Advertisement

அத்தியாயம் 7
அன்றுதான் பட்டம்மாவிற்கு முதல் மாதச் சம்பளம் கொடுத்தாள்.
மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டவரிடம் “பட்டம்மா… நீங்க இன்றைக்கு அம்மாவை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்வீர்களா?” என்று கேட்டதும், “என்னாச்சு கண்ணு?” என்று கேட்டார் அவர்.
“காலையில் எழும்போதே அம்மா சரியாக இல்லை. என்னால் இருந்து கவனிக்க முடியாது… சாயங்காலம் சீக்கிரமே வந்து ஹாஸ்பிட்டல் அழைத்துப் போய்விடுவேன். நான் வரும்வரைக்கும் கவனமா…” என்று அவள் முடிக்கும்முன், “இன்னா கண்ணு… இந்த மாசம் முழுசும் நான்தானே பாத்துக்கிட்டேன். இன்னிக்கு பார்க்க மாட்டேனா? நீ தைரியமா போயிட்டு வா கண்ணு…” என்று அவர் சொன்னதும் நிம்மதியுடன் புறப்பட்டாள் அவள்.
தாயாரின் நிலையைப் பற்றி மேனேஜரிடம் சொல்லி மாலையில் வீடு திரும்புவதற்கு அனுமதி வாங்கிக் கொண்ட பின்னரே மேக்கப் செய்து கொள்ளச் சென்றாள்.
மெல்லிய ஷிபான் புடவை.
சேலையைப் பார்த்ததும் “ரொம்பவும் கண்ணாடியாக இருக்கிறதே அக்கா… வேறு எதாவது கெட்டித் துணியாக இருக்கிறதா?” என்று கேட்டாள்.
“இல்லை சத்யா இது புது டிசைன். அதனால் இன்று இதைத்தான் உடுத்த வேண்டுமென்று மேனேஜரும் முதலாளியும் சொல்லிவிட்டுப் போனார்கள்” என்றாள் மாலதி.
விருப்பமின்றி கட்டியதாலும் தாயாரைப் பற்றிய எண்ணம் மனதில் ஓடியதாலும் அவளது முகம் அன்று டல்லாக இருந்தது.
வீட்டிற்கு வந்து அழைத்த கல்பனா அவனைக் கட்டாயப்படுத்தும் அவசியமின்றி கடையின் பெயரை அவள் சொன்னதுமே அவளுடன் கிளம்பிவிட்டான்.
உள்ளே நுழைந்ததும் ஷிபான் புடவைப் பிரிவைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அவள் அந்தப் பக்கம் செல்ல, சஞ்ஜீவன் சத்யாவைத் தேடி அவளிருந்த இடம் சென்றான்.
எதிர்பாராத நேரத்தில் சட்டென்று தனக்கு முன்பாக வந்து நின்றவனைக் கண்டதும் அவளது விழிகள் தன்னிச்சையாக விரிந்தது.
இவன் முன்பும் ஒருநாள் வந்து தொட முயற்சி செய்தது நினைவு வர… முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாது அசையாமல் நின்றாள் அவள்.
சற்று தள்ளி நின்ற சேல்ஸ்பாயை அழைத்து அவள் உடுத்தியிருக்கும் சேலை என்ன வகை என்று கேட்டான்.
அந்தப் பையன் ஷிபான் என்று சொல்லவும் “இது எனக்குக் கிடைக்குமா?” என்று அவளைக் காட்டிக் கேட்டான்.
“சார் இது போல நிறைய டிசைன்ஸ் அங்கே இருக்கு போய்ப் பாருங்க…” என்று சற்று முன் அவன் நின்றிருந்த இடத்தைக் காட்டினான்.
சத்யாவின் முகத்திலே பார்வையைப் பதித்திருந்த அவனுக்கு அவளை நோக்கிக் கைகாட்டியதும் அவளது கவனத்தையும் மீறி அவளது முகத்தில் வெளிப்பட்ட பயம் பிடித்திருந்தது.
