Advertisement

அத்தியாயம் 12
உன் விரல் பிடித்து
நான் நடக்கும்
ஒவ்வொரு நொடியும்
தித்திப்பான தருணங்களே!!!
தங்களுக்குள் மூழ்கி இருந்தவர்களை “என்ன டா  ரெண்டு பேருக்கும்  பசிச்சிருச்சா?”, என்று கேட்டு கொண்டே அங்கு வந்த சூர்யாவின்  குரல் தான் நடப்புக்கு கொண்டு வந்தது.
“ஹ்ம், பசி எல்லாம் இல்லை அண்ணா. சார்  வாங்கிட்டு வந்த சாக்லேட் எல்லாம் வீணாகிருமேன்னு சாப்பிட்டுட்டு இருக்கேன்”, என்றாள் காவ்யா.
“அட பாவி”, என்று வாயை பிளந்தான் ஷியாம். அவனை பார்த்து புன்னகைத்த காவ்யா  கண்களை சிமிட்டி அவனை அதிர்ச்சியில் உறைய வைத்தாள்.
“இவ எப்பவுமே இப்படி தான் அண்ணா. இங்க என்ன நடந்துருக்கும்னு எனக்கு தெரியும். இவ தான் ஏதாவது திங்க கேட்டுருப்பா”, என்று சொல்லி கொண்டே  காவ்யாவின்  தலையில் கொட்டினாள் கலைமதி.
“ஆமா டா. நான் சொன்னேன்ல, சரியான வாலுன்னு? அது இவ தான். என் பிரண்டை  கொடுமை படுத்துனா  அவனை கொன்னுட்டு  ஜெயிலுக்கு போயிருவேன்னு  சொன்ன  ஆளும் இந்த மேடம் தான்”, என்று சிரித்தான் சூர்யா.
“பொண்டாட்டியும் , புருசனும் சேந்து என் காலை வாராம, என் மானத்தை கப்பல் ஏத்தாம ஏதாவது சாப்பாடு வாங்கி தாங்கப்பா. பச்சை புள்ள பசி தாங்காது”, என்று சொன்னாள்  காவ்யா.
அவளை கட்டி கொண்ட மதி “சாரி டி, ரொம்ப நேரமா உன்னை காக்க வச்சிட்டோம்ல?”, என்றாள்.
“ஹா ஹா, நீ சரியான லூசு மதி. இதுக்கெல்லாம் சாரி கேக்குற? எனக்கும், என் ஹஸ்பண்டுக்கும் இப்படி ஒரு சிட்டுவேஷன் கிடைச்சா இந்த நேரத்துல நாங்க ரூமை விட்டு வெளியவே வந்துருக்க மாட்டோம். ஏன் நைட் சாப்பாட்டை கூட  மறந்துருப்போம். நீ என்ன டான்னா கொஞ்ச நேரம் கழிச்சு வந்ததுக்கு சாரி சொல்ற?”, என்றாள்.
 மதியும்  சூர்யாவும்  வெட்கத்துடன்  ஒருவரை  ஒருவர்  பார்த்து  கொண்டார்கள்.
“நான் சொன்னேன்ல சரியான வாலுன்னு? எப்படி பேசுறா பாரு”, என்று புன்னகைத்த சூர்யா “எங்கயாவது வெளிய போகலாம் டா”, என்றான்.
“நானும் அதை தான் டா நினைச்சேன். போய் கார்ல ஏறுங்க. நான் வரேன்”, என்றான் ஷியாம்.
“சரி வாங்க ரெண்டு பேரும்”, என்று சொல்லி விட்டு முன்னே நடந்தான் சூர்யா.
“வா டி போகலாம்”, என்று கலையும் முன்னே நடந்தாள். காவ்யா மட்டும் அதே இடத்தில் நின்று ஷியாமிடம் எதையோ சொல்ல வருவது போல இருந்தாள்.
