Advertisement

அத்தியாயம் 7
 
“பக்கத்து ஊரில் வசிக்கும் தளபதியின் தம்பிக்கு  திருமணமாம். மணமக்கள் புதிதாக கட்டும் வீட்டி வசிப்பதால் வீட்டுக்கு தேவையான மட்பாண்டங்கள் எல்லாம் செய்து தர சொல்லி மணமகளின் தந்தை சொல்லி விட்டிருக்கிறார்” ஊர் தலைவரிடம் வந்த பக்கத்து ஊர்  நபர் சொல்லிக் கொண்டிருக்க ருத்ரமகாதேவி கல்யாணம் என்றதும் தன்னவனை தானும் கல்யாணம் பண்ணி வாழ முடியுமா என்ற சிந்தனையில் விழுந்தாள். 



“வீரவேலா….” 
 
“சொல்லுங்கள் தந்தையே!”
 
“நீங்கள் இருவரும் இரட்டையர்களாக இருந்தாலும் உன் தமையன் உன்னைவிட சில நிமிடங்கள் மூத்தவன். அவன் திருமணம் தான் முதலில் நடக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் அவனோ! தளபதியாக பதவி வகிப்பதால் நாட்டோட பாதுகாப்புதான் முக்கியம் என்று விட்டான். உன் அன்னையும் அடிக்கடி நோய் வாய்ப்படுகிறாள் என்றுதான் உன்னை திருமணம் செய்துகொள் என்றேன். ஆனால் உன் அன்னை உன்னை தனிக் குடித்தனம் போக சொல்கிறாளே! என்ன செய்வது?” 
 
“அன்னையின் சொல்லை நான் என்றும் மீறியதே இல்லையே!” வீரவேலனும் தந்தையின் முகத்தையே பார்க்க உள்ளிருந்து அன்னையின் குரல் கேட்க உள்ளே விரைந்தான் வீரவேலன். 


“வீரா….திருமணத்திற்கு முன் நீயும் கொடிமலரும் காட்டுக்கு கோவிலுக்கு சென்று பூஜை செய்து விட்டு வா” 
 
“காட்டு கோவிலுக்கு இரவில் தானே செல்ல வேண்டும். திருமணத்திற்கு முன்பு கொடிமலரை அழைத்து செல்வது சரியா?” 
 
“அண்ணனிடம் நான்  பேசுகிறேன்” தனது மகனின் முகத்தை வாஞ்சையாக தடவியவாறே சொல்ல சம்மதமாக தலையசைத்தான் வீரவேலன். 


“உன் திருமணத்தை காண உன் அண்ணன் வருவானா?” 


“சேதி சொல்லி அனுப்பி விட்டேன் தாயே! கிடைத்த உடன் வருவான்.  காட்டு கோவிலுக்கு என்று செல்ல வேண்டும்” 


“அந்த பையில் கொடிமலருக்கு துணி வாங்கி வைத்திருக்கின்றேன். போய் கொடுத்து விட்டு அவளை பூஜைக்கு தயாராகும் படி சொல்லு” 
 
“சரி அன்னையே!” என்றவன் பையையும் எடுத்துக் கொண்டு தன்னவளைக் காண சென்றான். 
 
வீரவேலனும், வெற்றிவேலனும் உருவத்தில் ஒற்றுமையாக  இருந்தாலும் குணத்தில் மாறுபட்டவர்களாக இருக்க வெற்றிவேலன் வீரத்தில் சிறந்தவனாகவும், வீரவேலன் விவேகத்தில் சிறந்தவனாகவும் விளங்கினார்.   
 
சிறுவயதில்லையே யுத்தகாலாவில் பங்கேற்ற வெற்றிவேலன்  அரச பணியில் அமர்ந்து நுண்ணிய போர்முறைகளை கையாண்டு இளவரசனின் நண்பனாக மாற இன்று தளபதியாக பதவி வகிக்கின்றான். வீரவேலனோ அன்னையின் மீது அதிக அன்புடையவன் இரு புத்திரர்களின் ஒருவன் நாட்டுக்காகவும் மற்றவன் வீட்டுக்காகவும் போதும் என்று நினைத்து அன்னையை விட்டு பிரியாது கலைகளை கற்றுக் கொண்டாலும் விவசாயமும், பிராணிகள் வளர்ப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.
 
