Advertisement

அதை இன்று கலைமதியிடம் சொல்லி கொண்டிருந்தான் சூர்யா. “அன்னைக்கு அம்மா இப்படி சொன்னப்பறம் உன்னை தேவை இல்லாம டைவர்ட் பண்ண வேண்டாம்னு தோணுச்சு கலை மா. நீ முதல்ல படிச்சு முடிக்கணும்னு நினைச்சேன். அது மட்டும் இல்லாம நானே சிலநேரம் கட்டுப்பாட்டை இழந்துருவேனோன்னு பயமா இருக்கும். அப்படி மட்டும் நடந்துச்சுன்னா எங்க அம்மாவே என்னை செருப்பால அடிப்பாங்க. அவங்களுக்கு நீ நல்ல படிக்கணும்னு ஆசை. அதனால தான் நான் உன்னை முன்னே மாதிரி கிஸ் பண்றது இல்லை. தேவை இல்லாத எதுவும் செய்றது இல்லை. மித்த படி உன்னை பிடிக்காமல்லாம் இல்லை கலை. என் செல்லத்தை எனக்கு பிடிக்காம போகுமா?”, என்று கேட்டு கொண்டே அவள் மூக்கை திருகினான் சூர்யா.
“அத்தை, எவ்வளவு நல்லவங்க? எனக்கு அவங்களை நினைச்சா பெருமையா இருக்கு அத்தான். எனக்காக யோசித்து உங்க கிட்ட பேசிருக்காங்க பாருங்க? அதுல  அவங்க எனக்கு இன்னொரு அம்மான்னு நிரூபிச்சிட்டாங்க”, என்று சொல்லி கண் கலங்கினாள் கலைமதி.
“சிரிச்சிகிட்டே அழுறது நீயா தான் டி இருக்கும். சரி இனிமே ஒழுங்கா படிப்ப தான?”
“கண்டிப்பா அத்தான். சாரி உங்களையும் கஷ்ட படுத்திட்டேன்ல?”
“அதெல்லாம் இல்லை டா குட்டி. நீ படி. அதுக்கு என்கிட்ட என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளு சரியா?”
“ம்ம்”, என்ற படியே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்ட மதி “அத்தைக்காகவாது நல்லா படிக்கணும்”, என்று நினைத்து கொண்டாள்.
அதன் படியே படிக்கவும் செய்தாள். அந்த செமஸ்டர் பரிட்சையும் நன்றாகவே எழுதினாள்.
லீவ் விட்ட பிறகு மங்களத்தின் பின்னேயே வால் பிடித்து கொண்டு திரிந்தாள் கலைமதி. அப்போது மங்களம் தான் தன் மகனை அழைத்து எங்கேயாவது வெளியே அழைத்து செல்ல சொன்னாள்.
அவனும் “சரி மா”, என்று சொல்லி விட்டு எங்கே போகலாம் என்று யோசனையில் ஆழ்ந்தான்.
அதே நேரம் அவனை போனில் அழைத்தான் ஷியாம் பிரகாஷ். இந்தியா நம்பரில் இருந்து அவன் அழைத்ததும் வியப்பான சூர்யா ஆனந்தத்துடன் போனை எடுத்தான்.
“மச்சான், எப்ப டா இங்க வந்த? சொல்லவே இல்லை?”, என்று சந்தோசமாக கேட்டான் சூர்யா.
“இன்னைக்கு மார்னிங் தான் டா வந்தேன். அதான் உன்னை கூப்பிட்டேன். எப்படி இருக்க? மதி எப்படி இருக்கா?”, என்று கேட்டான் ஷியாம் பிரகாஷ்.
“எல்லாரும் நல்லா இருக்கோம். நீ வரியா?”
“ஹ்ம்ம் வரேன் டா. இன்னும் கொஞ்ச நாள் இங்க தான இருக்க போறேன்? முதல்ல வீட்டுக்கு போகணும். அதான்”, என்று இழுத்தான் ஷியாம்.
“அப்ப நேரா நீ வீட்டுக்கு போகலையா?”, என்று ஆச்சர்யமாக கேட்டான் சூர்யா.
