Advertisement

அத்தியாயம் 6
காலையில் எழும்போதே சஞ்ஜீவனுக்குக் கை வலித்தது. கையில் வழிந்திருந்த ரத்தம் அப்படியே உறைந்திருந்தது.
கைக்காயத்தைப் பார்த்தவனுக்கு இரவு நடந்தது நினைவுவர… தன்மேலும் கோபம் வந்தது. அதைத்தன் எண்ணத்திலேனும்கூட அவளை அப்படி நினைத்ததற்கான தண்டனையாக எடுத்துக் கொண்டவன் வலியைப்  பொறுத்துக் கொண்டே காலை வேலைகளை முடித்தான்.
வெளியே செல்வதற்காகக் கிளம்பி கீழே சென்றவனைப் பார்த்த சங்கரன் “உன் கைக்கு என்னாச்சு ஜீவன்?” என்று கேட்க, “தெரியவில்லைப்பா… நான் ஹாஸ்பிட்டல் போயிட்டு வர்றேன்” என்று வெளியேறினான்.
“அம்மா… இப்ப எப்படி இருக்கிறது? வாமிட் வரும்போல இருக்கிறதா?” என்று கேட்டாள் சத்யா.
“இல்லை” என்று மீனாட்சி சொன்னதும், சென்று டாக்டரைப் பார்த்துப் பேசிவிட்டு சில மருந்து மாத்திரைகளை வாங்கி வந்தவள்… தாயை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.
இவர்கள் வீட்டை அடையும்போதே வெங்கடேசன் வயதான ஒரு பெண்மணியுடன் வாசலில் நின்றார். அவர்களைக் கண்டதும் இவளுக்குப் புரிந்துவிட்டது… அவருடன் நிற்பவர்தான் வேலைக்காக வந்திருப்பவர் என்று.
வெளியிலிருந்து வந்தவர்களைக் கண்டவர், அவள் சாவியை நுழைக்கும்போதே “காலையிலயே எங்கே போயிட்டு வர்றீங்க?” என்று சிடுசிடுத்தார்.
நடந்ததை சொன்னதும் “என்னைக் கூப்பிட்டிருக்கலாமே..?” என்றார் கேள்வியாக.
“ராத்திரி ரொம்ப நேரமாகிவிட்டதால் உங்களைத் தொந்திரவு செய்ய வேண்டாம் என்றுதான்…” என்று அவள் இழுக்க…
“என்னை தொந்திரவு செய்யக்கூடாது சரிதான். ஆனால் ராத்திரி நேரத்தில் சின்னப் பெண்ணான நீ தனியாகச் சென்று ஆட்டோ பிடித்து, ஆஸ்பிட்டல் சென்று… ம்.. உன் தைரியத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா…?” என்று முடித்துவிட்டு, “இது பட்டம்மா… வேலைக்கு வந்திருக்காங்க பார்த்துக்கோங்க…” என்று சொல்லி தன் கடமை முடிந்ததென கிளம்பிவிட்டார்.
கதவைத் திறந்து தாயாரை உள்ளே அழைத்துச் சென்றவள் பட்டம்மாவையும் உள்ளே அழைத்தாள்.
உள்ளே நுழைந்ததும் “நீங்கள் வந்தபோது வீட்டில் இல்லாமல்…  உங்களை காக்க வைத்துவிட்டேன்” என்று வருத்தம் தெரிவித்தாள்.
“அதனாலென்ன?” என்று சாதாரணமாக  எடுத்துக் கொண்டவர், “காலையில எதுவும் துண்ணாம வந்துட்டேன்  சாப்பிட ஏதானும் இருக்குமா?” என்று கேட்டார்.
“நாங்க ராத்திரியே ஹாஸ்பிட்டல் போயிட்டதால எதுவும் இருக்க வாய்ப்பில்லை… உங்களுக்கு ரொம்ப பசியாக இருக்கிறதென்றால் இதை சாப்பிடுங்கள்” என்று தாயாருக்காக வாங்கி வந்த பிரட்டைக் கொடுத்தாள்.
ரொம்பவும் தயங்கியவர் “சரி குடு துங்கறேன்… ஆனால் நீ போறதுக்கு முன்ன எதுனாச்சும் செஞ்சு வைச்சிரு. நான் போய் வீட்ட ஒரு சுத்து சுத்திக்கின்னு வர்றேன்” என்றபடி உள்ளே சென்றார்.
அவர் விலகிச் சென்றதும் மளமளவென வேலைகளைச் செய்யலானாள் சத்யா.
