Advertisement

அத்தியாயம் 15
கொடிமலரின் வீட்டின் எல்லையில் இருந்தது அந்த பெரிய ஆலமரம்.  பாதையை தொட்டிருப்பதால் யார் அந்த மரத்தடியில் நின்றாலும் பாதையை கடப்பவர் கண்களில் படாமல் இருப்பதில்லை. 
விடிந்தால் கல்யாணமென்ற நிலையில், தன்னவனை காணாமலும், பேசாமலும் கல்யாண கனவிலும் மிதந்த கொடிமலர் தூக்கத்தை தொலைத்திருக்க, மெதுவாக நடை போட்டவள் ஆலமர ஊஞ்சலில் அமர்ந்து வானை வெறிக்கலானாள்.
நிலவும் பாதியாகத்தான் முகம் காட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் கல்யாணத்துக்காக ஏற்றப்பட்ட அலங்கார விளக்குகள் தெருவெங்கும் ஜொலிக்க ஊரே திருவிழாபோல் காட்ச்சியளித்து கண்ணைக் கவர விளக்குகளை வேடிக்கை பார்க்கலானாள். கூடவே தன் அத்தானின் நியாபகமும் மனதில் அலைக்கழிக்க ஒரு பெருமூச்சு விட்டவள் 
“அவர் இந்த நேரம் ஆழ்ந்த துயில் கொண்டிருப்பார்” தனக்கு தானே சமாதான வார்த்தையை சொல்லிக்கொள்ள அவள் எதிரே அவள் அத்தான் நின்றிருக்க முகம் மலர்ந்தாள். 
இருள் சூழ்ந்திருந்தால் தாவிச்சென்று அனைத்திருப்பாளோ! விளக்குகளின் ஒளியில் அவன் முகம் தெளிவாகத் தெரிய கண்களை உற்று நோக்கியவள் “பெரியத்தான் தாங்கள் இப்பொழுதா ஊருக்கு வருகிறீர்கள்”  என்று மரியாதையாக எழுந்து நின்றாள். 
அவளோடு பேசிய வெற்றிவேலன் வீரவேலனை அனுப்பி வைப்பதாக கூறிச்சென்றதும் தன்னவனைக் காணப்போகும் ஆவலில் அவன் வரும் திசையை ஆசையாக பாத்திருந்தாள் கொடிமலர். 
ருத்ரமகாதேவிக்கு தூங்காப் பிடிக்கவில்லை. ஒரு மானிடரின் மேல் காதல் கொண்டது ஒன்றும் அவள் தவறில்லை. ஆனால் தான் ஒரு தேவதை என்று அவனிடம்  சொல்லாமல் விட்டது தவறென்று இப்பொழுது எண்ணலானாள். அது தன்னவனை காண ஏங்கும் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் பொழுதெல்லாம் தோன்றுவதுதான். 
தான் நினைத்தால் நொடியில் அவன் இருக்கும் இடம் சென்று பார்த்து விட்டு வர முடியும். அவ்வாறு சென்றால் சந்திக்காமல், அவன் கைகளில் தஞ்சமடியாமல் தன்னால் திரும்பி வருவது சாத்தியமில்லை என்பதே உண்மை. அதன் பின் அவன் கேட்கும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொல்வதென்று தான் இத்தனை நாளும் மனதை அடக்கிக் கொண்டிருந்தாள். 
ஆனால் இன்று அவனுடைய ஊருக்கே வந்து அவன் இல்லாமல் இருப்பது வெறுமையான உணர்வைக் கொடுக்க, கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள். 
பௌர்ணமிக்கு இன்னும் ஏழு நாட்கள் இருக்கின்றன. தன்னவன் கூறியது போல் தன்னை சந்திக்க பௌர்ணமியன்று வந்து விடுவான். அன்று காட்டுக்கோவிலில் கந்தர்வ   திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கல்யாண கனவில் மிதந்தவளின் முகத்தில் புன்னகை எட்டிப் பார்த்தது. 
தூரத்தே ஆடும் ஊஞ்சலைக்  கண்டவள் தானும் ஊஞ்சல் ஆட ஆசை கொண்டது விதி என்று சொல்வதா? மெதுவாக நடை போட்டவள் கண்டது அங்கே வந்த தன் காதலன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த பெண்ணை கட்டித் தழுவி முத்தம் வைப்பதையே! 
