Advertisement

அத்தியாயம் 12
இங்கு வந்த நாளிலிருந்து தினமும் காலையில் பார்வதியம்மாளுக்கு மலர்களைப்பறித்துக் கொடுப்பது சத்யாவின் வழக்கம். அன்றும் அப்படித்தான் நீச்சல்குளத்தின் ஓரமாக நின்றிருந்த செம்பருத்தி¸ செவ்வந்தி¸ மல்லிகை போன்ற மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தாள்.
காலையிலேயே தூக்கம் கலைந்து எழுந்தவன் பால்கனி சென்று வெளியே பார்த்தபோது¸ அவன் கண்டது தனது அறைக்கு பக்கத்திலேயே தெரிந்த நீச்சல் குளத்தருகே நின்று மலர் கொய்து கொண்டிருந்தவள்தான். திடீரென அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை¸ உள்ளே சென்றவன் ஒரு பக்கெட் நிறைய நீர் கொண்டு வந்து அவள் தலைமேல் ஊற்றிவிட்டான்.
மழைபோல அல்லாமல் தன்மேல் இவ்வளவு நீர் சட்டென கொட்டியதில் பயந்தவள் அலறிவிட்டாள்.
நீர் கொட்டியதால் மொத்தமாக நனைந்தவள்¸ மேலே பார்த்தாள். அவள் தன்னைப் பார்ப்பதைக் கண்டதும் தோளைக் குலுக்கிவிட்டு உள்ளே சென்றான் சஞ்ஜீவன்.
இந்த ஈரத்துடன் எப்படி வீட்டிற்குள் செல்வது என்றெண்ணியவாறே சென்று வாசலை அடைந்தவள்¸ காலிங் பெல்லை அழுத்தினாள்.
கதவைத் திறந்த பார்வதி தொப்பலாக நனைந்து நின்றவளைக் கண்டதும் “என்னாச்சு சத்யா¸ ஏன் இப்படி நனைந்திருக்கிறாய்¸ மழை பெய்ததா என்ன?” என்று கேட்டபடி வெளியே பார்த்தார்.
காலை வெயில் அடித்துக் கொண்டிருக்க¸ மழை பெய்ததற்கான அறிகுறியும் இல்லாது போக “மழை இல்லையே… பின்னே எப்படி¸ சரி நீ உள்ளே வா…” என்று அழைத்தார்.
“இல்லைம்மா… நான் போய் துணி மாற்றிவிட்டு வருகிறேன். நீங்கள் இதை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று பறித்திருந்த மலர்களை நீட்டினாள்.
மலர்களும் ஈரமாக இருந்ததைப் பார்த்தவர் “எப்படி சத்யா ஈரமானாய்?” என்று மீண்டும் கேட்டார்.
இந்த அன்பான பெண்மணி தன் மகன்தான் நீரைக் கொட்டினான் என்பதைச் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்றெண்ணியவள்¸ அதைக் கூறாமல் “வந்தும்மா… நீச்சல்குளம் பக்கமாக நின்று இதையெல்லாம் பறித்துக் கொண்டிருந்தேன். தரையிலிருந்த நீரை கவனிக்காமல் கால் வழுக்கி குளத்தில் விழுந்துவிட்டேன்” என்று சொன்னாள்.
சொல்லி முடித்தவளுக்கு சிரிப்பு சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தால் அவன்தான் நின்றிருந்தான்.
“என்ன சஞ்ஜீவ் சிரிக்கிறாய்?” என்று கேட்டார் தாயார்.
“அது வந்தும்மா… இவள் சொன்ன காட்சியை கற்பனை செய்து பார்த்தேனா¸ சிரிப்பு வந்துவிட்டது” என்று மீண்டும் சிரித்தான்.
அவளுக்கு அவன் சிரிப்பது ஆச்சரியமாக இருந்தாலும்¸ செய்வதையும் செய்துவிட்டு என்னமாக சிரிக்கிறான் என்றுதான் தோன்றியது.
