அத்தியாயம் 22
அக்ஷையின் அன்னை இந்திராவதி இறக்கும் பொழுது அக்ஷய்க்கு எழுவயதுதான். அன்னையுடனான நியாபகங்கள் பசுமையானதாகவே! இருக்க, அன்னையின் முகமும் அக்ஷையின் மனதில் நன்றாகவே! பதிந்து தான் இருந்தது.   
“மதி மதி அம்மா…” அக்ஷய் கத்த அவனை சோபாவில் அமர்த்திய மதி ஆசுவாசப்படுத்தி. 
“இத்தனை வருஷமாக அவங்க உங்க கூடவே! தான் இருந்திருக்காங்க அக்ஷய். நாம முதன் முதலாக சந்திச்சோமே! அந்த பொட்டல் காட்டில். உங்க டைவர் உங்கள கடத்தி கொலை பண்ண பாத்தானே! அப்போ உங்க அம்மா உங்க வண்டியின் பின்னாடி உக்காந்து இருந்தாங்க. அவங்கதான் புகைய உருவாக்கி   “ஹெல்ப்”னு கண்ணாடில எழுதி என் கிட்ட உதவி கேட்டு உங்கள காப்பாத்தும் படி கேட்டாங்க” 
“என்ன சொல்லுற மதி?” 
“உங்க கண்ணுக்கு ஆவிகள் தெரியுமா? அவங்க பேசுறது கேட்குமா?” 
“இல்ல இந்த காப்பு அம்மா கொடுத்தது. அம்மா இறக்குறதுக்கு முன்னால ஒருநாள் என்ன கூப்பிட்டு. இது உனக்கு சொந்தமானது. இத நீ பெரியவனானதும் போட்டுக்க, யார் கேட்டாலும் கொடுக்காத, யாருக்காகவும் கொடுக்காதான்னு சொன்னாங்க” 
சில நிமிடங்கள் மெளனமாக இருந்தவன் “டீனேஜ்ல அம்மா நியாபகத்துல ஒருநாள் இந்த காப்ப எடுத்து போட்டுகிட்டேன். அப்போ வெள்ளையா சில உருவங்கள் என் கண் முன்னாடி நடமாடுறத கண்டு பயந்து, இந்த காப்ப தொடவே! இல்ல. அப்பொறம் நீ என் வாழக்கைல வந்த பிறகுதான் இத போட்டுகிட்டேன். அதன் பிறகு இத கழட்டவே! இல்ல” தான் அணிந்திருந்த பித்தளையா? வெள்ளியா? செப்பா? என்று பிரித்தறிய முடியாத அந்த காப்பை பார்த்தவாறே அக்ஷய் கூற 
“ஒன்னு கவனிச்சீங்களா? இந்த காப்ப போட்டதால, உங்க அம்மா உங்க கண்ணுக்கு தெரிஞ்சாக, அவங்க பேசினது நீங்க நேரடியாகவே கேட்டீங்க” மதி சந்தோஷமாகவே! சொல்ல 
“ஆமாம் மதி. மத்த ஆவிங்க வெள்ள உருவமா மட்டும்தான் என் கண்ணுக்கு தெரியும். அம்மா மட்டும்தான் தெரிஞ்சாங்க. அப்போ ஏன் அம்மா இவ்வளவு நாளும் என் கண் முன்னால வராம இருந்தாங்க?” கவலையான குரலில் மதியிடமே கேட்டான் அக்ஷய். 
“உங்க அப்பாவ மூன்றாம் தாரமா கல்யாணம் பண்ணதால அவங்கள நீங்க தப்பா நினைப்பீங்களோ! என்கிற பயம் தான் அக்ஷய்” மதி அவனை சமாதானப்படுத்த 
“நான் என்னைக்குமே! அவங்கள தப்பா நினைக்கல மதி” வெறுமையான குரலில் கூறினான் அக்ஷய்.
