Advertisement

அத்தியாயம் 9
அறையிலிருந்து ஓட்டம் பிடித்தவள்¸ ஜீவன் சொன்னதுபோல வீட்டை அடையாவிட்டாலும்… எம்.டி. அறையில்தான் அவளது ஓட்டம் நிறைவடைந்தது.
அரக்கபரக்க வந்தவளைக் கண்டு “வா சத்யா¸ என்னாச்சு?” என்று கேட்டார் முதலாளி.
வேகமாக மூச்சு வாங்கியவள் “ஏன் சார் இப்படி செய்தீங்க?” என்றாள் கோபமாக.
“என்னம்மா…. ஏன் இப்படி பேசுறே?”
“பின்னே என்ன சார்? இந்த ஹோட்டல் நல்ல மாதிரி என்றுதான் நான் வேலைக்கு வந்தேன். அதுவும் என் குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான்.  அப்படியிருக்கும் போது யாரோ ஒருத்தர் என்னவோ கேட்டாரென்றால் அதை உடனே மறுக்காமல் என்னிடமே… பிடித்தால் செய்… இல்லை வேண்டாம் என்றீர்களே! உங்களிடம் வேறு எப்படி பேசுவது?” என்றாள் கோபம் குறையாமலே.
“அதில்லைம்மா… அந்த தம்பி என்கிட்ட வேற மாதிரி…” என்று அவர் சொல்ல வந்ததை கவனிக்காமல் “போதும் சார்! நான் இங்கு வேலை பார்த்தது போதும்! நான் போகிறேன்” என்றாள்.
அப்போதும் அவர் ஏதோ சொல்ல முனைவதைக் கேட்காமல் “போறதுக்கு முன்னால ஒன்னு சொல்லிக்கிறேன் சார்… பெண்கள் குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான் ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட்டாக செல்வது. ஆனால் அதைக்கூட வெளியில் தவறாகத்தான் பேசுவார்கள்… ஏதோ தப்பான தொழில் செய்துவிட்டு வருவதாக. அதைப் பொறுத்து என்போல சிலர் வருவதற்குக் காரணமே படிப்பு மற்றும் அவர்களது குடும்பம்தான். அவர்களை வேறுவழிக்கு மாற்ற முயற்சி செய்யாதீர்கள் உங்களுக்கு பலனுண்டு” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.
அவள் வேலையை விடுவதைக் கேள்விப்பட்டு ‘என்ன?’ என்று கேட்ட அகிலாவிடம்¸ “ஒன்றுமில்லை! கவனமாக வேலை செய்!” என்று சொல்லிவிட்டு வெளியேறினாள்.
அறையை காலி செய்யும் முன்பாக எம்.டி.யைப் பார்க்க வந்தான் சஞ்ஜீவன்.
அவன் அமர்ந்ததும் “தம்பி நிஜமாகவே சத்யா நல்லப் பெண். அவளைப் பற்றி அறிந்து கொள்ள நீங்கள் இந்த வழிமுறையை தேர்வு செய்திருக்க வேண்டாம். பாவம்… பாருங்கள் வேலையே வேண்டாம் என்று போய்விட்டாள்” என்று வேகமாகப் பேசினார்.
‘அதுதானே எனக்கு வேண்டும்!’ என்று மனதுள் குதூகலித்துக் கொண்டவன்¸ வெளியில் “சார்.. நான் இவளை முன்பே வேறு இடத்தில் பார்த்திருக்கிறேன். அப்போதே முடிவு செய்துவிட்டேன்¸ இவளைத்தான் திருமணம் செய்ய வேண்டுமென்று… என் அம்மாவிடம் சொல்லி அவரை அழைத்துச் சென்றபோது அவள் அங்கு இல்லை. காரணம் கேட்டபோது தப்புத்தப்பாக ஏதேதோ சொன்னார்கள்… நான் நம்பவில்லை. ஆனால்¸ என் தாயார் நம்ப வேண்டுமே… அத்தோடு அவளை அதன்பிறகு இங்குதான் பார்த்தேன். பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது¸ அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு சின்ன நாடகம் அவ்வளவுதான்…” என்று கூசாமல் பொய் சொன்னான்.
பேசி முடித்தவன் இவர் இதைப்பற்றி அவளிடம் எதுவும் உளறியிருக்கக்கூடாதே என்று நினைத்தவாறே “நீங்க இதுபற்றி எதுவும் அவளிடம் சொல்லிவிடவில்லையே?” எனக் கேட்டான்.
