Advertisement

அத்தியாயம் 6
குழம்பித்தான் போகிறேன்
உன்னை எப்படி நேசிக்க
செய்வது என்ற தவிப்பில்!!!
கலைமதியின் முகத்தில் வந்து போன உணர்வுகளை சூர்யா  கவனித்து கொண்டு தான் இருந்தான். ஒவ்வொரு முறை அறைக்குள் வந்தவுடனும் ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது அவளுக்கு.
ரூம் வெளியே போன பிறகு அவள் முகத்தில் மலர்ச்சி என்பதே இல்லாமல் இருந்தது.
“எதனால இப்படி இருக்கிறா? வீட்ல சொந்தகாரங்க இருக்குறதுனால இப்படி இருக்காளா? ஆனா அத்தை, மாமா, தாத்தா, பாட்டி, தேனு, ரகு தான இருக்காங்க? எல்லாரும் அவ வீட்டு சொந்தம் தான? பின்ன எதுக்கு அப்படி இருக்கா?”, என்று யோசித்து விடை தெரியாமல் குழம்பினான் சூர்யா.
அவன் அவளை பற்றி நினைத்து கொண்டிருக்கும் போதே அறைக்குள் வந்தாள் கலைமதி.
எளிமையான காட்டன் சுடிதாரை தான் அணிந்திருந்தாள். ஞாயிறு அன்று ரிசப்ஷன் இருப்பதால் வியாழன் வெள்ளி லீவு போட்டிருந்தாள். அவனுமே லீவு தான் எடுத்திருந்தான்.
இரண்டு நாள் அவன் சொன்ன பிறகு நைட்டி போட்டிருந்தவள் இப்போது சுடிதாரை அணிந்திருந்தாள். எதுக்கு என்று யோசிக்கும் போது தான் அவள் சொன்ன சித்தி திட்டுவாங்க என்ற வார்த்தை நினைவு வந்தது.
“அவங்க வந்ததுனால தான் சுடிதாரை போட்டுட்டா போல?”, என்று நினைத்து கொண்டு அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான்.
அவள் முகத்தில் இருந்த சந்தோசம் குறைந்ததுக்கு காரணம் தெரியாமல், அவன் தவிக்கும் போது தான் அவன் மனதையே உணர்ந்தான் சூர்யா.
“அவளோட சந்தோஷத்துக்காக நான் தவிக்கிறேனா? இதுக்கு என்ன அர்த்தம்? அவ சந்தோசம் பெருசுன்னு நினைக்கிறதுக்கு காரணம் அவ என்னோட மனைவி என்பதாலா? இல்லை அதுக்கும் மேலயா?”, என்று எண்ணிக் கொண்டே அவளைப் பார்த்தான்.
கழுத்தில் அவன் அணிவித்த தாலி செயின் அணிந்திருந்தாள். அவன் கட்டிய தாலியை அன்றே செயினில் கோர்த்து போட்டு விட்டாள் மங்களம். இரண்டு கையிலும் கவரிங் வளையல் தான் போட்டிருந்தாள். 
அப்போது தான் அவனுக்கு யோசனையே வந்தது. “இவளோட அம்மாவோட நகை எல்லாம் இருக்குமே. அதை கூட அத்தை இவளுக்கு கொடுக்க விடலையா? இந்த மாமா எதுக்கு இப்படி கோழையா இருக்காரு. ரெண்டாவது கல்யாணம் பண்றவங்க எல்லாரோட நிலைமையும் இப்படி தான் போல? அவளோட அம்மா நகையையாவது அவளுக்கு கொடுத்திருக்கலாம். கல்யாணம் அன்னைக்கு என்ன போட்டிருந்தா?”, என்று யோசித்தான்.
“கல்யாணம் அன்னைக்கு அவ முகத்தை கூட நீ பாக்கலை. அப்ப அவ போட்டிருந்த நகையையா பாத்துருப்ப?”, என்று கிண்டல் அடித்தது மனசாட்சி.
அதை அடக்கி விட்டு “அம்மா போட்டு விட்டுருப்பாங்க. ஆனா அப்பறமா கழட்டி கொடுத்துருப்பா. அம்மா செயினை மட்டும் போட்டுக்க சொல்லி வற்புறுத்திருப்பாங்க. அவளுக்கு இனிமே நான் தான் வாங்கி கொடுக்கணும். அவங்க அம்மா நகை இல்லாம போனா என்ன? அவளோட புருஷன் நான் இருக்கும் போது, அதுவும் கை நிறைய சம்பளம் வாங்கும் போது இப்படி கவரிங் வளையல் போடலாமா? அம்மா கிட்ட இதை பத்தி பேசணும்”, என்று நினைத்து கொண்டான்.
