அத்தியாயம் 20
ரெஸ்டூரண்ட்டுக்கு தவறுதலாக வந்த காஜல் ஏன் அஜய் வைத்து சென்ற பரிசை எடுத்து சென்றிருக்க கூடாது என்று மதி சந்தேகத்தை கிளப்ப 
“என்ன மதி குழப்புற?” அக்ஷய் குழம்பியவனாக நெற்றியை தடவ காஜல் அதிர்ச்சி அடைந்தாள் என்றால் அஜய் புன்னைகைத்துக் கொண்டிருந்தான். 
“என்ன அஜய் மாமா உங்களுக்கு அந்த சந்தேகம் இல்ல போல. போன்ல என்னெல்லாம் பேசினீங்கன்னு அதுக்குள்ள பேசிட்டிங்களா? இந்தம்மா எதுக்கு இப்படி அதிர்ச்சியாகுறாங்க?” என்று காஜலை கிண்டல் செய்தாள் மதி. 
“அலைபேசியில் பேசியவற்றை மீண்டும் பேசி அது காஜல் தானா என்று காண்போம் பண்ணிக்கொண்டாயா?” என்று மதி சூட்சமமாக கேட்டாளா? கிண்டலாக கேட்டாளா? காஜல் மதியை முறைக்க அக்ஷையும் சேர்ந்து முறைத்தான். 
“இவ கிண்டல் செய்கிறாளோ? சீரியஸா பேசுகிறாளா? என்றே புரிய மாட்டேங்குது. போலீஸ்காரிக்கு கிண்டல், நக்க, நையாண்டி, குத்தல், குசும்பு எல்லாம் வருது டோய்” என்று கூறியவாறே அக்ஷய் அண்ணனின் தோளில் கை வைத்திருக்க, அக்ஷையின் இந்த பேச்சை ரசிக்கலானான் அஜய். 
அக்ஷையோடு இவ்வாறு நெருங்கி நின்று பேசவும்,தோளில் கை போட்டு கிண்டல் செய்வதும் அஜய்யின் கனவு என்றே சொல்லலாம் அது இன்று நிறைவேறியதில் ஆசையாக தம்பியை பாத்திருந்தான்.
“அப்போ நான் பொய் கூறுகிறேனா? நாடகமாடி அஜய்யை கல்யாணம் செய்துகொள்ள போகிறேனா?” மதியின் கிண்டலை புரிந்துகொள்ளாமல் காஜல் கோபமாக பேச 
“பின்ன இவங்க முகத்தை கூட காட்டாம லவ் பண்ணுவாங்கலாம். லவ் பண்ணாத சொல்லமையே நிச்சயம் பண்ணுவாங்கலாம். அவரு ஏன் சம்மதிச்சாருனு கூட கேக்க மாட்டங்களாம். அந்த மனுஷனோட மன வேதனையை பற்றி சிந்திக்க வேணாமா?” கூலாகவே பதில் சொன்னாள் மதி. 
“அவ என் கிட்ட பேச பல தடவ முயற்சி செஞ்சா நான் தான் அவளை சந்திக்காம தவிர்த்தேன்” காஜலுக்காக பரிந்து பேசினான் அஜய்.
அறையில் அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று மதிக்கு தெரியாது. தாஜ்மகாலை பார்த்ததும் தன்னோடு பேசியது காஜல் தானா? என்ற சந்தேகம் அஜய்க்கு வராமல் இல்லை. சிம்ரன் கொடுத்த தாஜ்மகாலில் ஹார்ட் பதக்கம் பொருத்தி இருந்தான் அஜய். அது அந்த தாஜ்மகாலில் இருந்தது மட்டுமல்லாது. அதை காஜல் பத்திரமாக வைத்திருந்த விதமே அவளின் காதலின் அளவை அவனுக்கு நன்றாகவே பறைசாற்றியது.
மதி கூறியது போல் ரெஸ்டூரண்ட்டுக்கு வந்த காஜல் அஜய்யை விரும்பியதால் தாஜ்மகாலை எடுத்து சென்றிந்தால் அஜய்யை காதலித்த பெண் என்ன ஆனாள்? 
ஆனால் அந்த சந்தேகம் எல்லாம் அனாவசியம் என்பதற்கு ஏதுவாக காலேஜில் விசாரித்த தகவல் பப்லிதான் காஜல் என்று உறுதியாக நம்பும்படியாக ஆதாரம் மதி, அக்ஷையிடம் இருந்தது என்றால் அஜய்யின் ஆழ் மனம் தன் காதலியை கண்டு கொண்டது.  