“நான் சொன்னாலும் கேட்கும் மனநிலையில் அவள் இல்லை. தம்பி… சத்யா ரொம்பவும் நல்லபெண்¸ நம்பி நீங்கள் அவளை மணக்கலாம்” என்று அவளுக்கு நற்சான்று கொடுத்தார்.
“ஓகே சார்..” என்று எழுந்தவன் “அவளோட அட்ரஸ் தரமுடியுமா?” எனக் கேட்டு அவர் கொடுக்கவும் மகிழ்ச்சியோடு புறப்பட்டான்.
சத்யாவால் அழுகையை அடக்க முடியவில்லை. அவளை என்ன நினைத்துவிட்டான் அந்த ராஸ்கல். அன்றும் அப்படித்தான்… துணிக்கடையில் கை நீட்டினான். அப்படி நிற்பவள் எதற்கும் வளைபவள்¸ அவன் அழைத்தால் உடனே அவனுடன் இழைவாள் என நினைத்தானோ?
‘அப்பா… ஏன்ப்பா என்னை இப்படி தவிக்க விட்டுப் போனீர்கள்? பலநேரம் நான் இந்த சமுதாயத்தில் எப்படி வாழ்வேன் என்பதை நினைத்து பயமாக இருக்கிறது அப்பா!’ என்று அழுதவாறே தன் தெய்வமாகிவிட்ட தகப்பனாரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
பொது இடமான பார்க்கில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெண்ணி அழுகையை நிறுத்த முயன்றாலும் அவளால் இயலவில்லை. அப்படியே இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு அழலானாள்.
“சத்யா…!” என்ற கனிவான குரலில் திரும்பிப் பார்த்தாள்.
பார்வதி நின்றிருந்தார். அவரைக் கண்டதும் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை வேகமாகத் துடைத்தவள்¸ புன்னகைக்க முயன்றாள். முடியாமல் போகவே அப்படியே தலைகுனிந்து அமர்ந்தாள்.
அருகில் அமர்ந்தவர் “ஏன் சத்யா அழறே?” என்று கேட்டார்.
“ஒன்றுமில்லை” என்று தலையை அசைத்தாள்.
“என்னிடம் சொல்லக்கூடாதா! யாரிடமாவது சொன்னால் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கலாமில்லையா? சொல்…” என்று ஆறுதலாக முதுகை வருடியவர்¸ அவளை சொல்லத் தூண்டினார்.
அவளும் அதன்பின் யோசிக்காமல் எல்லாவற்றையும் அவரிடம் கொட்டிவிட்டாள். பின்னர் கடைசியாக “அடுத்து என்ன வேலைக்குப் போவது என்று புரியவில்லை. என்னுடைய டிகிரிக்கு மட்டுமாக எந்த வேலையும் கிடைக்கவில்லை… அம்மாவையும் இந்த வாழ்க்கையையும் நினைத்தாலே பயமாக இருக்கிறது” என்று வருத்தத்துடன் முடித்தாள்.
பார்வதிக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. ஏனெனில் அவள் சொல்லும் அந்த ‘அவன்’ இவள் வேறு எங்கு வேலைக்கு சென்றாலும் தொல்லை கொடுக்கத்தான் செய்வான்… மாட்டான் என்று நிச்சயமில்லை. ‘எனவே வேறு ஏற்பாடு தான் செய்ய வேண்டும்’ என்று மனதில் நிச்சயித்துக் கொண்டவர்¸ தன் மகனிடமும் கணவரிடமும் பேசிவிட்டுத் தகவல் தருவதாகக் கூறினார்.
“அதுவரை வேறு எங்கும் முயற்சிக்க வேண்டாம். மனதை அமைதிபடுத்திக் கொள்” என்றுவிட்டுப் போனார்.
“என்னப்பா ஜீவா… இன்றைக்கு ரொம்ப சந்தோஷமாக இருப்பது போல் தெரிகிறதே.. என்ன விஷயம்? ஏதேனும் புது கான்ட்ராக்ட் கிடைத்துவிட்டதா?” என்று வினவினார் சங்கரன்.
“அப்படி எதுவும் இருந்தால் உங்களிடம் சொல்ல மாட்டேனாப்பா… இது வேறு.. என்னவோ மனதில் ஒரு ஆனந்தம். அது முகத்திலும் தெரிகிறதுபோல…” என்றவன் டி.வி.யை ஓடவிட்டு காமெடி சேனலை வைத்தான்.