மாமன் மகளின் மேல் சிறுவயதில்லையே ஆசையை வளர்த்துக் கொள்ள வீட்டில் வெற்றிவேலனுக்கு கொடிமலரை நிச்சயிக்கும் சமயத்தில் வெற்றிவேலன் மறுப்பு தெரிவிக்க வீரவேலனுக்கு நிச்சயிக்கப் பட்டாள் கொடிமலர்.  
 
தனது மனதில் உள்ள ஆசையை கொடிமலரிடம் வெளிப்படையாக சொல்ல சந்தர்ப்பம் அமையாமல் காத்திருந்த வீரவேலனோ காட்டு கோவிலுக்கு செல்லும் நாளில் தன் மனதை கொடிமலரிடம் திறக்க ஆசைகொண்டான்.
**********************************************************


மெதுவாக கண்விழித்த மதியழகிக்கு தலை பாரமாக கணக்க மீண்டும் கண்ணை மூடிக்கொள்ள அன்னையின் வசைப் பாடல்கள் தெளிவாக காதில் விழுந்தது.  
 
“பொண்ணா அடக்க ஒடுக்கமா வீட்டுல இருக்காம, ராத்திரில என்ன டியூட்டி வேண்டி கிடக்கு. எப்போ பார்த்தாலும் பாண்ட் ஷர்ட்டுல துப்பாக்கியையும் இடுப்புல சொருகிக்கிட்டு குதுரவால் போல முடியையும் தூக்கி கட்டிக்கிட்டு தரையிலையே கால் படாம குதிச்சு குதிச்சு போக வேண்டியது. நேரங் கெட்ட நேரத்துல வீட்டுக்கு வரா. கொஞ்சம் நாள் ஒழுங்கா இருக்கிறாளே னு நிம்மதியா இருக்க விடுறாளா?
 
சின்ன வயசுல சீயக்கா, கருவேப்பிலை. வெந்தயம், மருதாணி, செவ்விளநீர்ல செஞ்ச எண்ணெய், இன்னும் என்னெல்லாமோ போட்டு தலைக்கு பூச எண்ணெய்  செஞ்சு, நானே என் கையாள பூசி விட்டு. ரெட்டை ஜடையை இறுக பின்னி கூந்தல் முடிய நாலடிக்கு வளர்த்து விட்டா ஒண்ணுக்கும் உதவாத போலீஸ் வேலைக்காக நான் ஆசையாசையா, பார்த்து பார்த்து வளர்த்த முடிய வெட்டிட்டா. இவ இப்படியே சுத்திக்கு கிட்டு இருந்தா யார் இவள கல்யாணம் பண்ணிப்பா? நான் எப்படி நிம்மதியா கண்ண மூடுறது? எல்லாம் இவளோட அப்பாவை சொல்லணும். சின்ன வயசுல செல்லம் கொடுத்து கொடுத்தே கெடுத்து குட்டிசுவராக்கிட்டு நிம்மதியா மேல போய் சேர்ந்துட்டாரு. நான் இங்க தனியா புலம்பிக்கிட்டு நிக்குறேன்” அரைமணித்தியாலத்துக்கு மேலாக வீட்டு வேலைகளை செய்தவாறே புலம்பித தள்ளிக் கொண்டிருந்தாள் முத்து லட்சுமி. 
 
பாதி விழித்திருந்த மதியழகிக்கு அன்னையின் புலம்பல்கள் காதில் விழுந்தாலும், வழமையான புலம்பல் என்பதால் கண்ணை இறுக மூடிக்கொள்ள நேற்று பாடசாலையில் கண்ட கோர முகம் கண்ணுக்குள் வரவே பட்டென்று கண்ணை திறந்தவள் தான் வீட்டில் இருப்பதை உணரவே மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள். 
 
இத்தனை வருடங்களாக எத்தனையோ அநீதி இழைக்கப் பட்டு இறந்தவர்களின் ஆவிகளை சந்தித்து உதவி செய்திருக்கின்றாள். கொடூரமாக கொல்லப்பட்டவர்களின் முகங்களும், சாலை விபத்தில் இறந்தவர்களின்  முகங்களும் கோரமாக இருக்க பல தடவை  அஞ்சி நடுநடுங்கி போய் இருக்கின்றாள். 
 
