Advertisement

 
ஓ அப்படியா? ரொம்ப நன்றிங்க தம்பி. இது வரை காவ்யாவை எங்கேயும் தனியா அனுப்புனதே இல்லை. மதி இருக்குறதுனால தான் அனுப்புனேன். ஆனாலும் கொஞ்சம் பயமா இருந்தது. காவ்யா சொன்னா. உங்க வீட்ல எல்லாரும் நல்ல படியா பாத்துக்கிட்டதா. இருங்க நான் எல்லாருக்கும் காபி கொண்டு வரேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள் திலகா.
 
அதன் பின்னர் தான் அனைவரும் அப்பாடி என்று மூச்சு விட்டார்கள்.
 
தன் அம்மாவின் பின்னே சென்ற காவ்யா, அவள் காதில் ஏதோ முணுமுணுத்து விட்டு பின் மதி அருகில் வந்து அவள் காதிலும் ஏதோ சொல்லி விட்டு “அண்ணா இருங்க, இப்ப வரேன்”, என்று சொல்லி விட்டு ஷியாமை ஒரு பார்வை பார்த்து விட்டு  உள்ளே சென்று விட்டாள்.
 
அனைவருக்கும் காபி எடுத்து கொண்டு வந்தாள் திலகா. அதை வாங்கி இருவருக்கும் கொடுத்த மதி, அவளும் ஒன்றை எடுத்து கொண்டு சூர்யா அருகில் அமர்ந்து கொண்டாள்.
 
அடுத்து அனைவரும் என்ன பேச என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.
 
மதியும், திலகாவும் எதுவோ குசு குசு என்று பேச ஆரம்பித்தார்கள். அப்போது சூர்யா காதருகே குனிந்த ஷியாம் “என் அத்தை சரி போல்டா  இருக்காங்க டா”, என்றான்.
 
டேய் அமைதியா இரு டா. அவங்க காதுல விழுந்துற போகுது. நல்ல பையனாவே இங்க இருந்து கிளம்பிரு. இல்லைன்னா பொண்ணு தர மாட்டேன்னு சொல்ல போறாங்க”, என்று சொன்னான் சூர்யா.
 
என்னது கிளம்பணுமா? எனக்கு அத்தைகிட்ட முக்கியமான விஷயம் பேச வேண்டி இருக்கு. நான் பேசுறதை கேட்டு கண்டிப்பா உனக்கு கோபம் வரும். அதனால வீட்டுக்கு போன அப்புறம் நீ எப்படி வேணும்னாலும் என்னை துவைச்சு தொங்க போடு. இப்ப மட்டும் எதுவும் வாய் விட்டுறாத டா”, என்று ஷியாம் சொன்னதும் திகைத்த சூர்யா “அடேய் அவங்க கிட்ட என்ன டா சொல்ல போற?”, என்று கேட்டான்.
 
ஆண்ட்டி, அடுத்த மாசம் முப்பத்தியொன்னாம் தேதி  பாரின் கிளம்புறேன். அது வரைக்கும் இங்க திருநெல்வேலில ஒரு சைட் விஷயமா வேலை இருக்கு. அது வரைக்கும் தங்குற மாதிரி வீடு கிடைக்குமா? சூர்யா கிட்ட கேட்டேன். அவன் அவங்க வீட்ல தங்கலைன்னு கோப படுறான். இருந்தாலும் சைட் பாக்குறதுனால அன்டைம்ல வந்துட்டு போயிட்டு இருக்க வேண்டி இருக்கும். அதனால தான் தனி வீடா கேக்குறேன். இங்க கிட்ட எதாவது வீடு இருக்கா?”, என்று நல்லவன் மாதிரியே கேட்டு விட்டு பாவமாக சூர்யாவை பார்த்தான் ஷியாம்.
 
சூர்யாவோ கொலை வெறியோடு ஷியாமை முறைத்தான். மதியோ குழப்பமாக இருவரையும் பார்த்தாள்.
 
உங்க ஒருத்தருக்கு வீடா? குடும்பமா இருக்குறதுக்கு தானே தம்பி பெரிய வீடா  இருக்கும்? அப்படி பாத்தா பெரிய வீடுன்னா அட்வான்ஸ் வாடகைன்னு அதிகமா இருக்குமே”, என்று அவன் சொன்ன பொய்யை உண்மை என்று நம்பி கேட்டாள் திலகா.
 