அவளை பார்த்தவன் “என்கிட்ட நீங்க ஏதாவது சொல்லணுமா?”, என்று கேட்டான்.
“ஹ்ம் ஆமா, நீங்களே ரொம்ப கஸ்ட பட்டவங்க. இப்ப ஹோட்டல்க்கு  போனா எவ்வளவு செலவழியுமோ தெரியலை. அண்ணாவும் நான் கொடுத்தா வாங்கிக்க மாட்டாங்க. கொடுக்கவும் தர்ம சங்கடமா இருக்கும். அதனால?”
“அதனால?”
“இந்த காசை சாப்பாடுக்கு செலவு பண்ணிக்கோங்க”, என்று அவன் கையில் ஒரு  இரண்டாயிர  ரூபாய் தாளை  திணித்தாள்.
அதை புன்னகையுடன்   தன்னுடைய சட்டை பையில் வைத்து கொண்டான். அவனை பார்த்து சிரித்தவாறே வெளியே சென்றாள் காவ்யா.
அவளுடைய ஒவ்வொரு செய்கையையும் ரசித்த ஷியாம் பிரகாஷ் உள்ளே சென்று சுவட்டரை  மாட்டி   கொண்டு பர்ஸ் எடுத்து விட்டு கீழே   வந்தான்.
மதியும், காவ்யாவும் காரின் பின் பக்கம் ஏறி கொள்ள, சூர்யா முன்னே ஏறி கொண்டான். ஷியாம் காரை எடுத்தான்.
ஒரு ரெஸ்ட்டாரெண்ட்  நோக்கி கார் சென்றது. அங்கே சென்றதும் சூர்யா மற்றும் மதி அருகருகே அமர்ந்ததும் அவர்களுக்கு எதிராக மற்ற இருவரும் அருகருகே அமர்ந்தார்கள்.
பிடித்தமான  உணவு  வகைகளை  ஆர்டர்  செய்தார்கள்.  கண்களில் காதல் வழிய சாப்பிட்டு கொண்டிருந்த சூர்யா மற்றும் மதி யை பார்த்த ஷியாம் மெதுவாக காவ்யாவிடம் பேச்சு கொடுத்தான். 
அவன் கேள்விகளுக்கு பதில் கூறினாலும் மதியிடமே பேசி கொண்டிருந்தாள் காவ்யா. மதியோ தன்னவனின் செய்கையில் சிவந்து காவ்யாவிடம் பேச மிகவும் தடுமாறினாள்.
அதை உணர்ந்த ஷியாம் டேபிள்  அடியில் காவ்யாவின் கையை பிடித்தான். என்னவென்று திரும்பி பார்த்தாள் காவ்யா. “அவங்க ரெண்டு பேரோட  கண்ணை பாரு. அவங்களை டிஸ்டர்ப்  பண்ண உனக்கு தோணவே செய்யாது”, என்றான்.
அவன் சொன்ன படி பார்த்து விட்டு இவன் பக்கம் திரும்பியவள் “அட  ஆமா , இதை நான் கவனிக்காம இருந்துட்டேனே? ஆனா இது தான் சாக்குன்னு என் கையை இப்படி பிடிச்சிக்கிட்டா நான் எப்படி சாப்பிடுறதாம்?”, என்றாள்.
“ஹா ஹா, எப்பவும் சாப்பாடு நியாபகம் தான் உனக்கு இருக்குமா?”
“அதை விட வேற முக்கியமான வேலை இந்த உலகத்தில் இருக்கா என்ன?”
அப்படியே பேச்சு ஆரம்பித்து அவளுக்கு பிடிச்ச விசயங்கள் எது? வீடு எங்க இருக்கு? அம்மா, அப்பா என்ன செய்றாங்க? என்று தொடர்ந்து அவளை பற்றிய முழு விவரங்களையும் சேகரித்தான் ஷியாம் பிரகாஷ்.