என்னதான் , நாட்டுக்காகவும், ஒரு உயிரை காப்பாற்றவும் உயிர் துறக்க தயாராக இருக்கும்  போலீஸ் என்றாலும் இறந்தவர்களோடு போராட அசாத்தியமான மனதைரியம் வேண்டும். 
 
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை பெண்களுக்கேயான குணங்களாக இருக்க, மனிதர்களை கண்டு அஞ்சாதவள் ஆவிகளை கண்டாவது பெண் என்று உணர வேண்டாமா?  ஆனால் அவளின் அச்சத்தின் உச்சமாக இருப்பவர்கள் துர்ஆத்மாக்கள்  என்றால் மிகையில்லை. 
 
மனதில் பயம் என்பது ஆட்கொண்டாலும் துர்ஆத்மாக்களோடு மோதுவது தனது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்று அறிந்திருந்தாலும் மதியழகி துர்ஆத்மாக்களால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் நடக்காது காக்கவென களத்தில் இறங்குவாள். மதியழகிக்கு ஆபத்தென்றால் அவளைக் காக்க அழைத்த உடன் வர ருத்ரமகாதேவி இருக்க இன்னும் என்ன தயக்கம்? 
 
அப்படித்தான் பாடசாலையின் கழிவறையில் இருக்கும் துர்ஆத்மாவை சந்தித்து, துவசம் செய்ய புறப்பட்டாள். 
 
ஆனால் அந்த துர்ஆத்மா யாரென்று அறியாமல் செல்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று அறிந்திருந்தவளோ! நிர்மல் பாடசாலை மாணவர்களோடு கிரிக்கட் விளையாடும் பொழுது மாணவிகளிடம் கழிவறையில் ஏதாவது வித்தியாசமாக உணர்ந்தார்களா என்று விசாரிக்கலானாள். 
 
அவர்களை பயமுறுத்தாமல் வேடிக்கையாக பேசுவது போல் பேசி அவளின் அனுபவங்களை பகிர்ந்து அவர்களிடமிருந்து சில தகவல்களையும் பெற்றுக் கொண்டாள். 
 
அதன் படி ஐந்து வருடங்களுக்கு முன் அப்பாடசாலையில் பணிபுரிந்த கணித ஆசிரியர் ஒருவர் பெண்கள் கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகவும். பெண்கள் கழிவறையில் அவருக்கு என்ன வேலை? அவர் எதற்கு அங்கு சென்றார் என்பது இன்றுவரை  மர்மமாகவே இருந்துக் கொண்டு இருக்கிறது என்பதே மதியழகி திரட்டிய தகவல்கள்.  


ஆனால் அவர் துர்ஆத்மாவாக அலைவதற்கு  காரணம் அவருடைய தீய எண்ணங்களே! என்பதை உடனே புரிந்துக் கொண்டாள் மதி. அவர் இறக்கும் பொழுது புடவை அணிந்திருந்ததாகவும், அவர் இறந்த பின் பாடசாலையில் இருந்து ஒரு மாணவி நீண்ட நாள் விடுப்பிலிருந்து  விலகிச்சென்றதாகவும் சொல்லப் பட அந்த கணக்கு வாத்தியாரின் மரணத்துக்கு அந்த பெண்ணுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ! என்று யோசிக்கலானாள்.
 
அந்த மாணவியை தேடி கண்டு பிடித்து விசாரிக்கையில் காலம் கடந்து துர்ஆத்மாவால் யாருக்காவது ஏதாவது அசம்பவம் நடந்து விடக் கூடும். 


கிடைத்த தகவல்களின் படி  அவளுக்கு புரிந்தது பெண்கள் கழிவறையில் நுழைந்து பெண் பிள்ளைகளை தவறான வழியில் பயன் படுத்த நினைக்கும் பொழுது தான் அவர் இறந்திருப்பார் என்று. நடந்த சம்பவம் என்னவென்று தெரியாவிடினும் இதுதான் நடந்திருக்கக் கூடும் என்று தெளிவாக புரிந்தது. 
 
