Advertisement

\
அத்தியாயம் 5
“வா சத்யா… என்ன இன்றைக்கு லேட்டாகிவிட்டது?” என்றாள் அவளுக்கு மேக்கப் போட்டுவிடும் மாலதி – தனியாகப் பார்லர் நடத்துகிறாள், தினமும் காலையில் வந்துவிடுவாள்.
“ஆமா மாலதிக்கா…” என்று லேட்டானதற்கான விவரத்தை சற்று சுருக்கமாகக் கூறியவளிடம், “ஆனால் எதற்கு திடீரென்று உன் அம்மாவிற்குத் துணை?” என்று கேட்டாள் அவள்.
தாயாருக்கு பார்வையில்லாததைக் கூறி தீபாவளி அன்று நடந்ததையும் கூறியதும் “அப்படியா நடந்தது!” என்று வியந்தவள், “சரி.. சரி… இப்போது பிரச்சினை ஒன்றுமில்லையே?” என்று கேட்டாள்.
“இல்லை…” என்று அவள் சிரிக்கவும், “இப்படி நீ சிரிக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா..?” என்று அவளது அழகை பற்றிப் பேசியவாறே தன் வேலையை ஆரம்பித்தாள்.
“இன்றைக்கு மணப்பெண் சேலை அணியப் போகிறாய் சத்யா… இன்று உன்னைப் பார்ப்பவர்கள் நிச்சயம் அசந்து போக வேண்டும் என்பது மேனேஜரின் கட்டளை. உன்னைப் பார்த்து உன்னதைப் போல சேலை வேண்டுமென்று பலர் கேட்க வேண்டுமென்பது அவரது எண்ணம்” என்று பேசியவாறே சேலையைக் கட்டிவிட்டாள்.
என்னதான் வேலைக்கு ஒத்துக் கொண்டுவிட்டாலும் இந்த மாதிரி உடை அலங்காரம் செய்து கொண்டு நிற்பது சங்கடமாகத் தான் இருந்தது. ஆனால் அதிலும் ஒரு நன்மையாக ஷோரூமில் பணிபுரியும் யாரும் அவளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை.
அதுமட்டுமில்லாமல் வரும் கஷ்டமர்கள் அவளைக் கவனிக்கும் அளவிற்கு விட்டதுமில்லை.
அவர்கள் எப்படித்தான் கவனித்தாலும் சில சமயங்களில் மற்றவர்கள் ‘நிஜப் பெண் போலவே இருக்கிறது!’ என்று வியப்பதை இவள் கண்டிருக்கிறாள்.
தினமும் ஒவ்வொரு விதமான ஆடை அதற்கேற்றாற் போல அலங்காரம். இன்றைய ஒப்பனையை முடித்துவிட்டு அவளைப் பார்த்த மாலதியே மலைத்துவிட்டாள்.
‘இவளைப் போன்ற… இல்லையில்லை இவளை மனைவியாக அடைபவன் கொடுத்து வைத்தவன்’ என்றெண்ணியவள், அதை அவளிடமும் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.
அவளைத் தொடர்ந்து சத்யாவும் வெளியே வருவதைக் கண்ட கடை ஊழியர்கள் ஒவ்வொருவரும் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தனர். எல்லோரும் தன்னை வித்தியாசமாகப் பார்ப்பதைக் கண்டவளுக்கு கூச்சம் வந்துவிட்டது.
தலையை சற்று குனிந்தவாறே நடந்தவளிடம், இந்த இரண்டு மாதத்தில் நன்றாகவே பழகிவிட்ட சிலர் “தூள் சத்யா…!”,  “சூப்பர்!” என்று சொல்வதைக் கேட்டுக் கொண்டே தான் நிற்க வேண்டிய இடத்தை அடைந்தவள் பதுமையாக நின்றாள்.
“அத்தான் இந்தக் கடைதான்…” என்றாள் கல்பனா.
காரை நிறுத்திவிட்டு வெளியே பார்த்தான் அவன். புதுக் கட்டிடத்தில்  நீல நிறத்தில் ஜொலித்த ஷோரூமின் பெயரைப் பார்த்ததும் அவனுக்கு… ‘புதிதாகத் திறக்கப்பட்ட ஆடைகளின் உலகம்’ என்று செய்யப்பட்ட விளம்பரம் நினைவிற்கு வந்தது.
கல்பனா இறங்கிக் கொண்டதும் காரை பார்க் செய்வதற்கு இடத்தைத் தேடியவனிடம் கையை நீட்டியபடி “சார் பார்க்கிங்…” என்று வந்துநின்றான் ஒரு இளைஞன்.
