Advertisement

அத்தியாயம் 7
நான் கனவில் கூட
ரசிக்க தூண்டும் அழகான
ஓவியம் நீ அன்பே!!!

சூர்யாவின் சத்தத்தில் அனைவருமே திகைத்தார்கள். பத்திரிகை கொடுக்க போன சண்முகமும், சுப்ரமணியமும் கூட அப்போது தான் உள்ளே நுழைந்தார்கள்.
மதியை திட்டி கொண்டிருந்த வள்ளி, அவனுடைய சத்தத்தில் மிரண்டே போனாள். “ஐயோ எப்ப இருந்து கேட்டான்னு தெரியலையே”, என்று நினைத்து அப்பவும் மதியை தான் முறைத்தாள்.
ஆனால் மதியோ யாரையும் பார்க்க முடியாமல் கூனி குறுகி  கீழே குனிந்து அழுது கொண்டிருந்தாள்.
முந்தின நாள் துவைத்து வைத்த துணியை தான் மடித்து  கொண்டிருந்தாள் கலைமதி.
சூர்யா அறையை விட்டு வெளியே போவதை பார்த்த வள்ளி “இந்த மதியை நிம்மதியா இருக்க விட கூடாது. இவளை சூர்யாவை விட்டே ஓட விடணும்”, என்று முடிவு எடுத்து அவர்கள் அறைக்குள் சென்றாள்.
திமிராக உள்ளே வந்த வள்ளியை பார்த்த மதிக்கு திக்கென்று இருந்தது. ஆனால் முகத்தில் எதையும் காட்டாமல் “வாங்க சித்தி”, என்று சிரித்து வைத்தாள்.
“எதாவது சொல்லிருவாங்களோ?  இவங்க நாக்கில் விசத்தை தடவி பேசுவாங்களே. கடவுளே, அவங்க பேசுறதை தாங்க எனக்கு சக்தி கொடுப்பா”, என்று மனதில் நினைத்தவளுக்கு நேற்று சூர்யா “யார் என்ன சொன்னாலும் கண்டுக்க கூடாது”, என்று சொன்ன வார்த்தைகளும் நினைவில் வந்தது.
எல்லாம் யோசித்து கொஞ்சம் மனதை சமாதான படுத்தி கொண்டு வள்ளியை பார்த்தாள் மதி.
“என்னது வாங்கவா? என்னமோ உன்னோட வீடு மாதிரி வாங்கன்னு சொல்ற? இது என் அண்ணன் பையனோட வீடு. அடுத்தவங்க வீட்டில நீயே ஒண்டிக்கிட்டு இருக்க. இதுல  என்னை வரவேற்குறியா?”, என்று கேட்டாள் வள்ளி.
“இந்த இடத்தில் காவ்யா  இருந்திருந்தா என் புருசன் வீட்டில நான் இருக்கேன். உனக்கென்னன்னு கேட்டுருப்பா”, என்று நினைத்து கொண்டு அமைதியாக இருந்தாள் மதி.
ஆனால் அவள் அமைதியை பார்த்த வள்ளி “என்னடி அமைதியா ஆகிட்ட? அம்மா, அப்பா இல்லாத அனாதை தான டி நீ?”, என்று குரூரமாக சிரித்தாள்
மனதில் எழுந்த வலியை மறைத்து கொண்டு  “சித்தி, எனக்கு அம்மா தான் இல்லை. அப்பா இருக்காரு”, என்றாள் கலைமதி.
“அப்பாவா? அவர் என்னோட பிள்ளைகளுக்கு மட்டும் தான் அப்பா. உனக்கு அப்பா இல்லை”
“நீங்க என்ன தான் வெறுத்து ஒதுக்கினாலும், அப்பா இல்லைன்னு ஆகிருமா சித்தி?”
“ஆக தான் டி செய்யும் அனாதை கழுதை? என்னைக்காவது உன்னை தூக்கிருக்காரா அவரு? உன்னை ஸ்கூல்ல  சேக்க, காலேஜ்ல சேக்கன்னு எதுக்காவது வந்துருக்காரா? ஒரு துணி எடுத்து கொடுத்துருப்பாரா? இல்லைனா கல்யாணத்துக்கு நகை தான் போட்டிருப்பாரா? ஏதோ இது தான் சாக்குன்னு என் அண்ணன் பையன் வீட்ல உன்னை தள்ளி விட்டுட்டாரு. அப்பாவாம் அப்பா”
இதெல்லாம் சண்முகம் அவளுக்கு செய்தது இல்லை தான். அதை நினைத்து அமைதியாக இருந்தாள் மதி. ஆனால் பாம்பு அவள் மேல் இன்னும் விசத்தை கக்கியது.
