Advertisement

அத்தியாயம் 8
பௌர்ணமிக்கு இன்னும் இரண்டே நாள் இருக்க, கொடிமலரையும் அழைத்துக் கொண்டு வீரவேலன் காட்டுக் கோவிலுக்கு பூஜைக்காக சென்று கொண்டிருந்தான். 
அவர்களுக்கு துணையாக பணியாளர்கள் பூஜைக்கு தேவையானவற்றை சுமந்துக் கொண்டு முன்னால் நடக்க, கொடிமலர் தனது தோழியுடன் சேர்ந்து  நடந்துக்க கொண்டிருக்க, வீரவேலன் அவர்களை பின் தொடர்ந்துக் கொண்டிருந்தான். 
கொடிமலரோடு மனம் விட்டு பேச வேண்டும் என்று ஆவலாக வந்தவனுக்கு அவள் தன் முகத்தை கூட பாராது, தோழியின் கையை பிடித்துக் கொண்டு நடப்பதை பார்க்கும் பொழுது இந்த திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லையோ என்று முதன் முதலாக தோன்ற ஆரம்பித்தது. 
அண்ணனை கொடிமலருக்கு நிச்சயிர்க்க சென்ற பொழுது, சந்தோசமாக அவள் முகம் இருந்தது போலும், அண்ணன் மறுத்து தன்னை நிச்சயம் செய்த போது அவளின் முகம் கவலையாக இருந்தது போலும் கண்ணில் தோன்ற, காதல் கொண்ட அவன் மனம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. 
ஒருவேளை அன்னை கேட்டதால் மறுக்காமல் சரியென்று தலையை ஆட்டுவித்தாளா? அண்ணனை விரும்பியிருப்பாளோ? எவ்வாறு அவளிடம் கேட்பது? ஆமாம் என்று சொல்லி விட்டால் தாங்குமா என் இதயம்? இல்லை இல்லை நான் எதை பற்றியும் கொடியிடம் கேக்கப் போவதில்லை. அவள் எனக்கானவள். எனக்கு நிச்சயக்கப் பட்டவள்” வீரவேலனின் உள்ளம் குமுற ஆரம்பித்தது. 
அனைவரும் காட்டுக் கோவிலை அடைய பணியாளர்கள் பூஜைக்கு தேவையானதை எடுத்து அடுக்கிக் கொண்டிருக்க, கொடிமலர் தோழியோடு சென்று நீர்வீழ்ச்சியில் குளித்து விட்டு வர, அவர்கள் அறியாமல் அவர்களுக்கு பாதுகாப்பாக நின்ற வீரவேலனும் குளித்து பூஜைக்காக அன்னை கொடுத்து விட்ட ஆடையை அணிந்து வர, பூஜையும் ஆரம்பமானது. 
காட்டுக் கோவிலில் வீற்றிருக்கும் வனதேவதைகளின் அரசிக்கு பூமாலை சூட்டி, கொண்டு வந்த புடவையையும் சாத்தி மஞ்சள் குங்கும திலகமிட்டு, தீபாராதனைக் காட்டி வழிபட்டு தனது வேண்டுதல்களை வைக்கலானாள் கொடிமலர். 
வணங்கியவாறே கொடிமலரை பார்த்த வண்ணம் இருந்தான் வீரவேலன். அவளின் முகமோ நிர்மலமாக இருக்க, அதில் எதையும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. 
வழிபாடு முடிய அதிகாலையாகி இருக்க, விபூதியிட்டு, பிரசாதம் பெற்றுக் கொண்டவர்கள் தங்களது பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர் திரும்ப ஆயத்தமானார்கள். 
இரவு முழுவதும் விழித்திருந்தபடியால் கொடிமலருக்கு கண்கள் சொக்கிக் கொண்டு வரவே ஒரு பெரிய மரத்தின் வெளிப்புற வேர்களுக்கிடையே அமர்ந்து கண்மூடிக் கொள்ள நொடியில் கண்ணயர்ந்து விட்டாள். 
