Advertisement

அத்தியாயம் 2
எந்தன் உயிரையே
வருடிச் செல்கிறது
உன் மீது வரும் சுகந்தம்!!!
தன்னுடைய பெரிய கண்களை விரித்து கொண்டு சூர்யாவை பார்த்து கொண்டிருந்த கலை மதியை பார்த்தவனுக்கு சிரிப்பு இன்னும் அதிகமானது.
அவன் தன்னையே பார்ப்பதை அறிந்து முகத்தை திருப்பி கொண்டாள் மதி.
காவ்யாவின் நிலையோ கொடுமையாக இருந்தது. “இது தான் சனியனை தூக்கி பனியனில் போடுவது போல? சே இப்படியா பேசி தொலைப்பேன். இதுனால மதிக்கு எதாவது பிரச்சனை வந்துருமோ?”, என்ற பயத்துடன் “அப்பா இவர் தான் கலை வீட்டுக்காரரா?”, என்று சிரித்து கொண்டே விசாரித்தாள் காவ்யா.
“சமாதான பறவையை தூது விடுறாங்களாம் மேடம்”, என்று நினைத்து கொண்டு அமர்ந்திருந்தான் சூர்யா.
“என்ன மா காவ்யா? உனக்கு தெரியாதா? மதி உன்கிட்ட சொல்லிருப்பான்னு நினைச்சேனே? என்ன மதி இது? அறிமுக படுத்திருக்கலாமே”, என்றார் சண்முகம்.
“அவளுக்கு தெரிஞ்சிருந்தா சொல்லிருக்க மாட்டாளா?  இதுல அவ கிட்டயே இவன் அழகா இருக்கேன்னு வேற சொல்லிருக்கேன்”, என்று நினைத்து கொண்டு “அவ சொன்னாப்பா. நான் தான் கவனிக்கலை போல? சரி அப்பறம் கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன்”, என்று அவளை சமாளித்தாள்.
“அதான மதி நல்ல பொண்ணாச்சே. சொல்லாம இருக்க மாட்டாளேன்னு நினைச்சேன்”, என்றார் சண்முகம்.
“சரிப்பா. நாங்க போய் காபி வாங்கிட்டு வரோம். வா மதி”, என்று சொன்னாள் காவ்யா.
“தப்பித்தால் போதும்”, என்று நினைத்து கொண்டு அவசரமாக எழுந்து டேபிளில் இடித்து கொண்டாள் கலை மதி.
“பாத்து மா. மெதுவா”, என்றார் சண்முகம்.
“லைட்டா தான் இடிச்சிருச்சு பா. நாங்க வாங்கிட்டு வரோம். வேற எதாவது வேணுமா?”
“வடை எதாவது இருந்தா நாலு பேருக்கும் வாங்கிட்டு வா மா”, என்று சொல்லி பணம் எடுக்க போகையில் “என்கிட்டே இருக்கு பா”, என்று சொன்னாள் மதி.
“ஆமாப்பா. நாங்க வாங்கிட்டு வரோம்”, என்று காவ்யாவும் நகர போகையில் “கலை”, என்று அழைத்த சூர்யா அவள் கையை பிடித்து  தன்னுடைய பர்ஸை வைத்து விட்டு “இதுல இருந்து பணம் எடுத்து கொடு”, என்றான்.
அவன் பேசியதே அதிர்ச்சி என்றாள், அவன் அழைத்த கலை அதை விட அதிர்ச்சியை கொடுத்தது. அதுவும் அவன் தொட்டது அவளை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றது.
அதிர்ச்சியாக அவனை பார்த்து கொண்டிருந்தவளின் கையை பிடித்து இழுத்து சென்றாள் காவ்யா.
“எதுக்கு டி இப்படி இழுத்துட்டு வர?”, என்று கேட்டாள் கலைமதி.
“நீ வேற அவசரம் தெரியாம அவரையே ஆசையா பாத்துட்டு இருக்க? அதான் இழுத்துட்டு வந்தேன்”, என்றாள் காவ்யா.
“நான் ஒன்னும் ஆசையா பாக்கலை. கையில் இருந்த பர்ஸை என்ன செய்யன்னு தான் முழிச்சிட்டு நின்னேன். உனக்கு அவசரம்ன்னு எனக்கு எப்படி தெரியும்? சரி நீ பாத்ரூம் போய்ட்டு வா. நான் வாங்குறேன்”
“நான் எதுக்கு பாத்ரூம் போகணும்?”