“வீட்ல சம்பளம் இல்லாத வேலைக்காரின்னு தான் உன்னை அதே வீட்ல விட்டு வச்சேன். இல்லைனா என்னைக்கோ அனாதைன்னு   சொல்லி விரட்டி விட்டிருப்பேன். ஏதாவது ஆச்சுன்னா என்னன்னு கேக்க ஆள் இல்லாத அனாதை நாயி இப்ப நல்ல வாழ்க்கை கிடைச்சிருச்சுன்னு வானத்துல மிதக்குறியோ? உன் சிறகை எல்லாம் வெட்டி வீழ்த்தலைன்னா நான் வள்ளி இல்லை டி”
இந்த பேச்சில் உடைந்து போனாள் மதி. சூர்யா  கொடுத்திருந்த தைரியம் அனைத்தும் அவளை விட்டு சென்றிருந்தது. எப்போதும் போல் இப்போதும் அவள் கண்கள் கண்ணீரை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.
அப்போது தான் அங்கு வந்தான் சூர்யா. அவள் அழுவதை  பார்த்தவனுக்கு, “எவ்வளவு தூரம் இவளுக்கு அட்வைஸ் பண்ணேன்? ஆனாலும் இந்த அத்தை சொன்னதை கேட்டு அழுதுட்டு இருக்காளே. இப்படி தொட்டா சிணுங்கியா இந்த உலகத்தில் காலம் தள்ள முடியுமா? தப்புன்னு தெரிஞ்சா எதித்து பேச வேண்டாமா? அழுதுட்டு இருக்காளே. அத்தை அப்படி என்ன தான் சொல்றாங்கன்னு பாப்போம்”, என்று நினைத்து கையை கட்டி கொண்டு வேடிக்கை பார்த்தான்.
அழுது கொண்டே “என் மேல எதுக்கு சித்தி உங்களுக்கு வன்மம்?”, என்று கேட்டாள் மதி.
“வன்மமா? கொலை வெறி டி. உன்னை பாக்கும் போது தான் நான் ரெண்டாந்தாரம் அப்படிங்குற எண்ணமே எனக்கு வருது. அதை நினைச்சு எனக்கு எரியுது. என் புருஷனை என் பிள்ளைங்க மட்டும் தான் அப்பான்னு சொல்லணும். நீ சொன்னா எனக்கு அப்படியே உன் வாயில் சூடு போடணும்னு தோணுது”
“அது மட்டும் இல்லாம என்னோட அண்ணன் பையனை நீ எப்படி கல்யாணம் பண்ணலாம்? கொஞ்சம் மூக்கு முழியுமா இருந்த உடனே எங்க அண்ணி உன்னை அவனுக்கு  கல்யாணம் பண்ணி வச்சாங்க. இல்லைனா உன்னை எல்லாம் நாய் கூட சீண்டாது. ஆனா நீ கல்யாணம் வேண்டாம்ணு சொல்லி எங்கயாவது விழுந்து சாக வேண்டியது தான டி சனியனே? உனக்கு எல்லாம் இப்படி ஒரு வாழ்க்கை கேக்குதோ? அதான் உன் ஆத்தா உன்னை அழகா தான பெத்து போட்டுட்டு போய் சேந்துருக்கா? கூட படிக்கிற எவனையாவது உன் அழகை காட்டி மயக்கி எங்கயாவது ஓடிருக்க வேண்டியது தான? நான் அப்படி தான் டி நினச்சிருந்தேன்”
…..
“எவன் பின்னடியாவது ஓடிருவன்னு நினைச்சேன் டி. இப்படி கண்ணு முன்னாடியே வந்து இப்படி ஒரு வாழ்க்கையிலே உக்காருவேன்னு நினைக்கலையே. உங்க அப்பா கிட்ட இருக்குற, உன் அம்மாவோட நகை எல்லாம், தேன்மொழிக்கு  வந்துரும்னு நினைச்சேன். ஆனா அவர் அதை உன்கிட்ட கொடுக்க துடிக்கிறார். அதை கொடுக்க விட்டுருவேனா?”
