Advertisement

“ஆமா காவ்யா மாட்டிகிட்டேன் தான். மொத்தமா மாட்டிகிட்டேன். எல்லாம் போச்சு. இனி என்ன செய்யன்னே தெரியலை”
“சரி கவலை படாத. என்ன நடந்துச்சுன்னு சொல்லு?”
“அன்னைக்கு ஊருக்கு  போகும் போது எப்பவும் போல தான் போனேன். ஆனா போன பிறகு தான் தெரிஞ்சது எங்க சித்தியோட அண்ணன் பையனுக்கு கல்யாணம்னு. அதனால சித்தி அப்புறம் தேன், ரகு எல்லாரும் முந்துன நாளே அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்களாம். நான் வீட்டில் தான் இருந்தேன். அப்புறம் தாத்தா பாட்டி இருந்தாங்க. எங்க அப்பா கூட காலேஜ் பத்தி உன்னை பத்தி எல்லாம் கேட்டாங்க. என் தலையை பாசமா தடவி கொடுத்தாங்க தெரியுமா? எனக்கும் சந்தோசமா இருந்தது. அப்ப தான் அடுத்த நாள் சூர்யாக்கு கல்யாணம்ன்னு அப்பா சொன்னாங்க. நாமளும் போகணும்னு சொன்னாங்க”
…..
“சரி பா நான் காலைல வரேன். அடுத்த தெரு தானேன்னு சொன்னேன் காவ்யா. இன்னைக்கே அங்க போய் என்ன செய்ய போறேன்? அது போக ஆச்சி தாத்தா  வேற இங்க இருக்காங்க. அவங்களை  பாத்துக்குறேன். நீங்க வேணுனா கிளம்புங்கப்பான்னு சொன்னேன்”
…..
“சரி மா ஏழு  மணிக்கு முகூர்த்தம். நான் உன்னை  ஆறு மணிக்கு வந்து கூட்டிட்டு போறேன். அப்படியே  அப்பா அம்மாவைும் கூட்டிட்டு போகணும். நீ  கதவ பூட்டிக்கோ. அவங்களுக்கு  ஏதாவது செஞ்சு கொடுத்துட்டு நீயும் சாப்பிடுன்னு சொல்லிட்டு அப்பா கிளம்பி போய்ட்டாங்க”
….
“அப்பா போன பிறகு ஆச்சி, தாத்தாவுக்கு சாப்பாடு கொடுத்துட்டு, நானும் சாப்டுட்டு படுத்துட்டேன் காவ்யா. காலைல நான் கிளம்பி இருக்கும் போது அப்பா பதட்டமா  வீட்டுக்கு வந்தாங்க. உன்னோட அத்தானுக்கு பாத்துருக்குற பொண்ணு, சரியா கல்யாண நேரத்துல ஓடி போய்ட்டா. உன் அத்தை அழுது புலம்புறா. இன்னும் ஊருக்கு எல்லாம் தெரியாது.  உன்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிரலாம்னு சொந்த காரங்க எல்லாரும் பேசிகிட்டு இருக்காங்கன்னு அப்பா என்கிட்ட சொன்னாங்க காவ்யா”
“அதுக்கு நீ என்ன சொன்ன மதி?”
“அதிர்ச்சியா பாத்துட்டு நின்னேன். நீ என்ன மா சொல்றன்னு கேட்டாங்க. நான் முடியாதுப்பா. நான் எப்படி பா?  முடியாதுன்னு அடிச்சு சொன்னேன். அப்பா மட்டும் தான் இருக்காங்கன்னு நானும் தைரியமா தான் சொன்னேன். அழ கூட செஞ்சிட்டேன். ஆனா அப்பா என் கால்ல விழுந்துட்டாங்க”
“என்ன மதி சொல்ற?”
“ஆமா காவ்யா. அப்பா உன் நல்லதுக்கு  தான் மதி சொல்லுவேன். தயவு செஞ்சு அங்க உன்கிட்ட எல்லாரும் கேப்பாங்க. நீ சரின்னு சொல்லணும். இது என் மேல சத்தியம்ன்னு  சொல்லிட்டாங்க. அதுக்கு மேல என்ன செய்ய சொல்ற? விதின்னு நினைச்சு அவர் கூட போனேன்”
“சரி  அப்புறம் என்ன ஆச்சு?