“அட.. இங்க பேசினா இங்க இருந்து பதில் வருதே” அதற்கும் கிண்டல் செய்தாள் மதி. 
“அக்ஷய் இவ வாய் ரொம்ப நீளுது கொஞ்சம் அடக்கி வைங்க” காஜல் அக்ஷையிடம் முறையிட 
“அடக்கிடலாமே” மதியின் உதடுகளை பார்த்தவாறே கூறிய அக்ஷய் கண்சிமிட்ட அழகாக வெட்கப்பட்டாள் மதி.
“சென்னையிலிருந்து வந்து நாம கண்டு பிடித்து இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கலைனா? இந்தம்மா என்னமோ! சப்ரைஸ் கொடுக்க போறேன்னு இருப்பாங்க, இவரு வேற சோக கடல்ல ஆழ்ந்துகிட்டு இருப்பாரு.  இப்ப பாருங்க ரெண்டு பேரோட முகமும் எப்படி பிரகாசமா ஜொலிக்குதுனு” தன் வெக்கத்தை மறைக்க கவனத்தை அஜய், காஜல் புறம் திருப்பினாள் மதி.  
“இப்படியே நின்னு கிட்டு இங்கயே இருந்து பேசி கிட்டு இருக்க எண்ணமா? எங்கயாச்சும் ரெஸ்டாரண்ட் போலாமா? சாப்பிட்டுக்கிட்டே பேசலாமே!” அக்ஷய் கூற அஜய்யும் ஆமோதித்தான். அதன் பின் நால்வரும் கிளம்பி சென்றனர்.
அஜய்யும் காஜலும் அஜய்யின் வண்டியில் வர அக்ஷையும் மதியும் அக்ஷையின் வண்டியில் ஏறி இருந்தனர். வண்டியை செலுத்தியவாறே அக்ஷய் மதியிடம் “காஜலின் வீட்டுக்குள் சிம்ரன் வரவில்லை போல, அவ பிரச்சினையை எப்படி தீர்க்க போறோம்னு தெரியலையே” என்று நெற்றியை தடவ 
“காஜல் வீட்டில் நிச்சயதார்த்தத்துக்கு நிறைய பூஜைகள் செஞ்சி வீட்டை சுற்றி காவல் படுத்தி இருக்காங்க அதான் சிம்ரனால் உள்ளே வர முடியல. அவளுக்கு அஜய் மாமாவை தவிர வேற எதுவும் நியாபகம் இல்ல. அதான் பிரச்சினை. பார்க்கலாம். ஏதாவது க்ளூ கிடைக்காமலா போய்டும்” என்றாள் மதி.
ரெஸ்டூரண்ட்டுக்கு சென்றவர்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தவாறே சிரித்து கதை பேசி உண்டு முடித்து விடை பெரும் வரை சிம்ரனும் அவர்களோடுதான் இருந்தாள். 
காஜலை வீட்டில் விட்டு விட்டு வீடு செல்வதாக அஜய் கூற அவன் அறியாமல் இருவரை அவன் பாதுகாப்பிற்கு செல்லுமாறு கண்ணசைத்தான் அக்ஷய். 
அஜையோடு செல்லாது சிம்ரன் தங்களோடு வருவதை ஆச்சரியமாக பார்த்த மதி பின்பு கேள்வியாக அவளை ஏறிட்டாள். 
“எத்தனை நாளைக்கு தான் ஆவியா அலைவது? எனக்கு விடிவு காலம் உங்க மூலம் தான் கிடைக்கும்னா உங்க கூட இருக்கிறதுதான் சரி”  என்று கூற 
சிம்ரன் அஜய்யின் பின்னால் அலைவது மதிக்கும்  பிடிக்கவில்லை. அதை காஜல் எவ்வாறு ஏற்றுக்கொள்வாள்? என்ற கலக்கம் மதிக்கு இருந்ததுதான். அவளே புரிந்து கொண்டதில் மதியும் அமைதியானாள்.
“இன்றைய நாளே என்னமோ வீர, தீர,சாகசங்கள் புரிஞ்சு நாள் மாதிரி இருக்கில்ல மதி” அக்ஷய் குதூகலமாக கூற மதியும்  புன்னகைத்தாள். 
