Advertisement

‘முதல்முறையாகப் பேசுபவரிடம் எப்படி பேசுவதென்று தெரியாதவள் போல!’ என்றெண்ணியவாறே  “ஹேய்..! அவங்க என்னோட அம்மா! அத்தோட என்னை இப்படி கேள்வி கேட்க நீ யார்?” என்றான் கோபமாக.
“ஏன் சார் கோபப்படுறீங்க? உங்க அம்மா கோவிலுக்குப் போனது உங்களுக்காகத்தான். அவங்களோட உடல்நிலை பற்றி நன்றாகத் தெரிந்திருந்த நீங்கள் அவர்களைப் போக விட்டிருக்கக்கூடாது… இல்லை நீங்களும் உடன் சென்றிருக்க வேண்டும். அதைவிடுத்து அவர்களை இப்படித் தனியாக அனுப்பலாமா?” என்று கேட்டாள்.
அவள் சொன்னது உண்மை என்பதாலும் அவளது கேள்வியும் நியாயமானது என்பதாலும் பதிலளிக்க முடியாமல் போனை கட் செய்தான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த தாயாரிடம் சென்று அவர் கையில் போனை வைக்கப் போனபோது மறுபடியும் அழைப்பு வந்தது.
மீண்டும் அதே எண்.
அவன் அட்டென்ட் செய்து பேச ஆரம்பிப்பதற்குள் அவள் முந்திவிட்டாள். “என்ன சார் பேசிக்கொண்டிருக்கும் போதே கட் பண்றீங்க? இதுதான் படித்தவங்க செய்ற வேலையா?” என்று அவனைக் கேள்வி கேட்டாள்.
“ஏய்! ஒழுங்கா… மரியாதையா பேசு!” என்று சீறினான்.
“நான் இதுவரை அப்படித்தான் பேசிக்கிட்டு இருக்கிறேன். நீங்கள்தான் உங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்றதும் அழைப்பை துண்டித்துவிட்டீர்கள். அதனால் பரவாயில்லை… நீங்க போனை உங்க அம்மாகிட்ட கொடுங்க” என்றாள்.
தாயாரிடம் போனைக் கொடுத்துவிட்டுத் திரும்பி இரண்டடி வைத்தவனுக்கு அன்னையின் மகிழ்ச்சியான குரல் கேட்டது, “சத்யா எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லைம்மா… நான் நல்லாத்தான் இருக்கிறேன்” என்று.
தாயார் குறிப்பிட்டுப் பேசிய பெயரைக் கேட்டு அருகில் வந்தவன், அவர் பேசி முடிக்கும்வரை அமைதியாக நின்று பின்னர் “அம்மா… என்ன பேர்? என்ன பேர் சொன்னீங்க?” என்று கேட்டான்.
“அந்த பெண் பெயர் சத்யாப்பா… ரெண்டு முறையும் தேவதை மாதிரி வந்து எனக்கு உதவி செய்தாள்” என்று சந்தோஷமாகப் பேசியவர் மகன் விசாரித்ததற்கான காரணத்தைக் கேட்டார்.
“சும்மாதான் கேட்டேன்” என்று சொல்லிக் கிளம்பிவிட்டான்.
‘ஏதோ ஒரு சத்யா. சத்யா என்ற பெயரில் அவள் ஒருத்தி மட்டும்தான் இருக்கமுடியுமா என்ன?’ என்றெண்ணியவன் அதைவிடுத்து கவனத்தை தன் வேலையில் செலுத்தினான்.
“இது சத்யா…” என்று அந்த ஹோட்டல் ரிசப்ஷனில் நின்ற மற்றொரு பெண்ணான அகிலாவிடம் அறிமுகப்படுத்தினார் முருகன்- ஹோட்டல் சூப்பர்வைசர்.
இருவரும் ஹலோ சொல்லிக் கொண்ட பிறகு “வேலை எப்படி என்று கத்துக் கொடு அகிலா” என்று அகிலாவிடம் சொல்லிவிட்டு தன்னிடம் செல்ல அகன்றார்.