பணியாளர்களை பொருட்களோடு முன்னால் செல்லவென உத்தரவிட்டவன் கொடிமலர் துயில் கலையும் வரை அவள் அருகில் அமர்ந்து  ரோஜா இதழ்கள் போல் சிவந்த அவளுடைய உதடுகள் பிளந்து, சிப்பி இமை மூடி உறங்கும் அழகை ரசித்துக் கொண்டிருக்க, கொடிமலரின் தோழியோ நீர்வீழ்ச்சியில் நீராட சென்றிருந்தாள்.
கண் இமைக்க மறந்து மனதில் உள்ளவளை நேரில் ரசித்துக் கொண்டிருக்க மெதுவாக கண் திறந்தாள் கொடிமலர். தூங்கும் சிலை உயிர் பெற்றது போல் இமைகள் மட்டும் படபடக்க வீரவேலனை பார்த்தவள் மெதுவாக புன்னகைக்க, வீரவேலனின் காதல் மனமோ  உற்றுத் தண்ணீர் போல் நிரம்பி வழிந்தது.
கண்விழித்தவளோ வீரவேலைக் கண்டு திகைத்து விழிக்க, 
“உறங்கிக் கொண்டிருப்பதால் உன்னை எழுப்பவில்லை. பசித்தால் சாப்பிட பழங்கள் வைத்திருக்கிறேன். சாப்பிட்டு விட்டு பயணத்தை தொடரலாம்” வீரவேலன் பேசிக் கொண்டே போக கொடிமலரிடம் பதிலில்லை. 
அவள் தன் பாட்டுக்கு சுற்றும் முற்றும் பார்க்க “உன் தோழி குளிக்க சென்றிருக்கிறாள்” கொடிமலர் தனது தோழியை தான் தேடுகிறாளோ என்று வீரவேலன் சொல்ல அங்கே இருந்த குச்சியை எடுத்து அவனை அடிக்காத துரத்தினாள்  கொடிமலர்.
அவள் அடிக்க முனையவும் அதிர்ச்சியானவன் அவளிடமிருந்து தப்பியவாறே “எதற்கு அடிக்கிறாய் சொல்லி விட்டு அடி” என்றவாறே அவளிடம் சிக்காமலோ கண்ணாமூச்சிக் காட்டிக் கொண்டிருந்தான் வீரவேலன். 
அவனை பிடிக்க முடியாமல் மூச்சு வாங்க நின்றவளோ! “சின்ன வயதிலிருந்தே  நான் உங்களை விரும்புறது உங்களுக்கு தெரியவில்லையா?  உங்கள் அண்ணனுக்கு நிச்சயம் பண்ண வந்தீர்களே! என் மனம் என்ன பாடு படும் என்று சற்று நினைத்துப் பார்த்தீர்களா அத்தான்.  நல்லவேளை என் மனதில் இருப்பதை பெரியத்தானிடம் சொல்லிவிட்டேன். இல்லையென்றால் என் நிலைமை என்னவாகி இருக்கும்? உங்கள் மனதில் நானில்லையா?” கண்ணீர் மல்க வீரவேலனை பார்த்திருக்க 
 தன் மனதில் இருந்த குழப்பத்துக்கெல்லாம் கொடிமலர் மனம் திறந்ததில் விடைக் கிடைக்க, வார்த்தையால் பதில் சொல்லாது அடுத்த கணமே! அவளை அருகில் இழுத்து இதழ்களை சிறைசெய்யலானான் வீரவேலன்.
அந்த காட்டின் ஈரலிப்பில் மனதை மயக்கும் மலர்களின் வாசத்தோடு குளிர்காற்று வீச, பறவைகளும் கீதம் இசைக்க அந்த ரம்யமான பொழுதில் அவர்களை தொந்தரவு செய்ய யாருமில்லாத தருணத்தில்  முத்த சத்தம் கூட ரீங்காரமாக நீண்ட நேரம் ஒலித்தது. 
மனம் மயக்கும் காலைவேளை மனதுக்கு இனியவளின் அணைப்பில் தன்னையே மறந்த நிலையில் வீரவேலன் கொடியின் இதழ் முத்தம் மட்டும் போதாது அவளையே மொத்தமாக எடுத்துக் கொள்ளும் வேகம் அவனிடம் அவனை தடுக்கும் முயற்சியில் கொடிமலர் 
“அத்தான் விடுங்க சுரளி வந்துடுவா” அவனை தடுக்க முடியாமல் திண்டாடியவள் தோழியின் பெயரை சொல்ல அவளை விட்டு விலகி இருந்தான் வீரவேலன். 