தாயாரை பாத்ரூம் அழைத்துச் சென்று அவருக்குத் தேவையானவற்றை செய்து, சமையல் வேலையையும் முடித்துக் கொண்டு தான் வேலைக்குச் செல்வதற்காக அவள் குளித்து முடித்து வந்து கிச்சனைப் பார்த்தால்… பட்டம்மா உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அவளுக்கு சுர்ரென கோபம் வந்தது.
‘இது என்ன கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் இப்படி…!’ என்று கோபத்துடனே அவரிடம் சென்றால், அவள் பேசுவதற்கு முன்பாக “வாம்மா… ரொம்ப பசியா இருந்திச்சு. நீ எங்கன்னு பாத்தேன்… குளிக்கப் போய்ருந்தே. அதான் நானே போட்டுக்கின்னு சாப்பிட்டுட்டேன் மன்னிச்சிரு…” என்றவரிடம் எதைச் சொல்வது என்று விட்டுவிட்டாள்.
ஏற்கனவே வெங்கடேசன் வேலைக்கு வருபவருக்கு நீதான் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்றது நினைவு வந்தது.
“சரி நீங்க சாப்பிடுங்க…” என்று சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியேறியவள், தாயாருக்கு காலை நேரச் சாப்பாடு, மாத்திரை எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வேலைக்குச் செல்வதற்குத் தயாராகி வந்தாள்.
வந்தவள் பட்டம்மாவை அழைத்து தாயாருக்கு எந்தெந்த நேரத்துக்கு என்ன மாத்திரை கொடுக்க வேண்டும், எப்போது கண்ணில் டிராப்ஸ் விட வேண்டும் என்றெல்லாவற்றையும் தெளிவாக அவரிடம் சொல்லிவிட்டுத் தாயாரை கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
“பார்வதி நம்ம பையன் இரண்டு தொழிலையும் எவ்வளவு பொறுப்பா… எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறான் தெரியுமா?” என்றார் சங்கரன் பெருமையாக.
“அப்படியாங்க ரொம்ப சந்தோஷம்… அன்றைக்கு நான் அந்த ஐடியாவை சொன்னபோதுகூட அவன் அதைக் கேட்பானா என்பது எனக்கு சந்தேகமாகத்தான் இருந்தது” என்றவர், “எல்லாம் இவன்கூட படித்தவர்களால் வந்த வினை…” என்று சஞ்ஜீவனது தோழர்களைத் திட்டினார்.
“என்ன பார்வதி? அவர்கள் என்ன செய்தார்கள்?” என்று கேட்டார் மனைவி திட்டுவதற்கான காரணம் அறியாதவர்.
“அந்த பசங்கதான்ங்க இவனிடம் நீ பணக்காரன்! படித்து முடித்துவிட்டு எங்களைப் போல வேலை தேட வேண்டிய, பார்க்க வேண்டிய அவசியமில்லாமல் உன் அப்பா நிறைய  சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். உங்க தொழிலே  உனக்கு இருப்பதால் நீ உட்கார்ந்தே சாப்பிடலாம்… அப்படி, இப்படின்னு நிறைய சொல்லி… அதனால்தான் இவன் படித்து முடித்ததுமே நான் தனியாகத் தொழில் ஆரம்பிக்கப் போகிறேன்னு கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பித்தான்…” என்று முடித்தார் பார்வதி.
“இது ஒன்னும் தப்பில்லையே பார்வதி… பொதுவா பணக்கார பசங்க இப்படித்தான்னு அவர்கள் சொன்னதை… இல்லை என்னால் தனியாகவும் செயல்பட முடியும் என்று நம் மகன் நிரூபித்திருக்கிறானே! இது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்தானே!  இதில் நீ கவலைப்பட என்ன இருக்கிறது?” என்று கேட்டார்.
“மகன் சொந்தக்காலில் நிற்பது பெருமையாக இருந்தாலும்…. இது கஷ்டம்தானேங்க. எப்படி அவனால் இரண்டையும் சமாளிக்க முடியும்?” என்றார் தாயாருக்குண்டான அக்கறையுடன்.
“நான்தான் அவனுக்குத் துணையாக இருக்கிறேனே?” என்றவர், “நான் இல்லாமல் போனாலும்கூட  அவன் நன்றாகவே பார்த்துக் கொள்வான்” என்று மகனுக்கு நற்சான்று வழங்கினார்.
அவரது வார்த்தைகளைக்  கேட்டு அவரது வாயைப் பொத்தி “அப்படி சொல்லாதீங்க… நீங்க என்னோடு நீண்ட காலம் வாழவேண்டும்” என்றார் பார்வதி உணர்ச்சிவசப்பட்டு.
