Advertisement

மெதுவாக அவள் முகத்தில் இருந்து விலகியவன் “சே நான் என்ன செய்ய பாத்தேன்?  இப்ப அங்க அங்க எல்லாம் கை வச்சிருந்தா என்னை பத்தி கலை என்ன நினைச்சிருப்பா? அது  எல்லாம் அவளுக்கு தெரியுமோ  என்னவோ? படிச்சிட்டு  இருக்குற  சின்ன  பொண்ணை  போய்? அதுக்கு இன்னும்  ஒரு வருஷம்  இருக்கே”, என்று தன்னையே திட்டினான்.
இப்போது அவன் கை கன்னத்திற்கு இடம் பெயர்ந்திருந்தது.
முத்தம் மறுபடியும் நடக்கும் என்று கலை நினைத்து கொண்டிருக்கும் போதே அது நிகழாததால் கண்களை திறந்து அவனை பார்த்தாள்.
ஒரு சிரிப்புடன் அவளை பார்த்து கொண்டிருந்தான் சூர்யா.
அவள் சிரிப்பில் அழகாக வெட்க பட்டு  தலைகுனிந்தாள்  கலைமதி.
அவள்  நாடியில்  கை வைத்து  முகத்தை  நிமிர்த்தியவன்  சிவந்து போய் இருந்த அவள் உதடுகளை விரலால் வருடி விட்டு  “சாரி கலை பல்லு பட்டுருச்சு. வலிக்குதா?”, என்று கேட்டான்.
அவன்  முகத்தை  பார்க்க  சக்தி  இல்லாமல்  இல்லை என்னும் விதமாய் தலை அசைத்தாள்.
சிவந்திருந்தவளை  ஆசையாக  பார்த்தவன்  தன்னை  நோக்கி  இழுத்து கட்டி   கொண்டான்.
அவளும் வாகாக அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
இளைப்பாற அவளுக்கென்று கிடைத்திருக்கும் முதல் இடம். சந்தோஷத்தில் அவள் கண்ணில் வந்த கண்ணீர் அவன் கையில் பட்டு தெறித்தது.
“நாம இப்ப வாழுறது நம்ம வாழ்க்கை கலை. இதில் உங்க சித்தி, எனக்கு அத்தைன்னு சொல்லவே பிடிக்கலை. அவங்க நம்ம வாழ்க்கையில வர முடியாது. எப்ப உன் கழுத்தில் தாலி  கட்டினேனோ அப்பவே ஏழேழு ஜென்மத்துக்கும் நீ தான் என் பொண்டாட்டி. உன்னை விட்டுட்டு யாரையும் திரும்பி பாக்க மாட்டேன். நீ நான், அம்மா, அப்பா நாம மட்டும் தான் நம்ம குடும்பம். நான் எதாவது சொன்னா என்கிட்ட சண்டை போடு. கோபம் வந்தா நாலு அடி வேணும்னா  அடிச்சிரு. அம்மா, அப்பா எதாவது சொன்னா என்கிட்ட சொல்லு. நான் அவங்களை கேக்குறேன். ஆனா அவங்க உன்னை எப்பவும் கஷ்ட படுத்த மாட்டாங்க. எங்க மூணு பேரை தவிர கண்டவங்க பேசுறதுக்கு எல்லாம் நீ இப்படி அழணுமா?”
….
“என்ன மா புரிஞ்சதா? பதில் சொல்லு டா”
“ம்ம்”
“உன்னை இந்த வீட்டில் இருந்தோ, என் மனசில் இருந்தோ யாரும் விரட்ட முடியாது. இது உன்னோட வீடு. நான் உன்னோட புருஷன். இனி அவங்க என்ன பேசினாலும் பெருசா எடுத்துக்க கூடாது சரியா?”
“ம்ம்”
“என்ன ம்ம் ம்ம் னு மட்டும் தான் வருது. சொன்னது எதாவது புரிஞ்சதா?”
“ஹ்ம்ம் புரிஞ்சது அத்தான்”
“இனி அழ மாட்ட தான?”
“ம்ம்ம் மாட்டேன்”
“இப்ப தான் என் பொண்டாட்டி நல்ல பொண்ணு. நீ  எப்பவுமே சிரிச்சிட்டே தான் இருக்கணும்”
“ஹ்ம்ம் நீங்களும் சிரிச்சிட்டே இருக்கணும்”
“சரி ரெண்டு பேருமே சிரிச்சிட்டு இருப்போம். என்ன பாக்குறவங்க தான் லூசுன்னு நினைப்பாங்க”
“போங்க அத்தான்”
“அப்புறம் கலை, இப்ப உன் கண்ணீரை நிப்பாட்ட நான் கொடுத்த மருந்து பிடிச்சிருந்ததா?”, என்று சிரித்து கொண்டே கேட்டான் சூர்யா. 