தொடர்ந்து தும்மியவளைக் கண்ட பார்வதி “அய்யய்யோ… தலை துவட்டாமல் உனக்கு தடுமன் வந்துவிட்டது போல… நீ இங்கேயே இரு சத்யா¸ நான் போய் டவல் கொண்டு வர்றேன்” என்றவர் உள்ளே சென்றார்.
உடல் முழுவதும் ஈரத்துடன் நின்றவளை தன் பார்வையால் அளந்தபடி அருகே வந்தான் அவன்.
மஞ்சளில் கருநிற மலர்களைத் தெளித்திருந்த சேலை அவளது நிறத்திற்கு பொருத்தமாக இருந்தது. அத்தோடு ஈரமான துணிவேறு உடலோடு ஒட்டிக்கொண்டிருக்க பார்ப்பதற்கு இன்னும் அழகாகத் தெரிந்தாள். குளிரில் துடித்த உதட்டை கவனித்தவனின் பார்வையில் ரசனை கூடியிருந்தது.
இப்படி ரசித்துக் கொண்டிருப்பது தனக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்தவன் தலையை உலுக்கிக் கொண்டு “எப்போது இங்கிருந்து செல்கிறாய்?” என்று கேட்டான்.
இப்போது அவனைப் பார்த்தவளுக்கு சற்றுமுன் அந்த முகத்தில் இருந்த சிரிப்பின் அறிகுறியே தெரியவில்லை. முகம் கடுமைக்கு மாறியிருந்தது.
அவள் பதில் கூறும்முன் டவலுடன் வந்த பார்வதி¸ அவளுக்கு தலை துவட்டினார். கூச்சத்தோடு விலகியவள் “கொடுங்கம்மா நானே துவட்டிக்கிறேன்” என்று வாங்கி லேசாகத் துவட்டிவிட்டு¸ அதையே தோளோடு போர்த்திக்கொண்டு தன் இருப்பிடத்திற்குத் திரும்பினாள்.
போனவளையே பார்த்துக் கொண்டு நின்ற தாயாரிடம் “அம்மா எனக்கு பசிக்குது¸ சாப்பாடு எடுத்துத் தர்றீங்களா?”  என்று கேட்டு அவரது கவனத்தை தன்பக்கம் திருப்பினான்.
சாப்பிடும்போது வந்தமர்ந்த சங்கரன்¸ தானும் உணவருந்தியவாறே “பார்வதி நம்ம சீனிவாசன் போன் பண்ணியிருந்தான்” என்றார்.
“அப்படியா! எல்லாரும் நல்லா இருக்கிறார்களா? என்ன விஷயமாகப் பேசினார்?” என்று கேட்டார்.
“என்ன விஷயமாகப் பேசுவார்கள்!” என்று பெரியதொரு மூச்சை வெளியிட்டார் அவர். டைனிங் ஹாலில் அமர்ந்திருந்த மற்ற மூவருமே அவரைப் பார்க்க “நம்ம ஜீவா கல்யாண விஷயமாக பெண் பார்க்கறீங்களான்னு கேட்டார்” என்று விஷயத்தைக் கூறினார் அவர்.
சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் கைகளை நிறுத்திவிட்டு “நீங்க என்னப்பா சொன்னீங்க?” என்று கேட்டான்.
“நான் என்ன ஜீவா சொல்வேன்¸ உனக்குத்தான் நாங்கள் திருமணப் பேச்சை எடுத்தாலே பிடிக்காதே..! அதனால் பிறகு பார்க்கலாம் என்று சொன்னேன்” என்று சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தார்.
பார்வதி சாப்பிடாமல் வாயிலையே பார்க்கவும் “யாரைப் பார்க்கறீங்கம்மா?” என்று கேட்டான்.
