Advertisement

அத்தியாயம் 3
வெங்கடேசனோடு வந்த போலீசார் சத்யாவின் வீட்டில் நின்ற திருடனைப் பிடித்துச் சென்றனர்.
போலீசின் பிடியிலிருந்தபோதும் “ஏய்! என்னை அடித்தது மட்டுமில்லாம போலீசிலும் மாட்டிவிட்டாயில்லே… உன்னை நான் சும்மா விட மாட்டேன்…” என்று அவன் மிரட்ட பட்டென்று அவன் கன்னத்தில் அறைந்தார் இன்ஸ்பெக்டர்.
“என்னடா பெருசா சவுண்டு விடுறே?” என்று அவனை அதட்டியவர், சத்யாவிடம் “நீங்க கவலைப்பட வேண்டிய அவசியமில்லைம்மா… இவன் ஏற்கனவே நிறைய வீட்டில் திருடியிருக்கிறான். அதனால கொஞ்ச மாசத்துக்காவது இவனால வெளிய வரமுடியாது…” என்று சொன்னவர் மற்றவர்களை அழைத்து “இவனை இழுத்துட்டுப் போங்க…” என்று சொல்லிவிட்டு வெங்கடேசனிடம் திரும்பினார்.
“சார் நீங்க இந்தப் பெண்ணோடு ஷ்டேஷனுக்கு வந்து ஒரு கம்பிளைன்ட் எழுதிக் கொடுத்துடுங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
போலீசார் சென்றதும் தாயாரை அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்து அவருக்கு அருந்த தண்ணீர் கொடுத்துவிட்டு “அங்கிள்கிட்ட பேசிட்டு வர்றேன்மா…” என்று சொல்லி ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு தந்தையின் நண்பரிடம் சென்றாள்.
தண்ணீரை அவரிடம் நீட்டியவாறே “அங்கிள் சரியான சமயத்திற்கு வந்து காப்பாத்துனீங்க… ரொம்ப நன்றி…” என்றாள்.
அவள் மீதிருந்த கோபத்தின் காரணமாக “எனக்கு உன் கையால் எதுவும் வேண்டாம்…” என்று அவள் கொடுத்த தண்ணீரை மறுத்தவர், தான் வந்தது நண்பனின் மனைவிக்காக என்பதால் அதன் காரணத்தை அறிவதற்காக “இது… இது எப்படி நடந்தது?” என்று மட்டும் கேட்டார்.
அவர் அவளிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள மாட்டார் என்பது ஏற்கனவே தெரிந்திருந்ததால் வருத்தப்படாமல் விபரத்தைக் கூறியவள் “அங்கிள் நான் வேலைக்குப் போனபிறகு நாள் முழுவதும் அம்மா தனியாகவே இருக்கிறார்கள். எனக்காக அம்மாவைப் பார்த்துக் கொள்ள யாராவது ஒரு வயதான பெண்மணியை வேலைக்கு அமர்த்தித் தரமுடியுமா?” என்று கேட்டாள்.
“உனக்காக இதைச் செய்யவில்லை என்றாலும் என் நண்பனுக்காக செய்வேன். ஏற்பாடு செய்துவிட்டு உனக்குச் சொல்கிறேன்…” என்று அவளிடம் சொல்லிவிட்டு மீனாட்சியிடமும் சில வார்த்தைகள் பேசிவிட்டுப் புறப்பட்டார்.
“அம்மா… வாங்கம்மா…” என்று தாயாரை எழுப்பி அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தவளிடம் “என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம். உயிர் பிழைச்சது மட்டுமில்லாமல் இப்படி கண்ணு தெரியாமலிருக்கப் போய்தானே இன்றைக்கு அந்தத் திருடன் வந்தது கூட தெரியாமல் இருந்திருக்கிறேன்…. இப்போது என்றில்லாமல் எனக்கு பார்வை போன நாளிலிருந்து நீ அவ்வளவு கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்…. அன்றைக்கே நானும் செத்திருந்தால் உனக்கிந்த துன்பமெல்லாம் வந்திருக்காது…” என்று அவர் அழ ஆரம்பித்துவிட்டார்.