“அது அவங்களுக்கு தெரியாதே! உங்க வீட்டுல கூட அவங்க போட்டோ இல்ல. அட்லீஸ்ட் அவங்க போட்டோ முன்னாடியாவது புலம்பி இருந்தா அவங்களுக்கு புரிஞ்சி இருக்கும்” அவனின் கவலையை போக்க வேண்டியவளோ! அவனை குறை கூற ஆரம்பிக்க
“அவங்கள பார்த்தா அவங்க இல்ல என்கிற நினைப்புல இருந்து என்னால வெளிய வர முடியல மதி” என்றவன் அமைதியாக 
அவனின் வேதனையை உணர்ந்தவள் அவனை அதிலிருந்து வெளிக்கொண்டுவர வேறு விதத்தை கையாண்டாள்.
“ஆனாலும் உங்க அம்மா இவ்வளவு அழகா இருக்க கூடாது. இறந்து ஆவியானவங்களும் அந்த வயசுலயே இருக்காம வயசாகணும்பா… அப்பா என்ன அழகு” மதியின் குரலில் பொறாமை இழையோட அவளை திரும்பி பார்த்த அக்ஷையின் முகத்தில் புன்னகை சாயல் 
“ஆமா ஆமா எங்கம்மா முன்னாடி உன் அழகெல்லாம் தூசு தான். பக்கத்துல கூட நிக்க முடியாது” 
“ஒரு பேச்சுக்காவது. இல்ல, மதியழகி நீ ரொம்ப அழகா இருக்கானு சொல்லுறீங்களா?” கோபமாக கூறியவள் அவனை அடிக்க துரத்த, அறையை சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருந்த அக்ஷய் தப்பிக்க வழி இல்லாமல் அறையை விட்டு வெளியே ஓடி இருந்தான்.  
வாசலில் சிம்ரன் அமர்ந்திருப்பதை கண்டு மதி அக்ஷையை துரத்துவதை நிறுத்தி விட்டு “சிம்ரன் நீ எப்போ வந்த” என்று கேட்க 
“நான் அப்போவே வந்தே மதி. உன் ரூம்ல நீ இல்ல…..” என்று இழுத்து சொன்னவள் அக்ஷையின் அறையில் நீங்கள் இருவரும் எந்த நிலையில் இருப்பீர்களோ! அதனால் வரவில்லை. என்று நாசுக்காக சொல்ல புரிந்துகொண்ட விதமாக மதி புன்னகைக்க, 
மதி துரத்துவதை நிறுத்தியதும் அவளை திரும்பி பார்த்த அக்ஷய் அவள் சிம்ரன் என்று பேச ஆரம்பிக்கவும் அங்கே இருந்த வெள்ளை உருவம் சிம்ரன் என்பதை கண்டு கொண்டவன். தன்னால் அவள் பேசுவதை கேட்கமுடியாதே! என்று பெருமூச்சு விட்டான். 
அக்ஷையின் அறையில் பேசினால்தான் பிர்ஜு நோட்டம் விடமாட்டான் என்று அறிந்த மதி சிம்ரனுக்கு செய்கை செய்தவாறு அக்ஷையின் அறைக்கதவை திறக்க, அக்ஷையும் அவள் கூடவே உள்ளே நுழைந்தான். 
“இன்றைய நாளில் பெரிய அதிர்ச்சியாக பலவற்றை கேட்டாயிற்று. சிம்ரன் புதிதாக என்ன சொல்ல போகிறாள்? அவளை கொன்றது அஜய் என்று கூற போகிறாள். அவனை சாட்ச்சியோடு பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். தந்தைக்கு அவன் தன் மகன் இல்லை என்ற உண்மை தெரியும் பொழுது அவர் நிலைமை என்னவாகுமோ!” பலவற்றை சிந்தித்தவாறு சோபாவில் அமர்ந்த அக்ஷையை பார்த்த மதி 
“உங்களுக்கு சிம்ரன் கண்ணுக்கு தெரிகிறாளா?” 
“வெள்ளை உருவம் மட்டும்தான் பேசுவது கேட்காது” 
“அவள் சொல்லுறத நான் உங்களுக்கு சொல்லுறேன் என்றவள் சிம்ரனிடம் கூறுமாறு பணிக்க சிம்ரன் கூறலானாள். 
“இந்திரா ட்ரஸ்ட் மூலம்தான் படிச்சேன். அது உங்க அம்மா பேர். உங்க கம்பனிலையே வேல கிடைச்சது. அஜய் சார தற்செயலா லிப்ட்டு கிட்ட சந்திச்சு பேசினதா சொன்னேனே! அங்கிருந்துதான் என் வாழ்க்கைல எல்லாம் மாறி போச்சு” சிம்ரன் பெருமூச்சு விட்டவாறே சொல்ல மதி அமைதியாகவே கேட்டுக் கொண்டு அக்ஷய்க்கு கூறலானாள். 
