Advertisement

தித்திக்கும் புது காதலே!!!
அத்தியாயம் 1
உன் இதழ் தீண்டிய
ஒவ்வொரு நீர்த் துளியும்
என்னுள் தித்திப்பாய் இறங்குகிறது!!!
“மணி எட்டரை ஆக போகுது. இவளை இன்னும் காணும்”, என்று நினைத்து கொண்டு அந்த பொறியியல் கல்லூரி மரத்தடியில் அமர்ந்திருந்தாள் காவ்யா.
அப்போது ஹாஸ்டலில் இருந்து கையில் ஒரு நோட்டுடன் ஓடி வந்தாள் கலைமதி.
“எவ்வளவு நேரம் உனக்காக வெயிட் பண்றது? ஊருல இருந்து நீ இன்னும் ஹாஸ்டலுக்கு வரலையோன்னு நினைச்சேன்”, என்றாள் காவ்யா.
“அப்பதே வந்துட்டேன் காவ்யா. எல்லாம் எடுத்து வச்சிட்டு இருந்தேன். அதான் லேட் ஆகிட்டு”, என்று அழகாய் புன்னகைத்தாள் கலைமதி.
“சிரிச்சே மயக்கிருவியே. வீட்ல இருந்து என்ன எடுத்துட்டு வந்துருக்க போற? எடுத்து வைக்க இவ்வளவு நேரம்னு சொல்ற? சாயங்காலம் போய் எடுத்து வைக்கலாம்ல?”
முகத்தில் இருந்த புன்னகை துணி கொண்டு துடைத்து போல மறைந்து போனது கலைமதிக்கு.
“இப்ப காவ்யா கிட்ட எப்படி விசயத்தை சொல்ல?”, என்று விழித்தாள் கலைமதி.
“இப்ப எதுக்கு இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முழிச்சிட்டு இருக்க? சரி வா கிளாஸ்க்கு போவோம்”
“ஹ்ம்ம் சரி காவ்யா”
இருவரும் வகுப்பறையில் அமர்ந்திருந்தார்கள். இப்போது இவர்கள் படிப்பது மூன்றாம் ஆண்டில் இரண்டாவது செமஸ்டர். 
இருவரும் பேசி கொண்டிருக்கும் போது தான் கலைமதி கழுத்தில் இருந்த புது செயின் காவ்யா கண்ணில் பட்டது.
“என்ன மதி இது? புது செயின் மாதிரி இருக்கு?”, என்று கேட்டாள் காவ்யா.
…..
“நீ இது வரைக்கும் தங்கம் போட மாட்டியே”, என்று கேட்டு கொண்டே அவளை பார்த்தவளின் கண்கள் இப்போது முழுவதுமாக மதியை அளவிட்டது. அவள் காதில் கையில் எல்லாவற்றிலும் தங்கம் தான் இருந்தது.
“ஐயோ கேட்டுட்டா. எப்படி ஆரம்பிக்க?”, என்று பயந்து திரு திரு வென்று விழித்தாள் கலைமதி. 
“நான் கேட்டுட்டே இருக்கேன். நீ முழிச்சிட்டு இருக்க? வளையல் கம்மல் எல்லாம் தங்கத்தில் இருக்கு. எதுவும் ஜேக் பாட் அடிச்சிட்டா மதி? உங்க சித்தி தான் இதை எல்லாம் உனக்கு தர மாட்டாங்களே. அவங்க பொண்ணுக்கு தான கொடுப்பாங்க? எல்லாமே புதுசா வேற இருக்கு. உங்க அப்பாவுக்கு, உங்க சித்தியை மீறி எப்படி வாங்கி போட தைரியம் வந்துச்சு?”
….
“ஏய் லூசு நான் கேட்டுட்டே இருக்கேன். நீ எங்க கனவுலகத்துல இருக்க? சொல்லு மதி”
“அது அது வந்து….”, என்று இழுத்தாள் கலைமதி.