“எதுக்கு டா? வந்த அன்னைக்கே அங்க போய் என் நிம்மதியை கெடுத்துக்கணுமா? ஆனா போகாமலும் இருக்க முடியாது. போய் ரெண்டு நாள் இருந்துட்டு இங்க ஊட்டிக்கே வந்துருவேன்”
“ஹ்ம்ம் சரி மச்சான். அப்ப உன் வீட்டுக்கு போயிட்டு எங்க வீட்டுக்கு வந்துறியா?”
“நானா? அது அப்புறம் வரேன் டா. நீ, சிஸ்டர், அம்மா, அப்பா எல்லாரையும் கூட்டிட்டு இங்க வரலாம்ல? இப்ப இங்க நல்ல சீசன் டா. எனக்கும் நேரம் போகும். மதிக்கும் லீவ் விட்டதா சொன்னியே?”
“நானே எங்க போகலாம்னு தான் டா யோசிச்சிட்டு இருந்தேன்”
“அப்புறம் என்ன யோசனை? அதான் நான் வந்துட்டேன்ல மச்சான்? நீ இங்க வா”
“சரி டா. நீ உன் வீட்டுக்கு போய்ட்டு வந்தப்புறம் சொல்லு. நான் இங்க இருந்து கிளம்புறேன்”
“சூப்பர் டா. வர மாட்டேன்னு சொல்லுவியோன்னு நினைச்சேன். உங்கள் வருகைக்காக ஊட்டியும், உன் நண்பன் ஷியாமும் காத்து கொண்டிருப்போம்”, என்று சிரித்து கொண்டே போனை வைத்த ஷியாமுக்கு காவ்யாவின் நினைப்பு வந்தது.
“இந்த தடவை மதி இங்க வரும் போது, காவ்யா பத்தின டீடெயில்ஸ் கேக்கணும்”, என்று நினைத்து கொண்டான்.
அங்கே “அம்மா அம்மா”, என்று கத்தி கொண்டே சென்ற  சூர்யாவோ மங்களம் ” என்ன டா?”, என்று கேட்டதும் ஷியாம் வர சொன்னதை கூறினான்.
“நல்ல விஷயம் தான் சூர்யா. போய்ட்டு வாங்க”, என்றாள் மங்களம். சூர்யாவின் அப்பாவும் அதையே தான் கூறினார்.
“நாங்க மட்டுமா? அவன் உங்களையும் தான் கூப்பிட்டான். நீங்க ரெண்டு பேரும் வாங்க”, என்றான் சூர்யா.
“நாங்க வரலை. ஊர்ல வயல் வேலை இருக்கு. அதை பாக்கணும் பா. எத்தனை நாள் தான்  அடுத்தவங்களையே பாக்க சொல்ல முடியும்? மதியை தனியா விட்டுட்டு எப்படி போகன்னு தான் யோசிச்சோம். நீங்க அங்க பத்து பதினஞ்சு நாள் இருந்துட்டு வந்தா, நானும் உன் அப்பாவும் வயலை பாத்துட்டு வருவோம்”
“ஹ்ம்ம் சரி மா. நான் கலை கிட்ட சொல்றேன்”, என்று அறைக்கு போனான். அங்கே அவனுடைய போனை எடுத்து யாருக்கோ பேசிக்கொண்டிருந்தாள் கலைமதி.
“எனக்கும் தான் டி. சரி போர்”, என்று கலை பேசியதில் இருந்தே அவள் காவ்யாவிடம் தான் பேசுகிறாள் என்று புரிந்து கொண்ட சூர்யாவுக்கு காவ்யாவையும் அழைத்து செல்லலாம் என்ற எண்ணம் உதித்தது.
மதி எதிர்பார்க்காத நேரம் போனை பிடுங்கி தன் காதில் வைத்து கொண்டான். “உன்னோட செல்ல அத்தான் இருந்துமா போர் அடிக்குன்னு சொல்ற? அண்ணா தான் எதாவது குரங்கு சேட்டை செஞ்சு உன் பின்னாடியே வால் பிடிச்சிட்டு திரியுவாங்களே”, என்று அந்த பக்கம் பேசிக்கொண்டிருந்தாள் காவ்யா.
