Advertisement

“காயத்ரியை பார்த்த உடனே கண்ணீர் வந்துடுச்சா?”, என்று வியந்தவர்  அப்படியே நின்று பார்த்து கொண்டிருந்தார்.
“என்ன ஆச்சு சித்தி? இப்ப எதுக்கு அம்மாவோட போட்டோவை பாத்து அழுதுட்டு இருக்கீங்க?”, என்று கேட்டாள் காயத்ரி.
“ஒன்னும் இல்லை காயத்ரி. எப்பவும் போல தான்”, என்று சலிப்புடன் கூறினாள் விசாலாட்சி.
“அந்த போட்டோவை பாத்தா தான் உங்களுக்கு கஷ்டமா இருக்குல்ல? அப்பறம் எதுக்கு இங்க மாட்டி வச்சிருக்கீங்க? பூஜை அறையில வைக்க வேண்டியது தான சித்தி?”
“என்ன செய்ய? நானும் உங்க அப்பா கிட்ட இந்த போட்டோவை இங்க இருந்து எடுக்கணும்னு பல தடவை சொல்லிட்டேன். அவர் கேட்டா தான?”
“நான் சொல்றேன் சித்தி. அம்மா போட்டோவை எடுத்துட்டு நம்ம குடும்பமா இருக்குற போட்டோவை மாட்டலாம்”
“அப்படி மாட்டுனா திஷ்டி பட்டுடும் செல்லம். இங்க என்னோட போட்டோவை பெருசா எடுத்து மாட்டுனா நல்லா இருக்கும்”
“சரி தான் சித்தி. நான் அப்பா கிட்ட சொல்லி மாத்த சொல்றேன். முன்னாடியே சொல்லிருக்கணும். நாளைக்கே  சொல்லுறேன் சரியா?”, என்று சொல்லி விட்டு போன பிறகு விசாலாட்சி போலி கண்ணீரை துடைத்து விட்டு ஒரு மார்கமாக சிரித்தாள்.
அதை பார்த்ததும் மோகனுக்கு அனைத்தும் விளங்கியது. “என்னோட மனைவி போட்டோவை எடுத்துட்டு உன் போட்டோ அங்க இருக்கணும்னு நினைக்கிறியா? என்னை மன்னிச்சிரு சாவித்ரி. இவளோட  தந்திரம் தெரியாம நம்ம பையனை இது வரைக்கும் கஷ்ட படுத்திட்டேனே?”, என்று எண்ணி கொண்டு தன் லாயரை அழைத்தார்.
“சொத்து அனைத்தையும் மூணு பாகமாக பிரிச்சிரு விஜேஷ். காயத்ரி சொத்துக்கு கார்டியனா ஷியாம் பேரை போட்டுரு.  அது மட்டும் இல்லாம லாக்கர்ல உள்ள தங்க நகை எல்லாத்தையும் ரெண்டு பாகமா பிரிச்சு விசாலாட்சி, காயத்ரினு ரெண்டு அக்கௌன்ட் ஓபன் பண்ணி போட்டு விட்டுரு. எல்லாம் ரெடி பண்ணி ஆபிஸ் எடுத்துட்டு வா “, என்று சொல்லி விட்டு வைத்து விட்டார்.
அதுக்கு பின்னர் தான் நிம்மதியாக படுக்க சென்றார். காலை எழுந்து குளித்து முடித்து மோகன் கீழே வரும் போது காயத்ரி அவரிடம் பேசுவதுக்காக காத்திருந்தாள். அது எதுக்கு என்று புரிந்தவரும் அமைதியாக உணவை விழுங்கினார்.
“அப்பா”, என்று ஆரம்பித்தாள் காயத்ரி.
“என்ன பாப்பா? எதாவது வேணுமா?”
“அதெல்லாம் வேண்டாம். இங்க ஹால்ல இருக்குற அம்மா போட்டோவை எடுத்துறலாம் பா. அதுக்கு பதிலா நம்ம சித்தி போட்டோ வைக்கலாம். அம்மா போட்டோ கண்ணுக்கு முன்னாடி இருக்குறது எல்லாருக்குமே கஷ்டமா தான பா இருக்கும்?”