“நீ தான அவசரம்ன்னு சொன்ன?”
“நானே செமையா டென்ஷனில் இருக்கேன். நீ வேற படுத்தாத மதி”
“போடி குழப்பாதே”
“இது வரைக்கும் குழப்பலை. இப்ப தான் மதி குழப்பி வச்சிருக்கேன்”
“என்ன காவ்யா சொல்ற?”
“ஆமா டி. அவர் தான் உன் வீட்டுக்குக்காரர்ன்னு தெரியாதுல்ல?”
“எனக்கே தெரியாது. பின்ன உனக்கு எப்படி தெரியும்?”
“முழுசா கேளு டி பரதேசி. அவர் தான் உன் வீட்டுக்காரர்ன்னு தெரியாம என்ன என்னவோ பேசிட்டேன் டி”
“என்னது?…. என்ன பேசுன?”
“நீயும் பயந்து என்னையும் பயமுறுத்தாத டி. நானே பயந்து போய் தான் இருக்கேன் மதி”
“ஐயோ தாயே கொஞ்சம் டென்ஷன் படுத்தாம சீக்கிரம் சொல்றியா? என்ன பேசி வச்ச?”
“இல்லை அது வந்து… மதி ரொம்ப நல்ல பொண்ணு. காலேஜ் பர்ஸ்ட் அவ தான்னு சொன்னேன்”
“அப்பாடி. நான் கூட பயந்தே போய்ட்டேன் டி காவ்யா. நல்லது தான சொல்லிருக்க.  அப்புறம் என்ன?”
“இன்னும் நான் சொல்லி முடிக்கல டி. அது மட்டும் சொல்லலை?”
“அப்புறம்?”
“அவளுக்கு ஒருத்தனை கல்யாணம் செஞ்சி வச்சிருக்காங்க. அவன் எப்படி பட்டவன்னே தெரியாது. அவ வாழ்க்கை என்ன ஆக போகுதோன்னு சொன்னேன் டி”
“ஐயையோ?”
“அது மட்டும் இல்லை மதி. அவளை மட்டும் அவன் எதாவது செஞ்சு அவளுக்கு எதாவது ஆகட்டும், நானே அவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிருவேன்னு வேற சொல்லிட்டேன் டி”
தலையில் கை வைத்து அங்கு இருந்த சேரில் அமர்ந்தே விட்டாள் மதி.
அவள் நிலையை பார்த்த காவ்யா, டோக்கன் வாங்கி ஆர்டர் சொல்லி விட்டு மதி அருகில் சென்றாள்.
“மதி சாரி டி. எனக்கு தெரியாதுல்ல அதான்”
“எருமை எருமை. உன்னோட ஆழமான நட்பை போயும் போயும் அவங்க கிட்ட தான் காட்டணுமா? எனக்கு பயமா இருக்கு டி காவ்யா”
“லூசு. என்ன பயம்? உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க. நான் தான பேசுனேன். என்னை தான் திட்டினாலும் திட்டுவாங்க. நீ பயப்படாத மதி”
“எனக்கு பயமே அது தான் காவ்யா. என்னை திட்டினா கூட தாங்கிப்பேன். ஆனா உன்னை எதாவது சொன்னா எனக்கு கஷ்டமா இருக்கும். அதுவும் உன் கூட பேச கூடாதுன்னு எதாவது சொல்லிட்டா, அப்படி எல்லாம் என்னால இருக்க முடியாது டி”
அவள் பதிலில் உருகி போன காவ்யா “அவங்களை பாத்தா அப்படி எல்லாம் தெரியலை. பிரண்ட்லியா தான் பேசுனாங்க. நீ எழுந்து வா போகலாம்”, என்று சொல்லி அவளை சமாதான படுத்தினாள்.
“பணம் டி”
“அதான் உன் ஆள் பர்ஸ் கொடுத்துருக்காரே. அதில் இருந்து எடு”
“ஒரு மாதிரி இருக்கு டி காவ்யா. அதான் நம்ம கிட்ட பணம் இருக்கே”
“இல்லை டி மதி. பர்ஸை கொடுத்து விட்டுருக்காங்க. அதை எடுக்கலைன்னு கோப பட போறாங்க. அதுல இருந்தே கொடு”, என்றாள் காவ்யா.