“ஏன்மா  இப்படியெல்லாம் பேசுறீங்க? நீங்களும் என்னை விட்டுப் போயிருந்தால் நான் மட்டும் எப்படி உயிரோடு இருந்திருப்பேன்?” என்று அவள் கேட்கவும், “இல்லைம்மா… அப்படியெல்லாம் சொல்லாதே!” என்று அவளது பேச்சை நிறுத்தினார் தாயார்.
“அப்படின்னா… நீங்களும் அந்த மாதிரியெல்லாம் பேசக்கூடாது” என்றாள் மகள்.
“நான் இதை வேண்டுமென்று சொல்லவில்லைம்மா… ஆனால், அப்பாவோடு போய்விட வேண்டுமென்று நினைத்து… அது நடக்காதது மட்டுமல்லாமல்… என் மகள் என்னாலேயே இவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்று நினைக்கும்போது… எப்போது அப்பாவிடம் போவோம் என்ற எண்ணம் தானாகவே வந்துவிடுகிறது…” என்றார் அன்னை.
அவர் சொல்வதைக் கேட்டதும் பதிலின்றி மௌனமாகிவிட்டவளிடம் “சத்யா! சத்யா… என்னாச்சும்மா… ஏன் அமைதியாகிவிட்டாய்?” என்று பதறினார் மீனாட்சி.
“அம்மா… அன்றைக்கு என் கல்யாணம் நின்றதை நினைத்து மனதிற்கு அதிகமாக அழுத்தம் கொடுத்துக் கொண்டதால்தானே அப்பாவிற்கு…” என்று மகளும் அழுதுவிட அவளை அணைத்து ஆறுதல்படுத்தினார் தாயார்.
“அழாதேம்மா… அதெல்லாம் நடக்க வேண்டுமென்ற விதி இருந்திருந்தால் நம்மால் அதை மாற்ற முடியுமா?” என்று அவளை சமாதானப்படுத்தி தானும் மனதை தேற்றிக் கொண்டவர், அவளது கவனத்தை திசை திருப்பும் விதமாக “எனக்கு பசிக்குது சத்யா… சாப்பாடு தர்றியா?” என்று கேட்டார்.
கண்ணைத் துடைத்துக் கொண்டு “இதோம்மா… ஐந்து நிமிடத்தில் வருகிறேன்” என்று சிட்டாகப் பறந்தவள் சொன்னதுபோல ஐந்தே நிமிடத்தில் வந்துவிட்டாள்.
தாயும் மகளும் சேர்ந்து சாப்பிட்டனர்.
சாப்பாட்டை முடித்துக் கொண்டு தாயாருக்குத் தேவையான சில உதவிகளை அவள் செய்து கொண்டிருந்தபோது “சத்யாம்மா… நீ போகிற வேலை உனக்கு கஷ்டமாக இருக்கிறதா?” என்று கேட்டார் மீனாட்சி.
“இல்லையே! ஏன்மா இப்படி கேட்குறீங்க?” என்று கேட்டாள்.
“ராத்திரி தூங்கும்போது புரண்டு புரண்டு படுக்கிறாயே… அதனால்தான் கேட்டேன்” என்றார் தாயார்.
வேலை என்னவோ மிகவும் சாதாரணமானது தான். சொல்லப்போனால் அது வேலையே இல்லை.
ஆனால்… மிகவும் கடினம் தான். காலையில் அவள் வேலை பார்க்கும் இடத்திற்குச் சென்ற ஒரு மணி நேரத்திலிருந்து இரவு அவள் வீடு திரும்பும் நேரம் வரை சாப்பிடும் நேரத்தைத் தவிர ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் அப்படியே நிற்க வேண்டும் பொம்மை போல…
பொம்மை போல என்ன… கிட்டத்தட்ட பொம்மையேதான். தான் வேலைக்குச் சேர்ந்ததை நினைவு கூர்ந்தாள்.