….
“எவன் கிட்டயாவது உன் உடம்பை காட்டி அவனை மயக்கிருக்க வேண்டியது தான டி? மயங்குனா அவனும் உன்னை அனுபவிச்சிட்டு  நடு ரோட்ல விரட்டி விடுவான்.  எங்கயாவது ஆனாதையா திரிஞ்சு நாலு பேர் உன்னை நாசம் பண்ணி, துடி துடிச்சு நீ  சாகணும்.  உனக்கு எல்லாம் இந்த வாழ்க்கை கிடைக்கவே கூடாது டி. நீ நல்லாவே இருக்க கூடாது. இப்பவும் ஒண்ணும் கெட்டு போகலை. உன் அழகை காட்டி எவனையாவது மயக்கி சூர்யாவை விட்டு ஓடிரு. இல்லைனா  நான் ஓட வைப்பேன். வேணும்னா நான் உன்னை அந்த மாதிரி இடத்துல வித்துட்டு வந்துரட்டா? தினமும் ஒருத்தன் கூட சந்தோசமா இருக்கலாம். அப்படி பட்ட வாழ்க்கை தான் உனக்கு கிடைக்கணும். நல்ல குடும்பத்துல எல்லாம் உன் நிழல் கூட பட கூடாது”, என்று வள்ளி பேசி கொண்டிருக்கும் போது அடுத்த நொடி கத்தி இருந்தான் சூர்யா.
யாரையும் பார்க்க முடியாமல் அவமானத்தால் அழுது கொண்டே இருந்தாள் மதி. “ச்சி அம்மான்னு கூப்பிடாட்டியும் அம்மா மாதிரி தான இவளை நினைச்சிருந்தேன். ஆனா என்ன எல்லாம் பேசிட்டா. கடவுளே என் அம்மா இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா?”, என்று நினைத்து தரையிலே அமர்ந்தவள் காலை மடக்கி சுருட்டி கொண்டு அழுது கொண்டே இருந்தாள்.
“என்ன ஆச்சு பா சூர்யா?”, என்று கேட்ட படி அங்கு வேகமாக வந்தாள் மங்களம். சண்முகமும், சுப்ரமணியமும் அருகில் வந்தார்கள்.
யாரையும் கவனிக்காமல் “ச்சி நீயெல்லாம் பொம்பளையா?”, என்று கேட்டு கொண்டே வள்ளியை  அடிக்கவே போய் விட்டான் சூர்யா.
“சூர்யா கண்ணா என்ன இது? பெரியவங்களை இப்படி எல்லாம் செய்யலாமா? மரியாதை இல்லாம என்ன இது?”, என்று அவன் கையை பிடித்து தடுத்தாள் மங்களம்..
“மரியாதையா? சே இவளுக்கு எல்லாம் மரியாதை ஒரு கேடு. பாருங்க மா கலை அழுறதை. எப்படி அழ வச்சிருக்கா பாருங்க”
அங்கே மதி அப்படி தான் அழுது கொண்டிருந்தாள். வாழ்க்கையே வெறுத்து, கேட்கும் அனைவரின் இதயமும் ரத்த கண்ணீர் வடிக்கும் அளவுக்கு ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள்.
“ஏன் பா மதி இப்படி அழுறா? நீ ஏன் வள்ளியை திட்டுற?”, என்று கேட்டார் சுப்ரமணியம்.
“இவங்களை எல்லாம் திட்ட கூடாது பா. கொலையே பண்ணனும்”, என்றான் சூர்யா.
“மதி, இங்க பாரு மா என்ன ஆச்சு டா? எதுவா இருந்தாலும் பேசலாம். இப்படி அழ கூடாது மா”, என்று அவள் கையை பிடித்தாள் மங்களம். அடுத்த நொடி அவள் கையை தட்டி விட்டுவிட்டு அழுது கொண்டிருந்தாள் மதி.
“என்ன ஆச்சு சூர்யா?”, என்று கேட்டார் சண்முகம்.
“அதை ஏன் என்கிட்டே கேக்குறீங்க? உங்க அருமை பொண்டாட்டி கிட்ட கேளுங்க”
“ஏய் என் பொண்ணை என்ன டி சொன்ன?”, என்று கேட்டார் சண்முகம்.