அதற்கு முன்னால் சோர்ந்திருந்த அவள் முகத்தை மாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்து “கலை இங்க வாயேன்”, என்று அழைத்தான் சூர்யா.
“சொல்லுங்க அத்தான். எதாவது வேணுமா?”, என்ற படி அவன் எதிரே நின்றாள்.
“அதெல்லாம் வேண்டாம். இங்க உக்காரு. நான் கொஞ்சம் பேசணும்”, என்ற படி அவன் எதிரே இருந்த சேரை எடுக்க கை நீட்டினான்.
“நானே எடுக்குறேன்”, என்று சொல்லி அவன் முன்னே இழுத்து போட்டு அமர்ந்தாள்.
“சொல்லுங்க அத்தான்”, என்று சொல்லி குழப்பமான மனதுடன் அவன் முகத்தை பார்த்தாள்.
“உனக்கு இந்த கல்யாணம் பிடிச்சிருக்கு, என்னை பிடிச்சிருக்கு, இந்த வீடு பிடிச்சிருக்கு, என்னோட அம்மா அப்பாவை பிடிச்சிருக்குன்னு தெரியும்”
புருவம் உயர்த்தியவள் “ம்ம்ம் ஆமா. அதனால என்ன? எல்லாமே பிடிச்சிருக்கே”, என்றாள்.
“என் குழப்பமே அது தான் கலை. இங்க வந்ததுல இருந்து நீ தயக்கமா இருந்தாலும் சந்தோசமா தான் இருந்த. ஆனா நேத்தும் இன்னைக்கும் உன் முகம் சரியாவே இல்லை. ஏதோ தவிப்பாவே இருக்குற மாதிரி இருக்கு. இந்த ரிசப்ஷன் உனக்கு பிடிக்கலையா?”
“அப்படி எல்லாம் இல்லை அத்தான். உங்க பக்கத்துல நிக்க கூட எனக்கு தகுதி இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அது பிடிக்காம  போகுமா? இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும்னு நான் கனவுல கூட நினைச்சது இல்லை தெரியுமா?”
“அப்புறம் ஏன் கலை ஒரு மாதிரி இருக்க? ரெண்டு நாளா உன் முகம் சரியே இல்லை. எதையோ யோசிச்சு நீ கவலை படுற. என்ன மா? யாராவது எதாவது சொன்னாங்களா?”
….
“அப்ப யாரோ உன்னை ஏதோ சொல்லி கஷ்ட படுத்திருக்காங்க அப்படி தான? அதுக்கு தான அமைதியா இருக்க”
….
“சரி நீ சொல்ல மாட்ட தான? நானே அம்மாவை கூப்பிட்டு கேக்குறேன்”
“ஐயோ வேண்டாம் அத்தான். அத்தை என்னை எதுவுமே சொல்லலை. ரொம்ப அன்பா பாத்துக்குறாங்க. அவங்களை குறை சொன்னா என் நாக்கு அழுகிரும்”
“அப்ப அப்பா தான் ஏதோ சொல்லிருக்காங்க. அவர் கிட்ட கேக்குறேன்”
“ஐயோ ப்ளீஸ் அத்தான். மாமாவும் என்னை எதுவும் சொல்லலை. அவர் என்னோட அப்பாவுக்கும் மேல பாசமா பாத்துக்குறார்”
“அப்ப நான் தான் உன்னை எதாவது காய படுத்திட்டேனா? என்னை அறியாம எதாவது சொல்லிட்டேனா?”
“ஐயோ இல்லவே இல்லை. நீங்க என்கிட்ட நல்ல விதமா தான் பழகுறீங்க. என்னை திட்டுனது கூட இல்லை. அன்னைக்கு உங்களோட வண்டி சாவியை நான் வேற இடத்துல வச்சதுக்கு கூட இங்க வைன்னு மென்மையா தான சொன்னீங்க?”
“அப்ப உங்க அப்பா ஏதும் சொன்னாரா?”
“எங்க சித்தி இருந்தா எங்க அப்பா என் கிட்ட கூட வர மாட்டார். அவர் என்ன சொல்ல போறார்?”
“அப்ப வள்ளி அத்தை தான் ஏதோ சொல்லிருக்காங்க. என்ன சொன்னாங்க?”