அவனுக்கு அனைத்து தகவல்களையும் கூறி கொண்டு கண் முன்னால் இருந்த உணவு வகைகளை ஒரு கை பார்த்து கொண்டிருந்தாள் காவ்யா.
மதியோ, “அத்தான் ப்ளீஸ்,    எதுக்கு இங்க வச்சு இப்படி செய்றீங்க?”, என்று சிணுங்களாக கேட்டு  கொண்டிருந்தாள்.
“நான் என்ன டி செஞ்சேன்? கையை மட்டும் தான டி பிடிச்சிருக்கேன்?”, என்றான் சூர்யா.
“பொய் சொல்லாதீங்க அத்தான்”
“பொய்யா? நானா? நான் என்ன சொன்னேன்?”
“நீங்க என் கையை மட்டும் தான் பிடிச்சிட்டு  இருக்கீங்களோ? வர வர நீங்க ரொம்ப மோசம் தெரியுமா?”
“ஏய் செல்ல குட்டி, நீ முன்ன விட தேறிட்ட தெரியுமா? நான் என்ன வித்தியாசமா செஞ்சாலும் கண்டு புடிச்சிற டி”
“நீங்க செர்டிபிகேட்  கொடுக்க இது தான் நேரமா? சும்மா இருங்களேன்”
“அதை தான் சொல்லிட்டேன்ல? கையை மட்டும் தான பிடிச்சிருக்கேன்? அதுக்கெல்லாம்  தடை  சொல்லாத  கலை”
“கையை  மட்டும்  பிடிக்காம, நீங்க என்னவெல்லாம்  செய்றீங்கன்னு சொல்லட்டுமா?”
“எங்க சொல்லு பாப்போம்?”
“கையை பிடிச்சிருக்குற சாக்குல  விரலை வருடி  விட்டுட்டு இருக்கீங்க? எனக்கு கூச்சமா இருக்கு. கையை விடுங்க “
“ஹா ஹா, அதெல்லாம் விட முடியாது. உன் விரலை தொட்டாலே வருடி  விடனும்னு தோணுது  கலை. நான் என்ன டி  செய்ய?”
“சரி காலையாவது நகர்த்தலாம்ல? கால் விரலை வச்சும் இப்படி செய்யணுமா? நைட் ரூம்கு போன அப்புறம் என்ன வேணாலும் செஞ்சிக்கோங்க. இப்ப விட்டுருங்க. ப்ளீஸ் அத்தான்”
“சரி சரி பொழைச்சு போ. ஆனா எனக்கு ஒரு டவுட் கலை. அங்க பாரேன், நம்மளை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு ரெண்டு பேரும்  கடலை போடுறாங்களா? இல்லை சீரியாசவே பேசுறாங்களானு தெரியலை. எப்படி சிரிச்சு பேசிட்டு இருக்காங்க பாரு?”, என்று கேட்டான் சூர்யா.
தன்னுடைய தோழியின் குணம் தெரியுமாதலால் “காவ்யா  வெட்டி கதை தான் பேசுவா. ஆனா அண்ணாவை பாத்தா தான் ஏதோ ஒளிவட்டம் தெரியுற மாதிரியே இருக்கு”, என்றாள் கலைமதி.
“அட ஆமா, இவன் இப்படி எல்லாம் இருக்க மாட்டானே”, என்று சூர்யா  சொன்னதும் இருவரும் சேர்ந்து காவ்யாவையும்  ஷியாமையும் நோட்டம்விட ஆரம்பித்தார்கள்.
சிறிது நேரத்திலே அவர்கள் கவனமும் இவர்கள் பக்கம் திரும்பியது. அதன் பின் நால்வரும் பேசி சிரித்த படியே  சாப்பிட ஆரம்பித்தார்கள்.
சாப்பிட்டு முடித்ததும் வீட்டுக்கே கிளம்பி விட்டார்கள். பின் அங்கும் சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு அவரவர் அறைக்கு சென்று விட்டார்கள்.
