Advertisement

அத்தியாயம் 9
நிர்மல் எதுவுமே பேசாமல் வண்டியில் அமர்ந்திருக்க, அவனின் முகமே சொன்னது அவன் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருக்கின்றான் என்று. அவனை தொந்தரவு செய்யாது அமைதியாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த மதியழகி அவனை வீட்டில் விடாமல் தன் வீட்டுக்கே அழைத்து வர 
“ரெண்டு பேரும் நேரங்காலத்தோடு வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா சமைச்சி இருப்பேன். சாப்பிட்டுட்டு ராத்திரி தான் வருவீங்க னு நான் சமைக்கல. காலைல மீதம் இருக்கிறதே எனக்கு போதும் னு இருந்துட்டேன்” முத்துலட்சுமி இவர்களை பார்த்த உடனே சொல்ல 
“நாங்க சாப்பிட்டுடுதான் வந்தோம்” என்ற மதியழகி நிர்மலை அழைத்துக் கொண்டு தனதறைக்குள் புகுந்துக் கொள்ள 
“என்னாச்சு இவளுக்கு? இந்த நிர்மல் பய அமைதியா போறான் ஏதோ சரியில்ல” புலம்பியவாறே உள்ளே சென்றாள் முத்துலட்சுமி. 
மதியழகியின் அறைக்குள் நுழைந்த நிர்மல் அவளைக் கட்டிக் கொண்டு அழ அவளின் அறைக் கதவு தட்டப்படாமலே திறந்து கொள்ள அங்கே அக்ஷய் இரண்டு கைகளிலும், விஸ்கி பாட்டில்களோடு நின்றுக் கொண்டிருந்தான். 
அவனைக் கண்டு மதி “மெர்னர்ஸ் என்றால் என்ன னு தெரியல கதவை தட்டிக் கொண்டு வர தெரியாதா?” என்ற பார்வையை வீச 
அவர்கள் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு நிர்மல் அழுவதும், மதி சமாதானப் படுத்துவதும் கண்ணில் விழுந்தாலும்,  ஒட்டுக் கேட்டதில்  அங்கே நடந்த அனைத்தையும் அறிந்த அக்ஷயோ மதியின் பார்வையை கண்டு கொள்ளாது, உள்ளே வந்து “நிர்மல் சரக்கடிப்போமா?” என்று கேட்க மதி அக்ஷையை முறைக்கலானாள். 
நிர்மல் இருக்கும் நிலைமைக்கு அவனுக்கு அது தேவைப்பட்டது போலும் அக்ஷையின் கையிலிருந்த மதுபான பாட்டிலை பிடுங்கியவன் வாயில் சரிக்கலானான். 
“டேய் குடல் வெந்துடும் டா.. உனக்கு குடிச்சி பழக்கமில்லை” சொல்லியவாறே மதி நிர்மலை தடுக்க முனைய அவளை இழுத்து தன்னோடு சேர்த்தனைத்தான் அக்ஷய் 
அக்ஷயின் அணைப்பில் திமிரிக் கொண்டு நின்றவளோ அவனின் அணைப்பையோ, நெருக்கத்தையோ உணராது அவனிடமிருந்து விலகி நிர்மலை தடுக்கும் முயற்சியில் இருக்க அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான் அக்ஷய். 
அக்ஷய் இவ்வாறு முத்தமிடுவான் என்று எதிர்பார்க்காது அதிர்ச்சியில் உறைந்தவளோ! அவனிடமிருந்து விலக கூட தோன்றாமல் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு அவனையே பார்த்திருக்க, நிர்மல் முழு பாட்டிலையும் குடித்த பின்னே மதியை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தினான்.
தள்ளி விடாத குறையாக மதியை அக்ஷய் விலக்க சுயஉணர்வு வந்தது மட்டுமல்லாது கட்டுக்கடங்காத கோபமும் தலைக்கேற, அக்ஷையை அடிக்க கையோங்கி இருந்தாள் மதியழகி.