“ஆஹா இதுவல்லவா உங்க வீரம். அங்க ஒருத்தி சாகுற மாதிரி அழுதுட்டு இருக்கா. நீங்க சாதாரணமா என்ன செஞ்சன்னு கேக்குறீங்க? ஹ்ம்ம் உங்களுக்கு கலை உங்க பொண்ணுன்னு நினைப்பு இருந்தா தான? அப்படி உங்க பொண்ணுன்னு நினைச்சிருத்தீங்கன்னா அவளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா?”, என்று கேட்டான் சூர்யா.
சண்முகத்தின் தலை குனிந்தது. “உங்களை பத்தி எனக்கு எப்பவுமே நல்ல எண்ணம் இருந்தது இல்லை மாமா. எப்ப பொண்டாட்டி செத்த உடனே எவன் ஒருத்தன் இன்னொரு கல்யாணம் பண்றானோ, அவனை நான் என்னைக்குமே மதிச்சது இல்லை. இப்ப என்னமோ வீரமா கேக்குறீங்க? முன்னாடியே அத்தையை இப்படி கேட்டுருந்தீங்கன்னா இப்ப என் கலையை இப்படி பேசிருப்பாங்களா? பெத்த பொண்ணை பாத்துக்க துப்பு இல்லை. உங்களுக்கு ரெண்டு கல்யாணம் சே”
“சூர்யா, என்னப்பா இது? இப்படி மட்டு மரியாதை இல்லாம பேசுற?”, என்று கேட்டார் சுப்ரமணியம்.
“முடியலை பா. இந்த மாமாவால  தான் எல்லாம்”
“நான் விருப்ப பட்டு  எல்லாம் ரெண்டாவது கல்யாணம் பண்ணலை சூர்யா”, என்றார் சண்முகம்.
“சரி விருப்பமில்லாம உங்களை கையை காலை கட்டி வச்சு கல்யாணம் செஞ்சு வச்சிட்டாங்கன்னே வச்சுக்குவோம். அதுக்கப்புறம் ஒண்ணுக்கு ரெண்டு பிள்ளைங்களை பெத்து வச்சிருக்கீங்களே. அதுக்கு என்ன சொல்ல போறீங்க?”
“சூர்யா?”, என்று அதட்டு போட்டாள் மங்களம்.
அமைதியாக நின்றான் சூர்யா.
“மாமான்னு மரியாதை இல்லாம பேச கூடாது சூர்யா. நான் உன்னை அப்படி வளக்களையே”, என்றாள் மங்களம்.
“விடு  மங்களம். அவன் சொல்றது சரி தான். நான் தான் என் பொண்ணை இந்த நிலைமைக்கு  ஆளாக்கிட்டேன் . ஏய் என் பொண்ணை  என்ன டி சொன்ன?”, என்று கேட்டு வள்ளியை கன்னத்தில் அறைந்து  விட்டார் சண்முகம்.
மங்களம் தடுக்க வில்லை என்றால் கொன்றே இருப்பார். மருமகன் இந்த அளவுக்கு அவரை மரியாதை இல்லாமல் பேசியது அவரது தன்மானத்தை சீண்டி விட்டது. அந்த கோபத்தில் அவரும் பொங்கி விட்டார்.
ஆனால் எத்தனை அடி வாங்கினாலும் திமிராகவே  நின்றாள் வள்ளி.
“சூர்யா நீயாவது சொல்லுப்பா. மதி அழாதேம்மா. என்ன சூர்யா நடந்தது?”, என்று கேட்டார் சுப்ரமணியம்.
அங்கு இருந்த யாரையுமே கவனிக்காமல் இந்த உலகத்தை, பெற்று போட்டு விட்டு செத்து போன அன்னையை, அப்பாவை, தன்னுடைய நிலையை அனைத்தையுமே வெறுத்து அழுதாள் மதி.
அவளை சமாதானம் செய்யவா? கொதித்து கொண்டிருக்கும் மகனிடம் விசயம் என்ன என்று கேட்பதா என்று தெரியாமல் விழித்த மங்களம் கதறி கொண்டிருந்த மதி முக்கியமாக பட அவள் அருகே சென்று மறுபடியும் அவளை அணைத்து கொண்டாள்.