அவள் சென்ற இடம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த டெக்ஸ்டைல்ஸ் அன்ட் ரெடிமேட் ஷோரூம். அங்கிருக்கும் விற்பனைப் பிரிவிற்குத் தான் அவள் வேலை கேட்டுச் சென்றிருந்தாள். ஆனால் ஷோரூமிற்குத் தேவையான ஆட்களை தேர்ந்தெடுத்துவிட்டதாக அவளிடம் கூறிய மேனேஜர்… தனக்குத் தோன்றிய ஐடியாவை முதலாளியிடம் தெரிவித்தார். முதலாளி அதை அப்படியே அவளிடம் சொல்ல… இவள் புரியாமல் ‘என்ன?’ என்று கேட்டாள்.
வேலை பிடிக்காமல் தான் அவள் மீண்டும் கேட்கிறாளோ என்றெண்ணியவர் “பாரும்மா… இப்போதைக்கு எங்களுக்கு ஆட்கள் தேவையில்லைதான். ஆனாலும் நீ பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால்… இந்த வேலையை சொல்கிறேன். பொதுவாக கடைகளில் அலங்காரப் பொம்மைகளை மாடல்களாக வைப்பார்கள். அவைகளோடு நிஜப்பெண்ணான நீயும் மாடலாக நிற்க வேண்டும் அவ்வளவுதான்” என்று முடித்துவிட்டார்.
“சார்… இது எப்படி சார் முடியும்? நாள் முழுக்க ஒரே இடத்தில்…” என்று மறுக்கவும் முடியாமல் ஒத்துக் கொள்ளவும் முடியாமல் அவள் இழுக்க, “ஏம்மா… பெரிய பெரிய மால்களில் நீ பார்த்தது இல்லையா? மிக்கி மவுஸ், டைனோசர் இன்னும் பல வேடங்களில் ஆண்கள் பணி புரிவது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.
இப்போதும் அவள் யோசிக்கவும் “நீ கட்டாயமாக செய்ய வேண்டிய அவசியமில்லைதான்… ஆனாலும் உனக்கு ‘வேறு வேலை’ இங்கு இல்லை” என்றார்.
“நான் இதற்கு… இந்த வேலைக்கு வருவதற்கு சம்மதிக்கிறேன் சார். ஆனால் நீங்கள் எனக்கு ஒரு உத்திரவாதம் அளிக்க வேண்டும்” என்றாள்.
“என்ன?” என்று கேட்டவரிடம் “எனக்கு யாராலும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது. இதற்கு நீங்கள் பொறுப்பேற்க முடியுமா?” என்று கேட்க, “நிச்சயமாக…” என்றார் அவர்.
தொடர்ந்து “என்னிடம் வேலை பார்க்கும் அனைவருமே என் பிள்ளைகள் போலத்தான். அதனால் நீ கவலைப்பட வேண்டாம்…” என்றவர் மற்ற சில விஷயங்கள் பற்றியும் அவளிடம்  விவாதித்தார்.
அதற்கு மறுநாளிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நவநாகரீக உடைகள் ஒவ்வொன்றிலும் பதுமை போல நிற்பதை தாயாரிடம் எப்படி சொல்ல முடியும். கேட்டால் அவரது மனம் என்ன பாடுபடும் என்பது அவளுக்குத் தெரியாதா..!
நினைவுகளிலிருந்து விடுபட்டவள் “வேலை கொஞ்சம் கஷ்டம் தான்மா…” என்று சொல்லிவிட்டு… அவர் மேலும் கேள்விகள் கேட்டுவிடாதபடி வேறு பேச்சு பேசத் தொடங்கிவிட்டாள்.
ஆனாலும்… எத்தனை நாளுக்குத்தான் அவளால் இந்த வேலையை செய்ய முடியும்?
பார்வதி ஐடியா சொல்கிறேன் என்றதும் ஆவலாகத் தன் முகத்தைப் பார்த்த இருவரையும் பார்த்து “என்ன ரெண்டுபேரும் என் முகத்தை இப்படி பார்க்குறீங்க?” என்று கேட்டார் அவர்.
