Advertisement

அவள் பேச்சில் புன்னகைத்தவன் “சரி சரி நீ என் காதலை ஏத்துக்க எல்லாம் வேண்டாம். நல்ல பிரண்டா இரு சரியா? அப்புறம் என் தங்கச்சிக்கு என்னை பிடிக்காது. அவ உன்னை எதாவது கஷ்ட படுத்துனா பெருசா எடுத்துக்காத”, என்று சொன்னான்.
“ஏன் உங்களை பிடிக்காது?”
“ஏன்னா? என்ன சொல்ல? எங்க சித்தி குணம் எனக்கு தான் முதல்ல புரிஞ்சது. அது எல்லா சொத்தும் அதுக்கே வரணும்னு நினைச்சது. அதை பத்தி  எனக்கு தெரிஞ்சதுனால என்னை பத்தி இல்லாதது பொல்லாததை எல்லாம் அப்பா கிட்ட, தங்கச்சி கிட்ட சொல்லி வச்சிருக்கு. அதனால நான் கெட்டவன் அப்படின்னு ரெண்டு பேரும் நினைக்கிறாங்க”
“ஓ, ஆனா ஒன்னு சரி தான்”
“என்ன?”
“நீங்க கெட்டவங்க தான்”
“அட பாவி, நான் என்ன செஞ்சேன்?”
“எனக்கு முத்தம் கொடுத்தது நல்லவன் செய்ற விஷயமா?”
“ஆஹான்.. ஆனா இந்த நல்லவன் உன்கிட்ட மட்டும் கெட்டவன் சரியா?”
“வெவ்வ வெவ்வ”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள். அவனும் சிறு சிரிப்புடன் தன் அறைக்கு சென்றான். அங்கிருந்த போட்டோக்கள் கிழிக்காமல் இருந்ததே அவள் மனதை அவனுக்கு எடுத்து காட்டியது.
“இவ கிட்ட பேசினா எல்லாம் வேலைக்கு ஆகாது. நேரா மாமனார் மாமியார் கிட்ட தான் டீலிங் வச்சுக்கணும்”, என்று நினைத்தவனுக்கு இன்று எதிர்பாராமல் கிடைத்த முத்தம் போனஸ் என்று தோன்றியது.
அன்று இரவு சாப்பிடுவதுக்காக அனைவரும் அமர்ந்திருந்தார்கள். “வேலம்மா, காயத்ரி உள்ள ரூம்ல இருக்கா. அவளுக்கு அங்க போய் சாப்பாடு கொடுத்துருங்க சரியா?”, என்றான் ஷியாம்.
அப்போது காவ்யாவை பார்த்து கண்ணை காட்டினான் சூர்யா. அதை பார்த்த காவ்யாவுக்கு “அண்ணனையும் தங்கச்சியையும் நீ தான் சேத்து வைக்கணும்”, என்று சூர்யா சொன்னது நினைவில் வந்தது.
ஒரு முடிவுடன் ஷியாம் புறம் திரும்பியவள் “ஏன்? உங்க தங்கச்சி தீண்ட தகாதவங்களா?”, என்று கேட்டாள்.
“அவ தீண்ட தகாதவ இல்லை. நம்மளை தான் அப்படி நினைப்பா”, என்று கசந்த சிரிப்புடன் சொன்னான் ஷியாம்.
அவன் வருத்தத்தை உணர்ந்தவள் “நான் போய் கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி எழுந்து சென்றாள்.
காவ்யா, காயத்ரி அறைக்கு சென்ற போது கட்டிலில் படுத்திருந்தாள் காயத்ரி.
“ஹாய் காயத்ரி, சாப்பிட வரலையா?”, என்று கேட்டாள் காவ்யா.
அவளோ அமைதியாக இருந்தாள். “உன்னை தான் கேக்குறேன். காது கேக்கலையா?”, என்று கேட்டாள் காவ்யா.
“ஹ்ம்ம் கேட்கலை. இப்ப அதுக்கு என்ன?”