எனவே அந்த இடத்தை விட்டு அகலாமல், “இல்லை தம்பி… எனக்கு இந்த கலர் ரொம்பவும் பிடித்திருக்கிறது. எனக்கு இதுதான் வேண்டும்” என்று புடவையை ரசிப்பவன்போல அவளை ஒரு சுற்று சுற்றினான்.
செய்வதறியாது திகைத்த சேல்ஸ்பாய் சத்யாவைப் பார்க்க,  அவள் விழிகளால் மேனேஜரை அழைக்க ஜாடை காட்டினாள்.
“சார் ஒரு நிமிஷம்… நான் மேனேஜரை அழைத்து வருகிறேன். அவரிடமே கேளுங்கள்” என்று விரைந்தான் அவன்.
ஷிபான் சேலைகளை தேர்வு செய்துவிட்ட கல்பனா தன்னருகில் வந்ததும், “கல்பனா… இந்த பொம்மையைப் பார்க்க எப்படி இருக்கிறது?” என்று கேட்டான்.
அவன் எந்த அர்த்தத்தில் கேட்கிறான் என்பதை அறிந்தவள், “பார்க்கப் பெண் போலவே இருந்தாலும் இது ஒரு பொம்மைதான் அத்தான்!” என்றாள்.
“அப்படியா! எனக்கு பொம்மையா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது”
“சந்தேகமா இருக்கிறதென்றால் தொட்டுப் பாருங்கள் பொம்மையா… பெண்ணா… என்று தெரிந்துவிடும்” என்று சந்தேகத்தை நீக்குவதற்கான வழியைக் கூறினாள் அவள்.
“நல்ல ஐடியாதான்… அப்படியே செய்கிறேன்” என்று அவன் சொன்னதைக் கேட்டதும் சத்யாவிற்கு வியர்த்துவிட்டது.
“அட! பொம்மைக்கு வியர்க்குது கல்பனா..!” என்றான் ஆச்சர்யமுற்றவன் போல.
“அது முன்னாடியே இருந்ததாகத்தான் இருக்கும்… நீங்கள் கவனித்திருக்கமாட்டீர்கள்!” என்று அவள் சொன்னதைக் கேட்டவாறே, அவன் சத்யாவின் இடுப்பில் கையை வைப்பதற்கும் சத்யா அவனது கன்னத்தில் அறைவதற்கும் சரியாக இருந்தது.
கல்பனாவிற்கு அவன் அடிபட்டதை விடவும் அது பொம்மையல்ல பெண் என்பதுதான் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
“அப்படியென்றால் இது ஒரு பெண் அத்தான்!!” என்று அவன் முகம் பார்க்க…
தாடை இறுக சத்யாவை அடிப்பதற்காக அவன் கையை ஓங்கியபோது வாடிக்கையாளார்கள் அனைவரும் அவர்களைச் சுற்றி கூடிவிட்டனர்.
கூட்டத்தைக் கண்டதும் மேனேஜருடன் வேகமாக ஓடிவந்த முதலாளி சஞ்ஜீவின் கைகளைத் தடுத்துப் பிடித்து அவனிடம் மன்னிப்பு கோரினார்.
“தம்பி தெரியாமல் அடித்துவிட்டாள்… அவளை மன்னித்துவிடுங்கள்…” என்று கெஞ்சினார்.
“மன்னிப்பதா…? அதுவும் இவளையா…?” என்று அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, அவரிடம் திரும்பியவன் “இப்படிப்பட்ட ஆட்களையெல்லாம் ஏன் வேலைக்கு வைத்திருக்கிறீர்கள்? வரும் கஸ்டமர்களையெல்லாம் இப்படி அறைவதற்கா?” என்று கேட்டான்.
“இல்லை தம்பி… இவள் இதற்குமுன் இப்படி நடந்து கொண்டதேயில்லை. இன்றுதான்…” என்று சொல்லத் தயங்கியவர், அவளிடம் “சத்யா சார்கிட்ட மன்னிப்பு கேளு” என்றார்.
