அக்ஷையும் மதியும் கம்பனியின் உள்ளே நுழைந்ததிலிருந்து அவர்களை சீசீடிவியினூடாக கண்காணித்துக்கொண்டிருந்த அஜய் மதி மயக்கம் வருவது போல் அக்ஷையின் தோளில் சாய்ந்து கொண்டு நடப்பதும், அக்ஷய் அவளை தாங்கிப்பிடித்தவாறு அழைத்துக்கொண்டு வண்டியின் அருகில் செல்வதும் தெரிய உடனே அக்ஷய்க்கு அழைப்பு விடுத்தான்.
மதியை வண்டியில் அமர்த்திய அக்ஷய் அலைபேசியை உயிர்ப்பிக்க, பொறுமையில்லாமல் அஜய்யின் குரல் ஒலித்தது.
“ஹலோ அக்ஷய் மதிக்கு என்ன ஆச்சு?”
“தலைசுத்துது, மயக்கம் வருதுன்னு சொல்லுறா… நானே போன் பண்ணலாம்னுதான் இருந்தேன். நல்லவேளை நீயே போன் பண்ணிட்ட, காஜல் கிட்டயும் சொல்லிடு. இன்னொரு நாள் வரோம். மதிக்கு க்ளைமேட் ஒத்துக்களை போல” என்றவன் அலைபேசியை அனைத்து விட்டு வண்டியை வேகமாக தனது இருப்பிடம் நோக்கி செலுத்த ஆரம்பிக்க மதி நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்.
ஐந்தாம் மாடியில் அஜய்யின் காரியாலயம் இருப்பது போல, பத்தாம் மாடியில் அசோக் சாம்ராட்டின் காரியாலயமும், பன்னிரண்டாம் மாடியில் அஜித்தின் காரியாலயமும், பதினைந்தாம் மாடியில் அக்ஷய்க்கென காரியாலயமும் இருக்க, இருவரும் உள்ளே சென்று பார்வையிட்டனர்.
அவ்வறை உபயோகிக்காமல் இருப்பதன் அடையாளமாக தூசி இல்லாமல் இருந்தாலும், மரச் சாமான்களின் வாசனை நாசியை துளைக்க,
“யாருமே இல்லாத கடைக்கு யாருக்கு அக்ஷய் சார் டி ஆத்துறீங்க?” மதி கிண்டலடிக்க
அவள் காதை திறக்கியவன் “ஏன் நீ வந்து ஆத்தேன்”
“எனக்கு என் யூனிபார்ம் போதும் சார்”
இவ்வாறு கிண்டல் செய்தவாறே கம்பனியினுள் வளம் வந்தவர்கள், தந்தையையும் சென்று சந்திக்க, அசோக் சிலரை அக்ஷய்க்கு அறிமுகம் செய்து வைக்க, சிலர் தானாக வந்து அறிமுகம் செய்துகொண்டனர்.
அதன் பின் தான் மொட்டை மாடிக்கு இருவரும் லிப்டில் சென்றதே!
மொட்டை மாடியை சுற்றி இடுப்பளவுக்கு சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அங்கங்கே அமர்வதற்கு சீமெந்து பெஞ்சுக்கள் வேறு அமைக்கப்பட்டிருக்க, தரை புல் தரையாக பராமரிக்கப்பட்டது. பிரேக் டைமில் அங்கே விரும்பியவர்கள் வருவார்கள் என்று புரிந்தது.
சிம்ரன் வந்தது, இறந்தது ஒரு ஞாயிற்றுக்கிழமை. லீவு நாளன்று, யாருமே இல்லாத நாளன்று அவள் அங்கு வர வேண்டிய நோக்கம் தான் என்ன? அஜித்தை பின் தொடர்ந்து வந்தாளா? மதி யோசித்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் சிம்ரன் அங்கே கண்ணீரோடு காட்ச்சி தந்தாள்.
“என்ன ஆச்சு சிம்ரன்” மதியின் ஒற்றை கேள்வியில் பதில் சொல்லாமல் மேலும் அழலானாள் சிம்ரன்.