“என்னையா பொம்பளைங்கள பிடிக்காத, பசங்க பின்னாடி போறவன்னு சொல்லுற” என்றவாறே அவளின் கையை பிடித்து அவளை ஒரு சுற்று சுற்றி தன் பக்கம் இழுத்து அவளின் இதழில் அழுத்தமாக முத்தமிட்டான் அக்ஷய். 
விலகவும் முடியாமல், விலகத் தோன்றாமல் அவனின் முத்தத்தில் கரைந்துக் கொண்டிருந்தாள் மதியழகி. 
அங்கே நிர்மல் என்ற ஒரு ஜீவன் இருப்பது இருவர் கண்களுக்கும் தெரியவில்லையோ! முத்த யுத்தம் தீவிரமாக அரங்கேற நிர்மல் அமர்ந்தவாக்கில் ஒரு புறம் தலை தொங்கி விழுந்துக் கொண்டிருந்தான். 
கட்டிலில் நிர்மல் தொப்பென்று விழவும் அந்த சத்தத்தில் அக்ஷையும், மதியும் விலகி நிர்மலை பார்க்க அவன் விழுந்திருப்பதைக் கண்டு அவனிடம் ஓடியிருந்தாள் மதியழகி.  
“நத்திங் டு ஒர்ரி அவன் தூங்குறான். விஸ்கில ரெண்டு தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன்” 
நிர்மலின் நிலையில் அவன் தூங்குவதுதான் சரி என்று தோன்ற “தாங்க்ஸ்” என்றவள் யோசனையாக அக்ஷையை ஏறிட்டு “ஆமா எதுக்கு அவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்த” அவளின் போலீஸ் மூளை கேள்வி எழுப்ப 
ஒட்டு கேட்டேன் என்று சொல்லவா முடியும் “நீங்க ரெண்டு பேரும் வரும் போதே கவனிச்சேன். நிர்மல் ரொம்ப அப்சர்ட்டுல இருந்தான். அவன் குணத்துக்கு புலம்பி, ரகள பண்ணுவான் தூங்கி எந்திரிச்சா சரியாகும் னு தோணிருச்சு அதான் விஸ்கில தூக்க மாத்திரை கலந்து கொண்டு வந்தேன். ஆமா என்ன நடந்தது” மதியின் சந்தேகத்தில் தீயை வைத்தவன் எல்லாவற்றையும் ஒட்டு கேட்ட பொழுதும் ஒன்றுமே அறியாதது போல் கேட்க அவனின் முகபாவத்தை படிக்க முடியாமல் தோற்றாள் மதியழகி. 
பாடசாலையில் இருந்த துர்ஆத்மாவை ஒழிக்க அக்ஷையின் உதவி கிட்டியதில் அவனிடம் தன் சந்தேகத்தை சொல்லி உதவி கேட்கலாம் என்று மதியின் உள்மனம் சொன்னாலும் அவன் மீதான வெறுப்பு எதுவும் சொல்ல விடாது “நத்திங்” என்றவள் அறையை விட்டு வெளியேற அவளை பின் தொடர்ந்தான் அக்ஷய். 
“அம்மா நான் வெளில போறேன் வர நைட்டாகும். நிர்மல் தூங்குறான். இப்போதைக்கு எந்திரிக்க மாட்டான். அவன் எந்திரிச்சதும் சாப்பிட அவனுக்கு பிடிச்ச மாதிரி சமைச்சி வை” உத்தரவிட்டவாறே அன்னையின் பதிலையும் எதிர்பார்க்காது வண்டியில் ஏறி இருக்க அக்ஷையும் அவளோடு ஏறிக் கொண்டான். 
“எங்க டி போற? சொல்லிட்டுதான் போயேன்” முத்துலட்சுமி கடிந்தவாறே வாசலுக்கு வர அங்கே அக்ஷையும் வண்டியில் ஏறுவதைக் கண்டு “தம்பியோடதான் போறியா?”