கொடிமலர் அவனின் முகம் பார்க்க வெக்கப் பட்டு தலை குனிந்தவாறே நிற்க, 
“உன் மனம் திறக்க நல்ல நேரம் பார்த்திருக்கின்றாய் கொடி”
“உங்கள் மனதில் என்ன இருக்கிறதென்று தெரியவில்லையே! அத்தைக்காகத் தான் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தீரோ?” தலை தாழ்த்தியவாறே அவனின் பதிலை எதிர்பார்த்து நிற்க
 
“இவ்வளவு நேரம் வார்த்தையால் சொல்லாமல் செய்கையால் சொன்னது உனக்கு புரிய வில்லையா? வார்த்தைகளால் தான் சொல்லவேண்டுமோ!” குனிந்திருந்த அவள் முகத்தை தன் ஆறடி உடலை வளைத்து பார்க்க, வெக்கிச் சிவந்தாள் கொடிமலர். 
“எனக்கு உன்னை மட்டும் தான் பிடிக்கும் கொடி. அண்ணனுக்கு நிச்சயிக்க வந்த பொழுது பெரியவர்களை எதிர்த்து பேச முடியாமல் இருந்து விட்டேன். அண்ணன் மனதில் என்ன இருக்கின்றது என்று  தெரியாமல் அவனிடம் பேச அச்சமாக இருந்தது”
“உங்கள் அண்ணன் என்னை விரும்பி இருந்ததால் திருமணம் செய்து கொள் என்று விட்டு விட்டு அமைதி காத்திருப்பீர்” கோபமாக பேச 
“வேறு வழி? அன்னையின் மனம் நோக என்றுமே நான் எதையும் செய்ததில்லை. அது உனக்கும் நன்றாகத் தெரியும்”
“உங்கள் அன்னை சொன்னதற்காகவா என்னை திருமணம் செய்து கொள்கின்கிறீர்கள். இதுவே வேறு பெண்ணை கை காட்டியிருந்தால் பண்ணுவீர்களா?” ஆதங்கமாகவே அவள் குரல் ஒலிக்க 
“அப்படியெல்லாம் கேட்டுவிடாதே! உன்னை தவிர வேறு எந்த ஒரு பெண்ணையும் என்னால் திருமணம் செய்திருக்க முடியாது. காலத்துக்கும் தனியாகத் தான் இருந்திருப்பேன்” 
அந்த ஒரு வார்த்தை கொடிமலரை அசைக்க “கடவுள் இருக்கின்றான். நாம் ஒன்று சேர்த்தான் போகிறோம். திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்க, வேறு எதையும் சிந்திக்க வேண்டாம்” என்றவள் தோழி வருவதைக் கண்டு அவள் அருகில் சென்றாள். 
காலை உணவை முடித்துக் கொண்டு மூவரும் அவ்விடத்தை விட்டு கிளம்ப, நாளை பௌர்ணமி என்பதால் பூஜைக்கு தேவையான மலர்களை பரிக்கவென காட்டுக்குள் வந்த ருத்ரமகாதேவி தூரத்தில் செல்லும் மூவரையும் கண்டு 
“அங்கே செல்வது அவர் போல் இருக்கின்றதே! ஊருக்கு வந்து விட்டாரா? எப்பொழுது வந்திருப்பார்? என்னை காண வரவில்லையே? ஏன்” என்ற சிந்தனையில் விழுந்தாள்
வீரவேலனை தூரத்தில் கண்டு வெற்றிவேலனென தவறாக நினைத்த ருத்ரமகாதேவி அன்றே வீரவேலனிடம் சென்று பேசியிருந்தால் சாபத்துக்கு உள்ளாகி இருக்க மாட்டாள். 
“டேய் எங்கடா என்ன இழுத்துக் கொண்டு போற? விடுடா.. நான் டியூட்டில இருக்கேன்” அன்று போல் காலையிலையே வந்த நிர்மல் அக்ஷயோடு ஓட்டிப் பிறந்தவன் போல் உறவாடியவன் அவனிடம் கேட்டுக் கொண்டு மதியழகியை வெளியே அழைத்துச் செல்ல மதியோ கத்தலானாள். 
