தேன் சாரல்  நீ 7

    மாலினி பேசியதை கேட்ட ராஜனின் அம்மா மனம் பதைபதைத்து  போனார்.

    ராசப்பனை நேராக பார்த்து “அண்ணா மடி பிச்சை போடுங்க. என் குலம் தழைக்கட்டும். இந்த விசேஷத்தை நிறுத்திடுவோம். அவனுக்கு புள்ளை பெத்துக்க எதுக்கு என் மகன கட்டனும்? நீங்களே எனக்கொரு நியாயம் சொல்லுங்க.” என்று கதற,

சத்தம் கேட்டதும் கதவை திறந்து மூவரூம் வெளியே வந்து பார்த்தனர்.

   நிச்சயத்தை நிறுத்திய இறுமாப்பில் தெனாவெட்டாக மாலினி நிக்க உள்ளே வந்த ராஜன் ஒரு சில பேப்பர்களை கொடுக்க வாங்கி என்னவென்று பார்த்த மாலினி அதிர்ந்தாள்.

    அதெல்லாம் அவள் ராஜனுக்கு எழுதிய மிரட்டல் கடிதங்கள். அவளை காதலிக்காவிடில் என்னவெல்லாம் செய்வாள் என எழுதியிருந்தாள்.

    கடைசியில் இருந்தது அவர்களின் பதிவு திருமணச்சான்று.

   கவரில் இருந்த போட்டோக்களை பார்த்தவள் அதிர்ந்து அவனை பார்க்க, “ இது நாம ஒன்னா எடுத்தது. உனக்கு ஞாபகமிருக்கா?” என்றவன்

    “பத்து காப்பி போட்டிருக்கேன். நிச்சயம் நின்னா இதையெல்லாம் எல்லாருக்கும் குடுக்கிறேன்.”

    “உங்கப்பா, பெரியப்பா, ராகினிகிட்ட மொதல்ல குடுக்குறேன். ஆனா அவ இனிமே உன்னை வழியில பாத்தாகூட சாக்கடைய  பாத்தது போலதான் கேவலமா நினைப்பா, பரவாயில்லையா?.”

   “உங்க காலேஜ்ல பாதிபேருக்கு உன்ன பத்தி தெரியும். உன் ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு ஒரு செட் போட்டோ அனுப்பிடறேன். அவங்களும் உன்ன புழுவ பாக்கிறத போல பார்க்கட்டும்.” என  மற்றவர்களுக்கு கேட்காமல் பல்லைகடித்து மெதுவாக சொல்ல

     “அது வந்து…. ஒன்னும் இல்லை மாமா. பூ இன்னும் கொஞ்சம் வைக்க சொன்னா இவங்க உனக்கு இது போதும் ராகினிக்கு வேணுமுன்னு சொல்றாங்க” என புகார் படிக்க

    “அட அல்பமே சொல்ல வேற காரணமே கிடைக்கலியா? நாந்தான் எல்லாத்தையும் கேட்டுட்டேனேன்னு” அம்மாவும் மகனும் தன்னை கேவலமாக நினைப்பதை பொருட்படுத்தாமல் தயாரானாள்.

    அவர்கள் நிச்சயம் வீட்டிலேயே ஒரு ஐம்பது அறுபது பேருடன் அன்று காலை உணவுடன் நலமாக நடந்து முடிந்தது.

   பின்காலை பொழுதினில் ஒரு பெரிய மண்டபத்தில் அலங்கார மேடையில் சுபாஷ், ராகினியின் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்தது.

     சுஜா, ஈஸ்வர், சுகனுடன் முன் வரிசையில் பட்டு பாவாடை தாவணியில் அழகோவியமாய் அமர்ந்திருந்தாள்.