காரை விட்டிறங்கி சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு கல்பனாவுடன் தானும் நடக்கலானான்.
அவள் ஷோரூமைப் பற்றி தான் அறிந்தவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டே நடந்தாள்.
கடைக்குள் நுழைந்ததும் ‘என்ன பார்க்க வேண்டும்?’ என்று கேட்கப்பட, புடவை என்றதும் அவள் புடவைகள் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.
தானும் அவளுடனே நடந்தவன் அவள் புடவைகளைத் தேர்வு செய்ய ஆரம்பிக்கவும்…. தன் பார்வையை கடையைச் சுற்றி ஓடவிட்டான்.
எங்கு திரும்பினாலும் கண்ணாடியும் மின் விளக்குகளும் ஒவ்வொரு பிம்பத்தையும் அழகுறக் காட்டிக் கொண்டிருந்தன. அப்படியே  ஓடிக் கொண்டிருந்தவனது பார்வை தனக்கு எதிரேயிருந்த கண்ணாடியில் தனக்கு வெகு அருகாமையில் தெரிந்த பிம்பத்தைக் கண்டதும் வியப்புற்று பின்னர் சிரித்தது.
‘யாரிந்தப் பெண்? திருமணக் கோலத்தில் வந்து ஆடை வாங்கும் அளவுக்கு அவசரமா?’ என்றெண்ணியவாறே அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்காகத் திரும்பினான்.
தன் இடத்தில் நின்றிருந்த சத்யாவிற்கு அன்றைக்கு மேல்தளத்திற்கு அதிக அளவிலான ஆட்கள் வருவதாகத் தோன்றியது.
அப்படி வந்திருந்தவர்களில் தன் தாயாருடன் வந்திருந்த ஒரு சிறுவன், நான்கு வயதிருக்கலாம்… ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தான். இவளுக்கு அருகிலிருந்த மற்ற பொம்மைகளுக்கு இடையிலும் அவனது ஓட்டம் நடந்தது.
ஒரு சமயத்தில் வழுவழுப்பாக இருந்த மார்பிள் தரையில் அவனது காலணி வழுக்கிவிட இவள் முன் வந்து விழுந்தான்.
யாரேனும் தன்னை கவனித்துவிடுவார்களோ என்பதை யோசிக்காமலே சிறுவனை தூக்கிவிட்டவள் அவனது கால்களைத் தடவிவிட்டவாறே “என்னடா கண்ணா… இப்படியா எப்போதும் ஓடிக் கொண்டே இருப்பாய்? பார் இப்போது விழுந்துவிட்டாய்..! இனி விளையாடும்போது கவனமாக விளையாடு… இப்போ அம்மாகிட்ட போ..!” என்று அவனைத் தாயாரிடம் செல்லுமாறு கூறிவிட்டு அவசர அவசரமாகத் தன் பதுமை நிலைக்குத் திரும்பிவிட்டாள்.
எப்படி சத்யா யாரேனும் கவனிக்கிறார்களா என்று பார்க்கவில்லையோ… அதேபோல வேறு யாரும்கூட அவளைப் பார்க்கவில்லை. பல பொம்மைகளுக்கு இடையில் அவளும் ஒரு பொம்மையாக நின்றது அந்த நேரத்தில் மற்றவர்களின் கவனத்தைத் திருப்பவில்லை.
ஆனால் சிறுவன் மலைத்துப் போனான். அவளை ஒரு பெண்ணாக நினைக்காதவன் தன்னிடம் பொம்மை பேசிவிட்டதைத் தாயாரிடம் சொல்வதற்காக விரைந்தான்.
அவன் சொன்னதைக் கேட்ட அவனது தாய் “போடா..! பொம்மை பேசியதாம்! போ… போய் விளையாடு…” என்று அவனை விரட்டினாள்.
அவன் விலகாமல் “இல்லம்மா… அந்த பொம்மை என்னை உன்னிடம் தான் இருக்கச் சொல்லிச்சு. வாம்மா… வந்து பொம்மைக்கு தேங்க்ஸ் சொல்லு…” என்று தாயாரின் கையைப் பிடித்திழுத்தான்.
அவர்களுக்கு அருகில் நின்று ஆடை எடுத்துக் கொண்டிருந்த பலரும் சிறுவனது பேச்சைக் கேட்டு சிரித்துவிட்டு தங்கள் வேலையைக் கவனித்தனர். அந்த பலரில் ஒருவனாகக் கேட்டிருந்தவன் சஞ்ஜீவன்.
சிறுவனது பேச்சைக் கேட்ட அவனும் முதலில் சிரிக்கத்தான் செய்தான்.