அவள் கஸ்டமர்களுக்கு ரூம் சாவி கொடுப்பது, புதிதாக வருபவர்களிடம் ரெஜிஸ்டர் நோட்டில் பதிவிடுவது, முகவரி வாங்குவது, அறை செக்-இன் போதும் செக்-அவுட் போதும் கையெழுத்து வாங்குவது என அங்கு அவர்கள் இருவருக்குமான வேலையை ஒவ்வொன்றாக கற்றுக் கொடுத்தாள்.
சத்யாவிற்கு வேலை பிடித்துவிட்டது. முன்புபோல அதிக நேரம் நிற்க வேண்டாம். வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் வழிவதில்லை. யாரேனும் அப்படிப் பேசினாலும் அகிலா சமாளித்துவிடுவாள்.
நாட்கள் சென்றது.
அன்று தாயாரை மாதாந்திர செக்கப்பிற்கு அழைத்துச் சென்றாள் சத்யா. மீனாட்சியின் கண்களை பரிசோதித்த டாக்டர் “இன்னும் ஒரு ஆபரேஷன் செய்து பார்க்கலாம் சத்யா. வெளிநாட்டு மருத்துவக் குழு ஒன்று இங்கு வருகிறது. எல்லாவிதமான நோய்களுக்கும் சிகிச்சை தருவார்கள்… நீயும் ஒரு டோக்கன் பெற்றுக் கொள். செலவு எவ்வளவு ஆகுமென்று அவர்கள் வந்து பார்த்தபின் தான் தெரியும்… எதற்கும் நீ ஒரு தொகையை ரெடியாக வைத்துக் கொண்டாய் என்றால்… அவர்கள் சொல்லும் நேரத்தில் ஆபரேசன் செய்துவிடலாம்” என்றார்.
சரி என்றவள் மற்ற விபரங்களை கேட்கத் தொடங்கி… “எவ்வளவு தேவைப்படும்?” என்ற அவளது கேள்விக்கான பதிலைக் கேட்டு திகைத்துவிட்டாள்.
பின்னே! அன்றாடச் செலவுக்கே வேலை பார்த்து காலம் ஓட்டிக் கொண்டிருப்பவளால் ஐந்து லட்சத்தை அவ்வளவு எளிதாக ரெடி பண்ணிவிட முடியுமா என்ன?
ஒரு யோசனையுடன் “சரி டாக்டர் நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லிவிட்டுத் தாயாருடன் கிளம்பினாள்.
வீட்டை அடைந்ததும் தாயாரிடம் டாக்டர் சொன்னதைச் சொன்னாள்.
அவளது பேச்சை முழுவதும் கவனித்துவிட்டு, “எனக்குப் பார்வை கிடைக்குமா சத்யா?” என்று சந்தேகத்துடனே கேட்டார்.
“நிச்சயம் அம்மா. ஆனால்…. பணத்திற்கு இந்த வீட்டை விற்றுவிடலாமா… ”  என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், “வேண்டாம் சத்யா. இதை விற்க வேண்டாம்… அப்பா நினைவாக நம்மிடம் இருப்பது இது ஒன்றுதான். இதையும் விற்றுவிட்டால் நான் எப்படி இருப்பேன்…” என்று தாயார் அழத் தொடங்கவும் தாயாரை சமாதானப்படுத்துவதில்  முனைந்தாள்.
அவர் சற்று சமாதானமானதும் “சரிம்மா விற்க வேண்டாம். அடமானம் வைப்போமா?” என்று கேட்டாள்.
“அடமானம் வைத்தால் எப்படித் திருப்புவது சத்யா?” என்று கேட்டார் தாயார் இன்னும் கலக்கத்துடனே.
“அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் மகள்.