“இல்லைப்பா… இன்னும் சத்யா சாப்பிட வரவில்லை¸ அவளைத்தான்…” என்று அவர் சற்று வருந்தவும்¸ “ஏன் அத்தை வேலைக்காரியை நமக்கு சமமாக நடத்தறீங்க? அதனால்தான் மகராணிக்கு உங்களைக் காக்க வைக்கும் அளவுக்கு திமிர் வந்துவிட்டது…” என்றாள் கல்பனா.
“சேச்சே… அப்படி சொல்லாதே கல்பனா. சத்யா ரொம்ப நல்ல பொண்ணு… காலையிலே அவளுக்கு காய்ச்சலாக இருந்தது¸ ஆனாலும் நான் கேட்டேன்னு மலர் பறிக்கப் போனவள்… பாவம் தண்ணீரில் விழுந்துவிட்டாள். உடைமாற்ற போனவள் எப்படி வருகிறாளோ… தெரியவில்லை….” என்று பார்வதி சொன்னபோதுதான் அவளுக்கு காய்ச்சல் என்பதை அவன் தெரிந்து கொண்டான்.
அவள்மேல் இருந்த கோபத்தில் நீரை ஊற்றிவிட்டான்…. ஆனால் காய்ச்சல்பற்றி தெரியாதே..!
‘இப்போது எந்த நிலைமையில் இருக்கிறாளோ?’ என்றெண்ணியவன் “சரி விடுங்கம்மா… அவள் வரும்போது வந்து சாப்பிடட்டும். நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று தாயாரிடம் எரிச்சல்பட்டான்.
அப்போது “வாடியம்மா…. மகா..ராணி….” என்று கல்பனாவின் குரல் ஒலித்தது.
சட்டென நிமிர்ந்து பார்த்தான் சஞ்ஜீவ். சத்யாதான் ஈரக்கூந்தலை விரியவிட்டவாறு சிவந்த கண்களுடன் சோர்ந்து போனவள்போல் வந்து கொண்டிருந்தாள்.
அவள் அருகே வந்ததும் “ஏய்! உனக்கு சாப்பிடணும் என்றால் சமயத்திற்கு வந்துசேர வேண்டும்… அதை விட்டுவிட்டு பார் நாங்கள் எல்லோரும் உனக்காக சாப்பிடாமல் பட்டினி கிடக்க வேண்டுமா?” என்று சத்தம் போட்டாள் கல்பனா.
“சாரி மேடம்¸ கொஞ்சம் உடம்புக்கு கஷ்டமாக இருந்தது…” என்று அவள் ஆரம்பித்ததும் பதட்டமான பார்வதி “சத்யா ரொம்ப முடியவில்லையாம்மா..? ஹாஸ்பிட்டல் போய்வரலாமா?” என்று கரிசனமாகக் கேட்டார்.
உடனே “ம்க்கும்… இது ஒண்ணுதான் குறைச்சல்” என்று நொடித்தாள் கல்பனா.
“என்ன?” என்றார் சங்கரன் சற்று அதட்டலாக.
“அது… வந்து மாமா…” என்று சற்று தயங்கியவள்¸ அந்தத் தயக்கத்தை விரட்டியடித்துவிட்டு “மாமா… இவள் உங்களுக்கு பணிவிடை செய்ய வந்தவள். ஆனால்¸ நீங்க ரெண்டுபேரும்தான் அவளுக்காக திரும்பத் திரும்ப ஏதாவது செய்துகொண்டே இருக்கிறீர்கள். இப்படியே செய்து கொண்டிருந்தால்… இவளுக்கு தலைக்கணம் ஏறிவிடும் மாமா… அதனால் இவளுக்கு உதவி செய்வதை முதலில் நிறுத்துங்கள்… அதற்குமேல் இவளால் எப்படி….” என்று சொன்னபோது சஞ்ஜீவனே முகம் சுளித்துவிட்டான்.