“நாளைய விடியல்  நமக்கு என்ன காத்திருக்கோ” என்றவாறே வண்டியை நிறுத்தியவன் மதியோடு தான் குடியிருக்கும் ஹோட்டலின் லிப்ட்டினுள் நுழைய சிம்ரனும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். 
“ரொம்ப டயட் மதி நாளைக்கு மீதியை பேசுறேன் என்றவன் அங்கே அவனுக்காக காத்திருந்த  பிர்ஜூவையோ! பாஸ்கரையோ!  கண்டுகொள்ளாமல் அறையினுள் புகுந்து கதைவடைத்துக்கொண்டான். 
அறையினுள் சென்றவன் அஜய் பத்திரமாக வீடு சென்றானா என்பதை உறுதி படுத்தி கொண்ட பின்பே கட்டிலில் சரிந்தான் அக்ஷய். காலையிலிருந்தே வண்டி ஓட்டியாத்தாலோ என்னமோ விழுந்த உடன் தூங்கியும் விட்டான்.
ஆனால் மதிக்கு தூக்கம் வரவில்லை. சிம்ரனை பார்த்தவாறு யோசித்துக் கொண்டிருந்தாள்.  
“என்ன மதி என்னையே பாத்துக்கொண்டு இருக்க” சிம்ரன் கேட்க 
“உனக்கு அஜய் மாமாவை தவிர உன் வீட்டாளுங்க, தாஜ்மகால் செய்ய கொடுத்தியே! அந்த திருநங்கைக, ஆபீஸ்ல வேல பார்த்தவங்க, நீ படிச்ச ஸ்கூல், இப்படி எதுவும் நியாபகம் இல்லையா?” என்று  மதி கேட்க மறுப்பாக தலையசைத்தாள் சிம்ரன்.  
 “சரி நீ இறந்தது அஜய் மாமாவோட ஆபீஸ். அதுவும் மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலை பண்ணிக்கொண்டதாக போலீஸ் ரெகார்ட் சொல்லுது. அதுவும் அஜய் மாமா உன்ன காதலிச்சு ஏமாத்தியதால? இத பத்தின உன் கருத்து” சிம்ரனின் இறப்பிற்கான போலீஸ் கொடுத்த சான்றிதழை கையில் வைத்துக் கொண்டிருந்த மதி அன்றைய நாளில் கிளப்பி விட்டிருந்த புரளியையும் சேர்த்தே சிம்ரனிடம் கேள்விகளை தொடுத்தாள். 
“அவர் எனக்கு அண்ணன் என்கிறதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. அப்படி இருக்கும் பொழுது அவர் என்ன காதலிச்சு ஏமாத்திட்டாருனு சொல்லுறது அபத்தம். அப்படி ஒன்னு நடக்கவே இல்லனா… நா எதுக்கு தற்கொலை பண்ணிக்க போறேன்?” மதியையே திருப்பி கேள்வி கேட்டாள் சிம்ரன்.
சிம்ரன் கூற்று முற்றிலும் உண்மையாகும் நிலையில். அவள் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றே மதிக்கு தோன்றியது. 
“ஒன்னு பண்ணலாம் சிம்ரன். நாளைக்கே நாம அஜய் மாமா ஆபீஸ் போறோம். அந்த மொட்டை மாடிக்கு போய், நீ குதிச்சானு சொல்லுற இடத்து போய் பார்க்கலாம். உனக்கு ஏதாவது நியாபகம் வரக்கூடும். இல்ல க்ளூ கூட கிடைக்கலாம். என்ன சொல்லுற” மதி நம்பிக்கையாக சொல்ல சிம்ரனும் பலமாக தலையசைத்தாள்.
“சரி நா இப்போ தூங்க போறேன். நீ எனக்காக ஒரு காரியம் பண்ணுறியா?” என்ற மதி சிம்ரனிடம் ஒரு வேலையை ஒப்படைத்தவள் தூங்கி இருந்தாள்.
மதி சிம்ரனிடம் கூறியது போலவே காலையிலையிலையே தயாராகி அஜய்யின் ஆபீஸ் செல்வதற்காக வர “என்ன மதி மேடம் காலையிலையே எங்க கிளம்பிட்டீங்க? ஷாப்பிங்? இருக்காதே!” தாடையை தடவியவாறு கேட்டான் அக்ஷய். 