நிர்மலை வழியனுப்பியவள் சுவரேறி குதித்து உள்ளே வந்து அங்கே எதிர்பாராத விதமாக அக்ஷையை சந்தித்து, அவனோடு கழிவறையில் நுழைந்தாள். 
 
ஒவ்வொரு கதவாக திறந்து பார்த்தவள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும் இரவில் கண்டிப்பாக இந்த கழிவறையில் துர்ஆத்மா இருக்கும் என்பதால் கவனமாக அடியெடுத்து வைத்து வந்தவள் கடைசியாக இருந்த கதவை திறக்க அங்கேயும் துர்ஆத்மா இல்லையென்றதும் எங்கே இருக்கும் என்ற சிந்தனையில் இருந்தவள் யாரோ தலையை தடவவும் அக்ஷய் தான் விளையாடுகிறான் என்று நினைத்து கோபமாக முறைத்தவாறே அவன் புறம் திரும்ப நினைக்க கை மேலிருந்து தடவுவது போல் மனதின் உந்துதலில் தலையை தூக்கி மேலே பார்க்க அங்கே தீப்பொறி பறக்கும் பெரிய சிவந்த கண்களோடு, கடைவாயோரம் இரத்தம் வடிய, தலை நசுங்கிய கோரமாக ஒரு முகம் தென்பட ஒரு நொடி அச்சத்தில் உறைந்தவள் கத்தியவாறே அக்ஷையின் மேல் சாய்ந்திருந்தாள். 


மதியை தன்னோடு சேர்த்து அணைத்த அக்ஷய் “என்ன மதி? என்னாச்சு?” என்றவாறே கழிவறையை எட்டிப் பார்க்க அவன் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. 
 
அதற்குள் தன்னை நிலைப்படுத்தியவள் அக்ஷையை முறைத்தவாறே அவனிடமிருந்து விலக கிண்டலாக புன்னகைத்தவனின் பார்வையோ “நீயே வந்து மேல விழுவ, என் குத்தம் போல முறைக்க வேற செய்ரியா?” என்றிருந்தது. 
 
அவனை கண்டு கொள்ளாது முகம் பார்க்கு கண்ணாடியின் பக்கம் வந்தவள் துர்ஆத்மாவை தேட அது காணாமல் போய் இருந்தது. 
 
அக்ஷய் சுவரில் சாய்ந்து வேடிக்கை பார்க்க மதியோ துர்ஆத்மாவை எங்கே தேடுவதென்று யோசிக்கலானாள். 
 
துர்ஆத்மா பொதுவாக இறந்த இடத்தில் இருந்தே தனது வேட்டையை தொடரும் என்பதால் அந்த கழிவறையை விட்டு வேறு  எங்கும் செல்லாது அங்கேயே ஒளிந்து மதியை அல்லது அக்ஷையை தாக்க தக்க தருணம் பார்த்துக் கொண்டு நிற்கும் என்றறிந்த மதி மீண்டு தேடுதல் நடத்த அக்ஷய் அசையாது பார்த்திருந்தான். 
 
மந்திரம், தாயத்து என்பவற்றில் நம்பிக்கையில்லாத மதி ருத்ரமகாதேவி அவள் கையில் அணிவித்திருந்த வெள்ளியிலான காப்பு ஆயிரத்து இருநூறு நாட்கள் பூஜை செய்து அணிவிக்கப் பட்டதென்று அறிந்திருக்க வில்லை. அது மதியின் கையில் இருக்கும் வரை அவளுக்கு எந்த ஆபத்தும் வராதென்பது ருத்ரமகாதேவி அவளிடம் சொல்லவுமில்லை. ருத்ரமாதேவி கொடுத்த பெறுமதியான பரிசாகத்தான் அதை அவள் அணிந்திருக்கின்றாள். 
 
துர்ஆத்மாவோ அவளுக்கு கண்ணாமூச்சிக் காட்டியவாறு அங்கும் இங்கும்  பறந்துக் கொண்டிருக்க அதை பிடித்து அழித்தொழிய மதியும் விடாது பின்தொடர அந்த பெரிய கழிவறைக்குள் மின்குமிழ்கள் அனைந்தவாறே எரிந்துக் கொண்டிருந்தன. 
 