அது தன்னவன் தானா என்ற சந்தேகம் எல்லாம் ருத்ரமகாதேவிக்கு தோன்றவே இல்லை. நொடியில் அவர்களை அணுகியவள் வந்த வேகத்தோடு கத்தியை கொடிமலரின் நெஞ்சை நோக்கி வீசி இருந்தாள். 
தன்னவனின் மனதில் இன்னொரு பெண்ணுக்கு இடமா? காதல் என்ற தீ பொறாமையாக பற்றி எரிய, சிறிதும் யோசிக்காமல் கத்தியை வீசி இருந்தாள் ருத்ரமகாதேவி. 
தன்னவளைக் காண வேகநடையிட்டு வந்த வீரவேலன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தவளைக் கண்டதும் அவளருகில் ஓடியிருந்தான். தன்னைக்காணும் போது மலரும் அவள் மதி முகம், சிரிக்கும் அவள் கண்கள், வெட்கத்தால் சிவக்கும் அவள் அதரங்கள். அந்த ஆலமர நிழலில் ஒளிவிளக்குளின் வெளிச்சம்  பட்டுத்தெறித்து அவள் அழகை மெருகேற்றிக் கொண்டிருக்க வீரவேலனின் காதல் மனம் கொடிமலரின் புறம் தாவியோடியது. 
தூரத்தே வரும் வீரவேலனைக் கண்டு ஊஞ்சலை விட்டு தாவி இறங்கியவள் அவனிடம் ஓட ஆண்மைக்கே இலக்காக கம்பீரமான தன்னவன் தானா என ஒரு கணம் அவன் கண்களை பார்த்து உறுதி செய்தவள் அந்த கருப்பும், பழுப்பும் கலந்த கண்களில் கரைபுரண்டோடும் காதலைக் கண்டதும் இத்தனை நாள் காணாத ஏக்கமும், தன்னவன் என்ற உரிமையும் எல்லைகளை தாண்ட அவனை ஆரத்தழுவியிருந்தாள்.   
வீரவேலனின் இறுகிய அணைப்பில், அவன் கைகளில் கட்டுண்டிருந்த கொடிமலர் அவன் முத்தமழையில் நனைந்துக் கொண்டிருக்க ருத்ரமகாதேவி வீசிய கத்தி கொடிமலரை நோக்கி வந்து கொண்டிருந்தது. 
கத்திக்கு முதுகு காட்டிக் கொண்டு கொடிமலர் இருந்தாலும் கத்தியின் நீளமும், வீச்சின் வேகமும் முதுகை சில்லிட்டு நெஞ்சை கிழித்து இதயத்தை பதம்பார்த்து கொடிமலரின் உயிரை குடிக்கப் போவதென்பது உறுதி. 
தன்னவளை கண்ட பேரானந்தத்தில் தன்னிலை மறந்து கொடிமலரிடம் இழைந்து கொண்டிருந்த வீரவேலன் கத்தி அருகில் வரும் பொழுது கண்டு கொண்டதில் சுதாரித்து விலக முடியாமல் தன்னவளைக் காக்கவென தன்னை இரையாக்கி இருந்தான். ஆம் கொடிமலரை சுழற்றி மறு புறம் திரும்பியவன் கத்தியை தன் முதுகில் ஏந்தி இருந்தான். அவனது வலது முதுகில் ஆழமாக பதிந்தது கத்தி. 
என்ன நடந்ததென்று கொடிமலர் யோசிக்கும் முன் குருதி பெருக்கெடுத்தோட கொடிமலரின் கைகள் குருதியால் நனைய அதிர்ச்சியடைந்தவள் கதறியழலானாள். 
“கொடி இங்கிருந்து போய் விடு, அண்ணன் என்று எண்ணி எதிரிகள் தாக்குகின்றனர்” அவ்வாறுதான் எண்ணினான் வீரவேலன். அவன் சொல்வது கொடியின் காதில் விழுந்தால் தானே! அவளோ என்ன செய்வதென்று புரியாமல் அழுதவண்ணம் இருக்க அவர்களை நெருங்கினாள் ருத்ரமகாதேவி. 
“இவள் மீது இத்தனைக் காதலா? அப்படியாயின் எதற்காக என்னை காதலிப்பதாக சொன்னீர்?” கொடிமலரை வீரவேலன் காப்பாற்றி விட்ட மொத்த கோபமும் வீரவேலனின் மேல் திரும்ப அவனை வெறுப்பாக பார்த்தவள் கேள்வி எழுப்பினாள்.  