“அவர் திட்டமிட்டுதான் என் கிட்ட வந்து பேசி இருக்கிறார். சீசீடிவி மூலம் என்ன கண்காணிச்சு நான் போற இடத்துக்கெல்லாம் வந்து நின்னு புரளியை கிளப்ப காரணமா இருந்திருக்கிறார்” 
“அப்படி பண்ணுறதுல அவருக்கு என்ன லாபம்” மதி யோசனையாக கேட்க 
“அது மட்டுமில்ல அவரோட பேசினது காஜல் தான் எங்குறத அவ பேசின ரெண்டாம் நாளே! கண்டு பிடிச்சி அவ சொத்துப்பத்து வரை அலசி ஆரஞ்ச பிறகுதான் காதலிக்கவே! ஆரம்பிச்சிருக்கிறாரு” சிம்ரன் வெறுப்பாக கூற, மதி ஆச்சரியப்பட, அக்ஷய் இதை ஓரளவுக்கு எதிர்பார்த்த முகபாவத்தை கொடுத்தான். 
“இதுல புரளியை கிளப்பின் உங்க அண்ணன் அஜித்” 
“அவனுக்கு புரளியை கிளப்புறது மட்டும்தான் வேல. என்ன நடக்குது தெரிஞ்சி செய்யுறானா? தெரியாம செய்யுறானா? இல்ல அவனும் கூட்டா? அக்ஷய் கோபமாக பேச 
“இல்ல அவரை இருட்டுலையே வச்சிருக்குறாரு. அக்ஷய் சார் இப்போ நான் சொல்ல போறத கேட்டு நீங்க எப்படி எடுத்துப்பீங்கனு தெரியாது. ஆனா சொல்லித்தான் ஆகணும். அஜய் உங்க சொந்த அண்ணன் இல்ல” சிம்ரன் தயங்கி தயங்கி சொல்ல 
“தெரியும் சிம்ரன். அவன் எங்க அப்பாக்கு பொறக்கல, அவன் அம்மா என் அப்பாவை ஏமாத்தினது வர தெரியும். இத நீ சொல்லி இருந்தா நம்புறது கொஞ்சம் கஷ்டம்தான். சொல்ல வேண்டியவங்க சொன்னதால முழுசா நம்பிட்டேன். மேல சொல்லு” அக்ஷய் அதை பற்றி பேசவோ! கேட்கவோ! விரும்பாதவனாக சொல்ல 
“அஜய் சாரை பெத்த அப்பா உதித் அஜய் சாரை சந்திச்சு உண்மையை சொல்லி டி.என்.ஏ டெஸ்ட் வரை எடுத்திருக்கிறார். எங்க தனக்கு சொத்து கிடைக்காம போயிடும்னு பயந்த அஜய் சார். சொந்த அப்பாவையே கூட்டு சேர்த்து கிட்டு குடும்பத்துல இருக்குற ஒவ்வொருத்தரையா வீழ்த்த திட்டம் போட்டிருக்கிறார்” என்றவள் சிறுது நேரம் அமைதியாக, மதியும், அக்ஷையும் அவள் அமைதியை குலைக்கவில்லை. 
“அஜித் சர்க்கு எப்படியும் உங்க மேல வெறுப்பு இருக்கு அத பயன் படுத்தி அவங்க அப்பாவை அவர் கூட பழக வச்சி அவரை உசுப்பேத்திக்கிட்டே இருந்திருக்கிறார். இந்த புரளியை கிளப்பி விடுற வேலையெல்லாம் பாத்திருக்கிறாரு. என்ன அணுகி புரளியை கிளப்பி அத ஈஸியா உண்மை இல்லனு உடைச்சி அஜித் சார் மூக்கை உடைச்சி அவரை கம்பனில இருந்து தூக்க தான் அஜய் சாரோட திட்டம். பார்க்க சாதாரண திட்டம்தான். ஆனா உங்க அப்பாக்கு தெரிஞ்சா விளைவுகள் எப்படி இருக்கும்னு உங்களுக்கு தெரியுமே! அதுவும் உங்கள பத்தின புரளி சாதாரண புரளியா?”