வெளியிலிருந்து வந்த பார்வதி கணவரிடம் சென்று அவரிருந்த சோபாவில் தானும் அமர்ந்தார்.
தாயாரின் வாடிய முகத்தைக் கண்ட மகன் “என்னம்மா.. உடம்புக்கு ஏதேனும் கஷ்டமாக இருக்கிறதா? ஹாஸ்பிட்டல் போகலாமா?” என்று பதற்றமாகக் கேட்டான்.
“இல்லை… இந்த உடம்புக்கு ஒன்றும் குறையில்லை” என்று சலிப்புடனே பதிலளித்தார் அவர்.
“பின்னே…” என்றனர் இருவரும். அவர் அமைதியாகவே இருக்க சங்கரன் “என்னவென்று சொன்னால்தானே பார்வதி தெரியும்¸ சொல்..” என்று மனைவியை ஊக்கினார்.
“நம்ம சத்யா இருக்காளே…” என்று அவர் தொடங்க¸ “அது யாரு நம்ம சத்யா?” என்று கேட்டார் சங்கரன். மகனோ அமைதியாகத் தாயாரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“அதான்ங்க என்னைக் கோவிலில்…” என்று அவர் தொடங்கியதும்¸ “ஆங்… நினைவு வந்துவிட்டது. அந்தப் பெண்ணுக்கு என்ன?” என்று கேட்டார்.
அவளுடைய நிலைமையைப் பற்றிக் கூறியவர் “உங்களுக்கு வீட்டில் இருந்து உதவி செய்வதற்கு ஆள் தேவை என்று சொன்னீர்களே.. அது யாரோ ஒருவராக இல்லாமல் இந்தப் பெண்ணாக இருந்தால் நானும் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைக்கிறது என்று சந்தோஷப்படுவேன்” என்று முடித்தார்.
உடனே மகன் “அம்மா¸ இது.. அதாவது நாம் வேலையில் சேர்க்கும் அந்த ஆள் நம்மோடு தங்கி வேலை பார்க்க வேண்டும். அது ஆணாக இருந்தால் தான் சரியாக இருக்கும். அதனால் நீங்கள் சொன்ன அந்தப் பெண்ணுக்கு நாம் வேறு வேலைக்கு ஏற்பாடு செய்வோம்” என்றான்.
“இல்லை கண்ணா… அவளை வெளியில் வேலை செய்யவிடாமல் ஒருவன் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறான். இங்கு நம் வீட்டில் என்றால் யாராலும் வாலாட்ட முடியாது. ப்ளீஸ்டா… அம்மாவுக்காக… ” என்று தாயார் கெஞ்சுதலாகக் கேட்க¸ மகன் தகப்பனாரைப் பார்த்தான்.
அவர் சரியென்பதாகத் தலையசைத்ததும் “சரிம்மா… என்ன படித்திருக்கிறாள்?” என்று கேட்டான்.
“பி.காம். பர்ஸ்ட் கிளாஸ்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
“சரி. வேற என்ன அடிசனல் கோர்ஸ் முடித்திருக்கிறாள்?”
“வேற…! வேற என்னடா கண்ணா?” என்று கேட்டார் தாயார் தெரியாமல்.
“அம்மா இது வெறும் கணக்கு வழக்கு பார்க்கின்ற வேலை மட்டுமில்லை. சில விஷயங்களை கணினி அல்லது லேப்டாப்பில் ஸ்டோர் செய்ய வேண்டியிருக்கும்¸ மெயில் செக் பண்ண வேண்டியிருக்கும்¸ மெயில் அனுப்ப வேண்டி வரும். உங்க சத்யாகிட்ட அதெல்லாம் இல்லையா..?” என்றான்.
“இல்லையே! கண்ணா அவள் கணினி வகுப்புக்கு போனதாகச் சொன்னாள். ஆனால் அதை முடிக்கமுடியாமல் வீட்டில் பிரச்சினைகள் வந்துவிட்டதாம்” என்று தாயார் சொன்னதும்¸ “ஏன் இவ யாரையும் லவ் பண்ணினாளாமா? அதனால இவளை வகுப்புக்கு அனுப்பவில்லையா?” என்று கேலி இழையோடக் கேட்டான்.
