோபம் மட்டும் வரும். அதையும் அவன் என்கிட்ட மட்டும் தான் காட்டுவான். இனி என்னை விட நீ தான் அவனுக்கு முக்கியம். அதனால உரிமையா உன்கிட்ட கோபத்தை காட்டினா கூட கொஞ்சம் பொறுத்துக்கோ டா”
“ஹ்ம்ம் சரி அத்தை”
அதுக்கு மேல் என்ன சொல்ல எப்படி சொல்ல என்று தெரியாமல், “பாத்து நடந்துக்கோ மதி. உள்ளே போ”, என்று அனுப்பி வைத்தார்.
அதே பயத்துடன் தான் உள்ளே போனாள். 
கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்தவன், அவளை பார்த்த பின்னர் காலை மடக்கி நிமிர்ந்து அமர்ந்தான்.
“கட்டில் பெருசு தான் மதி. இங்கயே ஓரமா படுத்துக்கோ”, என்று சொன்னான் சூர்யா.
“இல்லை நான் கீழயே படுத்துக்குறேன்”, என்று தயக்கத்துடன் சொன்னாள் கலைமதி. 
“இங்க பாய் எல்லாம் இல்லை. பரவால்ல மேலயே படுத்துக்கோ. அப்புறம் உன்னை கீழே படுக்க வச்சிட்டேன்னு உன் பிரண்ட் என்னை கொலை பன்னிற போறா”, என்று சிரித்தான்.
“ஐயோ, அவ தெரியாம சொல்லிட்டா. என் மேல அவளுக்கு ரொம்ப அன்பு. நீங்க தப்பா நினைக்காதீங்க ப்ளீஸ்”, என்று அவசரமாக சொன்னாள். 
“நான் தப்பா எல்லாம் நினைக்கலை. உண்மையான அன்பு கிடைக்கிறது கஷ்டம். அது உனக்கு கிடைச்சிருக்குன்னா, நான் அதை தப்பா எல்லாம் நினைக்க மாட்டேன்”
“தேங்க்ஸ்”
“ஏன் அங்கேயே நின்னுட்ட. இங்க வந்து உக்காரு”, என்று சொன்னான்.
தயக்கத்துடன் அவனுக்கு மறுபுறம் கட்டிலில் அமர்ந்தாள்.
“தூக்கம் வருதா?”, என்று கேட்டான் சூர்யா.
“இல்லை”, என்னும் விதமாய் தலை அசைத்தாள் கலைமதி. 
“அப்ப கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமா?”
“ம்ம்ம்”
“அப்புறம், நீ இயல்பா இரு சரியா. இப்படி பயந்து பயந்து எல்லாம் என்கிட்ட பேச வேண்டாம். தைரியமா பேசு. அம்மா, அப்பா உன்னை எதுவுமே சொல்லமாட்டாங்க”
“அவங்க சொன்னா கூட என் நல்லதுக்குனு தான் எடுத்துக்குவேன்”, என்று சொன்னாள் கலை மதி.
அவளை ஆச்சர்யத்துடன் ஒரு பார்வை பார்த்தவன், “நீ தான் காலேஜ் பர்ஸ்ட்டாமே?”, என்று கேட்டான்.
“ஹ்ம்ம் ஆமா”
“சரி இப்படியே நல்ல படி சரியா? அப்புறம் ஐ. டீ கம்பெனியில் வேலை பாக்கணும்னு ஆசையா? இல்லை என்னை மாதிரி கவர்ன்மென்ட் வேலை பாக்கணும்னு நினைக்கிறியா?”
“முதலில் எது கிடைக்குதோ அது. வீட்ல இருந்து யாரு கிட்டயும் பணம் வேணும்னு கேக்காத நிலை வரணும்னு தான் ஆசை”, என்று தயக்கத்துடன் சொன்னாள் கலைமதி. 
“அது உங்க வீட்ல இருந்து சரியா? ஆனா இனி நீ இங்க என்ன  வேணும்னாலும் என்கிட்ட கேக்கலாம். உனக்கு என்ன தேவையோ ஒன்னு என் கிட்ட கேளு. இல்லைனா அம்மா கிட்ட கேளு சரியா?”
“ம்ம்”
“சரி எப்படியும் நீயா எதுவும் பேச போறது இல்லை. படுத்துக்கோ. நான் தூங்க நேரம் ஆகும்”
“ஹ்ம்ம் சரி”, என்று சொன்னவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்து விட்டாள்.
ஒரு புத்தகத்தை எடுத்து கொண்டு அதில் ஆழ்ந்து போனான் சூர்யா. 
ஆனால் அடுத்த நாள் காலையில் குளித்து முடித்து வெளியே வந்த கலைமதியின் கண்கள் கலங்கி இருந்தது.
மங்களம் அதை பார்த்து பயந்தே போனாள். ”இந்த பய அடிச்சி கிடிச்சி வச்சிட்டானோ, தெரியலையே”, என்று எண்ணிக் கொண்டு “என்ன மா ஆச்சு? எதுக்கு மதி அழுற?”, என்று கேட்டாள் மங்களம்.
“அத்தை”, என்று அழைத்து அவள் தோளில் சாய்ந்த மதி கூட கொஞ்சம் தான் அழுதாள். 
“சூர்யா எதுவும் சொல்லிட்டானா மா?”
“இல்லை”
“அடிச்சிட்டானா?”
“இல்லை அத்தை”
“அப்புறம் என்ன ஆச்சு டா?”
“அது வந்து… “, என்று சொல்ல வந்தவளுக்கு மேலும் அழுகை தான் வந்தது.
காபி வேண்டும் என்று கேட்க வந்த சூர்யாவின் கண்ணில் மதி அழுது கொண்டிருக்கும் காட்சி பட்டது. அதிர்ந்து போய் அதே இடத்தில் அசையாமல் நின்றான்.
தித்திப்பு தொடரும்……

Advertisement