“ஏதோ யோசனை சொல்லப் போறேன்னு சொன்னாயே..!” என்றார் சங்கரன்.
“வந்துங்க இது சரியா வருமான்னு எனக்குத் தெரியாது…” என்று அவர் தயங்க, “பரவாயில்லைம்மா… சரியா வருமா வராதான்னு நாங்க பார்த்துக்குறோம்… நீ சொல்லு…” என்று மனைவியை ஊக்கினார்.
“வந்து ரெண்டுத்துக்கும் பொதுவாக ஒரே ஆபீஸ் வைத்தால் என்ன…?” என்றவர் அவர்கள் இன்னமும் தன் முகத்தைப் பார்த்திருக்கவே, “ரெண்டு தொழிலையும் பார்ப்பதற்கு தனித்தனியாக அந்தந்த ஆபீஸிற்கு போவதற்குப் பதிலாக ஒரே ஆபீஸ் வைத்தோம் என்றால் சுலபமாக இருக்கும் இல்லையா..?” என்றார் அவர்.
“அது சரிதான் பார்வதி. ஆனால்… தொழிற்சாலைக்கு உள்ளேயும் அவனது கன்ஸ்ட்ரக்ஷன் நடைபெறும் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று பார்வையிட வேண்டுமே? அப்படி மேற்பார்வையிடவில்லை என்றால் வேலை நடக்காதே…” என்று அவர் சொன்னதும்,
“வேலை நடக்காமல் செய்பவர்களை பணி நீக்கம் செய்யுங்கள்” என்றான் மகன் சட்டென்று.
“அப்படிச் செய்ய முடியாதுன்னு உனக்கே தெரியும். மீறி செய்தால் அவங்க சங்கம் கேள்வி கேட்கும், பிரச்சினை பண்ணும், பின் வேலை தடைபடும்…” என்று அவன் சொன்னதை செயல்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றிக் கூறினார் தகப்பனார்.
“சரிப்பா நீங்கள் சொல்வது போலத்தான் நடக்கக்கூடும் என்பதை நானும் ஒத்துக்கிறேன். இதற்கு இருக்கும் ஒரே வழி நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் முன்னறிவிப்பின்றி தொழிற்சாலையை மேற்பார்வையிடச் செல்லுங்கள்… மற்றபடி கம்பெனி சூப்பர்வைசர்கள் எல்லாரும் நம்பிக்கையானவர்கள்தானே! ஏதேனும் பிரச்சினை வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவன் சொன்னதும் தந்தையும் தாயும் மலர்ந்த முகத்துடன் தன்னை நோக்குவதைக் கண்டு “என்ன?” என்றான்.
“ஜீவா… நீ தொழிற்சாலையை பார்த்துக் கொள்வாயா?” என்றார் சங்கரன்.
“அப்பா என்னால முழுநேரமும் பார்த்துக் கொள்ள முடியாது. ஆனால் அதற்காக… நீங்கள் வளர்த்த தொழில் நலிவடையக் கூடாது. அதனால் அம்மா சொன்னது போல.. பொதுவாக ஒரு ஆபீஸ் திறப்பதற்கு ஏற்பாடு செய்வோம்” என்று சொல்லிவிட்டு கைகழுவச் சென்றான்.
கணவன் மனைவி இருவருக்கும் பயங்கர சந்தோஷம். அவர்களுக்குத் தெரிந்தவரையில் மகன் இந்த அளவிற்கு இறங்கி வந்ததே பெரிய விஷயம். அந்த வகையில் திருப்தி அடைந்த பார்வதி செய்தித்தாள் வாசிக்க அமர்ந்துவிட்ட மகனை நோக்கி விந்தி விந்தி நடக்கலானார்.
தாயார் தன்னருகில் வந்தமர்ந்ததும் படித்துக் கொண்டிருந்த பேப்பரை மடித்து வைத்துவிட்டு “என்னம்மா…?” என்றான்.