“ஏன் இப்படி கோப படுற?”
“நாங்க எல்லாம் பணக்காரங்க. அப்படி தான் இருப்போம். நீ சும்மா ஓசிக்கு ஊரை சுத்தி பாக்க வந்தவ தான? அதை மட்டும் செய். என் விசயத்துல தலையிடாத. உங்க கூட எல்லாம் நான் உக்காந்து சாப்பிடணுமா?”, என்று காவ்யாவின் தன் மானத்தை சீண்டி விட்டாள் காயத்ரி.
“ஏய், யாரை பாத்து ஓசிக்கு வந்திருக்கன்னு சொல்ற?”
“உன்னை பாத்து தான் சொல்றேன்? இங்க வேறு யாரு இருக்கா? அடடா மறந்துட்டேனே? அண்ணனோட பிரண்டும் அவன் பொண்டாட்டியும் வேற வந்துருக்காங்களே? அவங்களும் உன்னை மாதிரி ஓசிக்கு  தான வந்துருக்காங்க?”
“இங்க பாரு காயத்ரி, நீ அதிகமா பேசுற. சொல்லிட்டேன்”
“என்னோட ஸ்டேட்டஸ்க்கு நான் அப்படி தான் பேசுவேன். இன்னும் சொல்ல போனா உன்கிட்ட எல்லாம் பேசவே கூடாது”
“என்னது ஸ்டேட்டஸா? அப்படின்னு உனக்கு இருக்கோ? நானும் பேச கூடாது பேச கூடாதுன்னு பாக்குறேன். நீ ஓவரா பேசுற? உன் குடும்பம் கஷ்ட பட்ட குடும்பம்னு எனக்கும் தெரியும். சும்மா சீனா போடாத”
“என்னது கஷ்ட படுற குடும்பமா? ஏய் லூசு. இந்த வீட்டை பாத்துமா இப்படி சொல்ற?”
“என்ன வீடா? இந்த வீட்டை பாத்துக்குற வேலை தான உங்க அண்ணன் செய்றான்”
“நிச்சயமா நீ லூசே தான். இது அவனோட வீடு. எங்க வீடு இதை விட பெருசு. நான் போட்டுருக்க நகை எல்லாம் சும்மா வெள்ளை கல்லுன்னு நினைச்சியா? அத்தனையும் வைரம்.  ஓசி சோத்துக்கு தான் வந்துருக்கன்னு பாத்தா லூஸாவே வந்துருக்கியா?”, என்று கேட்டு சிரித்தாள் காயத்ரி.
அதிர்ச்சியாக விழித்த காவ்யா தன் மடத்தனத்தை நொந்தவாறே வெளியே வந்து விட்டாள் காவ்யா.
வெளியே வந்தவள் அங்கிருந்த யாரையும் பாக்காமல் தனக்கு கொடுக்க பட்டுள்ள அறைக்குள் சென்று விட்டாள்.
மூவரும் குழப்பமாக ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். பின் மதி மட்டும் எழுந்து காவ்யா அறைக்குள் சென்றாள். அங்கே கோபமாக அமர்ந்திருந்தாள் காவ்யா.
“ஏய் காவ்யா, என்ன டி ஆச்சு?”, என்று கேட்டாள் கலைமதி.
“இந்த வீடு ஷியாமோடதா மதி?”
“ஆமா டி. பின்ன அடுத்தவங்க வீட்டுக்கா கூட்டிட்டு வருவாங்க. நீ நிஜமாவே அவரை ஏழைன்னு நினைச்சிட்டு இருக்கியா?”
“ஹ்ம்ம், ஆமா. அண்ணாவோட பிரண்ட்ன்னு தான் தெரியும். மித்த படி பணக்காரன்ன்னு தெரியாது”
“அவங்க பெரிய பணக்காரங்க தான் காவ்யா”, என்று ஆரம்பித்து ஷியாமை பற்றி அனைத்தையும் சொன்ன மதி “ஷியாம் அண்ணா அத்தான் கூட தான் படிச்சாங்களாம். ஒண்ணா தான் ரெண்டு பேரும் வேலை பாத்துருக்காங்க. இப்பவும் பாரின்ல தான் இருக்காங்க. லீவ்க்கு தான் வந்திருக்காங்க. அதனால தான் நாம் இப்ப இங்க வந்தோம்”, என்று முடித்தாள்.