    புன்னகையுடன் தங்கள் பக்க உறவினர்களிடம் அவள் பேசுவதை பார்த்த பெரும்பான்மையான விருந்தினர்கள், “ இந்த பொண்ணையே கல்யாணம் செஞ்சியிருக்கலாம். கல்யாணப் பெண்ணும் பேரழகிதான். ஆனாலும் இந்த பெண்… அத்தைவீட்டுக்கு அதிர்ஷ்டம் இல்லை போல!” என தங்களுக்குள் பேசக்கண்டு அந்த மாலினி முகத்தை திருப்பிக்கொண்டு,

     “அந்த கழுதையால எல்லாமே கெட்டு குட்டிச்சுவரா போச்சி. அந்த மாலையும், சேலையும் எனக்கு வரவேண்டியது…அந்த மேனாமினுக்கிய மயக்கி கைக்குள்ள வச்சிக்க நெனச்ச பாவத்துக்கு இப்போ இப்படி ஓரமா நின்னு பொலம்ப விட்டுட்டா” என முணுமுணுக்க

 அருகில் வந்த ராஜன், “ வா நாமும் போய் பொண்ணு, மாப்பிள்ளைய பாத்து விஷ் பண்ணிட்டு வரலாம்.” என்றவன்

    “மாலு அங்க பாரு! உன் ப்ரெண்டு சுஜா அவங்க அண்ணனுங்ககூட இருக்காங்க. அவங்களையும் பார்த்து பேசிட்டு வரலாம்” என்றான்.

   மாலினி ஆக்ரோஷமாக, “டேய் மானங்கெட்டவனே! போ போயி அவன்கிட்ட என்னைய காட்டி, உன்னயே நினைச்சிக்கிட்டு இருக்க இவள நான்  நிச்சயம் பண்ணதுனால நீ இங்க உட்கார்ந்து இருக்கன்னு சொல்ல போறியா? இவ உன்ன நெனச்சிக்கிட்டே யேங்கூட வாழப்போறான்னு சொல்லப்போறியா?” என கேட்க, அதற்குள் அவளின் அப்பாவழி பாட்டி ஒருவர்

   “கண்ணு, நீங்கதான் காலைல நிச்சயம் முடிஞ்ச ஜோடியா? ஜோடி பொருத்தம்  அம்சமா இருக்கு. யேங்கண்ணே பட்டுடும் போங்க. போயி முன்னாடி உக்காந்து பாருங்க.” என வாயாற சொல்லித்தன் வயதுடையவர்களை நோக்கி பழங்கதைகளை பேச சென்றார்.

    “வா மேடைக்கு போகலாம்னு நானும் அப்பையில இருந்து கூப்பிட்டுகிட்டே இருக்கேன். நீயும் அசையாம மரம்மாதிரி நின்னுக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்?” என்றவன்

    “இங்க பாரு மாலு, நானா உன்ன சுத்தல. நீதான் என்னை அதட்டி, மிரட்டி உன் பின்னாடி வர வச்ச.”

     “எங்க வீட்டுல சொல்றதை கேட்டு ராகினிய கல்யாணம் பண்ணிடுவேனோன்னு நீயேதான் நாயா, பேயா என் பின்னாடி அலைஞ்சி, நம்ம கல்யாணத்தை பதிவும் செய்யவச்சி, என்னோட வாழவும் செஞ்ச. இப்போ மறுபடியும் பொறாமையில தப்பா யோசிக்கிற. இது சரியில்லை.” என்றான்.

     “ஏய் என்னடா? சொல்லிகாட்றயா? ஆமா. நான்தான் உன் பின்னாடி சுத்தினேன்.”

  “ எங்க வீட்டு பெருசுங்க எல்லாஞ்சேந்து உனக்கு அவள கட்டி வச்சிடுவாங்களோன்னு உன்ன யாருக்கும் தெரியாம கட்டிக்கிட்டேன். அதுக்கு இப்போ என்ன?”

    “இப்பவும் அவ கல்யாணத்த நிறுத்த அவனை ஊரறிய கட்ட நினைச்சேன். இதுல என்ன தப்ப கண்டுபிடிச்ச?”

   “எத்தனை ஆம்பளங்க ரெண்டு பொண்டாட்டி கட்டறானுங்க? வீட்டுக்கு தெரிஞ்சி ஒன்னு, தெரியாம ஒன்பதுன்னு, அவனுங்கள முச்சந்தியில வச்சா சாணியடிக்கிறீங்க? இல்லதான? அப்புறம் எதுக்கு எங்கிட்ட எகிறிகிட்டு வர?” பல்லைக் கடித்துக் கொண்டு முறைத்தபடி மாலினி பேச

     “ஏய் லூசு! கொன்னுடுவேன் பாத்துக்க. வாயிருக்குன்னு எது வேணா சொல்லுவியா? எது எதுல கம்பேர் பண்றதுன்னு ஒரு வரைமுறை இல்ல? அவங்க செஞ்சா நானும் செய்வேன்னு சொல்ற, இதக்கேட்டா எல்லாரும் காரிதுப்ப மாட்டாங்க?”

