Advertisement

அத்தியாயம் 14
செம்மண்ணூர் கல்யாண விழாக்கோலம் பூண்டு தெருவெங்கும் அலங்கரிக்கப்பட்டிருக்க, ஊருக்கே விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ருத்ரமகாதேவியும் வேலனின் மனைவியோடு திருமணத்தில் கலந்துகொள்ள பயணம் செய்து வந்திருக்க, அவர்களை அன்போடு வரவழைத்து உபசரித்த கொடிமலரின் தந்தை தங்கவென குடிசையும் ஒதுக்கிக் கொடுத்து கல்யாணம் முடிந்த பின்பே ஊர் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ள சந்தோசமாக தலையசைத்தனர் வேலனோடு வந்தவர்கள். 
ஊரே திருவிழாபோல் அலங்காரத்தில் ஜொலிக்க ருத்ரமகாதேவிக்கு கேள்விகள் ஆயிரமாயிரம் மலர வேலனின் மனைவியை குடைந்தெடுத்துக் கொண்டிருந்தாள். 
“எல்லோர் திருமணமும் இவ்வாறுதான் நடைபெறுமா?” 
“இல்லை தாயி… இவர்கள் ஊரில் பேர்பெற்றவர்கள், தளபதியின் தம்பியின் திருமணம் அல்லவா… அதுதான் இவ்வாறு ஏற்பாடெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன” வேலனின் மனைவி தாழ்ந்த குரலில் கூற 
“மணப்பெண்ணை பார்க்க எங்களை அனுமதிப்பார்களா?” 
“அவர்களின் குடும்ப வழக்கப்படி மணப்பெண் பந்தக்கால் நட்டபின் வீட்டை விட்டு வெளியே வர மாட்டாள். பிறர் பார்வையிலும் படமாட்டாள். கல்யாணமன்றுதான் எங்களால் அவளை பார்க்க முடியும் தாயி”
“ஏன் அப்படி” 
“கண்ணு பட்டுடும்னு ஐதீகம்” 
“மணமகனை கூடவா பார்க்க முடியாது” 
“அவரின் வீட்டுக்கு சென்றால் பார்க்கலாம் தாயி.. ஆனால் அவர் வீடு இங்கிருந்து நான்கு தெரு தள்ளியல்லவா அமைந்திருக்கின்றது. என்ன காரணம் சொல்லி அங்கே செல்வது?”
“மணமகனை பார்க்க வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும் வேறு என்ன சொல்ல?”
“ஒரு வாலிபனை அவ்வாறு சட்டென்று சென்று சந்திக்க முடியாது தாயி… ஊர் கட்டுப்பாடு அவ்வாறு இருக்கின்றது” அதன் பின்   அவர்களை கல்யாண கோலத்திலையே பார்க்கலாம் என்று அமைதியானாள் ருத்ரமகாதேவி. 
ஆனால் இரவில் ஊரை சுற்றி பார்க்க செல்ல எண்ணம் தோன்றி வெளியே செல்லும்  ருத்ரமகாதேவி வீரவேலனைக் கண்டு வெற்றிவேலன் எனக்கருதி கொடிமரோடு இழைப்பவனை கொன்றுவிட்டு யார் சாபத்தை பெற காத்திருக்கிறாளோ!
விடிந்தால் கல்யாணம் வெற்றிவேலன் இன்னும் ஊர் திரும்பி இருக்கவில்லை. அதையே நினைத்து அன்னை வருந்திக்கொண்டிருப்பதைக் கண்டு சமாதானப்படுத்தலானான் வீரவேலன். 
“வீரா உன் தமையன் இன்னும் வந்து சேரவில்லையே! கல்யாணம் நடை பெறுவதற்கும் வந்து விடுவானா?”
“வந்து விடுவான் அன்னையே குழப்பம் வேண்டாம்” 
“சேதி கிடைத்த உடனே வந்திருந்தாலும் இந்நேரம் வந்து சேர்ந்திருப்பானே! ஏன் இன்னும் வரவில்லை”
“நம் நாட்டின் தளபதி அவன். அரசனின் அனுமதியின்றி எவ்வாறு வருவான்?”