மெதுவாக மனைவியின் கையை விலக்கியவர் “ஆனாலும் உனக்குப் பேராசை பார்வதி” என்று சிரித்துவிட்டு மனைவியையும் சிரிக்க வைப்பதற்கான செயலில் இறங்கினார்.
அன்று வாரநாள் மற்றும் கடவுளுக்கு தனிப்பட்ட எந்த விஷேச நாளும் இல்லை என்பதால் கோவிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. எப்போதும் போல தரிசனத்தை முடித்துவிட்டு பிரகாரத்தை வலம் வந்து முருகனை வணங்கியவள் படியிறங்கிக் கொண்டிருந்தபோது…
கோவிலுக்குப் படியேறி வந்து கொண்டிருந்த சற்று வயதான பெண்மணி ஒருவர் களைப்பினால் மயக்கமுற்று அவளை மோதியவாறு கீழே விழுந்தார். அவரது தலை தரையில் அடித்துவிடாமல் தாங்கிக் கொண்டவள் தன் மடியில் அவரது தலையை வாகாக வைத்துக் கொண்டு “அம்மா… கண்ணைத் திறங்க..” என்று அவரை எழுப்பினாள்.
அவர் கண் திறப்பதற்குள் அவர்களைச் சுற்றி கூட்டம் கூடிவிட்டது.
“எல்லாரும் கொஞ்சம் விலகி நில்லுங்க… அவங்களுக்கு காற்று வரட்டும்” என்று கூட்டத்தை விலகச் சொன்னவள், தன் கைப்பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவர் முகத்தில் நீர் தெளித்ததும் பெரியவர் கண்திறந்தார்.
“இப்போ எப்படி இருக்குதும்மா…?” என்று அவள் கேட்க, அவளுக்கு பதிலளிக்காமல் தன்னைச் சுற்றி கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்தவருக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
அவர் சுற்றும் முற்றும் பார்ப்பதைக் கண்டவள் “அம்மா… நீங்க தனியாகவா வந்தீங்க?” என்று கேட்டாள்.
அவர் “ஆமாம்…” என்று தலையாட்டவும், “ஏம்மா… வயசான காலத்துல இந்த நொண்டி காலை வச்சிக்கிட்டு கோவிலுக்கு நீ வரலைன்னு யார் அழுதது?” என்று மனம்நோகப் பேசினான் ஒரு தடியன்.
பெரியவள் பேசுவாளா… என்று ஒரு நொடி நிதானித்தவள் அவள் அமைதியாகவே இருக்கவும், “ஹலோ மிஸ்டர்! என்ன வாய் ரொம்ப நீளுது..? இவங்க கோவிலுக்கு வரக்கூடாதுன்னு சட்டம் எதுவும் இருக்கிறதா…? இல்லை… அப்படி வந்துட்டாங்கன்னு நீதான் இவர்களை தூக்கி சுமக்கப் போகிறாயா?” என்று அவள் கேட்டதும் நைசாகக் கிளம்பிவிட்டான் அந்த தடியன்.
சத்யாவைப் பார்த்து லேசாக புன்னகைத்த பெரியவள், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள எடுத்துக் கொண்ட சில நிமிடங்களிலே சுற்றியிருந்த மற்றவர்களும் ஒவ்வொருவராக கிளம்பிச் செல்ல “அம்மா… இப்போது உங்களால் எழமுடியுமா?” என்று கேட்டு அவர் எழ உதவி செய்தாள்.
அவர் நின்றதும் “அடிபட்டிருக்கிறதாம்மா…?” என்று கேட்டாள் அவரை ஆராய்ந்தபடி.
“இல்லைம்மா… அடி எதுவும் படவில்லை… நன்றி! நான் கோவிலுக்குப் போகிறேன்…” என்று சொல்லி அவர் திரும்பவும், “அம்மா… நீங்கள் தனியாக எப்படி வந்தீர்கள்? ஆட்டோவிலா…?” என்று கேட்டவள், அவரது உடை மற்றும் நகையை கவனித்து  “காரில் வந்தீர்களா? என்று கேட்டாள்.
“காரில்தான்மா வந்தேன்…” என்று அவர் சொன்னதும், “கார் எங்கே நிற்கிறது என்று சொல்லுங்கள் நான் போய் டிரைவரை அழைத்து வருகிறேன்…” என்று படியிறங்கத் தயாரானாள் சத்யா.
“இல்லைம்மா… அவரும் வயதானவர்தான் படியேற கஷ்டப்படுவார்… நான் விழுந்தது அவருக்குத் தெரிந்தால் விஷயம் நேராக என் மகனுக்கும் கணவருக்கும் சென்றுவிடும். அதன்பிறகு என்னால் இப்படி கோவிலுக்கு வரமுடியாது… என் வேண்டுதல் நிறைவேறும் வரையாவது நான் கோவிலுக்கு வரவேண்டும்…” என்று சொல்லி அவளைத் தடுத்தார் அவர்.