ஆனால் சிறுவன் விடாமல் தாயாரைத் தொந்திரவு செய்யவும் அவர் “என்னங்க… என்னைத் துணி எடுக்க விடமாட்டான் போல இருக்கிறது…” என்று கணவனை முறைக்க, “நான் என்னடி செய்யட்டும்?” என்று கேட்டு செய்வதறியாது முழித்துக் கொண்டிருந்தார் அவரது கணவன்.
சிறுவனால் அவர்களுக்குள் சண்டை வந்துவிடுமோ என்றெண்ணிய சஞ்ஜீவன் அவனிடம் குனிந்து “எந்த பொம்மை கண்ணா உன்னிடம் பேசியது? எனக்கு காண்பிக்கிறாயா..?” என்று கேட்டதும் மகிழ்ச்சியுடன் அவனது கையைப் பிடித்து அழைத்துச் சென்றான் சிறுவன்.
சிறுவனுடன் செல்லும்போதே தான் கண்ணாடியில் பார்த்த பெண்ணைக் கண்டவன் ‘அந்தப் பெண் இன்னும் செல்லவில்லை போல…’ என்றெண்ணிக் கொண்டான்.
ஆனால் தான் பெண்ணாக நினைத்த அவளுக்கு முன்பே சிறுவன் அவனை அழைத்துச் சென்று  நிறுத்தவும் அவனுக்கு ஆச்சர்யம்!
‘நான் பெண் என்று நினைத்தது ஒரு பொம்மையா!’
அவனது பார்வை சிறுவன் சொன்ன பொம்மையை கீழிருந்து  மேலாக அலசியது. நின்றவளின் முக அசைவைக் கொண்டே ‘இது பொம்மை அல்ல… பெண்தான்!’ என்ற முடிவிற்கு வந்தான்.
ஏனெனில் சிறுவனைக் கண்டதும் “என்ன?” என விசாரித்தவளது விழிகள் இவனைக் கண்டதும் விரிந்தது.
‘அப்படியானால் இது பெண்தானே..!’ என்று அவளைத் தொடுவதற்கு கைகளை நீட்டியவனை “அத்தான்..!” என்று அழைத்துக் கொண்டு கல்பனா வரவும் கைகளை இறக்கியவன் சிறுவனையும் தன்னுடனே இழுத்துச் சென்றுவிட்டான்.
இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிடுவதற்கு சில நிமிடங்கள் ஆனது அவளுக்கு.
‘யாரிவன்? இப்படி முன்னால் வந்து பயமுறுத்திவிட்டுப் போகிறான்?’ என்றெண்ணியவள், ‘ஆனாலும்… நல்லவேளை அவன் கண்டுபிடித்துவிடவில்லை..!’ என்று தன்னைத் தானே ஆசுவாசப்படுத்தி கொண்டாள்.
எப்போதும்போல கடை ஊழியர்களுக்கான வண்டியில் பத்து மணிவாக்கில் வீட்டை அடைந்தவள் கதவை உட்புறமாகத் தாளிடும்போது “சத்யாம்மா…?” என்று கேட்ட தாயாரின் குரல் வலுவிழந்திருந்தது.
“நான்தான்மா… இதோ வருகிறேன்…” என்று அவரிடம் ஓடினாள்.
அங்கே… அவளது தாயார் தான் இருக்கும் இடத்திலிருந்தே வாந்தியெடுத்துக் கொண்டிருந்தார்.
வயிற்றைப் பிடித்தபடி குனிந்திருந்தவரின் முதுகை நீவிவிட்டவாறே “என்னாச்சும்மா?” என்று கேட்க, மீண்டுமொரு முறை வாந்தியெடுத்தவர் “தெரியவில்லைம்மா… எப்பவோ தண்ணீர் குடிச்சேன். அதில் தான் என்னவோ…” என்றவர் மீண்டும் வாந்தி வருவது போலிருக்க பேச்சை நிறுத்திவிட்டார்.
தாயாருக்கு முதுகை நீவிவிட்டபடியே அருகிலிருந்த சொம்பை எடுத்துப் பார்த்தாள். அதனுள் இறந்து கிடந்த பல்லியைப் பார்த்தவள் பல்லி விழுந்தபின் தாயார் தண்ணீரைக் குடித்திருப்பாரோ என்று பயந்து… சமயத்தில் உதவும் தனக்குத் தெரிந்த ஆட்டோக்காரனை போன் செய்து வரச் சொல்லி தாயாரை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றாள்.