“அஜய் மாமா ஆபீசுக்கு” அந்த ஒற்றை பதிலில் மதி ஒன் மிஷன் என்று புரிந்துக் கொண்ட அக்ஷய் 
“எங்கே போறதா இருந்தாலும் சாப்பிட்டுட்டு, டைவரோடு போ” என்றவன் அவளின் பதிலை எதிர் பார்க்காது கை பிடித்து அழைத்து வந்து சாப்பாட்டு மேசையில் அமர்த்தி தானே உணவும் பறி மாற முணுமுணுக்கலானான் பிர்ஜு. 
“இப்போ நீ எதுக்கு பொருமுற? அஜய் சார் காஜல் மேடம் நிச்சயதார்த்தம் மட்டும் நடக்கல. அக்ஷய் சார், மதி மேடம் நிச்சயதார்த்தமும் தான் நடந்தது. சொல்ல போனா சார் நடத்திட்டாரு” பத்திரிக்கையை பார்த்தவாறு அமர்ந்திருந்த பாஸ்கர் பிர்ஜூவிடம் ரகசியம் பேச 
“என்ன சொல்லுற?” அதிர்ச்சியான பிர்ஜு வாயை பிளக்க 
“இதுக்குதான் டிவி, பத்திரிக்கைனு பார்க்கணும்னு சொல்லுறது” என்றவாறு நாளிதழில் செய்தியாக வந்த அக்ஷய் மதியின் திடீர் நிச்சயதார்த்தத்தை பிர்ஜூவிடம் காட்ட பத்திரிக்கையை பறிக்காத குறையாக பிடுங்கி படிக்கலானான் அவன். 
“நாசமா போச்சு. மேனா மினுக்கி  அக்ஷய் சார வளைச்சி போட்டுக்கிட்டாளே!” பிர்ஜு வாய் விட்டே கதற 
“பிர்ஜு அங்க என்ன சத்தம்?” அக்ஷையின் சத்தத்தில் பத்திரிக்கையை பாஸ்கரனின் மேல் விசிறியடித்தவன் சமயலறைக்குள் நுழைந்திருந்தான்.  
அக்ஷையோடு சேர்ந்து காலை உணவை உண்ட மதி தன் பையோடு லிப்டை நோக்கி நடக்க பாஸ்கரிடம் அறையை வேலைகளை ஒப்பித்த அக்ஷய் ஏதாவது இருந்தால் போன் செய்யுமாறு கூறியவாறே மதியின் பின்னால் ஓட, “எப்படி இருந்த பாஸ் இப்படி ஆகிட்டாரு” என்று நினைக்கலானான் பாஸ்கர். 
“ஹேய் நீங்க எங்க வரீங்க நா தனியாவே போகிறேன்” மதி கூற 
“அப்போ உனக்கு டைவர் வேல யாரு பாக்குறதாம்?” கண்சிமிட்டினான் அக்ஷய்.
அக்ஷய்க்கு இருக்கு வேலை பளு மதி அறிந்தது தான். நேற்றிரவு கூட பாஸ்கர் அவனுக்காக காத்திருந்தும் அவள் அறிந்ததுதான். அதிகாலையிலையே எழுந்து அவனுடைய வேலைகளை முடித்துக்கொண்டு அவளுக்காக காத்துகொண்டிருக்கிறான் ன்றால் இவனுடைய அன்பு எத்தகையது? ஒரு நொடி வியக்காமல் மதியால் இருக்க இயலவில்லை. 
மதிக்கு கார் கதவை திறந்து விட்ட அக்ஷய் அவள் ஏறி அமர்ந்ததும் விசிலடித்தவாறே வண்டியை கிளப்பினான்.  
“அஜய் மாமா ஆபீசுக்கு இன்னும் எவ்வளவு தூரம்?” அமைதியாக வர பிடிக்காமல் மதித்தான் பேச்சை ஆரம்பித்தாள். 
“மதி மேடம் அது ஒன்னும் உங்க அஜய் மாமா ஆபீஸ் இல்ல. தீ கிரேட் அசோக் சாம்ராட் கம்பனி. உங்க வருங் கால புருஷனுக்கும் சம பங்கு இருக்கு மா…” மதி தெரிந்து கொள்ளட்டும் என்றுதான் அக்ஷய் அவ்வாறு கூறினான். 
“ம்ம்… அவர் அங்கு வேல பாக்குறாரு. ஆனா நீங்க?” மதி என்னமோ சாதாரணமாகத்தான் கூறினாள். ஆனால் அது அக்ஷையின் மனதை ரணமாக குத்தியது. 