“அப்போ… வீட்டில் யாரையாவது அழைத்து வந்திருக்கலாமே?” என்றாள் கேள்வியாக.
“அவர் அதிகமாக வெளியே வரமாட்டார், மகன் எப்போதும் பிசியாக இருப்பான். இருவரையும் தொந்திரவு செய்ய விரும்பாமல் நான் தனியாகக் கிளம்பிவிட்டேன்” என்றார் பெரியவர்.
“சரிம்மா… வாங்க கோவிலுக்குப் போகலாம்” என்று அவரது கையைப் பிடித்தவாறு அவள் மீண்டும் கோவிலுக்குத் திரும்ப, “ஆனால்… நீதான் ஏற்கனவே தரிசனம் செய்துவிட்டாய் போலிருக்கிறதே?” என்றார் தயங்கியபடி.
“அதனால் என்ன? இந்த முறை உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்” என்று சிரித்தாள்.
“ரொம்ப அழகாக சிரிக்கிறாயம்மா… உன் பெயர் என்ன?”
“சத்யா” என்று அவள் சொன்னதும், “நல்ல பெயர்… பொய் சொல்லுவியா?” என்று கேட்டார்.
“ம்… நிறைய சொல்லுவேன்” என்று மீண்டும் சிரித்தவள், அவரைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.
தரிசனத்தை முடித்துவிட்டு பிரிந்து செல்லும்முன் தன் போன் நம்பரையும் விசிட்டிங் கார்டையும் கொடுத்து “உனக்கு ஏதாவது உதவி தேவை என்றால் கண்டிப்பாக என்னை அழைக்க வேண்டும்” என்று அன்புக் கட்டளையிட்டுவிட்டுச் சென்றார் அவர்.
வீட்டையடைந்தவர் கணவனிடம் வாய் ஓயாது சத்யாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.
சங்கரனும் “அருமையான பெண்தான். மறுபடி பார்த்தால் வீட்டிற்கு வரச் சொல்…” என்றார்.
நின்ற நிலையில் அசையாமலிருப்பது சத்யாவிற்கு கால்வலியை உண்டுபண்ணியது.
சீக்கிரமே வேறுவேலை தேடியாக வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
ஏற்கனவே அவள் அதற்கான முயற்சிகளில்தான் இருந்தாள். தினமும் காலையில் ஷோரூம் செல்லும் வழியில் இருக்கும் எந்த இடத்தில் தன் தகுதிக்கான வேலை கிடைக்கும், எது தனக்கு வசதியாக இருக்கும் என்று தகவல் சேகரித்து சில இடங்களில் தன் பயோ-டேட்டாவைக் கொடுத்திருந்தாள். அவள் சென்ற இடத்திலெல்லாம் வெறும் பி.காம். க்கு மட்டுமாக வேலையில்லை… எக்ஸ்ட்ரா குவாலிபிகேஷன் கேட்கிறார்கள்.
தந்தை இருந்திருந்தால் படிக்க வைத்திருப்பார்தான். இப்போதும் தாயாருக்குப் பார்வை இருந்தால் அவரே அனுப்பி வைப்பார். இதையெல்லாம் எண்ணி பயனில்லை என்று ஒதுக்கியவள் இருக்கும் சூழ்நிலையில் இந்த வேலையைத்தான் செய்தாக வேண்டுமென்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.
சில நாட்களாக இந்த வேலைக்கும் பிரச்சினை வரப்போவதாகவே அவளுக்குத் தோன்றிக் கொண்டிருந்தது.
இப்போதெல்லாம் கடைக்கு வரும் சில ஆண்களின் கவனம் இவளிடம் திரும்புவதாகப்பட்டது. சிலர் தனக்கு முன்பு  வந்து நின்று குறுகுறுவென்று பார்க்கும்போது இவளுக்கு இதயம் தொண்டைக்கே வந்துவிட்டது போலத் தோன்றும்.
மேனேஜரிடம் சொன்னால் அவர் ‘நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!’ என்று சொன்ன பதிலையே திரும்பத் திரும்ப சொல்வதுவேறு அவளுக்கு எரிச்சலை உண்டாக்கியது.
‘யாராவது ஏடாகூடமாக ஏதாவது செய்துவிட்டால்… அதன்பிறகு இவர் பார்த்தால் என்ன…? பார்க்காவிட்டால் என்ன…?’ என்றெண்ணினாள் கோபத்துடன்.
ஆனால்… அவளது நினைப்பு நிஜமானபோது..!

Advertisement