“யார் நீ? எதற்காக என் அத்தான் மீது கத்தியை வீசினாய்” கொடிமலர் அழுதவாறே கேட்க 
“உன் அத்தானா? அவர் நான் காதலிப்பவர்” ருத்ரமகாதேவி கர்ஜனை குரலில் சீற 
“பெண்ணே நீ யாரென்று எனக்கு தெரியாது” வீரவேலன் வலியோடு சொல்ல ருத்ரமகாதேவிக்கு அளவில்லா கோபம் கண்ணை மறைக்க அடுத்த கத்தியை வீரவேலனின் வயிற்றில் சொருகி இருந்தாள். 
குருதி வாய் வழியாக குபிறென பாய குளறியவாறே ஏதோ சொல்ல முற்பட்ட வீரவேலன் தரையில் மடிந்து சரிய கூடவே கொடியும் சரிந்தாள். 
தன் காதலன், ஆசை அத்தான் இருக்கும் நிலமையைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தவள் பேச்சற்று திகைத்து அவனையே வெறித்துக் கொண்டிருந்தாள். 
ருத்ரமகாதேவியின் கண்களில் கொலைவெறி தாண்டவமாட “என்னை காதலிப்பதாக சொல்லி இன்னொரு பெண்ணையும் காதலிக்கும் நீ உயிரோடு இருக்க தகுதியற்றவன் உன் கூடவே இவளும் மடியட்டும்” என்று கொடிமலரின் கழுத்தை இறுக்க  
ருத்ரமகாதேவி யார் என்று புரிந்துக் கொண்ட வீரவேலன் அவள் கைகளைப் பிடித்து தடுத்தவாறே கொடிமலரை அவளிடமிருந்து காப்பாற்ற முயற்சி செய்யலானான். 
அதிக குருதிப்போக்கால் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தவனின் கைகள் பலமிழந்து கொண்டிருக்க, உயிரும் அவனை விட்டு மெல்ல, மெல்ல சென்று கொண்டிருந்தது. 
வீரவேலனின் கண்களையே பாத்திருந்த கொடிமலர் அந்த கருப்பும், பழுப்பும் கலந்த கண்களில் வலியோடு காதலும் தனக்காக மட்டும் தான் என்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்து கொண்டாள். அவன் உயிர் பிரியப்போவதை உணர்ந்தவளாக அவன் இல்லாமல் தானும் இந்த உலகத்தில் இருந்து என்ன செய்ய என்று எண்ணியவளாக ருத்ரமகாதேவி இறுக்கிக் கொண்டிருக்கும் கையை விலக்க தோன்றாமல் இருந்தாள். 
கையை எடுத்த ருத்ரமகாதேவியோ! “உன்னை கொன்று அவரை அடைய நினைத்தேன். என்னையே தெரியவில்லை என்ற அவர் உயிரோடு இருந்து என்ன பயன்? நீ உயிரோடு இருந்து நான் படும் வேதனையை அனுபவி. இதுதான் நான் உனக்கு கொடுக்கும் சாபம் ” என்று சொல்ல 
“விடிந்தால் எனக்கும் என் அத்தானுக்கு திருமணம் நிகழ இருப்பது ஊரே அறிந்த செய்தி. திருமணம் நிகழும் வரை சந்திக்க கூடாது அபசகுனமாக ஏதாவது நடந்து விடும் என்கிறார்கள். கேட்கவில்லையே! நான் கேட்கவில்லையே!” தலையில் அடித்துக் கொள்ள திகைத்துநின்று விட்டாள் ருத்ரமகாதேவி. 
 “என்ன உளறுகிறாய் நீ மணப்பெண்ணா? இவர் உன் மணமகனா?” 
“ஆசையாசையாய் என்னை காண வந்தவரை கொலை செய்து விட்டாய். கொலை செய்ததுமில்லாமல் என் காதலனை உன் காதலன் என்றும் உன்னை ஏமாற்றினனாய் என்றும் உளறுவது நீ” கொடிமலர் கோபமாக. 
“நாட்டைக்காக்கும் தளபதியாக இருந்துக்கொண்டு இரு பெண்களை ஏமாற்றியது குற்றமல்லவா? அதற்கான தண்டனைதான் மரணம்” ருத்ரமகாதேவி கோபமாக சொல்ல 
“என்ன சொன்னாய்? மீண்டும் சொல்?” ஆவேசமானால் கொடிமலர் 
“இரண்டு பெண்களை…”
“நீ காதலிப்பது தளபதியையா?” கொடிமலர் பைத்தியம் பிடித்தவள் போல் சிரிக்க குழம்பி நின்றாள் ருத்ரமகாதேவி.
