Advertisement

அத்தியாயம் 11 
மதி நிர்மலோடு சென்ற பிறகு சோபாவில் தொப்பென்று அமர்ந்த அக்ஷய் “மன்னிச்சிக்க மதி எந்த நேரத்திலும் உன்ன விடக் கூடாதென்று தான் உன்ன கண்ட பொழுதே என் பக்கத்துல வச்சுக்கணும், உனக்கு எந்த ஆபத்தும் வர விடக் கூடாதென்று ஏதேதோ திட்டம் போட்டு உன்ன என் பக்கத்துலயே வச்சிக் கொண்டேன். ஆனா ருத்ரமகாதேவியை இப்போது என்னால சந்திக்க முடியாது. உன்ன தனியா விடவும் முடியாம, உன் கூட போகவும் முடியாம நான் படும் பாடு எனக்கு மட்டும் தான் தெரியும்” கைகளால் முகத்தை மூடியவாறே அமர்ந்திருந்தவன் தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான். 
சமயலறையில் பிர்ஜு தனியாக புலம்பிக் கொண்டிருக்க
“என்ன பிர்ஜு பைத்தியம் முத்திப் போச்சு போல. தனியா புலம்புர” கிண்டலடித்தவாறே பாஸ்கர் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்தான். 
“எனக்கு இந்த வீட்டுல சமைக்கிறது மட்டுமா வேல?”
“வேறென்ன வேல?”
” பாஸ  யார் பார்த்துக்கிறதாம்? நான் தானே? அந்த அம்மாவும் பொண்ணும் வந்ததிலிருந்தே பாஸ் ரொம்ப மாறிட்டாரு. எந்த பொண்ணையாச்சும் திரும்பி பாத்திருப்பாரா?” ஆதங்கமாக சொல்ல 
“அப்போ பாஸுக்கு பசங்களைத்தான் புடிக்கும்னு சொல்ல வரியா” பிர்ஜூவிடம் வம்பு வளர்த்தான் பாஸ்கர். 
“டேய் கூறு கெட்டவனே! நான் எங்கடா அப்படி சொன்னேன். நீ வேற என்னையே மாட்டிவிடப் பாக்குறியா?”  பல்கலைக் கடித்தாலும் ஏக்கமாக பெருமூச்சு விட்டவன் “எனக்குத்தான் கொடுப்பன இல்லாம போச்சு” 
“ஆமா நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு அக்ஷய் சார் கேக்குதா” பாஸ்கர் முணுமுணுக்க, 
“அத விடு அந்த அம்மாவும் பொண்ணும் இருக்காங்களே! சரியான ஜலாலா கில்லாடிங்க அந்த அம்மா என்னன்னா சமைச்சி போட்டே அக்ஷய வசப்படுத்திட்டா. பொண்ணு என்ன சொக்குப் போடி வச்சானே தெரியல, அவ போற எல்லா இடத்துக்கும் இவரும் வால் மாதிரி  போறாரு. மொத்தமா கவுந்துட்டாரு. எனக்கென்னமோ அவ பொண்ணே இல்ல பேய் னு தோணுது. அவளும், அவ மூஞ்சியும். போதாததுக்கு அவளுக்கு ஒரு தொடப்பு” 
“யாரை சொல்லுற. அதான் அந்த நிர்மலோ! என்ன கர்மமோ! ரெண்டு பேரும் போடுற ஆட்டம் சகிக்க முடியுமா? ஒருத்தர் மேல ஒருத்தர் விழுறதும், கொஞ்சிக்கிறதும் சி…”
“தப்பா பேசாத… அவங்க ரெண்டு பேரும் சின்ன வயசில இருந்தே ப்ரெண்ட்ஸ்” 
“என்ன கன்றாவியோ!” முகத்தை சுளிக்க 
“அந்தம்மா மேல பாஸுக்கு மரியாதை இருக்கு. பொண்ணுமேல காதல். பாஸ் வேற எல்லா இடத்திலையும் சீசீடிவி வச்சிருக்குறாரு. நீ இப்படியே பேசிக்கிட்டு திரிஞ்சனு வை ஒருநாள் இல்ல ஒருநாள் நீ அவர் கிட்ட கையும் களவுமா மாட்டத்தான் போற, அவர் உன் சீட்டை கிழிக்கத்தான் போறாரு. அப்பொறம் அழுது கிட்டு என்ன தேடி வராத” பாஸ்கர் அச்சுறுத்தல் விடுத்து விட்டு நகர 
“போடா” என்று அவனுக்கு பழிப்பு காட்டினான் பிர்ஜு. 