“அங்க அப்பா கூட்டிட்டு போனாங்க. எல்லாரும் ஏதேதோ பேசுனாங்க. அந்த அத்தை என் கைய பிடிச்சிட்டு கெஞ்சினாங்க. ஆனா சித்தி மட்டும் அவளுக்கு பிடிக்கலைன்னு சொன்னா விட்டுருங்க. கட்டாய படுத்தாதீங்கன்னு சொன்னாங்க. கடைசில அப்பா தான் அவ ஒத்துக்குவா. அவளுக்கு அலங்காரம் பண்ணுங்கன்னு அத்தை கிட்ட சொல்லிட்டாங்க”
“இரு இரு உங்க சித்தி வேண்டாம்ணு சொன்னாங்களா? இருக்காதே எதுக்கு அப்படி சொன்னாங்க?”
“அவங்களுக்கு என் தங்கச்சியை அந்த அத்தானுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கணும்னு எண்ணம் இருந்துருக்கும் போல? அதான் அப்படி சொல்லிட்டாங்க”
“நினைச்சேன். என்ன டா உங்க சித்தி, உனக்கு சப்போர்ட் செய்றாங்களேன்னு. சரி அடுத்து என்ன ஆச்சு?”
“அப்புறம் என்ன? கல்யாணம் முடிஞ்சது”
“மாப்பிள்ளையை தனியா பாத்து பேசி பிடிக்கலைன்னு சொல்லிருக்கலாம்ல?”
“தனியா வா? இப்ப வரைக்கும் நான் அவரை பாத்ததே இல்லை.  எப்படி இருப்பாங்கன்னு கூட தெரியாது”
“என்ன டி சொல்ற?”
“ஆமா காவ்யா. அவங்களையும் கட்டாய படுத்தி தான் சம்மதிக்க வச்சிருப்பாங்க போல? தாலி கட்டிட்டு எழுந்து போய்ட்டாங்க. அப்புறம் நான் வர வரைக்கும் பாக்கலை. யாருக்கும் மனசு நிம்மதியாவே இல்லை. அதனால தான் அந்த அத்தையே நீ எப்பவும் போல காலேஜ்க்கு போ. சாயங்காலம் வீட்டுக்கு வந்துரு. அண்ணனை வர சொல்றேன் ஹாஸ்டல் காலி பண்ணன்னு  அனுப்பி வச்சாங்க”
“உங்க சித்திக்கு அண்ணன் பையன் தான?  முன்னாடியே பாக்கலையா?”
“எங்க பாக்க? தேனை விட நான் அழகா இருக்கேன்னு நினைச்சு என்னை எல்லாம் அந்த அத்தை வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்டாங்க. நான் அவங்களை மயக்கிருவேனாம். அது மட்டும் இல்லாம அவங்க சென்னைல தான் படிச்சாங்க. அப்புறம் வெளிநாட்டுக்கு வேலைக்கு போனாங்க. அங்க சாப்பாடு ஒத்துக்காம மறுபடியும் ஊருக்கு வந்து, இங்க கவர்ன்மென்ட் பரிட்சைக்கு படிச்சு எல். ஐ. சி ல வேலை பாக்காங்க. இங்க திருநெல்வேலில தான் காவ்யா.  ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்காங்க. அத்தை மாமா எல்லாரும் இங்க தான் இருக்காங்களாம். இது எல்லாம் அந்த அத்தை தான் சொன்னாங்க”
“ஓ எங்க வீட்டு கிட்ட தான் எல். ஐ. சி இருக்கு. ஒரு அத்தை குடும்பம் இங்க இருக்குன்னு நீ சொல்லவே இல்லையே”
“எனக்கே தெரியாதே”, என்று சிரித்தாள் மதி.
