Advertisement

அத்தியாயம் 18
சத்யா அன்று நடந்த எல்லா விஷயங்களையும் அசைபோட்டாள். அவன் சொன்னதுபோல் அவனுக்குள்ளும் அவள்மேல் காதல் இருந்திருக்கிறது. அவன் அதை பழி என்ற போர்வை கொண்டு மூடி மறைத்திருந்தான் என்றால்…  இவள் அவனுக்கும் மேலாக இருந்திருக்கிறாள்.
அவனுக்கு ஆதரவாகவே எல்லாவற்றையும் செய்துவிட்டு காதல் இல்லை என்று மறைத்திருக்கிறாள்.
ஆனால் கள்ளன் கண்டுபிடித்துவிட்டான்.
அவளைப் பார்ப்பதற்காக வந்து நின்றான் சஞ்ஜீவ். “வாங்க” என்றவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான்.
“சத்யா… நாளை மறுநாள் நமக்கு கல்யாணம் நினைவிருக்கிறதா…?” என்று கேட்டவன்¸ “உனக்கு என்னிடம் ஏதாவது கேட்கவோ சொல்லவோ வேண்டும் என்று தோன்றுகிறதா?” என்றான்.
தான் மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்த விஷயமான “நித்யா பற்றி என் அம்மாவிடம் சொல்ல வேண்டாமா?” என்று கேட்டாள்.
“என்ன சொல்லப் போகிறாய் சத்யா? அவள் இறந்துவிட்டாள்… நான் அவள் கணவன். நீ எனக்கு….  இரண்டாம் தாரமாக இருக்க சம்மதித்துவிட்டாய் என்றா சொல்லப் போகிறாய்….?” என்று கேட்டவன்¸ தானே “வேண்டாம்” என்றும் கூறினான்.
“ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?”
“சத்யா கொஞ்சம் யோசித்துப் பார்… உன் அம்மாவைப் பொறுத்தவரை நித்யா ஓடிப் போனவள். முதலில் ஏதேதோ சொல்லி திட்டியிருந்தாலும்… அவள் வீட்டிற்கு வராமலே போனதும் என்ன நினைத்திருப்பார்கள்….? மகள் எங்கிருந்தாலும் நன்றாக வாழட்டும் என்றுதானே எண்ணியிருப்பார்கள்…. இன்று அவர்களிடம் போய் அவள் இறந்துவிட்டாள் என்று சொன்னால் அவர்களிருக்கும் நிலையில் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? அதனால் அவர்களைப் பொறுத்தவரை அவள் ஓடிப்போய்விட்டதாகவே இருக்கட்டும்” என்றவன்¸ “என்னைப் பொறுத்தவரை நித்யா முடிந்துவிட்ட அத்தியாயம். அதனால் இனி நம்மிடையே அவளைப் பற்றிய பேச்சு வேண்டாம்” என்று தன் நிலையை கூறினான்.
அவளும் சரியென்று தலையாட்டினாள்.
தலையசைத்தவளின் மூக்கை செல்லமாகப் பிடித்து ஆட்டிவிட்டு அறையை விட்டு வெளியேறினான் அவன்.
இதோ திருமணம் முடிந்து அவர்கள் தனியறையில் இருந்தபோது¸ ஆடை மாற்றிவிட்டு வருவதாகச் சென்றவன் தலையில் நீர் வடிய இடுப்பில் துண்டு கட்டியவாறு வந்து அவள்முன் நிற்க சத்யாவின் தலை தானாகக் கவிழ்ந்து கொண்டது.
“ஆங்… ஆங்… இனிமேல் இப்படி தலை குனிந்தால் வேலைக்காகாதும்மா… சத்யா எனக்கு குளிருது… சத்யா…” என்று அவன் நடிக்க¸ “சரியான கள்ளன் நீங்கள்” என்றவள் தன் சேலை முந்தானையால் அவன் தலையைத் துவட்ட ‘சத்யாவை அவனுடைய சத்யாவை’ தன்னுள் அடக்கினான் சஞ்ஜீவன்.
அவளைத் தன் அணைப்பில் வைத்திருந்தவாறே கேட்டான் “சத்யா… நான் அன்றிரவு என்ன நடந்தது என்று பலமுறை கேட்டும் நீ சொல்லவில்லை. இன்றாவது சொல்கிறாயா?” என்று கேட்டான்.  அவன் அன்றைய இரவைப் பற்றி பேசத் தொடங்கியதுமே அவள் உடல் நடுங்கத் தொடங்கியது.