மதி சிம்ரன் அழுவதை அக்ஷையிடம் கூற, நேற்று அஜித்தை கண்காணிக்க சொன்னதில் ஏதாவது அறிந்து கொண்டிருப்பாள் அதனால் தான் அழுகிறாள் என்று அக்ஷய் பேச
“எனக்கு எல்லாம் நியாபகம் வந்து விட்டது மதி. நான் எப்படி இறந்தேன். யார் என்னை கொன்றது. எல்லாம் நியாபகம் வந்து விட்டது. முதலில் நாம் இங்கே இருக்க வேண்டாம். உங்க இடத்துக்கு போலாம்” சிம்ரன் அவசரப்படுத்த
“என்ன சொல்லுற சிம்ரன்?” மதி
“நீங்க நினைக்குற மாதிரி என் சாவுக்கு அஜித் காரணமில்லை அஜய் தான் காரணம்”
“என்ன சொல்லுற?” என்று அதிர்ந்த மதி சிம்ரன் கூறியதை அக்ஷையிடம் கூற அவனும் அதிர்ந்தான்.
“நான் சொல்லுறத கேளுங்க முதல்ல இங்க இருந்து போலாம்” சிம்ரன் கூறியதை மதி கூறவும் சுற்றிமுற்றி பார்த்த அக்ஷய் அங்கே எந்த சீசீடிவி கேமராக்களும் இல்லை என்றதும் ஆசுவாசமடைந்தவன்
“மதி திடீருனு நாம போனா அஜய்க்கு சந்தேகம் வரும், சிம்ரன் சொல்லுறத பாத்தா அவன் பிளான் பண்ணி நிறைய வேல பாத்திருக்கான் போல தெரியுது. இனி நாம வைக்கிற ஒவ்வொரு அடியையும் பாத்து வைக்கணும்”
“டோன்ட் ஒர்ரி அக்ஷய். இப்போ எனக்கு மயக்கு வருது, உடம்பு முடியாம நாம இங்க இருக்க முடியாதில்ல உடனே ஹோட்டலுக்கு திரும்புறோம். என் கணிப்பு சரினா உங்க பாச…மலர் எங்களை நோட்டம் விட்டுகிட்டு இருப்பான். அவனே! போன் பண்ணுவான் பண்ணினா பதட்டமா பேசுங்க”
மயக்கம் வருவது போல் நடித்த மதி அக்ஷையின் தோள் சாய்ந்து வருவதைக் கண்டு அஜய் போன் செய்தது இவர்கள் நினைத்தது போலவே தான் நடந்தது.
“அன்னைக்கு என்னமா ஆக்ட்டு கொடுத்தான். தங்கச்சி, பாசமலர்னு, எனக்கென்னமோ நான் சொன்னதை நம்பி இருப்பான்னு தோணல அக்ஷய். நான் போலீஸ் என்கிறதால, போட்டு வாங்க போறேனோன்னு நினைச்சிருப்பான். சோ டோன்ட் ஒர்ரி”
“நம்பினாலும் ஆவிங்க கூட அவனால மோத முடியுமா என்ன?” அக்ஷய் கண்சிமிட்ட
“அப்படி அசால்ட்டாக விட்டுடாதீங்க அக்ஷய்” நடித்து, நாடகமாடி தன்னையே ஒருவன் ஏமாற்றி இருக்கிறான். பாசம் காட்டி அக்ஷையை ஏமாற்றி இருக்கிறான். அவன் திட்டம் தான் என்னவோ! மதியின் உள்ளுக்குள் அச்சம் பரவியது.
யோசனைக்குள்ளான அக்ஷய் “ஆமா சிம்ரன் நம்ம கூட தானே! வாரா?” மதியை திரும்பி பார்த்து கேட்க
“இல்ல. நம்மள போக சொன்னா. அவ வந்து சேருறேன்னு சொன்னா”
“செத்துப்போன பொண்ணையே சந்தேக படுறீங்களா?” அவனை நன்றாகவே முறைத்தாள் மதி.
“நான் எல்லாரையும் சந்தேகப்படுவேன் மதி. ஏன் எங்க அப்பாவையே சந்தேகப்படுவேன். நான் சந்தேகப்படாத ஒரே ஜீவன் அம்மா மட்டும் தான். இப்போ நீ. சில சமயம் என்னையே சந்தேகப்படுவேன்னா பாரேன்” என்றவன் சிரிக்க
“என்னது உங்கள நீங்களே! சந்தேக படுறீங்களா? இதெல்லாம் நம்பும்படியா இருக்கு?” தன்னை நம்புவதாக சொன்னவனை பெருமையாக ஒரு நொடி பார்த்தவள் கிண்டல் செய்ய ஆரம்பித்திருந்தாள்.