“காஜலை காதலிக்கிறத, இவரே உங்க அப்பா கண்டு பிடிக்கிற மாதிரி பண்ணி இருக்கிறார். இவர் போன் பேசும் பொழுது உங்க அப்பா வேற ஒரு லைன்ல இருந்து போன எடுத்து பேச போய் காஜலோடு அஜய் சார் பேசுறத கேட்டு உங்க அப்பா கல்யாண பேச்சு ஆரம்பிச்சிட்டாரு. எல்லாம் அஜய் சார் திட்டப்படிதான் நடந்தது”
“ஆனா அவரே எதிர்பார்க்காத ஒன்னு உங்க அப்பா உங்க பேர்ல அறுபது வீதமான சொத்துக்களை எழுதி வச்சிருக்குறாரு. அத கைப்பற்ற நீங்க கையெழுத்து போடணும். அது உங்கள மிரட்டி போட வைக்க முடியாதே! அதனாலதான் இந்த பாசமலர் டிராமா” 
சொத்து விஷயம் அக்ஷய்க்கு புதிய செய்தி என்றாலும் புரிந்துகொண்டேன் எனும் விதமாக தலையசைத்து கேட்டுக்கொண்டிருந்தான். 
“கடைசியாக உங்க அப்பா. தான் அவரோட சொந்த மகன் இல்லை என்கிற உண்மை தெரிந்து விட்டால் கண்டிப்பாக பிரச்சினை பண்ணுவார் என்று…” சிம்ரன் சொல்லாமல் தடுமாற 
“அவருக்கு சாப்பாட்டுல விஷம்வைக்க ஆரம்பிச்சுட்டான். இல்லையா. அத நான் எப்படியோ கண்டு பிடிச்சிட்டேன். ஆனா அத அந்த பொம்பள பண்ணுறதா தான் இவ்வளவு நாளும் நினைச்சி கிட்டு இருந்தேன். கையும் களவுமா ஆதாரத்தோடு பிடிக்கணும்னுதான் காத்துகிட்டு இருந்தேன். ஆள் தான் மாறிப்போச்சு. இனி தப்பிக்க முடியாது” அக்ஷய் கர்ஜிக்க மதி அவனை அமைதி படுத்தலானாள். 
“எனக்கு தெரிய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான் சிம்ரன். அஜையோடு அவன் அப்பன் கூட்டு அவன் அம்மாக்கு இத பத்தி தெரியுமா? அந்த பொம்பள கூட்டா? அஜித்துக்கு இந்த விஷயம் எவ்வளவு தூரத்துக்கு தெரியும்? நீ எப்படி செத்த” அக்ஷய் கேள்விகளை ஏவுகணைகளாக தொடுக்க, 
“அந்த அம்மா பணத்தாசை புடிச்சவங்க, சுயநலவாதிதான், தன் சந்தோஷம் முக்கியம்னு நினைக்கிறவங்கதான். அவங்க அவங்களோட முன்னாள் காதலன் அஜய் சாரோட அப்பாவை சந்திச்சு பேசுறத நான் பார்த்ததே இல்ல” 
“உனக்குத்தான் எதுவுமே! நியாபகம் இருக்கலையே! பின்ன எப்படி சொல்லுற?” மதி யோசனையாகவே கேட்க 
“அந்த ஆள் தான் என்ன மொட்டைமாடியிலிருந்து தள்ளி விட்டு கொன்னான். அவனை பார்த்ததும் எல்லாம் நியாபகம் வந்திருச்சு”
“நேத்து அவனை பாத்தியா?” அக்ஷய் கேட்க 
“அஜித் சாரை பின் தொடர சொன்னதுல அந்தாளு அஜித் சார் கூட குடிச்சிட்டு இருந்தான் அதுல எல்லாம் நியாபகம் வந்திருச்சு” 
“அன்னைக்கி என்ன நடந்ததுன்னு சொல்லு சிம்ரன்” மதி கூற 
“அன்னைக்கிதான் தாஞ்மகால எடுத்துக்கொண்டு அஜய் சாருக்கு கொடுக்க போனேன். அவர் ஆபீஸ்ல இருக்கிறதா சொன்னாரு. நேரா ஆபீசுக்கே போனேன். உள்ள போனா அங்க அவர் இல்ல தாஜ்மகாலை மேசைல வச்சிட்டு அவருக்காக காத்துட்டு இருந்தேன். சீசீடிவில அவர் லிப்டுல போறத பார்த்துட்டு ஓடினேன். அவர் மொட்டை மாடிக்கு போறத பாத்துட்டு நானும் மத்த லிப்ட்டுள்ள ஏறினேன். அது பதினெட்டாம் மாடியிலையே நின்னிருச்சு. சரினு படி வழியா ஏறினேன்.