“சார்… இவர்தான் என்கிட்ட தப்பாக…” என்று தொடங்கியவளைப் பேசவிடாமல் தடுத்து, “அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்… முதல்ல அவர்கிட்ட மன்னிப்பு கேள்!” என்றார் அதட்டலாக.
அவள் அவனைப் பார்க்க அவனது முகம் இறுகியது.
இறுகிய அவன் முகத்தைப் பார்த்தவாறே “இல்லை சார் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது” என்றாள்  தீர்மானமாக.
அவர் பதில் பேசும் முன்பு “சார் நான் உங்க கடைமேல் வழக்குத் தொடர்வேன்” என்றான் சஞ்ஜீவன்.
“எதுக்கு தம்பி?” என்று பதறினார் அவர்.
“கடைக்கு வந்த என்னை பெண்ணை விட்டு அடித்து அவமானப்படுத்தினீர்கள். அது மட்டுமல்லாமல் அடித்ததற்கு அந்தப் பெண் மன்னிப்பும் கேட்கவில்லை. நீங்களும் தப்பு செய்த அவளுக்கு எந்தவிதமான தண்டனையும் தராமல்…  என்னை சமாதானப்படுத்தப் பார்க்கிறீர்கள்” என்று அவர் மீதே குற்றம் சாட்டினான் அவன்.
“பாவம் சார் ரொம்பவும் நல்லபெண். நீங்கள் கைவைக்கவும் தான்…” என்று அவர் இழுக்கவும், கல்பனா பேசினாள்.
“என்ன சார்? இப்படி ஒரு அழகான பெண்ணை பொம்மை போல் நிறுத்தி வைத்தால் யாராயிருந்தாலும் இது பெண்ணா? பொம்மையா? என்ற சந்தேகம் வரத்தான் செய்யும். அப்படி யாரேனும் கை வைக்க முனைந்தால் வாய் திறந்து பேசாமல் கை நீட்டி அறைவதா ஒரு பணியாளின் வேலை?” என்று கேட்டாள்.
அவள் கேட்டது சரியாகவே இருக்கவும், சத்யாவிடம் திரும்பியவர் “சத்யா சார்கிட்ட மன்னிப்பு கேட்க முடியுமா? முடியாதா?” என்று கேட்டார் முதலாளிக்கே உரிய அதிகாரத்துடன்.
“சார் இவர்தான்…” என்று அவள் மீண்டும் ஆரம்பிக்கவும், “போதும்..!” என்று கைநீட்டித் தடுத்தார்.
“திரும்பத் திரும்ப அதையே சொல்லாதே. அவசரப்பட்டு கைநீட்டிவிட்டு… அதற்கு மன்னிப்பும் கேட்காமல் பிடிவாதம் பிடிக்கிறாய். இனி நீ இங்கு வேலை பார்க்க முடியாது, நீ கிளம்பலாம்” என்றார் அவர் முதலாளித்தனத்துடன்.
“நான் என்ன சொல்ல வருகிறேன் என்றுகூட கேட்காமல் இப்படி வேலையை விட்டு நிறுத்தினால் என்ன சார் அர்த்தம்?” என்று அவள் கேட்கவும் ,“சரி சொல்” என்றார்.
நடந்ததை விவரித்து “என் பாதுகாப்புக்காகத்தான் இப்படி நடந்து கொண்டேன் மற்றபடி எந்த நோக்கமும் இல்லை சார்” என்று  முடித்தாள் அவள்.
“உன் பாதுகாப்பு பற்றி நான் யோசிக்காமல் இருந்தேனா சத்யா? பொறுமை மிக அவசியம் என்று நான் முன்பே உனக்கு சொல்லியிருக்கிறேன். நான் சொல்வதைக் கேட்டு நடப்பவர்கள் தான் எனக்குத் தேவை. நீ புறப்படலாம்” என்று  அவளைப் போகச் சொல்லிவிட்டு சஞ்ஜீவனிடம் திரும்பினார்.