    “படிச்சவதான நீயி? பண்பாடு தெரிஞ்சவதான? ஒருவனுக்கு ஒருத்திங்கிறது வாழ்க்கையோட எல்லா நிலையிலயும் இருக்கனும். நெனப்புலகூட நம்ம இணைக்கு நேர்மையா இருக்கனும். இதெல்லாம் உன்னபோல பிசாசுங்களுக்கு எங்க புரியபோவுது?”

    “ நீ எப்படி இருந்தாலும் நான் உனக்கு உண்மையா, நேர்மையா இருக்கனுமுன்னு  நினைக்கிறேன். ஆனா நீயி…. ச்சே வாழ்க்கை என்னை இப்படி பழிவாங்கியிருக்க வேணாம்” என்றவன்

     “பொறாமையில நீ செய்யற ஒன்னொன்னும் மத்தவங்க முன்னாடி உன்னோட மதிப்ப குறைக்குதுன்னு உனக்கெங்கே புரியபோகுது?”

     “இங்க உள்ளவங்க பாதி பேருக்கு உன்னப்பத்தி தெரிஞ்சிருக்கும். இனி என்னை எல்லோரும் பரிதாபமா பார்ப்பாங்களே? சரி சமாளிச்சிக்கிறேன், வேறென்ன செய்யறது? எனக்கு வாய்ச்சது அவ்வளவுதான்.” என்றான் அவனும் கோபமாக.

   அங்கே சடங்குகள் ஆரம்பிக்கவும், வளரின் அண்ணன்கள் குடும்பத்துடன் மேடைக்கு வந்து மாப்பிள்ளைக்கு மாலையிட்டு ஆசிர்வாதம் செய்தனர்.

     சுபாஷின் பெரியப்பா குடும்பமும் மேலே இருந்தனர். சம்பந்தம் கலக்கி புடவையை பெரியவர்கள் ராகினியிடம் கொடுக்க, அவள் உடுத்திவர போக, சுபாஷுக்கு பொண்ணுவீட்டு சார்பில் பட்டு சட்டை, வேட்டிய குடுக்க, அவனும் மாற்றிவர மற்ற சடங்குகளை செய்தனர்.

    மாப்பிள்ளையின் சார்பில் அவனின் அக்கா, தங்கையே செயின், மோதிரம் போடுவர். இப்போ கூடபிறந்த அக்கா தங்கையில்லாததால் யாரை அழைப்பதென வளர் தடுமாற, சட்டென சக்திவேல் சுஜாவின் புறம் திரும்பி,

     “சுஜாமா இங்க வாடா” என்க, அவள் திரும்பி தன் அண்ணன்களை பார்க்க அவர்கள் தலையாட்ட அவள் மேடை ஏறினாள்.

      “சொல்லுங்க மாமா. எதுக்கு என்னைய கூப்பிட்டிங்க?”

    “ இங்க கும்பல்ல இருந்தா ஒன்னும் தெரியல. கீழே இருந்து பாத்தா இங்க நடக்குறதெல்லாம் நல்ல தெரிஞ்சுது.” என்றாள்.

     “சாமிய கும்பிட்டுட்டு இத மருமக கழுத்துல, கையில போடு தாயி” என சக்திவேல் சொல்ல

      “இத்தனை பெரியவங்க இங்க இருக்க அவங்கள போடச்சொல்லுங்க மாமா.”

      “அப்பாத்தா இருக்காங்க. அம்மாயி,உங்கம்மா இருக்காங்க. பெரியவங்க அவங்கள போடச்சொல்லுங்க மாமா” என்றாள் சுஜா.