அக்ஷையை பயமுறுத்த முயற்சி செய்ய அவனோ மதியை பார்த்திருந்தானே ஒழிய துர்ஆத்மாவால் அவனின் கவனத்தை கவர முடியவில்லை. 
 
சாதாரண ஆவிகளை விட துர்ஆத்மாவால் எந்த மனிதனையும் தன் கட்டுப் பாட்டில் கொண்டு வர முடியுமாக இருக்க அக்ஷையை ஒன்றும் செய்ய முடியாமல் போக அவன் ஒரு பரிசுத்த ஆத்மா என்று கண்டு கொண்ட துர்ஆத்மா அவனின் உடலை ஆக்கிரமிக்க முயற்சி செயலானது. 
 
இதை கண்ட மதியும் அக்ஷையால் துர்ஆத்மாவை காண முடியாதென்பதால் அவனருகில் விரைய அக்ஷையின் உடம்பில் நுழைய முயற்சி செய்த துர்ஆத்மாவோ மின்னல் பட்டது போல் தூக்கி எறியப்பட்டு முகம் பார்க்கும் கண்ணாடியின் மேல் விழ அக்ஷய் தன் உள்ளங் கை கொண்டு கண்ணாடியில் பலமாக அடிக்க துர்ஆத்மா கண்ணாடியில் சிறைப்பட்டது. 
 
அவனருகில் ஓடி வந்த மதி துர்ஆத்மா கண்ணாடியினுள் மாட்டி வெளிவரமுடியாமல் தடுமாறுவதைக் கண்டு “எப்படி பண்ணீங்க?” வியந்து நோக்க 
 
“என்ன பண்ணேன்?” அக்ஷயோ மதியை புரியாது பார்க்க 
 
குழப்பமான முக பாவத்துடனையே “துர்ஆத்மா கண்ணாடியில் சிக்கிக் வெளிய வர முடியாமல்…. நீங்க கண்ணாடியில் அடிச்ச அடியால் தானே….” யோசித்து யோசித்து பேச 


அங்கே இருந்த இரண்டு கண்ணாடிகளை மாறி மாறி பார்த்த அக்ஷய் “எந்த கண்ணாடி ஒன்னும் தெரியல” 
 
மதியின் போலீஸ் மூளையோ அவனை சந்தேகமாக பார்க்க தூண்டினாலும் துர்ஆத்மாவை அழிக்க வேண்டி உள்ளதை மனம் எடுத்து சொல்ல துர்ஆத்மாவின் பக்கம் பார்வையை திரும்பியவள் 
 
“சொல் யார் நீ?” 
 
அவளை பார்த்து கோரமாக சிரித்த துர்ஆத்மா “உன்னால என்ன ஒன்னும் பண்ண முடியாது. என்ன இந்த கண்ணாடில இருந்து வெளியே விடு” என்று கத்த
 
“ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீ இந்த ஸ்கூல்ல மெட்ஸ் படிச்சு கொடுக்குறேன் என்ற பேர்ல பொம்பள புள்ளைங்க மேல கைய வைச்சிருக்க, உன் ஆட்டம் யாருக்கும் தெரியாமல் போனாலும் கடவுள் உன்ன தண்டிச்சிட்டாரு”  நடந்ததை ஊகித்து ஆவேசமாக மதி சொல்ல துர்ஆத்மா சிறைப்பட்டிருந்த கண்ணாடியில் அன்று நடந்த சம்பவம்  காட்ச்சியாக தென்படலானது. 
 
 சிறுவயதில் பெண் பிள்ளைகள் இல்லாததால் பெண்களின் ஆடைகளை கணேஷுக்கு அணிவித்து அவனின் அன்னை அழகு பார்க்க வளர்ந்த பிறகும் பெண்களின் ஆடைகளை அணியும் ஆசை கணேஷை விட்டு விலகவில்லை. பதின் வயதில் பெண் போல ஆடை அணிவதைக் கண்டு உடலில் ஏதாவது குறைபாடோ என்றஞ்சிய கணேஷின் அன்னை மருத்துவரிடம் அழைத்து செல்ல கணேஷுக்கு உடலளவில் எந்த குறைபாடும் இல்லை மனநிலைதான் பாதிப்படைந்து இருப்பதாக சொல்ல மனநல மருத்துவமனையில் இரண்டு வருடங்கள் இருந்தவன் குணமாகி வெளியே வந்து, படித்து ஆசிரியராக பட்டம் பெற அன்னையும் காலமானார். 
 