“மன்னன் அனுமதி கொடுக்க மறுத்திருப்பாரோ!”
“ஒரே சகோதரனின் திருமணத்தைக் காண மன்னன் மறுப்பதா? போர் தொடுக்க மாட்டேனா?” வீரவேல் ஆவேசமாக பேச மகனின் வரவையும் மறந்து பதறிய அன்னை இளயமகனின் வாயை மூடிவிட்டு 
“யாராவது கேட்டுவிட்டால் உன் தலை மட்டுமல்ல நம் அனைவரினதும் தலை துண்டிக்கப்படும்” என்று கூற 
நகைத்தவாறே அன்னையின் கரத்தை அகற்றியவன் “தீ என்றால் சுட்டு விடுமா? தமையன் வருவான்” என்றான். 
சின்ன கோட்டின் அருகில் பெரிய கோட்டை போட்டால் சின்ன கோடு தெரியாதாம் அது போல் மகன் வரவில்லை என்று கலங்கி நின்ற அன்னையை மன்னன் பெயரை சொல்லி மேலும் கலங்க வைத்தவன் சிரிக்க அவன் நோக்கத்தை புரிந்துக் கொண்ட தாயோ கவலை மறந்து சிரிக்கலானாள். 
வீரவேலனின் சிந்தனையெல்லாம் கொடிமலரை சுற்றிக் கொண்டிருந்தது. அவளைக் கண்டு ஒரு வாரம் ஆகி இருந்தது. அவளை பார்க்க மனம் ஏங்க, விடிந்தால் கல்யாணம் அடங்கி இரு என்று சொல்லும் மனத்தின் ஓசையையும் கேளாது அனைவரும் தூங்கிய பின் கொடிமலரின் வீடு நோக்கி நடக்கலானான். 
ஊர் அடங்கினால் வெளிச்சமே இல்லாமல் இருக்கும் தெரு. இன்று ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க, அவனின் காதல் கொண்ட மனம் திருட்டுத்தனம் செய்ய அவனை தூண்டி இருக்க, தன்னவளைக் காண ஒரு கள்வனைப்போல்  பதுங்கிப் பதுங்கி சென்று கொண்டிருந்தான் வீரவேலன்.  
ஒரு மறைவான இடத்திலிருந்து எட்டிப்பார்க்க அவன் கழுத்தின் நேராக வாளை வைத்து மீசையை முறிக்கிக் கொண்டிருந்தான் வெற்றிவேலன். 
“என்னடா… திருடனை போல் எங்கே செல்கிறாய்?”
“நீ எப்பொழுது ஊருக்கு வந்தாய் உன் புரவி வரும் சத்தம் கூட கேட்கவில்லையே!” 
“நான் கேள்வி கேட்டால் என்னையே நீ கேள்வி கேட்கிறாயா? தளபதியிடம் கேள்வி கேட்கும் அளவுக்கு பெரியவனா?” 
“முதலில் கழுத்தில் வைத்திருக்கும் வாளை எடு வெற்றி” என்றவன் அகற்றியவாறே “நான் கொடிமலரை காண செல்கிறேன். உன் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா? இப்பொழுது என் கேள்விக்கு பதில் சொல்லு” என்றவன் தமையை தழுவிக்கொள்ள வெற்றிவேலனும் நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்த சகோதரனை ஆரத்தழுவிக்கொண்டான். 
“நெடும் தூரம் பயணம் செய்ததால் பரணிக்கு ரொம்ப களைப்பாக இருக்கும் என்று தண்ணீர் பருக குளக்கரை பக்கம் கட்டி விட்டு நடந்து வந்தேன். வரும் பொழுது என்னை போல் ஒருவன் பதுங்கிப் பதுக்கி வருவதைக் கண்டேன்” என்று சிரிக்க வீரவேலன் முறைத்தவாறே 
“அதற்காக  நாளை கல்யாணம் ஆகா இருக்கும் ஆண் மகனின் கழுத்தில் கத்தி வைப்பதா?” 