“சரிம்மா… உன் விருப்பப்படி செய். ஆனால் விற்க மட்டும் நினைக்காதே! வீட்டை விற்று அந்தப் பணத்தில் எனக்குப் பார்வை கிடைத்தாலும் பயனிருக்காது. என் கணவர் இல்லையென்றாலும் அவர் இருந்த தடயங்களைப் பார்த்தாவது நான் சந்தோஷப் படுவேன். அதுவும் இல்லாமல் செய்துவிடாதே..” என்றவர் படுத்துக் கொண்டார்.
தந்தையின் மேல் தாயார் வைத்திருக்கும் பாசம் பெரியதென்றாலும் வாழும் காலம் முழுவதும் பார்வையில்லாமல் அன்னை தவிப்பதை சத்யா விரும்பவில்லை. அதனால் அவரிடம் அடமானம் வைப்பதாக சொல்லிவிட்டு அவரறியாமல் வீட்டை விற்க ஏற்பாடு செய்தாள். ‘பார்வை வந்துவிட்டால் எனக்காக இருக்க மாட்டார்களா..?’ சமாளித்துவிடலாம் என்று எண்ணி ஏற்பாடுகளைச் செய்யலானாள்.
வீட்டை வாங்க வருபவர் யாராக இருந்தாலும் தாயாருக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லி வெளியேறும்வரை அந்த வீட்டிலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும். மாத  வாடகை தந்துவிடுகிறேன் என்று சொல்லியே விலை பேசினாள்.
அன்று ஹோட்டலுக்குச் சென்ற ஒரு மணி நேரத்திற்குள் அவளை எம்.டி. அழைப்பதாக போன் வந்தது.
அகிலாவைப் பார்த்தாள்.
அவள் “போ… போய் பார்த்துட்டு வா…” என்று அனுப்பினாள்.
ரொம்பவும் மெதுவாகவே நடந்து சென்றாள். ஏனெனில் இதுவரை அவள் எம்.டி.யைப் பார்த்ததில்லை. அதனால் என்ன சொல்வாரோ… சொல்லப் போகிறாரோ… என்ற பயம்.
கதவைத் தட்டியவாறே “மே ஐ கம் இன் சார்?” என்றாள்.
“எஸ் கம் இன்” என்ற குரல் கேட்டதும் உள்ளே சென்றவள் ஆசுவாசமானாள். அங்கே சாந்தமே வடிவாக ஒரு பெரியவர் இருந்தார்.
“நீதான் சத்யாவா?”
“ஆமாம்” என்று தலையாட்டினாள்.
“நீ வந்ததிலிருந்து இவ்வளவு நாட்களும் சிறப்பாக வேலை பார்த்திருக்கிறாய். உன் மீது ஒரு கம்ப்ளைண்டும் வந்ததில்லை…” என்றார்.
இவள் கேட்டுக் கொண்டு அமைதியாக நின்றாள். அவ்வளவு நேரமும் அவளது வேலையைப் பாராட்டியவர் “..ஆனால் சத்யா இன்றைக்கு அறைஎண் தொண்ணூறில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. போய் என்ன என்று பார்த்துவிட்டு வா! உன்னால் முடிந்தால் செய், இல்லையென்றால் வந்துவிடு” என்றார்.
“சரி” என்றவள் நேராக தொண்ணூறாம் நம்பர் அறைக்கு சென்று கதவைத் தட்டினாள்.
சற்றுநேரம் தட்டிப் பார்த்தும் கதவு திறக்கவில்லை என்றதும் லாக்கில் கை வைத்தாள்.
கதவு திறந்து கொண்டது.
தலையை உள்ளே நீட்டி “சார்!” என்று அழைத்தாள். உள்ளே யாரும் இருப்பதாகவே தோன்றவில்லை அவளுக்கு.
‘சரி எம்.டி.யிடம் சொல்லிக் கொள்ளலாம்’ என நினைத்து கதவை  அடைப்பதற்காகக் கதவில் கை வைத்தபோது உள்ளிருந்து யாரோ அவளது கையைப் பிடித்து அறைக்குள் இழுத்துவிட்டது புரிந்து திரும்பிப் பார்த்தாள்.