நகரத்துக்கு வெளியே மயானத்துக்கு அருகே இருந்தது அந்த வீடு. பார்க்க பலகையில் அமைத்திருந்தாலும் உள்ளே வசதியாகத்தான் இருந்தது. வீட்டையடுத்து புதர்களும், மரங்களுமாக பரந்திருக்க, ஆள் நடமாற்றம் அறவே இல்லை. மழை வரும் பொழுது இருண்ட மேகம் போல் வானமும் இருண்டு அந்த இடமே அமானுஷ்யமான தோற்றமளித்தது.  
ஒரு புதர் மறைவில் வண்டியை நிறுத்திய மதி ராஜவேலு தான் சென்று பார்த்து விட்டு வருவதாக சொல்லியும் வேண்டாம் என்று தடுத்தவள் தானே சென்று உள்ளே ப்ரீத்தி இல்லையென்பதால் என்னென்ன செய்யவேணுமோ செய்த்து விட்டு இவர்களோடு இருக்க, ப்ரீத்தி வருவதைக் கண்டு மறைந்துக் கொண்டனர். 
தனது வீட்டின் முன் வண்டியை நிறுத்திய ப்ரீத்தி உள்ளே செல்ல அக்ஷையின் வண்டி வருவதைக் கண்டு அவனை நிறுத்தி இறங்குமாறு மதி சொல்ல அவனின் பாதுகாவலர்களும் கூடவே இறங்கினர்.
“எதுக்கு இங்க நிறுத்தணும்? அங்கேயே இடம் இருக்கே! என்று ப்ரீத்தியின் வீட்டு முற்றத்தைக் காட்ட 
பல்கலைக் கடித்த மதி “ஆமா நாம விருந்துக்கு வந்திருக்கோம். அவ வீட்டு முன் போய் வண்டிய  நிறுத்த” அக்ஷையை முறைத்தவாறே சொல்ல கண்சிமிட்டி சிரித்தான் அவன்.
“என்ன டென்ஷன் பண்ணவே ஏதாவது சொல்லுக்கிட்டு இருப்பான். லூசு” முணுமுணுத்தவள் என்ன செய்ய போகிறோம் என்பதை விவரிக்கலானாள். அனைவரும் கவனமாக கேட்டுக் கொண்டு தலையை ஆட்ட அக்ஷய் மட்டும் யோசனையில் விழுந்தான். 
“என்ன நான் சொன்னது புரிஞ்சுதா? இல்லையா?” மதி அக்ஷையை உலுக்க, புரிஞ்சது எனும் விதமாக தலையசைத்தான். 
நிர்மலை ஸ்வீட்டியிடம் விட்டு விட்டி அக்ஷய், மதி ராஜவேலு மூவரும் உள்ளே செல்ல முற்பட  அக்ஷையின் பாதுகாவலர்களும் அவன் பின்னால் வரவே அவர்களை தடுத்தவன் நிர்மலை பார்த்துக் கொள்ளும் படி கூறி விட்டு உள்ளே நுழைய ப்ரீத்தி அமர்ந்து பூஜைக்கு தயாராகிக் கொண்டிருந்தாள். 
மெதுவாக அடியெடுத்து வைத்த மதி எட்டிப் பார்க்க தான் ருத்ராட்ச மாலையை மாட்டியிருந்த இடத்துக்கு நேராகத்தான் ப்ரீத்தி அமர்ந்திருந்தாள்.  ப்ரீத்தி வருமுன் உள்ளே நுழைந்த மதி ப்ரீத்தி வழமையாக அமரும் இடத்துக்கு நேராக மேலே ருத்ராட்ச மாலையை ஒரு கயிறோடு இணைத்து இழுத்தா விழும் படி தொங்க விட்டு எல்லாம் சரியாக இருக்கா, தாங்கள் மறைந்து கொள்ள இடம் இருக்கா என்றெல்லாம் நோட்டம் விட்டதில் எல்லாம் சரியாகவே இருக்க திருப்தியாக வெளியேறி இருந்தாள்.  