“ஒண்ணும் சொல்லலை, விடுங்களேன்”
“நீ இப்ப சொல்லலைனா, என் பொண்டாட்டியை என்ன சொன்னீங்கன்னு நான் இப்ப போய் கேப்பேன்”
“அத்தான் ப்ளீஸ்”
“அப்ப சொல்லுமா. நீ இப்படி இருக்குறது கஷ்டமா இருக்கு. அதான் இப்படி போர்ஸ் பண்ணி கேக்குறேன்”
“அது அது… நான்… நான் “, என்று ஆரம்பித்து அழுது விட்டாள் கலை.
கண் முன்னே குலுங்கி அழும் மனைவியை பார்த்து பதறி விட்டான் சூர்யா.
அடுத்த நிமிடம் எதிரே சேரில் அமர்ந்திருந்த அவளை கை பிடித்து எழுப்பியவன் தன்னருகே கட்டிலில் அமர வைத்தான்.
“என்ன டா? எதுக்கு இந்த அழுகை?”, என்ற படியே அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
அவன் துடைக்க துடைக்க அது பெருகி கொண்டே இருந்தது.
“கலை இங்க பாரு. நான் சொன்னா கேப்ப தான? முதலில் என்ன நடந்துச்சுன்னு சொல்லு. அதுக்கு அப்புறம் நான் அதுக்கு தீர்வு சொல்றேன் சரியா?”
“என்னை நீங்க கல்யாணம் பண்ணது சித்திக்கு பிடிக்கலை. அதனால நான் நல்லாவே இருக்க மாட்டேனாம்”
“இதுக்கா கலை அழுவாங்க? அவங்க சொன்னா அப்படியே நடக்குமா என்ன? என்ன டா இது?”
“இல்லை அது வந்து… கல்யாணத்தன்னைக்கு அந்த பொண்ணு ஓடி போன பிறகு சித்தி தேன் மொழியை உங்களுக்கு கட்டி வைக்க நினைச்சாங்களாம். ஆனா அத்தை என்னை பொண்ணு கேட்டுட்டாங்களாம். நான் அவங்க பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டேனாம்”
“என்னது தேனையா? லூசா நீ? அத்தை தான் அறிவு இல்லாம பேசுச்சுன்னா நீயும் கேட்டு அழுவியா? நீயே என்னை விட அஞ்சு வயசு சின்ன பொண்ணு. அவ உன்னை விட சின்னவ. அவளை எல்லாம் கல்யாணம் பண்ண தோணுமா? அது மட்டும் இல்லாம அவ எங்க வீட்டுக்கு வந்து விளையாடும் போது, எனக்கு தங்கச்சியா தான் தெரிவா. அவளை போய்…”
“இல்லை அத்தான். சித்தி இதையே சொல்லி திட்டி கிட்டு இருக்காங்க. இத்தனை நாளும் திட்டுவாங்க தான். ஆனா இந்த விசயத்துல ரொம்ப கஷ்டமா இருக்கு. அவங்க என்னை விரட்டி விட்டுட்டு அவளை உங்களுக்கு கட்டி வைக்க போறாங்களாம். எனக்கு எதுவுமே நல்லது நடக்காது. இந்த வீட்டை விட்டு அனாதையா தான் போக போறேன் போல?”
“அப்படி எல்லாம் இல்லை டா’
“இல்லை. அப்படி தான். சித்தி சொன்னா செஞ்சிருவாங்க. அம்மா பாசம் கிடைச்சதே இல்லை. அப்பா இருந்தும் இல்லாத மாதிரி. மத்த உறவுகளும் அப்படி தான். இப்ப நீங்க, இந்த அன்பு, அத்தை, மாமாவோட பாசம், இந்த வீடு, எதுவுமே இல்லாம போயிரும்”
“கலை மா அப்படி எல்லாம் நடக்காது. அழாத டா”
“இல்லை நடக்கும். நான் ஒரு ராசி இல்லாதவ. மறுபடியும் உங்களை எல்லாம் இழந்துட்டு அநாதை மாதிரி தனியா தான் இருக்க போறேன்”
“கலை. கலை இங்க பாரு மா”
“நான் எல்லாம் வாழவே தகுதி இல்லாதவ அத்தான். எந்த சந்தோஷமும் நிலைக்காது. என்னை எல்லாம் எதுக்கு கடவுள் படைக்கணும்?”
அவன் எவ்வளவு சொல்லியும் அதை காதிலே வாங்காமல் அவள் புலம்பி கொண்டிருப்பதிலே அவளுடைய மனக்காயத்தை உணர்ந்தவன் அவள் அழுகையை நிறுத்த அவள் கன்னத்தை தாங்கி இருந்த கையை அழுத்தி பிடித்து முகத்தை நிமிர்த்தினான்.