“சத்யா தங்கமான பெண்ணடா! அவளோட அக்கா யாரையோ காதல் செய்து அவனோடு ஓடிப் போய்விட்டதால் இவள் தந்தை உடல்நிலை சரியில்லாமல் போக¸ அவரை கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் இவளால் தொடர்ந்து படிக்க முடியாமல் போய்விட்டது” என்று அவளது நிலையை விளக்கியவர்¸ “அதற்காக அவளுக்கு கையாளத் தெரியாது என்று நினைத்துவிடாதே! ஏற்கனவே கொஞ்சமாகத் தெரிந்து வைத்திருப்பதை சொல்லிக் கொடுத்தால் சட்டென பிடித்துக் கொள்வாள்” என்று தன் மனதிற்குப் பிடித்தவளைத் தாங்கிப் பேசினார் தாயார்.
“யார்¸ எதைப் பிடித்துக் கொள்வாள் அத்தை?” என்று வந்தாள் கல்பனா.
வந்தவளை வரவேற்றவர்¸ மகனிடம் திரும்பி “சொல்லு சஞ்ஜீவ்¸ வரவழைக்கலாமா?” என்று கேட்டார்.
“சரிம்மா வரச் சொல்லுங்க. அதுக்கு முன்னால பயோ-டேட்டா கொண்டு வந்து அப்பாகிட்ட கொடுக்க சொல்லுங்க. அவருக்கு ஓ.கே. என்றால் எனக்கும் சம்மதம் தான். ஆனால் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும்¸ இடையில் விடுமுறை எல்லாம் சொல்லாமல் எடுக்கக்கூடாது என்று சொல்லிவிடுங்கள்… அப்புறம் அவங்க அம்மாவிற்கு மருத்துவச் செலவை நாமே பார்த்துக் கொள்வோம். இது உங்களுக்காக… உங்கள் மீது அக்கறை கொண்ட பெண்ணிற்கு நாம் செய்யும் ஒரு சின்ன கைம்மாறு போதுமா..?” என்று தாயாரிடம் சிரித்தவாறே கேட்டு முடித்தான்.
“சஞ்ஜீவ்..! இது போதும்ப்பா எனக்கு! இதைக் கேட்டே எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு” என்றவர் மகனின் நெற்றியில் முத்தமிட்டார்.
“அம்மா… நான் என்ன சின்னக் குழந்தையா?” என்று லேசாகச் சிணுங்கினான் மகன்.
அதற்கு தாயார் “நீ என் மகனடா… எனக்கு நீ எப்பவுமே சின்னக் குழந்தைதான்” என்றதும்¸ “ஆஹா…! விட்டால் என்னை உங்கள் இடுப்பிலேயே தூக்கி வைத்துக் கொள்வீர்கள்… அதற்குமுன் நான் கிளம்பிவிடுகிறேன்” என்று பயந்தவன் போல பாவ்லா காட்டிச் செல்ல¸ பார்த்துக் கொண்டிருந்த கணவனும் மனைவியும் சிரித்தனர்.
தங்கள் மகன் நெடுநாட்களுக்குப் பிறகு தங்களுடன் அமர்ந்து பொறுமையாக சிரித்துப் பேசியதால் உண்டான மகிழ்ச்சி இருவரின் முகத்திலும் தெரிந்தது. அந்த சந்தோஷத்தில் “சத்யாவின் பேச்சு வந்தாலே மகிழ்ச்சி தானாக வந்துவிடுகிறது” என்று பார்வதி கணவனிடம் சொல்ல¸ அவரும் அதை ஆமோதித்தார்.
அருகிலேயே உட்கார்ந்திருந்த கல்பனாவிற்கு அவர்களது பேச்சு பிடிக்கவில்லை. அந்த ‘சத்யா’ யாரென்றே அவளுக்குத் தெரியவில்லை¸ இருப்பினும் அவர்களிருவரும் அந்த அவளைப் புகழ்வது பிடிக்கவில்லை.
மெதுவாக “அத்தை” என்றழைத்து¸ “யார் அந்த சத்யா?” என்று கேட்டாள்.
மென்னகையுடனே பார்வதி விபரம் சொல்ல¸ அவளது மனம் விழித்துக் கொண்டது.
‘இங்கேயே தங்கி வேலை பார்க்கப் போகிறாள் என்றால் அத்தானின் பார்வையில் அடிக்கடி படுவாள். அப்படி அவளைப் பார்த்து அத்தான் மனம் மாறி அவளைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்துவிட்டால்… அப்புறம் என்னுடைய ஆசை¸ கனவு இதெல்லாம் எப்படி நிறைவேறும்?’