“என்னது டியூட்டியா? உனக்கே இது ஓவரா தெரியல? நல்ல திண்டு திண்டு தூங்குற னு அம்மா சொன்னாங்க, நீ டியூட்டி பார்க்கும் லட்சணம் தான் எல்லாருக்கும் தெரியுமே! அந்த பிர்ஜு வேற நல்லா சொன்னான். சும்மா திமிராம வாடி…” அவளின் முடியை பிடித்து இழுத்து வண்டியில் ஏற்றினான் நிர்மல். 
“என்ன சொன்னான் அவன்” மதி பிர்ஜுவின் மேல் எகிறிக் கொண்டு வர 
“முதல்ல வண்டிய எடு போகும் போது சொல்லுறேன்” அவன் இருந்த நாட்டில் வண்டி இடது புறமாக ஓட்ட வேண்டியதால் மதியை வண்டியில் ஏற்றும் அவசரத்தில் ஓட்டுநர் இருக்கையில் ஏற்றி இருந்தான் நிர்மல்.  
அவன் அசடு வழிவதை பார்த்து “பக்” என்று சிரித்தவள் அவனின் தலையை கலைத்தவாறே வண்டியை எடுக்க, எங்கே மதி வர மாட்டாளோ என்ற பதட்டத்தில் இருந்தவன் அவள் வண்டியை எடுக்கவும் “உப்” என்று காற்றை வாயால் வெளியிட்டான் நிர்மல். 
நிர்மலின் துடிப்பும், துரு துரு பேச்சும் அக்ஷையை பெரிதும் கவர்ந்திருக்க, வீட்டுக்கு வர அவனுக்கு தடைவிதிக்க வில்லை. ஆனாலும் அவனின் மெய்ப்பாதுகாப்பாளர்கள் நிர்மலை பரிசோதனைக்கு உட்படுத்தி விட்டே உள்ளே விட்டனர். 
“அக்ஷய் சார் ரொம்ப நல்லவர் இல்ல. கேட்ட உடனே லீவ் கொடுத்துட்டாரு. என்ன ஆளு இல்ல, ஹைட்டு, வெய்ட்டு, கெத்து ஒண்ணுலயும் குறையில்லை. பொறந்தா இப்படி பொறக்கணும். அவரை பத்தி விசாரிச்சதுல சொத்து பல கோடினு சொல்லுறாங்க, அதுவும் இவர் தனியா சம்பாதிச்சதாம்” கடைசி வாக்கியத்தை நிர்மல் குரலை தாழ்த்திச் சொல்ல மதி அமைதியாக வண்டி ஒட்டிக் கொண்டிருந்தாள். 
“இவ்வளவு காசையும் எங்க வச்சிருப்பாரு? ஸ்விஸ் பேங்க்ல போட்டிருப்பாரோ? இல்ல டயமண்டா மாத்தி பத்திரப்படுத்தி இருப்பாரோ?” நிர்மல் தன் பாட்டுக்கு பேச 
“நாட்டுக்கு இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியம்” மதி முணுமுணுக்க 
“மனிசன் வேல பாக்காமலையே சாப்பிட இவ்வளவு சொத்திருக்கும் பொழுது உழைப்பே கதி னு இருக்கிறாரே! இவரல்லவா உழைப்பாளி. எனக்கெல்லாம் இப்படி சொத்து இருந்தா உலகத்துல ஒரு பெரிய தீவை சொந்தமாகவே வாங்கி வாழ்க்கைல எல்லா சுகத்தையும் அனுபவிச்சு இருப்பேன்” 
“கடவுளுக்கு தெரியும் யாருக்கு என்ன கொடுக்கணும் னு” 
“என்ன சொன்ன?”
“என்ன சொத்து இருந்து என்ன பிரயோஜனம்? எச்சி கையால காக்காய் துரத்த மாட்டான். சயரிட்டி னு ஒரு ரூபா கொடுக்க மாட்டான். யாராவது வந்தாலும் துரத்தி அடிப்பானாம். அது மட்டுமில்ல அவனுக்கு பொண்ணுங்கள விட பசங்களைத்தான் பிடிக்குமாம். உன் கிட்ட நெருங்கிப் பழகுறத பார்த்தா கூடிய சீக்கிரம் நீ அவனோட… என்ஜோய்” மதி வேண்டுமென்றே நிர்மலை வெறுப்பேத்த சொல்ல 
“நிஜமாவா?” கண்களில் மிரச்சியோடு நிர்மல். 