அவனுக்கு மட்டும் ஆசையில்லையா என்ன? அவனுடைய தந்தையின் காரியாலயத்தில் தன் ஆதிக்கத்தை செலுத்தி, ஒரு இளவரசனாக வளம் வர, விதி அவனை அவர்களிடமிருந்து பிரித்து விட்டது.
அதனால் வனுக்கு கெடுதி ஒன்றும் நடந்து விடவில்லையே! விளைந்தது நன்மைதான். இன்று அவன் தனியாக உழைத்து, உயர்ந்து, தந்தை வழியில் மகன் என்ற பெயரை பெற்றுக்கொடுத்து விட்டான். 
அவன் தந்தையின் கம்பனிக்காக உழைக்கவில்லையென்று அக்ஷய் அசோக்கின் மகன் இல்லை என்றாகி விடுமா? சொத்துக்கள் இல்லை என்றாகி விடுமா?
அக்ஷையின் அமைதி மதியை அவன் புறம் திரும்ப வைக்க, அவனும் அவள் புறம் திரும்பி புன்னகைத்தவன் “டோன்ட் ஒர்ரி ட்ராபிக்லயும் பூந்து போவேன்” என்று கண் சிமிட்டியவன் அமைதியாகவே வண்டியை ஓட்டலானான். 
அவனின் பதிலும், அமைதியும் மதிக்கு எதோ சரியில்லை என்று மாத்திரம் புரிந்தது. என்ன? என்று கேட்கத்தான் தயக்கமாக இருந்தது. அதனாலயே வேறு கதைகளை பேசியவாறு வர அக்ஷையும் “ம்ம்” கொட்டிக்கொண்டே வந்தான்.  
வண்டி கம்பனி வளாகத்தினுள் நுழையும் பொழுதே! கண்ணாடியை இறக்கி அடையாள அட்டையை நீட்ட சகல மரியாதையோடு வண்டி உள்ளே அனுமதிக்கப்பட்டது.
“ஏன் அக்ஷய்” மதி கேள்வியை கேட்க ஆரம்பிக்கு பொழுதே அக்ஷய் பதில் சொல்ல ஆரம்பித்தான்.
“அசோக் சாம்ராட்டுக்கு அக்ஷய் என்று மகன் இருப்பது உலகம் அறிந்தது தான். பாவம் அவருக்கு என் முகம் தெரியுமோ! என்னவோ! அடையாள அட்டையை காட்டினால் என்னை அடையாளம் கண்டு கொள்வார் இல்லையென்றால் பல வருடங்கள் கடந்து இங்கே காலடி வைக்கும் என்னிடம் நீ யார் என்று கேட்டு அசிங்கப்படுத்தி விட்டால்? முந்திக்கொள்ள வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன்” மீண்டும் புன்னகைக்க புரிந்து கொண்ட விதமாக தலையசைத்தாள் மதி.
கம்பனியின் விவிஐபி பார்க்கின் எதிரே இருக்க அக்ஷையின் பெயர் தாங்கிய பலகையும் அங்கே இருப்பதைக் கண்டு மதி புருவம் உயர்த்த “சம பங்கு, சம பங்கு” என்றவாறே வண்டியை அங்கு நிறுத்தி விட்டு இருவரும் வண்டியை விட்டு இறங்க எங்கிருந்தோ ஓடி வந்தான் அஜய். 
“டேய் மதி வரதா சொன்னா… நீ வரதா சொல்லவே இல்லையே! வாடா” சந்தோசமாக தம்பியை கட்டி அணைக்க,  
“இவளுக்கு டைவர் வேல பார்க்க என்ன கூட்டிகிட்டு வந்தா, இல்லனா நா எங்க வர்ரது” அக்ஷய் கூற மதி அவனை முறைக்கலானாள்.
மூவரும் உள்ளே நடக்க அனைவரினதும் கண்களும் இவர்களின் மேல்தான் இருந்தது. 