காபி மற்றும் வடையை இரண்டு ட்ரேயில்  வைத்து வாங்கி கொண்டு நடந்து வரும் போது, “நீ சொன்னதுக்கு அவங்க என்ன காவ்யா சொன்னாங்க?”, என்று கேட்டாள் கலைமதி.
“பிரண்ட் மேல அவ்வளவு பாசமான்னு சிரிச்சிகிட்டே தான் கேட்டாங்க”
“அப்பாடி. சரி வேற என்ன கேட்டாங்க?”
“நீ வேற யாரையும் லவ் பன்றியான்னு கேட்டாங்க மதி”
“என்னது?”
“ஆமா மதி. அப்படி தான் கேட்டாங்க”
“ஐயோ. சரி இதுக்கு என்ன சொல்லி தொலைச்ச?”
“அவ ஒரு பிள்ளை பூச்சி. அப்படி எல்லாம் செய்ய மாட்ட சார்ன்னு சொன்னேன்”
“அப்பாடி காப்பாத்திட்ட. சரி கிட்ட வந்துட்டோம். எதுவும் பேசாத”, என்று சொல்லி விட்டு முன்னே நடந்தாள் கலைமதி.
“அவர் கிட்ட எப்படியாவது மன்னிப்பு கேட்டுறனும்”, என்று நினைத்து மதியின் பின்னே போனாள் காவ்யா.
அவர்களுக்கு கொடுத்து விட்டு இவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள். கண்களாலே மன்னிப்பு கேக்கணும் என்று நினைத்து அவன் முகத்தையே அடிக்கடி பார்த்து கொண்டிருந்தாள் காவ்யா.
அப்போது தான் அதை உணர்ந்தாள். அவன் பார்வை முழுவதும் நொடிக்கொருதரம் மதி மேல் விழுந்ததை. அதை பார்த்து பீதி அதிகமானது காவ்யாவுக்கு. 
பின்னே அவன் புது பொண்டாட்டியை காதல் பார்வை பார்க்காமல் ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டிருந்தால் அவளும் என்ன நினைப்பாள்?
ஆனால் மதி, அப்பாவுடன் பேசி கொண்டிருந்தாள். அவனை திரும்பி கூட பார்க்க வில்லை.
காவ்யாவுக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை. “நான் பேசினதுனால மதிக்கு பிரச்சனை வரக்கூடாது. மன்னிப்பு கேக்கணும். கொஞ்சம் திரும்பலாம்ல இவரு. அவளையே பாத்துட்டு இருக்காரு”, என்று அவள் யோசிக்கும் போதே அவன் திரும்பி பார்த்தான்.
பயத்துடன் இருந்தவளை பார்த்து இயல்பாக சிரித்தான் சூர்யா. அவன் சிரிப்பில் தைரியம் வர பெற்ற காவ்யா கண்களாலே மன்னிப்பை கேட்டாள்.
அவனும் சிரித்து அவள் பயத்தை போக்கினான். “அப்பாடி”, என்று நிம்மதி பெரு மூச்சு விட்டாள் காவ்யா.
“எங்க கூடவே வா மா. சூர்யா தம்பி கார் எடுத்துட்டு தான் வந்திருக்கு”, என்றார் சண்முகம்.
“அதெல்லாம் வேண்டாம் பா. நான் பஸ்ஸில் போய்ருவேன்”, என்றாள் காவ்யா.
“ஒரு கஷ்டமும் இல்லை. உங்களை உங்க வீட்டில் விட்டுட்டே நாங்க போறோம்”, என்று சொன்னான் சூர்யா.
அதுக்கு மேல் மறுக்க முடியாமல் “சரி”, என்றாள்.
டிரைவர் இருக்கையில் அமர்ந்த சூர்யா காரை எடுத்தான். அவன் அருகில் சண்முகம் அமர்ந்திருந்தார்.
பின் இருக்கையில் கலைமதியும், காவ்யாவும் அமர்ந்தார்கள்.
காவ்யா தன் வீட்டுக்கு செல்ல வழி சொல்ல சூர்யா அவள் வீட்டு முன்பு காரை நிறுத்தினான்.
“இவ்வளவு தூரம் வந்துட்டீங்க. எல்லாரும் உள்ள வாங்களேன்”, என்று சொன்னாள் காவ்யா.
“இல்லை மா. பரவால்ல. நீ போ”, என்று சொன்னார் சண்முகம்.