மருத்துவமனையை அடையும்போது மயக்கமுற்றிருந்த மீனாட்சியை பரிசோதித்த டாக்டர் “பயப்பட ஒன்னுமில்லைம்மா… வாந்தி வந்ததனால் களைத்திருப்பார்கள். ட்ரிப் போடுகிறேன்.. காலைக்குள் சரியாகிவிடும்” என்று சொல்லிவிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
தாயாருக்கு ட்ரிப்ஸ் ஏறுவதை பார்த்துக் கொண்டிருந்தவளது மனம் ‘பல்லி எப்படி விபுந்திருக்கும்?’ என்ற யோசனைக்குச் சென்றது.
‘காலையில் போகும்போது எல்லா பாத்திரத்தையும் மூடிவைத்துவிட்டுத்தானே போனேன்… அப்புறம் எப்படி? அம்மா எப்பவாவது தண்ணீர் குடிச்சிட்டு மூட மறந்திருப்பாங்க… அதில் பல்லி விழுந்திருக்கும். நல்லவேளை… இந்த பல்லி காலையிலோ மத்யானமோ விழவில்லை…’ என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.
தாயாரைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தவள் தானும் களைப்புற்றிருந்ததால் உட்கார்ந்த நிலையிலே தூங்கிவிட்டாள்.
கல்பனாவை அவளது வீட்டில் விட்டுவிட்டு தன் கல்லூரித் தோழர்களை சந்தித்துவிட்டு இரவு லேட்டாக வீடு திரும்பினான் சஞ்ஜீவன்.
அவன் வரும்போது சங்கரன் மட்டும் விழித்திருந்தார்.
தகப்பனைத் தனியாகக் கண்டதும் “என்னப்பா நீங்க மட்டும் இருக்குறீங்க? அம்மா எங்கே? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டான் அவசரத்துடனே.
“அதெல்லாம் இல்லை… நேரம் அதிகமாகிவிட்டதே! கண்களில் எரிச்சல் என்றாள்.. நான்தான் போய்ப்படு என்று அனுப்பினேன்” என்றார் அவர்.
தாயாருக்கு ஒன்றுமில்லை என்றதும் அமைதியுற்றவன் “சரிப்பா நீங்களும் போய்ப்படுங்க… இனிமேல் சீக்கிரமே வீடு திரும்பப் பார்க்கிறேன்…” என்றான் தகப்பன் காத்திருந்ததற்கான காரணத்தை சரியாக கணித்து.
“உனக்கு சாப்பாடு?” என்று அவர் கேட்க, “நான் பிரண்ட்ஸோடு சாப்பிட்டுட்டேன்ப்பா…” என்று மாடியேறினான்.
படியேறிக் கொண்டிருந்த மகனையே பார்த்துக் கொண்டிருந்தவர் ‘என் மருமகளுக்கு நீண்ட ஆயுளை கொடுத்திருக்கக்கூடாதா இறைவா?’ என்று கடவுளைக் கேட்டார்.
ஒரு தகப்பனான அவரும்தான் வேறு என்ன செய்வார்? மகன் இப்படியே தனிக்கட்டையாக இருந்துவிடுவானோ என்ற பயம் அவருக்கு.
கண்ணாடி முன் சென்று நின்ற சஞ்ஜீவனுக்கு மாலையில் தன்னருகே பிம்பமாகப் பார்த்த அந்த பொம்மைப் பெண் இப்போதும் நிற்பதுபோல் தோன்ற அவளைத் தொடுவதற்காக அவனது கைகள் நீண்டது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண்ணைப் பார்த்து ரசித்திருக்கிறேன். ‘பார்த்த உடனே தொடுவதற்கும் கைகள் நீள்கின்றது..!’ என்றெண்ணியவனது கண்களுக்குள் அவள் விழிவிரித்து அவனைப் பார்த்த கோலம் அப்படியே வர “இவள்… இவள் அந்த சத்யா அல்லவா..?” என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டவனுக்கு… அவள்தான் என்பது புரிந்துவிட “பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் இவளையா…?” என்று ஓங்கிக் கண்ணாடியில் குத்தினான்.
பல துண்டுகளாக உடைந்த கண்ணாடித் துண்டுகளுள் ஒன்று  தன்னை உடைத்த அவனது கரத்தைப் பதம் பார்த்தது.
கையில் குத்தியிருந்த கண்ணாடித்துண்டை எடுத்ததும் வேகமாக வெளியேறிய ரத்தத்தைப் பார்த்தவாறே “இதை உன் கண்களில் வர வைக்கவில்லையென்றால் நான் சஞ்ஜீவன் இல்லை…” என்று சபதமெடுத்துக் கொண்டவன் சென்று படுத்தான்.

Advertisement