அதற்குக் காரணம் கிட்டத்தட்ட அவனுக்கு நேரெதிராக நின்ற சத்யா¸ நிற்க முடியாமல் நடுங்கிக் கொண்டிருப்பதை அவனால் மிகத் தெளிவாகவே காணமுடிந்தது. அவளது நடுக்கத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை உணர்ந்தவன் “போதும் கல்பனா… நிறுத்து!” என்று அவளது பேச்சை நிறுத்திவிட்டு “அம்மா சத்யாவுக்கு குடிக்க ஏதாவது சூடா கொடுங்க…. நாம ஹாஸ்பிட்டல் போய்வரலாம்” என்றான் தாயாரிடம்.
அந்த நிலையிலும் சத்யாவிற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. செய்வதையும் செய்துவிட்டு இப்போது எப்படி¸ உலகமகா நடிப்புடா சாமி..! என்றெண்ணி வியந்தவளிடம் ஓட்ஸ் கஞ்சியைக் கொடுத்து குடிக்க சொன்னார் பார்வதி.
நடந்தவற்றையெல்லாம் பார்த்த கல்பனாவிற்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது. இவ்வளவு நேரமும் அவள் சொன்னது என்ன¸ அதற்கு நேர்மாறாக இவர்கள் எல்லோரும் நடந்து கொள்கிறார்களே என்றிருந்தது. எவ்வளவு நாள்தான் போகிறது என்று பார்த்துக் கொள்ளலாம் என்றெண்ணி அப்போதைக்கு விட்டுவிட்டாள் அவள்.
சத்யாவிற்கு வைரஸ் பீவர் என்றார் டாக்டர்.
“ஐயோ டாக்டர்!”  என்று பதற்றமடைந்த தாயாரிடம் “அம்மா இது ஒன்னும் பெரிய நோய் இல்லை…” என்று சொன்ன சஞ்ஜீவன் டாக்டரைப் பார்க்க¸ அவர் சற்று விளக்கமாகக் கூற அமைதியடைந்தார் பார்வதி.
ஊசி போடப்பட்டதால் அதன் வீரியத்தால் தூங்கிக் கொண்டிருந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்த தாயாரை அறைக்கு வெளியே அழைத்து வந்து “அம்மா சத்யாவை வேலையை விட்டு நிறுத்திவிடுவோம்” என்றான் ஜீவா.
“என்னப்பா திடீர்னு இப்படி சொல்கிறாய்!” என்று அதிர்ந்தவரிடம்¸ “அம்மா… காலையில் கல்பனா சொன்னதை வைத்துப் பார்த்தால் நீங்கள்தான் இவளுக்கு சேவை செய்வதுபோலத் தோன்றுகிறது. இது எனக்கும் பிடிக்கவில்லை” என்றான்.
“என்னப்பா… நீ!! கல்பனாவுக்கு எதுவும் தெரியாது¸ அதனால் பேசிவிட்டாள்…. நானும் போகிறது என்று விட்டுவிட்டேன். ஆனால்¸ சத்யா எனக்கு செய்த உதவியெல்லாம் உனக்குமா தெரியாமல் போய்விட்டது!” என்று ஆதங்கப்பட்டார்.
அவனுக்குத் தெரியும்தான். பெற்றோரை கவனிக்காமல் அப்படி என்ன வேலை பெரிது¸ என்று அவனையே கேட்டவள்தானே. “அம்மா¸ அதற்குத்தான் அவள் அம்மாவின் மருத்துவச் செலவை நாம் ஏற்றுக் கொண்டோமே… அப்புறம் என்ன?” என்றான்.
“மருத்துவச் செலவிற்கு பணமாகத் தரமுடியவில்லையென்பதால் அவர்களது வீட்டை எங்களை எடுத்துக் கொள்ள சொன்னாள்… அது தெரியுமா?” என்று கேட்டார்.