“தம்பி நான் செய்தது சரிதானே?” என்று கேட்டவர், அவனது பதிலை எதிர்பாராமலே “உங்களுக்குக் கோபமாக இருக்கும் என்று தெரியும்.  இருந்தாலும்… வழக்கெல்லாம் வேண்டாமே தம்பி…” என்று கெஞ்சினார்.
கோடிக்கணக்கில் முதலீடு செய்துவிட்டு சில மாதங்களிலே வழக்கு என்று வந்துவிட்டால் பிசினெஸ் சரியாகப் போகாதது மட்டுமல்லாமல்… வாடிக்கையாளர்களின் வரத்தும் குறைந்துவிடுமே என்ற எண்ணம் அவருக்கு.
“சரி போகிறது விடுங்கள்…” என்று பெருந்தன்மையாகக் கூறிவிட்டு  வேறிடம் நோக்கிச் சென்றான்.
அவனுக்கு உள்ளுக்குள் ஆனந்தமாக இருந்தது. இருந்தாலும் அவன் சிரிப்பதை யாரும் பார்த்துவிடக்கூடாதே என்று விலகி நடந்தான்.
‘என் திட்டப்படி அவளுக்கு வேலை காலியாகிவிட்டது சந்தோஷம்தான். ஆனால் என்னை அடித்ததற்கு அவளுக்கு தண்டனை கொடுத்தாக வேண்டுமே… எப்படி?’ என்று யோசிக்கலானான்.
உடை மாற்றி தனக்குண்டான சம்பளப் பணத்தை வாங்கிக் கொண்டு கடையைவிட்டு அவள் வெளியேறியபோது மழை பெய்யத் தொடங்கியதால் ஒதுங்கி நின்றாள்.
தூரலாக ஆரம்பித்த மழை வலுக்க ஆரம்பித்தது. பேய்க் காற்றுடன் மழையும் பயங்கரமாகப் பொழிந்தது.
காலையில் நன்றாக வெயிலடித்ததால் குடை எடுத்து வந்திருக்கவில்லை அவள். சற்றுநேரம் கடையில் வராண்டா போல போடப்பட்டிருந்த இடத்திலே நின்று மழையை ரசித்தவள் சில படிகள் இறங்கி நின்று சாலையில் சென்ற வாகனங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
கடையைவிட்டு முதலில் வெளியே வந்த கல்பனா, அவளைப் பார்த்ததும் சஞ்ஜீவனிடம் திரும்பி “அத்தான் பாருங்கள்… இவள் இன்னும் போகவில்லை…” என்று சத்யாவைக் காட்டினாள்.
அவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் பார்க்கிங்கிலிருந்த காரை ஒருவன் எடுத்துவர, வேகமாகப் படியிறங்குவது போல் இறங்கியவன் சத்யாவை இடித்து மழையில் தள்ளிவிட்டான்.
“அம்மா…!” என்று கீழே விழுந்தவள் தொப்பலாக நனைந்துவிட்டாள்.
“ப்ச்…!” என்று எழுந்தவள், ‘யாரது இப்படி தன்னை இடித்துத் தள்ளியது?’ என்று பார்ப்பதற்காகத் திரும்ப… தன் காரைக் கொண்டு தன்னால் முடிந்த அளவு சேற்று நீரை அவள் மேல் அடித்துச் சென்றான் அவன்.
சென்ற காரைப் பார்த்துக் கொண்டே சில நிமிடங்கள் நின்றவளுக்கு மழைநீரோடு தன் கண்ணீரும் கலந்து செல்வது புரிய வேதனையுடனே வீட்டிற்குத் திரும்பினாள்.
மூன்று மணிவாக்கில் வீட்டையடைந்தவள், கதவு திறந்திருந்ததைப் பார்த்ததும் “பட்டம்மா… எங்கேயிருக்குறீங்க?” என்று குரல் கொடுத்தாள்.