பெரிய வீடா இருந்தா பரவால்ல ஆண்ட்டி. கொஞ்சம் வசதியா தான் நானும் எதிர் பாக்குறேன். ஆனா ஒரு மாசம்னா எல்லாரும் யோசிப்பாங்களோ?”, என்று பவ்வியமாக கேட்டான் ஷியாம்.
 
ஹ்ம்ம் ஆமா, ஆனா வேற வீட்டை ஏன் பாக்கணும்? நம்ம வீடே மாடில சும்மா தான் இருக்கு. காவ்யாவுக்காக கீழயும் மேலயும் ஒரே மாதிரி கட்டினோம். அவளுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் சும்மா ஏன் போடணும்னு வாடகைக்கு விடலாம்னு நானும் சுந்தரும் பேசிட்டு தான் இருக்கோம். ஒரு மாசம் நீங்க இங்க தங்குறதுல எங்களுக்கு சந்தோசம் தான்”
 
ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி. அட்வான்ஸ் வாடகை எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா???”
 
மதி என்னோட பொண்ணு மாதிரி. சூர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை. அவரோட பிரண்டுக்கு வீடு கொடுக்குறதுக்கு பணம் வாங்குனா நல்லாவா இருக்கும்? அது மட்டுமில்லாம உங்க தங்கச்சி காவ்யாவுக்கு சேலை எல்லாம் வாங்கி கொடுத்துருக்கா. நீங்களும் எங்க குடும்பத்துல ஒருத்தர் தான் தம்பி. வீடு புடிச்சிருக்கான்னு பாக்குறீங்களா?”
 
ஐயோ வேண்டாம் ஆண்ட்டி. இவ்வளவு சொன்னதே போதும். நான் ரெண்டு நாள் கழிச்சு வரேன். அவன் வீட்டுல தங்க மாட்டேன்னு சொன்னதுக்கே எப்படி முறைக்கிறான் பாருங்க. இதுல அவன் வீட்ல நாலு நாளாவது இருக்காம வந்தா  நட்பையே முறிச்சிருவான்”, என்று சிரித்தான் ஷியாம்.
 
சூர்யா தம்பி அப்படி எல்லாம் கோப பட மாட்டாங்க. சரி நைட்க்கு சாப்பாடு செய்றேன். இருந்து சாப்பிட்டுட்டு போகணும்”, என்று திலகா சொன்னதும் சரி என்று ஷியாம் சொல்ல வருவதுக்கு முன்னர் “எங்க அத்தையும் மாமாவும் இப்ப வருவாங்க மா. அவங்களை கூட்டிட்டு வர அத்தான் போகணும். இன்னொரு நாள் சாப்பிடுறோம்”, என்றாள் கலைமதி.
 
மனதறிந்து செயல்படும் மனைவியை பாசமாக பார்த்தான் சூர்யா. மனதில் இருந்த ஆசையை கெடுத்த தங்கச்சியை கோபமாக பார்த்தான் ஷியாம்.
 
கணவனை அன்பாக நோக்கிய மதி ஷியாமை பார்த்து முகத்தை திருப்பி கொண்டாள். “போச்சு டா. பொண்டாட்டி புருஷன் ரெண்டு பேரையும் சமாதானம் செய்ய வேண்டி இருக்கே”, என்று மனதில் எண்ணி கொண்டான் ஷியாம்.
 
மதி இப்படி தான் பொறுப்பா இருக்கணும். உன்னை நினைச்சு எனக்கு பெருமையா இருக்கு டா. உனக்கு அமைஞ்ச மாதிரியே நல்ல குடும்பம் காவ்யாவுக்கு அமைஞ்சா ரொம்ப சந்தோசமா இருக்கும். அவ குணத்துக்கு எப்படி மாமனார் மாமியாரை அனுசரிப்பாளா? இல்லை அவங்க கூட குடுமி சண்டை போடுவாளான்னு தெரியலை”, என்று திலகா சொன்னதும் தன் சித்தியுடன் காவ்யா சண்டை போட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணி சிரித்து கொண்டான் ஷியாம்.
 
கீழே நடந்து கொண்டிருக்கும் எந்த விவரமும் தெரியாமல் குளித்து விட்டு கீழ வந்தாள் காவ்யா.
 