“ஓ, உன் அம்மா போட்டோ இங்க இருக்குறது உனக்கு கஷ்டமா இருக்கா? எனக்கு தினமும் வீட்டை விட்டு வெளிய போகும் போதும் வரும் போதும் அவ வழி அனுப்புற மாதிரியும், வரவேற்க்குற மாதிரியும் இருக்குது. உனக்கு அப்படி இல்லையா?”
“அது வந்து பா…”,
“சரி பரவால்ல. கஷ்டமா இருக்குன்னா மாத்திர வேண்டியது தான். இதை என்னோட ரூம்ல மாட்டிட்டு விசாலம் போட்டோவை இங்க மாட்டிறலாம் சரியா?”
“அப்பா? உங்க ரூம்ல அம்மாவோட போட்டோ மாட்ட போறீங்களா? அது சித்தியை ரொம்ப நோகடிக்கும் பா”
“அப்படின்னா நான் தனி ரூம்ல இருந்துட்டு அங்க என் சாவித்ரி போட்டோவை மாட்டிக்கிறேன் சரியா? எனக்கு தினமும் உங்க அம்மாவை பாக்கணும் பாப்பா”
“அப்பா, இப்படி பேசினா எப்படி பா?”
“என்ன எப்படிப்பா? காயத்ரி நீ சின்ன பொண்ணு. என்னோட உணர்வுகளோட தயவு செஞ்சு விளையாடாத. எங்கயும் என் சாவித்ரி போட்டோவை மாட்டா கூடாதுன்னு சொன்னா என்ன செய்றது? உனக்கு வேணும்னா உன் அம்மா முகம் மறந்திருக்கலாம். ஆனா எனக்கு என் மனைவி முகம் மறக்காது. அவ எனக்கு முக்கியம். நான் வாழ்க்கையில நல்ல நிலைமைக்கு வர காரணமே என் சாவித்ரியோட காதலும் திறமையும் தான். அவ போட்டோ இந்த இடத்துல தான் இருக்கும்”
“அது வந்து பா.. சித்தி…”
“என்ன சித்தி? அவ தான் உனக்கு சொல்லி கொடுத்தாளா? ஏய் விசாலம் இங்க வாடி”
“ஐயோ இல்லை பா. நான் தான் சொன்னேன்”
“இனி இப்படி பேசி என்னை கோப பட வைக்காத காயத்ரி. உனக்கு படிப்பு சம்பந்தமா என்ன  வேணும்னாலும் கேளு. உன் சித்திக்கு வீட்டுக்கு சம்பந்தமா என்ன வேணும்னாலும் கேட்க சொல்லு. வாங்கி தரேன். அதை விட்டுட்டு இந்த வீட்ல எந்த பொருள் எந்த இடத்துல இருக்கணும்னு நான் தான் முடிவு செய்யணும். அண்டர்ஸ்டாண்ட்.”, என்று கண்டிப்புடன் கூறினார் மோகன்.
“ஹ்ம்ம் சரி பா”
“குட், அப்புறம் நீயும், விஷ்ணுவும் ஒரு வாரம் உன் அண்ணண் வீட்ல போய் இருந்துட்டு வாங்க”
இவ்வளவு நேரம் அவர்களின் உரையாடலை மறைந்து நின்று கேட்டு கொண்டிருந்த விசாலம் “என்ன? என்ன சொல்றீங்க? அவன் வீட்டுக்கு எதுக்கு என் பிள்ளைங்க போகணும்?”, என்று கோபத்துடன் கேட்டு கொண்டே வெளியே வந்தாள்.
“நீ இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தியா? ஆமா, அது என்ன அவன் வீடு. அவனும் உனக்கு மகன் தான?”, என்று கேட்டார் மோகன்.
உடனே முகத்தை சிரித்த மாதிரி வைத்து கொண்ட விசாலம் “அதுக்கு சொல்லலைங்க. அவன் என்னையே கண்ட படி திட்டுவான். அவன் வீட்டுக்கு அனுப்புனா ரெண்டு பேரும் வருத்த படுவாங்க. அதான்”, என்று இழுத்தாள்
“ஆமா பா சித்தி சொல்றது சரி தான். அவன் நல்லவனே இல்லை பா”, என்று சொன்னாள் காயத்ரி.