அறைக்கு சென்றதும் எல்லை மீறாமல் சின்ன சின்ன சீண்டல்களுடன் மதியை சிவக்க வைத்தான் சூர்யா. இருந்த குளிரிலும், காதலிலும்  அவனுடன் அவளும் ஒண்டி கொண்டாள்.
காவ்யாவோ தூக்கம் வராமல்  சிறிது நேரம் படுக்கையில் புரண்டவள் பின் தூங்கி போனாள். அந்த வீட்டில் தூக்கம் வராமல் முழித்திருந்து  தவித்தது ஷியாம் பிரகாஷ் தான். 
மனதுக்கினியவளை பக்கத்தில் வைத்து கொண்டு சிறு பிள்ளை போல் நடந்து கொள்ளும் அவளிடம் காதலையும் சொல்ல முடியாமல் அவள் பெண்மையில் மனதை அடக்க முடியாமலும் தவித்தான்.
“இவளை பத்தி நினைச்சா பைத்தியமா தான் ஆகணும். எனக்கே பணம் கொடுக்குறா பாரேன்”, என்று நினைத்து கொண்டு அவள் கொடுத்த ரூபாயை கையில் எடுத்து பார்த்து கொண்டான். 
பின் தன்னுடைய போனை எடுத்தான். அதில் பல மிஸ்டு  கால்ஸ் பதிவாகி இருந்தது. யாரென்று எடுத்து பார்த்தான். அது தன் அப்பாவினுடையது என்று தெரிந்ததும் அவனுடைய உற்சாகம் வடிந்தது போல இருந்தது.
“இவரை பேச சொல்லலைன்னு யார் அழுதா? எதுக்கு இத்தனை தடவை போன் பண்ணி அக்கறை இருக்குற மாதிரி சீன போடணும்?”, என்று நினைத்தவன் தன்னுடைய தங்கையை சூர்யா இங்க வார சொன்னது நினைவில் வந்து தன் அப்பாவுக்கு அழைத்தான்.
“ஷியாம்?”, என்று அவர் குரல் பாசமாய் ஒலித்தது. அதில் நெகிழ்ந்தவன் “என்ன சொல்லுங்க”, என்று தன்மையாக தான் கேட்டான்.
“ஏன் பா உன் சித்தி மேல இவ்வளவு கோப படுற? உள்ள வா சாப்பிடுன்னு சொன்னாளாம். நீ அவளை மூஞ்சுல அடிச்ச மாதிரி திட்டி விட்டுட்டு வந்துட்டியாம்? என் பெரிய பிள்ளை என்னை அம்மான்னு ஆசையா கூப்பிட வேண்டாம். சித்தின்னாவது சொல்லி என் கையால ஒரு வாய் சாப்பிடலாம்லன்னு சொல்லி அழுவுறா”, என்று சொல்லி அவனை வெறி ஏத்தினார் மோகன்.