உள்ளே நுழைந்தவர்களோ மறைவாக நின்று கொண்டனர். அவள் ஸ்வீட்டியின் உடலை விட்டு வெளியேறியதும் மாலையை விழ வைக்க வேண்டும் அதன் பின் துர்ஆத்மாவை அழிக்க வேண்டும். எல்லாம் திட்டமிட்டது படி நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொண்டவள் அக்ஷய், மற்றும் ராஜவேலுவை பார்த்து தலையசைக்க, அவர்களும் தயார் எனும் விதமாக தலையசைத்தனர்.
பூஜை ஆரம்பமாகி ப்ரீத்தி ஸ்வீட்டியின் உடலை விட்டு வெளியே வரும் வரை மூவரும் பார்த்திருக்க, ப்ரீத்தி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தாலே ஒழிய வெளியே வரும் வழி தெரியவில்லை. மதியின் பொறுமை பறந்துக் கொண்டிருந்தது. 
பூஜையில் மண்ணாலான ஒரு பொம்மை செய்யப்பட்டு நடுவில் இருக்க அதை சுற்றி தேசிக்காய் வைக்கப்பட்டு அதன் மேல் மஞ்சள், குங்குமம் தூவி இருந்தது. தேசிக்காய் வலையத்துக்கு வெளியே விளக்குகள் ஏற்றப்பட்டு முன்னாள் ப்ரீத்தி அமர்ந்து மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு நேர் எதிராய் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி இருக்க அவள் மந்திரங்களை சொல்ல சொல்ல சீசீடிவி காட்ச்சிகள் போல் ஸ்வீட்டி அழுது கொண்டிருந்த காட்ச்சி தென்பட அதில் கவனமானாள். 
ப்ரீத்தி ஸ்வீட்டியை கண்டு பிடிக்கத்தான் இந்த பூஜையை செய்வதாக புரிந்துக் கொண்ட மதியோ கண்ணாடியில் நடந்த அனைத்தையும் அவள் பார்த்து விட்டால் கண்டிப்பாக தங்களை தேடி வருவாள் என்று புரிய, என்ன செய்யலாம் என்று யோசிக்க, அவள் அருகில் வந்த ராஜவேலுவோ! 
“என்ன மதி யோசிக்கிற? அவ அந்த புள்ள உடம்ப விட்டு வருவான்னு தோணல” 
“அந்த கண்ணாடியை உடைக்கணும். பாம்பும் சாகனும் கட்டையும் உடையக் கூடாது” சுருக்கமாக சொல்ல 
கண்ணாடி உடையனும், மாட்டிக்கவும் கூடாது என்று மதி சொன்னதை சரியாக புரிந்துக் கொண்ட ராஜவேலு அங்கே சுத்திக்கு கொண்டிருக்கும் பூனையை தேட அது சமத்தாக தூங்கிக் கொண்டிருந்தது. 
தூங்கும் பூனையை  எழுப்பி அதை சீண்ட அதுவும் ராஜவேலுவை துரத்த கண்ணாடியின் பின் பக்கமாக வந்த நின்ற ராஜவேலு பூனை தாவி வரும் பொழுது மாயமாக மறைய கண்ணாடியில் மோதி பூனை கண்ணாடியோடு விழ கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து தெறித்தது. 
கண்ணாடி உடையவும் கோபத்தில் கனன்ற ப்ரீத்தி தான் வளர்க்கும் செல்லப் பூனை என்பதால் அதை அங்கே இருந்து அகற்ற ஏதோ மந்திரம் சொல்லி மாயமாக மறைய வைத்தாள். 
“பாரு…டா… செல்ல பூனை மேல வச்சிருக்கும் பாசம் கூடப் பொறந்த தங்கச்சி மேல இல்ல” மதி கிண்டலாக மொழிய 
அவள் அருகில் வந்த அக்ஷையோ “மதி நேரமாகிக் கிட்டு இருக்கு அந்த ஆத்மா வெளில வரும் வழி தெரியல அத வெளில எடுக்க, நம்ம காப்பு உதவுமா?”  கையை தூக்கிக் காட்ட 
“மெதுவா பேசுங்க அவ காதுல விழுந்துடப் போகுது” மதி கிசுகிசுக்க 
மேலும் அவளை நெருங்கி நின்றவன் “இப்படி நெருங்கி நின்று பேசினால் ஏதேதோ தோணுது டி..” சொல்லியவாறே அவளை முத்தமிடப் போவது போல் பாசங்கனு செய்ய எங்கே இருக்கின்றோம் என்று மறந்து அவனை தள்ளி விட்டாள் மதி. 