பதிலின்றி போகவே ‘கதவைத் திறந்து வைத்துவிட்டு எங்கே போனார்கள்?’ என்றெண்ணியவாறே தாயைக் காண சென்றாள்.
இன்றும் மீனாட்சி தன் கட்டிலில் அமர்ந்தவாறே வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.
ஓடிச் சென்று முதுகைத் தடவியவாறே அருகில் அமர்ந்தவள்… அவர் சற்று சரியானதும் அவருக்கு தண்ணீர் கொடுத்து, வாய் கொப்பளிக்கச் செய்து, முகம் கழுவி, வெந்நீர் எடுத்து வந்து குடிக்க கொடுத்தாள்.
குடித்துவிட்டு நிமிர்ந்தவரை தலையணையில் சாய்த்து அமர வைத்துவிட்டு “என்னாச்சும்மா… மத்யானம் சாப்பிட்டது ஒத்துக்கலையா?” என்று கேட்டாள் கரிசனத்தோடு.
பசியோடிருந்தவருக்கு மகளின் அக்கறையில் கண்ணைக் கரித்துக் கொண்டுவர “சத்யா… அம்மாவுக்கு ரொம்ப பசிக்குது… சாப்பிட எதாவது தர்றியா?” என்று கேட்டார்.
“அம்மா…! என்ன சொல்றீங்க? மணி மூன்றாகிறது… நீங்க இன்னும் சாப்பிடலையா? நான்தான் காலையிலேயே சமைத்து வைத்திருந்தேனே…” என்றவாறே சமையலறை சென்று பார்த்தாள்.
அவள் சமைத்து வைத்த எதுவும் இல்லாமல் பாத்திரங்கள் காலியாக இருக்கக் கண்டதும், செல்பிலிருந்த டப்பாவைத் திறந்து பிஸ்கட் எடுத்து வந்து தாயாரை சாப்பிட வைத்தாள்.
மீனாட்சி சாப்பிட்டதும் “அம்மா ஒரு பத்து நிமிடம் இருங்கள்! நான் சாப்பாடி தயார் செய்கிறேன்” என்று அவரிடம் சொல்லிவிட்டு, அவசரமாக ரசம் சாதம் வைத்து சமையலை முடித்துக் கொண்டு தாயாருக்கு ஊட்டிவிட்டவாறே தானும் சாப்பிட்டு முடித்தாள்.
பாத்திரத்தையெல்லாம் கழுவி வைத்துவிட்டு வந்து தாயாரிடம் அமர்ந்து, “இப்ப சொல்லுங்கம்மா… உங்களுக்கு சாப்பாடு தராமல் பட்டம்மா அவ்வளவு சாப்பாட்டையும் என்ன செய்றாங்க? அத்தோட இது இன்றைக்கு மட்டும்தானா..? இல்லை வந்த நாளிலிருந்தே இப்படித்தானா என்பதையும் சொல்லுங்கள்?” என்று கேட்டாள்.
“சேர்ந்த புதிதில் கொஞ்ச நாட்களுக்கு நன்றாகத்தான் செய்தாள். அப்புறம் எப்போ பார்த்தாலும் என்னைத் திட்டிக் கொண்டே டி.வி. பார்ப்பாள். நான் சாப்பிடக் கேட்டால் எதுவும் தராமலே சாப்பாட்டையெல்லாம் அவர்களது பிள்ளைகளுக்கு எடுத்துச் சென்றுவிடுவாள். பன்னிரெண்டு மணிக்கெல்லாம் போகிறவள் ராத்திரி நீ வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக வந்து எனக்கு சாதம் தருவாள்” என்று அவர் சொல்ல, “அப்படின்னா… மத்யான சாப்பாடு?” என்று கேட்டாள்.
“என்றைக்காவது தருவாள்…”
“கண்ணுக்கு மருந்து மாத்திரையெல்லாம்…?”