“ப்ளீஸ் பா. வாங்க. அம்மா அப்பாவை பாத்துட்டு போகலாம்”
அவர் என்ன சொல்ல என்று தெரியாமல் சூர்யாவை பார்த்தார்.
அவன் சரி என்று சொன்னதும் எல்லாரும் உள்ளே போனார்கள்.
திலகா வந்து கதவை திறந்தாள். அதன் பின் சுந்தருக்கும், திலகாவுக்கும் காவ்யா தான் அனைவரையும் அறிமுக படுத்தினாள். 
அவர்களும் வரவேற்றார்கள். சாப்பிட சொன்னதற்கு “காலேஜ்ல தான் வடை காபி எல்லாம் சாப்பிட்டோம்”, என்று மறுத்து விட்டார் சண்முகம்.
“மதி ரொம்ப நல்ல பொண்ணுங்க. இங்க ரெண்டு மூணு தடவை வந்திருக்கா. நாங்க காவ்யா வேற மதி வேறன்னு நினைச்சது இல்லை. ஆனா அவ கல்யாணத்தை பாக்க முடியலைன்னு கொஞ்சம் கஷ்டமா இருக்கு”, என்று சொன்னார் சுந்தர்.
“அது அவசர கல்யாணம் அதனால் தான்”, என்று சொன்னார் சண்முகம்.
“ஹ்ம்ம் மதி மா. உனக்கு கிடைச்சிருக்க வாழ்க்கையை சந்தோசமா ஏத்துக்கணும் சரியா? தம்பியை பாத்தா நல்ல பையனா தெரியுது. நீ அவங்க வீட்டில் எல்லாரையும் சந்தோசமா வச்சுக்கணும். சந்தோசமா இருக்கணும் டா”, என்று சொன்னாள் திலகா.
அம்மா இருந்து அவளுக்கு சொல்ல வேண்டிய அறிவுரையை திலகா சொன்னதால் அடுத்த நொடி “அம்மா”, என்ற கேவலோடு திலகாவை அணைத்து கொண்டாள் கலை மதி.
அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான் சூர்யா.
கிளம்பும் போது “உங்க பொண்ணு கல்யாணத்தை பாக்கலைன்னு  கவலை படாதீங்க. அடுத்த வாரம் இங்க தான் ரிசப்ஷன் இருக்கு. அதுக்கு முறைப்படி அழைக்க வரோம். அதுக்கு எல்லாரும் கண்டிப்பா வரணும்”, என்று சொன்னான் சூர்யா.
“சரிங்க தம்பி. கண்டிப்பா வருவோம். என்னைக்குன்னு சொன்னா, நாங்க கண்டிப்பா வந்திருவோம்”, என்று சொன்னார் சுந்தர்.
ஒரு வழியாக அவர்கள் அனைவரிடம் விடை பெற்று கொண்டு கிளம்பினார்கள். 
தான் தங்கி இருக்கும் வீட்டின் முன் காரை நிறுத்தினான் சூர்யா. 
இறங்கிய கலைமதி அந்த வீட்டையும், சுற்றி இருந்த வீடுகளையும் பார்த்து கொண்டிருந்தாள். 
சிறு பிள்ளை போல் வேடிக்கை பார்க்கும் அவளை பார்த்தவன் சிரிப்புடன் உள்ளே நடந்தான். 
அப்போது வாசலிலே வந்து காத்திருந்தார் சுப்ரமணியம், சூர்யாவின் அப்பா.
“மங்களம் அவங்க வந்துட்டாங்க பாரு”, என்று உள்ளே நோக்கி சத்தம் கொடுத்த சுப்ரமணியம் “வா மா மதி. ரெண்டு பேரும் சேந்து நில்லுங்க. அம்மா ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வருவா”, என்றார்.
மதி அவரையே இன்று தான் முதல் முறை பார்க்கிறாள். 
“இவர் தான் மாமா போல?”, என்று நினைத்து கொண்டு அவரை பார்த்து சிரித்தவள் அவன் அருகில் சென்றாள். 
உள்ளே இருந்து சிரித்து கொண்டே வந்த மங்களம், “வா மா மதி. டேய் அவ கிட்ட நில்லு டா”, என்று சொல்லி இருவருக்கும் ஆரத்தி சுற்றி, பொட்டு வைத்து உள்ளே அழைத்து கொண்டு போனாள்.
உள்ளே போன பின்னர் இருவரும் பெரியவர்கள் மூவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

Advertisement