இந்த விஷயம் அவனுக்குப் புதிதென்பதால்¸ பதில் பேசாமல் தாயாரையே பார்த்தான். “சத்யா நம் வீட்டிற்கு வந்தபின் நானும் உன் அப்பாவும் மனதளவில் ரொம்பவே நிம்மதியாக இருக்கிறோம் ஜீவா… அதனால்¸ தயவுசெய்து அவளை எங்களைவிட்டுப் போகச் சொல்லிவிடாதே…” என்று கெஞ்சுதலாகக் கேட்டார்.
“அம்மா… என்னம்மா நீங்க! அவளிருப்பதுதான் உங்களிருவருக்கும் பிடித்திருக்கிறது என்று சொல்வதுதானே! அதைவிட்டு என்னிடம் போய்…. சரிம்மா அவள் இங்கேயே இருக்கட்டும்” என்றான்¸ அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கிருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போய்க் கொண்டிருப்பதை சொல்லமுடியாமல்.
தாயார் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தவன் “இதைப் பற்றி அப்புறமா பேசலாம்மா… நான் கிளம்புகிறேன். டிரைவர் காரை எடுத்துட்டு வருவார்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
“ஹலோ! அப்பா எப்படி இருக்குறீங்;க?” நலம் விசாரித்தாள் கல்பனா.
வீட்டில் இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என்று மகளை விசாரித்து அறிந்து கொண்டார் மணிவண்ணன். அவள் நடப்பவற்றை சொன்னதும் “நம்பிக்கையோடு செயல்படு கல்பனா…. சஞ்ஜீவ் உனக்குத்தான்” என்று அவளை உற்சாகப்படுத்தினார்.
“சரிப்பா…” என்று மகிழ்ச்சியாகக் கூறியவள்¸ “…அப்பா¸ இந்த மாமா இப்போதுதான் அத்தானிடம் எங்கள் திருமணப் பேச்சை எடுத்திருக்கிறார்” என்றாள்.
“சஞ்ஜீவ் என்ன சொன்னான்?”
“அத்தான் எதுவும் சொல்லாமல் யோசித்ததைப் பார்த்தால் சம்மதம் சொல்வார் என்று நினைக்கிறேன்” என்றாள் மகள்.
“சரிம்மா… முக்கியமான விஷயம் எதுவென்றாலும் உடனே எனக்கு சொல்லு. நான் அப்புறம் பேசுறேன்¸ நீ பார்த்து செயல்படு” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தார் சஞ்ஜீவனின் மாமா.
தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் ஜீவா. என்ன  யோசித்தும் சரியான முடிவெடுக்க முடியாமல் ஒரு குழப்பம். ஏன்¸ எதனால் என்றும் புரிபடவில்லை. இதனால்தான் சத்யாவை இங்கிருந்து அனுப்பிவிட வேண்டுமென்று அவன் நினைத்தது. ‘ஆனால்¸ அம்மா..!’ யோசனை அவனைத் தலையில் கையைவைத்து அமர வைத்துவிட்டது.
அன்று காலையில் சத்யா மலர்கொய்து நின்ற காட்சி கண்முன் விரிந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு ஓவியப்பாவை தன் தோட்டத்தில் மலர்கொய்து கொண்டிருப்பதாக ஒரு எண்ணம் மனதில் ஓட¸ சட்டென வீசிய காற்று அவன் மயக்கத்தைக் கலைத்தது.
அது சத்யா என்பது அப்போதுதான் அவனுக்கு விளங்கியது. இப்படி இவளைப் பார்க்கும் போதெல்லாம் ரசித்துக் கொண்டிருந்தால் எப்படி பழிவாங்க முடியும்? எல்லாம் இவளால்தான்… இவள்தான் தான் ரசிக்கும்படியாக இப்படி வந்து நிற்கிறாள் என்று அவள்மேலேயே தான் ரசித்ததற்கான பழியையும் போட்டு¸ தன்கோபத்தையும் அவளிடம் செலுத்தும் வண்ணம்தான் அவள்மீது நீரை ஊற்றினான்.