“மதி மா ஆழதா டா , இப்படி அழ கூடாது மா”, என்று மதியை தன்னோடு அணைத்து கொள்ள பார்த்தாள் மங்களம்.
அவள் சொன்னதை காதில் கூட வாங்காமல் மங்களம் தோளில் சாய்த்ததை கூட மறுத்து விட்டு அமர்ந்த இடத்திலே இருந்து அழுதாள் மதி.
“இப்ப இவளை சமாதான படுத்த முடியாது”, என்று நினைத்து “என்னனு சொல்லி தொலையேன் டா.  சாகுற மாதிரி அவ அழுறா. என்னனு சொல்லிட்டு நீயாவது அவளை சமாதான படுத்து”, என்று கத்தினாள் மங்களம்.
“அவளை பார்த்து, உடம்பை காட்டி எவனையாவது மயக்கி அவன் பின்னாடி கலை போகணும்னு சொல்றாங்க மா”, என்று வேதனையுடன் சொன்னான் சூர்யா.
“என்னது?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் மங்களம்.
“அந்த மாதிரி தப்பான இடத்துல வித்துட்டு வந்துருவாங்கலாம். தினமும் ஒருத்தன் கூட…. சே”, என்று அருகில் இருந்த சுவரில் குத்தி தன் கோபத்தை அடக்கினான் சூர்யா.
“அவங்க பொண்ணா இருந்தா இப்படி பேசுவாங்களா மா? கலை என் பொண்டாட்டி மா. அவளை பாருங்க எப்படி துடிச்சு போய் அழுறான்னு. அவ சின்ன பொண்ணு மா. இன்னும் காலேஜ் கூட அவ முடிக்கலை. முழுசா விவரம் கூட கிடையாது. அவளை போய்…”
….
“ஒவ்வொரு தடவையும் அவளை இப்படி தான் பேசிருக்காங்க. இவங்க இங்க வரலைனு யார் அழுதா? இந்த பொம்பளை வந்ததுல இருந்து அவ நிம்மதி இல்லாம தவிக்கிறா. நைட் எல்லாம் தூங்க முடியாம வேதனை படுறா. என் அப்பாவோட கூட பொறந்தவங்கன்னு இத்தனை நாள் மரியாதை இருந்துச்சு. எப்ப என் பொண்டாடியை தப்பா பேசுனாங்களோ, இனிமே இவங்க அத்தை கிடையாது. என்னை பொறுத்தவரைக்கும் எதுவோ ஒரு பொம்பளை தான்”
….
“அவ யாருமே இல்லாத அனாதைன்னு சொல்றாங்க மா. எங்கயாவது ஓடிறணுமாம். அது மட்டும் இல்லாம அவளை இந்த வீட்டை விட்டும், என் வாழ்க்கையை விட்டும் விரட்டிட்டு அவங்க மகளை எனக்கு கட்டி வைப்பாங்களாம். எப்படி பட்ட கீழ்த்தனமான எண்ணம் பாருங்க. எனக்கு இந்த ஜென்மத்தில் அவ தான் பொண்டாட்டி. எப்ப அவ கழுத்துல தாலி கட்டுனேனோ அப்பத்துல இருந்து அவ தான் என்னோட வாழ்க்கை. அதை கெடுக்கவோ, இல்லை என்னோட வாழ்க்கையில் குழப்பம் விளைவிக்கவோ யாராவது  நினைச்சா நீங்க இன்னொரு சூர்யாவை பாப்பீங்க”
….
“இந்த ரிசப்ஷன் முடிஞ்ச பிறகு, கலையோட பொறந்த வீட்ல இருந்து யாருமே அவளை பார்க்க இங்க வர கூடாது. அது அவளோட அப்பாவா இருந்தாலும் சரி. இனிமே அவ என் பொண்டாட்டி மட்டும் தான். எதாவது உறவு சொல்லிட்டு இங்க  வந்தா, அப்பறம் மரியாதை கெடும். அப்புறம் அம்மா கலை கிட்ட அவங்க வீட்ல இருந்து  யாராவது பேசுறதை பார்த்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் மா. பாத்துக்கோங்க. அவங்களை என் ரூம்ல இருந்து வெளிய போக சொல்லுங்க”, என்று கத்தினான் சூர்யா.
அவன் கோபத்தில் அனைவருமே கொஞ்சம் பயந்து தான் போனார்கள்.

Advertisement