“பின்ன இந்த போலீஸ்காரிக்கிட்ட கைதாகி இருக்கிறத நினைச்சா எனக்கே ஆச்சரியமாக இருக்கு, உண்மையா? பொய்யான்னு? சந்தேகம் வேற, அதான் அடிக்கடி சந்தேகம் வருது” என்றவன் வாய் மூடி சிரிக்க மதியால் அவனை முறைக்க மட்டும்தான் முடிந்தது.
“மதி இவனை கிண்டல் செய்தால் அவன் உன்னை கிண்டல் செய்துகொண்டிருக்கிறான். இவன் கிட்ட பல்பு வாங்குறதுதான் உன் வேல. என்ன மாதிரி சிட்டுவேஷன் போய்கிட்டு இருக்கு இப்போ உனக்கு இந்த நையாண்டி தேவையா?” மதியின் மைண்ட் வொய்ஸ் ஏகத்துக்கும் குரல் கொடுக்க அமைதியாக அமர்ந்தவள் வெளியே வேடிக்கை பார்க்கலானாள்.
“மதி இப்போ உன் கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். சிம்ரன் இல்லங்குறது நல்லதுதான்” அவள் அமைதியை குலைத்தான் அக்ஷய்.
அக்ஷையின் குரலின் அமைதியே விஷயம் ரொம்ப சீரியஸ் என்று புரிந்து கொண்ட மதி கண்களை அக்ஷையை விட்டு திருப்பினாலில்லை.
“வீட்டில் வைத்து கூட என்னால் உன் கிட்ட இதை பேச முடியாது. இது எனக்கும் அப்பாகும் மட்டும் தெரிந்த ரகசியம்” என்றவன் நெற்றியை தடவிக்கொள்ள மதி அவனை கண்சிமிட்டாமல் பாத்திருந்தாள்.
“எட்டு மாதங்களுக்கு முன் நான் அப்பாவை சிங்கப்பூர்ல வச்சி சந்திச்சேன். ரகசிய மீட்டிங்கோ, திட்ட மிட்ட மீட்டிங்கோ கிடையாது. அவர் ஒரு பிஸ்னஸ்க்காக வந்திருந்தார், நானும் என் வேலையாக திடீருனு போய் இருந்தேன். அந்த ரெண்டு நாளும் அவர் கூடவே இருக்கணும்னு ஆசைப்பட்டு, என் வேலைகளை பாத்துகிட்டு டைம் ஒதுக்கி கூடவே இருந்தேன்.
திடீருனு அவருக்கு உடம்பு முடியாம போச்சு. ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணேன். பெருசா ஒன்னும் இல்லன்னுதான் டாக்டர் சொன்னாரு. மனசு கேக்காம, அவரை வற்புறுத்தி புள் பாடி செக்கப் பண்ண வச்சிச்சேன். அதுல அவருக்கு ஸ்லொவ் பாய்சன் கொடுக்க படுறத கண்டு பிடிச்சேன்”
“என்ன சொல்லுறீங்க அக்ஷய்”
“எஸ் மதி. எனக்கு அந்த பொம்பள மேலதான் சந்தேகம். உடனே அப்பாகிட்ட பேசினேன். மூணு வேலையும் வீட்டு சாப்பாடுதான். பிரேக்பஸ்ட், டின்னர் வீட்டுல, வீட்டாரோடு சாப்பிடுறவரு, லன்ச் வீட்டுல இருந்து வரும் சாப்பாட்டை தான் சாப்பிடுறாரு. அங்கேயே அவருக்கு டிரீட்மென்ட் ஆரம்பிச்சிச்சு, ஹெல்த் இஸு சமயக்காரன் முதல் தனியா பி.ஏ வர என் ஆள வச்சி என் கண்காணிப்புக்கு கொண்டு வந்தேன்”
“தங்க் கோட்” மதி நிம்மதி பெருமூச்சு விட அக்ஷய் தொடர்ந்தான்.