“எதுக்கு மதி இப்படி இழுக்குற?”
“ஒன்னும் இல்லை காவ்யா. அது வந்து..”
“சரி கழட்டி தா. மாடல் பாத்துட்டு தரேன்”
“இல்லை கழட்ட கூடாது. இப்படியே வேணா பாரு”, என்று சொல்லி அதை சுடிதாரில் இருந்து வெளியே எடுக்கும் போது, புரொபஸர் வந்து விட்டதால், இவர்கள் பேச்சு தடை பட்டது.
மதியை விசித்திரமாக பார்த்தாள் காவ்யா. 
அந்த வகுப்பு முடிந்த பிறகு, மதியை பார்த்தாள் காவ்யா. அவள் பார்வையை உணர்ந்து சுற்றும் முற்றும் தலையை திருப்பி பார்த்து விட்டு அந்த செயினை வெளியே எடுத்தாள் கலைமதி.
அவள் செய்கையை பார்த்து கொண்டிருந்த காவ்யா “இவ என்ன திருடிட்டு வந்த மாதிரியே ரியாக்சன் கொடுக்குறா”, என்று நினைத்துகொன்டே அவளை பார்த்தாள்.
மதி வெளியே எடுத்த செயினை பார்த்த காவ்யா அடுத்த நொடி “ஐயையோ”, என்று கத்தியே விட்டாள்.
பக்கத்தில் உள்ளவர்கள் திரும்பி பார்க்கும் அபாயம் இருப்பதால், உடனடியாக அந்த செயினை சுடிதாருக்குள் போட்டு விட்டாள் கலைமதி.
அதிர்ச்சியில் சிலை போல் அமர்ந்திருந்தாள் காவ்யா.
“என்ன டி ஆச்சு?”, என்று கேட்டு கொண்டே அவளை உலுக்கினாள் கலைமதி.
“இதை நான் கேக்கணும். உனக்கு என்ன டி ஆச்சு?”
“எனக்கு என்ன?”
“என்ன நக்கலா?  இது என்ன செயின்? சாதாரண செயின் இல்லை. தாலி செயின், இதை எதுக்கு நீ போட்டுருக்க? என்ன நடந்துச்சு?”
“நீ சொல்ற மாதிரி, இது தாலி தான் காவ்யா”
“என்ன டி சொல்ற? நாலு நாள் லீவ்க்கு  தான டி போன? இப்ப கழுத்துல தாலியோட வந்திருக்க?”
“டென்ஷன் ஆகாம பொறுமையா கேளு காவ்யா. நானே அந்த பதட்டத்தில் இருந்து வெளியே வரலை.  அப்புறம் சொல்ல போறதை கேட்டு கோப படாத. எனக்கு உன்னை விட்டா வேற யார் இருக்கா?”
“இந்த கண்ணுல ஒண்ணுக்கு போற வேலையை வச்சிக்கிட்ட கொன்னுருவேன். ஒழுங்கா சொல்லு மதி. எனக்கு இங்க ரத்த அழுத்தம் எகுறுது”
அவள் சொல்வதற்குள் வகுப்புக்கு அடுத்த ஆசிரியர்  வர இவர்கள் பேச்சு தடை பட்டது.  காவ்யாவின் மனதில் பாரம் ஏறி அமர்ந்தது.
“இப்ப இந்த மதி என்ன பிரச்சனைய இழுத்துட்டு வந்துருக்காளோ  தெரியலையே”, என்று நினைத்து கொண்டு கலைமதியை பற்றிய நினைவுகளை மனதில் ஓட்டி பார்த்தாள் காவ்யா.
இவள் கவலையை அறியாமல் பாடத்தை கவனித்து கொண்டிருந்தாள் கலைமதி.