பாடசாலையில் பயிலும் மாணவிகளிடம் அதிகம் கருணையும், அன்பும் செலுத்தும் ஆசிரியராக இருந்துக் கொண்டு யாரும் கவனிக்காத வகையில் கழிவறைக்குள் புகுந்து பதின் வயது மாணவிகளின் அந்தரங்க பேச்சுக்களை ரசிக்க ஆரம்பிக்க அது வளமையானது.  
 
பாண்ட் ஷர்ட்டில் இருப்பதை விட புடவை அணிவதில் ஆர்வமான கணேஷ் மாலைநேரம் புடவையில் கழிவறைக்குள் செல்ல அங்கே பேட்மிட்டன் விளையாடி விட்டு வந்த ஸ்டெல்லா கழிவறைக்குள் நுழைவதைக் கண்டு வாஸ் பேசினில் கால் வைத்து ஏறி மேலிருந்து அவளை பார்த்திருக்க தனது தேவையை பூர்த்தி செய்து கொண்டு ஆடையை சரி செய்து கொண்டு நிமிர்ந்தவள் அங்கே கணேஷை கண்டு “வீல்” என்று கத்த அதை எதிர் பார்க்காத கணேஷும் தடுமாறி வழுக்கி விழ, வாஷ் பேசினில் தலை பலமாக மோதி அந்த இடத்திலையே அகால மரணமடைந்து துர்ஆத்மாவாக மாறினான். 
 
யாரோ தன்னை கவனித்ததில் அதிர்ச்சியடைந்த ஸ்டெல்லா கணேஷ் தலை நசுங்கி இரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு சித்தபிரமை பிடித்தால் போல் வெளியே ஓட, அதன் பின் பல நாள் பாடசாலை வராதவள் வேறு பாடசாலைக்கு மாற்றலாகி சென்றிருந்தாள்.  
 
எல்லாவற்றையும் கண்ணாடியில் பார்த்த மதியோ! “நீ இன்னும் உலகத்துல அலையாம முக்தியடைஞ்சி போய்டு” என்று சொல்ல 
 
“மனுஷனா இருக்குறத விட நிம்மதியா என் வேலைய என்னால் செய்ய முடியுது. யார் கண்ணுக்கும் நான் தெரிய மாட்டேன். எந்த கழிவறைக்குள்ளேயும் தாராளமா போக முடியுது. என் ஆசையெல்லாம் நிறைவேறும் பொழுது நான் எதுக்கு போகணும். முதல்ல என்ன வெளிய விடு” கண்ணாடியை உடைக்க முயற்சி செய்து தோற்றவாறே கத்த 


வெளியே வந்தால் தான் மதியாலும் அதை அழிக்க முடியும். கண்ணாடியில் சிறை வைப்பதும் நல்லதுதான். ஆனால் கண்ணாடி உடைந்து வெளியே வந்தால்? அதன் ஆட்டம் இன்னும் உக்கிரமாகும் என்பதால் துர்ஆத்மாவை அழிப்பதே நல்லது என்றெண்ணிய மதி கண்ணாடியை உடைக்காமல் எவ்வாறு வெளியே எடுப்பதென்று யோசிக்கலானாள்.
 
கண்ணாடியில் தென்பட்ட காட்ச்சிகள் அக்ஷையின் கண்களிலும் விழுந்ததால் அங்கே நடந்ததை புரிந்துக் கொண்டு 
 
“மதி ஹொவ் கென் ஐ ஹெல்ப் யு” என்று கேட்டு வைக்க 
 
சிறை பட்ட துர்ஆத்மாவை வெளியே எடுக்க பலவாறு முயற்சசி செய்து தோற்றவள்  அக்ஷய் கேட்டதில் அவனை ஆழ்ந்து பார்த்தவாறே அவனால் தான் துர்ஆத்மா சிறை பட்டது என்பது புரிய அவனால் தான் வெளியே எடுக்க முடியும் என்பதையும் தெளிவாக உணர்ந்துக் கொண்டாள்.  
 