 அப்போதான் அஜய் சார் அவர் அப்பாவை சத்தம் போட்டுக்கிட்டு இருந்தாரு. அசோக் சாருக்கு கொடுத்த விஷம் இந்நேரம் அவர் உயிரை வாங்கி இருக்கணுமே! வங்களையே! நீ என்ன விஷத்தை வாங்கிட்டு வந்தனு திட்டிகிட்டு இருந்தாரு. நா அதிச்சில அப்படியே கதவு கிட்ட நின்னுட்டேன். 
அப்போ அவரோட அப்பா அதான் அந்த “காஜல் பொண்ண வளச்சி போட்டியே உன் அப்பனை வச்சி அவளை கல்யாணம் பண்ணு அதுக்கு பிறகு அவன் சோழிய முடிக்கலாம்னு சொன்னாரு. 
“இல்ல அவன் அக்ஷய் பேர்ல அறுவது பேசன்டேஜ் சொத்து எழுதி வச்சிருக்கான் அத எழுதி வாங்குறது எப்படினு பார்க்கணும்”
“அவன் கூட நல்ல முறைல பழகுனு சொன்னது இதற்குத்தான் சமயத்துல கைகொடுக்கும்” 
“என்னென்னவோ பேசிக்கிட்டாங்க எனக்கு ஒன்னும் புரியல, மெதுவா அங்கிருந்து போலாம்னு பார்க்கும் பொழுது அந்தாளு கதவை திறந்து என் முடிய பிடிச்சி இழுத்து என்ன கீழ தள்ளிட்டாரு” 
“நீ அங்க இருந்தது அவருக்கு எப்படி தெரியும்” மதி புருவம் உயர்த்த 
“ரொம்ப நேரமா பொண்ணுங்க போடுற செண்ட்டு வாசனை வருதே எங்க இருந்து வருதுன்னு மோப்பம் புடிச்சேன். கதவுக்கு பின்னால இருந்து கழுதை ஒட்டு கேட்டுகிட்டு நின்னுகிட்டு இருக்கா? யாரு இவ? உனக்கு வேண்டியவளா? வேண்டாதவளா?” அஜய்யின் அப்பா குரூரமாக சிம்ரனை பார்த்து கேட்க 
“வேண்டப்பட்டவதான். இவள வச்சி ரெண்டு காய் நகர்த்தினேன். இப்படி அநியாயமா ஒட்டுக்கேட்டு சிக்கிட்டாளே!”
“ஐயோ நான் ஒன்னும் கேக்கல இப்போதான் வந்தேன். தாஜ்மகால், தாஜ்மகால் கொண்டுவந்தேன்” சிம்ரன் கதற 
“அட ஆமா… உன்ன வர சொன்னதையே மறந்துட்டேன் பாரேன். அத எடுத்துக்கொண்டு காஜலை பார்க்க போகணும். அப்பா நீ இவள முடிச்சிடு. தாஜ்மகாலை எங்க வச்சிருக்க? ஆபீஸ்லயா?” என்ற அஜய் லிப்ட்டினுள் நுழைய அஜய்யின் தந்தை சிம்ரனை இழுத்துக்கொண்டு சுவரின் புறம் நகர்ந்தார். 
சிம்ரன் எவ்வளவு கதறியும் அவளை மொட்டை மாடியிலிருந்து தள்ளி விட்டவர் அஜய் சென்று சிறிது நேரத்தின் பின் அந்த கம்பனியிலிருந்து வெளியேறி இருந்தார்.
அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு கம்பனியில் யாருமில்ல. சிகிரியூட்டி ரௌண்ட்ஸில் வரும் பொழுது அரை மணித்தியாலத்துக்கு மேல் சென்றிருக்க, அதன் பின் போலீஸ்கு தகவல் சென்று, போலீஸ் வந்து அஜய்க்கு தகவல் சென்று அவன் வர என்று இன்னும் சில மணித்தியாலங்கள் செல்ல, சீசீடிவி காட்ச்சிகளும் அழிக்கப்பட்ட நிலையில் சிம்ரன் எப்பொழுது வந்தாள்? ஏன் வந்தாள்? யாரை சந்திக்க வந்தாள்? கேள்விக்குறியாகவே இருந்த நிலையில் அஜய்த்தான் கம்பனிக்கு வந்தான் என்று சிகிரியூட்டியின் வாக்கு மூலம் பதிவாகி இருக்க, அவனோ! தான் சிம்ரனை சந்திக்கவே இல்லை என்று கூற அவன் திரும்பி சென்ற காட்ச்சிகள் இல்லை, அவன் சென்றதை சிகிரியூட்டி பார்க்கவில்லை என்ற பல குழப்படிகள் சிம்ரனின் இறப்பில் கொலையா? தற்கொலையா? என்று கேஸ் பைல் தடுமாறும் நிலையில் அஜித் கிளப்பி விட்டிருந்த புரளி வேறு அஜய்யை இலகுவாக வெளிக்கொண்டு வந்திருந்தது.
“ஆமா சிம்ரன் நீ எங்க போன?” மதி வினவ 
 “அதான் அந்த ஆளு அஜய் சாரோட அப்பா எங்க தங்கி இருக்காருன்னு தெரியனுமே! எந்த ஏரியா? எங்க இருக்காருன்னு? என்ன பண்ணுறாருனு? எல்லாம் பார்த்துட்டு வரேன்” கூலாகவே பதில் சொன்னாள் சிம்ரன்.
“என்ன அநியாயம். தள்ளி விட்டதுக்கும், குதித்ததுக்கும் பொசிசன் வித்தியாசப்படுமே!” யோசனையாக இருந்த அக்ஷய் திடீரெண்டு சொல்ல 
“இருபது மாடி அக்ஷய். அந்த ஆளுக்கு இதெல்லாம் சாதாரணம் போல. சிம்ரன் விழுந்திருந்த என்கில் கொலையா? தற்கொலையானு? என்னையே யோசிக்க வச்சிருக்கு” 
“அது சரி புரளி? ஒருத்தன் காதலிச்சு ஏமாத்தினா? ஒரு பொண்ணு தற்கொலை பண்ணுறானா? ஒரு துண்டு பேப்பர் கூடவா எழுதி வைக்க மாட்டா?” அக்ஷய் கேட்க 
“ஆமா இல்ல. இத நாம யோசிக்கவே இல்லையே!”
“அதான் அஜய் சார் என்ன காதலிக்கவே இல்லையே! சிம்ரன் சொல்ல
“அப்போ நீ தற்கொலை பண்ணிக்கல உன்ன கொலை பண்ணி இருக்காங்க. இல்லையா?” மதி கூற அக்ஷய் புன்னகைத்தான். 
“அப்போ அவருக்கு தண்டனை வாங்கி கொடுப்பீங்களா” தன்னை கொன்றவனுக்கு தண்டனை கிடைக்குமா என்று சந்தோசமாக கேட்டாள் சிம்ரன். 
“அதுக்கு அவங்க ரெண்டு பேரும் உண்மையை ஒத்துக்கணும். அவங்க வாயலையே உண்மையை ஒத்துக்கணும். அது லேசுப்பட்ட காரியம் இல்லையே!” அக்ஷய் தாடையில் கைவைக்க முகம் சுருங்கினாள் சிம்ரன். 
“கண்டிப்பாக முடியும். நமக்குத்தான் சூப்பர் பவர் இருக்கே அக்ஷய். இதுக்கெல்லாம் சரியான ஆளு அப்பாதான் உடனே அவரை வர சொல்லுறேன்” மதி தந்தையை காண போகும் ஆவலில் கூற 
“மிஸ்டர் ராஜவேலு, மிஸ்டர் ராஜவேலு சீக்கிரம் வந்து சேருங்க” அக்ஷய் இங்க இருந்தே குரல் கொடுக்க அவனை முறைக்கலானாள் மதி.