சத்தமாக நகைத்த வெற்றிவேலன் “எதற்காக திருடன் போல் ஊருக்குள் உலாத்துகிறாய்? காதலியை காண அனைவரும் கண்ணயர்ந்தபின் திருட்டுத்தனமாய் பயணமோ!”
வீரவேலனுக்கும் வெக்கம் வர தமையன் சொல்வதை ஒத்துக்கொள்ளாத முகபாவத்தை முயற்சி செய்த்து முகத்தில் கொண்டு வந்தவன் 
“அன்னை உன்னைக்கான காலையிலிருந்தே காத்துக் கொண்டு இருக்கின்றாள். வா செல்லலாம்” 
“சற்று பொறு… நான் தனியாக வீடு செல்கிறேன். நீ உன் வருங்கால மனைவியை காண செல். பாவம் அவள் உனக்காக காத்துக் கொண்டு  இருக்கின்றாள்” 
“எனக்காக காத்துக் கொண்டு இருக்கின்றாளா?” வீரவேலன் ஆச்சரியமாக கேட்க 
“வரும் போது பார்த்தேன். ஆலமர ஊஞ்சலில் தனியாக ஆடிக்கொண்டிருந்தாள். என்னைக் கண்டு முகம் மலர்ந்தவள் நொடியில் முகம் சுருங்கி பேசியதும், வந்தது நீ என்று எண்ணி முகம் மலர்ந்ததை உணர்ந்துக் கொண்டேன். உன்னை அனுப்பி வைப்பதாகவும் கூறினேன். ஆனால் நீயே அவளைக் காண புறப்பட்டாய். போ..போ.. தாமதிக்காமல் சந்தித்து விட்டு வீடு வந்து சேர்” என்றவன் வீட்டை நோக்கி நடக்க தமையனை மீண்டும் கட்டிக் கொண்ட வீரவேலன் விடைபெற்று கொடிமலரைக் காண விரைந்தான். 
பாவம் வெற்றிவேலன் அறியவில்லை அதுதான் அவன் சகோதரனை கடைசியாக காணப்போகும் தருணம் என்று. 
“மதி உன் கண்ணு ரெண்டும் அந்த வெள்ளை உருவத்தின் மீதே இருக்கின்றன. ஆனால் பார்ப்பவர்களுக்கு நீ அஜய்யை பார்பதாகத்தான் தெரியும்” அக்ஷய் குனிந்து மதியின் காதில் சொல்ல அவன் உதடு பட்டு அவளின் ஜிமிக்கி ஊஞ்சல் ஆடியது. 
காதுமடல் உரச அக்ஷய்  பேசவும் திடுக்கிட்டவள். அவனின் மூச்சுக்கு காற்று உரசிச்செல்ல தன்னிலை மறந்து சொக்கி நின்று விட அவளின் இடைமீது கையிட்டு தன்னோடு சேர்த்தனைத்தவன் நடனமாட ஆரம்பித்தான். 
அக்ஷையும் மதியும் வந்தமர்ந்ததும் அக்ஷையைக் கண்டு அவனருகில் வந்த அசோக் சாம்ராட் நலம் விசாரித்து ஆரத்தழுவிக் கொள்ள, தந்தையை நீண்ட நாட்களுக்கு பின் கண்ட மகிழ்ச்சியில் அக்ஷையும் மதியை மறந்து தந்தையுடன் ஒன்றினான்.
அக்ஷையின் தொழில் பேச்சில் ஆரம்பித்தவர் அவனின் கல்யாணம் வரை பேசி சிரிக்க அவனும் அவரின் தொழில் மற்றும் நலன் பற்றி விசாரித்துக் கொண்டு வந்திருக்கும் தொழிலதிபர்களுடனும் உறவாடிக் கொண்டிருந்தான். 
மகனைப்பற்றி சமூகவலைத்தளத்தில் வரும் விரும்பத்தகாத செய்திகளால் மனைவியிடமும் பகிரமுடியாமல்  மனஉளைச்சலுக்கு ஆளாகிக் கொண்டிருந்தவர் அக்ஷையை அஜய்யின் கல்யாணத்தை சாக்காய் வைத்து வரவழைத்து இதை பற்றி பேச எண்ணி இருந்தார்.