“காயத்ரி”, என்று அதட்டி அழைத்த மோகன்  “அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசுனா பல்லை தட்டிருவேன். ஒழுங்கா அண்ணனு சொல்லி பழகு. அப்புறம் அவன் நல்லவன் இல்லைன்னு நீ கண்டியா? இப்ப என்னை விட நல்ல நிலைமைல இருக்குற அவன் எப்படி கெட்டவனா இருக்க முடியும்? கேப்பார் பேச்சை கேட்டு எதாவது சொல்லி கிட்டு இருந்த, பல்லை தட்டிருவேன் பாத்துக்கோ. ரெண்டு பேரும் இன்னைக்கு சாயங்காலம் கிளம்பி இருங்க. நான் அங்க கொண்டு போய் விடுறேன்”, என்று கண்டிப்புடன் சொன்னார் மோகன்.
“எதுக்கு இன்னைக்கு இப்படி எல்லாம் பேசுறீங்க? பாவம் குழந்தைங்க. அவங்களை வற்புறாதீங்க. விஷ்ணு வேற கிரிக்கட் பிராக்டிஸ் இருக்குன்னு சொல்லிட்டு இருந்தான்”, என்றாள் விசாலாட்சி.’
“நீ சும்மா இரு விசாலம். உனக்கு ஒன்னும் தெரியாது. குழந்தைகளை பொத்தி பொத்தி வளக்க கூடாது. என் மூத்த பையனை சுதந்திரமா வளத்ததுனால தான் அவன் நல்ல நிலைமைல இருக்கான். இப்ப காயத்ரியும் பெரிய பொண்ணாகிட்டா. படிச்சு முடிச்ச உடனே கல்யாணம் செஞ்சு வைக்கணும். அப்ப மனுஷங்களை அவளுக்கு புரிஞ்சிக்க தெரியணும். நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு அவளுக்கு கண்டு பிடிக்க தெரிஞ்சிருக்கணும்”
“கல்யாணம் பண்றதுக்கு என்னங்க இப்ப அவசரம்? அப்படியே காயத்ரிக்கு கல்யாணம் பண்ண நினைச்சாலும்  எனக்கு மூணு தம்பிங்க இருக்காங்க. அவங்கள யாருக்காவது கட்டி கொடுத்துட்டா போச்சு”
“வாயை மூடு. என் பிள்ளைங்க கல்யாண விசயத்துல நான் தான் முடிவு எடுப்பேன். உன் கூட பிறந்த தம்பிகளை எல்லாம் நான் மனுசங்க லிஸ்ட்லே வச்சிக்கல. என் பொண்ணுக்கும் ஒரு டேஸ்ட் இருக்கு. அவ மனசு பிரகாரம் தான் நான் மாப்பிள்ளை பாப்பேன். தேவை இல்லாம நீ மூக்கை நுழைச்ச? அப்புறம் நீயும் உன் பிறந்த வீட்டுக்கு போக வேண்டியது தான் விசாலம்”
“இனி காயத்ரி கல்யாணத்தை பத்தி பேச மாட்டேங்க”
“அது. அப்புறம்  விஷ்ணு வேணும்னா அங்க போக வேண்டாம். ஆனா காயத்ரி அவனோட அண்ணண் வீட்டுக்கு போய் தான் ஆகணும். காலேஜ் இப்ப ஸ்டடி லீவ் விட்டுட்டாங்கல்ல? அப்பறம் என்ன? ஷியாமோட பிரண்ட் அவனோட  மனைவி தங்கச்சியை கூட்டிட்டு வந்துருக்கானாம். அவங்க கூட தான் காயத்ரி தங்க போறா.  சாயங்காலம் கிளம்பி இரு. காயத்ரி”, என்று சொல்லி விட்டு எழுந்து கொண்டார் மோகன்.
“அதெல்லாம் முடியாது. நான் போக மாட்டேன் பா. அவன் மூஞ்சுல எல்லாம் எனக்கு முழிக்க கூட புடிக்கல”, என்று காயத்ரி சொன்ன உடனே அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அறைந்தார் மோகன்.
அதிர்ச்சியில் கன்னத்தில் கை வைத்து கொண்டு உறைந்து போய் நின்றாள் காயத்ரி. விசாலத்துக்குமே அதிர்ச்சி தான்.
“சொல்லிகிட்டே இருக்கேன்? மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க. இவ இப்படி எல்லாம் பேசுறதுக்கு நீ தான விசாலம் காரணம்?”, என்று சொல்லி விசாலத்துக்கும் ஒரு அரை கொடுத்தார்.