“எதற்காக இவ்வாறு சிரிக்கிறாய்” ருத்ரமகாதேவி அதட்டும் குரலில் சீற 
“நீ காதலிப்பவனையே உனக்கு அடையாளம் தெரியவில்லை. நீ யாரை காதலிக்கிறாய் என்றே உனக்கு தெரியவில்லை. பூவோடும்,பொட்டோடும் வாழவேண்டிய என்னை விடிந்தால் கல்யாணம்  என்றிருக்கும் பொழுது என் காதலனை கொன்று நீ அடைந்திருக்கும் துன்பத்தை நானும் அடையட்டும் என்றா சாபமிடுகிறாய்? 
நான் வணங்கும் ஈசனின் மேல் ஆணை. காட்டு கோவிலில் நான் செய்த பூஜைக்கு பலன் இருக்குமேயானால் நான் படும் துன்பம் நீயும் பட வேண்டும். என் காதலனை பிரிந்து நான் தும்பப் படுவதை போல் நீயும் துன்ப படுவாய். உன் காதலனுக்கு உன் மீதான காதல் மறந்து போகட்டும். உன்னையே யாரென்று கேட்கட்டும். இது நான் வணங்கும் ஈசனின் மேல் ஆணை” மீண்டும் மீண்டும் கடவுளின் மேல் ஆணையிட்டவள் ருத்ரமகாதேவி யோசிக்கும் முன் வீரவேலனின் வயிற்றில் சொருகி இருந்த கத்தியை எடுத்து நெஞ்சின் மீது குத்திக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டாள் கொடிமலர். 
ஒரே முகத்தோடு இரண்டு ஆண்மகனை பெற்றது பெற்றோர் செய்த தவறா? ருத்ரமாதேவி வெற்றிவேலன் மீது காதல் கொண்டதுதான் தவறா? ஒத்த உருவத்தில் இரண்டு மானிட பிறவிகள் இருப்பார்கள் என்று தேவதையவள் அறியாமல் இருந்தது அவள் தவறா? தன் சகோதரனை பற்றி அவளிடம் சொல்லாமல் விட்டது வெற்றிவேலன் செய்த தவறா? வீரவேலனின் கருப்பும், பழுப்பும் கலந்த கண்களை பார்த்தே அவனைக் கண்டு கொள்ளும் கொடிமலரை போல் தன்னவனைக் கண்டுகொள்ள முடியாமல் போனது ருத்ரமகாதேவியின் தவறா?
அன்னையை சந்திக்க சென்று கொண்டிருந்த வெற்றிவேலனுக்கு தன்னவள் தனக்காக காத்துக் கொண்டிருப்பாள் என்ற எண்ணம் தோன்ற சகோதரனின் திருமணம் முடிந்த பின்பு சென்று சந்திக்கலாம், சொன்ன தினத்திற்கு முன்பாகவே போய் அவள் முன் நின்றாள் அவள் பூமுகம் மலரும் அழகும், இளவரசியை போன்ற அவள் தோற்றமும் அள்ளிப்பருக துடிக்கும் மனதை கட்டுப்படுத்துவதுதான் கடினம் என்று தோன்ற கடிவாளமிட்டு மனதை அடக்கியவன் வீட்டை நோக்கி நடையை எட்டிப்போட அன்னைக்காக வாங்கி வந்த சேலையை புரவியின் மீதே  கட்டிவிட்டு வந்த துணிப்பையில் விட்டு வந்தது நியாபகத்தில் வந்தது. 
காலையில் சென்று எடுக்கலாமா? என்ற எண்ணம் ஒருகணம் தோன்றினாலும், மறுகணம் அன்னைக்காக வாங்கியது அதை கொடுக்க தாமதிக்கலாகாது என்ற எண்ணம் தோன்ற மீண்டும் குதிரையை கட்டி வைத்திருக்கும் குளக்கரையை நோக்கி நடக்கலானான். 
“ஆலமரத்தை தாண்டித்தான் செல்ல வேண்டும் அங்கே வீரனும், கொடியும் இருப்பார்கள், குதிரையோடு திரும்ப வரும் பொழுது வீரனோடே வீடு செல்லலாம்” என்று சிந்தித்தவாறே வந்து கொண்டிருந்த வெற்றிவேலனுக்கு  தூரத்தே ஆலமரத்தடியில் ருத்ரமகாதேவி நின்றிருப்பது கண்ணில் பட்டது. 