கதவை லாக் செய்து விட்டுத் திரும்பினான் சஞ்ஜீவன்.
‘அறையில் ஏதோ குறையிருப்பதாக எம்.டி. யிடம் தெரிவித்தவன் இவன்தானா?’ என்று மனம் எண்ணிக் கொண்டிருந்தபோதும், “கதவை ஏன் லாக் பண்றீங்க?” என்று வாய் கேட்க தவறவில்லை.
சிரித்தவாறே “கதவை எதுக்கு லாக் செய்தேன்?” என்று மறந்தவன்போல நடித்தவன், “ம்… உன்கூட ஓடிப்பிடிச்சி விளையாடத்தான்” என்றான்.
“அதுக்கு நீங்க வேற ஆளைப் பார்க்கணும்” என்றாள் அவள் தைரியமாகவே.
“ம்கூம்..! அது முடியாதே!” என்று அவன் சோகமாகக் கூறவும், அவன் முகத்தைப் பார்த்தாள்.
“ஆமாம் சத்யா. எனக்கு உன்னைப் பார்த்தால் தான் இப்படி விளையாட வேண்டும் என்ற எண்ணமே வருகிறது… ஏன் அப்படி என்று உனக்கு ஏதாவது தெரிகிறதா?” என்று அவளைக் கேட்டான்.
‘ப்ச்… இவனிடம் பேசுவதில் பயனில்லை’ என்று வெளியேற நடந்தவளை வழிமறித்தான்.
“வழியை விடுங்க” என்றாள் அவள் கோபமாக.
“விடுவதற்காக மறிக்கவில்லை சத்யா” என்று சிரித்தான்.
அவனையே வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தைப் பிடித்து தன் முகத்தருகில் இழுத்தான். பட்டென பிடித்திருந்த கையைத் தட்டிவிட்டவள், அடிப்பதற்காக கை ஓங்கினாள்.
ஓங்கிய கையைப் பிடித்துத் தடுத்தவன், “என்ன..? எப்பவும் நீ அடிப்பதற்கு கன்னத்தை காட்டுவேன் என்று நினைத்தாயா..? எவ்வளவு துணிச்சல் உனக்கு ஒரு ஆண்மகனை கைநீட்டி அடிப்பதற்கு..!” என்று அவன் சொன்னதும்,
“ஒரு பெண்ணிடம் தப்பாக நடக்க முயற்சிப்பவனை அடிக்க துணிச்சலெல்லாம் தேவையில்லை. கை இருந்தாலே போதும்” என்றவள், அவனது பிடியிலிருந்து கையை விடுவித்துக் கொள்ள முடியவில்லை என்றதும் “கையை விடுங்க” என்று சத்தம் போட்டாள்.
அவன் விடாமல் பிடியை மேலும் இறுக்கவும், “நான் நீங்க நினைக்கிற மாதிரி பெண்ணில்லை. தயவு செய்து என்னை விடுங்கள்” என்று கெஞ்சினாள்.
அவளது முகத்தையே பார்த்தவன் அதிலிருந்த வெறுப்பைக் கண்டு கையை விடுவித்துவிட்டு சொன்னான். “ஆமாம் சத்யா. நான் நினைக்கிற மாதிரிப் பெண் நீ இல்லை” என்று திரும்பி நின்று கொண்டான்.
கதவைத் திறந்து கொண்டு சத்யா வெளியேறியதும் தானும் சென்று அவள் போவதைப் பார்த்தான்.
வெகுவேகமாக ஓடிக் கொண்டிருந்தாள் அவள். அதைக் கண்டதும் அவன் உதட்டில் தானாகப் புன்னகை விரிந்தது.
“ஹா..! ஹா..! ஹா…!” என்று சத்தம் போட்டு சிரித்தவன், “ஓடு சத்யா…. ஓடு..! இனி உன் வீட்டில் போய்தான் நிற்பாய்!” என்று அதே மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டு தான் வந்த வேலையை கவனிக்கலானான்.

Advertisement