பனியில் பூத்த மலர் போல இருந்தவளை ரசித்து கொண்டிருந்தவனை “சரி ஆண்ட்டி நாங்க கிளம்புறோம். வறோம்  காவ்யா”, என்று சொல்லி விட்டு எழுந்த சூர்யாவின் குரல் நடப்புக்கு கொண்டு வந்தது.
 
துரோகி, கொஞ்ச நேரம் என் செல்லத்தை ரசிக்க விடுறானா?”, என்று எண்ணி கொண்டே “கிளம்புறோம் ஆண்ட்டி, ரெண்டு நாள் கழிச்சு வரேன்”, என்று சொல்லி உறுதி படுத்தி கொண்டான் ஷியாம்.
 
இவன் என்ன ரெண்டு நாள் கழிச்சு வரேன்னு சொல்றான்? எதுக்கு இப்படி சொல்றான்?”, என்று யோசித்து கொண்டிருந்தாள் காவ்யா.
 
மூவரும் காரில் ஏறி கார் கிளம்பியதும் உள்ளே வந்த திலகா காவ்யாவிடம் “மேல வீட்டை நாளைக்கு சுத்தம் பண்ணனும் டி”, என்றாள்.
 
இப்ப எதுக்கு மா? ஆள் கிடைச்சிட்டாங்களா?”, என்று கேட்டாள் காவ்யா.
 
இதோ, ஷியாம் தம்பி தான் ஒரு மாசம் இங்க தங்க வரார்”, என்று திலகா சொன்னதும் அதிர்ச்சியானவள் “என்னது? நம்ம வீட்லயா?”, என்று கேட்டாள்.
 
நீ ஏன், இவ்வளவு சாக் ஆகுற?”
 
ஹி ஹி இல்லை மா, பாரின்ல வேலையை வச்சிட்டு இங்க எதுக்கு? அதுவும் சூர்யா அண்ணா வீடு இருக்கும் போது? அதான் கேட்டேன்”
 
அடுத்த மாசம் பாரின் போறதுக்குள்ள இங்க ஒரு சைட் பாக்கணுமாம். அதுக்கு நேரங்கெட்ட நேரத்துல அலைய வேண்டி இருக்கும். அதான் தனி வீடு கேட்டார். நம்ம வீடு சும்மா தான இருக்கு? இதுல சூர்யா தம்பிக்கு வருத்தம் போல? அதான் ரெண்டு நாள் கழிச்சு வரேன்னு சொன்னார். சரி நைட் பூரி சாப்பிடுவ தான?”
 
ம்ம் சரி மா”, என்று காவ்யா சொன்னதும் திலகா உள்ளே சென்று விட்டாள்.
 
பிராடு, சாஃப்ட்வெர் என்ஜினீயரா இருந்துகிட்டு எதுக்கு டா சைட் பாக்க போற நீ?”, என்று நினைத்து சிரித்து கொண்ட காவ்யாவுக்கு இதே வீட்ல அவன் இருந்தா என்று நினைக்கும் போதே உடலெல்லாம் ஒரு பரபரப்பு ஓடியது.
 
என்ன கனா கண்டுட்டு இருக்க? இன்னைக்கு நடத்துன பாடத்தை இன்னைக்கே படிச்சு முடி. அப்ப தான் மதி மாதிரி மார்க் வாங்க முடியும்”, என்று திலகாவின் அரட்டலில் சுயநினைவுக்கு வந்தவள் கையில் புத்தகத்தை எடுத்து கொண்டு அமர்ந்து விட்டாள். ஆனால் காதல் கனவில் மூழ்கி இருப்பவர் படித்தால், அது தான் உலகின் எட்டாவது அதிசயம் என்பது பாவம் திலகாவுக்கு எங்கே தெரியும்?
 
காரில் சென்று கொண்டிருந்த மூவருக்குள்ளும் அமைதி தொடர்ந்தது. பின் சீட்டில் அமர்ந்திருந்த மதி வெளியே வேடிக்கை பார்த்த படி வந்தாள். சூர்யாவோ கார் ஓட்டுவதில் கவனம் வைத்திருந்தான்.
 
இருவரையும் மாறி மாறி பார்த்த ஷியாம் “டேய் சாரி சூர்யா? மதி மா சாரி டா”, என்றான்.
 