“பிறந்த உடனே அம்மாவை இழந்தவ. குழந்தையை  வளக்க முடியாதுன்னு சொல்லி இவ பாட்டி இவ அப்பாவை  கட்டாய படுத்தி ரெண்டாவது கல்யாணம் செஞ்சு வச்சாங்க. வழக்கம் போல சித்தி கொடுமை. அவளுக்கு பிள்ளை வந்த உடனே மதி ஒதுக்க பட்டவளா அந்த வீட்டில் ஆகிட்டா. வீட்டில யாருக்கும் வேண்டாதவளா மாறி போனா. பொறந்த உடனே  அம்மாவை முழுங்கிட்டான்னு இப்ப வரைக்கும் பேர் வாங்குறவ. இப்ப கழுத்துல தாலியோட வந்துருக்கா?”, என்று மானதுக்குள்ளே புலம்பிய காவ்யாவுக்கு, மதியை முதல் முறை பார்த்த நினைவு எழுந்தது. கல்லூரி துடங்கிய முதல் நாள் தான் அவளைப் பார்த்தாள்.
திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி. அந்த கல்லூரி வளாகமே சிறிது கூட்டமாக தான் இருந்தது.
கல்லூரி முதல் நாள் எல்லா  மாணவர்களையும், தங்கள் அம்மா அல்லது அப்பா விட வந்திருந்தனர். ஆனால் மதி மட்டும் தன்னந்தனியாக அங்கு  வந்து சேர்ந்தாள்.
தன்னிடம் வந்து கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவுக்கு வழி கேட்டவளை காவ்யாவிற்கு உடனே  பிடித்து விட்டது. அப்போது தான் இருவருக்கும் சந்திப்பு. கலைமதி நல்ல அழகு. ஒல்லியான உடல். பொம்மை போல் முகம்.  ஆனால் முகம் மட்டும் களை இழந்து இருந்தது.
“ஏன்  இந்த பொண்ணு இப்படி  இருக்குறா?”, என்று நினைத்தாள் காவ்யா. அவள் உடையை வைத்தே  தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் கஷ்ட படுகின்ற பெண் என்று.
பின் தன்னுடைய ஆராய்ச்சியை நிறுத்தி விட்டு “என்னோடே  பேர்  காவ்யா. நானும் அதே டிபார்ட்மென்ட் தான். இது என்னோட அப்பா,  அம்மா. உன்னோட பேர் என்ன?”, என்று கேட்டாள் காவ்யா.
“என்னோட பேர் கலைமதி. வணக்கம் அப்பா,  வணக்கம் அம்மா”, என்று கை குவித்தாள் மதி.
“உங்க வீட்டில இருந்து யாருமே வரலயா மா?”, என்று கேட்டார் காவ்யாவின் அம்மா திலகா.
“நீ தனியாவா வந்த?”, என்று கேட்டார் சுந்தர்.
“அவங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதான்”, என்று சமாளித்தாள் கலைமதி.
“வீடு எங்க மா இருக்கு?”, என்று கேட்டார் திலகா.
“ஊரு தென்காசி பக்கத்துல ஒரு கிராமம். இங்க இருந்து போக ரெண்டு மணி நேரம் ஆகும். அலைச்சல் தான்னு நினைச்சு ஹாஸ்டல்ல  சேந்துட்டேன்”
“சரி மா, நீங்க ரெண்டு பேரும் ஒரே கிளாஸ் தான? ஒருத்தொருக்கொருத்தர் துணையா இருந்துக்கோங்க. அப்புறம் காவ்யா, நானும் அம்மாவும் கிளம்பட்டுமா? நீங்க ரெண்டு பேரும் கிளாசுக்கு போங்க”, என்றார் சுந்தர்.
“சரிப்பா. அப்புறம் சாயங்காலம் நானே வீட்டுக்கு வந்துருவேன். பக்கத்துல தான? நீங்க கிளம்புங்க”, என்றாள் காவ்யா.