“ஒழுங்கா பிள்ளையை வளக்க துப்பில்லை. அதான் இப்படி எதிர்த்து பேசுறா. சாயங்காலம் காயத்ரி கிளம்பி இருக்கணும் அவ்வளவு தான்”, என்று சொல்லி விட்டு வெளியே சென்றவர் “இனி என் பிள்ளைங்களை சரியான பாதையில் கொண்டு போயிருவேன்”, என்று நிம்மதியாக எண்ணி கொண்டார்.
“எதுவோ சரி இல்லை. என்னோட கணக்கு தப்பா போக போகுதா”, என்று நினைத்து கலவரமானாள் விசாலாட்சி.
மாலை ஷியாம் வீட்டுக்கு செல்வதற்காக உடைகளை எடுத்து வைக்க சென்ற காயத்ரிக்கு “இந்த அப்பா க்கு என்னவாச்சு? எல்லாம் அந்த அண்ணனால வந்தது”, என்று நினைத்து எரிச்சல் வந்தது.
சூரியன் முகத்தில் அடிப்பது கூட தெரியாமல் இழுத்து மூடி தூங்கி கொண்டிருந்தாள் காவ்யா.
குளித்து முடித்து அவள் எப்போது வெளியே வந்து தரிசனம் கொடுப்பாள்  என்று காத்து கொண்டிருந்தான் ஷியாம் பிரகாஷ். சூர்யா அறையும் பூட்டி இருந்தது.
குளித்து முடித்து ஒரு சுடிதார் அணிந்து கண்ணாடி முன் அமர்ந்து தலையை உலர்த்தி கொண்டிருந்தாள் கலைமதி.
படுக்கையில் படுத்து கொண்டே அவள் அழகை ரசித்து கொண்டிருந்தான் சூர்யா.
அவள் அவனை திரும்பி பார்த்ததும் தூங்குவது போல பாசாங்கு செய்தான். அவன் செய்கையில் சிரிப்புடன் அவன் அருகே நின்று கொண்டு “அத்தான், நீங்க நடிக்கிறதை நான் கண்டு புடிச்சிட்டேனே?”, என்றாள்.
அடுத்த நொடி அவளை இழுத்து படுக்கையில் தள்ளியவன், அவள் மீது கவிழ்ந்து படுத்து கொண்டு அவள் முகம் பார்த்தான்.
“என்ன இது? இப்படி பண்றீங்க? விடுங்க அத்தான்”, என்று சிணுங்கினாள் மதி.
“அதெல்லாம் முடியாது. கொஞ்ச நேரம் கை குள்ள இரு டி”, என்று சொல்லி கொண்டே அவள் முகம் நோக்கி குனிந்தான்.
“ஐயோ ச்சி, பல்லு விளக்கலை, போங்க”
“ஹா ஹா, பல்லு விளக்காம நான் உன்னை கிஸ் பண்ணதே இல்லையா? காதலுக்கும் காமத்துக்கும் சுத்தம்ன்னா என்னன்னே தெரியாது”, என்று சொல்லி கொண்டே அவள் உதடுகளை சிறை செய்தான்.
அவனுடைய இதழ் முத்தத்தில் மூழ்கியவள், அவன் அசந்த நேரம் அவனிடம் இருந்து விடுதலை பெற்று “சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க. அண்ணா எங்கயாவது போகலாம்னு சொன்னாங்க”, என்று புன்னகைத்தவாறே வெளியே சென்று விட்டாள். அவனும் புன்னகையோடு குளிக்க சென்றான்.
வெளியே வந்த மதியின் கண்களில் காவ்யா அறையையே நோட்டம் விட்டு கொண்டு அமர்ந்திருந்த ஷியாம் தான் பட்டான். அவன் கண்களை பார்த்தே அவன் மனது அவளுக்கு பிடி பட்டு போனது. அந்த சந்தோஷத்தில் அவன் முன்னே போய் மதி நின்ற பிறகும் அவன் கவனம் இவள் பக்கம் திரும்பவே இல்லை.
“அண்ணா, இது சரியே இல்லை”, என்று மதி சொன்ன பிறகு தான் சுயநினைவுக்கே வந்தான் ஷியாம். அதுவும் அவள் என்ன கூறினாள் என்று கூட அவனுக்கு தெரியாது.
“நல்லா தூங்குனியா மா?”, என்று நலம் விசாரித்தான்.