மதி தள்ளியதில் சமநிலை  தவறி விழப்போனவன் சுதாரித்து நேராக நிற்க அவன் மறைந்திருந்த இடத்திலிருந்து இரண்டடி முன்னாள் வந்திருந்தான்.  
அதில் ப்ரீத்தியின் பார்வை அவன் புறம் விழ “யார் நீ? இங்கே என்ன செய்கிறாய்” அனல் கக்கும் விழிகளோடு கேக்க 
“உன்ன தேடித்தான் வந்தேன். உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகணும்” மதியை அசையாதே என்று கையால் செய்கை செய்தவாறு முன்னாள் நடந்தவன் கண்ணாடி துண்டுகள் உடைபட்டிருந்ததை புதிதாக பார்ப்பது போல் பார்த்து விட்டு ப்ரீத்தியின் வலது புறத்தில் அமர்ந்துக் கொள்ள 
“உன்ன எங்கயோ பாத்திருக்கிறேன்” ப்ரீத்தி யோசிக்க, 
அவளை யோசிக்க விடாது காலையில் உன் ரெஸ்டூரண்ட்டுக்கு வந்திருந்தேன் நீ அங்க இல்ல அதான் இங்க வந்தேன்” 
அக்ஷய் ப்ரீதியிடம் பேச்சுக்கு கொடுத்து அவளை திசை திருப்பி காரியம் சாதிக்க நினைக்க, மனிதர்களை அணுகுவது போல் ஆத்மாவை அணுக முடியாது. அதுவும் ப்ரீத்தி போன்ற துர்ஆத்மாவிடம் அவனின் வித்தைகள் செல்லுபடியாகாது என்று அவன் அறிந்திருக்கவில்லை.
அவனை அடையாளம் கண்டு கொண்டவள் “உன்னால் தான் உன்னால் தான் அவ தப்பித்து ஓடி விட்டாள்” என்று கத்த
ஒன்றும் அறியாதவன் போல் “எவ?” என்று புருவம் சுருக்க, 
“உன்ன என் கையாலேயே அழிச்சாதான் எனக்கு நிம்மதி” என்றவள் அக்ஷையின் கழுத்தை நெறிக்க முற்பட அவளை லாவகமாக தடுத்தான் அக்ஷய் 
அக்ஷையின் கழுத்தை நெறிக்க முற்பட மதி மறைந்திருந்த இடத்திலிருந்து வெளியே வர ராஜவேலுவும் அக்ஷய் அருகில் வந்திருந்தான்.
அக்ஷய் “ஏன் வெளியே வந்தாய்” என்று மதியை முறைக்க, ப்ரீத்தியின் பார்வை ராஜவேலு, மற்றும் மதியின் மீது விழவே 
“ஏய்……. நீ தானே அன்னைக்கு வந்த? உன்ன நான் குடுவைல அடைச்சு வச்சிருந்தேனே! நீ எப்படி வெளியே வந்த?” 
“அந்த கதையை சொல்லத்தான் நாங்க இங்க வந்தோம் பாரு” கிண்டலாக ராஜவேலு சொல்ல
“ஆமா ஆமா உங்க மூணு போரையும் அழிச்சொழிக்கிறதை விட்டுட்டு நானும் கத கேட்டு கிட்டு நிக்கிறேன்” என்றவள் ஏதோ மந்திரம் சொல்லி அக்ஷையின் புறம் கையை அசைக்க 
மின்னல் போல் ஏதோ ஒன்று அவன் புறம் வேகமாக நகர தனது கையில் உள்ள காப்பைக் கொண்டு தடுத்தான் அக்ஷய். 
அடுத்து மதியை தாக்க மதியும் தன் கையிலிருந்த காப்பை கொண்டு தடுக்க, ராஜவேலுவோ ப்ரீத்திக்கு கண்ணா மூச்சிக் காட்டிக் கொண்டிருந்தான். 