அம்மா அப்பா கிளம்பின பிறகு இருவரும் கிளாஸ் கண்டு பிடித்து உள்ளே சென்று அமர்ந்தார்கள். அதை இன்று நினைத்து பார்த்தாள் காவ்யா. அன்றில் இருந்து இன்று வரை மதிக்கு தோழி காவ்யா மட்டுமே. அவளைப் பார்த்து இத்தனை நாட்களில் தன்னை பற்றி மதி வெளிப்படையாக எதையும் சொல்லியதில்லை. காவ்யாவே எதையாவது கேட்டு கேட்டு தான் அவளைப் பற்றி தெரிந்து கொண்டாள். 
கலைமதியின் அப்பா சண்முகம், ஒரு விவசாயி தான். அவருடைய ரெண்டாவது மனைவி வள்ளிக்கு அதாவது மதியின் சித்திக்கு ரெண்டு பிள்ளைகள். மூத்தவள் தேன்மொழி, அம்மாவின் திமிர் அப்படியே அவளிடம் இருக்கும். அடுத்து சின்னவன் ரகு. அவனுக்கு காவ்யாவை பிடிக்கும். யாரும் இல்லை என்றால் காவ்யாவிடம் ஒட்டி கொள்வான். அவனுடைய அம்மா இருந்தால் கண்டு கொள்ள மாட்டான்.
தாத்தா, பாட்டிக்கும் கலைமதியை பிடிக்காது. வீட்டின் தரித்திரம் என்றே அவளை சொல்லுவார்கள்.
மொத்தத்தில் சாதாரண உரிமை கூட அந்த வீட்டில் அவளுக்கு மறுக்க பட்டது. தாத்தா, பாட்டியுடைய வெறுப்பு, சித்தியின் கொடுமையான சொற்கள், அப்பாவின் பாராமுகம் அனைத்தையும் பழகி கொண்டாள் மதி.
மனதில் எழும் எல்லா உணர்வுகளையும் அடக்க பழகி, தனக்குள்ளே இறுகி போனாள் மதி. அழுகை கூட அவளை விட்டு சென்று விட்டது.
“இது தான் வாழ்க்கைன்னு தெரிஞ்ச பின்னாடி தினமும் எதுக்கு அழனும்?”, என்று நினைத்து அழுவதை கூட வெறுத்தாள் கலைமதி.
நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்றிருந்ததால் தான் அவளுக்கு இந்த காலேஜில் இடம் கிடைத்தது. இல்லை என்றால் இவளை யார் இன்ஜினியரிங் படிக்க வைப்பார்கள்?
ஒரு முறை காவ்யா “எப்படி நீ ஆறுல நாலு சப்ஜெக்ட்ல புல் மார்க் வாங்கியிருக்க?”, என்று மதியிடம் கேட்டாள்.
“அதனால் தான காவ்யா, அந்த வீட்டை  விட்டு நான் இங்க வர முடிஞ்சது. இல்லாட்டி அங்கயே இருந்து செத்துருப்பேன்”
“வீட்டை  விட்டு போறதுக்கு தான் இவ்வளவு கஷ்ட பட்டு  படிச்சியா? சரி டாக்டருக்கு அப்ளை பண்ணிருக்கலாம்ல? உன் மார்க்க்கு கிடைச்சிருக்கும்”
“அது எல்லாம்  படிக்க வைக்க மாட்டாங்க. அப்புறம்  எனக்கு இப்ப காலேஜ் பீஸ் யார் கட்டுறா தெரியுமா? எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு ஃபாதர் இருந்தாரு. அவர் ஒரு டிரஸ்ட்ல சொல்லி அங்க இருந்து நேரடியா காலேஜ்ல கட்டிருவாங்க. அப்புறம் வேற எங்க படிச்சாலும் செலவு ரொம்ப ஆகும். இது தான் பக்கத்து ஊரு அதான்”
…..