“அப்ப என்னை குரங்குன்னு சொல்லாம சொல்ற?  அப்படி தான காவ்யா? ஆனா உனக்கு தான் நீளமான வால் வளந்திருக்குன்னு எங்க எல்லாருக்குமே உண்மை தெரியுமே”, என்று சிரித்தான் சூர்யா.
அவன் குரலில் அதிர்ச்சியில் விழித்தவள் “ஐயையோ அண்ணா நீங்களா? இதெல்லாம் டூ மச். நாங்க சீக்ரட்டா பேசிட்டு இருக்கும் போது இப்படியெல்லாம்  போனை பிடுங்குனா எப்படி?”, என்று கேட்டாள். அவன் சிரித்ததிலே அவளுடைய பயம் அவளை விட்டு விலகி சென்றிருந்தது. மதியும் அவர்களின் உரையாடலை சிரிப்புடன் கேட்டு கொண்டிருந்தாள்.
“திடிர்னு போனை பிடுங்கியதுனால தான நீங்க என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சது. நான் குரங்கு சேட்டை செய்றேனா? செய்றதெல்லாம் நீ தான்னு உன் அப்பா அடிக்கடி சொல்லிட்டு இருக்காரு”, என்றான் சூர்யா.
“எங்க வீட்டுக்கு ஒரு காபி குடிக்க தான் அடிக்கடி வாறீங்கன்னு நினைச்சேன். இப்ப தான தெரியுது, என்னை பத்தி புறணி பேசன்னு”, என்று சிரித்தாள் காவ்யா.
“ஆமா, இவ பெரிய அப்பா டக்கரு. இவளை பத்தி புறணி பேசிட்டாலும். சரி சரி லீவ் எப்படி போகுது காவ்யா?”
“மொக்கையா போகுது அண்ணா. காலேஜ் வந்தாலாவது, நம்ம மதி வாயை கிளறி உங்க சேட்டையெல்லாம் கேட்டு நேரம் போகும். எங்க எல்லா மேடமும் பாடம் நடத்தியே எங்களை தூங்க வைப்பாங்க. இல்லைன்னா படிக்கிற சாக்குல  புக்கை  தூக்குனா தூக்கம் அப்படியே சொக்கும். இப்ப நேரமும் போக மாட்டிக்கு. தூக்கமும் வர மாட்டிக்கு”
“வாலு, சரி, உனக்கு நேரம் போக ஒரு ஐடியா சொல்லவா?”
“சொல்லுங்கண்ணே சொல்லுங்கண்ணே”, என்று சிரித்தாள் காவ்யா.
“நீ அடங்கவே மாட்ட. சரி நானும் கலையும்  ஊட்டி போறோம். நீ வரியா?”
“என்ன விளையாடுறீங்களா? ஹனிமூன் போற கப்புள்ஸ் கூட நான் எல்லாம் கரடியா வர மாட்டேன் பா”
“நீ கரடின்னு சொன்னது சரி தான். ஆனா நாங்க இப்ப ஹனிமூன் போகல. ஹனிமூன் எல்லாம் என் பொண்டாட்டி படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் தான். இப்ப உன்னால ஒரு காரியமும் ஆக வேண்டி இருக்கு. அதனால நீயும் வர”
“அதானே பாத்தேன். காரியத்தோடு தான் கூப்பிட்டிங்களா?”
“சே சே அப்படி எல்லாம் இல்லை மா. மதி கிட்ட நீ போர் அடிக்குன்னு சொல்லிட்டு இருந்ததை கேட்டேன். அப்ப தான் உன்னையும் கூட்டிட்டு போகலாமான்னு யோசிச்சேன். அப்புறம் தான் அந்த ஐடியாவே தோணுச்சு”
“நான் சும்மா தான் சொன்னேன் அண்ணா. இவ்வளவு விளக்கம் தேவை இல்லை. சரி என்ன காரியம்?”
“நாம இப்ப என்னோட பிரண்ட் வீட்டுக்கு தான் போறோம்”
“நானும் வரேன்னு முடிவே பண்ணிடீங்களா அண்ணா?”
“குறுக்க பேசாத. முழுசா கவனி அவசரக்குடுக்க”
“சே, காவ்யாவுக்கு அவமானம். எங்க அந்த மதி?”, என்று கேட்டாள் காவ்யா.
“இங்க தான் டி இருக்கேன்”, என்று சத்தம் கொடுத்தாள் கலைமதி.