“உனக்குன்னு ஏண்டி இப்படி நடக்குது? படிச்சு சொந்த கால்ல நின்னு நல்ல  வாழ்க்கை கிடைக்கும்னு நான் நினைச்சிட்டு இருக்கேன். நீ உன் தலைல மண்ணை  அள்ளி போட்டுட்டு வந்துருக்க?”
“அப்ப எனக்கு என்ன செய்யன்னு தெரியலை  டி. எல்லாம் என் விதி படி தான நடக்கும்? விடு”
“சரி  அடுத்து என்ன செய்ய போற?”
“இன்னைக்கு  அப்பா வந்து என்னை கூட்டிட்டு போவாங்க. என் பொருள் எல்லாம் ஹாஸ்டல்ல இருந்து  எடுத்துட்டு போகணும்ல அதான்”
“ஹ்ம் சரி டி மதி. நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன்”
“இவளோட எதிர்காலம் எப்படி இருக்கும்?”, என்று யோசித்த காவ்யா “எப்படியாவது இவளை நல்லா வச்சிக்கோ கடவுளே”, என்று வேண்டி கொண்டிருந்தாள்.
அடுத்து இருவரும் பாடத்தை கவனிக்க, மாலையும் வந்தது. இருவரும் சண்முகத்துக்காக கேட் அருகே காத்திருந்தார்கள்.
“என்ன டி ஆச்சு? மணி அஞ்சு ஆகுது. இன்னும் உங்க அப்பாவ காணும்”, என்று கேட்டாள் காவ்யா.
“வரேன்னு சொன்னாங்க. வந்துருவாங்க. உனக்கு நேரம் ஆகிட்டுன்னா கிளம்பு காவ்யா”
“அதெல்லாம் வேண்டாம். எப்படியும் இன்னைக்கு எப்ப வருவேன்னு தெரியாதுன்னு வீட்ல சொல்லிட்டு தான் வந்தேன். நான் இருக்கேன்”
“அதோ அப்பா வந்துட்டாங்க காவ்யா”, என்று சிரித்தாள் கலைமதி.
அங்கே சண்முகமும், அவருடன் மற்றொரு ஆணும் வந்து கொண்டிருந்தார்கள்.
“இது தான் உங்க அப்பாவா? நான் பாத்தது இல்லை. சரி கூட வரது யாரு டி?”
“எனக்கு தெரியாது காவ்யா. ஹாஸ்டல் காலி பண்ணணும்னு வந்துருக்காங்களோ என்னவோ? ஆனா ரெண்டு பெட்டி தான? எதுக்கு இன்னொரு ஆளை இந்த அப்பா கூட்டிட்டு வந்துருக்காரு?”
“உன்கிட்ட பெட்டி பெட்டியா டிரஸ் இருக்கும்னு நினைச்சாரோ என்னவோ? ஆனா கூட வர ஆள் செமையா இருக்கான் டி”
“சும்மா இரு. பக்கத்துல வந்துட்டாங்க”, என்று அவளை அடக்கினாள் மதி.
“வாங்க  பா, நல்லா இருக்கீங்களா? நான் காவ்யா. மதியோட பிரண்ட்”, என்று சொன்னாள் காவ்யா.
“உன்னை பத்தி மதி சொல்லிருக்கா மா. நான் நல்லா இருக்கேன். அம்மா, அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க?”
“எல்லாரும் நல்லா இருக்காங்க”
“ரொம்ப சந்தோசம் மா. அப்புறம் மதி, கிளம்பலாமா?”
“இல்ல பா. நீங்க வந்து ஒரு கையெழுத்து போடணும். அதுக்கப்புறம் கிளம்பலாம். நான் எல்லாம் எடுத்து வச்சிட்டேன்”
“ஓ அப்படியா? சரி மா வரேன். அப்புறம் இங்க கேன்டீன் எங்க இருக்கு மா?”
“ரெண்டு பில்டிங்  தள்ளி இருக்கு. எதுக்கு பா?”