சிம்ரனின் இறப்பாள் அஜய் அப்சட்டாக இருப்பதும், அதனால் கிளர்ந்த புரளியும், அக்ஷய் மற்றும் இரு சகோதர்களுக்குமிடையிலான புரளிகளும் அப்படியே இருக்க, இருவரும் கட்டியணைத்து சந்தோசமாக சிரித்து பேசியவாறு காரியால அரைவரை சென்றது சகோதரர்களுக்கிடையில் எந்த சண்டையும் இல்லை என்றே கூற,
 “நல்ல கிளப்புறாங்கடா புரளியை. அவனவனுக்கு பொழுது போகலைன்னா சும்மா பேசுறானுங்க, பங்காளிங்க மாதிரி சண்டை போட்டுக்கிட்டு அடிச்சிக்கிறாங்கனு சொன்னாங்க, இங்க இவனுங்க கூட்டாளிங்க மாதிரி தோள்ல கைபோட்டுக்கிட்டு திரியிறாங்க” ஆளாளுக்கு பேசிக்கொள்ள அன்றைய முக்கிய செய்தியாக இதுவே வலம்வரலானது.
இருபது மாடிகளைக் கொண்ட அந்த கம்பனியில் ஐந்தாவது மாடியில்தான் அஜய்யின் காரியாலய அறை இருந்தது.
“சரி சொல்லு என்ன சாப்பிடுற?’ அஜய் அலைபேசியை கையில் எடுக்க 
“லன்ச் இங்கதான் சாப்பிட போறோம். உன் கூட. வேணும்னா.. காஜலையும் வர சொல்லேன். இல்ல மதி” அக்ஷய் குறும்பாக சிரிக்க. அஜய்யும் புன்னகைத்தான். 
“எதுக்கு அவர் வேல பாக்குறத கெடுக்கவா?” 
“வேலைனு வந்த நாங்க வெள்ளைகாரங்க மா..” அண்ணன் தம்பி இருவரும் ஒரே நேரத்தில் கூற 
“அது தான் தெரியுமே!” மதி முறைக்க அக்ஷையும், அஜய்யும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டனர். 
“காஜல் லன்ச் எடுத்துட்டு வரேன்னு சொன்னா… உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து எடுத்து வர சொல்லுறேன்” என்ற அஜய் அக்ஷையை பார்த்து “இப்போவாச்சு ஆபீஸ் வர தொனியிருக்கே வா வந்து என்ன நடக்குதுது பாரு” என்று தன் மடிக்கணணியை அவன் புறம் திருப்ப, 
“நா மதியோட சும்மா சுத்தி பாக்கலாம்னுதான் வந்தேன். நீ உன் வேலைய பாரு நா மதிக்கு கம்பனியை சுத்தி காட்டுறேன்” அண்ணனுக்கு கண்சிமிட்டியவன் “வா மதி போலாம்” என்றவாறு கதவை திறக்க மதியும் அஜய்யிடம் விடைபெறறாள்.
“ஆமா சிம்ரன் எங்க? வந்துட்டாளா?” லிப்டை நோக்கி நடந்தவாறே அக்ஷய் கேட்க 
“அவளைத்தான் எதிர்பாத்துக்கிட்டு இருக்கேன். ஆள இன்னும் காணோம். எனக்கு உங்க அண்ணன் அஜித் மேலதான் சந்தேகமா இருக்கு. அவர்தான் சிம்ரனை கொன்னு பழியை அஜய் மாமா மேல் போட பாத்திருப்பாருனு தோணுது” 
“எனக்கும் அப்படிதான் தோணுது” இருவரும் பேசியவாறே லிப்ட்டினுள் நுழைந்திருக்க, லிப்ட் மேல் நோக்கி சென்று மொட்டை மாடியை அடைந்தது.  
“சிம்ரன் எங்க போனா?” அக்ஷய் கேட்க, 
“அஜித்தை கண்காணிக்கத்தான் போக சொன்னேன். குடிச்சிட்டு ஏதாச்சும் உளறினா, அவளுக்கு ஏதாச்சும் நியாபகம் வருமில்ல” மதி கூறிக்கொண்டிருக்கும் பொழுதே அங்கே வந்தாள் சிம்ரன். 
“என்னாச்சு சிம்ரன் என்ன ஒரு மாதிரியா இருக்க?” மதி கேட்க 
“உன்னோட இந்த நிலைமைக்கு அஜித்தானே காரணம் சொல்லு அவனை உண்டு இல்லைனு பண்ணிடுறேன்” அக்ஷய் கர்ஜிக்க 
கண்களில் நீர் நிறைத்துக்கொண்டிருந்தவளோ! மறுப்பாக தலையசைத்து “அஜய்” என்றாள்.
அக்ஷையும், மதியும், ஒன்றாக அதிர்ந்தனர்.