“அதெல்லாம் சரியாகத் தந்துவிடுவாள். ஆனாலும் ரொம்ப கஷ்டமாக இருக்கிறதும்மா…” என்று கண்ணீர் விட்டார் அவர்.
தாயாரை அணைத்தவாறே ஆறுதல்படுத்தியவள் “முன்பே என்னிடம் சொல்லியிருக்கலாமே…! ஏன்மா சொல்லவில்லை?” என்று கேட்டாள்.
“எப்படி சொல்ல முடியும் சத்யா? ஏற்கனவே நீ எனக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறாயோ… அதுவும் இவர்களை ஏற்பாடு செய்தது வெங்கடேசன் அண்ணன். இவள்மேல் குற்றம் என்று வெளியே அனுப்பினால் அப்புறம் வேறு எந்த உதவி என்றும் அவரிடம் செல்ல முடியாது. அவரின் உதவியின்றி போவது உனக்கு ரொம்பவே சிரமமாக அமையும். அதனால்தான் சொல்லவில்லை” என்றார்.
“என்னம்மா நீங்க? உங்க உடம்புக்கு ஒரு கஷ்டம் வந்தால் அது என் மனதுக்கு கஷ்டமாக இருக்கும்” என்று சொல்லி,  ‘இனிமேல் இந்த மாதிரி எதையும் மறைப்பதில்லை’ என்று தாயாரிடம் வாக்கு பெற்றுக் கொண்டு “நான் அந்த பட்டம்மாவிடம் பேசிக் கொள்கிறேன்… அச்..!” என்று பேசிக் கொண்டிருந்தவள் தும்மல் போட்டாள்.
முதலில் தும்மியபோது ஒன்றும் பேசாதவர் தொடர்ந்து அவள் தும்மிக் கொண்டிருக்கவும் “சத்யா மழையில் நனைந்தாயா?” என்று கேட்டார்.
வரும்போது நனைந்துவிட்டதாகக் கூறியவள், சென்று உடைமாற்றினாள்.
தலையைத் துடைத்தவாறே கண்ணாடி முன் நின்றவளுக்கு கடையில் பிரச்சினை பண்ணியவன் தன்முன் நின்று கோபப் பார்வை பார்ப்பது போலத் தோன்றியது. அந்தத் தோற்றமே மேனி சிலிர்க்கச் செய்ய தலையை உலுக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
அந்த சமயத்தில்தான் வீட்டிற்குள் வந்த பட்டம்மா… சத்யாவை எதிர்பார்க்காததால் சற்று பதற்றத்துடன் இருந்தாலும், அதை சமாளித்து “இன்னா கண்ணு இந்நேரத்திலே வீட்டுக்கு வந்துட்டே?” என்று கேட்டார்.
“வந்தது நல்லதாகப் போய்விட்டது” என்றாள் ஒருமாதிரியாக.
“இன்னா கண்ணு… என்னமோ மாதிரி பேசுறே?” என்றாள்.
“வேறு எப்படி பேசுவது? உங்களைப் பற்றி நன்றாகவே தெரிந்து கொள்ள முடிந்ததே! அதனால்தான் இந்தமாதிரிப் பேச்சு” என்றவள், “இதுவரை நீங்கள் செய்த வேலைக்கு ரொம்ப நன்றி… இனி உங்கள் உதவி தேவையில்லை… நீங்கள் போய்வாருங்கள்” என்று அவருக்குண்டான பணத்தைக் கொடுத்து உடனே அனுப்பிவிட்டாள்.
போகும்போது சத்யாவைத் திட்டிக் கொண்டே போனாள் பட்டம்மா.
இரவு சாப்பாடு தயாரித்து தாயாருக்கு ஊட்டித் தானும் உண்டு படுத்தாள்.
‘இருந்த வேலையும் போய்விட்டது… அடுத்து என்ன செய்வது? கையிலிருக்கும் பணம் தீரும்முன் அடுத்த வேலையைத் தேடிவிட வேண்டும்’ என்ற எண்ணத்துடன் தூங்கினாள்.

Advertisement