“அஜித்துக்கு என் மேல வெறுப்பு இருந்தாலும் அப்பானா உயிர் அவன் இப்படி எல்லாம் செய்வானானு கேள்விக் குறியாகவே இருந்தது. என் சந்தேகம் அந்த பொம்பள மேலயே இருந்ததுல எப்பொழுதும் அமைதியா இருக்குற அஜய் பக்கம் என் சந்தேக பார்வை போகவே இல்ல. சிம்ரன் சொல்ல போறதுலதான் அப்பாக்கு…..” மேலே பேச முடியாமல் அக்ஷையின் தொண்டையடைக்க, மதி அக்ஷையின் கையை ஆறுதலாக பற்றிக் கொண்டாள்.
குரல் வேதனையில் ஒலித்தாலும் கண்கள் கலங்கி இருந்தாலும் வண்டியை நிதானமாகவே ஒட்டிக்கொண்டிருந்தான் அக்ஷய். ஹோட்டலை அடைய இன்னும் சிறிது தூரம் இருக்க
“அக்ஷய் நா வேணா வண்டிய ஓட்ட வா?” மதி அக்ஷையிடம் கேட்க மறுப்பாக தலையசைத்தவன் வண்டியின் வேகத்தை கூட்டி ஹோட்டலை அடைந்தான்.
சிம்ரன் வரும்வரை பொறுமை இல்லாது அக்ஷய் தனதறையிலையே நடைபயில மதி அமைதியாக அமர்ந்து பாதையை வேடிக்கை பார்த்திருந்தாள். பிர்ஜு வந்து குடிக்க ஏதாவது வேண்டுமா எனக்கேட்டு அக்ஷய் மறுத்து விட, மதி எடுத்து வருமாறு பணித்தாள்.
சிம்ரன் வந்ததும் அக்ஷையை விட பொறுமை இழந்து எழுந்து வந்து கத்தியது மதி தான். அவளை அமைதி படுத்திய சிம்ரன் பேச ஆரம்பித்தாள்.
“அக்ஷய் சார். உங்க குடும்பத்துல ஏகப்பட்ட ரகசியம் இருக்கு, அது என் மூலமா தெரிய வேண்டும் என்பது கடவுளின் சித்தம் போல” என்றவள் எந்த புதிரிரும் போடாமல் நேரடியாகவே விசயத்துக்கு வந்தாள்.
“இது தெரிஞ்ச விஷயம் தானே!” என்று மதியும், அக்ஷையும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள
“அவங்க சுமந்த குழந்தைக்கு அப்பா உங்க அப்பா இல்ல, அவங்களோட காதலன், அந்த ஆளு, ஒரு ஏமாத்துக்காரன், பித்தலாட்டக்காரன், நயவஞ்சகன், இப்படி சொல்லிகிட்டே போகலாம். அந்த அம்மா ஏமாந்துட்டாங்கனு சொல்லலாமா?” சிம்ரனின் பேச்சுத் த்வனி வித்தியாசமாக இருப்பதாக மதிக்கு தோன்றினாலும் குறுக்கிடாமல் கவனிக்கலானாள்.
அக்ஷையும் மதியும் இது என்ன புதுக் கதை என்று சிம்ரனை ஏறிட, சினிமா கதை சொல்வது போல் தொடர்ந்தாள் சிம்ரன்.
“அந்த ஆளோட அழகுல மயங்கி இந்தம்மா காதலிச்சு, ஆசை வார்த்தைகளால ஏமார்த்தப்பட்டாங்க, அந்தாள தேடி ஹோட்டலுக்கு போன நேரம் உங்க அப்பாவை சந்திச்சு இருக்காங்க, அங்க ரெண்டு பேரும் குடிச்சி மட்டையாகி ஒரே ரூம்ல இருந்திருக்காங்க, ஒரு மாசம் கழிச்சி அந்தம்மாக்கு தான் உண்டாகி இருக்குற விஷயம் தெரிய வந்திருக்கு, கூடவே தான் ஏமாத்தப்பட்டுட்டோம் எங்குற விஷயமும். அப்போதான் சுகபோகமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு புதுசா திட்டம் போட்டு உங்க அப்பாவை சந்திச்சு, குடிச்சி மட்டையான போ அவரு இவங்க கிட்ட தப்பா நடந்து கிட்டதாகவும் அதனால இவங்க உண்டாகி இருக்குறதாகவும் கத சொல்லி கல்யாணம் பண்ணிகிட்டாங்க”
“வாட்” அக்ஷய் பெரிதாக அதிர்ச்சியடைய, மதியின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிய கதிரையில் தொப்பென்று அமர்ந்தாள்.
“இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும்? இது உனக்கு தெரிஞ்சதாலதான் உன்ன அஜய் கொன்னானா?” அக்ஷய் ஆணிவேரையை பிடித்து கேள்வியை கேட்க
“இருங்க இருங்க இன்னும் இருக்கு” சிம்ரன் பொறுமையாக கூற இன்னும் என்ன என்ற பார்வைதான் மதியிடம்.
“இத எதையும் அறியாத உங்க அப்பா அவங்க கூட நல்லாத்தான் வாழ ஆரம்பிச்சி இருக்காங்க, தன்னால ஒரு பொண்ணோட வாழ்க கெட்டுப்போக கூடாதேன்னு நினைச்சி அவர் அவங்க சந்தேகம் கூட படல, இந்த மாதிரி விசயத்துல பொண்ணுங்க பொய் சொல்ல மாட்டாங்க எங்குற நம்பிக்கை தான். ஆனா அவங்களுக்கு கடவுள் வச்சாங்க பாருங்க ஆப்பு அங்க இருக்கு. செம ஆப்பு. உங்க அம்மா ரூபத்துல” என்றவள் சிரிக்க,
“அம்மாவ அப்பா காதலிச்சாருனு தெரியும். ஏன் பிரிஞ்சி போனாங்கனு, அப்பாக்கு கல்யாணம் ஆனதை தெரிஞ்ச பின்னாடியும் ஏன் திரும்ப அப்பா வாழ்கைக்குல வந்தாங்க ஒன்னும் புரியல” அக்ஷய் தலைமுடியை பியித்துக்கொள்ளாத குறையாக தலையில் கைவைத்து அமர்ந்திருக்க,
“உங்க அம்மா சாதாரண குடும்ப பொண்ணுதான். உங்க அப்பா பெரிய பணக்காரன் என்று தெரியாமத்தான் காதலிச்சும் இருக்காங்க, அவங்களுக்கு ஏதோ குணப்படுத்தக முடியாத கேன்சர்னு தெரிய வந்ததும் சொல்லாம கொள்ளாம உங்க அப்பா வாழ்க்கைல இருந்து போய்ட்டாங்க”
“வாட்” மீண்டும் அதிர்ந்தான் அக்ஷய். அன்னையின் சாந்தமான முகம் கண்ணுக்குள் வர அவளுக்கு அப்படி ஒரு வியாதி இருந்தது அவனின் நியாபக அடுக்குகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
“எதேர்ச்சையாக மருத்துவமனையில உங்க அம்மாவ சந்திச்ச உங்க அப்பா வற்புறுத்தி கல்யாணம் பண்ணி இருக்காரு. அவங்களோட கடைசி காலமாவது அவர் கூட இருக்க வேணும் என்கிற நப்பாசைதான். உண்மை அவருக்கு தெரிஞ்ச பிறகு உங்கம்மாவுக்கும் அந்த ஆசை இருந்திருக்கும். அதனாலயே மறுப்பு தெரிவிக்காம கல்யாணம் பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கிறேன். இல்லனா கடவுள் கணக்கு தப்பாகிடுமே!”
மதி அதை ஆமோதிக்க, “அப்போ அஜித்?” அக்ஷய் அதி முக்கியமான கேள்வியாக அப்படியானால் அஜித் யாருடைய மகன் என்ற கேள்வியை முன் வைத்திருக்க,
“அது எனக்கு எப்படி தெரியும்? நானா அந்தம்மாக்கு பிரசவம் பார்த்தேன்?” என்றாள் சிம்ரன்.
அந்த சூழ்நிலையிலும் மதியால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. எல்லாம் மறந்து அமைதியாக உலவிக்கொண்டிருந்த சிம்ரனா இவள் என்கிற அளவுக்கு துடுக்குத்தனமாக பேசிக்கொண்டிருந்தாள் அவள்.