சூர்யா திரும்பி கூட பார்க்க வில்லை. “போங்க அண்ணா, உங்களால அத்தான் மூடவுட் ஆகிட்டாங்க. அதனால எனக்கும் கோபம்? நாங்க மட்டும் உங்க வீட்டுல வந்து தங்குனோம்ல? இனி வரவே மாட்டோம்”, என்றாள் கலைமதி.
 
மனைவியின் பேச்சை உள்ளுக்குள் ரசித்தான் சூர்யா. “என்னை மூடவுட் பண்ணதுக்கு அவங்க மேல நீ கோப படுவியா செல்லம்?”, என்று மனதினுள் எண்ணி கொண்டான்.
 
மதி மா அப்படி இல்லை டா.  ஒரு மாசம் கழிச்சு நான் பாரின் கிளம்புன அப்புறம் திரும்பி வர ஒரு வருஷம் மேல ஆகும். அப்ப தான் நீயும் காவ்யாவும் படிச்சு முடிப்பீங்க? அப்புறம் தான் அவளை கல்யாணம் பண்ண முடியும்? அது வரைக்கும் அவ கிட்ட இருந்தா அவளை பத்தின நினைவுகளை சேகரிச்சு, அதை  சுமந்துட்டே ஒரு வருஷத்தை கழிச்சிருவேன். உங்க வீட்ல இருந்தா காவ்யாவை பாக்குறது கஷ்டம் டா. அதனால தான்”, என்று ஷியாம் சொன்னதும் “ஓ, இதுக்கு தான் இப்படி செஞ்சீங்களா? இப்ப புரியுது அண்ணா. காவ்யாவும் சந்தோச படுவா. என்னால என்னோட அத்தானை பிரிஞ்சு இருக்கு முடியாதுள்ள? அதே மாதிரி தான உங்களுக்கும் இருக்கும்”, என்று ஷியாமிடம் சொன்ன மதி “அத்தான், நம்மளால பிரிய முடியாத மாதிரி தான அவங்களுக்கும் இருக்கும்? இதுக்கெல்லாம் அண்ணா மேல கோப பட வேண்டாமே”, என்று பரிந்து பேசினாள்.
 
வளர்ந்திருந்தாலும் மதி இன்னமும் ஒரு குழந்தையே என்று தான் இரு ஆண்களுக்கும் தோன்றியது. சூர்யா கோபம் எல்லாம் பறந்து போனது. தன் மனைவி இப்படி கொஞ்சி பேசினால் அவன் கவனம் அவள் பேச்சில் பதியாமல் கோபத்திலா இருக்கும்? ஆனாலும் உடனே ஷியாமிடம் பேசாமல் அமைதியாக இருந்தான்.
 
அவனுக்கு புரியாது மா. அவன் மட்டும் என் வயசுலே இருந்துட்டு கண்ணுக்கு லட்சணமா, மனசுக்கு புடிச்ச பொண்ணை கல்யாணம் செஞ்சிட்டு அவ கூட ஒண்ணா சந்தோசமா இருக்கான். ஆனா நான் பாரு? அவளை பாக்க முடியாம தவிக்கிறேன். நீ எனக்காக பேசியும் அவன் கோபம் குறையுதான்னு பாரு? பிரிவை பத்தி அவனுக்கு என்ன தெரியும்? அதெல்லாம் வந்தா தான் தெரியும்”, என்று ஷியாம் சொன்னதும் சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்திய சூர்யா “அடேய், வெளங்காதவனே, நீ ஒரு மாசம் என்ன? ஒரு வருஷம் கூட உன் மாமியார் வீட்ல இரு டா. அதுக்காக எனக்கும் என் பொண்டாட்டிக்கும் இடையே பிரிவு வரும்னு பேசுற? இது உனக்கே அடுக்கு மா டா?”, என்று கோபத்தை விட்டு விட்டு பொரிந்து தள்ளி விட்டான்  சூர்யா.
 
அவன் பேசியதில் இருவரும் சிரித்தார்கள். “அத்தானுக்கு கோபம் போயிட்டு அண்ணா”, என்று சிரித்தாள் கலைமதி.
 
எப்போது பிரிவு பத்தி இவர்கள் பேசினார்களோ, அப்போதே சூர்யா பணி புரியும் பேங்கின் ஹெட் ஆபிசில் இருந்து சூர்யாவுக்கு டிரான்ஸ்பர் கடிதம் தபாலில் பறந்து வந்து கொண்டிருந்தது. 
 
தித்திப்பு தொடரும்……
 

Advertisement