“எனக்கு அந்த வீட்டை தவிர வேற  எங்க இருந்தாலும் சந்தோசம் தான் காவ்யா.  அந்த வீட்ல இருக்கவே பிடிக்கலை. ரொம்ப வேலை செய்ய சொல்றாங்க அப்படினு எல்லாம் பிடிக்காம இல்லை.  அதெல்லாம் ஒரு கஷ்டமா? ரொம்ப கஷ்ட படுத்துவாங்க காவ்யா. அதை எல்லாம் சொல்ல கூட முடியாது.
அங்க அவங்களை  பொருத்தவரைக்கும் நான் வேலைக்காரி மட்டும் தான். அப்படி தான் என்னை பாப்பாங்க. அப்படி தான் நடத்துவாங்க. அவங்களுக்கு போக மிச்ச சாப்பாடை தான் எனக்கு  தருவாங்க”
“அது உன்னை பாத்தாலே தெரியுது. நீ கொஞ்சம் சதை போட்டா அழகா இருப்ப டி”
“ஐயோ அழகு எல்லாம் வேண்டாம் பா. இப்படியே இருந்துட்டு போறேன்.  அழகே வேணாம்
“லூசா நீ? எல்லாரும் அழகா இருக்க என்ன எல்லாம் செய்றாங்க? நீ இப்படி சொல்ற”
“நான் இப்படி  இருக்கும் போதே நிறைய பேச்சு  வாங்கிட்டேன் காவ்யா. கொஞ்சம் முகத்துல எண்ணெய் வழியுதுன்னு பவுடர் போட்டாலே எவனை மயக்க இப்படி கிளம்பி போறேன்னு சித்தி கேப்பாங்க”
“ஏய் மதி என்ன டி சொல்ற?”
“ஆமா காவ்யா. நான் எதுவுமே செஞ்சிற கூடாது அவங்களுக்கு. எதுக்கு எடுத்தாலும் திட்டுவாங்க. எனக்கு பரு வந்தா கூட யாரு உன்னை பாக்குறான்னு கேப்பாங்க. இன்னும் நிறைய  இருக்கு காவ்யா. அதுல இருந்து தப்பிக்க தான் இங்க வந்துட்டேன்.  அதுவும் கஷ்ட பட்டு, செலவு இல்லைன்னு சொல்லி  கெஞ்சி கூத்தாடி இங்க வந்து சேந்துருக்கேன்”
“உங்க அப்பா இதெல்லாம் கேக்க மாட்டாரா?”
“சின்ன பிள்ளைல அப்பா முன்னாடி என்னை ரொம்ப கஷ்ட படுத்தமாட்டாங்க. ஆனா அப்புறம் அப்பா முன்னாடி என்னை திட்டுனா கூட அப்பா கண்டுக்க மாட்டாங்க.  முன்னாடியே அவர் என்னை விட்டு விலக ஆரம்பிச்சிட்டாரு. ஒன்னு அவருக்கும் என்னை பிடிக்காம இருக்கணும். இல்லைனா அவர் என்னை பாசமா பாத்துக்கிட்டா சித்தி என்னை இன்னும் கொடுமை படுத்துவாங்கன்னு நினைச்சு அப்படி இருக்கணும். நான் ரெண்டாவது காரணத்தை நினைச்சு மனசை தேத்திக்குவேன்”
“உன் தங்கச்சி என்ன படிக்குறா?”