அவனின் முகபாவத்தைக் கண்டு வந்த சிரிப்பை கஷ்டப் படுத்தி அடக்கிக் கொண்டாள் மதி.
“ஐயோ அப்போ என் காதல் என்னாகுறது? என்னையும், ஸ்வீட்டியையும் பிரிச்சி விடுவானா?” குழந்தை போல் அழும் நிலைக்கே போய் விட்டவனை கருணையே இல்லாமல் பார்த்து தலையசைத்தாள் மதி. 
நிர்மலின் வண்டியிலும், அலைபேசியில் அவனையறியாமலே ஒட்டுக் கேக்கும் உபகரணத்தை பொருத்தி இருந்த அக்ஷய்க்கு இவர்களின் பேச்சு சிரிப்பை வரவழைக்க, 
“காசு மட்டும் இருந்தா உலகத்துல உள்ள எல்லா சுகத்தையும் அனுபவிக்க முடியும். ஆனா மனம் சந்தோஷமடைய காசு மட்டும் போதாது” பெருமூச்சு விட்டவன் மேலும் மதி சொன்னதில் 
“நான் கொடுக்கலைனு உனக்கு தெரியுமா? விளம்பரம் பண்ண எனக்கு பிடிக்காது” அவள் பேசுவதை ஒட்டு கேட்பது மாத்திரமல்லாது அவைகளுக்கு உடனே பதில் சொல்லவும் பழகி இருந்தான் அக்ஷய். 
“எனக்கு பசங்கள பிடிக்கும் னு முதல்ல இவ தான் புரளியை கிளப்பி இருப்பா போல. இதையே எத்துணை பேர் கிட்ட சொல்லி இருப்பாளோ? இவ இந்த பேச்சு விடவே மாட்டாளா? இவளை… இரு டி உன்ன வச்சிக்கிறேன்” கருவிக்கு கொண்டவன் காபியை அறிந்தியவாறே அவர்கள் மேற்கொண்டு பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.
“இங்கதான் நிறுத்து, நிறுத்து” 
“ஆமா யாராய் பார்க்க என்ன கூட்டிட்டு வந்த?” ஸ்வீட்ட்டி என்ற பெயரை நிர்மல் கூறினாலும் அறியாதது போல் வினவினாள் மதி.
“நான் ஒரு பொண்ண லவ் பண்ணுறேன்னு போன்ல சொன்னேன் இல்ல அந்த பொண்ண பார்க்கத்தான்” குரலில் வெக்கம் கலந்து முகமும் அதைக் காட்டிக் கொடுக்க, 
“அய்ய…. கேவலமா இருக்கு முதல்ல வெக்கப்படுறத நிறுத்து. வா உள்ள போலாம்” அந்த ரெஸ்டூரண்ட்டுக்குள் நுழைந்தனர் இருவரும். 
“எங்கடா உன் ஆளாக் காணோம்?” சுவீட்டியை யாரென்று அறியாமளையே அவ்விடத்தை அலசியவள் சொல்ல 
“அவ வர இன்னும் அரைமணித்தியாலம் இருக்கு” என்றவாறே அமர்ந்துக் கொண்டான் நிர்மல் 
“அப்போ என்ன எதுக்கு எர்லியா கூட்டிட்டு வந்த ஈ ஒட்டவா?” பற்களை கடித்தவாறே அமர்ந்துக் கொண்டாள் மதி. 
குடிக்க குளிர்பானம் வரவழைத்தவன் “கூல் கூல் எதுக்கு டென்ஷனாகுற? ஸ்வீட்டிக்கிட்ட உன்ன பத்தி சொல்லி இருக்கேன். ஆனா உன் கிட்ட அவளை பத்தி சொன்னதில்லல. அதான் ஒரு அரைமணிநேரமா உன் காத பஞ்சர் பண்ணலாம் னு கூட்டிட்டு வந்தேன்” சிரித்தவாறே சொல்ல மதியின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. 