அடுத்த நொடி பொரிந்து தள்ளி விட்டான் ஷியாம். “உங்க ரெண்டாவது பொண்டாட்டி புராணத்தை பாட தான் இத்தனை தடவை கூப்பிட்டிங்களா? நான் கூட என் மேல உள்ள அக்கரைல தான் கூப்பிடுறீங்களோன்னு சந்தேக பட்டுட்டேன். சில ஜென்மங்க எல்லாம் திருந்தவே திருந்தாதுன்னு சொல்லுவாங்க. அதுல நீங்களும் அடக்கம். எனக்கு உயிர் கொடுத்ததுனாலயும், என்னை பெத்த அம்மாவுக்கு புருஷன் அப்படிங்குறதுனாலயும் தான் உங்களுக்கு மரியாதையே கொடுக்குறேன். கண்ட கண்ட கழிசடைகளை பத்தி எல்லாம் என்கிட்ட பேசி உங்க மூஞ்சுல முழிக்காத படி என்னை பேச வச்சிராதீங்க”
“ஏன் பா இப்படி எல்லாம் பேசுற? எனக்கு கஷ்டமா இருக்கு”
“அப்ப நீங்க பண்றது மட்டும் ரொம்ப சந்தோசமா இருக்கா? எங்க அம்மா செத்து போனதுல இருந்து என்னை நம்பிருக்கீங்களா நீங்க? அந்த பொம்பளை சொன்னது தான உங்களுக்கு வேதமாகிட்டு. நான் ஸ்போர்ட்ஸ்ல காலை ஓடிச்சிட்டு வந்தா, அந்த பொம்பளை எவன் கூடவோ சண்டை போட்டு காலை ஓடிச்சிட்டு வந்துருக்கான்னு சொல்லும். என்ன ஏதுன்னு கேக்காம என்னை போட்டு அடிக்க ஆரம்பிச்சீங்க. என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிங்களா? மார்க் கம்மியா வாங்கிட்டான்னு அந்த பொம்பளை அப்படியே சொன்னா அதையும் நம்பி எனக்கு தண்டனை கொடுத்தீங்க. என்னைக்காவது என்னோட ஸ்கூல், காலேஜ்ல இருந்து உங்க பையனோட நடவடிக்கை சரி இல்லை. அவன் சரியா படிக்கலைன்னு உங்க கிட்ட கம்பளைண்ட் பண்ணிருக்காங்களா?”
….
“கேவலம் ஒரு பொம்பளை சொல்றதை நம்புற நீங்க இவ்வளவு பெரிய பிஸ்னஸ்மேனா ஆனது தான் அதிசயம். ஒழுங்கா படிக்காதவனுக்கு  தான் கோல்ட் மெடல் கொடுப்பாங்களா? பாரின்ல வேலை கொடுப்பாங்களா? என்னை பத்தி யோசிக்கிறதுல மட்டும் உங்களுக்கு மூளையா அந்த பொம்பளை செயல் படுவாங்க போல? இப்படி பட்ட அப்பாவை இப்படி பேசாம உங்க காலை கும்பிட்டு என்னை எவ்வளவு வேணாலும் அடிங்கன்னு சொல்லுவாங்களா? ஒரு பிஸ்னஸ் மேனா நீங்க ஜெயிச்சிருக்கலாம். ஆனா ஒரு அப்பாவா நீங்க தோத்து போய்ட்டிங்க? இனி உங்க பாசம் எனக்கு தேவை இல்லை. ஆனா எனக்கு என் தங்கச்சி வாழ்க்கை முக்கியம். அவளுக்கு கல்யாணம்னு பேச்சு வரப்ப கண்டிப்பா அந்த பொம்பளை அவளை ஒரு ஒன்னும் இல்லாதவனுக்கு தான் கட்டி கொடுக்க சொல்லுவா”
….
“ஒரு அப்பாவா இதை மட்டும் கேட்டுக்குறேன். என்னோட கல்யாண வாழ்க்கையை நான் அமைச்சிக்கிறேன். ஆனா எனக்கு என் தங்கச்சி சந்தோசமா இருக்கணும். அவ விஷயத்துலயும் இப்படி அந்த பொம்பளை பேச்சை கேட்டு முடிவு எடுத்தா அதுக்கப்புறம் என்னை நீங்க கொலைகாரனா தான் பாக்கணும். அப்படி அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க முடியலைன்னா அவளை என்கிட்டே அனுப்பிருங்க. நான் நல்ல படியா பாத்துக்குவேன். அவளையும் உங்களை மாதிரியே அந்த பொம்பளை மூளை சலவை பண்ணி வச்சிருக்கா. இத்தனை வயசுல நீங்களே திருந்தாதப்ப அவ சின்ன பொண்ணு. அவ மட்டும் திருந்திருவாளா? அந்த பொம்பளை பேச்சுக்கு தான் ஜால்றா போடுவா. ஆனா அவளை மாத்த எனக்கு தெரியும். எனக்கு இதையாவது செய்ங்க”
“நீ சொல்றதை எல்லாம் என்னால நம்பவும் முடியலை. நம்பாம இருக்கவும் முடியலை. உன் சித்தி இப்படி செய்வாளான்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கு. ஆனா உன் விசயத்துல அவ செஞ்ச தப்பை கண்டு பிடிக்கிறேன் ஷியாம்”
“கண்டு புடிச்சு? கண்டு புடிச்சு என்ன பதவி உயர்வா வாங்க போறீங்க? அடுத்து அந்த பொம்பளை என்ன டிராமா போட்டாலும் அப்படியே நம்பி தொலைய போறீங்க. என்னமும் செய்ங்க. ஆனா என் தங்கச்சி விஷயம்?”