“ஓ, ஆனா அந்த காயத்ரி ரொம்ப பேசிட்டா மதி. நாம எல்லாரும் ஓசி சோறுக்கு வந்துருக்கோம்னு சொன்னா தெரியுமா?”
“விடு காவ்யா. நான் தான் முன்னாடியே சொன்னேன்ல? அவ அப்படி தான். முடிஞ்சா நாம அவளை மாத்துவோம். அப்படி முடியலைன்னா எப்படியும் போகட்டும்னு விட்டுருவோம்”
“ம்ம்”, என்று வெளியில் சொன்னாலும் மனதுக்குள் “அது எப்படி அவளை விட முடியும்?”, என்று தோன்றி வைத்தது காவ்யாவுக்கு.
அதன் பின்னர் காயத்ரியிடம் போய் பேசாமல் விலகியே இருந்தாள் காவ்யா.
கலைமதி மட்டும் தினமும் “நாளைக்கு இங்க …. சுத்தி பாக்க போறோம். நீயும் வந்தா நல்லா இருக்கும் காயத்ரி”, என்று மட்டும் சொல்லி விட்டு அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல் சென்று விடுவாள்.
தினமும் எங்கேயாவது சுற்றி பார்க்க போவதும், சந்தோசமாக திரும்பி வருவதுமாக இருந்தார்கள் நால்வரும். காயத்ரி மட்டும் வீட்டில் இருந்தாள்.
வீட்டுக்கு வந்த பிறகும் நால்வரும் சிரித்த படியே பேசி கொண்டிருப்பார்கள். இரண்டு நாள் இதை பார்த்து கொண்டிருந்த காயத்ரிக்கு தான் ஏதோ தனிமையாக இருந்தது.
காயத்ரிக்கு எப்போதுமே அமைதியாக இருக்க பிடிக்காது. எதாவது வளவளத்து கொண்டே இருக்க வேண்டும். அவளை சுற்றி எப்போதும் சிரிப்பு சத்தம் கேட்டு கொண்டே இருக்கும்.
தனிமையை உணர்ந்த காயத்ரிக்கு அவர்களுடைய சிரிப்பு சத்தம் ஒரு வித கோபத்தையும், ஒரு ஏக்கத்தையும் உருவாக்கியது.
அதை கோபமாகவே அவர்களிடம் வெளிப்படுத்தினாள். ஷியாம் வந்து “ஏதாவது வேணுமா டா ?”, என்று கேட்க வந்தாலும் “ரொம்ப தான் அக்கறை”, என்று நக்கல் அடித்து அவனை அவமதித்தாள்.
சூர்யா  அவள் பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை.
காவ்யாவும், மதியும் கூட அவளிடம் பேசுவார்கள். அவள் அவமதித்து பேசினால் மதி ஒரு சிரிப்புடன் திரும்பி விடுவாள். ஆனால் காவ்யாவோ பதிலடி கொடுத்து விட்டு தான் வருவாள்.
மேலும் இரண்டு நாள் கழித்து சூர்யாவும், ஷியாமும் ஒரு ஜவுளி கடைக்கு சென்றிருந்தார்கள். காவ்யா “எனக்கு தலை வலிக்குது”, என்று சொல்லி விட்டதால் மதியும் அவளுடன் இருந்து கொண்டாள். 
ஆண்கள் இருவருக்கும் அவர்கள் இல்லாமல் எங்கும் செல்ல பிடிக்காததால் அவர்களுக்கு உடை எடுக்க நினைத்து இங்கே வந்தார்கள். இருவருமே மூன்று மூன்றாக ஆறு சேலைகள் வாங்கினார்கள்.