குளிர்பானமும் வந்து சேரவே அதை அறிந்தியவாறு தான் காதலில் விழுந்த தருணத்தை விவரிக்கலானான் நிர்மல்.
“ஸ்கொலசிப் கிடைச்சிதான் அவ அங்க வந்தா. காதலுக்கு மரியாதை படத்துல விஜய்யும் ஷாலினியும் ஒரே புக்க எடுப்பங்கள்ல அதே மாதிரி நானும் அவளும் ஒரே புக்க எடுத்தப்போ தான் அவளை முதன் முதலா பார்த்தேன்” 
“நிறுத்து… இந்த சுட்ட கதையெல்லாம் வேணா விசயத்த மட்டும் சொல்லு” 
“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? முன்ன பின்ன காதலிச்சு இருந்தா தானே! அந்த பீலிங் புரியும். கடைசிவரைக்கும் ஔவையார் மாதிரி கிழவியாகி பாட்டு பாடியே சாகப்போற” முணுமுணுத்தவன் 
“நான் இப்படித்தான் சொல்வேன் பொறுமையா கேளு இல்லனா எந்திரிச்சு ஒடிடு” நிர்மல் தீவிரமான முகபாவத்தோடு சொல்ல 
புருவம் உயர்த்திப் பார்த்த மதி “தேவதாண்டா எனக்கு? வீட்டுல தூங்கிக் கிட்டு இருந்தவளை ஒரு வாளித் தண்ணிய முகத்துலையே ஊத்தி எழுப்பி கூட்டிட்டு வந்ததல்ல நீ இதுவும் சொல்லுவா இதுக்கு மேலையும் சொல்லத்தான் போற, சொல்லித் தொலை” 
   
“கோவிச்சுக்காத அழகி…” அவளின் நாடியை பிடித்து செல்லம் கொஞ்ச அழகி என்று தனது பெயரின் மறுபாதியை சொன்னதும் அடங்கினாள் மதியழகி. 
“விழியில் விழி மோதி இதயக் கதவின்ரு திறந்தே…. டூயட் முடிஞ்சிருச்சு. சொல்லு” 
அவ வேற டிபார்ட்மென்ட் எங்குறதால அடிக்கடி மீட் பண்ண முடியல. இருந்தும் கேன்டீன், லைப்ரரி னு மீட் பண்ணிகிட்ட பொழுது சாதாரணமாக பேசி பழக்க ஆரம்பிச்சேன். அவ கோர்ஸ் முடிஞ்சி இந்தியா திரும்புறதா சொன்னப்போ என் மனசு உடஞ்சிப் போச்சு” 
“எந்த கம் போட்டு ஒட்டின?” 
“கிண்டல் பண்ணாத மதி. பீல் தி லவ்” 
“சரி, சரி சொல்லு” முகத்தை சுருக்கினால் மதி. 
“அவளை ஏர்போட்டுல வழியனுப்ப வந்த நேரம் தான் என் மனசச அவ கிட்ட திறந்தேன்” 
மதிக்கு இந்த மாதிரி பேச்சுக்கள் எல்லாம் புதுசாக இருக்க நிர்மலை வினோதமாக பார்த்தவாறு கிண்டல் சிரிப்போடு அமர்ந்து பொறுமையை இழந்தவாறே கதைக்க கேட்டுக் கொண்டு இருந்தாள். 