அவளை மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டவன் “அன்றைய பேச்சை எடுத்தாலே ஏன் இப்படி நடுங்குகிறாய்? உன் கணவனான பின்பும் கூட என்னிடம் அதைச் சொல்லமாட்டாயா…? சத்யா… அன்று உன்னை நடுரோட்டில் விட்டு வந்ததற்காக இப்போதும் என் மனம் குற்ற உணர்ச்சியில் எப்படித் துடிக்கிறது தெரியுமா? என்ன நடந்தது என்று சொல்லேன்… ப்ளீஸ்…” என்று அவன் கெஞ்சவும்¸ அன்று சிலர் அவளைத் துரத்தியது போலீஸ் வந்தது என எல்லாவற்றையும் கூறினாள்.
“சாரிம்மா… சாரி… ரொம்ப சாரி…” என்று வருந்தியவன்¸ அவள் நெற்றியில் முத்தமிட அவனை விலக்கிவிட்டாள் அவள்.
பின்னர் “அன்றுமுதல் எனக்கு உங்கள்மேல் பயங்கர கோபம். என்னை பிடிக்கவில்லை சரிதான்… ஆனால்¸ ஒரு பெண்ணை அதுவும் வயசுப் பெண்ணை ராத்திரி நேரத்தில் நடுரோட்டில் இறக்கிவிட்டால் என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்று தெரியுமா? ஒன்று ரேப் நடக்கும்¸ அது முடியாவிட்டால் கொலை செய்தாவது தங்கள் காரியத்தை முடிக்கும் கயவர்கள் தான் இங்கு அதிகம். ஒருவேளை நீங்களும் அதைத்தான் விரும்பினீர்களோ என்றெண்ணி உங்களை மன்னிக்கவேக் கூடாது என்றிருந்தேன்…” என்று அனல் தெறிக்கப் பேசியவள்¸ பேச்சின் வேகத்தைக் குறைத்து “ஆனால்¸ அன்று உங்கள் மனநிலையே வேறு என்பது நீங்கள் சொன்னபோது தான் புரிந்தது…” என்று அவள் சொல்ல¸ “என்னைப் புரிந்து என் அன்பை ஏற்று என்னை மணந்து கொண்டதற்கு நன்… ம்கூம்.. மணந்து கொண்டது ரொம்ப சந்தோஷம்” என்றான்.
“ம்கூம்…” என்று நீண்டதொரு பெருமூச்சை வெளியிட்டாள் அவள்.
“எதற்கு இந்த பெருமூச்சு?”
“இந்த விதி என் வாழ்க்கையில் எப்படி விளையாடிவிட்டது என்று நினைத்துப் பார்த்தேனா..? தானாகப் பெருமூச்சு வந்துவிட்டது” என்றாள்.
“அப்படி என்னம்மா விதி செய்துவிட்டது?”
“இல்லை… என்னைப் பழிவாங்க வேண்டுமென்று துடித்த மனிதரின்மேல் எனக்கும் என்மேல் அவருக்கும் அன்பு வரச்செய்து அவரையே திருமணம் செய்யும்படியும் ஆக்கிவிட்டதே..! அப்படியென்றால் விதி வலியதுதானே?” என்றாள்.
“ஏய் சத்யா! அப்போ… விதியோட கஷ்டம் தாங்காமல் தான் என்னை கல்யாணம் செய்தாயா? இரு… உன்னை…” என்று அவளைத் துரத்த¸ கட்டிலைச் சுற்றி ஓடினாள் அவள்.
அகப்பட்டவளிடம் தன் மார்பை தொட்டுக் காட்டி “இந்த விதி உன்னை என்ன செய்யப் போகிறது தெரியுமா..?”  என்றவன் அவள் முகம் நோக்கி குனிய¸ தன் மெல்லிய விரல்களால் தாமரை முகத்தை மூடிக் கொண்டாள் சத்யா.
அங்கே அவர்களது இனிய இல்லறம் ஆரம்பமானது.
அந்தத் தென்றலும் அவர்களை வாழ்த்திவிட்டு சென்றது. நாமும் வாழ்த்துவோம்.
……முற்றும்……

Advertisement