ப்ரீதியால் என்னதான் மந்திரம் சொல்லி அவர்களை தடுக்க முடிந்தாலும் அழிக்க முடியவில்லை. அவர்கள் அவளை தேடி வந்த நோக்கமும் புரியவில்லை. சமாதானமாக போக அவளின் ஆணவமும் இடம் கொடுக்கவில்லை. மதியையும், அக்ஷையையும் இந்த உடம்பில் இருந்து கொண்டு தன்னால் மந்திரங்களை மட்டும் ஓதுவதால் அழிக்க முடியாது எனப் புரிய, அருவமாக மாறி மந்திரத்தையும் ஓதினால் தான் அவர்களை அழிக்க முடியும் என்று எண்ணியவள் ஸ்வீட்டியின் உடம்பிலிருந்து வெளியேறினாள்
ப்ரீத்தியின் மந்திரத்தை தடுக்க முயன்றதில் விழுந்து எழுந்து இருவருக்குமே இரத்த காயங்கள் ஏற்பட்டிருக்க, உடைந்த கண்ணாடி அக்ஷையின் கையை பதம் பார்த்திருந்து. உடலும் பலவீனமடைவது போல் மதிக்கு தோன்ற ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள்.
ப்ரீத்தியை ஸ்வீட்டியின் உடம்பில் இருக்கும் பொழுது அழிக்க முடியாது, அழிக்க நேரிட்டால் ஸ்வீட்டியின் உடம்பும் சேர்ந்தே அழியும். ப்ரீத்தியை தடுத்தவாறே ஸ்வீட்டியின் உடம்பிலிருந்து அவளை எவ்வாறு பிரிப்பதென  மதி இருக்க, அவளே உடலை விட்டு வெளியேறவும் அக்ஷையின் புறம் பார்வையை திரும்பியவள் ப்ரீத்தியை ருத்ராட்ச  மாலை இருக்கும் இடத்துக்கு எப்படியாவது கொண்டு வர வேண்டும் மேலே பார்த்து கண்களால் செய்கை செய்ய அதை புரிந்துக் கொண்ட அக்ஷய் தலையசைத்தான். 
ஸ்வீட்டியின் உடலில் இருந்து வெளியே வந்த ப்ரீத்தியின் உருவமோ கணக்கொடுரமாக இருக்க, அந்த உருவத்தை பார்க்கவே மதியின் உள்ளம் பதறியது. இதில் எவ்வாறு அதை பிடித்து அடக்குவதாம். அருவமாக மாறிய உருவம் அவள் கண்களுக்கு மட்டுமே தெரிவதால் அக்ஷையை ஒரு பயப்பார்வை பார்க்க, கண்களாளேயே ஆறுதல் படுத்தினான் அக்ஷய். 
கருப்பு புகை போன்ற உருவம், கண்கள் மட்டும் சிவப்பேறி பார்க்கவே பயங்கரமாக சிரிக்க, மதியின் மனதில் அச்சம் குடிவந்தது.
ராஜவேலுவை தவிர மற்ற இருவர் கண்களுக்கும் தான் தெரிய மாட்டேன். ஆதலால் இருவரையும் மிக இலகுவாக அழிக்கலாம் என்று ப்ரீத்தி நினைத்து முதலில் ராஜவேலுவை தீர்த்துக் கட்ட உடனடி  முடிவெடுத்தாள். 
அதன் படி ராஜவேலுவை துரத்த ஆரம்பிக்க மந்திரம் சொல்லாது ஏன் ராஜவேலுவின் பின்னால் துரத்துகிறாள் என்று மதி யோசிக்க, 
“உன்னயெல்லாம் மந்திரம் சொல்லி பிடிக்க அவசியமில்லை. இப்படி துரத்திப் பிடிக்கிறதுலயே சுவாரஸ்யம் இருக்கு” என்றவாறே துரத்த ராஜவேலுவோ மறைந்து மறைந்து தோன்ற மதியும் ராஜவேலு என்ன செய்ய முனைகிறான் என்று புரிய ருத்ராட்ச மாலையை வீழ்த்த தயாரானாள்.

Advertisement