ஏற்கனவே அவன் நெஞ்சில் முகம் புதைத்து பதில் சொல்லி கொண்டிருந்தவள் இன்னும் முகத்தை அவன் நெஞ்சில் ஆழமாக புதைத்தாள்.
“கலை மா, இப்படி எல்லாம் இறுக்கி பிடிக்காத மா. உன் அத்தான் பாவம். நானே கஷ்ட பட்டு என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன்”
“ஐயோ வலிச்சிட்டா அத்தான்?”, என்று அப்பாவியாக கேட்டாள் கலைமதி.
“எப்படி கேக்குது பாரு பாப்பா”, என்று நினைத்து கொண்டு “ஒண்ணும் இல்லை டா. வலிக்க எல்லாம் செய்யலை”, என்று சிரித்தான்.
“ம்ம்”, என்று சொல்லி விட்டு மறுபடியும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் கலைமதி.
“சமத்து. எப்படி ஓட்டிகிற”, என்று மெச்சி போனான் கணவன்.
“இனிமே அழ மாட்ட தான?”
“மாட்டேன்”
“அவங்க என்ன சொன்னாலும் கண்டுக்க கூடாது சரியா?”
“ம்ம்”
இந்த அற்புதமான நேரத்தை இருவரும் ரசித்து கொண்டிருக்கும் போது கரடியாய் வெளியே இருந்து கத்தினாள் வள்ளி. கதவு உடை படுவது போல தட்டவும் செய்தாள்.
அவளுடைய குரலில் கலைமதியின் உடம்பு நடுங்கியது. அவனை விட்டு விலகி அமர்ந்தாள்.
அதை உணர்ந்தவன் “இப்ப தான சொன்னேன். பயப்பட கூடாதுன்னு. இரு நான் என்னன்னு கேக்குறேன்”, என்று சொல்லி விட்டு கதவை திறந்தான்.
அங்கே முறைத்து கொண்டு நின்ற வள்ளி, அவனை பார்த்ததும் ஒரு இளிப்பு இளித்து “எங்க அந்த கழுதை? வீட்ல அவ்வளவு வேலை இருக்கும் போது, இங்க சொகுசா படுத்து கிடக்காளா? அங்க அண்ணி கரடியா கத்திக்கிட்டு இருக்காங்க. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? ஏய் மதி வெளிய வாடி”, என்று கத்தினாள்.
பயத்துடன் அவன் அருகில் வந்து நின்றாள் கலைமதி.
“அத்தை இப்ப எதுக்கு சத்தம் போடுறீங்க? அவளுக்கு என்ன வேலை இருக்கு? அதை எல்லாம் தான் முடிச்சிட்டாளே. அப்படியே முடிக்கலைன்னா அம்மா பாத்துக்குவாங்க. அவங்க அவளை எல்லாம் செய்ய  சொல்ல மாட்டாங்க”, என்று கத்தி விட்டு “அம்மா அம்மா”, என்று கத்தினான் சூர்யா.
“என்ன சூர்யா?”, என்ற படியே அங்கு வந்தாள் மங்களம்.
“அங்க என்ன வேலை இருக்கு? நீங்க எதுக்கு கலையை தேடுனீங்க? வேலை ரொம்ப இருந்தா வேளைக்கு ஆள் வச்சிக்கலாமே மா”
“என்ன பா சொல்ற? என்ன வேலை? சமையல் வேலை முடிஞ்சு பாத்திரத்தை எல்லாம் மதி தான கழுவி வச்சிட்டு வந்தா. ரெஸ்ட் எடுன்னு நான் தான உள்ள அனுப்புனேன்? அப்புறம் எதுக்கு வேலை செய்ய கூப்பிட போறேன்?”, என்றாள் மங்களம்.
“என்ன அத்தை இது? எதுக்கு இப்படி சில்லியா பிஹேவ்  பண்றீங்க?”, என்று வள்ளியைப் பார்த்து கத்தியவன் “என்ன மா இதெல்லாம்? நீங்க பாக்க மாட்டிங்களா?”, என்று மங்களத்திடமும் சொன்னான்.