சிறிய வயதில் அஜய் மற்றும் அஜித் அக்ஷையை பாடாய் படுத்தியதால் அவர்களை பற்றிய நல்ல எண்ணம் சிறிதும் அக்ஷய்க்கு இல்லை. மூன்று மாதம் தான் அவர்களோடு இருந்தான் அதுவே அவர்களை வெறுக்க போதும் என்றிருக்க, என்றாவது ஒரு நாள் குடும்பம் மொத்தமும் கலந்து கொள்ளும் விழாக்களில் கலந்து கொள்பவன் தந்தையோடு மட்டும் உறவாடி விட்டு விலகிச்சென்று விடுவான். 
தனக்கென்ற பாதையை வகுத்து, அதில் பயணம் செய்து வெற்றியை தனதாக்கிக் கொண்டவன், தந்தையின் தொழில்களில் ஈடுபடாமல் வளர்ந்து நின்று அனைவரினதும் பார்வையையும் தன் மீது திருப்ப, மூத்தவன் அஜய் அக்ஷையின் தொழில் வெற்றிகளை வாழ்த்த கரம் நீட்டும் பொழுதெல்லாம் ஒரு புன்னையினூடாக அண்ணனை கடந்து விடுபவன் சின்ன அண்ணன் அஜித்துடன் முட்டி நிற்பான். ஏனெனில் அவன் அக்ஷையை சீண்டுவதிலையே குறியாக இருப்பவன். எதை சொன்னால் அக்ஷய் கோபம் கொள்வானோ அதை உரக்க சொல்வதில் அவனுக்கு அலாதிப்பிரியம். 
அக்ஷையை காயப்படுத்த அவன் ஏந்தும் ஆயுதம் அக்ஷையின் அன்னை. தன்னுடைய தந்தையை முறையில்லாது மணந்தவர் என்றும் அக்ஷய் முறையில்லாமல் பிறந்தவன் என்றும் சொல்லி அக்ஷையை மனதளவில் காயப்படுத்துவதே அவன் வேலை. ஆனால் அமெரிக்காவில் வளர்ந்த அக்ஷய் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் அஜித்தை நக்கல் பார்வை வீசிவிட்டு அகன்று விடுவான்.
“உன் அன்னையே இரண்டாவது வந்தவள் நீ என்னை பேசுகிறாயா? இதை சொன்னால் நான் வீழ்வேனா? என் அன்னைக்கு தந்தை கொடுத்திருந்த இடம் எனக்குத் தெரியும். உனக்குத் தெரியுமா? கடைசியாக இப்படியெல்லாம் பேசுற நீ உண்மையான ஆண்மகனா என்றே எனக்கு சந்தேகமாக இருக்கு” என்று வெறுப்பேத்துவான்.
அது அஜித்தை நன்கு சீண்டி விட்டிருக்க, இன்று சமூகவலைத்தளங்களில் அக்ஷையை பற்றிய புரளியை கிளப்பி விட்டிருந்தது அஜித்தின் கைகாரியம் தான். அது அக்ஷய் அறிந்திருந்தாலும் அவன் கொடுக்கும் பதிலடி வித்தியாசமாக இருக்கும். அதற்கான ஏற்பாடை செய்து விட்டு வந்தவனுக்கு மதியழகி சம்மதிப்பாளா என்ற ஐயம் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்க அண்ணன் அஜித்தையும் அந்த மண்டபத்தில் காணவில்லை.
அஜய்யின் திருமணம் அவன் விருப்பம் இல்லாது அவனின் அன்னையின் விருப்பப்படி நடை பெறுவது அவனின் முகத்தை பார்த்தாலே தெரிகிறது. ஆனாலும் அக்ஷய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த விதத்திலும் தலையிட விரும்பாதவனாக ஒதுங்கி இருக்க வெள்ளை புகை உருவம் அவன் கண்களிலும் பட்டுத்தொலைத்ததுதான் விதி. 

Advertisement