அவள் கண்களை மிக அருகில் நெருக்கமாக பார்த்தான் சூர்யா.
அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.
அடுத்த நொடி அவள் முகம் நோக்கி குனிந்தவன், அவள் உதடுகளை சிறை செய்தான்.
அழுத்தமாக பதிந்த இந்த முத்தத்தில் அதிர்ந்து போனாள் மதி. வந்து கொண்டிருந்த அழுகை கூட  நின்று விட்டது. திக் பிரம்மை பிடித்தது போல அசையாமல் இருந்தாள். அவள் உடம்பே நடுங்க ஆரம்பித்தது. அவள் கைகள் தன்னாலே அவன் தோளை பற்றியது.
அவள் உதடுகளின் மீது தன் உதட்டை பொருத்தி இருந்த சூர்யாவோ, அழுகையை நிறுத்த கொடுத்த முத்தம் என்பதை மறந்து  அவள் உதட்டை சுவைக்கவே ஆரம்பித்து விட்டான்.
அவன் யாரையும் காதலித்து இல்லை தான். ஆனால் ஒரு ஆண்மகனாக தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தை பற்றி கூட யோசிக்காமல்‌ இருந்திருப்பானா? இன்று அதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டான்.
இத்தனை வருடம் கழித்து கிடைத்த தவம் போல, உதடுகளை விடாமல் உதடுகளால் பற்றி கொண்டான்.
அவன் கொடுத்த அழுத்தத்தில் அவளுடைய இதழ்கள் பிரிந்து அவனுக்கு வழி செய்து கொடுத்தது. அந்த இடைவெளியில் அவன் உதடுகளுக்கு கூட கொஞ்சம் உல்லாசம் கிடைத்தது மட்டும் உண்மை.
உயிர் வரை உணர்ந்த இந்த தீண்டலில் கரைந்து போனாள் கலைமதி. அவளுடைய அடி வயிற்றில் ஒரு பிரளையத்தையே உணர்ந்தாள்.
அவள் கைகள் அவன் டீ சர்ட்டை இறுக பற்றி கொண்டது.
முதல் முறை ஒரு ஆண் தொடும் போது பெண்ணின் உணர்வுகள் அவனை விலக்கும் தான்.  ஆனால் அதை செய்யாமல் இருந்தாள் மதி. அவள் தான் இந்த முதல் முத்தத்தை ரசித்து கொண்டிருந்தாளே.
அவளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வராததால், அவள் உதட்டை விடாமலே சொருகும் விழிகளை திறந்து அவள் முகத்தை  பார்த்தான். அவள் கண்களை இறுக்கமாக மூடி இருந்ததையும், அவள் கைகள் டிஷர்ட்டில் இறுக்கமாக பிடித்திருந்ததையும் பார்த்தவன், அவளுக்கும் இந்த முத்தம் பிடித்திருக்கிறது என்று நினைத்து உதடுகளை விடாமல் கவ்வி கொண்டான்.
அவனுக்கே மூச்சு விட கஷ்டமாக இருக்கும் போது, தான் அவளை விட்டு விலகியவன் அவள் முகத்தை பார்த்தான்.
அப்போதும் கண்களை மூடி மெய் மறந்து இருந்தாள் கலைமதி.
அதை பார்த்து கட்டு படுத்த முடியாதவனாய் மறுபடியும் அவள் முகம் நோக்கி குனிந்து முத்தமிட்டான்.
இடைவெளி விட்டு விட்டு மீண்டும் மீண்டும் அவள் உதடுகளை சிறை செய்தான் சூர்யா. அந்த முத்தத்தில் அமிழ்ந்து  போனாள் மதி.
அவள் கன்னத்தில் பதிந்திருந்த அவனுடைய  கை எப்போது அவள் இடுப்புக்கு போனது என்று அறியாமல் இருந்தான் சூர்யா.
அவன் கை அவள் இடையை இறுக்கி பிடித்திருந்தது. அங்கே கொடுத்த அழுத்தத்துக்கு குறையாத அழுத்தத்தை அவள் அவனுடைய டிஷர்ட்டுக்கு கொடுத்தாள்.
இடுப்பில் இருந்த கையை மேலே கொண்டு போ என்று மூளை கட்டளை இடும் போது தான் சுயநினைவுக்கே வந்தான் சூர்யா.

Advertisement