தன் குட்டு உடைந்து விட்டதில் தலையை குனிந்து நின்றாள் வள்ளி.
“என்ன வள்ளி இது? இப்ப எதுக்கு அவங்களை தொந்தரவு பண்ற? சூர்யாவுக்கு அவனோட ரூம் கதவை தட்டுறது பிடிக்காது. இப்படி தான் எரிஞ்சு விழுவான். இனி இப்படி செய்யாத. தேவை இல்லாம அவனை எதுக்கு கோப படுத்துற? அவனே எப்பவாது தான் லீவு எடுத்துட்டு வீட்ல இருக்கான். அதை கெடுக்கணுமா? நீ வா”, என்று அழைத்து கொண்டு சென்று விட்டாள் மங்களம்.
விட்டால் அழுது விடுபவள் போல் நின்றிருந்த மனைவியை உள்ளே இழுத்தவன் அறையை தாளிட்டான்.
சோர்ந்திருந்த அவள் முகத்தை பார்த்தவன், அடுத்த நொடி அவளை இழுத்து அணைத்து கொண்டான். அந்த அணைப்பு இப்போது தேவை என்பது போல் அவன் மார்பில் ஒண்டி கொண்டாள் கலை.
“மறுபடியும் சோகமா ஆகிட்டியா கலை? இப்ப தான சொன்னேன்? இதை எல்லாம் கண்டுக்காத மா. அப்பறம் அவங்களை பார்த்து எதுக்கு பய படுற? அவங்க உன்னை எதுவும் சொல்லாம நான் பாத்துக்குறேன் சரியா?”
“நிஜமாவா அத்தான்?”
“கண்டிப்பா மா. யாரும் உன்னை திட்ட விடாம பாத்துக்குறேன் சரியா?”
“ஹ்ம்ம் சரி”
அவள் முகத்தை நிமிர்த்தியவன் “அழுகை எல்லாம் ஓடி போச்சு போல? ஆனா அழுதிருந்தா அதை நிறுத்த, அப்ப மாதிரி எதாவது செஞ்சிருப்பேன். ஆனா இப்ப அதுக்கு வாய்ப்பு இல்லை போலவே”, என்று சிரித்தான்.
“அழுகை வந்தா தான் செய்யணும்னு இருக்கா?”, என்று அவளை அறியாமலே சொல்லி விட்டு நாக்கை கடித்து கொண்டாள் கலை.
ஆனந்த திகைப்புடன் அவளை பார்த்தான் சூர்யா. “ஏய் நான் கூட உன்னை என்னவோ நினைச்சேன் டி. மேடம் அப்படியே பட்டையை கிளப்புறாங்க?”, என்ற படியே கடி பட்ட அவள் உதடுகளை விரலால் எடுத்து விட்டான்.
அவன் மார்பில் முகத்தை மறைத்து கொண்டாள். அதுவும் அவன் சொன்ன உரிமையான டி யில் அவள் பெண்மை சிலிர்த்தது.
“எங்க முகத்தை மறைக்கிற? அப்ப உனக்கு முத்தம் கொடுத்தது பிடிச்சிருக்கா? அப்ப தினமும் ஒரு தடவைன்னு ஷிப்ட் போட்டுறலாம் சரியா?”
“இன்னைக்கு ஒரு தடவையா கொடுத்த?”, என்று கேட்க வந்த வார்த்தைகளை வெளியே சொல்லாமல் புதைத்து கொண்டாள். அதையும் சொன்னால் கிண்டல் பண்ணுவான் என்று நினைத்து.
ஆனால் அவன், அவள் மனதில் நினைத்ததையே வார்த்தையால் வெளியிட்டான்.
“இன்னைக்கு என்ன ஒரு தடவையா கொடுத்தன்னு கேட்டுறாத கலை. நான் உனக்குள்ள பேய் தான் புகுந்துருச்சோன்னு மயங்கி விழுந்துருவேன். அப்புறம் ஒரு தடவைன்னா ஒரு முத்தம் மட்டும் ன்னு அர்த்தம் இல்லை. ஒரு தடவை கிட்ட வந்து எத்தனை வேணும்னாலும் கொடுக்கலாம். இன்னைக்கு மட்டும் ரெண்டாவது தடவையும் கொடுக்கலாம்”, என்று சொல்லி அவள் முகத்தை நோக்கி குனிந்தான்.
அன்று மாலை துவைத்து வைத்த துணியை, எல்லாம் மடித்து வைத்து கொண்டிருந்தாள் மதி.