“அவளை நான் பாத்துக்குறேன் பா. இப்பவே யாருக்கும் தெரியாம மூணு பேருக்கும் சொத்தை பிரிச்சு எழுதிறேன். உன் சித்தியை கண்காணிச்சு தண்டிக்கிறேன் ஷியாம்”
“நல்லது. இப்பவும் சொத்து பிரிக்க நான் சம்மதம் எதுக்கு சொல்றேன்னா, அப்படி மூணு பங்கா பிரிச்சா தான் என்னோடதையும் சேத்து என் தங்கச்சிக்கு கொடுக்க முடியும். இல்லைன்னா அவளை நடு ரோட்ல நிக்க வச்சிருவா அந்த பொம்பளை. என்னோட பிரண்ட் அவனோட மனைவியையும் தங்கச்சியையும் கூட்டிட்டு இங்க ஊட்டிக்கு டூர் வந்திருக்கான். முடிஞ்சா என் தங்கச்சியை என் வீட்டுக்கு அனுப்பி வைங்க. இனி நான் அங்க வர மாட்டேன்”
“அவ வர மாட்டேன்னு சொல்லுவாளே பா”
“அது உங்க சாமர்த்தியம். இனிமேலாவது பிள்ளைங்க ஆசையை நிறைவேத்துறீங்களான்னு பாப்போம். எனக்கு என் தங்கச்சி என்கூட இருக்கணும்னு ஆசையா இருக்கு. என் ஆசையை சொல்லிட்டேன்.  அப்பறம் உங்க விருப்பம். நான் வைக்கிறேன்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான் ஷியாம்.
வாழ்கையை பற்றி முதன் முதலில் சரியான கோணத்தில் யோசிக்க தொடங்கினார் மோகன். “விசாலம் என்கிட்டே நடிச்சிருக்காளோ? தொழிலை பாத்துக்கணும்னு ஆசை பட்டு என் பிள்ளைங்களை இழந்துட்டேனோ?”, என்று எண்ணி கவலையாக இருந்தது மோகனுக்கு.
 ஷியாம் சொன்னது போல் அவனை பற்றி விசாலத்தை தவிர வேறு யாரும் குறை சொல்லியது இல்லை. அதை அப்படியே நம்பிய தன் மடத்தனத்தை இப்போது நொந்து கொண்டார்.
அந்த எண்ணத்துடனே கீழே வந்தார். அப்போது விசாலாட்சி மோகனின் முதல் மனைவியின் போட்டோவை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.
“இப்ப எதுக்கு இவ போட்டோவை பாத்துட்டு இருக்கா?”, என்று நினைத்து கொண்டு தூரமாகவே இருந்து வேடிக்கை பார்த்தார்.
அப்போது காயத்ரி அங்கு வந்தாள். அப்போது விசாலம் முகம் இன்னும் சீரியஸாக மாறுவது போல் அவருக்கு தோன்றியது. அது மட்டும் இல்லாமல் விசாலம் கண்களில் கண்ணீரும் வந்திருந்தது.

Advertisement