மதியின் கண்களில் அக்ஷயின்  கையில் உள்ள காப்பு பட அதை பற்றி விசாரிக்க இது நேரமில்லை என்று அமைதியானாள்.   
“ஆமா அத்த எனக்கும் சேர்த்தே சமைங்க” என்றவன் மதியழகியை பார்க்க அவளோ அவனை இறங்குமாறு கண்களாளேயே உத்தரவிட்டாள். 
முத்துலட்சுமியை இப்பொழுதெல்லாம் அத்தையென்று சாதாரணமாக அழைத்து விடுவான் அக்ஷய். அதற்கு முக்கிய காரணம் அவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்டதில் மதியை அதட்டும் ஒரே ஜீவன் என்பதால் மாத்திரம் அன்றி அவளின் கைப் பக்குவமும், மதியை அதட்டினாலும் மகளின் மேல் வைத்திருக்கும் அன்பும் தான். தன்னை அதட்டியாவது அன்பு காட்ட அன்னையில்லையே என்ற குறை மனதில் இருக்க, முத்துலட்சுமியை “அம்மா” என்று அழைக்க அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அது அவன் மனதில் மதியழகி குடிவந்ததால் என்பதும் அவனுக்கு நன்றாகவே புரிந்தும் மதியழகியிடம் மனம் திறக்கத்தான் அவனால் முடியவில்லை.
அவன் மதியழகியிடம் மனம் திறக்க சந்தர்ப்பமும் பார்த்திருக்கவில்லை. அவள் மனதில் தன்னை நிலை நிறுத்தி அவள் வாயாலையே “என்னை கல்யாணம் செய்து கொள்” என்று சொல்ல வைக்க வேண்டும் என்பது அவனின் வைராக்கியம். அதனாலயே அவள் கேட்க்காமலையே அவளுக்கு உதவிக் கொண்டிருக்கின்றான். உதவுவதற்காகவே அவளை இருபத்தி நான்கு மணித்தியாலங்களும் கண்காணிக்கின்றான். அவள் வீட்டினுள் சீசீடிவி இல்லையென்று அவள் எண்ணி இருக்க, சிறிய கேமராக்கள் அவள் படுக்கையறை, குளியலறை உட்பட  எல்லா இடங்களிலும் அவள் அறியாமல் அவளை கண்காணிக்க, இதை அறியும் பொழுது அவள் அக்ஷையை கொலை கூட செய்ய தயங்க மாட்டாள் என்பது  உறுதி.
அக்ஷய் வண்டியை விட்டு இறங்காததால் பல்லைக் கடித்தவாறே அந்த ரெஸ்டூரண்ட்டுக்கு வண்டியை செலுத்தினாள் மதியழகி.
வண்டியை நிறுத்தியவள் அக்ஷய் வருகின்றானா என்றும் பாராது உள்ளே சென்று அமர்ந்துக் கொண்டு ஸ்வீட்டி போல் இருந்த ஆத்மாவை தேட அது கண்ணில் தட்டுப் படவில்லை.
அக்ஷையும் அவள் சென்று ஐந்து நிமிடங்கள் கழித்து உள்ளே வந்தவன் மதியழகி அமர்ந்திருப்பதை பார்த்து விட்டு அவளருகில் அமராமல் தனியாக சென்று அமர்ந்துக் கொண்டு குடிக்க காபி ஆடர் பண்ணி விட்டு காபிக்காகவும், தான் பாஸ்கரிடம் ஒப்படைத்த வேலையை செய்து விட்டு வரும் காலுக்காகவும் காத்திருக்கலானான்.
சரியாக பதினைந்து நிமிடங்கள் கடந்து அக்ஷையின் அலைபேசி சிணுங்க காபியை அருந்தியவாறே அழைப்பது பாஸ்கர் என்று புரிய இயக்கி காதில் வைத்தவன் “ஓகே” என்று மாத்திரம் சொல்லிவிட்டு அலைபேசியில் பாஸ்கர் அனுப்பியிருந்த மின்னஞ்சலை பார்வையிடலானான். 