“தேவி இங்கு என்ன செய்கிறாள்?” தனக்குள் எழுந்த  கேள்வியோடு நோக்க கொடிமலர் நிற்பதைக் கண்டு “வெற்றி எங்கு சென்றான்?” என்ற கேள்வியோடு அவர்களை நெருங்க கொடிமலர் தன் நெஞ்சின் மீது கத்தியை சொருகி இருந்தாள். 
கத்தியவாறே அவள் புறம் நகர்ந்தவன் சகோதரனும் கீழே விழுந்து கிடைப்பதைக் காண “என்ன நடந்தது கொடி?” என்று கதற 
வலியோடு கசப்பான புன்னகையை சிந்திய கொடிமலர் “என்ன மன்னியுங்கள் அத்தான்” என்றவள் கண்களை மூடியிருந்தாள். 
வெற்றிவேலனுக்கு ஒன்றும் புரியவில்லை. அன்னையின் வயிற்றிலிருந்தே இணைபிரியாமல் இருந்த சகோதரன் இரத்தவெள்ளத்தில் இறந்து கிடக்க, கொடிமலரும் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். 
தன் சகோதரனைக் கட்டிக்கொண்டு கதறியழும் வெற்றிவேலனை திகைப்போடு பாத்திருந்தாள் ருத்ரமகாதேவி. இறந்து கிடப்பவன் யார்? உயிரோடு இருப்பவன் யார்? தான் யாரை காதலித்தோம்? குழப்பத்தில் நிமிர்ந்தவள் தன்னவனைக் கண்டு கொண்டு வெற்றியின் முன் மண்டியிட்டு கதறி அழ ஆரம்பிக்க
“பெண்ணே! இங்கே என்ன நடந்தது? யார் இந்த அநியாயத்தை செய்தது? நீ எதற்காக அழுகிறாய்?” வெற்றிவேலன் கேள்விகளை அடுக்க அதிர்ச்சியில் உறைந்தாள் ருத்ரமகாதேவி.
கொடிமலரின் உயிர் பிரிவதோடு அவள் சாபம் உயிர் பெற்றிருந்தது.
காட்டு கோவிலில் ப்ரசன்னமானாள் ருத்ரமகாதேவி. காட்டு கோவிலில் வீற்றிருக்கும் அம்மனை வணங்கி நின்றவள் மனப்பாரத்தை இறக்கி வைக்கலானாள். 
“நான் என்ன பாவம் செய்தேன்? உன்னை வணங்கத்தானே இந்த உலகத்துக்கே வந்தேன். வந்த அன்று என் வழிகாட்டியை தொலைத்து இங்கு தங்க வேண்டியனிலையை உருவாக்கி விட்டாய். அத்தோடு அவரை என் கண்ணில் காட்டி எங்கள் மனதில் காதலையும் ஏற்படுத்தி, அடிக்கடி சந்திக்க முடியாமல் பிரித்து வைத்தாய்.
அவரை போல் ஒருவனை என் கண்முன் அனுப்பி கூடவே ஒரு பெண்ணையும் அனுப்பி அவர்கள் மேல் சந்தேகம் கொள்ள செய்து, பொறாமையால் கொலை செய்யும் அளவுக்கு சென்று இன்று என் காதலனே என்னை யார் என்று கேட்கும் நிலையில் நிற்கின்றேன். 
ஏன் இவ்வாறு செய்தாய்? சொல்? சொல்? சொல்? மானிடர்கள் ஒரே உருவத்தில் இருப்பது நான் அறியேனே! அது என் தவறா? அநீதி இழைக்கப்பட்டவள் தான் அவள். அதற்காக என் பக்க நியாயத்தை கூட கேட்காமல் நீ அவள் கொடுத்த சாபத்தை நிறை வெற்றி விட்டாயே! அப்படி என்ன என்னை விட அவள் உன் பரம பக்த்தை.  
என் காதலன் என்னை மறந்து விட்டான். யாருக்காக இத்தனை நாள் இந்த உலகத்தில் இருக்கின்றோம் என்று மகிழ்ந்தேனோ அதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விட்டது. உன்னிடம் தான் முறையிடுகிறேன் பதில் சொல். என் மனதில் ஏறி இருக்கும் பாரம் வேறு எந்த வேதனையையும் விடவும் கொடியது. ஒரு விஷ முள் தைப்பது போன்று வலித்துக் கொண்டு இருக்கின்றது அதை அகற்ற வழி சொல்லு” காட்டு அம்மனின் முன் மன்றாடி நின்றவள் தாங்க முடியாத காதல் தோல்வியால் ருத்ரதாண்டவமாடிக் கொண்டிருந்தாள்.