அதுவும் சரியில்லாமல்போய் அவளை ஹாஸ்பிட்டலில் படுக்க வைத்துவிட்டது. இன்னும் இரண்டு நாட்கள் போனால் அவள் சரியாகிவிடுவாள். ஆனால தான் எப்போது சரியாவது¸ எப்படி சரியாவது¸ என்று விடியவிடிய யோசித்து திருமணம் செய்துகொள்வது என்ற முடிவிற்கு வந்தான்.
அதுவும் மனைவி இல்லாத காரணத்தால்தான் அழகாக இருக்கும் அவள்மேல் தன் கவனம் செல்கிறது என்றெண்ணியே அவன் இந்த முடிவை எடுத்தான்.
அதன்பிறகு அவள்மேல் பார்வை செல்லாது… சுலபமாகப் பழிவாங்கலாம் என்று நினைத்தவனுக்கு¸ அது அவ்வளவு சரியாகப் படவில்லை.
நித்யா இல்லாமல் தன் வாழ்வு வெறுமையாகிவிட்டதாக எண்ணி அதற்குக் காரணமாக சத்யாவை பழிவாங்கும் வெறி கொண்டிருந்தவன், இப்போது அதை நடத்துவதற்காகவே மற்றொரு திருமணத்திற்கு சம்மதிக்கப் போகிறான்.
‘அப்படி வேறொரு திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளப் போகிறான் என்றால்…. நித்யா மீது அவனுக்கிருந்த அன்பை மறந்திருக்கவோ அல்லது அடுத்த திருமணத்திற்கு தயாராகவோ அவன் இருக்கிறான் என்றுதான் அர்த்தம். அப்படி அவன் மனைவி மீதான அன்பு கடுகளவு குறைந்திருக்கிறது என்றால்கூட அவனது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே பொய்த்துப் போய்விடுகிறதே…. அப்படியிருக்கும்போது அவளை ஏன் பழிவாங்க வேண்டும்….?’ என்று ஒருமனம் சொல்லியது.
‘அப்புறம் எப்படி என்னால் திருமணத்திற்கு சம்மதம் சொல்லலாம் என்று முடிவெடுக்க முடிந்தது?’
‘இல்லை… இல்லை… என்ன இருந்தாலும் நான் காதலித்து மணந்தவளின் சாவிற்கு காரணமானவளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்க வேண்டும்’ என்று இன்னொரு மனம் சொல்லியது.
மொத்தத்தில் அவன் திண்டாடிப்போனான்.
சத்யாவின் உடல்நிலை நன்றாகி எப்போதும்போல் தன்வேலைகளைச் செய்யலானாள். சில நாட்களில் அவள் தாயாருக்கு ஆபரேசன் நடக்க இருப்பதாக தகவல் வந்தது.
அந்த செய்தி வந்ததிலிருந்து மகிழ்ச்சி ஒருபுறமும் பயம் ஒருபுறமுமாக அவளை வாட்டியது. அம்மாவுக்குக் கண்பார்வை கிடைக்க வேண்டும் எனக் கடவுளை வேண்டிக் கொண்டு¸ கோவிலுக்கு சொல்லவேண்டுமென்பதற்காக பார்வதியம்மாளிடம் கேட்கச் சென்றாள்.
அவரோ மிகவும் சந்தோஷமாக இருந்தார். தான் வந்ததன் காரணத்தை சொன்னவள்¸ “என்னம்மா… என்ன விஷயம்? ரொம்ப சந்தோஷமா இருக்குறீங்க…. என்கிட்ட காரணத்தை சொல்லமாட்டீங்களா?” என்று கேட்டாள் அவரது மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்பவளாக.
“உன்கிட்ட சொல்லாமல் இருப்பேனா சத்யா…. கோவிலில் வைத்து சொல்லலாம் என்றிருந்தேன்” என்று அவர் சொன்னதும்¸ “அப்படியென்றால் சரிம்மா… நான் கோவில் போனப்புறமே தெரிந்துகொள்கிறேன்” என்றாள்.