அவளின் முகபாவனத்தை கவனத்தில் கொள்ளாமல் தன் பாட்டுக்கு பேசிக் கொண்டு சென்றான் நிர்மல். “அதுக்கு அவ வச்சா பாரு ஒரு வேட்டு” 
“என்ன ஜே ஜே படத்துல வர்ற மாதிரி நோட்டுல எழுதி அது கிடைச்சா சந்திக்கலாம் னு சொன்னாளா?” மதி கடுப்பாக 
“இல்ல இல்ல” மதியின் கோபம் புரியாமல் உடனே மறுத்த நிர்மல் “மூணு வருஷம் கழிச்சு இந்த ரெஸ்டூரண்ட்டுல சந்திக்கலாம் னு சொன்னா.. அதான் நான் இந்தியா வந்தேன்” 
நண்பனின் உள்ளம் நிறைந்த காதலை புரிந்துக் கொள்ளாதவளோ “டேய் நல்லவனே! எவளோ ஒருத்தி உனக்கு ஆப்பு வச்சிருக்கா அத நம்பி நீயும் வந்திருக்க, காதலர்கள் ஒண்ணுசேர இந்த ரெஸ்டாரண்ட் என்ன தாஜ்மகாலா? அவ உன் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகா ஏதோ சொல்லிட்டு போய் இருக்கா அத நீயும் நம்பி வந்திருக்க, உன்ன என்ன செய்யலாம். அவ உன்ன லவ் பண்ணி இருந்தாலோ? இல்ல அவ மனசுல அப்படியொரு எண்ணம் இருந்திருந்தாலோ அத சொல்லி இருப்பால்ல யோசிக்க மாட்டியா? இந்த மூணு வருஷத்துல அவளுக்கு கல்யாணம் கூட ஆகி இருக்கும் னு கூடவா யோசிக்க மாட்ட? அவ சொன்னாளாம் இவரு இலவு காத்த கிளி போல காத்திருந்தாராம். யார் கிட்டு போய் சொல்லுறது? சுவத்துலதான் போய் முட்டிக்கணும். இப்படியா ஏமாளியாக இருப்ப? வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி அவ வந்தப்போவே அவ பின்னாடியே பறந்து வந்திருக்க வேணாம்?” நண்பனின் முட்டாள் தனத்தை எண்ணி மனதில் உள்ள ரணத்தேதியெல்லாம் கொட்டிக் கொண்டிருந்தாள் மதி. 
மதி பேசப் பேச புரியாமல் விழித்தவன் ஏமாந்து விட்டதை ஏற்றுக் கொள்ள முடியாத படி அவனின் மனஉணர்வுகள் சுவீட்டியை நம்பும் படி சொல்ல மதியின் கூற்றை மறுக்கலானான். 
நண்பனுக்கு எவ்வாறு புரியவைப்பதென்று குழப்பத்திலையே அமர்ந்திருந்த மதியின் கண்களில் அந்த ரெஸ்டூரண்ட்டின் மூலையி அமர்ந்திருந்த ஒரு பெண் கண்கள் கலங்கியவாறு நிர்மலை பார்த்திருக்க அவள் தான் சுவீடியோ என்று என்னும் பொழுது அவளின் உருவம் மறைந்தது. 
“ஆவியா அது மாதிரி தெரியலையே!” யோசனையாக இருந்தவளின் காதில்  நண்பனின் பேச்சு எதுவும் விழவில்லை. மாறாக ஹை ஹீல்ஸ் சத்தத்தில் நவநாகரீக உடையில் ஒரு யுவதி நுழையவே நிர்மல் எழுந்து அவளருகில் ஓடியிருந்தான். 
தொடைகள் தெரியுமளவுக்கு குட்டையாக உடலை இறுக்கப் பிடித்த ஆடையணிந்து,ஹை ஹீல்ஸ், கண்ணில் கூலர் உதட்டில் சிவப்பு சாயம் என்று மாற்றவர்கள் தன்னை பார்க்கவெனவே நடந்து வந்தவள் வாயில் சுவிங்கத்தை மென்றவாறே கூலரை கழட்டி அலட்ச்சியமாக ரெஸ்டூரண்ட்டில் உள்ளவர்களை பார்வையிட நிர்மல் அவளருகில் சென்று “ஸ்வீட்டி” என்று அழைத்திருந்தான். 
 சற்றுமுன் ஆவியாக அமர்ந்திருந்த பெண்ணும், இந்த சுவீட்டியும் உருவத்தில் அப்படியொரு ஒற்றுமையை கொண்டிருக்க, இருவரும் இரட்டையர்களா என்ற சந்தேகம் தோன்ற  ஆவியாக அமர்ந்திருந்த பெண்ணும் குர்தி ஜீன்ஸில் இருந்தாலும் முகத்தில் அன்பும், சாந்தமும் இருந்தது ஆனால் இந்த சுவீடியோ ஆணவத்தின் அச்சாணி போல் இருக்கின்றாள்! இதில் நிர்மல் யாரை விரும்பி இருப்பான் என்று மதியோ அவளை அதிர்ச்சியாக பார்த்திருந்தாள். 

Advertisement