காட்டு கோவிலே கதியென்று கிடந்தவள் பல பூஜைகளை மேற்கொள்ள அவள் முன் ப்ரசன்னமானாள் அம்மன். 
“சொல் மகளே! உன் மன சங்கடம் தான் என்ன?”
“நடந்த எல்லாவற்றையும் அறிந்துமா இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறாய்? என் காதலனை பிரித்து வைத்து, என்னை கொலைகாரியும் ஆக்கிவிட்டாயே! இது அநியாயம், அக்கிரமம்” ருத்ரமகாதேவி ஆவேசமாக 
மந்தக புன்னகையை சிந்திய அம்மன் “உன் விதி என்னவோ அதன் படியல்லவா நடக்கும். மானிடனின் மேல் காதல் கொள்ள உனக்கு யார் அனுமதி வழங்கியது? தேவதையான நீயே கருணையில்லாமல் கொலை செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை அநியாயமாய் பறித்து விட்டாயே!” 
“இதற்கு தீர்வே இல்லையா? இத்தனை நாட்கள் நான் செய்த பூஜைக்கு பலனே இல்லையா? அந்த சாபத்திலிருந்து எனக்கு விமோட்சணமே இல்லையா?”
“ஒரே உருவில் இருந்ததால் தானே இந்த குழப்பம் நேர்ந்தது? அது உனக்கு தெரியாததால் அது உன் தவறில்லை என்று வாதிடுக்கிறாய் அப்படித்தானே!”
“ஆமாம்” 
“சரி… அவள் கொடுத்த சாபம் இந்த ஜென்மத்தில் ஒன்றும் செய்ய இயலாது. அடுத்த ஜென்மத்தில் உன் காதலன் பிறப்பான். கூடவே அவளும் பிறப்பாள். அவன் உன்னை காதலிப்பானா? இல்லை அவளை காதலிப்பானா? அது நானறியேன் அவனை உன் கணவனாக ஆக்குவது உன் சாமர்த்தியம்” 
“புரியவில்லை அன்னையே!”
“யாரை உன் காதலன் என்று தவறாக கருத்தினாயோ! யாரை நீ காதலித்தாயோ! இருவரல்ல ஒருவர். ஒன்று நீ அவனை மணந்து சாப விமோச்சனம் பெற வேண்டும், இல்லையேல் அவனை கொன்று விட்டு சாப விமோச்சனம் பெற வேண்டும்”  
அம்மன் சொல்வதைக் கேட்டிக் கொண்டிருந்த ருத்ரமகாதேவிதான் காதலனை எவ்வாறு கண்டு பிடிப்பது, என்று கேட்க, “உன்னை தேடி பலநூறு ஆண்டுகளுக்கு பின் ஒருத்தி வருவாள் அவள் கேட்கும் வரத்தை கொடு, அவள் மூலம் உன் காதலன் உனக்கு கிடைப்பான்”  மீண்டும் ஒரு மந்தக புன்னகையை சிந்திய அம்மன் மாயமாய் மறைந்து விட்டாள்.    
தன் காதலனோடு எப்படியாவது சேரவேண்டும் என்று ஒரு கணம் எண்ணிய ருத்ரமகாதேவி. தான் வலி நீங்க மீண்டும் கொலை செய்யக் கூட தயங்க மாட்டேன் என்றும் எண்ணலானாள். 
  “என்ன மதி ரொம்ப நேரமா என் கண்ணையே பாத்துக்க கொண்டு இருக்க?” அக்ஷய் சிரித்தவாறே மதியிடம் கேட்க 
“உங்க கண்கள் வித்தியாசமா இருக்கு, கண்மணி கருப்பாகவும், கதிராளி பழுப்பு நிறத்திலையும் இருக்கு, இதற்கு முதல்ல எங்கயோ பாத்திருக்கேன்” மதி யோசனையில் விழ
அவள் நெற்றியில் முட்டியவன் “போன ஜென்மத்துல பாத்திருப்ப” என்று விட்டு சத்தமாக சிரிக்க அவனை நன்றாக முறைக்கலானாள் மதியழகி.

Advertisement