அக்ஷய் குழப்பத்தின் உச்சியில் அமர்ந்திருக்க, அவனருகில் அமர்ந்த மதி “அக்ஷய் ரிலேக்ஸ்”
“நோ மதி அம்மாவ நா என்னைக்கும் தப்பா நினைச்சது கிடையாது. நினைக்கவும் மாட்டேன். அவங்க மருந்து சாப்பிடுறது கூட எனக்கு தெரியாம பாத்துக்கிட்டாங்க பாத்தியா? அதான் என்னால தாங்க முடியல, அவங்க கண்ணுல ஏதோ ஒரு வலி இருந்துகிட்டே இருக்கும். அப்பாவோட இன்னொரு குடும்பத்தை பத்தி தெரிஞ்சிகிட்ட பிறகு அதனாலதான்னு நினச்சேன். ஆனா அது என்னையும், அப்பாவையும் விட்டுட்டு போறோம் எங்குற வலி என்பது இப்போதான் புரியுது” என்றவனின் கண்களில் நீர் நிரம்பி இருந்தது.
அக்ஷையின் அந்த வார்த்தைகள் சிம்ரனை சற்று அசைத்தது.
“எப்போயோ டிக்கட் எடுத்துட்டு மேல போக வேண்டியவங்களுக்கு குழந்தையையும் கொடுத்து, அவனை குறிப்பிட்ட காலம்வரை பாத்துக்க கால அவகாசமும் கடவுள் கொடுத்தார்னா காரணம் இல்லாம இருக்காது அக்ஷய் சார்” சிம்ரனின் குரலுக்கு அவளை திரும்பி பார்த்த அக்ஷய் அவள் என்ன சொல்ல விளைகிறாள் என்று கூர்ந்து கவனிக்கலானான்.
அது அவனின் மறுபிறப்பைத்தான் என்பது அவனின் ஆறாம் அறிவுக்கு எட்டினாலும் சிம்ரனுக்கு இது எப்படி தெரியும் என்று அவளையே! பாத்திருக்க,
“நீங்க பொறந்த உடனே உங்க அம்மா இறந்திருந்தா? உங்க நிலைமை? அந்த பொம்பள உங்கள கொன்னு இருப்பா. எல்லாம் அறிந்த வயசுலதான் அந்த குடும்பத்துக்குள்ள போறீங்க, உங்க மேல பாசம் காட்டி உங்கள போட்டு தள்ளாம, வெறுப்பை அப்பட்டமா காட்டினதால தப்பிச்சிட்டீங்க இல்லனா?” சிம்ரன் சொல்லும் பொழுதே! மதியால் அதை யோசிக்க கூட முடியவில்லை.
“அந்த பொம்பளையோட குணம் அறிஞ்சி உங்க அம்மாதான் ஆவியா இருந்து, அந்த பொம்பள உடம்புல புகுந்து ஆட்டம் காட்டி இருக்கணும். பசங்களையும் கெடுத்து குட்டிசுவராக்கி வச்சிருக்கா. அவளை விடு.” என்றவள் சுதாரித்து “அக்ஷய் உங்கள ஒரு தடவ நான் கட்டி பிடிக்கட்டா?”
ஏன், எதற்கு என்றெல்லாம் அக்ஷய் கேட்கவில்லை. தலையசைத்து சம்மதம் தெரிவிக்க, வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல் பறந்து வந்தவள் அவனை தழுவி இருக்க, அக்ஷையால் அந்த ஸ்பரிசத்தை நன்கு உணர முடிந்தது.
“மதி என்ன பாக்குற நீயும் வா” என்று அழைப்பு விடுத்தவள் மதியும் அவர்களோடு சேர்ந்துகொள்ள “மதி இவ்வளவு காலமா அக்ஷய நான் பார்த்துக்கொண்டேன். இனி நீ தான் பார்த்துக்கொள்ளனும். நான் முக்தி அடஞ்சிட்டேன்” என்றவள் இந்திராவாக மாற மதி அதிர்ச்சியாக பார்த்திருக்க, அக்ஷய் “அம்மா” என அழைக்க
“நீ என்ன மனத்தால் வெறுக்கிறியோ என்றுதான் சிம்ரன் உருவத்துல வந்தேன். நான் உனக்கு மகளாக பிறப்பேன் அக்ஷய்” என்றவாறே தங்கத்துகள்களாக மாறி காற்றில் கரைந்து மறைந்தாள் இந்திரா.