அதில் வந்த செய்தியை படித்தவன் புருவம் சுருக்கியவாறே மதியழகிக்கு ஒரு குறுந்செய்தியை தட்டி விட்டு வெளியேறி வண்டியில் அமர்ந்துக் கொண்டான்.   
அக்ஷய் சென்று சில நொடிகளில் வெளியேறியவள் வண்டியில் அமர அவனுக்கு வந்த மின்னஞ்சலை அவளிடம் காண்பிக்க அதை படிக்கலானாள் மதியழகி. 
அதில் சுவீட்டியை பற்றிய தகவல்களே! இருந்தது. அவள் படித்த பாடசாலையிலிருந்து, அமெரிக்கா சென்றது வரை இருக்க ஆச்சரியமாக அக்ஷையை ஏறிட்டாள் மதி. 
“மேலே படி” என்றவாறு செய்கை செய்தவன் கைகளை மார்ப்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொள்ள அவன் நியாபகத்தில் காலையில் ரெஸ்டூரண்ட்டில் நடந்தது வந்து போனது.  
மதி நிர்மலை அர்ச்சித்துக் கொண்டிருப்பதை கேட்டு புன்னகைத்துக் கொண்டிருந்தவன் நிர்மல் யாரையோ ஸ்வீட்டி என்று அழைக்கவும் கவனமானான்.
“ஹு ஆர் யு” தன்னையே ஆசையாக பார்த்திருந்தவனை அலட்ச்சியமாக பார்த்துக் கேட்டாள் ஸ்வீட்டி.
“ஹேய் ஸ்வீட்டி நான் நிர்மல். அமெரிக்கால சந்திச்சோமே!”
“அதுக்கென்ன இப்போ?”  சுவிங்கத்தை சப்பியவாறே அலட்ச்சியத்தை டான் கணக்கில் குரலில் வைத்துக் கேக்க, இதற்கு மேல் அவளிடம் என்ன சொல்வதென்று முழிக்கலானான் நிர்மல்.
“கேக்குறாங்க இல்ல சொல்லேன். அமெரிக்கால நல்லா உனக்கு கம்பனிக் கொடுத்தா, காதலிச்சா, கல்யாணம் பண்ண வந்திருக்கேன்னு” ஸ்வீட்டியின் அலட்ச்சியம் மதியையின் கோப எல்லையை தாண்ட வைக்க எகிறினாள். 
“வா…..ட்? லவ்வா? இவனையா? அதுவும் நான்? ஆர் யு மேட்? கண்ணில்லாதவ கூட இவனை விரும்ப மாட்டா. என் அழகுக்கும், ஸ்டேட்டஸுக்கும் இவனையெல்லாம் வேலைல கூட வைக்க மாட்டேன். கெட் லாஸ்” கத்தி அந்த இடத்தையையே தன் குரலால் ஆட்டுவித்தாள். 
அவள் போட்ட கூச்சலில் உள்ளே இருந்து வந்த வயதான ஜோடி அவளை சமாதானப் படுத்தி ஒரு கட்டு பணத்தைக் கொடுத்து அனுப்ப உடனடியாக அந்த இடத்தை விட்டு அகன்றாள். 
“மதி இவ என் ஸ்வீட்டியே இல்ல. இவ என் சுவீட்டியே இல்ல” என்று அதிர்ச்சியில் புலம்ப ஆரம்பித்தான் நிர்மல்.
“அவ என் பொண்ணு தான் மா அவ அக்கா இறந்த பிறகுதான் இப்படியாகிட்டா…” அழுதவாறே வயதான பெண்மணி சொல்ல 
“உங்க பொண்ணுங்க ரெண்டு பேரும் இரட்டையர்களா?” மதியழகி தான் பார்த்த ஆத்மா தான் ஸ்வீட்டியாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் கேட்க 

Advertisement