“அதெல்லாம் தூங்கினேன். ஆனா நீங்க தான் நைட் புல்லா தூங்காம இப்ப முழிச்சிகிட்டே தூங்கிட்டு இருக்கீங்க போல?”
“ஐயையோ அப்படி எல்லாம் இல்லையே”
“அதை தான் பாத்தேனே. நான் இவ்வளவு நேரம் இங்க தான் நிக்குறேன். நீங்க கண்டுக்கவே இல்லை. நான் பேசுனதை கூட நீங்க கவனிக்கலை”
“சாரி மா, ஏதோ ஒரு நினைப்புல இருந்துட்டேன். சரி, டீ குடிக்கிறியா?”
“நீங்களா போட்டீங்க?”
“இல்லை, வேலைக்கார அம்மா வந்துட்டாங்க”
“அப்படியா சரி? நானே போய் கிச்சன்ல வாங்கிக்கிறேன்”
“ஹ்ம்ம் சரி மதி. அப்புறம் அந்த அம்மா கிட்ட மதியம் சமைக்க வேண்டாம்னு சொல்லிரு. மதியம் எங்கயாவது வெளிய சாப்பிட்டுக்கலாம் சரியா?”
“அண்ணா”
“என்ன மதி?”
“எங்கயாவது சேந்து வெளியே போனா வீட்ல இருந்தே சாப்பாடு கொண்டு போய் எதாவது மரத்தடில உக்காந்து எல்லாரும் சாப்பிடுறது நல்லா இருக்கும். நம்ம நினைச்ச நேரமும் சாப்பிட்டுக்கலாம். அப்படியே செய்வோமா?”
“நல்ல யோசனை தான் மதி. நான் இப்படி குடும்பமா எங்கயும் போனதே இல்லை. அதான் எனக்கு தெரியலை”
“நானும் என் குடும்பத்தோட எங்கயும் போனது இல்ல அண்ணா. இது தான் முதல் முறை, என் அண்ணன் குடும்பத்தோட டூர் போறேன்”
“ஹா ஹா, நான் உன் அண்ணன் தான். ஆனா நான் தான் உன் குடும்பத்துல சேந்துருக்கேன். எனக்கு இன்னும் குடும்பம் இல்லையே”
“யார் சொன்னா? அதான் பொண்ணு எல்லாம் பாத்தாச்சே. இன்னும் ஊருக்கு போய் பொண்ணு வீட்ல  பேசி கல்யாணத்தை செய்றது தான் பாக்கி”, என்று சிரித்தாள் மதி.
“மதி”, என்று அதிர்ச்சியாக அழைத்தான் ஷியாம்.
“ரொம்ப சாக் வேண்டாம் அண்ணா. நான் மதியம் சமைக்க வேலைக்கார அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
“ஐயையோ இப்படி எல்லாரும் கண்டு பிடிக்கிற மாதிரியா நடந்துக்குறோம்”, என்று நினைத்து அசடு வழிந்தவன் மறுபடியும் காவ்யாவின் அறையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
காவ்யா சமையலில் உதவி செய்து விட்டு வெளியே வரும் போது ஷியாமும், சூர்யாவும் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள். காவ்யா மட்டும் வந்த பாடில்லை.
“இவ எப்ப கிளம்பி நாம போக? இருங்க நான் எழுப்பிட்டு வரேன் “, என்று சொல்லி அவள் அறைக்கு சென்ற மதி காவ்யாவின் போர்வையை பிடித்து இழுத்தாள்.
“அம்மா இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு எழுப்பு ப்ளீஸ்”, என்று சிணுங்கலுடன் போர்வையை மூடி கொண்டாள் காவ்யா.
“ஏண்டி, திருநெல்வேலில இருந்து ஊட்டிக்கு தூங்குறதுக்கா வந்த?”, என்று கேட்டாள் கலைமதி.
“என்ன? மதி கனவுல எல்லாம் வாரா?”, என்று நினைத்து கண்களை திறந்த காவ்யாவுக்கு அப்போது தான் எங்கே இருக்கிறோம் என்ற உணர்வே வந்தது.
“ஐயோ சாரி டி, எல்லாரும் கிளம்பிடீங்களா? நான் பத்து நிமிசத்துல வந்துறேன் என்ன?”, என்று சொல்லி விட்டு குளிக்க சென்று விட்டாள்.
தித்திப்பு தொடரும்……

Advertisement