அவளை ஒரு பார்வை பார்த்தவன், தன் அம்மாவிடம் பேசலாம் என்று நினைத்தான்.
சோபாவில் அமர்ந்திருந்த தாத்தா, பாட்டி, மற்றும் ரகுவை பார்த்து விட்டு அம்மா, அப்பா அறைக்குள் சென்றான்.
“அம்மா”
“என்ன சூர்யா?”
“இல்லை ஒரு விஷயம் பேச வந்தேன்”
“என்ன டா? பங்க்சனுக்கு எல்லா வேலையும் முடிச்சாச்சு தான? நம்ம கேசவனுக்கு தான் சொல்லலை. அவனுக்கும் சொல்ல அண்ணனும், உன் அப்பாவும் போயிருக்காங்களே”
“அது இல்ல மா. அது வந்து..”
“என்ன டா தயங்குற?”
“இல்லை கலை கையில் கவரிங் நகை தான் போட்டிருக்கா”
“இதுக்கா இப்படி தயங்குற? பொண்டாட்டிக்கு நகை வாங்கி கொடுக்க அம்மா கிட்ட கேட்கணுமா பா? நான் என்னோடதை போட்டுக்க சொன்னேன். ஆனா அவ வேண்டாம்னு சொல்லிட்டா. நான் கூட புதுசா வாங்கி கொடுக்க யோசிக்கலை பாரேன். நீ யோசிச்சதும் சரி தான்”
இப்படி புரிந்து கொள்ளும் தாய் கிடைத்தால் வரம் தான் என்று நினைத்து கொண்டான் சூர்யா.
“நானும் இன்னைக்கு தான் மா கவனிச்சேன். அதான்”
“ஹ்ம்ம் இந்த பங்க்சனுக்கும் என்னோடதை போட்டு விட்டுரலாம்னு நினைச்சேன். ஆனா அதை விட நீயே அவளுக்கு புதுசா ஒரு செட் எடுத்து கொடுத்துரு. அவளுக்குன்னு இருக்கட்டும்”
“ஹ்ம்ம் சரி மா”
“கம்மல் சின்னதா போட்டுருக்கா. அதனால புது கம்மலும் ஒரு ஜோடி வாங்கிரு. வளையல், அப்புறம் ஒரு நெக்லஸ், ஒரு செயின், அப்புறம் அவ காலேஜ்க்கு போடுறதுக்கு  ஒரு சின்ன செயின். இதுக்கு மேல இனி பியூச்சர்ல வாங்கி கொடுத்துக்கோ. இப்ப அது போதும். ஆனா இதுக்கே அவ வேண்டாம் வேண்டாம்னு சொல்லி உன் உயிரை வாங்க போறா”, என்று சிரித்தாள் மங்களம்.
“ஹ்ம்ம், வேணும்னா நீங்க ரெண்டு பேரும் போய் வாங்கிட்டு வந்துறீங்களா மா?”
“காலேஜ்க்கு மட்டும் தான டா அவ கூட வெளிய போற? கடைக்கும் கூட்டிட்டு போ. அப்படியே வெளிய எங்கயாவது கூட்டிட்டு போ”
“ஹ்ம்ம் சரி மா. இப்ப கிளம்பட்டுமா?”
“ஹ்ம்ம் சரி கிளம்பு. அப்புறம்  அப்பாவோட ஏ. டி. எம் கார்டையும் வாங்கிட்டு போ”
“என்னோடதுல பணம் இருக்கே மா”
“முன்ன பின்ன ஆகும் டா. வாங்கிட்டு போ. இரு எடுத்து தரேன்”, என்று கொடுத்தார்.
சந்தோசமாக அம்மாவிடம் சொல்லி விட்டு தன்னுடைய அறைக்குள் நுழைய போனவன் திகைத்தான். அங்கே கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் கலைமதி. அவள் பக்கத்தில் நின்று அவளை திட்டி கொண்டிருந்தாள் வள்ளி.
அடுத்த நொடி “அம்மா”, என்று கத்தினான் சூர்யா. கோபத்தில் அவன் முகம் ரத்தமென சிவந்திருந்தது.
“என்ன ஆச்சு சூர்யா?”, என்று பதட்டத்துடன் ஓடி வந்தாள் மங்களம்.
ஹாலில் இருந்த பாட்டி, தாத்தா, ரகுவும் கூட அவன் கத்தலில் அங்கு வந்து விட்டார்கள்.
தித்திப்பு தொடரும்……

Advertisement