“அவ  ஒரு  வருஷம்  பெயில். அடுத்து பாஸ்  ஆகி  இப்ப தான் சென்னைல இன்ஜினியரிங் சேத்துருக்காங்க. அதுவும் லட்ச கணக்குல டொனேஷன் கொடுத்து. தம்பி இப்ப தான் லவன்த் படிக்கிறான்”
“ஹாஸ்டல் புடிச்சிருக்கா மதி? எங்க வீட்டுக்கு வேணா வரியா? நான் அப்பா அம்மா கிட்ட பேசுறேன்”
“நீ கேட்டதே போதும் டி. நான் இங்க ரொம்ப சந்தோசமா சுதந்திரமா இருக்கேன். சுட சுட சாப்பாடு, என்னோட படிப்பு, நிம்மதியான தூக்கம்னு இருக்கேன். சாப்பாடு நல்லா இல்லைன்னு நிறைய பிள்ளைங்க சொல்லுவாங்க. ஆனா எனக்கு இது அமிர்தமா தெரியுது காவ்யா. மெஸ் குளோஸ்  பண்ணா தான் வீட்டுக்கு போக வேண்டி இருக்கும். அது தான் கடுப்பா இருக்கும்”
“அப்ப நல்லா சாப்பிட வேண்டியது தான? கொஞ்சம் ஒல்லியா இருக்க?”
“இவ்வளவு நாள் ஒழுங்கான சாப்பாடு இல்லாம குடல் சுருங்கிட்டு  காவ்யா. அதனால ஒரு அளவுக்கு மேல உள்ள போகாது. ஆனா இப்ப கொஞ்சம் நல்லா தான் சாப்பிடுறேன்”
இதை எல்லாம் பேச்சு வாக்கில் தான் காவ்யா மதியிடம் இருந்து கறந்திருந்தாள்.
மூன்று வருடமாக இவர்களின் நட்பு தொடர்ந்து இன்னும் இறுகி போனது. கவர்ன்மென்டில் இருந்து வரும் உதவி தொகையை வீட்டில் சொல்லாமல், தன்னுடைய தேவைக்கே வைத்து கொள்வாள் மதி.
“இதையாவது செய்றயே”, என்று காவ்யா பாராட்டும் போது “வீட்ல யாரும் பணத்துக்கு கஷ்ட படலை காவ்யா. இந்த கொஞ்ச பணம் தான் அவங்களுக்கு உதவ போகுதா? என்கிட்ட இருந்தாலாவது எனக்கு எதாவது வேணும்னா அவங்க கிட்ட கேக்காம இருக்கலாம்ல அதான்”, என்று சொல்லி விடுவாள் மதி.
அந்த பணத்தில் தான் காவ்யாவை அழைத்து கொண்டு உடையே எடுப்பாள் மதி. அப்போதும் அவள் எடுப்பது ஆடம்பரமாக இல்லாவிட்டாலும் அத்தியாவசியமாக இருக்கும்.
“இப்படி எளிமையா வாழக்கூடிய மதி வாழ்க்கையில் அவளுடைய கனவு நிறைவேறி சந்தோசமா இருப்பான்னு நினைச்சேனே.  படிச்சா உடனே இவளுக்கு வேலை கிடைச்சிரும். அப்புறம் இவ வாழ்க்கை  இன்னும் நிம்மதியா இருக்கும்னு அம்மா அப்பா கிட்ட எல்லாம் சொல்லி சந்தோச பட்டேனே. இப்படி மொத்த வாழ்க்கையையும் புரட்டி போடுற மாதிரி கல்யாணத்தை பண்ணிக்கிட்டு வந்துருக்கா. இன்னும் என்ன எல்லாம்  கஷ்ட பட போறாளோ?”, என்று நினைத்து கொண்டு கிளாஸ் முடியும் நேரத்துக்காக காத்திருந்தாள் காவ்யா.
“ஏய் எருமை அதான் சார் போய்ட்டாங்களே. இன்னும் என்ன படிச்சு கிழிச்சிகிட்டு இருக்க? மண்டை காயுது? என்னடி நடந்துச்சு? ரெண்டு நாள் லீவ்ன்னு தான ஊருக்கு போன?”, என்று கேட்டாள் காவ்யா.
….
“உன்னை பத்தி என்னவெல்லாம் கனவு கண்டேன் தெரியுமா டி மதி? இப்படி தாலி கட்டிட்டு வந்துருக்க? இப்படி மாட்டிகிட்டயே”

Advertisement