மூளை வேகமாக வேலை செய்தது.
‘நானும் இந்த வீட்டிலே தங்கி¸ அத்தானின் கண்முன் வளைய வந்தால் மட்டுமே அது நடக்கும். அதற்கு வேண்டியதை உடனே செய்ய வேண்டும்’ என்றெண்ணியவள்¸ “நான் புறப்படுகிறேன் அத்தை” என்றபடி எழுந்துவிட்டாள்.
“என்னம்மா கல்பனா வந்த உடனே புறப்பட்டுவிட்டாய்?” என்றார் பார்வதி.
“சும்மாதான் அத்தை. உங்களையும் மாமாவையும் பார்க்க வேண்டும் போலிருந்தது¸ வந்தேன். பார்த்துவிட்டேன்… அதனால் புறப்படுகிறேன்” என்றவள் கிளம்பிவிட்டாள்.
“என்னால் இவளைப் புரிந்து கொள்ளவே முடியலைங்க” என்றார் கணவரிடம்.
“அவளை விடும்மா.. ஆமாம் நீ உன் ப்ரண்டுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லவில்லையே!” என்று முந்தைய பேச்சுக்குத் திருப்பினார்.
“இதோ இப்பவே சொல்கிறேன்…” என்று சத்யாவிற்கு போன் செய்தவர்¸ வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டதாகக் கூறி.. மறுநாள் அவளை அவர்களது வீட்டிற்கு வரச் சொன்னார்.
மறுபுறமிருந்த சத்யாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவளது பிரச்சினைக்கு உடனே தீர்வு தந்துவிட்டாரே… மனதிற்குள் நன்றி கூறிக் கொண்டாள்.
எப்போதும் போல் இந்த வேலையாவது நிலைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டவள்¸ தாயாரிடம் சென்று விஷயத்தை சொல்ல அவரும் மகிழ்ந்தார்.
மறுநாள் காலையில் வீட்டு வேலைகளை எல்லாம் அவசர அவசரமாக முடித்துத் தாயாருக்கு வேண்டியதையும் கவனித்துவிட்டு ஒரு ஆட்டோ பிடித்துச் சென்றாள். டிரைவருக்குத் தெரிந்த அட்ரஸ் என்பதால் விரைவாகவே பார்வதியம்மாளின் வீட்டை அடைந்துவிட்டாள்.
வீட்டையும் சுற்றியிருந்த இடத்தையும் பார்த்த சத்யாவிற்கு மலைப்பாக இருந்தது. இவ்வளவு பெரிய பங்களாவிலா பார்வதியம்மா இருக்கிறார் என்று வியந்த வண்ணமே காவலாளியிடம் அனுமதி பெற்றுச் சென்று காலிங் பெல்லை அழுத்தினாள்.
கதவைத் திறந்த பார்வதியின் முகம் மலர்ச்சியாகவே இருந்தது.
“வா சத்யா… வா…” என்று அவளது கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவர்¸ மற்றொரு கையை தனது வலது கால் முட்டியில் வைத்து இழுத்தவாறே நடந்தார்.
இருவரும் அமர்ந்ததும் “என்ன சாப்பிடுகிறாய் சத்யா? முதல் முறையாக வந்திருக்கிறாய்.. ஏதாவது சாப்பிடணும்.. சொல்… டீ¸ காபி¸ ஜூஸ்.. என்ன வேண்டும் சொல்” என்று சிரித்தவாறே கேட்டார்.
‘வேலைக்கு வந்திருக்கும் தன்னையே இப்படி கவனித்துக் கொள்கிறாரே… இவருக்கு எவ்வளவு இளகிய மனது’ என்றெண்ணிக் கொண்டவள்¸ “தண்ணீர் போதும்” என்றாள்.
“தண்ணியா…? ம்கூம்..!” என்றவர் உள்ளே சென்று¸ மாம்பழ ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார். மறுக்காமல் அவள் வாங்கிக் குடித்து முடித்தபின் கணவரைப் பார்க்க அழைத்துச் சென்றார். சங்கரனும் அவளை வரவேற்றுப் பேசிய விதம் அவளுக்குப் பிடித்திருந்தது.