நொடிநேரமும் தாமதிக்காது  அக்ஷையின் வலது கையை பிடித்தவள் உள்ளங்கையை கண்ணாடியின் மீது வைக்க மின்னல் போன்ற எதோ ஒன்று கண்ணாடியினுள் ஊடுருவ, துர்ஆத்மா கத்தி கூச்சலிடலானது. மதிக்கு ஒன்றும் புரியவில்லை. இடது கையை வைக்க அது அமைதியாக இருக்க அக்ஷையின் வலது கையை பார்க்க அவள் அணிந்திருப்பது போல் ஒரு காப்பு அணிந்திருப்பதைக் கண்டு அவளுடைய காப்பையும் காட்ட 



“இது என் அம்மா தந்தது. சின்ன வயசுல போட முடியல இப்போ தான் போடுறேன்” அவன் விளக்கம் கூற அதை பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள் அவன் கைக்கொண்டு எவ்வாறு கண்ணாடியிலிருந்து துர்ஆத்மாவை வெளியே எடுப்பதென்று வெளியே கொண்டு வரும் வழி புரியவில்லை. 


ஒவ்வொரு விதமாக கையை வைத்து தோற்றவள் தன் கையிலும் காப்பு இருப்பதால் முயற்சிக்க அவள் கைவைக்கும் பொழுதெல்லாம் நெருப்பு ஊடுருவ துர்ஆத்மா எரிந்து மீண்டது.  


கண்ணாடி மாய உலகம் ஆதலால் வலித்தாலும் அழியாது என்று புரிய தனது கையையும் அக்ஷையின் கையையும் சேர்த்து வைத்து முயற்சி செய்ய கண்ணாடி நீர்போல் மாறி துர்ஆத்மா வெளியே வர அதன் கழுத்தை பிடித்து வெளியே இழுத்தாள் மதி. 


காப்பு அணிந்த கை கண்ணாடியில் இருக்க மறுகையால் பிடித்திருந்ததால் துர்ஆத்மா திமிர அதை அடக்கும் முயற்சியில் மதி இருக்க அவளையே பார்த்திருந்த அக்ஷய் 


“மதி உன் மறுகையால் அதன் கழுத்தை நெருக்கு” என்று சொல்ல மதியும் நொடியில் கையை மாற்றி துர்ஆத்மாவின் கழுத்தை பிடிக்க எரிந்து சாம்பலான காகிதம் போல் துகள் துகளாகி துர்ஆத்மா காற்றில் கரைந்து மறைந்தது. 


போர்க்களத்தில் வெற்றியீட்டிய வீராங்கனை போல் மதி மூச்சுவிட அவளை அணைத்துக் கொண்டு வெளியே வந்த அக்ஷய் வண்டியில் அமர்த்தி வண்டியை வீடு நோக்கி செலுத்துமாறு ஓட்டுனருக்கு உத்தரவிட்டவன் மதியின் அருகில்  அமர்ந்துக் கொள்ள அவனுடைய வண்டியை பின் தொடர்ந்து வந்தனர் அவனின் பாதுகாவலர்கள். 


 கண்மூடி நடந்தவைகளை அசை போட்டவளின் மனதில் அக்ஷய் அணிந்திருந்த காப்பு கண்ணுக்குள் வர அதை பற்றி கேட்க வாயெடுக்க 
 
“எதுவானாலும் காலைல பேசலாம் மதி ரொம்ப டயட்” என்று கண்களை மூடிக் கொண்டான் அக்ஷய். 


“துர்ஆத்மா அக்ஷையின் கண்களுக்கு தெரிஞ்சதா? கையை மாற்று என்று எப்படி சரியாக சொன்னான்?” மதியின் மனதில் ஆயிரம் கேள்விகள் முளைக்க அக்ஷையை திரும்பிப் பார்க்க அவனோ ஆழ்ந்த தூக்கத்திலிருந்தான்.  
 
நேற்று நடந்தவைகள் எல்லாமே  நியாபகத்தில் வர தூக்கமும் தூர ஓட கட்டிலில் உருண்டுக் கொண்டிருந்தவள் தாஸ் கைது செய்ய பட்ட பின்னும் தந்தை வீடு வராதது உறுத்தவே அவரை எங்கு சென்று தேடுவதென்று யோசிக்கலானாள்.
 

Advertisement