மகனது முகத்தைத் தடவி முத்தமிட்டவர்… அவனது முக இறுக்கத்தைப் பார்த்தவாறே, “இப்போதெல்லாம் நீ சிரிக்கிறதே கிடையாது. ரொம்பவே கடுமையா நடந்துக்கிறது போலத் தோணுது. ஜீவா… நீ இயல்பா… முன்பிருந்த எங்கள் பிள்ளையாக இல்லையோன்னு எனக்குத் தோணுது… நீ நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்தாலே எனக்குக் கவலையா இருக்குது…” என்று அவர் வருந்தவும் “அம்மா… அப்படி எதுவும் கிடையாது” என்று தானும் தாயாரின் கன்னத்தில் முத்தமிட்டவன் “அம்மா… அப்படியே இருங்க அசையாதீங்க…” என்றவாறே எழுந்து அவரது தலை முடியைத் தன் கையில் எடுத்து “ஐயோ! அம்மா உங்களுக்கு வயசாயிடிச்சே..!” என்றான்.
மகனின் கேள்வியில் திகைத்தவர் “என்னப்பா… திடீர்ன்னு…?” என்று கேட்க, “உங்களுக்கு எவ்வளவு நரைமுடி வந்துவிட்டது” என்றான் அவன்.
“போப்பா… பாட்டியானால் முடி நரைக்கத்தான் செய்யும்” என்று விளையாட்டாகப் பேசியவர் தன் வார்த்தைகளால் நினைவுற்று “ஆனால்… பாட்டின்னு கூப்பிட பேரன் எப்போது வருவானோ..?” என்று அவன் முகம் பார்த்தார்.
அவனது முகமும் தாடையும் இறுகுவதைக் கண்டவர் “ஜீவா..!” என்றழைத்து அவன் கையைத் தொட்டதும் சரியானவன் “அம்மா… நான் இப்போது ஒரு காரியத்தில் இறங்கியிருக்கிறேன். அதில் எனக்கு திருப்தி என்ற நிலை வரும்போது உங்களிடம் சொல்கிறேன். அப்போது எனக்கான மறுவாழ்க்கையை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். அதுவரை சற்று பொறுமையாக இருங்கள்…” என்றவன் எழுந்து வெளியே சென்றான்.
இன்று அவனது கன்ஸ்ரக்ஷன்ஸ்க்கும் விடுமுறை என்பதால் வெளியே செல்ல இயலாமல் வீட்டையே சுற்றி சுற்றி வந்தான்.
பெரிய காம்பவுண்டுக்குள் இருந்தது அவர்களது பங்களா. நுழைவுவாயிலின் வலது ஓரம் வீட்டு வேலை செய்பவர்களுக்காக வீடு கட்டிக் கொடுத்திருந்தார் சங்கரன். அதிலிருந்து அரை கிலோமீட்டர் உள்ளே சென்றால்தான் பங்களாவை அடைய முடியும். நடைபாதை கான்கிரீட்டால் அமைக்கப்பட்டு மற்ற இடங்களில் மரம், செடிகள் என்று உள்ளே நுழைந்தால் பார்க்கிற்குள் இருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தோட்டம். 
அப்படியே நடந்து சென்றவன் நீச்சல் குளத்தின் அருகே வந்து நின்றான்.எத்தனை நாள் இரவில் அவன் மனைவி நித்யாவோடு இதே நீச்சல் குளத்தில் நீந்தியிருக்கிறான்.
அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தவன் முடியைக் கைகளால் கோதிவிட்டுக் கொண்டு அப்படியே தலையை கைகளால் தாங்கிக் கொண்டான்.
ஏதேதோ எண்ணங்கள் வந்து மனதை அலைக்கழிக்க… ‘உன்னை வாழ விடமாட்டேன் சத்யா..!நிச்சயமாக விடமாட்டேன்!’ என்று தன் அலைபாய்தலையும் அவள் மீதான கோபமாக மாற்றிக் கொண்டான்.

Advertisement