“தம்பி வேலை முடிஞ்சு வந்த உடனே  கூட்டிட்டு வந்துட்டேன். அதுக்கு பசிக்கும். ஒரு காஃபீ குடிக்க தான் கேட்டேன்”
“கையெழுத்து  போட்டுட்டு போகலாமா பா? ஏன்னா வார்டன்  கொஞ்சம் நேரம் கழிச்சு போனா எதாவது சொல்லுவாங்க. இல்லை, ரொம்ப பசின்னா வாங்க கேன்டீன் போகலாம்”, என்றாள் மதி.
“இல்ல மாமா. நான் இங்கயே இருக்கேன்”, என்றான் அவன்.
“அம்மாடி காவ்யா நீ தம்பியை கேன்டீனுக்கு கூட்டிட்டு போறியா? நாங்க இங்க வேலையை முடிச்சிட்டு அங்க வரோம்”
“சரி பா. நான் கூட்டிட்டு போறேன். வாங்க சார்”, என்று அழைத்தாள் காவ்யா.
காவ்யாவும், அவனும் கேன்டீன் நோக்கி சென்றவுடன், அப்பாவும், மகளும் ஹாஸ்டல் நோக்கி சென்றனர்.
அவன் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தான் காவ்யாவிடம்.
“இது மூணாவது வருஷம் தான? நீங்களும் மதியும் ஒரே கிளாஸ் தானா?”
“ஆமா சார்”
“மதி எப்படி படிப்பா?”
“அவ தான் காலேஜ் பர்ஸ்ட் சார். ஆனா என்ன மார்க் வாங்கி என்ன செய்ய?”
“எதுக்கு அப்படி  சொல்றீங்க?”
“ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லை சார். சும்மா உளறிட்டேன்”
“பரவால்ல சொல்லுங்க. எதை நினைச்சு அப்படி சொன்னீங்க?”
“நீங்க அவளுக்கு சொந்தக்காரங்க. அப்புறம் உங்க கிட்ட சொல்லி, அவளுக்கு எதாவது பிரச்சனை வந்துட்டுன்னா?”
“அதெல்லாம் வராது. நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். எனக்கு தெரிஞ்சா நான் எதாவது உதவி செய்வேன்ல?”
“சரி சார்,  நம்பி சொல்றேன். மனசுக்குள்ளே  வச்சிக்கோங்க சரியா? மதி ரொம்ப பாவம் சார். நல்லா படிப்பா. ரொம்ப திறமை சாலி. ஆனா ரொம்ப மென்மையானவ. அவளுக்கு நல்ல வேலை கிடைச்சு,  நல்ல வாழ்க்கை அமையும்னு  நினைச்சேன். ஆனா இப்ப எல்லாம் போச்சு”
“ஏன் என்ன ஆச்சு?”
“உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் சார் அவளுக்கு கல்யாணம் ஆனது. எவன்னே தெரியாத ஒருத்தனை அவ தலைல கட்டி வச்சிட்டாங்க. ஏற்கனவே இவ்வளவு வருஷம் அவங்க சித்தியால கொடுமை அனுபவிச்சிருக்கா. இப்ப இவன் வேற என்ன செய்ய போறானோ? உங்களுக்கு தெரியுமா சார் அந்த ஆளை பத்தி? அந்த ஆள் அவளை கொடுமை படுத்துவானா? ஆனா அப்படி ஏதும் ஆகட்டும். அவனை கொன்னுட்டு நானே ஜெயிலுக்கு போயிருவேன்”
“ஐயோ கோபத்தை குறைங்க. அப்படி எல்லாம் ஆகாது. இருந்தாலும் உங்க பிரண்ட் மேல இவ்வளவு பாசமா?”
“ஹ்ம்ம் அவ பாவம் சார். கல்யாணம்  பண்ணி  அவன் முகம் கூட தெரியாம இருக்குறது எவ்வளவு கொடுமை?”
“ஓ முகம் கூட தெரியாதா?”
“ஆமா சார். சரி உங்களுக்கு என்ன வேணும்?”