“உன் புருஷனை என்னை திட்ட விட்டு வேடிக்கை பாக்கியா டி மதி? அண்ணன் என்னை அவசரக்குடுக்கைன்னு சொல்றாங்க? நீ என்னனு கேளு மதி”
“என் அத்தான் உண்மையை சொன்னா நான் ஏன் எதுக்குன்னு கேள்வி கேக்க மாட்டேன் பா”, என்று மதி சொல்வதும் “சமத்து டி செல்லம்”, என்று சூர்யா கொஞ்சுவதும் காவ்யாவுக்கு கேட்டது.
“ஒண்ணுகூடிட்டாங்கய்யா, ஒன்னு கூடிட்டாங்க. இனி நான் என்ன சொல்ல? உங்க பிளானை சொல்லுங்க அண்ணா”, என்றாள் காவ்யா.
“அப்படி வா வழிக்கு. அவன் சின்ன வயசுல இருந்தே ரொம்ப கஷ்ட பட்டவன் மா”, என்று ஆரம்பித்தான் சூர்யா.
“கஷ்ட பட்டவர் வீட்டுக்கு போனா நமக்கு எப்படி  அண்ணா சாப்பாடு கிடைக்கும்?”, என்று தன் சந்தேகத்தை முன் வைத்தாள் காவ்யா.
அவளுடைய எதிர் கேள்வியில் கடுப்பான சூர்யா, “ஹ்ம்ம் அவன் வீட்டு வேலை செஞ்சாவது உனக்கு மூணு வேலையும் சாப்பாடு தந்திருவான் சரியா? அதனால உன் சாப்பாட்டு கவலையை விடு”, என்றான்.
“சே, பாவம். ரொம்ப ஏழை போல”, என்று எண்ணி கொண்டு “அப்படின்னா சரி. மித்த கதையை சொல்லுங்க”, என்றாள் காவ்யா.
“அவன் சின்ன வயசா இருக்கும் போதே அவனோட அம்மா இறந்து போய்ட்டாங்க. அவனுக்கு ஒரு தங்கச்சி உண்டு. ரெண்டு பேரையும் வளர்க்க அவனோட அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டாரு. கிட்ட தட்ட மதி கதை மாதிரி தான். ஆனா ஒரு சின்ன வித்தியாசம் அவனோட சின்னம்மாவுக்கு இவனை மட்டும் தான் பிடிக்காது. இவனோட தங்கச்சியை ரொம்ப பிடிக்குமாம். ஆனா அதையும் இவன் நடிப்புன்னு சொல்லுவான். அந்த பொம்பளை இவன் தங்கச்சிகிட்ட இவனை பத்தி தப்பு தப்பா பேசி கொஞ்சம் கொஞ்சமா இவன் கிட்ட இருந்து அவளை பிரிச்சு அது பக்கம் இழுத்துக்கிச்சாம். இப்ப அவனோட தங்கச்சியை பழைய படி பாசமா இருக்குற மாதிரி மாத்தணும்”, என்று முடித்தான் சூர்யா.
“இதுக்கு நான் என்ன அண்ணா செய்ய முடியும்?”
“நீ வந்தேன்னா நானும் கலையும் ஊரை சுத்தி பாப்போம். நீ அவனோட தங்கச்சி கூட ஜாயிண்ட் அடிச்சு அவ மனசை மாத்தி….”
“அட பாவிகளா? உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா? எப்படி எப்படி இவங்க என்ஜாய் பண்ணுவாங்களாம். நான் அவங்க குடும்பத்து அக்கப்போரை பாக்கணுமா?”, என்றாள் காவ்யா.
“வாழ்க்கையிலே இந்த வேலையாவது உருப்படியா செய் தங்கச்சி”, என்று சிரிப்புடன் கூறினான் சூர்யா.
“அண்ணா, அப்ப நான் எந்த வேலையும் உருப்படியா செய்றது இல்லையா?”, என்று சிணுங்கிய காவ்யா “சரி சரி என்னோட அண்ணன் சொன்னதுக்காக வரேன். ஆனா உங்க கூட எங்க அம்மா, அப்பா விட மாட்டாங்களே”, என்றாள்.

Advertisement