     “பெரியவங்க போடகூடாதுடா. இத அக்காதங்கைங்க போடனும். அதான் உன்னை…. போட கூப்பிட்டேன்” என்க

     “குடுங்க மாமா. சுபாஷண்ணா சார்பா நானே போட்டு விடறேன்” என்றவள் வளரை பார்க்க

     “ஏங்க இங்க பாருங்க. அத்தைமகன அண்ணான்னு சொல்றா? இப்படி சொல்லிச் சொல்லியே என் பிரஷ்ஷரை ஏத்தறா. இவள யாராவது எதாவது சொல்றிங்களா?” மேடையென பார்க்காமல் வளர் புலம்ப ஆரம்பிக்க அதற்குள் சுஜா நகையை அணிவித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்திருந்தாள் ராகினிக்கு.

     “பாப்பா இங்க வந்தும் சித்திகிட்ட வம்பு செய்யலாமா? அவங்கள அப்புறமா வச்சி செய்யலாம். இப்ப விட்டுடுடா பாவம்.” என்றான் கார்த்தி.

     “அடபோங்கண்ணா. இவங்கள வம்பிழுக்கலன்னா பொழுதே போகமாட்டேங்குதே. என்ன செய்ய?” என்றாள் சுஜா.

     புவனாவிடமும் பேசிவிட்டு கீழே ஈஸ்வரிடம் வந்து உட்கார்ந்தாள். ராஜன் வரவும் அவனுக்கும் வாழ்த்துக்கள் சொல்ல, அவன் அவர்கள் மூவருக்கும் நன்றி சொல்ல, பார்த்திருந்த பலருக்கு காரணம் புரிந்தது.

      மாலினிக்கு புரிந்த விதத்தில், அவள் பார்வைக்கு எரிக்கும் சக்திமட்டும் இருந்திருந்தால் சுஜா பல முறை எரிந்து சாம்பலாக மாறியிருப்பாள்.

     சக்திவேல், அவரின் அண்ணன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு இவர்கள்தான் போன் செய்தது என சந்தேகம் வந்திருந்தது.

     “நம்மகிட்ட நேரா பேசினா வேலையாகாதுன்னு போனபோட்டு சொல்லி இருக்குதுங்க இந்த பசங்க” என நினைத்தனர்.

    “எது எப்படியோ? நாம நினைச்ச விசயம் நடந்தா சரி” என சந்தோசமும் பட்டனர்.

    அக்கா, தங்கை – அண்ணன், தம்பியை திருமணம் செய்தால் குடும்ப அரசியல் இன்றி அனைவரையும் அனுசரித்து போவார்கள் என முடிவு செய்துதான் கார்த்திக், புவனா திருமணம் முடிந்தவுடன் சுபாஷ், ராகினி கல்யாணம் பற்றி பேசினர்.

    ஆனால் வளர் முட்டுக்கட்டை போட, மாலினி சுபாஷை வளைக்க பார்க்க, செய்வதறியாது தவித்தார் சக்திவேல். இப்போது மூவரையும் பாசத்தோடு பார்த்தார்.

     தன் ஆசை நிறைவேறவும், தன் மகனின் வாழ்வு சிறக்கவும் காரணமான மூவரையும்  நிச்சயம் முடிந்தவுடன் தனியே பார்த்து பேச, நன்றி சொல்ல வேண்டுமென முடிவு செய்தார்.

     “ச்சே இவள காக்கா பிடிச்சா, நம்ம பக்கம் இவ சப்போர்ட் பண்ணுவான்னு நினைச்சா இவங்களாலதான் இப்போ முதலுக்கே மோசமா போச்சி” முகந்திருப்பி நின்றிருந்தாள் மாலினி.

     அவள் ஆசையெல்லாம் கனவாகி, வெறுப்புடன் சுஜாவை பார்த்திருப்பதை கண்ட குடும்பத்தினர் பதறினர்.

    சுஜா அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் அண்ணன்களுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்.

    திடீரென மாலினி வாயில் நுரையுடன் மயங்கிவிழ, எல்லோரும் பதறினர்.

     இதை முன்பே எதிர்பார்த்திருந்த ராஜன் கண்ணைக்காட்ட, புவனாவின் அப்பா அருகில் வந்தவர், “மாப்பிள்ளை எங்கள மன்னிச்சிடுங்க. நாங்க மாலினிக்கு இப்படி வலிப்பு வர்ற விசயத்தை உங்ககிட்ட மறைச்சிட்டோம்” என போலியாய் பதற

      “மாமா இதெல்லாம் இப்ப மாத்திரை மருந்துல குணப்படுத்திடலாம். இது, அதான் இந்த வலிப்பு வர்ற விசயத்தை மாலினி என்கிட்ட முன்னாடியே சொல்லிட்டா.”