வீட்டுக்கு சென்றதும் ஆளுக்கு ஒன்றாக சேலையை  கொடுத்தான் சூர்யா. “தேங்க்ஸ் அத்தான்”, என்று மதியும், “தேங்க்ஸ் அண்ணா”, என்று காவ்யாவும் பெற்று கொண்டார்கள். காயத்ரி என்ன சொல்லுவாளோ என்ற பயத்துடன் தான் அவளிடம் ஒரு கவரை நீட்டினான் சூர்யா.
தனிமையில் இருந்ததால் அவள் மனது வெகுவாக மாறி இருந்தது. தான் அவர்களிடம் முகம் கொடுத்து பேசாமல் இருந்தாலும் தன்னை அன்பாக அவர்கள் விசாரிப்பதில் அவள் மனதில் ஏற்கனவே யோசனை வந்திருந்தது.
அது மட்டும் அல்லாமல் இத்தனை நாள் தன் அண்ணன் மீதிருந்த மாய பிம்பமும் உடைந்திருந்தது. “அவன் சிகரெட் அடிப்பான், தண்ணி அடிப்பான்”, என்று சித்தி சொன்ன அனைத்தும் இந்த நான்கு நாட்களில் அவளுக்கு பொய் என்று தான் தோன்றியது. அதற்கு காரணம் காவ்யா தான்.
ஒரு நாள் நால்வரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது காயத்ரி ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள். அவர்கள் பேச்சு அவள் காதிலும் விழுந்து கொண்டு தான் இருந்தது. 
காவ்யாவும் ஷியாமும் மாற்றி மாற்றி வார்த்தையால் சண்டை இட்டு கொண்டிருந்தார்கள். காவ்யாவின் கேலியை காயத்ரியுமே ரசிக்க தான் செய்தாள். அப்படி இருக்கும் போது தான் “ஷியாம் சார் உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சேன். உங்களுக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் இருக்கா? பாரின்ல எல்லாம் இருக்கீங்க? அதான் கேட்டேன்”, என்று கேட்டாள் காவ்யா.
தன் அண்ணனுடைய பதிலுக்காக காயத்ரியும் காதை தீட்டி கொண்டு காத்திருந்தாள்.
அவனோ “ஏய், யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்ற? நான் எப்படின்னு சூர்யா கிட்ட கேட்டு பாரு? நானும் சூர்யாவும் பிரண்ட்ஸ் ஆனதே எல்லாரும் தண்ணி அடிக்கிற காலேஜ் பார்ட்டில நாங்க விலகி இருந்ததுனால தான். அப்புறம் சிகரெட் சுமல் எனக்கு ஓத்தே வராது. எப்படியும் உனக்கு இதை நான் சொல்லி தான் ஆகணும். நான் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அக்மார்க் நல்லவன் மா. என்ன? ஒரே ஒரு கெட்ட பழக்கம் தான் இருக்கு. அதுவும் இனி தான் பழகணும்”, என்று காவ்யாவின் கண்களை பார்த்து கொண்டே சொன்னான்.
அவன் பார்வையில் தடுமாறினாலும் “என்ன அது?”, என்று கேட்டாள். “லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும். அது தான் அந்த கெட்ட பழக்கம்”, என்று சிரித்தான் ஷியாம்.
இந்த நிகழ்வில் இருந்தே தன்னுடைய அண்ணன் மீது அவளுக்கு நல்லெண்ணம் வந்திருந்தது. அது மட்டும் அல்லாமல் போனில் பேசும் போது மோகனும் விசாலாட்சி பத்தி கொஞ்சம் சொல்லி இருந்தார்.
சூர்யாவின் கரத்தில் இருந்த கவரை பெற்று கொண்ட காயத்ரி அவனை பார்த்து “தேங்க்ஸ் அண்ணா”, என்றாள்
அப்போது தான் இழுத்து பிடித்திருந்த  மூச்சை வெளியே விட்டான் சூர்யா. 
தித்திப்பு தொடரும்……

Advertisement