“உனக்கு இங்கு வேலை நிச்சயம் உண்டு சத்யாம்மா. அப்புறம் ஏன் பயோ-டேட்டா கேட்டோம் என்று நினைக்கிறாயா?” என்று நிறுத்தியவர்¸ அவள் பதில் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கவும் தானே தொடர்ந்து “அது எங்கள் மகனுக்காக. அப்புறம் இன்னொரு விஷயம்… சத்யா நீ இங்குதான் தங்கியிருக்க வேண்டும்” என்று அவர் சொன்னதும்¸ “சார்…!” என்று எழுந்துவிட்டாள் அவள்.
“என்னம்மா எழுந்துவிட்டாய்?”
“சார் என்னோட அம்மா பற்றி சொல்லியிருக்கிறேன். பார்வை இழந்த அவரைத் தனியாக விட்டுவிட்டு என்னால் எப்படி இங்கு தங்கி வேலை பார்க்க முடியும்? அதனால் என்னை மன்னித்துவிடுங்கள் சார்¸ என்னால் நீங்கள் செய்யும் உதவியை ஏற்க முடியவில்லை” என்று வருந்தினாள்.
“ஓ… இது தான் பிரச்சினையா?” என்று அவர் கேட்கவும்¸ சத்யா அவரை ஆச்சரியமாக நோக்கினாள். அவளது இந்த பிரச்சினைக்கு அவரிடம் எளிதான தீர்வு இருக்கிறதா என்ன?
“சத்யா நான் உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன்…” என்றவர்¸ நேற்று தன் குடும்பத்தினர் பேசிக்கொண்ட¸ அவளது தாயாருக்கு அவர்களது சொந்த செலவில் மருத்துவம் பார்க்க இருக்கும் விஷயத்தைக் கூறினார்.
இப்பொழுது நிஜமாகவே அவளால் ஒன்றும் சொல்ல இயலவில்லை.
வேலை போட்டுக் கொடுப்பது மனிதாபிமானம். இருந்தாலும்… அவள் செய்யப் போகும் வேலைக்கு சம்பளம் வாங்கப் போகிறாள் என்று எண்ணிக் கொள்ளலாம். ஆனால் தாயின் மொத்த மருத்துவச் செலவையும் ஏற்பது என்றால் இவர்கள் உண்மையாகவே உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள்தான்.
நன்றி தெரிவித்தவள்¸ “சார்… ஒரு விஷயம் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே?” என்று கேட்டாள்.
அவர் சொல்லு என்பது போலத் தலையசைக்கவும் “சார் நான் ஏற்கனவே எங்கள் வீட்டை விற்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அதை சரியான விலைக்கு வாங்க யாரும் முன்வரவில்லை…. வந்து… நீங்களே என் வீட்டை வாங்கிக் கொள்கிறீர்களா?” என்று தயங்கித் தயங்கி கேட்டாள்.
கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
பார்வதிக்கு சிரிப்பு வந்துவிட்டது. சிரித்தவர்¸ “சத்யா… உன் அம்மாவிற்கு மருத்துவச் செலவை நீயே செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவது புரிகிறது. இருந்தாலும் குடியிருக்கும் வீட்டை விற்கக்கூடாதும்மா. அத்தோடு அது உன் திருமண சமயத்தில் தேவைப்படும். அதனால்¸ இப்போது நாங்கள் செய்யும் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள். அம்மாவை நீ சொன்ன அந்த மருத்துவமனையிலே சேர்த்து சிகிட்சையை தொடங்கச் சொல். நீ இங்கு குவார்ட்டஸில் தங்கிக் கொள்¸ அவ்வப்போது அம்மாவை பார்த்து வரலாம். ஆபரேசன் சமயத்தில் நாங்களும் உன்னுடன் இருப்போம். அதனால் உனக்குக் கவலையே வேண்டாம்” என்று அவள் ஒத்துக் கொள்வதால் ஏற்படக்வுடிய நன்மைகளை எடுத்துக் கூறியவர்¸ அவளை சம்மதிக்கச் சொன்னார்.
சில நிமிடங்கள் யோசித்தவள் வேலையில் சேர சம்மதித்தாள்.
சங்கரன் வேலை விஷயத்தைப் பற்றி ஒவ்வொன்றாக சொல்லச் சொல்ல கவனமாகக் கேட்டவள்¸ ஒருநொடி தன் தலையை நிமிர்த்தி அந்த சுவற்றைப் பார்த்திருந்தாலும் வேலைக்கு டாட்டா சொல்லியிருப்பாள்.
ஆனால் அவள்தான் கவனிக்கவில்லையே!

Advertisement