    “ நாங்க காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிறோம். அதையும் மனசுல வச்சிக்கிங்க. அதனால பதறாம நீங்க நிச்சய வேலைகளை பாருங்க.”

     “நானும், சின்னத்தையும் மாலுவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறோம். நீங்க வந்தவங்கள கவனிங்க மாமா. போங்க போயி பந்திய கவனிங்க.” என்று கண்ணைக்காட்ட

     அவர் கார் ஏற்பாடு செய்து அவர்களை ஹாஸ்பிடல் அனுப்ப முயன்றார்.

     அப்போது ஒரு பெண்ணும் அவரின் கணவர் போல ஒருவரும் ஓடி வந்து, “இந்த பொண்ணு மயக்கம் வருது. அப்படி நான் மயங்கி விழுந்தா, விழுந்ததும் இதை பக்கத்துல இருக்கவங்க கிட்ட குடுங்கன்னு சொல்லி இதை குடுத்தாங்க” என ஒரு சீட்டைக் குடுக்க

     இன்னொருவர், “அப்ப வலிப்பு வந்து விழுந்து வைக்கலியா இந்த பொண்ணு? அதை படிங்கப்பா முதல்ல. ஏதோ எழுதி குடுத்துட்டு விசம் குடிச்சிடுச்சி போல” என்க

      அரைகண் திறந்து பார்த்த மாலினியை கண்டுகொண்ட ராஜன், “ஐய்யோ மாமா, ஏன் தள்ளாடறிங்க? மாலு மயங்கி விழுந்ததுல உங்க கவனம் எங்க இருக்கு? ஏன் இப்படி ஆளாளுக்கு பேசி டென்ஷன் ஆக்கறிங்க அவங்கள?” என்று சட்டென அனைவரின் கவனத்தையும் அவரிடம் திருப்பி, அந்த சீட்டை பாக்கெட்டில் வைத்தவன், வேறொரு சீட்டை எடுத்திருந்தான்.

      மாலு திடுக்கிட்டு மயக்கம் தெளிந்தது போல எழ முயற்சிக்க, அவளை அழுத்தி எழவிடாமல் செய்தவன், “ மாமா உங்க பொண்ண நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு போங்க. மயக்கம் வர்ற மாதிரி இருக்கும் போதே மாத்திரைச்சீட்டை ரெடி பண்ணி வச்சிருக்கா பாருங்க” என எல்லோரிடமும் காட்டியவன்

      “எல்லாரும் கொஞ்சம் நகர்ந்து நில்லுங்க. நான் மாலுவ தூக்கிக்கிட்டு காருக்கு போறேன். அத்தைய சீக்கிரம் வரச்சொல்லுங்க மாமா.” என்ற ராஜன் பட்டென அவளை தூக்கி தோளுல போட்டு நடந்தான்.

    சீட்டு கொண்டு வந்தவர்களையும், உடனே ஒத்தூதிய ஆளையும் மாமனிடம் காட்டிவிட்டு அவன் செல்ல, புவனா அப்பா அவர்களிடம்

     “நல்ல வேலை செஞ்சீங்க ரெண்டு பேரும். வாங்க உங்களை என் சகலைகிட்ட கூட்டிட்டு போறேன். அவரு பொண்ணு மயக்கம் போட்டத பத்தி அவர்கிட்ட நீங்களே சொல்லிடுங்க.”

     “நான் சொன்னா நம்பமாட்டார். பொண்ணுக்கு ஏதோ ஆச்சின்னு பயந்துடுவார்” அப்படி, இப்படின்னு உருட்டி அவர்களை ஒரு ரூமுக்குள் அழைத்து செல்ல அங்கே துப்பாக்கியை துடைத்தபடி ஈஸ்வர் திரும்ப பதறி கதவு நோக்கி திரும்பினர் மூவரும்.