“இல்லை மாமா வந்துரட்டும். சேந்தே சாப்பிடலாம்”
“அப்ப இருங்க. நான் ஒரு போன் பண்ணிட்டு வரேன் சார்”
“இந்தாங்க என்னோட போன்ல இருந்து பண்ணுங்க”
“ஐயோ அதெல்லாம் வேண்டாம் சார்”
“எதுக்கு தயங்குறீங்க? உங்க லவ்வர் கிட்ட பேச போறீங்களா? அதான் என்னோட போன் வேண்டாம்னு சொல்றீங்களா?”
“அட போங்க சார். நீங்க வேற. அப்படி எல்லாம் எனக்கு யாரும் இல்லை. யாராவது  வீட்ல எனக்குன்னு சேத்து வச்சிருக்க நகை, சொத்து  எல்லாத்தையும்  விட்டுட்டு  ஓடி  போவாங்களா? அதனால  வீட்ல பாக்குற  பையன்  தான் மாப்பிள்ளை”
“நல்ல பாலிசி தான், அப்பறம் என்ன இதை வச்சு  பண்ணுங்க”
“சரி”, என்று வாங்கி திலகாவை அழைத்தாள் காவ்யா.
“அம்மா நான் காவ்யா பேசுறேன்?”
“இது யார் நம்பர் காவ்யா?”
“அம்மா, இது மதியோட சொந்தக்காரங்க நம்பர்”
“சரி வீட்டுக்கு கிளம்பலையா?”
“அதை சொல்ல தான் போன் பண்ணேன். இந்த மதிக்கு வீட்ல கல்யாணம் செஞ்சு வச்சிட்டாங்க மா”
“என்னடி  சொல்ற?”, என்று அதிர்ச்சியாக கேட்டார்  திலகா.
“ஆமா மா விவரம் வீட்டில வந்து சொல்றேன். கொஞ்ச நேரத்துல கிளம்பிருவேன். ஹாஸ்டல்  காலி பண்ணனும்  அதான்”
“சரி காவ்யா, அவளை பத்திரமா விட்டுட்டு நீ பத்திரமா மா”
“சரி மா வைக்கிறேன்”, என்று சொல்லி வைத்து விட்டு அவனிடம் “தேங்க்யு சார்”, என்று சொல்லி போனை கொடுத்தாள்.
சிரித்து கொண்டே அதை வாங்கி வைத்தவன், “உங்க பிரண்ட் யாரையும் விரும்புனாங்களா? இந்த கல்யாணம் அவங்க காதல் வாழ்க்கையை கெடுத்துருச்சா?”, என்று கேட்டான்.
“அட நீங்க வேற சார். அவ ஒரு பிள்ளை பூச்சு. அவளுக்கு ஒண்ணுமே தெரியாது. அவளாவது லவ் பண்றதாவது”, என்று சிரித்தாள்.
அப்போது சண்முகமும், கலைமதியும் வந்தார்கள்.
அவர்கள் அருகே இரண்டு சேர் இருந்தது. அவன் பக்கத்தில் உள்ள சேரில் அப்பாவை உக்கார வைத்து விட்டு காவ்யா அருகில் அமர நினைத்து  சண்முகத்தை “உக்காருங்க பா”, என்று சொன்னாள் மதி.
ஆனால் அவர் “மாப்பிள்ளை பக்கத்தில் உக்காரு மா. கல்யாணம் அன்னைக்கு கூட ரொம்ப  நேரம் சேத்து வச்சு பாக்க முடியலை”, என்று சொல்லி கொண்டே காவ்யா அருகில் அமர்ந்து விட்டார்.
அதிர்ச்சியில் விழி விரித்து அவனை பார்த்தாள் மதி. அது போல
தலையில் இடி விழுந்த மாதிரி அமர்ந்திருந்தாள் காவ்யா. இதயமே வெளியே குதித்து விடும் போல இருந்தது காவ்யாவுக்கு. 
“இவன்னு தெரியாம இவன் கிட்டயே என்னவெல்லாம் பேசிட்டேன்”, என்று விழித்தாள்.
அவர்கள் இவருடைய ரியாக்சனை பார்த்து நமட்டு சிரிப்புடன் அமர்ந்திருந்தான்  சூர்யா  என்ற சூர்ய நாராயணன்.
தித்திப்பு தொடரும்……

Advertisement