அவள் அதைச் சொல்லி வாயை மூடுவதற்குள் அவள் வாயில் இனிப்பைத் திணித்தவர் “என் மகன் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டான்” என்றார்.
“ஓ!! அப்படியாம்மா…. ரொம்ப சந்தோஷம்!” என்று தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தவள்¸ “இனிமேல் நீங்க கஷ்டப்பட்டு படியேற வேண்டியது இல்லை…” என்றாள் விளையாட்டாக.
“எனக்குப் பதிலாக ஏறுவதற்குத்தான் நீ இருக்கிறாயே! ஏன் சத்யா எனக்காக செய்யமாட்டாயா?” என்று கேட்டார்.
“நிச்சயமா செய்வேன்…” என்று சிரித்தாள்.
வீட்டினுள் நுழையும்போதே தாயாரும் சத்யாவும் சிரிப்பதைக் கண்ட ஜீவாவின் கண்களில் காட்சி விரிந்தது. “சஞ்ஜீவ்…!” என பார்வதி தோளைத் தட்டவும்¸ சுய உணர்வு வரப்பெற்றவன் “எங்கே போறீங்க?” என்று கேட்டான்.
“என்னோட வேண்டுதலைக் கேட்டு கடவுள் செவிசாய்த்துவிட்டார் ஜீவா…” என்றார்.
தாயாரின் பேச்சை சரியாகக் கவனிக்காதவன் “என்ன வேண்டுதல்? யார் செவி சாய்த்தார்?” என்றான்.
“நீ திருமணத்திற்கு சம்மதித்தால் கோவிலுக்கு லட்சார்ச்சனை செய்வதாக வேண்டிக் கொண்டேன். அதற்காகத்தான் கோவிலுக்குப் போகிறோம்” என்றார் தெளிவாக.
“ஏன்மா… உங்களோட வேண்டுதலுக்கு செவிசாய்த்து சம்மதம் சொன்னது நான். அர்ச்சனை சாமிக்கா..?” என்றான் விளையாட்டாக.
அருகில் நின்று அவர்களது பேச்சை கவனித்துக் கொண்டிருந்த சத்யா அப்போதுதான் வாய் திறந்தாள். “அம்மா ஏற்கனவே உங்கள் மகன் கல்போன்று இருப்பவர்தான்… அவரை நடுஹாலில் அமரவைத்து கொஞ்சம் நகைகளும் போட்டு உட்காரவைத்து அர்ச்சனை செய்யுங்கள்…. நான் கோவிலுக்குப் போய் கடவுளுக்கு அர்ச்சனை செய்கிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள். அவளது பேச்சை நன்றாக உள்வாங்கிய பார்வதி சிரித்துவிட்டார்.
அவளது பேச்சைக் கேட்டு கோபமுற்றிருந்த சஞ்ஜீவ்¸ தாயார் அதைக்கேட்டு சிரிக்கக் கண்டதும் “என்னம்மா…. உங்களுக்கும் நான் கல்லாகவா தெரிகிறேன்?” என்று கேட்டான் சற்று கோபமாகவே.
“இல்லைப்பா…. உன் சின்னவயசில் உனக்கு நிறைய நகைகள் போட்டு அழகு பார்த்திருக்கிறேன். ஆனால்¸ இப்போது சத்யா சொன்னதைப் போல கற்பனை விரிந்ததா…. சிரிப்பு வந்துவிட்டது”  என்றார் சிரித்தவாறே.
அவனுக்கும் சிரிப்பு வந்தது. சிலைவடிவாக காட்சிதரும் இறைவனும் அவனும் ஒன்று என்று சொன்னால் யாருமே இப்படித்தான் சிரிப்பார்கள் என்பதால் அந்தப் பேச்சை அத்துடன் விட்டுவிட்டான்.

Advertisement