     “அப்புறம் பெரியப்பா இதுல சீட்டை கொண்டு வந்தவங்க யாரு?” என ஈஸ்வர் புவனாவின் அப்பாவை கேக்க

     அந்த அம்மா “என்ன தம்பி துப்பாக்கிய காட்டி என்னைய மிரட்டி பாக்கறயா? அப்பவே அந்த புள்ளை சொல்லுச்சி, என்னை மிரட்டி இந்த நிச்சயத்தை அவளோட நடத்தறாங்க. எனக்கு பிடிச்சவன அவளுக்கு கட்டி வைக்கறாங்கன்னு அழுதுச்சி” என்க

    “அப்படியா சொன்னா யேன் பொண்டாட்டி? சரி நீங்களே பாருங்க” என அவள் எழுதிய கடிதங்களின் ஜெராக்ஸ், போட்டோஸ் என கொடுக்க,

     அந்த மற்றொருவர், “இப்படி ஏதாவது காட்டுவிங்கன்னும் அந்த பொண்ணு சொல்லுச்சி. அதேமாதிரி நடக்குது. போலீஸ்காரனே இப்படி பண்ணினா யாரைதான் நம்பறதோ தெரியல” என பேசிக்கொண்டே போக,

     “அண்ணா இவங்கள மறைவா நிறுத்துங்க.” சட்டென ஈஸ்வர் அவர்களை அமைதியாகும்படி செய்ய, யாரோ வருவது புரிந்தது.

     வந்த மாலினி, “சீட்டை மாத்தினா மட்டும் இந்த கல்யாணம் நடந்திடுமா? அவ வாழ்க்கையை அழிக்காமவிடமாட்டேன்” என்றவள்

     “நானு ரெண்டு கூமுட்டைங்ககிட்ட நீங்க என்னை மிரட்டி நிச்சயம் பண்ணதா நல்லா அழுது நடிச்சி அனுப்பியிருக்கேன். அதுங்க இந்நேரம் ஒரு பத்துபேருக்காவது சொல்லியிருக்கும்.”

     “சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள இந்த மண்டபத்துல இத தெரியாதவங்களே யாருமே இருக்கமாட்டாங்க.” என மேலும் கொக்கரிக்க

      “நானு போட்டோ ஆதாரங்களை காட்டி நீ என் பொண்டாட்டின்னு நிரூபிப்பேன்” என ராஜன் சொல்ல

     “அதெல்லாம் உண்மையின்னு உனக்கும், எனக்கும்தான தெரியும். நான் அது ஏமாத்து வேலன்னு அழுது நடிச்சிடுவேன். கூட்டத்தை உங்க பக்கம் திருப்பிவிட்டுட்டு அவன் பக்கத்துல போயி நின்னுடுவேன். உங்களால ஒன்னும் பண்ணமுடியாது” என ஆணவத்தில பேச

    “அந்த ரெண்டு பேரு இவங்களா பாரு செல்லம். பாத்து அடையாளம் காட்டு” என ராஜன் சொல்ல

    தலையில் கைவைத்தபடி, “ஏன்டா எருமைங்களா இவனுங்க கண்ணுலபடாம கொடுத்த வேலைய செய்ய சொன்னா இவனுங்ககிட்டயே வந்து வசமா மாட்டியிருக்கிங்க. துப்பத்தவனுங்கடா நீங்க.” என சொன்னவள்

    “சாரி மாமா. கடைசி மூச்சிருக்க வரை நான் இப்படித்தான்.” என திமிராக சொல்லி ஈஸ்வரை பார்த்தவள் நக்கலாக சிரித்தாள்.

     “உன் தங்கச்சிய கட்ட முடியாதுன்னு இங்க வந்தான் அவன். உங்க குடும்பத்துக்கு மான ரோஷமிருந்தா இங்க வந்து இப்படி நின்னிருப்பிங்களா?” என கேக்க

     “பெரியப்பா நான் சுஜாவை கூப்பிடறேன். பாப்பா பொடணியில ஒரு தட்டு தட்டும். அதுல மயக்கம் வந்துரும். அப்புறம் கொண்டுபோய் கீழ்பாக்கத்துல விட்டுட்டு வந்திடலாம். கண்டிப்பா மறை கழண்டுருச்சி போல தோணுது” என்றான் ஈஸ்வர்.

    திருமணமா? மனநல மருத்துவமனையா? எது கிடைக்கும் மாலினிக்கு?